ஒடோகொயிலியஸ் விர்ஜினியனுஸ் (Odocoileus virginianus)

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: அறிவியல்
கதைப்பதிவு: October 6, 2016
பார்வையிட்டோர்: 10,406 
 

உலகப் புகழ் பெற்ற திருநெல்வேலி ஐ.ஐடியில் படித்த தனக்கு இப்படி ஒரு நிலைமை வந்ததை எண்ணி வருந்தினான் ஜேம்ஸ். உலகின் இளம் விஞ்ஞானி என்கிற பட்டமெல்லாம் தனக்கிருந்து என்ன பயன் என்று நொந்துகொண்டே ஹாலில் அங்கும் இங்கும் நடந்து கொண்டிருந்தான்.

ஜெனி மீது முதல் முறையாக கோபம் வந்தது.அதை விட அதிகமாக ஜெனியின் கொள்ளுப்பாட்டன் மீது கோபம் வந்தது. நேற்று டிஜிட்டல் நூலகத்தில் அவருடைய வலைப்பதிவை படித்ததிலிருந்து ஜெனியின் பிடிவாதம் அதிகமாகிவிட்டது. “உலகிலேயே அதிக ருசி கொண்ட மாமிசம் மான்கறிதான்” என்று ஜெனியின் கொள்ளுப்பாட்டன் தன்னுடைய வலைப்பதிவில் எழுதியதை படித்ததிலிருந்து தனக்கும் மான்கறி வேண்டும் என்று அடம்பிடித்தாள் ஜெனி.

பிற உயிர்களை கொன்றால் என்ன நடக்கும் என்கிற எண்ணம் வந்தவுடன் ஜேம்ஸுக்கு பயம் தொற்றிக்கொண்டது. இரு புறாக்களை வேட்டையாடி சமைத்து தின்றதால் முதுமை ஊசி போடப்பட்டு ஒரே நிமிடத்தில் நாற்பது வயதை அடைந்துவிட்ட தன்னுடைய பக்கத்து வீட்டுக்காரனின் முகம் ஞாபகத்திற்கு வந்தது. நாற்பது வயது ஆனவர்களுக்கு கட்டாய ஓய்வு கொடுத்துவிடுவார்கள். அதன் பிறகு அவர்கள் வசிக்கும் தெருவில் உள்ள மரங்களை பராமரிப்பது, ஒவ்வொரு தெருவிலும் உள்ள கழிப்பறைகளை சுத்தம் செய்வதும்தான் வேலை என்றாகிவிடும்.

ஜெனிக்காக மானை வேட்டையாடி பிடிபட்டால் நாளைக்கே நாற்பது வயதாக்கி விடுவார்கள். அதன்பிறகு இப்போது போல் மாதம் இருநூறு கோடி சம்பளம் கிடைக்காது. பென்சன் பணம் மாதம் இரண்டு கோடி ரூபாய் மட்டுமே கிடைக்கும்.

இரண்டு கோடிக்கு ஒரு பழைய கார் கூட வாங்க முடியாது. ஆனாலும் ஜெனிக்காக இதைச் செய்தே ஆக வேண்டும். அதுவும் அரசிடம் பிடிபடாமல் செய்தாகவேண்டும். காதலிக்காக என்ன வேண்டுமானாலும் செய்யலாம்.

“ஹாய் டியர் என்ன ரொம்ப யோசனையில இருக்க?”

பின்புறமாக வந்து ஜேம்ஸைக் கட்டிக்கொண்டு அவன் முதுகில் கன்னம் பதித்தவாறே கேட்டாள் ஜெனி.

“நான் முடிவு பண்ணிட்டேன் ஜெனி. உனக்காக மானை வேட்டை ஆட போறேன்”

தீர்க்கமான குரலில் சொன்னான் ஜேம்ஸ்.

“வாவ்…எப்படி ஜேம்?”

“எப்படின்னு முடிவு பண்ணல ஆனா இன்னும் சரியா மூணு மாசத்துல என் செல்ல ஹனிக்கு மான்கறியை நானே ஊட்டிவிடுவேன்” என்றபடி அவளது இதழ்களை ஈரமாக்கினான்.

சொன்னதை செயல்படுத்த தினமும் பல மணி நேரம் உழைத்தான் ஜேம்ஸ். உலகில் மொத்தம் மிஞ்சியிருப்பது இரண்டு மான்கள் மட்டும்தான் என்கிற செய்தி படித்தவுடன் தன் மூதாதையர்களை திட்டித்தீர்த்தான். அந்த இருமான்களும் வல்லநாடு மலையில் வசிப்பதை அறிந்துகொண்டான். மலையை கண்காணிப்பதற்கென்றே ஒரு செயற்கைகோளை உருவாக்கி இருந்தது அரசு.

அந்த செயற்கைகோளை மீறி எப்படி அந்த மான்களை நெருங்குவது என்று யோசித்தான் ஜேம்ஸ்.

மின்னலென ஒரு எண்ணம் தோன்றியது. அதன் பிறகு இரண்டு வாரங்களாக ஜேம்ஸ் வீட்டை விட்டு வெளியே வரவில்லை. வீட்டிற்கு கீழே நூறு அடி ஆழத்திலிருந்த தன்னுடைய ரகசிய அறையில் மும்முரமாக ஒரு கண்டுபிடிப்பில் ஈடுபட்டிருந்தான் ஜேம்ஸ்.

இருவாரங்களாக ஜேம்ஸிடமிருந்து எவ்வித தொடர்புமின்றி துடித்தாள் ஜெனி.

தன் படுக்கை அறையின் சன்னல் வழியே கடந்து செல்கின்ற தூரத்து பறவைகளை பார்த்துக்கொண்டே படுத்திருந்தாள் .

திடீரென்று தன் கன்னத்தில் யாரோ கிள்ளுவது போன்று உணர்ந்து வெடுக்கென்று எழுந்து நின்றாள். அந்த அறையில் அவளைத் தவிர யாருமில்லை.
சன்னமாய் அவள் காதருகே ஒரு குரல் கேட்டது. “ஹனி மை டியர் ஜெனி”

ஜேம்ஸ்ஸின் குரலைக் கேட்டவுடன் திடுக்கிட்டாள். “ஜேம்ஸ் வேர் ஆர் யூ” பதட்டத்துடன் கேட்டாள் ஜெனி. திடீரென்று அவள் கண்ணெதிரே தோன்றினான் ஜேம்ஸ்.

“ஹே ஜேம்ஸ் நீ எப்படி இங்கே வந்தே?”

“வெரி சிம்பிள் டியர், இப்போ நான் நினைச்சா யார் கண்ணுக்கும் தெரியாம மறைய முடியும். ரெண்டு வாரமா இதுக்காகத்தான் என்னோட ரகசிய அறையில உழைச்சேன் ஜெனி. இதோ பார் இந்த ஆரஞ்சு கேப்ஸூலை சாப்பிட்டா உடனே கண்ணுக்கு தெரியாம மறஞ்சுடலாம். எப்போ திரும்பவும் சகஜ நிலைக்கு வரணுமோ அப்போ இந்த வயலட் கேப்ஸூல் சாப்பிடணும். இனிமே அந்த மான்கறி இந்த மானுக்குத்தான்” என்றபடி அவள் கன்னத்தில் தட்டினான்.

தில்லியிலிருந்து தன்னுடைய காரில் மூன்று நிமிடத்தில் நெல்லைக்கு வந்து சேர்ந்தான் ஜேம்ஸ். திருநெல்வேலியில் காரை நிறுத்திவிட்டு ஆரஞ்சு மாத்திரையை விழுங்கி, அங்கிருந்து வல்லநாடு வந்து மூன்று மணி நேரத் தேடலுக்கு பின்னர் ஐம்பதடி தூரத்தில் ஒரு மானைப் பார்த்தான். கொஞ்சம் தழைகளை எடுத்து அதற்குள் ஆரஞ்சு மாத்திரையை வைத்து மானுக்கு கொடுத்தான். அதை தின்றவுடன் மானும் மறைந்துபோனது.

ஜெனி வீட்டு வாசற்கதவில் பொருத்தியிருந்த கணினியிடம் உள்நுழைய அனுமதி பெற்று வீட்டு வாசலில் மானுடன் நின்றுகொண்டிருந்தான் ஜேம்ஸ்.

ஜெனி வீட்டு வேலைக்கார ரோபோ ஜேம்ஸிற்கு வணக்கம் சொன்னது.

“குட் ஈவ்னிங்” என்றவாறே வீட்டிற்குள் நுழைந்து அங்கிருந்த சோபாவில் மானை வைத்துவிட்டு ஜெனியைத் தேடினான். பின்னாலிருந்து ஒரு குரல் கேட்டது.

“அரசை ஏமாற்றி மானை கடத்த முயன்ற குற்றத்திற்காக உங்களுக்கு முதுமை ஊசி போடப்படும். பிற உயிர்களை கொல்வது சட்டப்படி குற்றம் என்று தெரிந்தும் அந்த குற்றத்தை ஊக்கப்படுத்தியதற்காக மூன்று முதுமை ஊசிகள் போடப்பட்டிருக்கிறது உங்கள் காதலி ஜெனிக்கு. நாளையிலிருந்து இந்தத் தெருவின் கழிவறைகளை சுத்தம் செய்வீர்கள் என்று எதிர்பார்க்கிறேன்” கரகரத்த குரலில் பேசிவிட்டு எழுந்து சென்ற மான் வடிவ ரோபோவைக் கண்டு உறைந்து நின்றான் ஜேம்ஸ். மெல்ல அவன் தோள் தொட்டாள் மூதாட்டி ஜெனி.

(வலைப்பதிவர் சிறில் அலெக்ஸ் நடத்தும் அறிவியல் சிறுகதை போட்டிக்காக எழுதப்பட்டது)

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *