கதையாசிரியர்:
கதை வகை: ஒரு பக்கக் கதை
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: February 4, 2024
பார்வையிட்டோர்: 366 
 
 

(1975ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) 

புண்ணியத்தைப் பொறுத்து மேனிலைப் பிறவிகளும், பாவத்தைப் பொறுத்துக் கீழ்நிலைப் பிறவிகளும் சித்திக்கின்றன. ஈசனைச் சார்ந்து உலகத்தினின்றும் ஜீவன் விடுதலை யடைலே முக்தி….’ 

அஃகிய வறிவினால் அறிந்து கொள்ளுங்கள். இது உலகம். இதில் வாழும் உயிர்கள் ஜீவர்கள். உலகையும், உயிர்களையும் பரம்பொருள் தாங்கியிருக்கின்றது. ஈசன் இரண்டிற்கும் மேலானவன்; அவற்றை ஆள்பவன். உலக பாசத்திற் கட்டுண்டு ஜீவர்கள் பிறவிகள் பல எடுக்கின்றனர். பிறப்பும் பல வகைத்து. புண்ணியத்தைப் பொறுத்து மேனிலைப் பிறவிகளும், பாவத்தைப் பொறுத்துக் கீழ்நிலைப் பிறவிகளும் சித்திக்கின்றன. ஈசனைச் சார்ந்து உலகத்தி னின்றும் ஜீவன் விடுதலையடைதலே முக்தி.’ 

இவ்வேதாந்த விளக்கத்தைத் தென்னகத்திற் பிறந்த ஸ்ரீ சங்கராச்சாரியார்,ஸ்ரீ ராமானுஜாசாரியார், ஸ்ரீமத்வா சாரியார் ஆகிய ஞானியர் மூவரும் மூன்று கோணத்தில் தரிசித்தனர். சங்கர் அத்வைதம் என்றார்; ராமானுஜர் விசிஷ்டாத்வைதம் என்றார்; ஸ்ரீமத் துவைதம் என்றார். ஒரே விளக்கத்திற்கு மூன்று தனிவிளக்கங்களும் கிளைத்தன. 

‘உலகம்-ஜீவன் – ஈசன் ஆகிய மூன்றும் அனாதி யானவை. அதேசமயம் அவை வேறானவை. ஜீவன். ஈசன் கருணையால் உலகிலிருந்து விடுதலை யடைந்து, அவனுக்குத் தொண்டனுாய் ஆட்படுவதே முக்தி, முக்தியிலும் ஈசன் வேறு; ஜீவன் வேறு எனத் துவைதம் விளக்கப் பட்டது. 

‘ஈசன் ஏகன். அவனுக்கு உடலாக இருப்பது உலகம். உடலின் கணக்கற்ற உயிர்த்தத்துவங்களாக இருப்பது ஜீவர்கள். ஈசன் பூரணன் என்றும், அதில் தன்னை ஓர் அம்சம் என்றும் ஜீவன் சுகாதுபவத்தில் அறிந்து கொள்ளு தலே முக்தி. முக்தி அடைவதற்கு ஜீவன் ஈசனிடம் சரணாகதியடைந்து, தன்னை அவனுடைய அவயமாக அறிதல் வேண்டும்’ என்று விசிஷ்டாத்வைதம் விளக்கப் பட்டது. 

‘அத்வைதம் என்பதற்கு இரண்டல்ல என்பது பொருள். உள்ளது ஒரேயொரு பொருள்தான், அஃதே அகண்ட சத் சித் ஆனந்தம். தன்னை உலகமாகவும், ஜீவனாகவும் காட்டிக் கொள்ளுகிற வல்லமை அதற்கு உண்டு. அவ்வல்லமை மாயாசக்தி எனப்படும். பிரம்மமும், பிரமத்தினுடைய சக்தியும் எனவும் பெறப்படும். ஞான மடைந்த ஜீவன் ஈசனிலே கலப்பதுதான் முக்தி நிலை. கடலிலுள்ள அலை நாமரூபத்தை அழித்து விடும்பொழுது பழையபடி கடலாகிவிடுகிறது. அவ்வாறே முக்தி நிலையில் ஜீவன் ஈசனிற் கலந்து விடுகின்றான்’ ST GOT அத்வைதம் விளக்கப்பட்டது. 


இவற்றுள் எது மெய்யான விளக்கம் என்பதை அறியும் வேட்கையுடன் ஒருவன் புறப்பட்டான். பனியால் நனைந்து, வெயிலால் உலர்ந்து, பசியால் அலைந்து, சோர்வுற்ற நிலையில் மகா தபஸ்வி ஒருவரின் பாதங்களைச் சரணடை ந் தான். 

‘சத்தியம் வேறு; மெய்மை வேறு. மெய்மை நித்திய மானதல்ல; அதன் உண்மை அஃது எழுந்து நிற்கும் தளத் தைப் பொறுத்தது….இன்னொரு வழியில் யோசித்துப் பார் துவைதம் விழிப்பு நிலை என்று கூறலாம். அப்பொழுது அவன் வேறு, மற்றும் உயிர்கள் வேறு, உலகம் வேறு என்பன மெய்யாகத் தோன்றுகின்றன. விசிஷ்டாத்வைதம் அபேத நிலையான சொப்பனமாக இருக்கலாம். கனவு மாந்தரும், உலகமும் அந்நியமானவையல்ல; பேதப்படுவதாகத் தோன்றலாம். பின்னர் அயர்ந்த உறக்கநிலை. பிரக்ஞையைத் தவிர மற்றவை இற்றுவிடுகின்றன. அதுவே அத்வைத நிலை. இப்பொழுது நீயே சொல். எது மெய்யான நிலை?’ என தபஸ்வி கேட்டார். 

‘நான் சாமான்யன்; எனக்கு வயிற்றுப் பசி எடுக்கிறது என்றான். 

‘அபக்குவன்’ எனக் கூறிய மகாதபஸ்லி தியானத்தில் ஒன்றினார்.

– கீதை நிழலில், முதற் பதிப்பு: அக்டோபர் 1975, கலைஞன் பதிப்பகம், சென்னை.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *