‘போனாலு’ பண்டிகை கதை

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: ஆன்மிகக் கதை
கதைப்பதிவு: November 14, 2016
பார்வையிட்டோர்: 7,218 
 
 

அண்டை மாநில​ம்​ தெலங்கானாவின் மிகப் பெரிய உற்சவம் ​’​போனாலு’ பண்டிகை​.

ஆஷாட மாதம் எனப்படும் ஆடி மாதத்தில் ​தக்ஷிணாயன ஆரம்பத்தை வரவேற்று, இயற்கை அன்னையிடம் மழை வேண்டி பிரார்த்திக்கும் விதமாக கிராம தேவதைகளை பூஜிக்கும் வழக்கம் இன்றும் கிராம மக்களிடம் பரவலாக காணப் படுகிறது.

ஹைதராபாத், சிகந்தராபாத் இரட்டை மாநகரில் வசிக்கும் ஹிந்துக்களின் மிகப் பெரிய பண்டிகை “போ​னாலு” பண்டிகை. இது முக்கியமாக தெலுங்கானா பகுதியினரால் மிக விமரிசையாகக் கொண்டாடப் படுகிறது. இதனை ‘ஆஷாட ஜாத்ரா’ என்றும் அழைப்பர். ஆஷாட மாதத்தில் ஒவ்வொரு ஞாயிற்றுக் கிழமையன்றும் ஒவ்வொரு பகுதியில் இப்பண்டிகை கொண்டாடப்படுகிறது. இது அம்மனுக்கு மக்கள் தங்கள் நேர்த்திக் கடனை செலுத்தும் பண்டிகையாகும்.

​சென்ற நூற்றாண்டில் இரட்டை மாநகரில் பிளேக் நோய் பரவியபோது, கிராம மக்கள் தெய்வக்குற்றம் என்று அஞ்சி அம்மனை சாந்தப்படுத்த வேண்டி இப்பண்டிகையை கொண்டாட ஆரம்பித்ததாகத் தெரிகிறது. கிராம தேவதைகள் எல்லம்மா, மைஸம்மா, போச்சம்மா, பெத்தம்மா, போலேரம்ம, அங்காளம்மா, மாரம்மா, மஹாங்காளி என்று பல பெயர்களால் வழிபடப் படுகிறார்கள்.

‘போ​னாலு’ என்றால் ‘போஜனாலு’ என்று பொருள். கோவில்களில் கடவுளுக்கு நாம் படைக்கும் நைவேத்யமே, ‘போணாலு’ என்று இப்பண்டிகையின் போது அழைக்கப் படுகிறது. ஆஷாட மாதத்தில் அம்மன் பிறந்த வீட்டிற்கு வருவதாக நம்பி எதிர் சென்று அழைத்து, அவளுக்குப் பிடித்தமான உணவு வகைகளை படைத்து தம் அன்பை பக்தர்கள் வெளிப் படுத்துகின்றனர். இதுவே இப்பண்டிகையின் உத்தேசம்.

இவ்விழா முதலில் கோல்கொண்டா கோட்டையின் உள்ளே கொலுவீற்றிருக்கும் மஹாங்காளி தேவாலயத்தில் தொடங்கி, சிகந்திராபாத்திலுள்ள உஜ்ஜயினி மஹாங்காளி தேவாலயம், ஹைதராபாத் பழைய பஸ்தியில் ஷாலிபண்டாவில் கோவில் கொண்டுள்ள அக்கன்னா-மாதன்னா மஹாங்காளி தேவாலயம், ஹைதராபாத் பழைய பஸ்தியில் லால்தர்வாஜாவில் உள்ள மஹாங்காளி அம்மவா​ரு தேவாலயம் – போன்ற பல பிரதான தேவாலயங்களில் தொடர்ந்து விமரிசையாக கொண்டாடப் படுகிறது. அக்கனா-மாதன்னா தேவாலயம், கோல்கொண்டாவை ஆண்ட தானேஷாவின் காலத்தில் அக்கன்னா, மாதன்ன என்ற சகோதரர்களால் கட்டப்பட்டது.

இப்பண்டிகை ஒவ்வோர் ஆண்டும் 16 நாட்கள் கொண்டாடப் படு​கிறது. நம் தமிழ்நாட்டு ஆடிமாத அம்மன் உற்சவம் போலவே இங்கும் ​
கோயில்கள் எல்லாம் இப்பண்டிகையின் போது மின்சார விளக்குகளாலும், பூக்களாலும், தோரணங்களாலும் அலங்கரிக்கப்படுகின்றன. வீதிகள் மாவிலை, வேப்பிலை தோரணங்களால் அலங்கரிக்கப் பட்டு, லவுட் ஸ்பீக்கரில் அம்மனின் பக்தி பாடல்களும், நாட்டுப் புற பாடல்களும் எதிரொலிக்க விழாகோலம் பூண்டிருக்கும்.

இரட்டை மாநகர மக்கள் மட்டுமின்றி அருகிலுள்ள தெலுங்கான பகுதியைச் சேர்ந்த லட்சக் கணக்கான மக்கள் இவ்வுற்சவத்தில் பங்கேற்பர். ஒவ்வொரு பகுதியில் இருந்து வருபவர்களும் ஒவ்வொரு தொட்டிலை அம்மனுக்கு சமர்ப்பிப்பதும் வழக்கம். குச்சிகளில் கலர் பேப்பர்களை ஒட்டி அழகான தொட்டில்களை எடுத்து வந்து அம்மனுக்கு அளிக்கின்றனர்.

“போ​னாலு” பண்டிகை என்பது கடோத்சவம், போனாலு, வேப்பிலை சமர்பித்தல், பலஹார வண்டி, போத்தராஜுவின் வீர விளையாட்டு, குறி சொல்லும் ‘ரங்கம்’. காவு கொடுப்பது, வழி அனுப்புவது – என்ற எட்டு அங்கங்களைக் கொண்டது.

கடோத்சவம்:-
பிரத்யேகமான கலசத்தில் அம்மனை ஆவாஹனம் செய்து நகர வீதிகளில் ஊர்வலமாக எடுத்துச் செல்வார்கள். “போ​னாலு” உற்சவம் ஆரம்பமான தினம் முதல் பதினான்கு நாட்களுக்கு தினமும் காலையும் மாலையும் அம்பாள் கலசத்திற்குள் சூக்ஷ்ம ரூபத்தில் அமர்ந்திருந்து நகர, கிராம வீதிகளில் உலா வந்து பக்தர்களின் பூஜைகளை ஏற்பாள். “கடம்” என்பது கலசம். அம்மனின் உருவம் அதில் வரையப் படும். அ
ந்த கடம் அம்மனைப் போல் அலங்கரிக்கப்படும். கோவில் பூசாரி உடலில் மஞ்சள் பூசி அதனை சுமந்து செல்வார்.

கடோத்சவம், “போ​னாலு” பண்டிகை ஆரம்பமானதை குறிக்கும் சின்னமாகும். கோவிலுக்கு வர இயலாத வயதானோருக்கும், ஊனமுற்றோருக்கும் அருள் பாலிக்கும் விதமாக அம்மவாரு அவர்களருகில் வந்து அனைவரும் தம் வேண்டுதல்களை செலுத்த வாய்ப்பளிக்கும் விதமாக
​இக்கடோத்சவ ஊர்வலம் நடை பெறுகிறது.

போ​னாலு:-
சக்தி ஸ்வரூபிணியான மகா காளிக்கு பக்தியுடன் சமர்ப்பிக்கும் அன்னமே, ‘போ​னாலு’. அவரவர் தாம் எவ்வெவ்விதமாக சமைத்துப் படைப்பதாக வேண்டிக் கொண்டார்களோ, அவ்வவ்விதமாக சமைத்து, படைத்து தம் நன்றியை தெரிவிப்பது வழக்கம். சர்க்கரை பொங்கல், வெல்லப் பொங்கல், வெண் பொங்கல், மஞ்சள் சாதம், சாதமும் வெங்காயமும் – என்று பல விதமாக ‘போணாலு’ அன்னம் இருப்பது வழக்கம்.

ஆஷாட ஜாத்திரையன்று, அதாவது உற்சவம் ஆரம்பித்து பதினைந்தாம் நாள், பெண்கள் தம் வீடுகளை கழுவி சுத்தம் செய்து, தலை ஸ்நானம் செய்து சுத்தமான புத்தாடை உடுத்தி, விரதமிருந்து நைவேத்யம் தயார்​ ​செய்வர். ஒரு அலங்கரித்த பாத்திரத்தில் அன்னத்தை எடுத்து வைத்து, வேப்பிலையால் சுற்றி, அதன் மேல் மூடியில் பவித்திரமாக விளக்கேற்றி, தலை மேல் வைத்துக் கொண்டு வந்து லட்சகணக்கான பெண்கள் வரிசையாக அம்மனுக்கு அன்புடன் படைத்து தம் நேர்த்திக் கடனை தீர்த்துக் கொள்வார்கள். அன்று பெண்கள் முகம் நிறைய மஞ்சள் பூசி, ஈரப் புடவையுடன் வருவது பழங்காலம் தொட்டு வரும் சம்பிரதாயம். பெண்கள் ‘போணாலு’ வை தலையில் வைத்துக் கொண்டு தாரை தப்பட்டை முழங்க ஊர்வலமாக வருவதைப் பார்க்க கண் கொள்ளாக் காட்சியாக இருக்கும். இதற்கென்று அரசு பிரத்தியேகமாக பந்தோபஸ்து ஏற்பாடுகளையும், ​போக்குவரத்துகளை நெறிப்படுத்துவதையும் முன் கூட்டியே திட்டமிட்டு செய்வது வழக்கம்.

வேப்பிலை சமர்ப்பித்தல் :-
வேப்பிலைகளை மஞ்சள் நீரில் நனைத்து அம்மவாருக்கு சமர்ப்பித்தல் முக்கியமான சடங்காகும். மழை நாள் ஆரம்பமாகும் போது வரும் காலரா, வைசூரி போன்ற நோய்களை விரட்டி அடிக்கும் கிரிமி நாசினியாக வேப்பிலை இருப்பதாலும் அம்பாளின் பிரியமான மரமாக வேப்ப மரம் இருப்பதாலும் அதன் கிளைகளை அம்பாளுக்கு சமர்பித்து ஆனந்திப்பார் மகளிர். இந்நீரை வேப்பிலையால் தம் மேல் தெளிக்கும் போது தம்மை நோய் நொடிகளில் இருந்து அம்மன் காப்பாள் என்ற பூரண நம்பிக்கை பக்தர்களுக்கு ஏற்படுகிறது.

பலஹார வண்டிகள்:-
“போ​னாலு” அன்று பக்தர்கள் வீட்டிலிருந்து சுத்தமாக விரதமிருந்து தயாரித்து எடுத்து வரும் நைவேத்யங்களை வண்டிகளில் வைத்து கோவிலை பிரதிக்ஷனம் செய்து தேவிக்கு படைத்து விட்டு மீதியை பிரசாதமாக வீட்டிற்கு எடுத்துச் சென்று குடும்ப சகிதமாக உண்டு மகிழ்வர். பிரசாதங்களை வைத்த வண்டி கோவிலைச் சுற்றி வருவதையே ‘பலஹார வண்டிகள்’ என்ற உற்சவமாக கொண்டாடுகின்றனர். அம்மனுக்குப் படையல் முடிந்த பின் அசைவ விருந்து உண்டு களிப்பர்.

போத்தராஜு வீர விளையாட்டு:-
அம்மனின் சகோதரனாக போத்தராஜு கருதப்படுகிறார்.
“போ​னாலு” பண்டிகையின் பதினைந்தாம் நாள் தெலங்கானா பகுதியின் ஒவ்வொரு பஸ்தியிலிருந்தும் போத்தராஜு எனப்படும் ஆண் பக்தர்கள் தேவியின் ஆலயத்திருக்கு லட்சக் கணக்கானோர் வீர விளையாட்டுகள் செய்தபடி வெள்ளம் போல் வந்து சேருவர். இவர்கள் காலுக்கு சலங்கை கட்டி உடல் முழுவதும் மஞ்சள் பூசி, மஞ்சள் நீரில் நனைத்த சிவத்து உடை அணிந்து, கண்ணுக்கு மை, நெறியில் கும்குமம் இட்டு, இடுப்பில் வேப்பிலை கட்டி, கையில் மஞ்சள் நிற சாட்டையை பிடித்து, சாட்டையை வீசி அடித்து நடனம் செய்தபடி பலஹார வண்டிகளின் முன்னால் செல்வது போனாலு பண்டிகையின் விசேஷமாக ஆகர்ஷிக்கும் அங்கமாகும்.

இவர்கள் கிராமங்களை காத்து தமக்கு பாதுக்காப்பளிப்பார்கள் என்பது கிராம மக்களின் நம்பிக்கையாகும். இவர்கள் தம் நாட்டியத்தாலும், வீர சாகசங்களாலும் ‘போ​னாலு’ சமர்பிக்க வரும் லட்சகணக்கான பக்தர்களை மகிழ்விப்பார்கள்.

குறிகூறுதல் (ரங்கம்):-
இது தான் இறுதி நாளில் நடக்கும் மிக முக்கிய அங்கம்.
‘போ​னாலு’ நைவேத்யம் ஞாயிற்று கிழமை நடைபெறும். திங்களன்று அதிகாலையில் அம்மனின் சந்நிதிக்கு எதிரில் முக மண்டபத்தில் உள்ள மாதங்கேச்வரி ஆலயத்தில் அம்பாளின் எதிரில் திருமணமாகாத ஒரு பெண் வந்து ஒரு மண் பானையின் மேல் நிற்பாள். அம்மனின் முகத்தையே பார்த்தபடி, அம்மனின் அருளை தன்னுள் வரவழைத்துக் கொண்டு எதிர் காலத்தில் நடக்க இருப்பவைகளை தன் வாயால் குறி கூறுவாள். இதுவே ‘ரங்கம்’ எனப்படும். நாட்டின் அரசியல், விவசாயம், நோய் நொடி, இயற்கை விபரீதங்கள், நல்லது கெட்டது போன்ற பல விஷயங்களையும் அன்று அம்மன் அப்பெண் மூலம் வெளிப்படுத்துவாள். அந்த ‘பவிஷ்யத் வாணி’ அங்கு கூடியுள்ள லட்சகணக்கான பக்தர்களுக்கும் கேட்கும் வண்ணம் கோயில் நிர்வாகத்தினர் பிரத்தியேகமாக மைக்குகள் ஏற்பாடு செய்வர். பக்தர்கள் கேட்கும் கேள்விகளுக்கும் அத்தெய்வம் பதில் கூறுவது உண்டு. ‘ரங்கம்’ கூறும் அப்பெண் ஒரு கத்திக்கு மாங்கல்யம் கட்டி விட்டு வாழ்நாள் முழுவதும் திருமணம் ஆகாதவளாகவே இருப்பது வழக்கம்.

காவு கொடுத்தல்:-
‘ரங்கம்’ நிகழ்ச்சி முடிந்த பின், திங்களன்றே போத்தராசுக்கள் காலை ஒன்பது மணியளவில் வீர தாண்டவம் செய்தபடி தம்மை மறந்த பக்தி பரவசத்தில் ஆலயத்தை சுற்றி வருவர். அம்மன் சந்நிதியின் எதிரில் மேல தாளத்துடன் அவர்கள் ஆடும் நாட்டியம் பக்தர்களை பக்தி பரவசத்தில் ஆழ்த்தும். இச்சந்தர்பத்தில் சுரைக்காய், பரங்கிக்காய் போன்றவற்றை உடைத்து அம்மனுக்கு பலி கொடுப்பார்கள். ஒரு காலத்தில் காளை மாடு, ஆடு, கோழி போன்றவற்றை பலியிட்டனர். தற்போது மிருக பலி தடை செய்யப் பட்டு விட்டதால் காய்கறிகளை உடைத்து விழாவை பூர்த்தி செய்கின்றனர்.

விடை கொடுத்தல்:-
மேற்கூறிய பலி கொடுத்தல் பூர்த்தியான உடன் திங்கள் காலை பத்து மணியளவில் அம்மனின் படத்தை விசேஷமாக அலங்கரித்து யானையின் மேல் ஏற்றி வைத்து கலசங்களையும் யானை மேல் ஏற்றி, மங்கள வாத்தியங்களுடன் வீதிகளில் ஊர்வலமாக எடுத்துச் சென்று மக்கள் பிரியாவிடை கொடுப்பார். இறுதியாக ‘கடத்தை’ ‘நயாபூல்’ என்ற இடத்தில் ஓடும் மூஸி நதி நீரில் மூழ்கச் செய்து விழாவை நிறைவு செய்வர்.

அக்கன்னா-மாதன்னா மஹாங்காளி தேவாலயத்தின் ‘கடம்’ ஊர்வலத்தில் முதன் முதலில் நிற்கும். அதை தொடர்ந்து மற்ற கோவில்களின் கலசங்கள் வரிசையாக வரும். கலசங்கள் யானையின் மேல் வைக்கப் பட்டு குதிரைகள் பின் தொடர, அக்கன்னா-மாதன்னா போல் வேடமிட்டவர்கள் புடை சூழ ஊர்வலம் கண்ணுக்கு விருந்தாக இருக்கும்.

ஹைதராபாத் தெலுங்கு பேசும் ஹிந்துக்களின் மிகப் பெரும் பண்டிகையான ‘போ​னாலு’ பண்டிகையின் இறுதி நாளான்று, ஆயிரக்கணக்கானோர் வீதியின் இரு புறமும் “லால் தர்வாஜாவில்’ இருந்து ‘நயாபூல்’ வரை நின்று மிக விஸ்தாரமாக அலங்கரிக்கப் பட்ட ‘கலசங்களை’ காணக் கூடுவர். இளைஞர்களின் ஆட்ட பாட்டங்களும், பல தரப்பட்ட புராண கதாபாத்திரங்களைப் போல் வேடமிட்ட கட்டுமஸ்தான மேனி கொண்ட போத்தராஜுக்களின் நடனங்களோடும் நாட்டுப் புறப் பாடல்களோடும் ஊரே விழாக் கோலம் பூண்டிருக்கும்.

– ​ஞான ஆலயம் ஜூலை, 2016ல் பிரசுரமானது.​

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *