“அம்மா…!”
“வா கருணாகரா.. மருமக, குழந்தைங்க எல்லாரும் சௌக்கியமா..?”
“எல்லாரும் நல்லாருக்காங்கம்மா… அடுத்த வாரம் பசங்களுக்கு லீவு. அழைச்சிட்டு வரேம்மா.”
கருணாகரனின் விரல் செல்போனில் எண்ணை அழுத்தியது.
“ம்.” என்ற அம்மாவிடம் செல் போனைத் தந்தான் கருணாகரன்.
‘வீடியோ காலி’ல் வந்த பேரன் பேத்திகளோடும், மருமகளோடும் சந்தோஷமாகப் பேசினாள் அம்மா.
அடுத்தடுத்து, , தனது மூத்த சகோதரன், இளைய சகோதரன் இவர்களுக்கெல்லாம் ஃபோன் செய்து, அனைவரோடும் வீடியோ கால் பேசவைத்தான்.
மனம், மொழி, மெய்யெல்லாம் அப்படியொரு மகிழ்ச்சி, அம்மாவுக்கு,
வாரமொரு முறையோ பத்து நாளுக்கொரு முறையோ, தன் மூன்று மகன்களில் ஒருவர், தனியாகவோ, குடும்பத்தோடோ, சந்தர்ப்பத்துக்கு ஏற்றாற்போல், தனியாக இருக்கும் அம்மாவைப் பார்க்க வருவார்கள்.
யார் வந்தாலும் , வீடியோ கால் போட்டு அனைவரிடமும் அம்மாவைப் பேசவைத்து மகிழ்வார்கள்.
நாள்-கிழமையென்றால் மூன்று அண்ணன் தம்பிகளும், குழந்தைக் குட்டிகளோடு கூடிவிடுவார்கள்.
வீடே மகிழ்ச்சியில் மிதக்கும்.
அப்பாவின் முதல் நினைவு நாளன்று அனைவரும் வந்திருந்தார்கள்.
வீடே கலகலவென்று இருந்தது.
மூன்று சகோதரர்களும் கூடிப் பேசி, அடிக்கடிப் பேச வசதியாக, அம்மாவுக்கு ஒரு ஆன்டிராய்டு ஃபோன் வாங்கித் தர முடிவெடுத்தார்கள்.
தங்கள் முடிவையும் அறிவித்தார்கள் அம்மாவிடம்.
“எனக்கு வேண்டவே வேண்டாம்..” என்று உறுதியாக மறுத்ததற்குக் காரணமும் சொன்னாள் அம்மா.
“நீங்க இந்த ஒரு வருஷமா மாசத்துக்கு ஒரு முறையாவது நேர்ல வந்து பார்த்தீங்களோ, அதையேத் தொடருங்க. செல் போன் இருந்தா, அதுல பேசிட்டமேனு தோணும்.
‘செல்(ல)வேணாம்’னு கூடத் தோணும்.”
“…………………..”
பெற்ற தாயின் கருத்துக்குச் சம்மதம் என்பதை அறிவித்தது வாரிசுகளின் மௌனம்.
– மே 2023 கதிர்ஸ்