கதையாசிரியர்:
கதை வகை: ஒரு பக்கக் கதை
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: March 18, 2024
பார்வையிட்டோர்: 10,148 
 
 

அவள் அந்த கடையில் வேலை செய்து கொண்டிருந்தாள். கடைக்கு யாருமே வரவில்லை! அமைதியாக உட்கார்ந்து சாலையில் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தாள். சுவேதா கடைக்குள் வந்து கையைத் தட்டிக்கொண்டு பணம் கேட்டுக் கொண்டிருந்தாள்!

“ஏதாவது குடு கண்ணு”

“இந்தாங்க அக்கா” என்று 5 ரூபாய் கொடுத்தாள்.

“ஒரே வெயிலா இருக்கு! கொஞ்ச நேரம் உட்கார்ந்துட்டு போறேன் கண்ணு!”

“சரி அக்கா உட்காருங்க!”

அவளிடம் பேச இவளுக்கு ஆசை.

அவளைப் பற்றி விசாரிக்க தொடங்கினாள்.

“எங்க இப்படி காசு வாங்குவதற்கு ஏதாவது வேலைக்கு போகலாமில்ல”

“எங்களுக்கு யாரு கண்ணு வேலை தார இந்த சமுதாயத்தில, எல்லாருக்கும் எங்கள பார்த்தா இழிவாதான் இருக்கு! பொட்ட , உஸ்சு, அலி, ஒன்பதுனு பல பேர் வச்சு கூப்பிடுறாங்க. சொந்த வீடும் இல்லை! வீடும் வாடகைக்கு கொடுக்க மாட்டாங்க! சொந்த வீட்டுலயும் சேர்க்க மாட்டாங்க! இந்த பிளாட்பாரம் தான் எங்களுக்கு ஒரு வீடு மாதிரி! வயித்து பிழைப்புக்கு உடம்ப வித்து பொழைக்கிறதுக்கு பதிலா இந்த மாதிரி கைதட்டி காசு வாங்கிட்டு போயிடலாம் கண்ணு! எங்களுக்கு எங்கள மாதிரி திருநங்கைகள் தான் ஆதரவு! எங்களோட கஷ்டம் எங்களோட போகட்டும்!” என்று வருத்தத்துடன் கூறினால் சுவேதா.

பேசிக் கொண்டிருக்கும் போதே சாலையில் பல திருநங்கைகள் பாடையில் யாரையோ தூக்கிக்கொண்டு சுடுகாட்டிற்கு சென்று கொண்டிருந்தார்கள். அவர்களில் சில பேர் கைகளில் செருப்பும் விளக்கமாரும் வைத்திருந்தார்கள். அதைப் பார்த்து என்னவென்று அமுதா கேட்டுக் கொண்டிருந்தாள்.

“எங்கள மாதிரி ஒரு திருநங்கை இறந்து போயிட்டாங்க போல அவங்கள அடக்கம் பண்ண தான் எல்லா திருநங்கைகளும் சேர்ந்து தூக்கிட்டு போறாங்க”

“ஏன்? அவர்கள் கையில் செருப்பும் விளக்கமாரும் கொண்டு போறாங்க அக்கா”

“எங்க திருநங்கைகள் கூட்டத்தில் யாராவது இறந்து போயிட்டாங்கனா அவங்கள செருப்பாலையும் விளக்கமாத்தாளையும் அடிச்சு வழி அனுப்பி வைப்போம்!”

“எதற்காக இப்படி செய்றீங்க?”

“இந்தப் பிறவியில நீ பட்ட அசிங்கமும், கஷ்டமும், துன்பமும், கொடுமைகளும், வலிகளும், அவமானங்களும், ஏமாற்றங்களும், ஏக்கங்களும் ஏராளம். இனிமே இப்படி ஒரு பொறப்பு உனக்கு வரவே கூடாது. அப்படின்னு சொல்லி அவங்கள செருப்பாலையும் , விளக்கமாத்தாளையும் அடித்து வழி அனுப்பி வைத்தால் ,அடுத்த ஜென்மத்தில் இந்த மாதிரி ஒரு பொறப்பு அவர்களுக்கு இருக்காது என்று எங்களுடைய நம்பிக்கை “ என்று சொல்லி சுவேதா தன்னுடைய வேதனையைச் சொல்லி கண்ணீரை வடித்தாள்…

இதைக் கேட்டு அவளின் கண்கள் கண்ணீர் குளங்கள் ஆகிப் போகின…

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *