செவ்வாய் கிரகத்தின் ஜெஸெரோ க்ரேட்டரில் (Jezero Crater) பெர்செவரன்ஸ் ரோவர் (Perseverance Rover) மெதுவாக நகர்ந்து கொண்டிருந்த போது அதன் சக்கரம் ஒன்று மண்ணில் சிக்கிக் கொண்டது. கம்ப்யூட்டர் வழங்கிய குறிப்பிட்ட வழிமுறைகளைப் பின்பற்றிய பிறகு, ரோவர் வெற்றிகரமாக தன்னை விடுவித்துக் கொண்டது. பின்னர் அந்த இடத்தை சுற்றி வந்து சில புகைப்படங்களை எடுக்கத் தொடங்கியது.
நாசா தலைமையகத்தில், விஞ்ஞானி ஜேம்ஸ் ஒரு கப்பில் சூடான காபியை ஊற்றிக் கொண்டு, செவ்வாய் கிரகத்தில் இருந்து கடைசியாக வந்த எழுபத்து மூன்று புகைப்படங்களின் தொகுப்பை ஆராயத் தொடங்கினார். முப்பது நிமிடங்களுக்குப் பிறகு கம்ப்யூட்டரில் தோன்றிய புகைப்படம் #24 அவரைப் பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. திடுக்கிட்டு எழுந்த அவர் கையிலிருந்த காபி கப் விசைப்பலகையில் கவிழ்ந்தது.
சுற்றிலும் செவ்வாய் கிரக குன்றுகள் இருக்க புகைப்படத்தின் நடுவில் ஒரு பெரிய மண்டை ஓடு மண்ணுக்குள்ளிருந்து எட்டிப் பார்த்தது.