(2012ல் வெளியான குறுங்கதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
பிள்ளைகளை நன்றாகத்தான் வளர்த்துப், படிப்பித்து ஆளாக்கி விட்டார்.
என்ன பயன்?
வயோதிப காலத்தில் ஆதரவளிக்காமல் துரத்தி விட்டனர்.
அவர் ஆண்டிகள் மடத்தில் ஒண்டினார்.
ஒருநாள் அவர் பிச்சைக்குப் போய் வரும் வழியில் அவர் மகன் அவரைத் திருவோடும் கையுமாகக் கண்டு, கண்கலங்கி நின்றான்.
“என்ன கோலமப்பா இது? உடைந்துபோன திருவோடும் கையுமாக….” தந்தைக்குப் பெருமகிழ்ச்சி.
சதை ஆடுகிறதா?
“கொஞ்சம் பொறுங்களப்பா… இதோ வருகிறேன்” என்று எங்கோ விரைந்தான். அவர் இரத்த, பாச உறவுக் கனலில் கனியாகி….
“இந்தாருங்கள் அப்பா! அவர் கனவு கலைந்து பார்த்தபோது, மகன் கையில் அளவில் பெரிய புத்தம் புதிய திருவோடு காட்சியளித்தது.
– குறுங்கதை நூறு (செம்பியன் செல்வன்), டிசம்பர் 1986, நான் வெளியீடு, யாழ்ப்பாணம்
– கதை கதையாம்… – தேர்ந்த தமிழ்க் குறுங்கதைகள் – தொகுப்பு: சு.குணேஸ்வரன், முதற்பதிப்பு: 24.01.2012, இளையகுட்டி அருமைக்கிளி நினைவு வெளியீடு, தொண்டைமானாறு.