‘மரண தண்டனையை நிறைவேற்றும் பணியைத் தாருங்கள்!’
இறைவனை அடைவதற்கான மார்க்கங்களில், குறிப்பிடத் தக்கது- இறை நாம ஜபம். இறை நாம மகிமையால் வாழ்வை வென்ற மகான்கள் ஏராளம்!
நம்மில் பலர், பந்த- பாசத்தில் கட்டுண்டு கிடக்கிறோம். குழந்தைகளிடம் விளையாட்டுப் பொருட்களைக் கொடுத்து விளையாட விட்டு வேடிக்கைப் பார்க்கும் தாயைப் போல, குடும்பம்- உறவு- வீடு- பணம்… என்று மாயைகளால் நம்மை ஆட்டுவிக்கிறான் இறைவன். இதில் வெற்றி பெற்று, மீண்டும் பிறவா பெரு நிலை அடைவதற்கு பேருதவி புரிவது இறை நாமம்!
‘திடமான நம்பிக்கையுடன் இறை பக்தி செலுத்தி, தெய்வ சிந்தனையுடன் சரீரத்தை விட்டுப் பிரியும் ஆன்மா, மோட்சத்தை அடையும்’ என்கின்றன சாஸ்திரங்கள். எனவேதான் பெரியவர்கள், ‘இறக்கும் தறுவாயிலும் ராமா… கிருஷ்ணா… என்று தெய்வ நாமாக்களை உச்சரிக்க வேண்டும்!’ என்பர். ‘இந்த ஜன்மத்தில் எதை நினைக்கிறோமோ… செய்கிறோமோ… அதுவே மறு ஜன்மாவிலும் தொடரும்!’ என்பது தர்மசாஸ்திரத்தின் அறிவுரை.
அந்த ஊரில் மகான் ஒருவர் வசித்தார். வேத சாஸ்திரங்களில் தேர்ந்தவரும் தவசீலருமான அவருக்கு நிறைய சீடர்கள் இருந்தனர். ‘வயதாகி விட்டதால், காசிக்குச் சென்று தன் சரீரத்தை விட வேண்டும்!’ என விரும்பினார் அவர். எனவே தன் சீடர்களை அழைத்து அவர்களிடம், ”காச்யாம் து மரணான் முக்தி… அதாவது, எவனது ஜீவன் காசி «க்ஷத்திரத்தில் பிரிகிறதோ, அவன் வலக் காதில், தாரக (ராம) மந்திரத்தை உபதேசித்து அவனை முக்தியடையச் செய்கிறார் விஸ்வநாதர்!” என்ற சாஸ்திர போதனையை விளக்கியதுடன், தனது விருப்பத்தையும் தெரிவித்தார்.
அதற்கிணங்க சீடர்கள் அவரை பல்லக்கில் சுமந்து கொண்டு காசியை நோக்கிப் புறப்பட்டனர். நாளுக்கு நாள் அவரின் உடல் நிலை மோசமானது. அவர், வழியில் தென்படும் ஊர்களைப் பற்றி சீடர்களிடம் விசாரித்தபடி இருந்தார். அன்று, அவர்கள் ஒரு சேரியை அடைந்தனர். வழக்கம்போல அந்த மகான், ”இது எந்த ஊர்?” என்று கேட்டார். சீடர்கள், ”சேரி!” என்று பதில் சொல்லும் தருணத்தில் அந்த மகானின் ஜீவன் பிரிந்தது.
அதன் பலனால் அந்த சேரியிலேயே மறுபிறவி எடுத்தார் அவர். இரவில், பறை அடித்தபடி காசி மகா ராஜாவின் கோட்டை வாயிலைக் காக்கும் காவலாளி ஒருவனுக்கு மகனாகப் பிறந்தார் அந்த மகான். முன்ஜன்ம பயனால், நல்லறிவு மற்றும் விவேகத்துடன் வளர்ந்தது குழந்தை. ஆண்டுகள் கழிந்தன. குழந்தை, 7 வயது சிறுவனாக வளர்ந்தான்.
ஒரு நாள் அவன் தந்தை வெளியூர் சென்றார். அன்று இரவு கடும் மழை. ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்ததால், அவரால் ஊருக்குத் திரும்ப முடியவில்லை. ‘இரவு காசி ராஜா அரண்மனையின் காவலுக்குச் செல்லா விட்டால் தண்டனைக்கு ஆளாக நேருமே!’ என்று தவித்தார் தந்தை. அவருக்கு பதிலாக ‘பேரி’ (பறை)யை எடுத்துக் கொண்டு கோட்டை வாயிலுக்கு விரைந்தான் சிறுவன்.
‘இரவு வெகு நேரமாகியும் பறையலி கேட்க வில்லையே… கோட்டை காவலாளி இன்னுமா வர வில்லை?’ என்ற சிந்தனையில் ஆழ்ந்திருந்த காசி மகா ராஜாவின் காதுகளில் பறை ஓசையுடன், அர்த்தம் பொதிந்த ஸ்லோகங்களை பாடும் சிறுவனின் குரலும் கேட்டது!
முதல் ஜாமத்தில் கோட்டையின் கிழக்கு வாசலில் நின்று பறையடித்து பாடினான் சிறுவன்:
‘மாதா நாஸ்தி பிதா நாஸ்தி நாஸ்தி பந்து: ஸஹோதர:
அர்த்தோ நாஸ்தி க்ருஹம் நாஸ்தி தஸ்மாத் ஜாக்ரத ஜாக்ரத:
பொருள்: ஏ ஜீவனே… தாய்- தந்தை, உறவினர், சகோதரர்கள், பணம், வீடு ஆகிய எதுவும் உனக்கு சொந்தம் இல்லை. எனவே, இவற்றை முக்கியமாகக் கருதி, காலத்தை வீணாக்காதே. அஞ்ஞான நித்திரையில் இருந்து விழித்துக் கொள், விழித்துக் கொள்!
– ‘எல்லாவற்றையும் உதறி விட்டு, ஓடிப்போய் விட வேண்டும்!’ என்பதல்ல இதன் அர்த்தம்; ‘எதிலும் அதிகம் பற்று வைக்காதே!’ என்ற உபதேசமே இது!
நாம் உயிருடன் இருக்கும்வரையே மேலே சொன்ன உறவுகளும், உடைமைகளும் நமக்குச் சொந்தம். அதன் பிறகும் நம்மைத் தொடர்வது, நமது பாவ-புண்ணியங்களே! ‘அதனால் என்ன… இறக்கும் வரை எல்லா பாக்கியமும் நம்மு டன் இருக்கும்தானே!’ என்று சிலர் எண்ணலாம். ஆனால், அந்த பாக்கியமும் சிலருக்கே கிடைக்கும். அதற்கு, அவர்கள் செய்த புண்ணியமே காரணம். பாவம் செய்திருந்தால் இங்கேயும் துன்பம்; அங்கேயும் நரகம். ஆகவே தர்ம சிந்தனை, தியானம் மற்றும் இறை பக்தியில் விழிப்புடன் இருக்க வேண்டும்.
இதைப் போலவே, அடுத்த மூன்று ஜாமங்களிலும் கோட்டையின் மற்ற வாயில்களில் நின்று பாடிவிட்டு வந்தான் சிறுவன். இதைக் கேட்டு மகிழ்ந்த மன்னன் சிறுவனை அழைத்துப் பாராட்டியதுடன், ”உன்னை அரண்மனையில் பணியமர்த்த விரும்புகிறேன்… என்ன வேலை வேண்டும்?” என்றும் வினவினான். ”மரண தண்டனையை நிறைவேற்றும் பணியைத் தாருங்கள்!” என்றான் சிறுவன். அரசன் சம்மதித்தான். பணியில் சேர்ந்த சிறுவன், கொலை களத்தில் ஸ்வாமி திருவுருவச் சித்திரங்களை வரைந்து வைத்தான். தண்டனைக்காக குற்றவாளிகள் வரும்போது அவர்களை ஸ்வாமி சித்திரங்களின் முன் நிறுத்தி, இனிமையான குரலில் பஜனைப் பாடல்கள் பாடுவான். அதில் லயித்து குற்றவாளிகள் மெய்ம்மறந்திருக்கும் வேளையில், தண்டனையை நிறைவேற்றி விடுவான்.
இப்படி, தெய்வ சிந்தையில் மூழ்கியிருக்கும் வேளையில் உயிர் நீத்ததால், குற்றவாளிகளின் உயிர் சொர்க்கத்தை அடைந்தன.
இதனால், நரகத்துக்கு வேலை இல்லாமல் போய் விட்டது. கவலை அடைந்த எமதர்மன் மும்மூர்த்திகளிடமும் சென்று சிறுவனின் செயல்பாடு குறித்து முறையிட்டான்.
அவர்களும் எமதர்மனுடன் காசி «க்ஷத்திரத்துக்கு வந்து, சிறுவனிடம் காரணம் கேட்டனர். அதற்கு, ”முற்பிறப்பில் தவசீலனாக திகழ்ந்த நான் புண்ணியங்கள் பல செய்திருந்தாலும், மரண தறுவாயில் இறை சிந்தனை இல்லாமல் ‘சேரி’ என்ற பெயரைக் கேட்டபடி இறந்ததால், அந்த இடத்திலேயே பிறக்க நேர்ந்தது.
‘எனது நிலை இவர்களுக்கு வேண்டாம். பாவங்கள் பல செய்திருந்தாலும், மரணத் தறுவாயில் இறை நாமம் கேட்டு நற்கதி அடையட்டுமே’ என்றுதான் இப்படிச் செய்தேன்!” என்று பதிலளித்தான் சிறுவன்.
இதைக் கேட்டு மகிழ்ந்த மும்மூர்த்தியரும் அவனுக்கு மோட்சப்பேறு அளித்தனர்.
– எம்.எஸ். ருக்மணி தேசிகன், சென்னை-33 (பெப்ரவரி 2008)