குமார சம்பவம்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: ஆன்மிகக் கதை
கதைப்பதிவு: March 8, 2022
பார்வையிட்டோர்: 28,927 
 

பாகம் ஒன்று | பாகம் இரண்டு | பாகம் மூன்று

தேவேந்திரன் மன்மதனை நினைவு கூர்ந்ததால் மன்மதன் உடனே இந்திரன் சமீபம் வந்தான். புஷ்பங்களினால் அமைக்கப்பெற்ற வில்லை கையில் கொண்டிருந்தான். அவன் பத்தினி ரதிதேவியும் அவனுடன் வந்திருந்தாள். மன்மதன் இந்திரனை வணங்கி கேட்கிறான்,”பிரபோ! என்னை எதற்காக தாங்கள் நினைத்தீர்கள் ? நான் தங்களுக்கு என்ன செய்ய வேண்டும்? எனக்கு கட்டளை இடுங்கள்” என்றான்.

மன்மதனைக் கண்ட இந்திரன் வெகு சந்தோஷம் அடைந்தான்.”உலக ஷேமத்திற்காக சிவ – பார்வதி விவாகம் நடை பெற வேண்டும். சிவபிரான் இமயமலையில் தவத்தில் மூழ்கி இருக்கிறார். அவரை தவத்தில் இருந்து எழுப்பி அவர் மனதை வசீகரிக்க வேண்டும். இந்தக் கார்யம் உன்னால் செய்யப்பட வேண்டும்.” என்று இந்திரன் கூறுகிறான்.

மன்மதன் இந்திரனது வேண்டு கோளுக்கு இணங்குகிறான். தன் மனைவி ரதிதேவி , மற்றும் நண்பன் வஸந்தனுடன் ஈஷ்வரன் இருக்கும் தபோவனம் சென்றான். அப்பொழுது வஸந்த காலமல்ல. இருந்தாலும் வஸந்தனுடைய வரவால் காலமல்லாத காலத்திலும் வஸந்தம் ஆரம்பித்து வளம் பெருகலாயிற்று. மென்மையான மலைய மாருதம் இனிமையாக வீசலாயிற்று. அசோகம் போன்ற மரங்கள் பூத்துக் குலுங்கியது. எல்லா இடங்களிலும் , திசைகளிலும் வஸந்த கால பசுமை வந்தது.

ஆனாலும் இவை எதுவும் சிவனது சித்தத்தினைக் கவரவில்லை. தவத்தில் ஆழ்ந்து இருக்கும் சிவனை நோக்கி சற்றுப் பயத்துடன் தனது மலர் அம்புகளை செலுத்துகிறான்.

அதே நேரத்தில் பார்வதி சகல பூஜாதிரவியங்களுடன் அங்கு வருகிறாள். ஈஷ்வரனை வணங்கி துதிக்கிறாள். அவள் வணக்கத்தை ஏற்றுக் கொண்ட சிவன் ,”சிறந்த கணவனை அடைவாயாக”என்று ஆசீர்வாதம் செய்கிறார். ஈஷ்வரனிடம் அனுகிரகம் பெற்றுக் கொண்ட பார்வதியைப் பார்த்ததும் மன்மதன் சற்று நிம்மதி அடைந்தவனாய் பயம் தெளிந்து தைரியமானான். இதுவே உகந்த காலமாகும் என சிந்தித்து தனது வில்லில் மோஹன அஸ்திரத்தை ப் பூட்டி சிவன்மீது எய்தினான்.

அதனால் சிவன் சற்று மன சஞ்சலம் உடையவராக பார்வதியின் முகம் நோக்கினார். பார்வதியும் மிக்க மகிழ்ச்சியுடன் ரோமாஞ்சலியாகி சிவனைக் கண்டு வெட்கமுடையவளானாள்.

தவசிந்தனையில் இருந்து விலகி தனது சித்தம் கலங்குவது எதனால் என்று சிவன் சிந்தித்த பொழுது அவர் அருகில் நிற்கும் மன்மதனைப் பார்த்தார். கோபமுடையவரானார். அப்போது அதனைக் கண்ணுற்ற அனைத்து தேவர்களும்” பிரபோ! கோபம் கொள்ளாதீர்கள். சாந்தமடையுங்கள்” என்று பிரார்த்தித்தார்கள்.

என்றாலும் கோபமடைந்ததால் அவரது மூன்றாவது கண் திறந்து நெருப்பு வெளிவந்தது. அந்த அக்னி மன்மதனை தஹித்து பஸ்மம் ஆக்கியது.

தனது தவத்திற்கு இங்கு இடையூறு ஏற்பட்டதால் சிவன் அங்கிருந்து வேறிடம் செல்கிறார். மன்மதன் பஸ்மமாகிய நிலைக் கண்ட பார்வதி சித்தம் கலங்கினாள். தனது சௌந்தர்யத்தினால் பலன் ஒன்றும் கிட்டவில்லையே என்னும் நிராசையுடன் அவளும் அந்த இடத்தினை விட்டுச் சென்றாள்.

ஈஷ்வரனால் பஸ்பமாகிய தனது கணவன் மன்மதனைக் கண்ட அவன் மனைவி ரதிதேவி மூர்ச்சை அடைந்து கீழே விழுந்தாள். சிறிது நேரம் கழித்து பஸ்ம குவியலைப் பார்த்து பலவாறு வேதனையால் புலம்புகிறாள். வஸந்தனை நோக்கி, “ஓ, வஸந்தனே! என் கணவன் மன்மதன் இல்லாமல் நான் எங்கனம் உயிர் வாழ்வேன்? அதனால் சிதையை மூட்டுவாயாக! நான் எனது தேகத்தை தியாகம் செய்கிறேன்.” என்கிறாள்.

அப்போது ஆகாயத்தில் அசரீரி ஒலி கேட்கிறது.”ரதிதேவி! மனகிலேசம் அடைய வேண்டாம். உனது கணவனுக்கு இருந்த பிரம்ம சாபத்தினால் இவ்விதம் நிகழ்ந்தது. எனினும் கூடிய சீக்கிரம் உன் கணவன் மீண்டும் உயிருடன் வருவான். அதனால் மரணிக்கும் எண்ணத்தைக் கைவிடு. உனது தேகத்தை ரக்ஷனை செய்வாயாக.” என்று வஸந்தனும் அவளை பலவிதமாக தேற்றி சமாதானம் செய்கிறான். அதன் பின் ரதிதேவியும் சற்று மன சமாதானம் அடைகிறாள்.

இத்துடன் குமாரசம்பவம் இரண்டாம் பாகம் நிறைவடைந்தது.

மூன்றாம் பாகம் தொடரும்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *