(2023ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
விஷயம் கேள்விப்பட்டு பதறியடித்துக் கொண்டு சென்றேன்.
உற்ற நண்பன் ராமநாதனை பெஞ்சில் கிடத்தி இருந்தார்கள் பார்ப்பதற்கு அசந்து தூங்குவது போல இருந்தது. இன்னும் யாரும் வந்திருக்கவில்லை.
‘ஏதாவது உதவின்னா கேளுங்க… ‘என்று பார்மாலிட்டிக்குச் சொல்லிவிட்டு அக்கம் பக்கத்து ஃபிளாட்காரர்கள் கதவை அடைத்துக் கொண்டார்கள்.
இழவு வீட்டு சூழல் இன்னும் முழுமையாக உருவாகவில்லை. அம்மாவும் மகனும் என்னதான் செய்வார்கள் பாவம்.
எனக்கு என் கவலை. எப்படி கேட்பது என புரியவில்லை. கஷ்டப்பட்டு சேமித்தது. பணத்தை இழந்து விடுவோமோ? என்று கவலை வர அழுகை வந்தது. ஒரு வழியாக தைரியத்தை வரவழைத்துக் கொண்டு “கடைசியா அப்பா ஏதும் சொன்னாரா தம்பி?” என்று கேட்டேவிட்டேன்.
“திடீர்ன்னு ‘ஐயோ வலிக்குது’ ன்னு நெஞ்சை பிடிச்சுக்கிட்டாரு. அம்மா ஓடிவந்து அருகில் உட்கார்ந்த அடுத்த நிமிஷமே அவங்க மடியில் உசுர விட்டுட்டாரு. எதிர் ஃப்ளாட் டாக்டர்தான் வந்து கன்ஃபார்ம் பண்ணினார் அங்கிள்!”என்றான் நண்பனின் மகன் அழுகையினூடே.
ராமநாதனின் தலைமாட்டில் காமாட்சி விளக்கு ஏற்றி வைக்கப்பட்டிருந்தது. டெலிபோன் நோட்டில் நம்பர் தேடி மற்ற உறவினர்களுக்கும் நண்பர்களுக்கும் அறிவித்துக் கொண்டு இருந்த நண்பரின் மனைவி என்னைக் கண்டதும் அருகே வந்தார். அழுகையை கட்டுப் படுத்திக் கொண்டு சொன்னாள்… “புரோநோட், பத்தரம், மணி டிரான்ஸ்பர், செக்… என எந்த ஆதாரமும் இல்லாமல் உங்ககிட்டே கேஷா ஒரு லட்சம் கடன் அவர் வாங்கினது எனக்குத் தெரியும். ஆபீஸ்ல செட்டில்மெண்ட் ஆனதும் முதல் காரியமா உங்க கடனை செட்டில் பண்ணிடுவேன் சார்…!” என்று சொல்லி அழுதார்.
“பணமா பெருசு,..” என்று வாய் பொய் சொல்ல, ‘என்னை மன்னிச்சுடு ராமநாதா…’ எனக்குள் சொல்லிக் கொண்டு, உறுத்தல் இன்றி அடுத்தடுத்து ஆக வேண்டிய காரியங்களை கவனிக்க தொடங்கினேன்.
– கதிர்’ஸ் ஜூலை, 2023