குழந்தைகளைக் கொல்வது எளிது!

0
கதையாசிரியர்:
தின/வார இதழ்: விகடன்
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: January 9, 2016
பார்வையிட்டோர்: 12,825 
 

”ஒரு ஊர்ல ஒரு ராஜா இருந்தாராம்…” என்று கதை சொல்ல ஆரம்பித்தேன்.

”ராஜாவுக்கு எந்த ஊருப்பா?” என்றான் மகன்.

என்ன சொல்வதென்று தெரியவில்லை.

”உங்க ஊரு திண்டுக்கல்; அம்மா ஊரு மார்த்தாண்டம்; என் ஊரு சென்னை. அப்ப ராஜாவுக்கு… ராஜாவுக்கு எந்த ஊருப்பா?” என்றான்.

ஆமா, ராஜாவுக்கு எந்த ஊர்? நம் ஊரில்தான் இப்போது ராஜாக்களே இல்லையே! அப்படியும் சொல்லிவிட முடியாதோ! அது முழு உண்மை ஆகாதுதான். ஆனாலும் நம் மனச் சித்திரத்தில் பதிந்துபோன ராஜாக்கள் இப்போது இல்லை. இல்லாதுபோன ராஜாக்களைப் பற்றி ஏன் கதை சொல்லத் தொடங்குகிறோம்? தெரியவில்லை.

”ஒரு காட்டுல ஒரு சிங்கம் இருந்துச்சாம். அதைப் பார்த்தா, மத்த மிருகங்கள் எல்லாம் பயப்படுமாம். அது உறுமுனா காடே அதிருமாம்!”

”உறுமுனான்னா?”

”கத்துச்சுன்னா… அது கத்துச்சுன்னா காடே அதிருமாம். சிங்கம்தான் அந்தக் காட்டுக்கே ராஜாவாம்.”

உள்ளுணர்வு உணர்த்த சட்டென்று நிறுத்தினேன். மீண்டும் ராஜா. இந்த ராஜாக்கள் ஏன் நம்மை விடாமல் பின்தொடர்கிறார்கள்? சிங்கம் காட்டுக்கு ராஜாவாகத்தான் இருக்க வேண்டுமா? அப்படியானால் கரும்புத் தோட்டங்களில் புகுந்து மனிதர்களை மிரள மிரள விரட்டும் யானைகள் என்ன தளபதிகளா? செங்கல்பட்டு பகுதியில் சிக்காமல் சுற்றிக்கொண்டிருக்கும் அந்த சிறுத்தை ஒருவேளை மந்திரியோ? சிங்கம் ஏன் ராஜாவாக இருக்க வேண்டும்? ராஜாக்களை ஏன் நம்மால் மறக்க முடியவில்லை? ராஜாக்கள் பயணிக்கும் குதிரைகளின் குளம்படிச் சத்தம் ஏன் நம்மைத் துரத்திக்கொண்டே இருக்கிறது?

குழந்தைகளைக் கொல்வது எளிது1

சொல்ல நினைத்த கதை!

14-ம் நூற்றாண்டில் பள்ளியூர் எனும் குக்கிராமத்தில் வசித்துவந்தவன் விமலநந்தன். அவன் புதிதாக ஒரு மதத்தை உருவாக்கிப் பரப்பினான். அதன் பெயர் ‘விமலாதீகம்’. குழந்தைமையே உன்னதம் என்பதே அந்த மதத்தின் அடிப்படைக் கோட்பாடு. குழந்தை, பிறந்து ஆறு மாதங்கள் வரை மட்டுமே புனிதத்துடன் இருக்கிறது. அதற்குப் பின் வளர, வளர மற்றவர்களின் கருத்துக்கள் ஏற்றப்பட்ட கழுதையாக மாறிவிடுகிறது. எனவே, வன்முறையற்ற பேரன்பும் அறியாமையும் குழந்தை பிறந்து ஆறேழு மாதங்கள் வரை மட்டுமே சாத்தியம் என்பதுதான் அவனது கொள்கை. விமலநந்தன், 26 குழந்தைகளைப் பெற்றெடுத்தான்; 42 குழந்தைகள் வரை தத்து எடுத்து வளர்த்தான். ஆனால், குழந்தைகள் ஆறு மாதங்கள் வளர்ந்த பிறகு, அவற்றைக் கொன்றுவிடுவான். இவ்வாறாக, குழந்தைமையின் புனிதத்தைக் காத்துவந்தான்.

26 குழந்தைகளையும் பெற்று, கொல்வதற்குள் விமலநந்தனுக்கு 90 வயது ஆகிவிட்டது. கொல்வதற்கு இனி குழந்தைகள் இல்லை. இப்போது தானே ஒரு குழந்தையாக இருப்பதை உணர்ந்தான். ஆறு மாதங்களில் இழந்த உன்னதமான தனது குழந்தைமையை, 90 வயதில் பெற்றிருந்தான் அவன். இதற்கு 89 வருடங்களைக் கடந்து வரவேண்டியிருந்தது.

விமலநந்தனின் மரணம் குறித்து, உறுதிப்படுத்தப்படாத மூன்றுவிதமான தகவல்கள் உலவுகின்றன. 1. பிசிராந்தையாரைப் போல விமலநந்தனும் வடக்கு நோக்கி உண்ணாவிரதம் இருந்து உயிர் துறந்தான் 2. இல்லை… இல்லை. அவன் மலை உச்சியில் இருந்து குதித்துத் தற்கொலை செய்துகொண்டான் 3. கொலைகள் செய்த குற்றத்துக்காக, அரசனால் மரண தண்டனை விதிக்கப்பட்டான்.

சொல்ல விரும்பாத கதை!

ஒரு தமிழனையோ, பாலஸ்தீனியனையோ கொல்வதைப்போலவே, குழந்தைகளைக் கொல்வதும் எளிதுதான். இன்னும் சொல்லப்போனால், தமிழனையோ பாலஸ்தீனியனையோ கொல்வதைவிடவும், குழந்தைகளைக் கொல்வது எளிது. குழந்தைகள் இறப்பதற்குள் தமிழனாகவோ பாலஸ்தீனனாகவோ ஆகியிருக்க மாட்டார்கள். ஓர் இனப்படுகொலைக்கும் அடுத்த இனப்படுகொலைக்குமான இடைவெளியை இப்போதெல்லாம் அரசுகள் கொடுப்பது இல்லை. போரோ, இனப்படுகொலைகளோ எங்கு, எது நடந்தாலும் முதலில் இணையத்தில் பதியப்பட்டு பரவலாகக் கவனிக்கப்படுபவை குழந்தைகளின் உயிரற்ற உடல்கள்தான். குண்டுவீச்சாலோ, துப்பாக்கிக் குண்டுகளாலோ சிதைந்துபோன குழந்தைகளின் உடல்கள். இந்தப் புகைப்படங்கள் வெளியாகாமல் தடுத்து நிறுத்தும் அளவுக்குத் துல்லியமான தொழில்நுட்பத்தை மேன்மைபொருந்திய அரசுகள் இன்னும் உருவாக்கவில்லை என்பது இறையாண்மைக்கு ஏற்பட்ட துரதிர்ஷ்டம். ஓர் இனப்படுகொலைக்கு உள்ளான பிரேதத்தின் படத்தை நீங்கள் பார்க்கும்போது உங்கள் கணினி வெடித்துச் சிதறும் என்றால், நீங்கள் ஏன் பார்க்கப்போகிறீர்கள்? ஆனால், அப்படியான நிலை வரும் வரையில், நாம் அதைப் பார்த்துத்தான் தீரவேண்டும்.

இப்படித்தான் அன்புச்செல்வனின் ஃபேஸ்புக் பக்கத்தில் ஒரு புகைப்படத்தைப் பார்த்தேன். அது காஸாவில் இஸ்ரேல் ராணுவத்தால் கொல்லப்பட்ட ஒரு குழந்தையின் புகைப்படம். குழந்தையின் தலை பிளக்கப்பட்டு மூளை வெளியில் வழிந்திருந்தது. இதை எழுதுவதற்கு வெட்கப்படுகிறேன். ரத்தத்தில் நனைந்திருந்த அந்த மூளை, ஒரு ரோஜாப் பூவைப்போல இருந்தது. உண்மையில் அந்தக் குழந்தை அவ்வளவு அழகாக இருந்தது. எந்தக் குழந்தைதான் அழகாக இல்லை? அந்தக் குழந்தை அவ்வளவு அழகாக இருந்ததால்தான், அந்தப் புகைப்படம் அவ்வளவு துயரமாக இருந்தது. குழந்தையின் மூளை சிதறி இருந்ததே தவிர, அது அமைதியாக உறங்கிக்கொண்டு இருப்பதைப்போல்தான் இருந்தது.

குழந்தைகள் தூங்கும்போது லட்சக்கணக்கான விளக்குகளை ஏற்றிவைத்த பிரகாச அழகுடன் இருக்கின்றன. குழந்தைகள் மட்டும் இல்லை, எல்லா மனிதர்களும் தூங்கும்போது அழகாகத்தான் இருப்பார்கள். மோசமான ஒரு சர்வாதிகாரிகூட தூங்கும்போது கருணை நிறைந்த புத்தனைப்போல்தான் இருப்பான். அதிகார நிழலுக்கு அப்பால் இருக்கிறது உறக்கம். இறந்துபோன குழந்தையின் புகைப்படத்தைப் பார்த்தபோது, என் முதுகெலும்பில் பதற்றமும் பதைபதைப்பும் பரவின. இறந்துபோன குழந்தைகள், ஏதோ ஒரு வகையில் நமது குழந்தைகளை நினைவுபடுத்துகின்றன. நமது குழந்தைகளில் நாம் நமது சாயலைப் பார்க்கிறோம். உண்மையில் நாம் நமது பிணங்களைப் பார்க்கிறோம் என்பதால்தான், இவ்வளவு பதறிப்போகிறோம்.

அந்தக் குழந்தைக்கு இனம், மதம், மொழி, படுகொலை, ராணுவம், அரசு, துப்பாக்கி, குண்டுவீச்சு, பேச்சுவார்த்தை, வர்த்தகம், பெட்ரோல், டாலர், ஒப்பந்தம், கையூட்டு, துரோகத்தின் வாசனை, அதிகாரத்தின் மூச்சுத்திணறவைக்கும் தழுவல்… என எதுவுமே தெரிந்திருக்க வாய்ப்பு இல்லை. ஆனால், அந்தக் குழந்தை இறந்துபோனதற்கு இனம், ராணுவம், அதிகாரம், அரசு, விறைப்பு, சீருடை, திமிர், குண்டுவீச்சு, வர்த்தகம், பெட்ரோல், மதம், வழிபாடு, துரோகம்…. இன்னும் சில கெட்டவார்த்தைகளைச் சேர்த்துக்கொள்ளலாம். இவை எல்லாம்தான் காரணங்கள்.

அந்தக் குழந்தையின் மூளை வழிந்த புகைப்படத்தைப் பார்த்தபோது, ஒரு குறுகுறுப்பும் இருந்தது. நான் சடாரென அந்தப் புகைப்படத்தைக் கடந்துவிடவில்லை. கொஞ்சம் மவுஸை வைத்து மேலும் கீழுமாக ஸ்க்ரோலிங் செய்துகொண்டிருந்தேன். அந்தக் குழந்தையின் புகைப்படத்தை இப்போது மீண்டும் பார்க்க விரும்பவில்லை. ஆனால், அப்போது 10 முறைக்கும் மேலாகப் பார்த்திருப்பேன். எப்போதுமே நாம் சந்திக்க விரும்பாத, பார்க்க விரும்பாத, சொல்ல விரும்பாத, தவிர்க்கிற எல்லாவற்றின் மீதும் நமக்கு ஒரு குறுகுறுப்பு இருக்கத்தான் செய்கிறது.

ஏதோ ஒரு தவறு செய்துவிடுகிறீர்கள். உங்கள் மேலதிகாரி உங்களைத் திட்டும்போது, நிச்சயம் வருத்தப்படத்தான் செய்வீர்கள். அவமானமும் கோபமும் உங்கள் முகத்தில் ரத்தம் பாய்ச்சத்தான் செய்யும். ஆனால், அவர் உங்களை அழைத்துத் திட்டும் கணத்தை நோக்கி ஒரு குறுகுறுப்புடன் காத்திருக்கத்தானே செய்கிறீர்கள். நம் எல்லோருக்குமே மரணம் குறித்த குறுகுறுப்பு, பச்சை நரம்புகள் வழியாக ஓடிக்கொண்டுதான் இருக்கிறது. இனி நிகழப்போகும் இனப்படுகொலைகளில் குண்டுவீச்சுகளாலும் துப்பாக்கிக்குண்டுகளாலும் இறந்துபோன குழந்தைகளின் புகைப்படங்களைப் பார்க்க முடியவில்லை என்றால், நாம் பதற்றப்படத் தொடங்கிவிடுவோம் என்று நினைக்கிறேன். இந்தக் கதையை என் குழந்தைக்குச் சொல்ல முடியுமா?

குழந்தைகளைக் கொல்வது எளிது2

சொல்ல வேண்டிய கதை!

புத்தர் மீண்டும் மறுபிறப்பு எடுத்திருந்தார். ஆண்டுக்கணக்கில் தியானத்தில் இருந்தவரைப் போல கண்களைத் திறந்தார் புத்தர். அது ஒரு பூ மலர்வதைப்போல இருந்தது. தன்னிச்சையாக அவரது உதடுகள் ‘உனக்கு நீயே ஒளி’ என்று முணுமுணுத்தன. தூரத்தில் பிரகாசமான நெருப்புப் பந்து ஒன்று மீண்டும் மீண்டும் தோன்றி மறைந்தது. கூடவே துப்பாக்கிகளின் ஓசைகள் அடங்கி அடங்கி எழுந்தன. விடாமல் குண்டு வீச்சுகளின் ஓசைகளும் கேட்டுக்கொண்டிருந்தன. புத்தர் குழப்பத்துடன் நடக்க ஆரம்பித்தார். கால்களை இடறின ஆயிரக்கணக்கான பிணங்கள். சித்தார்த்தனாக இருந்தபோது அவர் கண்ட சவ ஊர்வலம் நினைவுக்கு வந்தது. சுற்றிலும் ஒருமுறை பார்வையை ஓடவிட்டார். வெடிமருந்துகளின் கரித்துகள்கள் சிதறிக்கிடந்தன. அரசமர இலைகளால் கரித்துகள்களைக் கூட்டிச் சேகரித்தார். அந்தக் கரித்துகள்களைக்கொண்டு 23 கோடியே 67 லட்சத்து 58 ஆயிரத்து 364 பென்சில்களைச் செய்து முடித்தார். கைகளில் பென்சில்களுடன் குழந்தைகளைத் தேடி நடக்கத் தொடங்கினார் புத்தர்.

சொன்ன கதை!

”ஒரு நாட்டுல ஒரு ராஜா இருந்தாராம். அவர் தன் நாட்டு மக்களையே கொன்னு குவிச்சாராம். இன்னொரு நாட்டுல இன்னொரு ராஜா இருந்தாராம். அவர் பக்கத்து நாட்டு மக்களைக் கொன்னு குவிச்சாராம். அப்புறம் மூணாவது நாட்டு ராஜா தன் நாட்டுல கொஞ்சம், பக்கத்து நாட்டுல கொஞ்சம் மக்களைக் கொன்னு குவிச்சாராம்!”

”’நாடு’னா என்னப்பா?”

”பெரிய்ய்ய்ய ஊரு!”

”ராஜாவுக்கு எந்த நாடுப்பா?”

என்ன சொல்வது?

”உன் நாடு எதுப்பா?”

”இந்தியா”

”என் நாடு..?”

”இந்தியாதான்ப்பா!”

”ராஜா எந்த நாடுப்பா?”

இந்தியா, இஸ்ரேல், இலங்கை, அமெரிக்கா, ஈராக், ஆஃப்கானிஸ்தான், சிரியா… எல்லாவற்றுக்குமான பொதுப்பெயர் என்ன?

”சொல்லுங்கப்பா, ராஜா நாட்டுக்கு என்ன பேருப்பா?”

”டெட் லேண்ட். பிணங்களின் தேசம்!” என்றேன்.

– செப்டம்பர் 2014

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *