கதையாசிரியர்:
கதை வகை: ஒரு பக்கக் கதை
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: February 4, 2024
பார்வையிட்டோர்: 279 
 
 

(1975ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) 

‘அத்தகைய மோக நீக்கம் உங்களுக்குக் கைவரப் பெறுமானால், கீதையின் மோக நீக்கம் என்னும் தரிசன பயனைத் தரிசித்தல் சாலும்…’ 

அவர்கள் மத்தியில் பகவத்கீதை தொற்றிச் சர்ச்சை ஒன்று வெடித்துக் கிளம்பியது. 

கீதை முற்று முழுக்க பக்தி நூலே’ என்றான் ஒருவன். ‘இல்லை. கீதை என்பது ஞான மார்க்கமே….’ என்றாள் மற்றவன். 

அப்படியுமல்ல. கீதா நூல் பதினெட்டு யோகங்களில் நிறைவுறுவதால், அதனை யோக சாஸ்திரம் என்பதே பொருந்தும்’ என்றான் பிறிதொருவன். 

‘வாழ்க்கை சமுதாய உணர்வுடன் ஒட்டியது. சொற்களைக் கடந்த பரமார்த்திகத்தைப் பற்றியா கீதை மொழிகின்றது? இல்லை. சீரிய சமுதாய நெறியின் அடிப் படையாக அஃது அமைந்தது’ என்றான் இன்னும் ஒருவன். 

‘மாக்கிவல்லி இயற்றிய ‘இளவரச’னைப் போன்றே. கீதை அரசியல் தத்துவம் போதிக்கின்றது’ என்றான் வேறொருவன். 

‘போர்மீது வந்த பார்த்தனுக்குப் போதிக்கப்பட்டது. எனவே, அது ராணுவ தத்துவத்தைப் போதிக்காமல் வேறு எதைப் போதிக்கும்?’ என்றான் மேலுமொருவன். 

இவ்விளக்கங்களை எல்லாம் கேட்டுக் கொண்டிருந்த ஒருவன் தன் மௌனத்தைக் கலைத்து, ‘இயற்கை முழுவதும் முடிவில்லாத ஒரு  கொலைக்களம்…. ஒரு துளி நீரிலே எத்தனை ஜீவ அணுக்கள் இருக்கின்றன? நம்முடைய கனியப் பருமானங்களுக்கு அவை சிற்றுயி ராயினும், அவற்றின் தளத்தில் அவை பேருயிர்களே…. இந்த அகிலம் உயிர்த் தத்துவத்தின் சோபிதமே. இவை ஒன்றையொன்று இரையாக்கியே வாழவும் வளரவும் செய்கின்றன. எவ்வளவுதான் அகிம்ஸை பேசினாலும், ஓர் உயிர் — நீரை மட்டுமே அருந்தி வாழும் புண்ணியனே யானாலும்-மற்றும் உயிர்களை உணவாக்காது வாழ் முடியாது. இயற்கையே கொலைக்களமாக அமைந்திருப்பதினால், கொலைத் தொழில் புரியக் குருநிலத்தில் சேனா சமுத்திரம் திரண்டிருந்தபொழுது கீதையை உபதேசித் தமை மிக இயல்பாக அமைந்தது. கர்மயோகத்தின் வழி நின்று, யுத்த யோகத்தை இயற்றும்படி வழிகாட்டும் கொலை நூலே கீதை’ என யுக்தி வாதத்துடன் பேசி முடித்தான். 

எல்லா விளக்கங்களையும் கேட்டுச் கொண்டிருந்த குருதேவர் முறுவலித்து, நிலைக்கண்ணாடி ஒன்றை எடுத்து அவர்களிடம் தந்தார். ‘இதில் என்ன தெரிகிறது என்று ஒவ்வொருவராகப் பாருங்கள்’ என்றார். 

‘என்னுடைய முகமே தெரிந்தது’ என ஒவ்வொருவனும் பதிலளித்தான் 

‘உங்களுடைய முகத்திற்குப் பதிலாக, உங்களுடைய இதயத்தை யாராவது கண்ணாடியிற் பார்க்க முடிந்ததா?’ எனக் கேட்டார். 

‘இல்லை!’ என்ற ஒரே பதில் எல்லார் உதடுகளிலுமிருந்து வெளிவந்தது. 

‘புரிகிறதா? கீதை என்ற கண்ணாடியில் ஒவ்வொருவரும் உங்கள் தனிப்பட்ட உருவத்தைப் பார்க்கின்றீர்கள். இதயத்தைப் பார்ப்பதற்கு மோகம் தடையாக அமைந்தது. கீதை அருளப்பட்டதும் அர்ஜுனனின் மோகம் கலைந்தது. 

அத்தகைய மோக நீக்கம் உங்களுக்கும் கைவரப் பெறுமானால், கீதையின் மோக நீக்கம் என்னும் தரிசன பயனைத் தரிசித்தல் சாலும்’ என்றார் குருதேவர்.

– கீதை நிழலில், முதற் பதிப்பு: அக்டோபர் 1975, கலைஞன் பதிப்பகம், சென்னை.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *