(1975ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
‘இம்மையின் போகம் பிரேயஸ். அதனைத் தோழமையினால் அருளலாம். ஞானமும் யோகமும் அடங்கப் பெற்றது சிரேயஸ்…….’
அர்ஜுனன் என்னுமோர் இளவரசன் இருந்தான். அவனுக்குக் கிருஷ்ணன் தோழனாக வாய்த்தான். இருவரும் நட்பிலே ஓருயிரும் ஈருடலுமாகக் கலந்தனர்.
நண்பனுடைய உலக காரியங்கள் அனைத்திலும் கண் ணன் சகாயனாக உழைத்தான். அன்புப் பிணைப்பு இறுகி முற்றியது. அர்ஜுனனுக்கு கிருஷ்ணனின் தங்கை சுபத்திரை மீது காதல் முளைத்து, விளைந்து, கனிந்தது. தானே தன் தங்கையைத் தோழனுக்கு மணம் முடித்துக் கொடுத்தான்.
இவ்வாறு சித்தித்த பிரேயஸை அநுபவித்து மகிழ்ந் தான் அர்ஜுனன்.
அர்ஜுனன் சற்றும் எதிர்பாராத விதமாக நெருக்கடி ஒன்று சூழுகின்றது. யுத்த சன்னதனாக யுத்தகளத் திற்கு வந்த பொழுது குதிர்ந்த நெருக்கடி. அவன் போருக்கென்றே பிறந்த மாவீரன். யுத்தத்திற்கு என்றுமே அஞ்சினவனல்லன். மகாதேவனையே எதிர்த்துப் போரிட் டவன். இன்று அமர்க்களத்தில் எதிரிகளாகக் கூடியிருப் போரை, ஒத்திகையாக நடைபெற்ற ‘மாடுபிடிப்’ போரில் புறமுதுகிடச் செய்தவன். ஆனால், இப்பொழுது சோர் வும் சஞ்சலமும் குடிகொண்டுவிட்டன.
அந்நிலையில் கிருஷ்ணன் மூலம் அடைந்திருந்த பிரேயஸ் பயன்படாது போய்விடுகிறது.
வேறு மார்க்கமே தோன்றவில்லை. தெளிவின்மையிலே ஒரு தெளிவு. தெளிவிலே ஒரு தெளிவின்மை. எது எதுவென நிதானிக்க இயலவில்லை. பூரண அடைக்கலம் கிருஷ்ணனைக் குருவாக வரித்து, அர்ஜுனன் சீடனாகச் சரணடைந்தான்.
கிருஷ்ணனும் மனமிரங்கி, சிரேயஸைப் புகட்டத் தொடங்கினான்.
இதனை ஏற்கனவே புகட்டியிருந்தால், அர்ஜுனனுக்கு இந்த நெருக்கடி தோன்றியிருக்க மாட்டாதல்லவா” என அந்தராத்மாவொன்று கிருஷ்ணனைக் கேட்டது.
‘இம்மையின் போகம் பிரேயஸ். அதனைத் தோழமையினால் அருளலாம். ஞானமும் யோகமும் அடங்கப் பெற்றது சிரேயஸ். சிஷ்ய பாவனை வருவதற்கு முன்னர் சிரேயஸைப் புகட்டினால் எவ்விதப் பயனும் ஏற்படமாட்டாது. அதற்கான தகுதியில் இப்பொழுதுதான் அர்ஜுனனின் மனம் பண்பட்டது’ என விளக்கினான் கிருஷ்ணன்.
– கீதை நிழலில், முதற் பதிப்பு: அக்டோபர் 1975, கலைஞன் பதிப்பகம், சென்னை.