பெட்டியைத் திறந்தான் கதிரேசன்.

எல்லா வேட்டிகளையும் எடுத்துப் போட்டான்.
எல்லாச் சட்டைகளையும் பரத்தி வைத்துப் பார்த்தான்.
இருப்பதிலேயே மங்கலான வேட்டியை எடுத்தான்.
வேட்டியைக் கொஞ்சம் ஏற்றல் தாழ்த்தலாகக் கட்டிக்கொண்டான்.
சாயம் போன டல் கலர் சட்டையை எடுத்து மாட்டிக் கொண்டான்.
நிலைக் கண்ணாடி முன் வந்து நின்றான் கதிரேசன்.
வாயை ஒரு புறமாக இழுத்துக் கோணினாற்போல் வைத்துக் கொண்டு பார்த்தான்.
தோள் பட்டையை இறக்கினாற்போல் கூன் போட்டபடி நின்றான்.
வாயைக் கோணும்போது ஒரு குறிப்பிட்ட அளவில் கண்களைச் சுருக்கினான்.
பற்கள் சீரற்றுத் தெரியுமாறு வைத்துக் கொண்டான்.
இடது காலின் இடப்புறம் வலது காலின் விரல்கள் மட்டும் பதியும்படி நின்றான்.
வயிற்றுக்கும் நெஞ்சுக்கும் இடையே இடதுகையைப் பதித்தான்.
வலது கை ஆள்காட்டி விரலால் வலது பின்னந் தலையில் சொறிந்து கொண்டான்.
இதையேப் பலமுறை ஒத்திகை பார்த்துக் கொண்டான்.
நம்பிக்கையோடுக் கிளம்பினான்.
கையில் ஷாப்பர் பை இருந்தது.
நீங்கள் இந்தக் காட்சியைப் பார்த்திருந்தால், ஏதோ மௌன நாடகத்தில் நடிக்கச் செல்கிறான் என்றுதான் நினைப்பீர்கள்.
அதெல்லாமில்லை. வீட்டில் சாப்பாட்டுக்குக் குந்துமணி அரிசி இல்லை. கடனுக்கு அரிசி, மளிகையெல்லாம் வாங்கி வரக் கடைத்தெருவை நோக்கிச் சென்றான்.
– கதிர்ஸ் மார்ச் 2023