உலகத்திலுள்ள எல்லா மொழிகளுக்கும், பாரத நாட்டு மொழிகளுக்கும் ஒரு முக்கியமான வேறுபாடுண்டு. பாரத நாட்டின் ஒவ்வொரு மொழியும் தெய்வீகத்தோடும் ஒழுக்கம், அறம் முதலிய சமயக் கோட்பாடுகளோடும் பின்னிப் பிணைந்திருக்கின்றன. அதுவும் தமிழ் மொழிக்கும் தெய்வீகத் தன்மைக்கும் மிக நெருக்கமான உறவுண்டு. அரசியலில் ஈடுபட்டிருக்கிறவர்களின் குழப்பங்கள் இந்தத் தலைமுறையில் தமிழிலிருந்து தெய்வீகத்தைப் பிரித்து விட முயல்கின்றன. தெய்வத் தன்மையிலிருந்து பிரிந்தால் தமிழ் மணமற்ற பூவாகிவிடும். தமிழ் மொழியில் நமக்கு எவ்வளவு அக்கறை உண்டோ , அவ்வளவு அக்கறை சமய ஒழுக்கங்களிலும் அறங்களிலும் இருக்க வேண்டும்.
தமிழ் மொழியால், ஊமையான குமரகுருபரர் வாய் பெற்றார், சம்பந்தர் எலும்பைப் பெண்ணுருவாக்கினார் என்றெல்லாம் அற்புதங்கள் பழைய காலத்தில் நடந்ததாகக் கேள்விப்படுகிறோம். இப்போது அற்புதங்களை ஏன் பார்க்க முடிவதில்லையென்றால் அதற்குக் காரணம் உண்டு.
பழைய தலைமுறையில் மொழியைத் தெய்வமாக வணங்கினோம். அதில் தெய்வத்தன்மை அமைந்து அற்புதங்களை விளைத்தது. இப்போது வாழ்வதற்கான சாதாரண கருவியாகத் தமிழ் மொழியை எண்ணிவிட்டோம். அதனால் மொழியும் சாதாரணமாகிவிட்டது. வயிற்றுக்குச் சோறு, உடலுக்கு உடை, ஆசைக்குச் செல்வம் என்பது போல் மொழியும் ஒரு தேவையாகிவிட்டது. ஆனால் அந்த நாளில், அது தெய்வத்தின் ஒலி வடிவமாக மதிக்கப்பட்ட தலைமுறையில் நடந்த அற்புதத்தை இங்கே காணலாம்.
பதினெட்டாம் நூற்றாண்டில் சோழ நாட்டில் திருக்கடவூர் என்ற சிவத்தலத்தில் அபிராமிபட்டர் என்ற அடியார் ஒருவர் இருந்தார். அவர் உள்ளம் அன்பு மயமானது. அருள் பழுத்த கவிதைகளை இயற்றும் இயல்பு அவருக்கு உண்டு. தாம் எதைச் செய்கிறாரோ, அதைப் பிடிவாதமாகச் சாதித்து வெற்றி பெறும் தர்க்க சாத்திரத்தில் அவருக்கு இணையற்ற திறமை உண்டு. அவருடைய காலத்தில் தஞ்சாவூரை ஆண்டுவந்த சரபோஜி மன்னரிடத்தில் அமாவாசை நாளைப் பெளர்ணமி என்று கூறிவிட்டுத் தம் திறமையால் இறுதிவரை தவற்றை ஒப்புக் கொள்ளாமல் வாதிட்டு வெற்றிக் கொடி நாட்டினார் அவர்.
திருக்கடவூரில் வாழ்ந்த ஆதி சைவர்களுள் ஒருவராகிய அபிராமி பட்டர், அவ்வூர் அபிராமி அம்மன் மீது இணையற்ற பக்தி செலுத்தி வந்தார். இறைவியை நினைந்து நினைந்து உருகி அன்பு முதிர்ந்த அவர் உள்ளத்தில் தியானங்கள் பழுத்தன. அபிராமியந்தாதி’ என்று ஒரு பிரபந்தத்தை இயற்றினார் அவர். ஒவ்வொரு பாடலும் ஒரு அருட்கனியாகக் கனிந்திருந்தது. புலன்களைத் தேனீக்களாக்கி ஆன்மக் கூட்டில் திரட்டிய தேனாகிய அன்பையே கவிதைகளாகப் பாடியிருந்தார் அவர்.
கோவிலில் அம்பாளின் திருமுன்பு நின்றுகொண்டே அவர் அந்தப் பாடல்களை ஒவ்வொன்றாகப் பாராட்டி அரங்கேற்றி . னார். பாடும்போது அபிராமிபட்டரின் உடலும் உள்ளமும் தன் வசத்திலேயே இல்லை. உள்ளம் நெக்குருகி மெய்சிலிர்த்துப் பக்திப் பரவசமாகி உடம்பையே மறந்து உடம்பே ஒளிமயமாக மாறிப் பாடிக் கொண்டேயிருந்தார். அவர் அப்போது இந்த உலகத்திலேயே இல்லை. கைலாச சிகரத்தில் முக்கண் னிறைவனுக்கு அருகில் வீற்றிருக்கும் உமாதேவியின் காலடியில் உட்கார்ந்து சிறு குழந்தையாய் மாறி மழலைக் குரலில் கதறிக் கொண்டிருப்பது போல் அவர் மனத்தில் ஒரு பிரமை ஏற்பட்டது. கண்களை மூடியவாறே நின்று கொண்டு தியான பரவச நிலையில் ஒவ்வொரு பாடலாகப் பாடிக் கொண்டிருந்த அவருக்கு மானசீகமாக ஒரு தோற்றம் ஏற்பட்டது. உமாதேவி தம்முடைய பாடலுக்கு வியந்து தன் இரு செவிகளிலும் அணிந்திருக்கும் வைரத்தோடுகளைக் கழற்றிப் பரிசாக எறிவது போல் தோன்றியது அவருக்கு. உமாதேவி கழற்றி எறிந்த அந்த வைரத்தோடுகள் அவர்மேல் வந்து விழுகின்றன. ‘தாயே! இந்த ஏழையின் பிதற்றலுக்கு நீ அளிக்கும் பரிசா இவை?’ என்று கேட்கத் துடிக்கிறது அவர் நாக்கு. எல்லாம் மானசீக மாகத்தான் ; உண்மையாக இல்லை. அவர்தான் தியானத்தால் முடிய கண்களைத் திறக்காமல் பாடிக் கொண்டேயிருந்தாரே! பாடிக் கொண்டிருக்கும்போதே இது கனவு போல் மனத்தில் தோன்றியது. அப்படி ஒரு தோற்றம் தான் வைரத்தோடுகள் உமாதேவியின் கைகளிலிருந்து வீசி எறியப்பட்டு வந்து விழுவது போல் ஒவ்வொரு கணமும் ஒரு மானசீக உணர்வு அவருக்கு ஏற்பட்டுக் கொண்டேயிருந்தது. அந்த உணர்வைச் சுமந்து கொண்டே அந்தாதியை ஒவ்வொன்றாகப் பாடியவாறு நின்றார் அவர்.
“விழிக்கே அருளுண்டு அபிராம வல்லிக்கு வேதஞ் சொன்ன
வழிக்கே வழிபட நெஞ்சுண் டெமக்கள் வழிகிடக்கப்
பழிக்கே சுழன்று வெம் பாவங்களே செய்து பாழ்நரகக்
குழிக்கே யழுந்தும் கயவர்தம்மோ டென்ன கூட்டினியே.”
(அபிராமி அந்தாதி)
என்ற பாட்டை அவர் பாடிக் கொண்டிருந்தபோது உண்மையாகவே அவர் உடம்பின் மேல் ஏதோ வந்து விழுந்ததை உணர்ந்து ஆச்சரியத்தோடு கண்களைத் திறந்தார்! என்ன ஆச்சரியம்! அம்பாளுடைய செவித்தோடுகள் இரண்டும் அபிராமி பட்டர் மேல் வீசி எறியப்பட்டு அவர் அருகில் கிடந்தன. உடல் சிலிர்த்தது அபிராமிபட்டருக்கு அம்பாளை ஏறிட்டுப் பார்த்தார். அவள் செவிகள் இப்போது மூளியாக இருந்தன.
“தாயே! என்னைச் சோதிக்கிறாயா?” என்று அலறினார் அபிராமி பட்டர். “இல்லை ! உன் தமிழுக்கு என் பரிசு இவை. ஏற்றுக் கொள்” என்று அவர் காதில் மட்டும் கேட்கும் ஓர் இனிய குரல் ஒலித்து ஓய்ந்தது. அந்தத் தெய்வீகத் திருக்குரலைக் கேட்ட மகிழ்ச்சியில் ஆனந்தக் கண்ணீர் சொரிந்தபடியே நின்றார் அபிராமிபட்டர்.
– தமிழ் இலக்கியக் கதைகள், முதற் பதிப்பு: அக்டோபர் 1977, தமிழ்ப் புத்தகாலயம், சென்னை.