(2009ல் வெளியான நாவல், ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
அத்தியாயம் 16-18 | அத்தியாயம் 19-21 | அத்தியாயம் 22-24
அத்தியாயம்-19
‘லட்சுமிகிட்ட இனி பேசவேண்டியவன் நான்தான்! ஏன்னா, அந்த கல் உங்கிட்ட இருந்தா எல்லா காரியங் களிலும் உங்களுக்கு வெற்றி கிடைக்கலாம். ஆனா, அது என்கிட்ட வந்து சேர்ந்தா, நான் அஷ்டமா சித்திகளையும் அடைஞ்சுடுவேன்!’
காருக்குள் அர்ஜுன் கரங்கள் பிரியாவின் மேல் பாம்பு போல ஊர்ந்து விளையாட்டு காட்ட தொடங்கிவிட்டன. பிரியா வெட்கத்தில் நெளிந்தாள். டிரைவர் முன்னால் இருப்பதை ஜாடையில் சுட்டிக் காட்டினாள்.
அர்ஜுன் அதை கண்டுகொள்ளாத மாதிரி திரும்பவும் அவள் இடையை மேயத் தொடங்கினான். நல்ல வேளையாக திருமலை உச்சிப் பாகம் வந்துவிட்டது. சில நிமிடங்களில் கீழே இறங்கி, ஏழுமலையானை தரிசிக்க செல்ல வேண்டும். எனவே, தன் இளமைத் துடிப்பை அர்ஜுன் சிரமப்பட்டு அடக்கிக்கொண்டான்…
முன்னால் சென்ற காருக்குள் இருந்த ‘லயன்’ லட்சுமியும், ஒரு புதிய முடிவுக்கு வந்திருந்தாள்.
ராஜதுரை போலீசில் மாட்டி கைதாகிவிட்டால், அவளை எதிர்க்கவோ, கேள்வி கேட்கவோ யாரும் இருக்கப் போவதில்லை. ஆனாலும், நரிக்குடி ஜமீனில் நாகமாணிக்கம் பற்றி யாராவது கேட்டால், அவர்களை எப்படி சமாளிப்பது என்பதும் அவளுக்குள் ஒரு சவாலான விஷயமாகவே இருந்தது.
ஒருவகையில் நாகமாணிக்கத்தை ராஜதுரை கொண்டு வருவதற்கு முன்வரை தன் வாழ்க்கை மிகச் சிறப்பாக இருந்ததாகவே தோன்றியது. அது வந்தபிறகு வெற்றிகள் மட்டும் வரவில்லை. கூடவே, பல திருப்பங்களும் ஏற்பட்டதை எண்ணிப் பார்த்தவள், தன் மார்பின் மேல் ரவிக்கைக்குள் அடங்கிக்கிடந்த அந்த நாகமாணிக்கத்தை ஒரு விநாடி தொட்டுப் பார்த்தாள்.
முன் இருக்கையில் உட்கார்ந்திருந்த சிட்டிபாபுவும், அவள் செய்கையைக் கவனிப்பது தெரியாத மாதிரி கவனித்தான். நடுநடுவே மதுரையில் ராஜதுரை மாட்டிக் கொண்டானா? இல்லையா? என்கிற கவலை வேறு…
போலீஸ் நிலையம்!
கமிஷனர் எதிரில் தலை குனிந்தபடி நின்று கொண்டிருந்தான், லாரி டிரைவர்.
”உன் பேரு என்னய்யா?”
“முத்தைய்யன்!”
“இந்த விபத்து எப்படி நடந்துச்சு?”
“லாரி திடீர்ன்னு ‘பிரேக்’ பிடிக்காம போயிடுச்சுங்க.”
“அப்ப லாரியை ‘செக்’ பண்ணினா ‘பிரேக்’ வயர் துண்டிச்சு இருக்குமா?”
“ஆமாங்க… நீங்ககூட பார்த்துக்குங்க!”
“நான் பார்க்கறது இருக்கட்டும். நீதான் பணத்துக்கு ஆசைப்பட்டு, விபத்து பண்ணிட்டேன்னு நான் சொல்றேன்.”
“அப்படி இல்லீங்க?”
“இதே பதிலை உண்மையைக் கண்டுபிடிக்கிற பரிசோதனை செய்யும்போதும் நீ சொல்லணும். சொல்லுவியா?”
“தாராளமாங்க. எனக்கு எப்பவும் ஒரே பேச்சுதாங்க.”
“இப்ப இப்படி பேசலாம் நீ… ஆனா, உண்மையைக் கண்டறிகிற பரிசோதனையில் உனக்குள் மின்சாரம் பாயும்போது, உன் ஞாபகமே இருக்காது. தெரிஞ்சுக்க…”
கமிஷனர் பொடி வைத்துப் பேசியது அவனை சற்று சிந்திக்க வைத்தது. அதுவரை வேகமாக பதில்களை சொன்னவன் எச்சில் விழுங்கி, மிடறு கட்டினான்.
அப்போது பார்த்து கச்சிதமாக அந்த போலீஸ் நிலைய வாசலுக்கு சங்கரானந்த சாமியும் வந்து சேர்ந்தார்.
அவரை வாசலில் உள்ள போலீசார் உள்ளே விட மறுக்க சாமி பதிலுக்கு அவர்களை ஓர் அகன்ற பார்வை மட்டும் பார்த்தார். சில நொடிகளில் அவர்களிடம் எதிர்ப்பு போயே போய்விட்டது.
சாமி தன் தாடியை தடவிக்கொண்டு உள்ளே நுழைந்தார். அந்த நிலையத்தில் ஒரு ஹால், இரு அறைகள். அதில் ஓர் அறை, ஆவண அறையாகவும், எழுத்தர் அறை யாகவும் – இன்னொன்று ‘லாக்அப்’ அறையாக இருந்தது.
அதற்கு முன்னால்தான் அந்த லாரி டிரைவர் – கையில் விலங்கிடப்பட்ட நிலையில் நிறுத்தப்பட்டு – விசாரணையும் நடந்து கொண்டிருந்தது.
சாமியார் வரவும் எல்லோர் கவனமும் அவர் பக்கம் திரும்பியது. டிரைவரும் அவரைப் பார்த்தான். சங்கரானந்த சாமியும் அவனைக் கவனித்தார். அந்த நொடியே அவனுக்குள், ‘உன்னை காப்பாற்ற நான் வந்துவிட்டேன்’ என்கிற ஒரு குரல் ஒலித்து அடங்கியது.
சாமியாரைப் பார்த்த உடன் கமிஷனர் ஆச்சரியமும், அதிர்ச்சியும் அடைந்தார். இன்ஸ்பெக்டர் பக்கமாய் திரும்பி, ‘யார் இவர்?’ என்று கண்களாலே கேட்டார்.
”சாமி… என்ன இது? எங்கே வந்தீங்க?” இன்ஸ்பெக்டர் ஆரம்பித்தார்.
“ஒரு புகார் கொடுக்கலாம்னு வந்தேன்ப்பா…”
“என்ன புகார் சாமி…”
“நான் சிவனேன்னு இருக்கிற ஒரு சந்நியாசி. ஆனா, உங்க போலீஸ்காரங்க அப்பப்ப என்கிட்ட வந்து கஞ்சா இருக்கா, அபின் இருக்கான்னு கேட்டு சங்கடப் படுத்துறாங்க… நான் அந்த மாதிரியான சாமி இல்லேன்னு சொன்னா கேக்கமாட்டேங்கிறாங்க…”
“அதுக்காக புகார் கொடுக்கப் போறீங்களாக்கும்? சரிதான். அப்படி போங்க – இங்கே ஒரு முக்கியமான விசாரணை நடந்துகிட்டு இருக்கு” என்று வாசல் பக்கமாய் கையை காட்டினார், இன்ஸ்பெக்டர்.
சாமியும் மவுனமாய் வெளிப்புறம் போடப்பட்டிருந்த பெஞ்சில் போய் உட்கார்ந்து கொண்டார். அவர் வந்த வேலைதான் முடிந்துவிட்டதே!
உள்ளே டிரைவரும், ஏதோ புதிதாய் ஒரு தெம்பு வந்தவனைப் போல பேச ஆரம்பித்திருந்தான்.
“சார் எனக்கு எந்த பரிசோதனை வேணா வையுங்க. நடந்தது விபத்துதான். நான் தெரிஞ்சு எந்தத் தப்பும் பண்ணலை!”
டிரைவரின் அந்த உறுதியான பதில், உதவி கமிஷனரையும் நிம்மதிப் பெருமூச்சு விடவைத்தது. மெல்ல தனியே ஒதுங்கியவர், மாஜி எம்.எல்.ஏ. ராஜதுரைக்கு போன்போட்டு – டிரைவர் சாதுரியமாக நடப்பதையும், சாமியார் வந்துவிட்டதையும் கூற – ராஜதுரைக்கும் புத்துயிர் வந்தது போல் இருந்தது!
‘சாமி… சரியான நேரத்துக்கு எனக்குக் கை கொடுத்துட்டீங்க. உங்களை நான் எப்பவும் மறக்க மாட்டேன் சாமி’ என்று தனக்குள் நெகிழ்ந்து கொண்டார்!
மேல் திருப்பதி!
தரிசனத்துக்காக வரிசையில் நின்றுகொண்டிருந்தாள், ‘லயன்’லட்சுமி. செல்போன்களை உள்ளே எடுத்துச்செல்ல அனுமதி இல்லாததால், அதை காருக்குள் வைத்துவிட்டு, ! சிட்டிபாபுவை அதற்கு காவலாகவும் போட்டிருந்தாள். அந்த செல்போன் வழியாக புது உற்சாகத்தோடு கச்சிதமாய் குரல் கொடுக்க ஆரம்பித்தார், ராஜதுரை.
“அலோ… ‘லயன்’லட்சுமி”
“அம்மா இல்லீங்க… நான் அவங்க பி.ஏ. பேசுறேன்.”
“ஓ… ‘பி.ஏ.’சிட்டிபாபு தானே?”
“ஆமாங்க சார். இப்ப எப்படி சார் இருக்கு, உங்க உடம்பு?”
“என் உடம்புக்கு என்னய்யா? உங்க அம்மாவை காப்பாத்த காசும், பணமும் இருந்தா எனக்குன்னும் நாலுபேர் இருப்பாங்கல்ல?”
“சரிங்க… எதாவது முக்கியமான விஷயங்களா?”
“ஆமாம்…கூப்பிடு, உங்கம்மாவை.”
“அவங்க சாமிகும்பிட போய் இருக்காங்க!”
“அப்படியா? வந்த உடனே சொல்லு, உங்க அம்மா ஏவிவிட்ட அஸ்திரம் புஸ்வாணம் ஆயிடிச்சின்னு… என் டிரைவர் துணிச்சலா நின்னுட்டான். இனி என்னை அசைக்க முடியாது.
அதே நேரம், என்னை சீண்டின நரிக்குடி ஜமீனையே நான் நிர்மூலமாக்கிட்டேன். கூட்டணி அமைச்ச உங்க அம்மாவையும் சும்மா விடமாட்டேன். எங்கே, எப்போ, எப்படி எதைச் செய்வேன்னு தெரியாது. ஆனா, ஒண்ணு! உங்க அம்மா இனி நெஞ்சை நிமிர்த்திக்கிட்டு மதுரையில நவீன மங்கம்மாவாக திரிய முடியாது.”
ராஜதுரையின் குரலில் கோபம் கொப்பளித்தது. சிட்டிபாபு அதை கண்டுகொள்ளவில்லை.
“ராஜதுரை சார்… படுத்தபடுக்கையா இருந்துகிட்டே இந்த போடு போடுறீங்களே… நீங்க மட்டும் பழையபடி நடமாட ஆரம்பிச்சுட்டா, எங்க மேடம் உண்மையாலுமே உங்களை நினைச்சாலே பயந்துதான் தீரணும்னு சொல்லுங்க.”
“நடமாட ஆரம்பிச்சுட்டா என்ன… நான் இப்ப பேசுறதே படுக்கையை விட்டு எழுந்து உன்கூட நடமாடிகிட்டுதான்!”
“அட… நிஜமாவா சொல்றீங்க?'”
“எப்படியும் மதுரைக்கு வருவேயில்ல… அப்ப நேர்ல வா. உன் எதிர்ல மாடியில் இருந்து குதிச்சே காட்டுறேன்.”
“அட என்னங்க நீங்க… உங்களை நான் நம்புறேங்க. நீங்க சொன்ன எல்லா விஷயங்களையும் அம்மாகிட்ட சொல்லிடுறேங்க… ஆனா, என் அறிவுக்கு பட்ட ஒரு விஷயத்தையும் உங்களுக்கு சொல்லிக்கிறேன். அம்மா உங்களை எல்லாம் தூக்கி சாப்பிடுறவங்க. அதனாலதான்தன் மகளுக்கு திருப்பதியில் கல்யாணத்தை முடிச்சிட்டாங்க. இந்த விஷயத்துல உங்க சவால்ல நீங்க தோத்துட்டதாகத் தான் நான் நினைக்கிறேன். அதோடு, அம்மா கையில் சக்திவாய்ந்த நாகமாணிக்கம் வேற இருக்கு. நீங்க எவ்வளவு மோதினாலும் அம்மாதான் ஜெயிப்பாங்க. புரிஞ்சிகிட்டு புத்திசாலித்தனமா நடந்துக்கிற வழியைப் பாருங்க.”
சிட்டிபாபு சொன்ன விஷயம், ராஜதுரையைக் கொந்தளிக்க வைத்துவிட்டது. கச்சிதமாக சாமியார் வேறு வந்து சேர்ந்தார்.
“சாமி… நல்ல நேரத்துக்கு வந்தீங்க. டிரைவர் வாயை கட்டிட்டீங்கதானே?”
“ம்… எந்த காலத்துலேயும் அவன் இனி உண்மையைச் சொல்லமாட்டான். சொல்லப்போனா, நடந்தது அவனுக்கே ஞாபகத்துல இருக்காது. அவன் கவலையை விடு. அதேநேரம், இனி இந்த மாதிரி உயிரைப் பறிக்கிற பாதகத்துல எல்லாம் இறங்காதே.”
“அங்குலத்துக்கு அங்குலம், வார்த்தைக்கு வார்த்தை நீங்க சாமியாருங்கிறதை நிரூபிக்கிறீங்க. என் பக்கத்து நியாயத்தை நினைச்சே பார்க்கமாட்டேங்கிறீங்களே?”
“உன் பக்கம் நியாயம் இருக்கிறதாலதான் உனக்கு நான் உதவி செய்துகிட்டு இருக்கேன். அதை நீ ஞாபகத்துல வைச்சுக்கோ.”
“ஒரு ஆபத்துல இருந்து என்னை காப்பாத்திட்டீங்க. ஆனா, ‘லயன்’ லட்சுமிகிட்ட நான் தோத்துகிட்டே இருக்கேன் சாமி. அவ புத்திசாலித்தனமா தன் மகளுக்கு கல்யாணத்தை திருப்பதியிலே முடிச்சிட்டாளாம்.”
“அப்படியா?”
“என்ன சாமி நீங்க… நான் என்ன கதையா சொல்லிக்கிட்டு இருக்கேன். அப்படியாங்கிறீங்க! அவ பி.ஏ. அந்த சொட்டத்தலையன் சிட்டிபாபு. என்னடான்னா, ‘எங்க அம்மாவை உன்னால் அசைக்க முடியாது’ங்கிறான். நாகமாணிக்கக்கல் அவகிட்ட இருக்கிறதால் அவளை யாராலேயும் ஜெயிக்க முடியாதுன்னு வேற சொல்றான்.”
“அது உன்னால்தானே… இங்க நீ புலம்பிகிட்டு இருக்கே. கல்லை இழந்த ஜமீன் குடும்பத்துல ஒரு உயிருக்கு ரெண்டு உயிர் போயிடிச்சு. உதவிக்கு வந்த கம்பக்குடி ஜமீன்தாரும் இப்ப உயிரோடு இல்லை. அதேவேளை, லட்சுமிக்கு ஒரு சிரமமும் இல்லாம அவமகள் கல்யாணம் முடிஞ்சுபோச்சு.
அவளும் இங்கே நடக்கிற எந்த குழப்பத்துலேயும் சம்பந்தப்படாம திருமலையில் சாமி தரிசனம் பண்ணிகிட்டு இருக்கா. அங்கே இருந்துகிட்டே இங்கே உன்னையும் புலம்பவிட்டுட்டு இருக்கா. யோசிச்சு பார்த்தா அந்த கல்லுக்கு ஒரு சக்தியும் இல்லைன்னு யாராலேயாவது சொல்ல முடியுமா?”
“சாமி… என்ன சாமி நீங்க… பாட்டுக்கு அர்த்தம் சொல்ற மாதிரி, நடந்ததுக்கு தொகுப்புரை தர்றீங்களே?”
“உணர்ச்சிவசப்படாம அமைதியா இரு, ராஜதுரை. இனி நீ எதுவுமே பேசக்கூடாது.”
“நான் பேசாம இருக்கிறதா? அவ என்னை மூட்டைப்பூச்சியை நசுக்குகிற மாதிரி நசுக்கிடுவா சாமி.”
“கவலைப்படாதே. லட்சுமிகிட்ட இனி பேச வேண்டியவன் நான்தான். ஏன்னா அந்த கல் உங்ககிட்ட இருந்தா எல்லா காரியங்களிலேயும் உங்களுக்கு வெற்றி கிடைக்கலாம். ஆனா, அது என்கிட்ட வந்து சேர்ந்தா, நான் அஷ்டமாசித்திகளையும் அடைஞ்சுடுவேன்” என்ற சாமியாரின் குரலில் முதல் தடவையாக – சற்று கடுமை. கண்களில் சிவப்பு.
அத்தியாயம்-20
‘அந்த நாகமாணிக்கத்தை மட்டும் கொடுத்துடுங்க. நூறு கோடி ரூபாய்க்கு இலங்கை வியாபாரி அதை கேட்டுக்கிட்டே இருக்கார். நாகமாணிக்கத்தைத் தூக்கி அவர்கிட்ட கொடுத்து, பணத்தை வாங்கி நான் ராஜதுரையையும் சமாளிக்கிறேன்.!’
சங்கரானந்த சாமிகள் ‘இனி நான் பார்த்துக் கொள்கிறேன்’ என்று சொன்னதும், சொன்ன அந்த விதமும் ராஜதுரையை நிறையவே யோசிக்க வைத்தன.
தாடையை தடவிக்கொண்டு ஆஸ்பத்திரி வார்டின் மோட்டு வளையைப் பார்த்தவரை அவரது சீடர்களும் ஒரு தினுசாக பார்த்தனர்.
சாமி, ‘நான் பார்த்துக் கொள்கிறேன்’ என்று சொன்ன கையோடு புறப்பட்டுவிட்டார். வழக்கம் போலவே வந்தது தெரியாத வேகம். ராஜதுரையின் சீடன் ஒருவன் ஜன்னலருகே நின்றுகொண்டு, தொலைவில் தெரிந்த பரபரப்பான சாலை ரவுண்டானாவைப் பார்த்தான். அந்த ரவுண்டானா அருகில் அவர் போவது தெரிந்தது.
மனிதர் காலில் ஏதாவது சக்கரம் இருக்குமோ என்றுகூட தோன்றியது. அந்த சீடன் தலையை சிலுப்பிக் கொண்டான்.
“என்னடா?”
“ஒண்ணுமில்லண்ணே… இந்த சாமியார் எக்ஸ்பிரஸ் ரெயிலுக்கு பிறந்திருப்பார்னு தோணுது. இப்பதான் இங்கே இருந்து கிளம்பினார். அதுக்குள் ஒரு கிலோ மீட்டர் தூரத்தைத் தாண்டிட்டாரு.”
“ஆமாண்ணே…அவர் இது நாள் வரை ரொம்ப இதமாத்தான் பேசிகிட்டிருந்தார். இப்ப அவர், ‘நான் பார்த்துக்கிறேன்’னு சொன்னப்போ அதுல ஒரு அழுத்தமும்; ஆத்திரமும் தெரிஞ்சிச்சிண்ணே…”
“ஒண்ணு மட்டும் நிச்சயம்… சாமிக்கும் அந்த லட்சுமிக்கும் நடுவுல ஒரு பெரிய யுத்தம் நிச்சயமா இருக்கு… சாமிகிட்ட லட்சுமி பருப்பு எப்படி வேகுதுன்னு பார்ப்போம்…”
“அட போங்கடா… லட்சுமியும், சாமியும் என்னமோ ஆகட்டும். போச்சு. எனக்கு அவ சொத்தும் நாகமாணிக்கமும் போச்சே…”
ராஜதுரையிடம் வருத்தம் ஊற்றுபோல பீறிட்டது.
நரிக்குடி ஜமீன் மாளிகை!
துக்க காரியமெல்லாம் முடிந்து ஒருவித அச்சமூட்டும், அமைதியுடன் இருந்தது. நல்லமணி ஐயா இருந்தவரை அவர் வைத்ததுதான் அங்கே சட்டம்… பத்தடி தள்ளி நின்றுதான் அவரிடம் பேசவேண்டும். மரியாதைக் குரியவர்கள் என்றால், உதட்டுக்கு முன்னால் கையை பணி வைக்கத் தேவையில்லை. அவ்வளவுதான் விஷயம்.
இப்போது அந்த இடத்தில் அவர் சகோதரி நாமகிரிதான் இருந்தாள். செத்துப்போன ரமேஷின் அப்பனும், நல்லமணியின் மகனுமான ஞானமணிசேகரன் பிறக்கும் போதே ஊனமுற்றவர் என்பதாலும், பேச்சு வராததாலும் அவர் பண்ணை வீடு ஒன்றில் வேலைக் காரர்களால் பராமரிக்கப்படுகிறவராகவே இருந்துவிட்டார். ரமேஷ் பிறக்கும்போதே அவன் தாயும் போய்ச் சேர்ந்து, இப்போது அவனும் இல்லை.
மொத்தத்தில் ஆண் வாரிசே இல்லாதபடி ஆகிவிட்டது, அந்தக் குடும்பம். இப்பொழுது நாமகிரிதான் அங்கே எல்லாம்! நாமகிரி இளவயதிலேயே கணவனை இழந்த நிலையில் தன் மகள்கள் இருவருடன் பிறந்த வீட்டுக்கே வந்துவிட்டாள். மகள்களுக்கு திருமணமாகி விட்டது. ஆனால், மாப்பிள்ளைகள் சரியாக அமைய வில்லை.
அது இப்போது அவளுக்கும் வசதியாகப் போய் விட்டது. அந்த மாளிகை போன்ற வீட்டின் மையத்தில் அவள் மட்டுமே… பங்காளிகளும், உறவுக்காரர்களும் வந்து வந்து துக்கம் கேட்டுவிட்டுப் போனபடியே இருக்க, வக்கீலும் வந்து ஜமீன் சொத்து சம்பந்தமாக பேசக் காத்திருந்தார். எல்லோரும் வந்து போய்விட்ட நிலையில் அவரை அருகே அழைத்தவள், சைகையாலே விவரம் கூறச் சொன்னாள்.
“அம்மா…ஐயா போனபிறகு அவர் சொத்தெல்லாம் தாத்தன் சொத்து பேரனுக்குங்கற கணக்குப்படி, ரமேஷ் தம்பிக்குத்தான் வரவேண்டி இருந்துச்சு. இப்ப தம்பியும் இல்லாம போயிட்டதால, அவ்வளவுக்கும் வாரிசு தோட்டத்து வீட்டுல பேசக்கூட முடியாம கிடக்கிற ஐயோவோட மகன் ஞானமணிக்கு தாங்க! அதாவது உங்க அண்ணன்.
நல்லமணி ஐயா சாகறவரை உங்களைப் பத்தியோ, உங்களுக்கு சொத்துல பங்கு கொடுக்கிறது பத்தியோ எதுவுமே சொல்லலை… உங்க கல்யாணத்தின் போதே உங்களுக்கு கொடுக்க வேண்டியதைக் கொடுத்துட்டதால அவர் உங்களைப்பத்தி நினைக்கவேயில்லை..” – வக்கீல் ஈனசுரத்திலதான் பேசினார்.
“இப்ப நான் என்ன உங்ககிட்ட சொத்து பத்து பத்தி ஏதாவது கேட்டேனா…? எனக்கெதுக்குங்க சொத்தும் பத்தும்… எனக்குத்தான் அதுக்கான ராசியே இல்லையே… என் புருஷனும், குடிச்சும் சீட்டாடியும் அதை அழிச்சாரு!”
“அப்படி இல்லம்மா… ஞானமணி அய்யாவுக்கு உடம்பு மனசு ரெண்டுலையும் தெம்பில்லை. அதனால இந்த ஜமீன் இரத்த சம்பந்தத்துல அடுத்து நீங்கதான் நிக்கறீங்க. அவர் கிட்ட கையெழுத்து வாங்கிட்டா உங்களுக்கு ‘பவர்’ வந்துடும்.”
“இப்ப என்ன செய்ய சொல்றீங்க?”
“ஜமீன் நிர்வாகம் நடக்கணும்ல. நீங்க இருக்கிறதால் நீங்கதான் பார்த்துக்கணும்…”
“சரி. நான் இருக்கேன்னு என்கிட்ட வந்துட்டடீங்க? நான் இல்லாட்டி…?”
“இல்லாட்டி… இல்லாட்டி…”
“என்ன எச்சி முழுங்கறீங்க… நான் இல்லாட்டி என்ன பண்ணுவீங்க?”
“இப்படி ஒரு கேள்வியைக் கேப்பீங்க… அதுக்கு நான் பதில் சொல்லவேண்டி வரும்னு நான் கனவுல கூட நினைக்கலங்க…”
“இப்ப நினைச்சு பதில் சொல்லுங்க.”
“சொன்னா என்மேல வருத்தப்படக்கூடாது.”
“சொல்லுங்க. எதுவா இருந்தாலும் நான் கேட்டுத்தானே தீரனும்.”
”அம்மா ஜமீன் சொத்து மதிப்பைவிட அதோட கடன் அதிகம்!” – வக்கீல், எவருக்கும் பெரிதாய் வெளியில் தெரியாத அந்த ரகசியத்தை மெல்லத்தான் தொட்டார்.
நாமகிரியும் அதைக்கேட்டு அலட்சியமாக சிரித்தவளாக, “அதுக்கு இப்ப என்ன?” என்றாள்.
“நீங்க எனக்கு என்னன்னு கையை உதறிட்டா அவ்வளவு சொத்தும் கடனுக்கே சரியாப் போயிடும்…”
“அதனால…?”
“ஏதாவது பண்ணி சொத்தைக் காப்பாத்தப் பாருங்க…”
“எனக்கு எந்த உரிமையும் இல்லாத சொத்தை நான் காப்பாத்தணுமா?”
“ரமேஷ் உயிரோடு இருந்திருந்தா இந்த கேள்விக்கே இடமில்லை. அவரை லட்சுமியம்மா மாப்பிள்ளையாக்கி, லட்சுமி அம்மாவை வைச்சே அவ்வளவு கடனையும் அடைக்க பெரியவர் திட்டம் போட்டிருந்தார்.”
“அதெல்லாம்தான் ஒண்ணுமில்லாம போச்சே…”
“அப்ப சொத்து அவ்வளவும் கடனுக்கு ஈடா கொடுத்துடலாமா? கடன் கொடுத்த ‘பார்ட்டி’க்கும் நான்தான் வக்கீல்?”
“அப்ப ஒரு முடிவோடுதான் வந்திருக்கீங்க?”
“என்னம்மா பண்ண என் கடமையை நான் செய்துதானே தீரணும்?”
“ஒரு வாரம் வரைப் பொறுங்க. நான் இப்ப வேறு ஒரு கணக்கு போட்டுகிட்டு இருக்கேன். நான் ஒண்ணு நினைச்சிருந்தேன். ஆனா என்னென்னவோ நடந்துடுச்சி… பரவாயில்ல!”
“சரிங்கம்மா… ஆனா, வெட்டு ஒண்ணு துண்டு ரெண்டுன்னு சொல்லிறேங்க. ஜமீனுக்கு கடன் இருக்கிற விஷயம் வெளியே தெரியாது. பேங்க்ல வாங்கினா கூட கவுரவமா இருக்காதுன்னு காதும் காதும் வெச்ச மாதிரி பெரியவர் என் ‘கிளையாண்டு ‘ங்க இரண்டு பேர்கிட்ட வாங்கி இருந்தாரு. வட்டியும் முதலுமா பதினேழரை கோடி ரூபாய் வந்துடிச்சி…”
“இதுதான் நேரமுன்னு தொகையைச் சொல்லி என்னை மிரட்டாதீங்க. ஜமீன் கடன்பட்ட விஷயம் கடைசிவரை ரகசியமாகவே இருக்கணும். ஞாபகம் இருக்கட்டும்.”
“நீங்க சொன்ன ஒரு வாரம் வரை நான் மூச்சுவிடமாட்டேன்.”
வக்கீல் உத்தரவாதம் அளித்துவிட்டு, கிளம்பிச் சென்றார். புருவத்தில் வரிகள் விழுமளவு நெற்றியைச் சுருக்கிக் கொண்டு யோசிக்கத் தொடங்கிவிட்டாள், நாமகிரி!
திருப்பதி!
கிளம்புவதற்கு தயாராக இருந்தாள்,’லயன்’ லட்சுமி. ஒரு கூடையில் லட்டும், வடையும் பிரசாதமாக குவிந்து கிடக்க – அது அவளது காரின் டிக்கியில் இருந்தது.
சாமி தரிசனமெல்லாம் பிரமாதமாக கிடைத்தது. பிரியாவுக்கும், அர்ஜுனுக்கும் துளியும் தாமதமே இன்றி மலை மேலேயே ஒரு ‘பிளாட்’டில் சாந்தி முகூர்த்தத்தையும் முடித்துவிட்டாள்.
அர்ஜுன், பிரியாவை கிறங்கடித்து இருந்தான். அவளுக்குள் எப்போதும் இல்லாத வெட்கம், மவுனம் என்கிற கலவை.
தலையை வாராமல் ‘ஷாம்பு’ விளம்பரத்தில் வருகிறவர்கள் போல பறக்கவிட்டபடி திரிவதுதான் அவள் வழக்கம்.
ஆனால், இப்போது அதை அடக்கிக் கட்டி ‘தலை வாரிப் பின்னி’ பூகூட வைத்திருந்தாள். நெற்றியிலும் குங்குமம். லட்சுமிக்கே மகளைப் பார்க்க கண்படும்போல் இருந்தது. அர்ஜுனும் தன் மாமியாரை நேருக்குநேர் பார்ப்பதை தவிர்த்தான். வெட்கம்தான்.
அதே நேரம், அவனிடம் ஒரு துள்ளல். இனி அம்பாரி மாளிகைக்கே தான்தான் அரசன் என்பது போல ஒரு பாவனை. சொடக்குப் போட்டு டிரைவரை அழைப்பதில் இருந்து, செல்போனை தூக்கிப் போட்டு பிடித்து பேசுவது வரை அனைத்திலும் அவனிடம் ஒரு மாற்றம்.
லட்சுமியும் மதுரைக்கு கிளம்ப முடிவு எடுத்து விட்டாள். அதற்குமுன்பாக அங்குள்ள தன் உளவாளிகளில் ஒருவனுக்கு போன் செய்தாள்.
“வணக்கம் மேடம்… இங்க ராஜதுரை இன்னும் ஆஸ்பத்திரியில்தான் இருக்கார். சாமியாரால் பூரணமா குணமாயிட்டதா சொல்றாங்க. நரிக்குடி ஜமீன்ல பெருசர் ஒண்ணும் ஆர்ப்பாட்டம் இல்லை. ரொம்பவே அமைதியா இருக்கு. உறவுக்காரங்கதான் நீங்க தூக்கம் கேக்க வராததை ஒரு பிரச்சினையா பேசினாங்க. அவங்களே ராஜதுரைதான் லாரியை ஏத்தி கொன்னுட்டான்னு தெரியவும் அப்படியே அடங்கிட்டாங்க.”
“மொத்தத்துல பெருசா எதுவும் இல்லை. அப்படித் தானே?”
“ஆமாம் மேடம்… பத்திரிகைகாரங்கள்ல சிலர் மட்டும் உங்களைத் தேடிகிட்டு இருக்காங்க. சிலர் திருப்பதியில் இருக்கிறது தெரிஞ்சு அங்கே வந்துகிட்டும் இருக்காங்க”.
“பிரியா – அர்ஜுன் கல்யாண விஷயம் பரவிடிச்சா?”
“என்னன்னு தெரியலை… ராஜதுரை அதைப்பத்தி பெருசா பேசலை. அதேவேளை, ராஜதுரையைப் பார்க்க இரண்டு, மூணு தடவை அந்த சாமியார் வந்துட்டுப் போனாரு.”
“சரி… இன்னும் 10 மணி நேரத்துல நான் அங்கே இருப்பேன். அங்கு வந்த் மறுநாளே நான் எல்லா பத்திரிகையாளர்களையும் சந்திக்கிறேன். அந்த சந்திப்புல என் மகள் – மாப்பிள்ளையையும் அறிமுகப்படுத்தி, அவங்க கல்யாணத்தையும் போட்டு உடைச்சுடப் போறேன். அதுக்கு முந்தி நான் யார் கண்ணுலேயும் படாம நரிக்குடி ஜமீனுக்கு போய் நாமகிரியம்மாவை மட்டும் பார்த்து துக்கம் கேக்கணும். அதுக்காக எனக்கு ஒரு வாடகை கார் ஏற்பாடு பண்ணிடு.”
“நல்லதுங்க மேடம்.”
பேசி முடித்தாள். காரிலும் ஏறி அமர்ந்துகொண்டாள். அவளது காரை பிரியா – அர்ஜுன் கார் பின்தொடர்ந்தது. காருக்குள் அர்ஜுன், பிரியாவிடம் சில்மிஷம் செய்யத் தொடங்கினான்.
“ஐயாவுக்கு ‘ரொமான்ஸ் மூடு இன்னும் போகலையா?”
“ஏன் போகணும்? எதுக்கு போகணும்?”
“ஆனாலும், புதுமணத் தம்பதிகள் கார்.”
“உஸ்… இது கார்.”
“நாம் தம்பதிகள் மட்டுமல்ல… கொஞ்சம் சிக்கல்லேயும் இருக்கோம். அம்மா பயங்கர ‘டென்ஷன்’ல இருக்காங்க, பார்த்தீங்கல்ல?”
“உங்க அம்மாவைக் கொஞ்சம் என் பின்னால் நிக்கச் சொல். எல்லா பிரச்சினையையும் நான் தீர்த்து வைக்கிறேன்.”
“சொல்லாதீங்க. செய்யுங்க.”
“அதுக்கு உங்க அம்மாவான மங்கம்மா சம்மதிக்கணுமே?”
“சம்மதிக்காட்டி உங்க மாப்பிள்ளை முருக்கைக் காட்டுங்க. நானும் உங்களுக்கு ஆதரவு கொடுத்து, ‘அம்மா இனி நீங்க ஓய்வு எடுங்க’ன்னு சொல்றேன்.”
“என்ன நீ… நான் கோடு போட்டா ரோடு போடுறே?”
“முதல் முதலா ஒரு சரியான ஆம்பிளையைப் பார்த்ததால்…”
அவள் பேச்சோடு வெட்கத்தையும் காட்டினாள். அடுத்த நொடியே அவளை தன் இரும்பு கரங்களால் இழுத்து ஒரு ‘இச்’ கொடுக்க, அவளும் திமிற முற்பட்டு “விடுங்க… என்ன இது?” என்று வெட்கப்பட – “சரியான ஆம்பிளைன்னா இப்படித்தான் இருப்பான்” என்று அர்ஜுனும் கண் சிமிட்டினான்.
இரவு நேரம்!
நரிக்குடி ஜமீன் முன் நின்ற கார் ஒன்றில் இருந்து கறுப்பு நிற ‘கோஷா’ தரித்த பெண் ஒருத்தி இறங்கி உள்ளே சொன்றாள். பார்த்தவர்களுக்கு எல்லாம் வியப்பு. நேராக பிரம்பு நாற்காலியில் அமர்ந்திருந்த நாமகிரி முன் முகத்திரையை விலக்கினாள்.
‘லயன்’ லட்சுமி!
“அட லட்சுமியம்மாவா… என்ன இது வேஷம்?”
“வேஷம்தான்… என்ன பண்ணட்டும்? அந்த ராஜதுரையும், அவன் ஆட்களும் கொலை வெறியோடு அலையறாங்க” கேட்டபடி எதிரில் அமர்ந்தாள்.
“ஆனா, அவன் ஒரு பாவமும் அறியாதவன்னுல்ல சொல்றானாம்?”
“சொல்வான்… சொல்வான். உங்ககிட்ட சொல்றதுக் கென்ன… பெரியவர் அவசரப்பட்டு அவன்கிட்ட நாகமாணிக்கத்தை கொடுத்துவிட்டுட்டாரு. பின்னாலேயே விஷயம் வெளியே போயிடக்கூடாதுன்னு அவன் மேலே லாரியை ஏத்திக் கொல்ல ஏற்பாடும் செய்துட்டாரு… நான் பதறிப்போனேன். அதெல்லாம் ஒண்ணும் ஆகாதுன்னு சொன்னாரு. ஆனா, இப்ப பாருங்க… அவனால் நானும் சேர்ந்து பாதிக்கப்பட்டு இருக்கேன்.”
லட்சுமி நடந்து முடிந்த தன் டிரெயிலரை நாமகிரியிடம் ஓட்டிக் காண்பித்தாள்.
“ஒரு தப்பு பண்ணுறதுன்னு துணிஞ்சிட்டா அதை மிச்சம் வைக்காம செய்து முடிக்கணும். ஆனா, பெரியவர் மிச்சம் வைச்சுட்டார். அவன் தப்பிச்சதுதான் சிக்கலாயிடிச்சு.”
“நீங்க சொல்றதும் சரிதான் என் அண்ணன் லாரிக்கு ஏற்பாடு பண்ணினப்போ நானும் இருந்தேன். இப்ப அவரும் போயிட்டாரு. ரமேசும் போயிட்டான். நான் இப்ப தனிமரமா ஆயிட்டேன்.”
“கவலைப்படாதீங்க… நடந்தது நடந்துடுச்சி. அவனுக்கு ரமேசை தூக்கணும். என் மக கழுத்துல தாலி கட்டணும்கிறதுதான் நோக்கம். அதுல முதல் விஷயத்துல ஜெயிசுட்டான். ஆனா, என் மக விஷயத்துல நான் அவனை நல்லாவே தோற்கடிச்சுட்டேன்.”
லட்சுமி லகுவாக பிரியா – அர்ஜுன் திருமண விஷயத்துக்கு வந்தாள்.
“அப்படின்னா?”
“என் மகளோடு படிச்ச அர்ஜுன்கிறவனையே என் மகளுக்கு திருப்பதியில் வைச்சு தாலிகட்டும்படி செய்துட்டேன். என்ன… இங்கே நிச்சயம்பண்ண மாப்பிள்ளையோட பொணம் கிடக்கும்போது, அங்கே கல்யாணம் பண்ணுறோமேன்னு மனசு கிடந்து துடிச்சிச்சு. விட்டா இவன்தான் எந்த எல்லைக்கும் போவானே…'”
லட்சுமி – வந்த விஷயம் முழுவதையுமே நேர்த்தியாக, சரியான காரண காரியங்களோடு சொல்லிவிட்டது போல ஒரு பெருமூச்சுவிட்டாள்.
நாமகிரியிடம் ஓர் ஆழ்ந்த மவுனம்.
“என்னம்மா யோசிக்கிறீங்க? நான் துரோகம் பண்ணிட்டதா மட்டும் நினைக்காதீங்க. என்னதான் அழுது புரண்டாலும், நிச்சயம் பண்ணின என் மாப்பிள்ளை ரமேஷ் உயிர் திரும்ப வரப்போறதில்லை. இந்த நிலையில் ராஜதுரையும் ஆள் வைச்சு என் மகளை கடத்திகிட்டுபோய் தாலிகட்டுற எண்ணத்துல இருந்தான்னு தெரிஞ்சிச்சு… அப்பதான் எனக்கு இப்படி ஒரு எண்ணம் தோணிச்சு”.
அந்த பதிலால் நாமகிரியும் சற்று மவுனம் கலைந்தாள்.
“சரி… மகளாவது நல்லா இருக்கட்டும். ஆமா, இந்த ‘கோஷா’ எதுக்கு?”
“அவன்தான் பழிக்குப்பழின்னு ஒரு நூறு பேரை ஏவிவிட்டு இருக்கானே… அவங்ககிட்ட இருந்து தப்பிக்கதான். நாளைக்கு பத்திரிகைக்காரங்களோடு ஒரு சந்திப்பு இருக்கு. அதுல என் மகள் திருமணத்தைப் பத்தி சொல்றதோடு, ராஜதுரையோட கொலை வெறியையும் போட்டு உடைக்கப் போறேன்.”
லட்சுமி அப்படிச் சொன்னதுதான் நாமகிரியை உலுக்கிவிட்டது.
“வேண்டாம் லட்சுமி. அவன் பத்தி எதுவும் பேச வேண்டாம். அவனது கோபத்தை நான் தணிக்கிறேன். அவன் இனி எந்த காலத்துலேயும் உங்க பக்கம் வரமாட்டேன். அதுக்கு நான் பொறுப்பு.”
“அட என்னங்க…. எவ்வளவு பெரியவங்க. நீங்க போய் அவன் கால்ல விழுந்துகிட்டு…”
“வேற வழி… அண்ணன் பண்ணினது தப்பாச்சே. அடுத்து, அவனை குற்றம் சொல்லும்போது நாகமாணிக்கம் பத்தியும் பேச வேண்டியது வரும்.”
“அதுசரி… உங்களுக்கு அவன் கட்டுப்படுவானா?”
“என்ன… கொஞ்சம் பணத்தை கொடுத்தா அடங்கிட்டு போறான்.”
“கோடிக்கணக்கில் கேட்பானே…?”
“பத்துகோடிகூட கேக்கட்டும். கொடுத்துட்டுப் போறேன்”.
“அவனுக்கு அவ்வளவு பெரிய தொகையா?”
“வேற வழி? நீங்க இந்தக் கவலையை விடுங்க. இனி நீங்க உங்க மகள் – மாப்பிள்ளைன்னு நல்லா இருங்க. அப்புறம் என் அப்பா, உங்க மகள் தனக்கு மருமகளாகப் போறாங்கிற எண்ணத்துல, உங்களுக்கு சீதனமா கொடுத்த அந்த நாகமாணிக்கத்தை மட்டும் திருப்பி கொடுத்துடுங்க.
நூறு கோடி ரூபாய்க்கு இலங்கை வியாபாரி அதைக் கேட்டுகிட்டேஇருக்கார். நாகமாணிக்கத்தை தூக்கி அவர்கிட்ட கொடுத்து, பணத்தை வாங்கி, ராஜதுரையையும் நான் சமாதானப்படுத்திடுறேன்.”
நாமகிரி சொல்லி முடித்தாள். ஆனால், லட்சுமியிடம் தான் ஒரு குபீர் திகைப்பு!
அத்தியாயம்-21
‘உங்க அவ்வளவு பேர் சந்தோஷமும், துக்கமும் இப்ப என் கையில… நான் பார்த்து ராஜதுரை பக்கம் சாஞ்சு உங்களை மாட்டிவிடலாம். உங்க பக்கம் சாஞ்சு ராஜதுரையை கதறவிடலாம்!’
திகைப்புடன் மவுனம் சாதித்த லட்சுமியை நாமகிரியும் கூர்ந்துதான் பார்த்தாள்.
“என்னம்மா… என்ன யோசனை?”
“ஒண்ணுமில்ல… அந்த நாகமாணிக்கம் என்கிட்ட வந்த நேரம் எனக்கும் எவ்வளவோ நல்லதெல்லாம் நடந்துச்சின்னுதான் சொல்லணும்.”
“ஆமாமா… அது வேற, மகாலட்சுமி வேற கிடையாதுங்கறதுதானே உங்கப்பா அடிக்கடி சொல்ற வார்த்தை…”
“நீங்களே சொல்லிட்டீங்க மகாலட்சுமின்னு. அப்படிப்பட்ட மகாலட்சுமியை தூக்கி ஓர் இலங்கை வியாபாரிக்கா கொடுக்கப் போறீங்க?”
“வேற என்ன பண்ணச் சொல்றீங்க. இந்த எம்.எல்.ஏ. பய நிச்சயம் சும்மா இருக்கமாட்டான். அப்பாவும் அவன் விஷயத்துல அவசரப்பட்டுட்டாருல்ல… அதுக்கு ஒரு நஷ்ட ஈடு தரத்தானே வேணும்… தந்தால்ல அவனும் சும்மா இருப்பான்.”
“அவன் இனி என்ன செய்ய முடியும்? அதான் ஜமீனையே ஒண்ணும் இல்லாம பண்ணிட்டானே… இனி அவன் பழிவாங்க இங்கே யார் இருக்கா?”
“பழிவாங்க யாரும் இல்லே தான். ஆனா, அவனும்ல நாகமாணிக்கம் மேல ஒரு கண்ணு வெச்சிருக்கான்.”
நாமகிரி காட்டிய அந்த கோணம், லட்சுமியையும் கூர்மையாக்கி இன்னும் தீவிரமாக அவளை யோசிக்க வைத்தது.
“சரிங்கம்மா… நீங்க கிளம்புங்க. நல்ல நேரத்துல அதை கொண்டுகிட்டு வந்து கொடுக்கிற வழியைப் பாருங்க…”
நாமகிரி இனி பேச எதுவுமே இல்லாததுபோல அதுவரை அமர்ந்திருந்தவள் எழுந்து நின்றாள்.
லட்சுமிக்கா புரியாது.
பதில் வணக்கத்தை கூறிவிட்டு கிளம்பினாள்!
சொக்கிகுளம் அம்பாரி மாளிகை! பழைய மிடுக்குக்கு திரும்பி வந்துவிட்டது. மாளிகையை சுற்றி உள்ள மதில்சுவர்களை ஓட்டி இருக்கும் சோடியம் விளக்குகள் ஜெகஜ்ஜோதியாக எரிய மாளிகை முகப்பிலும், நன்கு குலைதள்ளிய வாழை மரங்கள் கட்டப்பட்டிருந்தன. அதுவே பிரியா – அர்ஜுன் திருமணம் முடிந்துவிட்டதை சொல்வதுபோல் இருந்தது.
கமிஷனர் வரை போய் ராஜதுரை மேலேயே புகார் கொடுத்திருந்ததால் வீட்டைச் சுற்றி போலீஸ் பாதுகாப்பு வேறு… பத்திரிகையாளர்களும் எப்படியாவது லட்சுமியைப் பிடித்து சுடச்சுட செய்தியை கறந்துவிட வேண்டும் என்று இருந்தனர்.
லட்சுமியும் அனைத்திற்கும் தயாராகத்தான் இருந்தாள். நாமகிரி, நாகமாணிக்கத்தை திரும்பக் கேட்டது மட்டும் அவளை வருடிக்கொண்டே இருந்தது.
ராஜதுரையும் அதற்கு ஆசைப்படுகிறான் என்பதும் சேர்ந்துகொண்டது. என்னவானாலும் சரி… அதை இழந்து விடக்கூடாது என்றே எண்ணினாள். அதற்கு ஒரே வழி, அந்த இலங்கை வியாபாரியிடம் விற்பதற்கு நானே விலைக்கு வாங்கிக்கொள்கிறேன் என்று கூறுவதுதான்…!
நாமகிரி பேசியதை வைத்துப் பார்த்தபோது பணத்தை யார் கொடுத்தாலும் அவர்களுக்கு அவள் நாகமாணிக்கத்தை கொடுத்துவிடுவாள் என்கிற தொனியே அதில் தூக்கலாக இருப்பது அவளுக்கும் புரிந்திருந்தது.
இப்படி மனம் முழுக்க நாகமாணிக்கத்தின் மேலேயே இருக்க – ‘கோஷா’ உடையில் அவள் அம்பாரி மாளிகைக்குள் நுழைந்து காரைவிட்டு இறங்கவும், பத்திரிகையாளர்கள் காத்திருந்த மாதிரி வளைத்துக்கட்டி படம் எடுத்தனர்.
“என்ன மேடம்… மதம் மாறிட்டீங்களா?” என்று கூட ஒரு குறும்புகார நிருபர் கேட்டுவிட்டார். ஆனால், லட்சுமி அதற்காக கோபிக்கவில்லை.
“உங்களை எல்லாம் ஒரு அஞ்சுநிமிடத்துல சந்திக்கிறேன். அப்ப விவரமா சொல்றேன்…” என்று உள்ளே சென்றாள்.
சிட்டிபாபுவும் அவர்கள் அவ்வளவு பேரையும் ஹாலின் மையத்தில் அமர வைக்க ஆரம்பித்தான்.
மாடியில் பிரியாவை கொஞ்சிக் கொண்டிருந்த அர்ஜுனுக்கும், பிரியாவுக்கும்கூட இன்டர்காமில் அழைப்பு வைத்தான்.
“மாப்பிள்ளை சார்… பத்திரிகையாளர் சந்திப்பு நடக்க இருக்குது, ஐந்து நிமிடத்துல நீங்க தயாராகிட்டா நல்லா இருக்கும்…”
“நான் மட்டுமா? பிரியாவுமா?”
“இரண்டு பேரும்தான் சார்…”
அர்ஜுன், பிரியாவை தயார்படுத்திவிட்டு -அனை வருக்கும் காப்பி கொடுக்க அடுத்து சமையல்காரனை அழைத்தான்.
அவனும் காப்பியோடு வரவும், லட்சுமியும் வந்து சேர்ந்தாள்.உடைமாற்றிக் கொண்டு பார்ப்பதற்கும் சற்று பதற்றத்தோடு தெரிந்தாள். பிரியாவும், அர்ஜுனும் வந்து அவளருகில் அமர்ந்துகொள்ள பத்திரிகையாளர்கள் கூட்டம் தொடங்கியது.
”உங்க எல்லாருக்கும் வணக்கம். சமீபத்தில் தான் உங்களை எல்லாம் சந்திச்சேன். அந்த கூட்டத்துலகூட என் மகளோட கல்யாணம் பத்தி நீங்க பலவிதமா கேட்டப்போ, நான் ஒரே பதிலைத்தான் சொன்னேன். என் மகள் பிரியாவுக்கும், நரிக்குடி ஜமீன்தார் நல்லமணி ஐயா பேரன் ரமேசுக்கும்தான் கல்யாணம்னு நான் அப்ப சொல்லி இருந்தேன். படிச்ச நண்பன் அர்ஜுனே கணவனா வரக்கூடிய ஒரு சூழ்நிலை இப்ப ஏற்பட்டுடிச்சி.
லாரி விபத்துல ரமேஷ் மரணமடைவாருன்னோ, அதனால நரிக்குடி ஜமீனே அழிஞ்சு போகும்னோ நான் கனவுல கூட நினைக்கல.
மாஜி எம்.எல்.ஏ. ராஜதுரைக்கும், நரிக்குடி ஜமீன்தாருக்கும் ஏதோ மனவருத்தம். அது ரமேஷ் கொலை வரை போயிடிச்சு.
அந்த ராஜதுரை, ரமேஷை மட்டும் குறிவைக்கல… என்னையும், என் மகளையும்கூட குறிவெச்சான். அவன் கண்ணுல மண்ணைத் தூவத்தான் நான் ‘கோஷா’ போட்டுகிட்டு திரியும்படியா ஆயிடுச்சு.
நான் எப்பவும் எதுக்கும் அஞ்சாதவ… ஆகையால ராஜதுரைக்கும் பயப்படலை. ராஜதுரைக்கு உடனடியா பாடம் கற்பிக்க ஆசைப்பட்டேன். குறிச்ச முகூர்த்தத்துல என் மகள் திருமணமும் கட்டாயமா நடக்கணும்னு நான் முடிவு செய்தேன். எனக்கு அர்ஜுன் கைகொடுத்தார். நான் நினைச்ச மாதிரி அதே முகூர்த்தத்துல என் மகளுக்கும், அர்ஜுனுக்கும் திருமணம் நடந்து முடிஞ்சிடிச்சு. அவங்க திருமண வரவேற்பு கூடிய சீக்கிரம் தடபுடலா நடக்கப் போகுது. உங்களுக்கெல்லாம் கட்டாயமா அழைப்பு வரும். நீங்க எல்லாம் கலந்துகிட்டு மணமக்களை வாழ்த்தணும்னு கேட்டுக்கறேன்.
இப்ப உங்களுக்கு என்ன கேக்க தோணுதோ கேக்கலாம்.”
லட்சுமி கச்சிதமா பேசி முடித்தாள். ஒரு நிருபர் காத்திருந்தது போல ஆரம்பித்தார்.
“மாஜி எம்.எல்.ஏ. ராஜதுரைக்கும், உங்களுக்கும் அப்படி என்ன பகை?”
“எனக்கும் ராஜதுரைக்கும் ஒரு பகையும் இல்லை. அவருக்கும், நல்லமணி ஐயாவுக்கும்தான் ஏதோ சிக்கல். அந்த குடும்பத்தோடு நான் சம்பந்தம் வைச்சுக்க விரும்பினதால என்மேலேயும் கோபம் வந்திருக்கலாம்.”
“அதுக்காக அவர் கொலை செய்யிற அளவுக்கா போவார்?”
“போயிருக்காரே… எங்க மேலேயும் மோதுகிற அளவுக்குல்ல லாரிங்க வந்துச்சு…”
“ஆனா, ரமேஷ் வரையில் நடந்தது ஒரு எதிர்பாராத விபத்துன்னு லாரி டிரைவர் வாக்குமூலம் கொடுத்திருக்காரே?”
“எந்த கொலைகாரன் எந்த காலத்துல ‘நான்தான் கொலை செய்தேன்’னு ஒத்துகிட்டு இருக்கான்?”
“அப்ப இப்பவும் நீங்க உங்க குற்றச்சாட்டுல உறுதியா இருக்கீங்களா?”
“நிச்சயமா… ராஜதுரைக்கு தண்டனை கிடைக்கிற வரை நான் விடமாட்டேன்.”
“நரிக்குடி ஜமீன்தார் பேரனுக்கு நிச்சயம் பண்ணிட்டு எப்படி ஒரு சாதாரண நபருக்கு உங்க மகளைக் கட்டிக் கொடுக்க சம்மதிச்சீங்க?”
“ரமேஷை கல்யாணம் பண்ணிக்க சொல்லி நான் கேட்டப்போ, என் மகள் சம்மதிச்சாள். அது இனி நடக்க சாத்தியமில்லாம போனப்போ அர்ஜுன்தானா முன்வந்தார். என் மகளும் ஆசைப்பட்டா. ஆகையால் என் விருப்பத்துக்கு, நான் பதிலுக்கு சம்மதம் சொல்லிட்டேன்.”
“அவங்க ஏற்கெனவே காதலர்கள்னு நாங்க கேள்விப்பட்டோம். இந்தக் கல்யாணம் பிடிக்காம உங்க மகளே வீட்டைவிட்டு ஓடிட்டதாகவும் நாங்க கேள்விப் பட்டோம். ஆனா, நீங்க சொல்றதுக்கும், நாங்க கேள்விப் பட்டதுக்கும் ரொம்ப இடிக்குதே… “
“நீங்க ஆயிரம் கேள்விப்படலாம். அது அவ்வளவும் உண்மையா இருக்கணும்னு கட்டாயமில்லை.”
லட்சுமி, இனி பேச எதுவுமில்லை என்பது போல எழுந்து புறப்பட தயாரானாள்.
பத்திரிகையாளர்களும் பிரியா – அர்ஜுன் இருவரையும் புகைப்படங்கள் எடுக்கத் தொடங்கினர்.
ஒரே ‘பிளாஷ்’ மழை!
மாலை பத்திரிகைகளில் எட்டு பத்தி செய்தியாக லட்சுமி கூறியிருந்தது வெளியாகி இருந்தது. செய்தியை யொட்டி பிரியா – அர்ஜுன் இணைந்து நிற்கும் படம்!
‘மாஜி எம்.எல்.ஏ. ராஜதுரை ஒரு கொலையாளி!’ ‘லயன்’லட்சுமி பகிரங்க குற்றச்சாட்டு
என்று கொட்டை எழுத்து செய்தி மின்னியது.அந்த செய்தித்தாள் ராஜதுரை கைகளிலும் இருந்தது. அவர் கண்களில் இரத்தச் சிவப்பு.
“அண்ணே… லட்சுமி துணிஞ்சிட்டாண்ணே… பதிலடியை நீங்க இந்தத் தடவை தெளிவாகொடுக்கலைன்னா அம்புட்டுதான்” என்று உதவியாளனும் ஏற்றிவிட்டுக் கொண்டிருந்தான்.
“முதல்ல சாமியைக் கூப்பிடுடா…”
“அட போங்கண்ணே… அவரு ‘வேஸ்டு’ண்ணே!”
“கூப்பிடுடான்னா…”
“என்னண்ணே நீங்க… நாகமாணிக்கக்கல் அவகிட்ட இருக்கிறதால அவதான் ஜெயிப்பாள்னு உங்ககிட்டையே சொல்ற அவர்கிட்டேயே போறது நல்லாவா இருக்கு?”
“அவரைவிட்டா இப்ப நமக்கு உதவி செய்ய யாருடா இருக்கா?”
“அப்படின்னா அவர்கிட்ட இந்தத்தடவை வெட்டு ஒண்ணு, துண்டு ரெண்டுன்னு சொல்லிடுங்க.”
“சொல்லத்தான் போறேன். முதல்ல அவருக்கு போன் போடு.”
ராஜதுரையின் கட்டளை செயல்வடிவம் பெற்றது. ஆனால், மறுபக்கம் செல்போனை சாமி அணைத்து வைத்திருக்கும் பதிலே வந்தது.
“அண்ணே… அவர் ரொம்ப விவரம் -எப்படியும் அவரைகூப்பிட்டு கதறுவீங்கன்னு தெரியும் போல அதான் ‘சுவிட்ச் ஆப்’னு வருது. “
”சேச்சே!” – ராஜதுரைக்கு விரக்தியும், கோபமும் கலந்து வந்தன.
“எனக்கென்னமோ சாமியார் இப்ப நேரா லட்சுமியை பார்க்க போயிருப்பாருன்னுதான் தோணுது. ஏன்னா அவரும் நாகமாணிக்கக்கல்லுக்காகத்தானே அலையறாரு?”
ராஜதுரையின் அடியாள் ஒருவன் சரியாகவே யூகித்திருந்தான். அவன் யூகப்படியே சாமியாரும் லட்சுமி வீட்டில்தான் இருந்தார்!
சாமியாரைப் பார்த்த லட்சுமிக்கு கொஞ்சம் சங்கடமாகவும் இருந்தது. சந்தோஷமாகவும் இருந்தது.
“வாங்க சாமி… எங்க இவ்வளவு தூரம்?”- லட்சுமி சர்வசாதாரணமான ஒரு பாவனையுடன் கேட்டாள்.
“ஏம்மா உங்களை பார்க்க நான் வரக்கூடாதா?”
“என்னைப் பார்க்க யார் வேணும்னாலும் வரலாம். ஆனா, நீங்க போன தடவை போனப்போ நான் அடுத்து கூப்பிட்டாதான் வருவேன்கிற ஒரு தொனி உங்ககிட்ட இருந்தது. அதான் இப்ப நீங்களா வரவும் எனக்கு ஒரே ஆச்சரியம்.”
“நான் ஒண்ணும் நானாக வரலை லட்சுமியம்மா… இப்போ அந்த ராஜதுரையோட ஒரு தூதனா வந்திருக்கேன்.”
“அடடே… எம்.எல்.ஏ. சார் சமாதான தூது அனுப்பி இருக்காரா? பலே..”
“தப்பும்மா… அவர் உங்களை எச்சரிக்கைதான் பண்ண சொல்லி இருக்கார்.”
“என்ன அந்த ராஜதுரை சும்மா மிரட்டிப் பார்க்கிறானா?”
“நிச்சயமா இல்லை. ராஜதுரை நிஜமா ஒரு இறுதி முடிவோடு தான் இருக்காரு. அவர் உங்களுக்கும், அந்த நல்லமணிக்கும் நடுவுல ஒரு பாலமா இருந்தவர். ஆனா, அந்த பாலத்தையே நீங்க உங்க சுயநலத்துக்காக இடிக்க நினைச்சீங்க. நல்லவேளை… அதுல அவர் தப்பிச்சிட்டார். இப்ப அவர் உங்களை பதிலுக்கு இடிக்க நினைக்கிறார்.”
“தப்பு சாமி…ராஜதுரை விஷயத்துல நான் எந்தத் தப்பும் பண்ணலே. நல்லமணி ஐயாதான் அவசரப் பட்டுட்டாரு… ராஜதுரை, ரமேஷை பழிவாங்கினது வரைதான் சரி. ஆனா, என்கிட்டேயும் மோத நினைக்கிறது முட்டாள்தனம்.”
“இப்ப நீங்க எந்த நியாய அநியாயத்தையும் பேச முடியாது லட்சுமியம்மா. விஷயம் கைமீறி போயிடிச்சு. அந்த டிரைவர் வரைல அவனை கட்டிப் போட்டது நான்தான். அது ஒரு வசியக்கட்டு. அதை அவிழ்க்க எனக்கு ஒரு நொடி அதிகம். அப்படி அவுத்து, ‘லாரியை ஏத்தி ரமேஷை கொலை செய்யச் சொன்னது நீங்கதான்’னு டிரைவர் சொன்னா – உங்க நிலை என்னாகும்னு நீங்க யோசிச்சு பாருங்க.”
சாமியார் மெதுவாக லட்சுமிக்கு ‘செக்’ வைத்தார். அது அவளை சற்று அதிரவும் வைத்துவிட்டது. இருந்தும் காட்டிக் கொள்ளாமல் நிமிர்ந்தாள்.
”சாமி… என்ன சாமி வசியக்கட்டு அது இதுன்னு மிரட்டிப் பார்க்கிறீங்களா? ரமேஷ் என் மாப்பிள்ளையாக வேண்டியவர். என் மாப்பிள்ளையை கொல்ல நானே முயற்சி செய்வேனா?
கேழ்வரகுல நெய்வடியுதுன்னு நீங்க சொல்லலாம். கேட்கிறவங்களுக்கு புத்தி எங்கே போச்சுன்னு திருப்பி கேப்பேன்ல?”
சாமியார், லட்சுமியின் பதிலுக்கு அமர்த்தலாக ஒரு சிரிப்பு சிரித்தார். பின் –
“அம்மா… இப்ப ஒரு பையனுக்கு உங்க பொண்ணை அவசர அவசரமா கட்டி வைச்சிருக்கீங்க. உங்க பொண்ணுக்கும், ரமேஷ் மேல விருப்பம் இல்லை. இந்த நிலையில் பொண்ணு விருப்பத்துக்காகவும், நாளைக்கு ரமேஷ் உங்களை தொந்தரவு பண்ணக்கூடாதுங்கிறதுக் காகவும், குறிப்பா அந்த நாகமாணிக்கக் கல்லை அமுக்கு கிறதுக்காகவும்தான் நீங்க டிரைவரை ஏவிவிட்டீங்கன்னு சொன்னா யார் தரப்பு எடுபடும்னு நீங்களே யோசிச்சிக்குங்க.”
சாமியார் பதில் லட்சுமிக்குள் இரைச்சலை உண்டு பண்ணியது.
“என்ன சாமி ஒரு முடிவோடு தான் வந்திருக்கீங்களா?”
“ஆமாம்மா. இப்ப உங்க அவ்வளவு பேர் சந்தோஷமும், துக்கமும் என்கைல… நான் பார்த்து ராஜதுரை பக்கம் சாஞ்சு, உங்களை மாட்டிவிடலாம். உங்க பக்கம் சாஞ்சு, ராஜதுரையை கதறவிடலாம். நான் இனி எப்படி நடந்துக்கணும்கிறது உங்க கைலதான் இருக்கு?”
“சரி சாமி… உங்களுக்கு என்ன வேணும்? விஷயத்துக்கு வாங்க.”
“தெரியாத மாதிரி கேட்டா எப்படிம்மா? என் வரையில் உங்க கைல இருக்கிற நாகமாணிக்கம் எல்லையில்லாத சக்தி கொண்டது. அது ஒரு மண்டல காலம் எனக்கு தேவை. அதை நீங்கதர்றேன்னு சொன்னா நான் உங்க பக்கம். ராஜதுரை தர்றேன்னு சொன்னா நான் ராஜதுரை பக்கம்.”
“என்கிட்ட இருக்கிறதை ராஜதுரை எப்படி சாமி தரமுடியும்?”
“லாரி டிரைவர் அவன் ஆளும்மா… நான் இப்ப சொன்ன மாதிரி அவன் சொன்னா உங்க கதியை யோசிச்சு பாருங்க.”
“என்கிட்ட நாகமாணிக்கம் இருக்கும்போது என்னை இன்னொருத்தர் இப்படி பயமுறுத்தி ஜெயிக்க முடியும்னு நம்புறீங்களா?”
“எங்க… அதைதான் நரிக்குடி ஜமீன்ல திருப்பிக் கேட்டுட்டாங்களே… அது அவங்க சொத்தாச்சே?”
“இருக்கலாம். ஆனா, நான் அதை அவங்களுக்கு கொடுத்தாத்தானே?”
“அப்படின்னா?”
“அதுக்கு ஐம்பது கோடி ரூபாய் விலை சொல்லி இருக்காங்க. அதை நான் கொடுத்துட்டா?”
‘லயன்’லட்சுமி கேட்டது – சங்கரானந்த சாமிகளையே சற்று வாயடைக்க வைத்தது.
அதேநேரம், பக்கத்து அறையில் அமர்ந்துகொண்டு அவர்களின் வாக்குவாதத்தைக் கேட்டபடி இருந்த அர்ஜுன் முகத்தில் ஏராளமான அதிர்ச்சி!
– தொடரும்…
– யாரென்று மட்டும் சொல்லாதே… (நாவல்), முதற் பதிப்பு: 2009, திருமகள் நிலையம், சென்னை.