குமார சம்பவம்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: ஆன்மிகக் கதை
கதைப்பதிவு: March 6, 2022
பார்வையிட்டோர்: 29,346 
 

பாகம் ஒன்று | பாகம் இரண்டு

தேவ மொழியாகிய சமஸ்கிருதத்தில் உள்ள ஐந்து பெரும் காப்பியங்களில் குமார சம்பவமும் ஒன்று ஆகும். மகாகவி காளிதாசர் எழுதிய இக்குமார சம்பவம் காவியக் கதையினை இங்கு சுருக்கமாகப் பார்ப்போம்.

மூவுலகத்தையும் துன்புறுத்திக் கொண்டிருக்கிறான் தாரகன் என்னும் அசுரன். அவனை உலக நன்மைக்காக சம்ஹாரம் செய்ய வேண்டும். தாரகாசுரனை வதம் செய்வதற்கு குமரனின் ஜனனம் நடைபெற வேண்டும்.சிவகுமரன் கார்த்திகேயனே தாரகனை வதம் செய்யும் தகுதி உடையவன். குமார சம்வத்திற்காக சிவ – பார்வதியின் விவாகம் நடைபெற வேண்டும். பரமசிவனோ தன் மனைவி சதி மாண்ட வருத்தத்தினால் இமயமலையில் தவத்தில் ஆழ்ந்து இருக்கிறார்.

குமார சம்பவத்தில் சிவ- பார்வதியின் விவாகம், குமார ஜனனம், தாரகாசுரனின் வதம் போன்ற நிகழ்ச்சிகள் வெகு அழகாக வர்ணிக்கப் படுகின்றன.

மலைகளின் அரசனாக இமயமலை அரசன் இமவான் திகழ்கிறான்.

இமயமலை அகண்ட பாரத தேசத்தின் வடக்குப் பகுதியில், பூமியை ஒரு நீண்ட அளவு கோல் வைத்து அளப்பது போல மிக நீளமாக, அழகாக அமைந்துள்ளது. அம்மலையில் பொக்கிஷங்கள் நிறைந்து ள்ளது. விலை மதிப்பில்லா அநேக ரத்தினங்கள் உள்ளன. அரும் மருந்துகளாகிய ஔஷதங்கள் பலவும் அங்கு கிடைக்கும். மேலும் பலவிதமான சிறந்த, உன்னத கிடைத்தற்கரிய வஸ்துக்களும் அங்கு கிடைக்கப் பெறும்.

இங்கு கிடைக்கும் அருமையான வஸ்துக்களைக் கொண்டு தேவர்களும் தங்கள் சரீர வளத்திற்குப் பயன் படுத்திக் கொள்வார்கள். இமய மலையில் உள்ள நீர் நிலைகளில் மனதைக் கொள்ளைக் கொள்ளும் பேரழகுடன் தாமரை மலர்கள் மலர்ந்திருந்தன. பூஜை செய்வதற்காக தேவைப் படும் தாமரை மலர்களை சப்த ரிஷிகள் இங்கு வந்து பறித்து எடுத்துச் செல்வார்கள்.

எல்லா வளங்களுடனும் மிகச் செழிப்பாக இருந்தது இமயமலை.

பெண்களில் சிறந்தவளான மேனாதேவி இமவானின் தர்ம பத்தினி ஆவாள். இவர்களுக்கு மைநாகன் என்ற புத்திரன் உண்டு. உலகத்துக்கே தாயாக விளங்கும் உமை பர்வதராஜனுக்கு மகளாகப் பிறந்து பார்வதி என்னும் பெயர் உடையவளாகிறாள். இந்த ஜன்மத்தில் பார்வதி என்ற பெயர் உடைய உமை இதற்கு முன் ஜன்மத்தில் தக்ஷபிரமனின் மகள் சதிதேவியாகப் பிறந்திருந்தாள்.

ஒருமுறை தக்ஷன் யாகம் செய்வதற்குரிய அனுஷ்டானங்களைச் செய்து கொண்டிருந்தான். அந்த சமயத்தில் சதிதேவியின் கணவராகிய சிவபிரானை தக்க மரியாதை கொடுக்காமல் நிந்தனை செய்கிறான் அதனைக் காண மனம் சகிக்காமல் சதிதேவி ஹோம அக்னியிலேயே தனது சரீரத்தை சமர்ப்பித்து விடுகிறாள். சதிதேவியே இந்த ஜன்மத்தில் பார்வதியாக இமவானுக்குப் பிறக்கிறாள். லோகமாதா பார்வதிதேவியையே தனக்கு மகளாகப் பெற இமவான் பர்வதராஜன் எத்துணை பாக்கியம் பெற்று இருக்க வேண்டும்?

பார்வதி இளமைக் காலத்தில் கல்விகற்று சிறந்து விளங்குகிறாள். அவளது பூர்வ ஜன்மம் பற்றிய விவரங்கள் யாரும் சொல்லாமலேயே அவளுக்கு நல்ல நினைவு, ஞாபகம் இருக்கிறது. காலகிரமத்தில் பார்வதி தனது யௌவனப் பருவத்தை அடைந்தாள். அவளது பேரழகு சௌந்தரியமானது சொல்லுவதற்கு அரியது. காண்பவரை வியக்க வைக்கிறது. அவள் அழகுக்கு ஈடாக உபமானம் சொல்வதற்கு எதுவும் யாரும் இல்லாத அனுபமாவாக இருக்கிறாள்.

ஒருமுறை திரிலோக சஞ்சாரி நாரதமுனி இமயமலைக்கு வருகை தந்து அருளுகிறார். அப்போது அவர், “இந்த பார்வதியானவள் சிவபிரானாகிய ஈஷ்வரனுக்கே மனைவியாகும் தகுதி பெற்றவள்” என்று கூறுகிறார். அதனைக் கேட்ட இமவான் அளவில்லா ஆனந்தம் அடைகிறார். அதனால் தனது மனதில் மகள் பார்வதியை ஹரனுக்கே விவாகம் செய்து கொடுக்க வேண்டும் என்று சங்கல்பித்துக் கொல்கிறார்.

சிவபிரான் தனது மனைவியான சதிதேவியின் இழப்பினால் மிகுந்த துக்கம் உடையவரானார். அதனால் விரக்தியடைந்து இமயமலையில் ஓரிடத்தில் கடும் தவம் செய்து தவத்திலேயே மூழ்கிப் போயிருந்தார். தவம் செய்து வரும் சிவனுக்கு சேவை செய்வதற்காக, பர்வதராஜன் தனது மகள் பார்வதியை அனுப்பி வைக்கிறான் பார்வதியும் முழுமனதுடன் பெரு விருப்பத்துடன் சேவை செய்கிறாள். தனக்குப் பணிவிடை செய்யும் பார்வதியைப் பார்த்து கிஞ்சித்தும் சலனம் அடையாமல் ஸ்திர சித்தத்துடன் தவம் இயற்றுகிறார் பரமசிவன்.

அந்த கால கட்டத்தில் தாரகன் மிகுந்த வளர்ச்சி உடையவனாக, திரிலோகத்துக்கும் அதிக துன்பம் அளிப்பவனாக இருக்கிறான். மனிதர்களும் ரிஷிபுங்கவர்களும் அடைந்த துயரம் சொல்லும் தரமன்று. இந்திராதி தேவர்களும் கூட தாரகாசுரனிடம் மிகுந்த பயம் உடையவர்களாக இருக்கின்றனர். சகல தேவர்களும் வலிமை இழந்தவராயினர். பொலிவு இழந்தவராயினர்.

இப்பிரபஞ்சத்தை ரக்ஷித்தைக் காக்கும் சமர்த்து இல்லாமல் இருந்தனர். அதிக பீதியினால் அவனுக்கு அடிபணிந்து, சேவகர்களாகினர்.

மிகுந்த துக்கம் கொண்ட தேவர்கள் இதிலிருந்து மீளும் உபாயம் அறிவதற்காக அனைவரும் பிரம்மனைக் காண்பதற்காக பிரம்மலோகம் சென்றனர். பிரம்ம தேவனை மிகவும் பக்தியுடன் வணங்கி பலவாறு போற்றித் துதிக்கின்றனர். தேவர்களுடைய ஆச்சார்யரான பிரகஸ்பதி பிரம்ம தேவரிடம் தங்களின் துர் அவஸ்தைகளை எடுத்து உரைக்கிறார்.

“மூவுலகத்துக்கும் பெரும் துன்பம் அளித்து வரும் தாரகனை அழிக்கக் கூடிய சமர்த்து எங்களுக்கு இல்லை. அதனால் கிறுபை கூர்ந்து பிரம்ம தேவனே அவனை சம்ஹாரம் செய்ய வேண்டும் அதற்குரிய சக்தி பிரம்மனுக்கே உள்ளது. ஆகையினால் தாராகாசுரனை வதம் செய்து தேவர்களை எல்லாம் காத்து அருள வேண்டும்” என்று விண்ணப்பிக்கிறார்.

இப்பூவுலகை காக்க தாரகனை வதம் செய்யுமாறு வேண்டி நிற்கும் பிரகஸ்பதியைப் பார்த்து பிரமன் சொல்கிறார், “என்னாலும் இயலாது. ஏனென்றால் நான் அந்த தாரகாசுரனுக்கு முன்னொரு காலத்தில் வரம் அளித்து அனுகிரகம் செய்திருக்கிறேன். அதனால் சம்ஹாரம் செய்ய இயலாது.”

இருந்தாலும் அவர் யாரால் தாரகன் சம்ஹாரம் செய்யப்படுவான் என்பதனை எடுத்துக் கூறுகிறார்.

“சிவனுக்கும் பார்வதிக்கும் மகனாக ஜனனம் எடுக்கப் போகிற குமரனாலேயே கொல்லப்படுவான். அதனால் நீங்கள் இமயமலையில் தவம் செய்து கொண்டிருக்கும் சிவனை விழிப்படையச் செய்யுங்கள். சேவை செய்து கொண்டிருக்கும் பார்வதியுடன் விவாகம் நடைபெற வேண்டும். குமாரசம்பவத்தினால் தாரகன் வதம் நடைபெற நீங்கள் பார்வதி தேவியின் ஆகர்க்ஷனம் மூலம் பிரயத்தனம் செய்ய வேண்டும்” என்று அறிவுறுத்துகிறார்.

ஈஷ்வரனது சித்தத்தை தவத்தில் இருந்து மீட்கும் சக்தியடையவன் மன்மதன் என்று தேவந்திரனுக்குத் தோன்றியது. அதனால் இந்திரன் மன்மதன் அங்கு வரும் படிக்கு நினைவு கூர்கிறான்.

இத்துடன் குமார சம்பவம் முதல் பாகம் நிறைவடைந்தது

குமாரசம்பவம் இரண்டாவது பாகம் தொடரும்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *