காயத்ரி மந்திர மஹிமை

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: ஆன்மிகக் கதை
கதைப்பதிவு: November 16, 2020
பார்வையிட்டோர்: 11,504 
 

(இதற்கு முந்தைய ‘காயத்ரி மந்திரம்’ கதையைப் படித்துவிட்டு, இதைப் படித்தால் புரிதல் எளிது)

அந்தச் சாமியார் மேலும் தொடர்ந்தார்…

“காயத்ரி மந்திரத்தை அனுதினமும் உச்சரிப்பதால் வலிமை; ஆற்றல்; கவர்ச்சி; திறமான யோசனை; இயக்கம்; பயபக்தி; நல்லது கெட்டதை அறியும் ஆற்றல்; செயலூக்கம்; தைரியம்; நினைவாற்றல்; உறுதி; அவா; அன்பு; தீயதில் வெறுப்பு; ஒற்றுமை; கெட்டதிலிருந்து விலகல்; பகுப்பாயும் திறன்; தொகுத்துணரும் திறன்; கேட்டல், தொடுதல், பார்த்தல், சுவை முகர்தல், நுண்ணறிவு ஆகிய இருபத்திநான்கு நற்பலன்கள் கிடைக்கும்.”

“ராம ராம…”

“காயத்ரி மந்திரத்தின் மஹிமை சொல்லுக்கு அப்பாற்பட்டது. மந்த்ர ராஜம் என்று அழைக்கப்படுவது காயத்ரி. வேத மாதா என்று அழைக்கப்படுவது காயத்ரி. குடிமக்களின் அதிபதியாக எப்படி ஒரு ராஜா கருதப் படுகிறாரோ, அதேபோல மந்திரங்களின் உச்சத் தலைமையிடத்தைப் பெறுவது மந்த்ர ராஜம் காயத்ரி.

“காயத்ரி மந்திரம் என்ன பலன் தரும்?”

“காயந்தம் த்ராயதே இதி காயத்ரி… தன்னை ஓதுபவரைக் காப்பது காயத்ரி. காயத்ரியின் அர்த்தத்தை பல்வேறு மொழிகளிலும் பல்வேறு அறிஞர்கள் மொழி பெயர்த்துள்ளனர். இப்படி நூற்றுக்கு மேலான மொழி பெயர்ப்புகள் உண்டு. தமிழில் ஸ்ரீ சத்ய சாய்பாபா அழகாக விளக்கியுள்ளார்.

“அறிவைத் தரும் ஆற்றலினைத் தருகிறது காயத்ரி. அத்தோடு காயத்ரி மந்திரம் சர்வரோக நிவாரணி! எல்லா நோய்களையும் போக்க வல்லது. சர்வதுக்க பரிவாரிணி காயத்ரி! அது அனைத்து துன்பங்களையும், கவலைகளையும் போக்குகிறது. சர்வ வாஞ்சா பலஸ்ரீ காயத்ரி. அனைத்து விருப்பங்களையும் நிறைவேற்றுவது காயத்ரி.

மஹாகவி பாரதியார் இதை ‘செங்கதிர்த் தேவன் சிறந்த ஒளியினைத் தேர்கின்றோம். அவன் எங்கள் அறிவினைத் தூண்டி நடத்துக’ என அற்புதமாக பாஞ்சாலி சபதத்தில் முதல் சருக்கமான துரியோதனன் சூழ்ச்சிச் சருக்க முடிவில் தமிழில் தருகிறார்.

“காயத்ரி பரிவார் என்கிற அமைப்பை நிறுவிய ஸ்ரீ ராம் சர்மா ஆச்சார்யர் காயத்ரி பற்றி ஏராளமான சுவையான சம்பவங்களையும் விளக்கங்களையும் அளித்துள்ளார். காயத்ரி பற்றி மட்டும் சுமார் மூவாயிரம் புத்தகங்களை அவர் எழுதியுள்ளார்…

1910 ம் ஆண்டு பிறந்த அவர் 1990 ம் ஆண்டு காயத்ரி ஜெயந்தி தினத்தன்று தாமாகவே தன் உடலை உகுத்தார். அவரது புத்தகங்கள் காயத்ரி பற்றிய அபூர்வமான ஆற்றல்களை விளக்குகிறது. காயத்ரி மந்திரத்தின் மஹிமையை விளக்கும் சம்பவங்கள் ஆயிரக் கணக்கில் உள்ளன. நேரமிருப்பதால் சில சரித்திர உண்மைகளை இப்போது நான் உங்களுக்குச் சொல்கிறேன்…

“ஈரான் மன்னன் நாதிர்ஷவிற்கு டெல்லியின் மீது ஒரு கண். பேராசை கொண்ட அவன் ஒரு பெரும் படையை ரகசியமாகத் திரட்டினான். இதை ரகசியமாகச் செய்தான். திட்டமிட்ட நாளில் திடீர் தாக்குதலை அவன் டெல்லி மீது நடத்தினான். எந்தவித முன்னறிவிப்பும் இல்லாமல் தன் படை திடீர்த் தாக்குதலை மேற்கொண்டிருப்பதால் ஒரு சில மணி நேரங்களிலேயே டெல்லி வீழ்ந்து விடும் என்பது அவனது கணிப்பு…

ஆனால் என்ன ஆச்சர்யம்! அப்போது டெல்லியை ஆண்ட முகம்மது ஷா, நாதிர்ஷாவின் படையை எதிர்கொண்டதோடு அந்தப் படையை ஓட ஓட விரட்டினான். தப்பித்தோம் பிழைத்தோம் என்று நாதிர்ஷாவின் படை வீரர்கள் புறமுதுகு காட்டி ஓடினர். ஏமாற்றமடைந்த நாதிர்ஷா ஈரானுக்குத் திரும்பிவிட்டான்.

எப்படி இப்படி முகம்மது ஷா தனது திடீர் படையெடுப்பைச் சமாளிக்க முடிந்தது என்பது அவனுக்கு ஆச்சரியமாகவும், புரியாத புதிராகவும் இருந்தது. முகம்மது ஷா, நாதிர்ஷாவிற்கு கடிதம் ஒன்றை அனுப்பினான்.

அதில், நீங்கள் படையெடுத்து வருவீர்கள் என்பதை ஆறு மாதத்திற்கு முன்பே எங்கள் நாட்டில் உள்ள முனிவரான குரு சரணதாஸர் என்னிடம் விளக்கிச் சொன்னதோடு அல்லாமல் தகுந்த முன்னேறப்பாட்டுடன் இருக்குமாறு அறிவுரை கூறினார். அவரது கூற்றுப்படி நானும் தயார் நிலையில் இருந்து வெற்றி பெற்றேன்.

நாதிர்ஷா வியந்தான்; பிரமித்தான். ஆறு மாதத்திற்கு முன்னர் தனக்கே அந்த எண்ணம் எழவில்லையே என நினைத்தான். அவன் உடனே நேரடியாக விரைந்து வந்து குரு சரணதாஸரை தரிசித்து வணங்கினான். அவரது ஆசியையும் பெற்றான்.

ராஜஸ்தான் மாநிலத்தில் ஆள்வார் மாவட்டத்தில் டெஹ்ரா என்ற கிராமத்தில் எளிய அந்தணர் குலத்தில் பிறந்தவர் சரணதாஸர். தாயார் குஞ்சு பாயும், தந்தை முரளீதரரும் அவரை தெய்வ வழிபாட்டில் ஈடுபடுத்தினர். காயத்ரியை தினமும் உச்சரிக்க ஆரம்பித்தார் சரணதாஸர். ஒருநாள் இரவு மகரிஷி சுகர் அவரது கனவில் தோன்றி காயத்ரி உபாசனையை விளக்கினார். நர்மதை நதிக்கரையில் வெகுகாலம் காயத்ரியை ஜெபித்த சரணதாஸர் அதில் சித்தி பெற்றார். நேரடியாக முஸாபிர் நகரில் உள்ள சுக்ரதலம் என்ற கிராமத்திற்கு வந்தார். அங்கே பகவதி ரூபமாக காயத்ரி மாதா அவருக்கு தரிசனம் தந்தாள்.

சரணதாஸர் மனித குல நன்மைக்காக முகம்மது ஷாவை எச்சரிக்க, அதனால் மகிழ்ந்த முகம்மது ஷா, பல செழிப்பான கிராமங்களை அவருக்கு மானியமாக அளிக்க முன் வந்தான். ஆனால் அவரோ அதை ஏற்க மறுத்துவிட்டார்.

இன்றும்கூட சுக்ரதலம் கிராமத்தில் வருடந்தோறும் அவர் நினைவாக காயத்ரி மஹோற்சவம் சிறப்பாக நடைபெற்று வருகிறது.

இன்னும் ஒரு சம்பவம். மஹா முனிவர் வித்யாரண்யர் வாழ்வில் நடந்தது. அவர் காயத்ரி தேவியை தரிசிக்க காயத்ரி மந்திரத்தை இருபத்திநான்கு மஹாபுரச்சரணம் உச்சரித்தார்.

ஒரு புரச்சரணம் என்பது ஒரு மந்திரத்தில் எத்தனை அஷரங்கள் இருக்கிறதோ அத்தனை லக்ஷம் தடவை அதை ஜெயிப்பதாகும். காயத்ரி மந்திரத்தில் இருபத்திநான்கு அஷரங்கள் இருப்பதால் அதை இருபத்திநான்கு லஷம் முறை ஜெபிப்பது ஒரு புரச்சரணம் ஆகும். வித்யாரண்யர் அவ்விதம் இருபத்திநான்கு புரச்சரணம் உச்சரித்தார்.

காயத்ரி தேவியின் தரிசனம் கிடைக்கவில்லை. அவர் சந்நியாசியானார்.

தடீரென ஒருநாள் காயத்ரி தேவி அவர் முன் பிரசன்னமானாள்.

அவர் கண்களில் கண்ணீர் கரை புரண்டது. “ஹே, தேவியே இருபத்திநான்கு மகா புரச்சரணம் செய்து உன் தரிசனத்திற்காக ஏங்கிய போது தரிசனம் தராத நீ, இன்று இப்படி தரிசனம் தந்தது எதனால்?” என்று வியப்புத் தாளாமல் அவர் கேட்டார்.

அதற்கு தேவி, “முதலாவதாக இருபத்திநான்கு மஹா புரச்சரணம் செய்து நீ இருபத்திநான்கு முன் ஜென்மங்களில் செய்த பாவங்கள் அத்தனையையும் தீர்த்துக் கொண்டாய். ஆகவே என்னை தரிசிக்கும் தகுதியை நீ பெற்றுவிட்டாய் என்றாலும், என்னை தரிசிக்க வேண்டும் என்கிற ஆசை மட்டும் உனக்கு இருந்தது.

அனைத்து ஆசைகளையும் துறந்தவனே என்னை தரிசிக்க முடியும். அதையும் துறந்து நீ சந்நியாசியாக ஆனாய். உனக்கு இதோ தரிசனம் தந்து விட்டேன்” என்று தேவி கூறி அருளினாள்.

உனக்கு என்ன வரம் வேண்டும் என்று தேவி கேட்க, “உன் தரிசனமே கிடைத்து விட்டது… எனக்கு வேறு வரம் என்ன வேண்டும்?” என்றார் அவர்.

பின்னர் ரிக்; யஜூர்; சாம வேதங்களுக்கான உரையை அவர் எழுதினார். இன்னும் பல ஹிந்துமத நூல்களையும் எழுதி அருளினார். அவரை அணுகிய ஹரிஹரர், புக்கர் ஆகிய இருவருக்கு ஆசியை அளித்து பெரும் ஹிந்து சாம்ராஜ்யம் அமைய வழி கோலினார். பிற்பாடு விஜய நகர அரசை ஸ்தாபித்தார்.

அடுத்து காயத்ரி அஷரங்களின் மஹிமையை நாம் பார்க்கலாம்…

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)