இராதா மாதவம்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: ஆன்மிகக் கதை
கதைப்பதிவு: April 23, 2013
பார்வையிட்டோர்: 25,905 
 
 

யமுனை நதிக்கரை. காற்றிலே ஈரம் தவழ்ந்தது. கரையோரமாக ஒரு கல்லின் மேல் பளிங்குச் சிற்பமென அமர்ந்திருந்தாள் இராதை. ஆம் ! கோகுலக் கண்ணனின் இராதையே தான். காற்றின் ஈரம் அவள் கண்ணிலிருந்து வந்ததோ என்று நினைக்கும் அளவு அவள் நீண்ட பெரிய விழிகள் கண்ணீரைத் தேக்கி வைத்திருந்தன. இன்று கண்ணன் வர சற்று தாமதம் ஆன காரணத்தால் வந்த கண்ணீரல்ல அது. ஏனென்றே தெரியாமல் , எதற்கென்றே புரியாமல் மனசு கனக்க வெளியே துளி விழாதபடி பெருகிய கண்ணீர் அது. கோகுலம் என்ற சின்னஞ்சிறிய கிராமம் கண்ணனின் வீரத்திற்கும் , புத்திசாலித்தனத்திற்கும் , அவனுடைய அரசியல் தந்திரங்களுக்கும் உரிய இடமல்ல. அவன் இருக்க வேண்டிய இடம் கோகுலம் அல்ல. அவன் வழி காட்டப் பிறந்தவன்.உலகம் உய்யத் தோன்றியவன் என்பதெல்லாம் இராதைக்குத் தெரியாததல்ல. என்றோ ஒரு நாள் அவன் கோகுலம் விட்டு நீங்குவான் என்பதெல்லாம் தெரியும் அவளுக்கு. ஆனாலும்… , மேலும் நெஞ்சம் கனத்தது. கண்ணனின் கள்ளச் சிரிப்பு கண்முன் தோன்றி மறைந்தது. அவனுக்கு எல்லாமே மாயம்! எல்லாமே விளையாட்டு! அவனே ஒரு மாயாவி தானே?

ஊருக்குள் கண்ணனைப் பற்றி என்னென்னவோ பேசுகிறார்கள். அவன் யசோதைக்குப் பிறந்தவனே அல்ல என்றும் , ஏதோ ஒரு அரண்மனையிலிருந்து குழந்தையாக இருக்கும் போதே கொண்டு வரப்பட்டவன் என்றும் , இவ்வளவு நாட்கள் அசுரர்களின் தொந்தரவுகள் கோகுலத்தில் இருந்ததெல்லாம் கண்ணனை அழிப்பதற்குத்தான் என்றும் பேசுகிறார்கள். அவர்களுக்கென்ன? பேசி விட்டு மற்ற வேலைகளை கவனிக்கப் போய் விடுவார்கள்.கண்ணனையே வாழ்வின் கனவாகவும் , லட்சியமாகவும் கொண்டிருக்கும் யசோதையைப் பற்றியோ , இராதையைப் பற்றியோ அவர்களுக்கு என்ன கவலை? “இந்தச் செய்திகளெல்லாம் அன்னை யசோதையின் காதில் விழுந்திருக்குமா? அப்படி விழுந்திருந்தால் அவள் மனம் என்ன பாடு படும்? கண்ணன் உன் மகன் இல்லை என்ற வார்த்தையை அவளால் தாங்கிக் கொள்ள முடியுமா?” என்று நினைத்தாள் இராதை. கோகுலத்தில் ஒவ்வொரு வீட்டிலும் புகுந்து வெண்ணெய் திருடியதும் , பெண்களின் உடைகள் மேல் புழுதி வாரிச் சொரிந்ததும் , பிடிபட்டால் ஒன்றுமே தெரியாத சிறு குழந்தை போல் முகத்தை வைத்துக் கொள்வதும் என்று என்னென்ன குறும்புகள்? எத்தனை எத்தனை லீலைகள்!

இவற்றால் முதலில் பாதிக்கப் பட்டவள் யசோதை அல்லவா? ஊரின் மற்ற பெண்கள் எல்லோரும் ஒன்று திரண்டு சென்று கண்ணனைப் பற்றி யசோதையிடம் முறையிட்டார்களாம். யசோதையால் அவர்கள் சொன்னதை நம்பவே முடியவில்லையாம். தன் சிறு மைந்தனா இந்த வேலைகளைச் செய்தது என்று. கண்ணனைக் கைப்பிடியாய்ப் பிடித்துக் கேட்டாளாம். மற்றவர்கள் முன்னால் அவனால் செய்தவற்றை “இல்லை” என்று மறுக்க முடியாமல் ஒப்புக் கொண்டானாம். அதைக் கேட்ட யசோதை அவனைக் உரலோடு சேர்த்து கட்டிப் போட்டு விட்டு , தன் குரூரத் தனத்தை எண்ணி மிகவும் வருந்தி அழுதாளாம். இவையெல்லாம் இராதைக்கு அவளின் அன்னை சொல்லித்தான் தெரியும். அது மட்டுமா? காளிங்கனைக் கொன்ற போதும் சரி , சகடாசுரனை அழித்த போதும் சரி , அவன் ஒரு தெய்வக் குழந்தையென்று ஊரே கொண்டாட , யசோதை அவன் ஒரு சிறு குழந்தை , ஏதோ இறைவன் அருளால் அசுரர்கள் இறந்தார்கள் என் கண்ணன் என்ன செய்வான்? என்று சொல்லிவிட்டு மற்றவர்கள் திருஷ்டிக்கு கண்ணன் ஆட்படாமல் இருக்க காலடி மண் எடுத்து சுற்றிப் போட்டாளம். தாய்மைக்கே இலக்கணமான யசோதையா வளர்ப்புத்தாய்? கண்ணா! இதெல்லாம் என்ன நாடகம்? எதற்காக இந்தச் சோதனை? இராதையின் சிந்தனை கட்டுக்கடங்காமல் எங்கெங்கோ சுற்றியது.

இப்பொழுதெல்லாம் கண்ணன் முன் போல இல்லை. சிந்தனை அவனுக்கும் வேறு எங்கோ செல்கிறது. முன்பு எந்நேரமும் புல்லங்குழலிசை கேட்டுக் கொண்டேயிருக்கும். அதன் இனிமை அவளை மட்டுமா கட்டி இழுக்கும் ? , மாடு ,கன்று , பறவை , விலங்கு ஏன் மரங்கள் கூடக் காற்றுக்குத் தலையாட்டாமல் கண்ணன் பாட்டுக்குத் தலையாட்டுவதை இராதையே பார்த்திருக்கிறாளே! அவன் எங்கே என்று தேட வேண்டிய அவசியமே இல்லை. எங்கே பெண்களின் , குழந்தைகளின் சிரிப்புச் சத்தம் கேட்கிறதோ அங்கே போனால் போதும் கண்டிப்பாக கண்ணன் அங்கே தான் இருப்பான். ஆனால் இப்போதெல்லாம் அவன் அப்படி இல்லை. ஏதோ சிந்தனையில் ஆழ்ந்து விடுகிறான். கேட்டால் ஒன்றுமில்லை என்று சிரிக்கிறான். அவன் எண்ணத்தை யாரால் அறியக் கூடும்?

பெருமூச்செறிந்தாள் இராதை. இன்னும் கண்ணன் வந்த பாடில்லை. ஏனோ அவள் மனம் அதைப் பற்றிக் கவலைப் படவில்லை. அவனைப் பற்றிய நினைவுகளில் மூழ்கித் திளைப்பது அவனோடு இருப்பதைக் காட்டிலும் இன்பமாக இருந்தது. ஒரு மென்மையான் வலி நெஞ்சில் எப்போதும் இருந்தது. தனக்கு ஏன் அவன் நினைவுகள் தரும் ஆனந்தமே போதும் என்று தோன்ற வேண்டும்? இதிலும் அவனின் சூது ஏதேனும் இருக்குமோ? தன்னைச் சோதிக்கிறானோ? என்ன இருந்தாலும் மதுசூதனன் இல்லையா அவன். இது எந்த நாடகத்திற்கான துவக்கமோ? மீண்டும் தனக்குள் மூழ்கினாள் இராதை. ஒரு முறை அவர்கள் சிறு குழந்தைகளாக இருந்த போது கண்ணன் யசோதையிடம் “இராதை மாத்திரம் நல்ல சிவப்பு நிறத்தில் இருக்கிறாளே , நான் மட்டும் ஏன் இப்படிக் கருப்பாக இருக்கிறேன்” என்று கேட்டான். அதற்கு யசோதை ” இராதை பூரண நிலவு ஒளி வீசும் பௌர்ணமியன்று பிறந்தாள் , ஆனால் நீ தேய்பிறை அஷ்டமியன்று பிறந்தாய் அது தான் கருப்பாயிருக்கிறாய் . ஆனால் இந்தப் பாலைக் குடித்தால் நீயும் இராதையைப் போல நல்ல நிறமாகி விடுவாய் ” என்றாள். உடனே பாலைக் குடித்து விட்டு தன் கை , கால்கள் சிவப்பாகவில்லையே என்று அழுத அப்பாவியான என் கண்ணன் இப்போது எங்கே?

நேற்றுக் கூட கண்ணன் இவளிடம் பேசிக் கொண்டிருக்கும் போது மதுராவைப் பற்றியும் , அங்கு நடக்கும் கொடுங்கோலாட்சி பற்றியும் பேசினான்.” மதுராவில் என்ன நடந்தால் நமகென்ன? நம் கோகுலம் பத்திரமானது. கம்ச மஹாராஜா நம்மவர்களை மரியாதையாகத்தானே நடத்துகிறார். நாம் ஏன் மற்றவர்களைப் பற்றிக் கவலைப் பட வேண்டும்?” என்று இராதை கேட்டதற்கு கண்ணனுக்கு எவ்வளவு கோபம் வந்தது ? “என்ன ராதே! நீயும் சிந்தனைத் திறனற்ற முட்டாள்கள் போல் பேசுகிறாய்? பக்கத்து தெருவில் வீடுகள் தீப்பற்றியெரிந்தால் எனக்கென்ன? என் வீடு பாதுகாப்பாகத் தானே இருக்கிறது என்று எண்ணும் சுயநலம் மிக்கவளா நீ? தியாகத்திற்கும் , சுயநலமின்மைக்கும் நீ ஒரு உதாரணமாக இருப்பாய் என்று நினைத்தேனே? இவ்வளவுதானா நீ?” என்று பொரிந்து தள்ளிவிட்டான். கண்ணனின் இன்முகத்தையே கண்டு பழகியிருந்த இராதை வெலவெலத்துப் போனாள். பிறகு அவனே அவள் பயத்தைத் தெளிவித்து அவளை இது குறித்து யோசிக்கும்படிசொன்னான்.அவன் வார்த்தையின் அர்த்தம் அவளுக்கு மெதுவாக புரிய ஆரம்பித்து.ஒரு வேளை அந்தக் கோபத்தை மனதில் வைத்துக் கொண்டு தான் இன்று இன்னும் வரவில்லையோ? அவனைப் பற்றிய நினைவுகளே இனிமை என்று நினைத்தவளுக்கு இப்போது கண்ணனைக் கண்ணாரக் காண வேண்டும் , அவன் சிரிப்பையும் , புல்லாங்குழலிசையையும் காதாரக் கேட்க வேண்டும் என்று ஏக்கம் தோன்றியது. பந்து போல ஏதோ ஒன்று உருண்டு அவள் தொண்டையை அடைத்தது.

சாயங்கால வேளையில் கூட்டிற்குக் கூடச் செல்லாமல் பறவைகள் வர ஆரம்பித்துவிட்டனவே? அவை அப்படி வருவது என்பது ஒரே ஒரு காரணத்திற்காகத்தான் அது கண்ணனின் புல்லாங்குழலிசை கேட்கும் ஆசையினால் தான். அவை வரத் தொடங்கிவிட்டன என்றால் கண்ணன் வந்து கொண்டிருக்கிறான் என்று தானேஅர்த்தம். கனவிலிருந்து மீண்டவள் போல இராதை தலையைக் குலுக்கிக் கொண்டாள். உடைகளைத் திருத்திக் கொண்டு , தலை முடியையும் சீர் செய்து கொண்டாள். அழுதேனோ? கண்கள் சிவந்திருக்கின்றனவோ? முகம் எப்படியிருக்கிறது? என்று நினைத்தவள் யமுனையின் தூய நீரில் முகம் பார்த்தாள். கலைந்திருந்த நெற்றிச் சுட்டியை சரி செய்து கொண்டவள் , மீண்டும் முகம் பார்க்க எண்ணி நீரைப் பார்க்க அங்கே இரு தாமரைக் கண்கள் அவளைப் பார்த்துச் சிரித்தன. முகம் மலரத் திரும்பியவள் கண்ணனை ஆரத் தழுவிக் கொண்டாள். அவள் அணைப்பிலிருந்து விடுபட்டவன் , இராதையின் கண்களையே பார்த்தான். பார்வையின் தீட்சண்யம் நேற்று நான் சொன்னவற்றைப் புரிந்து கொண்டாய் அல்லவா? என்று கேட்டன. தன் கண்களையே இராதை தூது விட்டாள். அவள் கண்கண் சொன்ன செய்தி சேர வேண்டிய இடத்தில் போய்ச் சேர்ந்து விட்டது என்பதன் அடையாளமாக அவள் கைகளை இறுகப் பற்றிக் கொண்டான். பேசவோ , கேட்கவோ ஒன்றுமில்லையென்று தோன்றியது இராதைக்கு. இதோ இங்கே என் கைகளைப் பற்றியிருப்பவனுடன் வானத்தின் பல மண்டலங்களைக் கடந்து , வெண்மையான அலைகள் வீசும் கடலின் மீது ஒரு மென்மையான படுக்கையின் மேல் அவனின் காலடியில் அமர்ந்து அவனோடு பேசிக் களித்தது போல ஒரு உணர்வு நிழலாடியது.

இந்த உறவு இப்போது தொடங்கியதல்ல. காலங்களைக் கடந்தது. எத்தனையோ யுகயுகங்களாய் இவனே என் துணைவன் , இவனே என் தலைவன் .இன்னும் சொல்ல முடியாத உணர்ச்சிக் கொந்தளிப்பில் ஆட்பட்டது அவள் மனம். அவளது நினைவுகளை அறிந்தவன் போல் “கனவிலிருந்து மீண்டு வா ராதே!” என்றான் மென்மையாக.அவனைப் பார்த்து சிரித்தவளின் கையை விட்டு விட்டு புல்லாங்குழல் இசைக்கத் தொடங்கினான் அந்த மாயவன். அன்று ஏனோ அவன் புல்லாங்குழல் சோகத்தை மொழி பெயர்த்தது. கல்லையும் உருக்குமிசை காற்றில் மிதந்தது வந்தது. மரத்திலிருந்த பறவைகளின் கண்ணில் கூட நீர்த்துளி. யமுனையும் சேர்ந்து கண்ணீர் பெருக்கியதோ என்னவோ நதியின் நீர்மட்டம் உயர்ந்தது. இராதையின் நிலையோ பரிதாபமாயிருந்தது. கண்ணிலிருந்து பெருகிய துளிகள் அவள் அழகிய மார்பையும் , நனைத்து தரையில் சிறு குட்டை போலத் தேங்கியிருந்தது. இன்று ஒரு அதிசயம் போல கண்ணனின் கண்ணிலும் கண்ணீர்த்துளிகள். அந்தக் காட்சி ஒரு ஓவியமாக காலத்தின் கற்சுவரில் பதிக்கப்பட்டது போல் ஒரு தோற்றம். உலகமே நகராமல் சில மணித் துளிகள் அப்படியே நின்று விட்டது போல பிரமையில் மூழ்கிருந்தாள் இராதை. சடசடவென பறவைகளின் சிறகொலியில் சுயநினைவுக்கு மீண்டாள் இராதை. ஏன் கண்ணன் சோக ராகமிசைக்கிறான்? இதன் மூலம் அவன் எனக்கு சொல்லும் சேதி என்ன? அவனின் ஒவ்வொரு அசைவுக்கும் காரணம் உண்டல்லவா? தன்னை மறந்து விடுவது என்ற முடிவுக்கு வந்து விட்டானோ? இப்படி ஏதேதோ எண்ணத்தில் தத்தளித்தது இராதையின் மனப் படகு.

வாய் திறந்தான் கண்ணன். புல்லாங்குழலையும் விஞ்சிய இனிய குரல் அவனுக்கு. “ராதே! நான் வரும் முன் என்ன செய்து கொண்டிருந்தாய்?” . என்ன சொல்லுவாள் இராதை? அவன் நினைவுகள் தந்த இனிமையைப் பற்றிக் கூறினாள். கண்ணனின் முகத்தில் அர்த்தம் பொதிந்த பாவம். “ராதே! உனக்கு புரிந்து விட்டது , என் வேலையை எளிதாக்கி விட்டாய்” என்றான். இராதையின் மனதில் புயல் அடித்தது. கண்ணன் தொடர்ந்தான் , ” ராதே! நீ என் ஆன்மாவில் பாதி! பிரிவு என்பது நமக்குள் இல்லை , நான் உன்னை மறப்பதோ , இல்லை நீ என்னை மறப்பதோ என்பது நிச்சயமாக நடக்க முடியாத விஷயம். , நீ என்னை நன்கு உணர்ந்தவள் , நான் ஆற்ற வேண்டிய கடமைகளை நீ அறிவாய். மதுராவில் நிலைமை சரியில்லை ராதே. பெற்ற தகப்பனையும் உடன் பிறந்த சகோதரியயும் அவள் கணவனையும் கைதியாக வைத்திருக்கிறான் கொடியவன் கம்சன். அது மட்டுமல்ல அவர்களுக்குப் பிறந்த எட்டு குழந்தைகளையும் ஈவு இரக்கமில்லாமல் கொன்றிருக்கிறான். அதிலும் எட்டாவதாகப் பிறந்தது ஒரு பெண் குழந்தையாம் அதையும் கொல்லத் துணிந்திருக்கிறான். ஆனால் அது மாயையின் வடிவம் எடுத்து வானத்தை நோக்கி சென்று விட்டது. செல்லும் போது அவனை அழிப்பவன் இன்னும் உயிரோடு கோகுலத்தில் இருப்பதாகச் சொல்லிச் சென்றதாம்.அதிலிருந்து கம்சன் என்னை தன் எதிரியாகப் பார்க்கிறான். என்னைக் கொல்ல எத்தனையோ அரக்கர்களை அனுப்பித் தோற்ற நிலையில் இனி என்ன செய்வான் என்பது தெரியவில்லை” கண்ணன் சற்றே நிறுத்தினான்.

இராதையின் முகம் இப்போது சித்திரை நிலவாகப் பிரகாசித்தது. “கண்ணா ! நான் யாரென்று உணர்ந்து கொண்டேன். உன் கடமையை ஆற்ற நான் ஒரு நாளும் குறுக்கே நிற்க மாட்டேன் என்பது உனக்கும் தெரியும். நீ உலகிற்கு வழி காட்ட வந்தவன். வரவிருக்கும் யுகங்களில் எல்லாம் மக்களுக்கு நல்வழிப் பாதையை போதிக்க அவதரித்திருப்பவன். நான் உன்னுடைய அன்பிலும் லீலைகளிலும் மயங்கி உன்னை எனக்கு மட்டும் சொந்தமானவன் என்று நினைத்து விட்டேன். அதுவும் நீ நடத்திய ஒரு நாடகமே என்று உணர்ந்து கொண்டேன். இன்றில்லையெனினும் உனக்கு என்றாவது ஒரு நாள் மதுராவிலிருந்து அழைப்பு வரும் என்று என் மனதுக்குப் படுகிறது. பரந்து விரிந்த உலகம் உன்னை அழைக்கும் காலம் நெருங்கி விட்டதாகவே உணர்கிறேன் , நீ சென்று நீதியை நிலை நாட்டு ! உலகிற்கு வழி காட்டு” என்றாள் இராதை. இப்போது கண்ணன் இராதையைப் பார்த்த பார்வையில் பாசமும் , பரிவும் போட்டி போட்டன. “இராதே ! நீ இப்படித்தான் சொல்வாயென நான் நினைத்திருந்தது சரியாயிற்று. என் இனிய தோழியே! நீ என்னிடமிருந்து வேண்டுவது ஏதாவது இருந்தால் சொல் நிறைவேற்றுகிறேன்” என்றான்.

“கண்ணா நீயும் , நானும் வேறில்லை என்று ஆன பிறகு நான் என்ன வேண்டுவது? இருந்தாலும் என் மனதில் ஒரு ஆசை இருக்கிறது சொல்லட்டுமா? என்றாள் கண்மணி இராதை. கண்ணன் தலையசைத்தான். ” கண்ணா ! நீ மதுராவிற்குச் செல்வதே உன்னைப் பெற்ற அன்னையைக் காப்பாற்றத்தான் என என் மனது சொல்கிறது. அப்படி நீ உன் சொந்த அன்னையை தரிசித்த பின்னும் உன்னை வளர்த்த அன்னையான யசோதையை நீ மறக்கக் கூடாது. இனி வரும் காலம் முழுதும் கண்ணனின் தாய் என்றவுடன் யசோதையின் நினைவு தான் வரவேண்டும் இதை நீ எனக்குத் தந்தருள வேண்டும்” என்றாள். ” கண்ணே! என் அன்னையின் சார்பில் நீ கேட்ட வரம் பல யுகங்கள் நின்று வாழும். என் தாய் என்றவுடன் மக்களுக்கு முதலில் அன்னை யசோதைதான் ஞாபகத்திற்கு வருவாள் . போதுமா ராதே? அவ்வளவுதான உனக்கென எதுவும் கேட்க மாட்டாயா?” என்றான் ஆதங்கத்துடன் . இராதை தொடந்தாள் “நீ பல நகரங்களுக்குச் சென்று பல திருமணங்கள் புரிந்து கொள்ளும் நிலை வரலாம் , ஆனால் உலகில் என்றென்றும் , உன் பெயருடன் என் பெயரும் இணைந்தே வழங்கப் பட வேண்டும். உலகில் பலவேறு அடையாளங்களால் நீ அறியப் பட்டாலும் ராதையின் கண்ணனாகவே எப்போதும் நீ இருக்க வேண்டும்.என்னிலிருந்து உன்னைப் பிரிக்க முடியாது என்பதற்கு அதுவே சாட்சி.” என்றாள். கண்ணன் ” அது அப்படியே நிறைவறும் ராதே! அது மட்டுமல்ல என்றுமே என் காதலியாக தோழியாக உன் பெயரையே மக்கள் குறிப்பிடுவார்கள். உன்னை வணங்குபவர்களுக்கு என் அருள் என்றும் மாறாதிருக்கும்.” என்றான்.

இராதையின் கண்களில் ஆனந்தக் கண்ணீர். கண்ணன் புல்லங்குழல் மீண்டும் ஒலிக்க ஆரம்பித்தது. இம்முறை துள்ளும் இனிமை சந்தோஷத்தோடு இசை பொங்கி வழிந்தது.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *