கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: ஆன்மிகக் கதை
கதைப்பதிவு: May 5, 2022
பார்வையிட்டோர்: 24,504 
 
 

(1967 வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

உமாதேவிக்கு ஆத்திரம். அர்த்த நாரீஸ்வரர் என்று தம்மைச் சொல்லிக் கொண்டே கங்கையையும் தன் சடையில் வைத்திருக்கிறாரே என்று. அவளை ஒழித்து விட்டுத்தான் மறுகாரியம் என்று மனத்துட் கறுவிக் கொண்டு தன் வலக்கையைத் தன் பர்த்தாவின் தலைக்கு மேலே உயர்த்தியபோது, அவள் கையை டக்கென்று பிடித்துக் கொண்டார் சிவபிரான்.

“விடுங்கள் கையை, தங்கள் விளையாட்டை இன்னமும் சகித்துக் கொண்டிருக்க முடியாது. கங்கையைத் தொலைத்தாற்தான் என் மனம் சாந்தியடையும்” என்று குமுறினாள் பார்வதி.

அவளது குமுறலைக்கேட்ட கங்காதேவி, தன்னைப் புல் நுனிப் பனித்துளியளவாகச் சுருக்கிக் கொண்டு சிவபெருமானின் கற்றைச் சடையுள் ஒளிந்து கொண்டாள்.

பார்வதி குமுறிக் கொண்டேயிருந்தாள். சிவபிரானும் தன் சக்திக்குப் பயந்து கொண்டார். சக்தி என்ன தான் செய்லாளோ என்று பயந்த சிவபிரான், தன் கற்றைச் சடையிலே புல் நுனிப் பனித்துளியளவாகச் சுருங்கி ஒளித்திருந்த கங்காதேவியைத் தம் சுட்டுவிரலால் நிமிண்டி எடுத்துத் தெறித்தார்.

கங்காதேவி, தெற்கே பல யோசனைகளுக்கப்பால் மகா சமுத்திரத்தில் போய் விழுந்தாள். பார்வதியின் கோபமும் தணிந்தது.

மகா சமுத்திரத்தில் விழுந்த கங்காதேவி சமுத்திர நீருடன் கலந்து விடாது, தாமரையிலைத் தண்ணீர்த் துளியாய் தன் சுயத்தை இழந்து விடாமல் நின்று கைலாய நாதரை நோக்கித் தவம் செய்தாள்.

தங்கள் சடாமுடியிற் தங்கியிருக்கப் பேறு பெற்ற தான் இந்தச் சமுத்திரத்திலே தனிமையாய்க் கிடந்து தவிக்க தங்கட்கு என்ன குறை செய்தேன்’ என்ற அவளது ஓலம், தோடுடைய செவிகளில் விழுந்தது. அவர் மனம் நெகிழ்ந்த து.

கைலாய மலைக்கு இல்லாவிட்டாலும், தன் பாத பங்கயங்கள் பதிந்த சிவனொளிபாத மலைக்கு வருமாறு கங்கைக்கு அனுக்கிரகித்தார்.

பாதபங்கய மலைக்கு வந்த கங்காதேவி அம்மலை யுச்சியிலிருந்து வடக்கே நோக்கினாள்.

ஆங்கு கைலை. தென்கைலை! தங்கள் சடைமுடியிற் தங்கியிருக்கும் பாக்கியம் பெற்ற நான், பாதபங்கயங்களை மட்டும் தரிசித்துக் கொண்டு இங்கேயே இருக்க முடியாது. கைலைக்கு வந்து மீண்டும் தங்கள் சடையிலேயே அமர்ந்து கொள் வேன். பார்வதி என்னை என்னதான் செய்துவிடுவாள். பார்க்கலாம்’ என்று – ஆக்ரோஷத்தோடு மலையுச்சி யிலிருந்து இழிந்து, கல்லில் முட்டி மோதி, நுரைத்து, ஒலியெழுப்பிக் கொண்டு கல்லையும் மண்ணையும் மரத்தையும் நெட்டித்தள்ளும் ‘மாவலியளாய்த் தென் கைலையை நோக்கித் தலைதெறிக்க ஓடினாள்.

மாவலிகங்கா இன்னமும் ஓடிக்கொண்டு தானிருக்கிறாள்.

– இளம்பிறை ’67

– ஒரு காவியம் நிறைவு பெறுகின்றது (ஐம்பது சிறுகதைகள்), முதற் பதிப்பு ஒக்டோபர் 1996, மித்ர வெளியீடு, சென்னை

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *