கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: அமானுஷம்  
கதைப்பதிவு: December 21, 2015
பார்வையிட்டோர்: 50,264 
 
 

( ம்ம்..ம்ம், பேய் பிசாசுகள்,செய்வினை,சூனியம்,வசிய மந்திரம் பற்றிக் கேள்விப் படடிருக்கிறுர்களா?)

இரத்தம் கசிய மணலில் விழுந்து கிடந்த பூசாரி வேலுப்போடியை கடல்நாச்சியம்மன் சடங்குக்கு வந்திருந்த ஊர்மக்கள் அலட்சியமாகப்பார்த்தார்கள்.

வாயு பகவான் அசையாமல் மௌனமானான். கடல்நாச்சியம்மனின் கைகள் என மக்களால் மதிக்கப்படும் கடல் அலைகள் பொங்ஙியெழுந்து ஆரவாரித்து இந்த ஊரைத் தன் மந்திர தந்திரத்தால் அடக்கி வைத்திருந்த பூசாரி வேலுப்போடி, இன்றைய சடங்கின் போது ‘உரு’ வந்த தெய்வங்களிடம் அடி படுவதும் உதை வாங்குவதும் தர்மமான விடயம்தான் என்று சொல்வதுபோல் வானத்தை நோக்கித்தன் ஆயிரம் கைகளையுயர்த்தி ஆரவாரித்;தாள். ஆகாயத்தில் ஆயிரம் நட்சத்திரங்கள்; ஆனந்தத்துடன் ஜொலித்தன.

இதுவரைக்கும் இந்தப் பூசாரிக்குப் பயந்து போய் அவன் எதிரில் வராத பூசாரியின் மனைவி சந்திரவதனா தைரியமாகப் பூசாரியின் மடைப்பெட்டியுடன் ஊர்மக்கள் முன்னிலையில் நின்றாள். அவள் தோற்றம் பக்கத்தில் உள்ள சுடலையில் பேய்களின் தலiவியெனப்படும்; சுடலைக்காளியைக் போலிருந்தது.

அந்த ஊரில் ஒரு காலத்தில் பேரழகியாய் வலம் வந்த சந்திரவதனா இப்போது பேரழகியாகத்தெரியவில்லை. ஒரு பயங்கர அசுரனின் தலையை, ஆவேசச்சத்துடன் கொய்ய, கடலலையின் பின்னணியின் ஆசீர்வாதத்துடன் வந்த அம்மனாய் அவதரித்திருந்தாள்.
தலைமுறை தலைமுறையாய் பூசாரி வேலுப்போடியின் பரம்பரைச்சொத்தாய் வைத்துப் பாதுகாக்கப்பட்டிருந்த -பெண்கள் கைகளால் இதுவரை தொடப்படாத கடல்hநச்சியம்மனின் சிலை வைக்கப் பட்டிருந்த மடைப்பெட்டி சந்திரவதனாவின் கைகளால் பக்தியுடன் கடல்நாச்சிக்குப் படைத்து வைத்திருந்த மடையில் வைக்கப்பட கொண்டு வரப்பட்டிருந்தது.

பூசைக்காக ஒன்பது மடைகள் படைக்கப்பட்டிருந்தன. ஒவ்வொரு மடையும் தாமரைப்பூக்கள், தாழம்பூக்கள், தென்னம்பூக்கள், முக்கனிகள், பலகாரங்கள், என பலதரப்பட்ட பூசைச்;; சாமான்களால் படைக்கப்பட்டிருந்தன.

கடற்கரையில் பூசைக்காகத் தெரிவு செய்யப்பட்ட இடத்தில்,மந்திரம் ஓதி,கால்நால்;கிளை நட்டு, பல தரப்பட்ட விதத்தில் தென்னோலை அலங்காரங்கள் செய்து பெரிய மண்டபம் செய்திருந்தார்கள்.

பூசை செய்யும் பூசாரிகள் தவிர யாரும் அந்தப்பூசை மண்டபத்துள் நுழைய முடியாது.

‘தெய்வ உரு’ வந்த தெய்வங்களும் மண்டபத்தின் வாயில் அமர்ந்துதான் தெய்வமாடுவார்கள்.

அந்த வாசலில் சந்திர வதனா மடைப் பெட்டியுடன் நின்றிருந்தாள்.பூசாரி வேலுப்போடியின் புனிதமான பொக்கிஷம் அந்தப்பெட்டி. அந்தப் பெட்டியுள் இருக்கும் அம்மன் சிலை அந்த ஊருக்கு வந்ததே ஒரு சரித்திரம்.

இலங்கையில் கண்டி இராச்சியத்தை ஆண்ட சில மன்னர்கள் கேரள நாட்டைச் சேர்ந்தவர்கள். அவர்கள் அழைப்பின் நிமித்தம் பல தெய்வ சிலைகளுடன் படகுகளில் வந்த பிராமணர்களின் படகு கடற் புயலால் உடைந்து சிதறியபோது,இலங்கையின் கிழக்குக் கடற்கரையில் கரை தட்டிய சிலைதான் அந்த அம்மன் சிலை என்பது ஐதீகம். அந்தச் சிலைக்கு ஆதி அந்தம் கிடையாது. மிக மிக அற்புத சக்தியைக் கொண்ட அம்மனை வைத்துப்பூசை செய்து பலன் கண்டோர் பலர்.

அம்மன் சிலையை வைத்திருக்கும் அந்தப்பெட்டியை வைத்திருந்த பெருமையால் ஊர் மக்களின் மதிப்பு மரியாதைக்கும் பயத்திற்கும் உரியவராய் ‘மேதகு வேலுப்போடி’ என்று மரியாதையாக அழைக்கப்பட்ட பூசாரி இப்போது, ஆயுதமிழந்த இராவணனாய்-யாருமற்ற அனாதையாய,; மணலில் வீழ்ந்ததை யாரும் எதிர் பார்க்கவில்லை.

ஒரு விதத்திற் பார்த்தால் பூசாரி விழுந்தபோது ஊர் மக்கள் ஆச்சரியப்படவுமில்லை.

ஆறுதலாக யோசித்துப்பார்த்தால் கடந்த சில வருடங்களாக நடக்கும் விடயங்கள் இந்த அதிர்ச்சியான காட்சிக்கு முனனோடியாயிருந்தன என்பது புரியும்.

அந்த ஊரின் விசேடமான கடல்நாச்சியம்மன் சடங்கை வேலுப்போடி தவிர எந்த மந்திரவாதியும் இதுவரை செய்தது கிpடையாது. செய்ய உரிமையும் கிடையாது. அந்த உரிமை பூசாரி வேலுப்போடிக்குத்தானுண்டு.

தனது மடைப்பெட்டியை எடுத்துக்கொண்டு சடங்கு செய்ய முன்னிற்கும் அந்த இளைய பூசாரியையோ, அல்லது ஒரு காலத்தில் தன் உத்தரவுக்குப் பணிந்தவர்களாயிருந்து இன்று அந்தப்பூசாரியுடன் உதவிக்கு நிற்கும் எத்தனையோ இளம் பூசாரிகளையோ ஏறிட்டுப்பார்க்க வேலுப்போடியால் முடியவில்லை.

விழுந்து கிடந்த வேலுப்போடி அந்த இளம் பூசாரியைச்சுற்றி நிற்கும் ‘உரு வந்த தெய்வங்களையும்’ தன் கடைக்கண்ணால் பார்த்தான்.
அந்தத் தெய்வங்களில் பலர் இதுவரையும் வேலுப்போடிப்பூசாரியால் ‘தெய்வம் ஆடமுடியாது’ என்று ’மந்திரத்தால் கட்டி’ வைக்கப்பட்டிருந்தவர்கள்.

தெய்வமாடும் பலர் பெண்கள்.தீட்டு நின்று போனவர்கள். விதவையானவர்கள்.

வயதுபோனவர்கள்;;.வாழாவெட்டிகள.;

கன்னி கழிய முதல் இளம் பெண்களைத்தெய்வமாட அனுமதிக்கப்படமாட்டார்கன்.

அதனால் இளம் பெண் ‘தெய்வங்களை’ மந்திரம் சொல்லிக்கட்டி வைத்து விடுவார்கள். ஆனால் ஊரில் பல பெண்களைத் தெய்வமாடாமல் ‘கட்டி’ வைத்ததற்குப் பல காரணங்களுமுள்ளன என்பது ஊரறிந்த இரகசியங்களிலொன்று.

இன்று ‘தெய்வ உரு’வந்து தெய்வமாட வந்திருப்பவர்களில் ஒரு இளம் பெண்-அவரின் இரண்டாவது மகள் பூரணி.
அவளுக்குத் தெய்வம் வராமல் கட்டிப்போட்ட மந்திரத்தை,’அவிழ்த்து’ விட்ட இளம் பூசாரியாய் முன் நிற்பதோ வேலுப்போடியின் தம்பி காசிப்போடி. உருத்திராட்ச மாலையணிந்து, உடலெங்கும் பட்டை பட்டையாய்த் திருநீறு பூசி,பெரிய சந்தன குங்குமப பொட்டு வைத்து, சிவப்புப் பட்டுக்கரை போட்ட வேட்டியணிந்து, ஒரு கையில் அளவு கடந்தாடும் ‘தெய்வங்களை’ அடக்க வைத்திருக்கும் சாட்டை அடுத்த கையில் பூசைமணியுடன் காசிப்போடி நின்றிருந்த காட்சி மெய் சிலிர்க்கப் பண்ணியது. அவன் தந்த தைரியத்தில் பூரணி,மஞ்சள் தோய்த்த இளம் சிவப்புச்சேலையணிந்து,கையில் பெரிய வேப்பங்கொத்துடன, கண்களில்; ‘உரு’ வந்து கொண்டிருக்கும் உக்கிரத்துடன் நின்று கொண்டிருந்தாள்.

பூரணியைச் சுற்றிச் சில இளம் ஆண் தெய்வங்களும் நின்றிருந்தார்கள்;;.

அதில் ஒரு ‘ஆண் தெய்வம்’ மிகவும் சக்தி வாய்ந்தது என்று ஊரில் சொல்லிக் கொள்வார்கள். அந்த ஆளுக்கு உரு வரும்போது அவர் வாய் மூலம் ‘தெய்வங்கள்’ பேசுவது மட்டுமல்லாது யாரும் செய்வினை செய்திருந்தால் அந்தச் செய்வினைச் சாமான் எங்கே புதைத்து வைத்திருக்கிறார்கள்; எனவும் காட்டிக்கொடுக்குமாம் என அந்த ஊர்மக்கள் நம்பினார்கள்.

பூசை செய்யும்போது மந்திர உச்சாடனத்தின் மகிமையால் உரு வந்து சில ஆண்களும் தெய்வமாடுவார்கள். ஆண்களைப்பொறுத்தவரை வயதுப் பிரச்சினை கிடையாது.

மடை வைத்துப்பூசை நடக்கும்; போது கள்ளுக்குடித்து. கஞ்சா றொட்டி சாப்பிட்டு விட்டு வந்த சிலருக்குப் போதையில் உரு வந்து ‘தெய்வமாடி’ அல்லது ‘பேயாடி’ சடங்கைக் குழப்புவதுமுண்டு.

இந்தத் தொல்லையால் சில குறிப்பிட்டோருக்கு சடங்கு நேரத்தில் தெய்வம் வராமல் ‘மந்திரம் சொல்லிக் கட்டி’ வைத்து விடுவார்கள்.
அத்துடன் தனக்குப்பிடிக்காத சில ஆண்களுக்கும் சில பெண்களுக்கும்; தெய்வம் வராமல் பூசாரியார் ‘கட்டி’ வைத்திருப்பதைத் தடுக்கவோ அந்த மந்திரத்தை மாற்றவோ இதுவரை யாருக்கும்; தைரியம் வரவில்லை.

அத்துடன் அக்கிராமத்திலோ அல்லது அடுத்த கிராமித்திலோ மந்திரம் படித்து பிழைப்புச்செய்ய முனைந்தவர்கள் பூசாரி வேலுப்போடி ஏவி விட்ட, காடேறிப்பேய், சத்துராதிப்பேய்,சென்னிப்பேய் போன்ற பல பேய்களால் தாக்கப்பட்டு காய்ச்சலில் பிதற்றியோ இரத்த வாந்தியெடுத்தோ அல்லது சட்டென்று வந்த இரத்தத்தோடு சேர்ந்து போகும் வயிற்றுப்போக்காலோ அல்லது கை,கால் வழங்காத வாதம் வற்தோ இறந்து விடுவார்கள.; வாந்தியும் வயிற்றுப் போக்கும் நீண்ட நாள் நிலைத்தால் வயிறு புண்ணாகி இரத்தம் போகும் என்ற விஞ்ஞான உண்மையை அவர்கள் ஒப்புக்கொள்வதில்லை.

பேய்களில் உள்ள நம்பிக்கை அத்தனை தீவிரம்.

ஊரில் பல பேய்கள் உள்ளன.

நாவல் மரங்களில் குடியிருந்துகொண்டு இரவில் நித்திரை மயக்கத்திலிருக்கும் குழந்தைகளைக் கடத்திக்கொண்டுபோய் இரத்தம் குடிக்கும்; சங்கிலிமாடன,; குறும்பறையன், ஊர் எல்லைகளிலுள்ள பெரிய ஆலைமரம் அல்லது வாகை மாங்களில் வாழும் காடேறிப்பேய,; வேப்ப மரங்களில் குடியிருக்கும் உச்சியில் பிடித்தபேய், சின்னவள், ஆலமரப்பேய,; இறநதவர்களின் ஆவியாய்த்திரியும் பஞசமிப்பேய,; வயற்கரைகளிற் திரியும் கொள்ளிவாய்ப்பேய், கல்யாணமாகாத இளம் ஆண்களையும் பெண்களையும் மோகப் பைத்தியங்களாக்கும் மோகினிப்பேய், மாய வித்தைகளைச் செய்யும் குறளிப்பேய் என்பது போன்ற எத்தனையோ பேய்கள் பூசாரி வேலுப்போடியின் மந்திரத்திற்குப் பயந்து அடங்கி விடுவார்களாம்.

வேப்ப மரம் ஆலை மரம் போன்ற மரங்களில் வாழும் சில பேய்கள் மரங்களை விட்டு இறங்காமலும் வாழ்வதாகவும் இறங்கிய பேய்கள்,பூசாரி வேலிப்போடிக்குப் பயந்து காடுகளுக்குள் ஓடிவிட்டதாகவும் ஊரில் பேசிக்கொண்டார்கள்.

சுடலையில் ஆட்சி செய்யும் சுடலைமாறன், சுடலைவைரவர், சுடலைக்காளி,பிணம்தின்னிப்பேய் என்ற பயங்கர பேய்கள் எல்லாம்
வேலுப்போடியின் மந்திரத்திற்குப்; பயந்து நடுங்குவதாக நம்பினார்கள்.

உருத்திராட்~ மாலையணிந்த,உயர்ந்த, மெல்லிய உடல்வாகுடன்,பட்டடை பட்டையாய்த் திரு நீறு பூசிய கறுத்த தோற்றமுடைய முறுக்கிய சண்டியன் மீசையுடன் இரு நெருப்புத்தணல்களைக் கண்களாகக்கொண்ட வேலுப்போடியைத் இரவின் தனிமையிற் சந்திக்க,ஊரிலுள்ள இரும்பு மனமுடைய இளைஞர்களும் தவிர்த்து விடுவார்கள்.

தனது பயங்கர தோற்றத்திற்கும், கணீர் என்ற உடுக்கு சத்ததிற்கும,; தன் கம்பீரமான மந்திர உச்சாடணத்திற்குப் பயந்தவர்கள், இன்று விழுந்து கிடக்கும் பழைய பூசாரி வேலுப்போடிக்கு முன்னால் இப்போது ஊர் மக்களால் சட்டென்று தெரிவு செய்யபட்ட புதுப் பூசாரி காசிப்போடி தலைமையில் குழுமி நின்றார்கள்.

‘ஆதி முத்து மாரி அங்காள மாதேவி மகமாரி சுகுமாரி’ என்று உரத்த குரலில் ஒரு கூட்டம் பக்தியுடன் பாடிக்கொண்டிருந்தது.
மத்தள ஓசைகள், பூசைமணியோசைகள்,வேப்பிலையாட்டங்கள்,கடலலையின் மெல்லிய ஓசை,இரவு வளர்த்த இருள், பக்கத்துச் சுடலை என்பன சேர்ந்து, பக்தி கலந்த ஒருவிதமான பயங்கர உணர்வைத்தந்தது.

அந்த ஊர,; பேய் பிசாசு, செய்வினை சூனியம், வசியம,; மந்திரம் மாயை என்பவற்றில் மிகப் பெயர் பெற்றது.

வடக்குப்பக்கம் அக்கரைப்பற்றுப் பட்டணத்தையும,; தெற்கிலும் கிழக்கிலும் தில்லையாற்று நதியையும,; அதைத் தாண்டி வங்காள விரிகுடாக் கடலையும், மேற்கி;ல் பெரும் மலைத் தொடர்களையும,; எல்லையாகக் கொண்ட அந்த அழகிய கிராமம,;பழம் பெருமை வாய்ந்த தென்மோடிக் கூத்தை அரங்கேற்றுவதிலும், நாட்டுப்பாடல்களிலும் மட்டுமல்லாமல் மந்திர மாயைக்கு பெயர் போனது.
பைத்தியம் தொடக்கம், வைற்றுப்போக்கு,வாதநோய்கள், பாம்புக்கடி வரை வைத்தியம் கிடைக்கும் பூமியது.

மட்டக்களப்பு எட்டுப்பகுதிகளிலும;,கோளாவில் என்ற இந்த ஊரின் பெயரைச்சொன்னாலே மரியாதை கலந்த பயம் வரும். இந்த ஊராருடன் பகைத்துக்கொள்ள யாரும் விரும்ப மாட்டடார்கள்.

எதிரிக்குச் செய்வினை சூனியம் செய்தும் பேய்களை ஏவி விட்டு வதைப்பதிலலும் அந்த ஊர்ப் பூசாரிகள் பலர் பிரசித்தமானவர்கள்.
அந்த ஊர் மக்கள் மந்திர மாயையில் வைத்திருக்கும் நம்பிக்கை எந்த விஞ்ஞானியாலும் மாற்ற முடியாதது.

அதிலும் கடந்த சிலவருடங்களாகப் பூசாரி வேலுப்போடியின் மகிமை பல காரணங்களால் மிக உன்னத நிலைக்கு உயர்ந்திருந்தது.
அரசியல் காரணிகளால் அந்த ஊர் மக்கள் பட்ட அல்லல்கள் எத்தனையோ. சிங்கள இராணுவத்தாலும் இயக்கங்கள் ஒருத்தரை ஒருத்தர் அழித்துக் கொண்டபோதும் அகால மரணமடைந்த இளைஞர், இளைஞிகள் எத்தனையோ பேர். அவர்களின் ஆவிகள் ஊரில் பலபேரைப் பிடித்துக் கொண்டு பல வருத்தங்களைக் கொடுத்தன.

பட்டினி பசி எனபவற்றால் வந்த நோய் நொடிகளுக்கே, லண்டனுப்போய் ஆங்கிலம் படித்த வைத்தியர்களிடம் போக அவர்களுக்கு வசதி கிடையாது. ஆவிகளால் வந்த பல விதமான நோய்களுக்கும் நிவர்த்தி தேட எங்கே போவார்கள்?

வசதியுள்ளவர்களும் டொக்டரின் ஊசி மருந்தைவிட, பூசாரிகளின் மந்திரம் ஓதிப் பூசிய திருநீற்றைத்தான் நம்பினார்கள். அவர்களின் நம்பிக்கை குமாரசுவாமித் தெய்வத்தின் பெயரில் மந்திரம் ஓதிக்கொடுக்கும் தண்ணீரிலும் மந்திரம் சொல்லிச் சொல்லிய+தி ஊதிப்போடும் திருநீற்றிலும,; கைகளிலும் கழுத்திலும் பூசாரி கட்டும் மந்திர நூலிலும் தங்கியிருந்தது.
ஏனென்றால் எந்த வருத்ததிற்கும் காரணம் இறந்து போனவர்களின்; ஆவிகளும,; பல தரப்பட்ட பேய் பிசாசுகளின் சேட்டைகளும்தான் என்பது அவர்களின் நம்பிக்கை.

அதிலும் வேலுப்போடியின் மந்திர உச்சாடணத்தைக் கேட்டால்; எந்தப்பேயும் ஓடிவிடும் என்பது அந்தப்பூசாரியிடம் வைத்தியம் செய்த பலருக்குத்தெரியும். கள்ளும் கஞ்சா றொட்டியும் தவிடு; றொட்டியும் சேர்த்து ஆதிவைரவருக்கும,; வீரவைரவருக்கும,; பேய்க்க்கழிப்புச் செய்து பலரின் சுகவீனங்களை வேலுப்போடி நிவர்த்தி செய்வது அந்த ஊரின் நாளாந்த நடவடிக்கைகளிலொன்று.
கிழவிகள் வேலுப்போடியின் மந்திரத்தின் மகிமை பற்றி நிறைய சங்கதிகள் வைத்திருந்தார்கள். நோய்களுக்கு வைத்தியம் செய்வது மட்டுமல்லாது, விருப்பமில்லாத பெண்களுமக்கு ‘வசியம’; செய்து சேர்த்து வைப்பதில் வேலுபோடியின் மந்திரம் கைதேர்ந்தது என்று பேசிக்கொள்வார்கள்.

அந்த ஊரின் நம்பிக்கையின்படி கல்யாணமாகாத இளம் பெண்கள் மாலை நேரத்தில தனியாக வெளியே செல்லஅனுமதிக்கப்பட மாட்டார்கள். இரவின் தனிமையில் பயங்கர சக்திகள் கன்னிப் பெண்களைத் தாக்கி அவர்களுக்கு நோய் நொடிகளை வரப் பண்ணி விடுவார்களாம்.

இந்த ஊரில் இளம் பெண்களை வைத்திருக்கும் தாய் தகப்பன் வேலுப்போடியுடன் மரியாதையாகப் பழகிக் கொள்வார்கள்.
நல்லதொரு மாப்பிள்ளையைப்பார்hத்து தங்கள் பெண்களைத்திருமணம் செய்து கொடுக்கும் வரை மடியில் நெருப்பைக் கட்டிக்கொண்டிருப்பதுபோல் அந்தரப்பட்டுக்கொண்டிருப்பார்கள். தங்கள் பெண்களுக்கு யாரும் வசியம் வெய்யாமலும் அல்லது நோய் நொடி ஏதும் நடந்தால் பூசாரியின மந்திரம் காப்பாற்றி விடும் என்பதற்காகப் பூசாரியிடம் மிகவும் மரியாதையாக நடந்து கொள்வார்கள்

பணக்காரர்களும,; மற்றவர்களை ஏமாற்றி வாழ்வோரும் பூசாரியின் தயவை மிகவும் நம்பியிருந்தார்கள். பலர் தங்கள் எதிரிகளைப் பழிவாங்கப் பூசாரியைப் பயன் படுத்துவார்கள்.

வசதி படைத்தோர் தங்களுக்குப் பிடித்த ஏழைப்பெண்களைப் பூசாரியின் ‘வசிய எண்ணெய்’ பாவிப்பதன் மூலம் அனுபவிப்பார்கள்.
ஊரிலுள்ள பல பூசாரிகள் ஒருநாளும் மேற்குறிப்பிட்ட- தர்மத்திற்கு விரோதமான சடங்குகளில் ஈடு படமாட்டார்கள். தங்கள் மந்திரத்தை எப்போதும் நன்மையான விடயங்களுக்கே பாவிப்பார்கள். கடவுள் தந்த அறிவைத் துர்ப்பிரயோசனம் செயவதைத் தெய்வம் பொறுக்காது என்பது முதியோர் வாக்காகும்.

மக்கள் தேவைக்கான வைத்தியம் செய்யவும் நோய் நொடிகளை அகற்றவும,; குல தெய்வங்களுக்குச் சடங்கு செய்யவும,; பாவிக்க வேண்டிய மந்திரங்கள் சிலரின் சுயதேவைக்குத் துர்ப்பிரயோசனம் செய்வதை வேலுப்போடியின் வயதுபோன தகப்பன் விரும்பவில்லை.

வேலுப்போடி மற்றவர்களுக்குப் பேய்களை ஏவி விடுவதுபோல் ஊரிலுள்ள சிலர், ஊரக்குத் தூரத்திலுள்ள மொன்றாகலைப்பட்டணம் போய்ச் சிங்கள மந்திரவாதிகளைக்கொண்டு வேலுப்போடிக்கும் பொல்லாத சிங்களப் பேய்களை ஏவி வட்டு; சரிக்கட்டி விடுவார்கள் என்று அந்தக் கிழவன் பயந்தார்.

படிப்பும் அறிவும் மக்கள் நலனுக்குப்பாவிக்கப்பட வேண்டியது என்பது அந்தக்கிழவனின் தாரக மந்திரம். இந்து சமயத்தின் நான்கு வேதங்களில் கடைசி வேதமான ‘அதர்வண வேதம்’ என்பது அதிதீத மந்திரங்களின் தொகுப்பு என்பது அவர்கருத்து.
அந்த மந்திரத்தின் மகிமை மற்றவர்களைப்பழி வாங்கப் பாவிப்பதை அவர் விரும்பவில்லை. தனது இரு மகன்களையும் பெரிய படிப்புப் படிக்க வைத்து முன்னேற்ற வேண்டும் என்ற ஆசை அவருக்கு.

வேலுப்போடியின் தகப்பன் மயிலுப்;போடிக்குத், தன் மகன்களான,வேலுப்போடியும் காசிப்போடியும் மந்திரம் படித்து விட்டு,வாழ்நாள் முழுக்க பேய் பிசாசுகளுடன் காலம் கழிப்பதை விரும்பவில்லை.

அதிலும் முக்கியமாக ‘வசியம’; செய்வது போன்ற விடயங்களில் நேரும் அபாயங்கள், தெய்வ குற்றங்கள்,என்பன எந்த மந்திரவாதியையும் நிலை குலையப்பண்ணிவிடும்.

‘வசிய எண்ணெய்’ செயவது மிகப் பயங்கரமான விடயம்.

ஒரு சிலர்,தனக்குப்பிடிக்காத ஆணையோ, பெண்ணையோ, காம ஆசைக்காக அல்லது, அவர்களைக்கல்யாணம் செய்தால், அந்தக்குடுப்பத்திலுள்ள பணம் காணியென்பதை அவர்களிடமிருந்து தன்வசம் எடுத்துக்கொள்ளலாம் என்ற பேராசையாலும் தங்கள் திட்டம் சரிவர மிகத்திறமையான பூசாரியைத்தேடுவார்கள்.

இந்தப்பூசாரிகள,; ஒரு குடும்பத்தில் மூத்த மகளாகப்பிறந்த பெண்ணுக்கு, மூத்த குழந்தையாகப்பிறந்து, இறந்த குழந்தையைப,; புதைத்து மூன்றாம் நாள்; புதைகுழியிழிலிருந்து எடுத்துத,; தலைகீழாய்க் கட்டிக,; கீழே ஒரு பெரிய சட்டியைப் பெரும் நெருப்பில் வைத்து இறந்த பிணத்திலிருந்து எண்ணெய் வடிப்பார்களாம்.

சவத்தின் உடற்கொழுப்பு அக்கினிச்சுவாலையால் உருகி பிணத்தின் தலையிலிருந்து வடிந்து சொட்டு சொட்டாகக் கீழே வைத்திருக்கும் சட்டியில் விழும.;

சவக்காலையில் இந்தச் சடங்கைச் செய்யும் மந்திரவாதிகள,; ஒரு நிமிடமும் நித்திரை செய்யாமல,; ஒரு கணமும் ஓயாமல் மந்திரம்சொல்லிக்கொண்டேயிருக்கவேண்டுமாம்.

பேய்களைக்கட்டி வைத்திருக்கச் சொல்லப்படும் மந்திரத்தில் ஒரு கொஞ்சம் பிழைத்தாலும் சவக்காலையைக் காத்துத்;திரியும்; சுடலைமாடன, சுடலை வைரவன்,பிணம்தின்னிப் பேய் அல்லது சுடலைக்காளி போன்ற பேய்கள் தங்களைக் கட்டி வைத்திருக்கும் மந்திரத்திலிருந்து விடுபட்டுத் தன்னைக்கட்டி வைத்திருந்த மந்திரவாதியைக் கொன்று விடுவார்களாம்;.

இரவு,முதற்சாமம் தொடங்கி மூன்றாம் சாமம் வரை மேற்குறிப்பிட்ட பேய்களைத் தன் மந்திரத்தால் கட்டி வைத்து விட்டு சடங்கு தொடங்கும்.

அதன்பின்; பேய்கள் உருமாறுமாம்.

சுடலைக்காளி பேய்ச்;சியம்மனாகவும,;சுடலை வைரவர் வீரவைரவராகவும், பிணம்தின்னிப்பேய் சிவனாகவும் மாறுவார்களாம்.
பேய்கள் தெய்வங்களாக மாறி விட்டால் வசியம் செய்வது நடக்காமல் காற்றை அல்லது மழையையுண்டாக்கி வசியம் செய்வதைத்தடுத்து விடுவார்களாம். ஒரு குறிப்பிட்ட நேரத்தில் அதி பயங்கரமான பேய்களைக் கட்டி வைத்துக் கொண்டு இந்தச்சடங்கை நிறைவேற்ற மிகவும் துணிந்த மந்திரவாதியாற்தான் முடியும்.

செத்த பிணம் நெருப்பில் வெந்து கொண்டிருக்கும்;போது உண்டாகும் நாற்றம் சகிக்க முடியாமலிருக்குமாம். பிணத்தின் கொழுப்பு வெடித்துச்சிதறி மந்திரவாதியை நனைக்குமாம்.

இவற்றையெல்லாம் சகிப்பது மிகக்கடினம். இந்த நிலையில் மந்திரம் சரியாகச் சொல்ல முடியாமலுமிருக்குமாம்.

பூசாரியின் மந்திரத்தால் கட்டி வைக்கப்பட்டிருக்கும் பேய்கள், முக்கியமாகத் தான் உண்ணவிருக்கும் பிணத்தை மந்தரவாதி வதைப்பதைத் தாங்காத, பிணந்தன்னிப்பேய் போன்றவர்கள் தூரத்தில் நின்று கொண்டு, மந்திரவாதியின் கவனத்தைக் கலைக்க கல், மண் எடுத்து எறிந்து குழப்பிக்கொண்டேயிருப்பார்களாம்.

வசியம் செய்ய முனைந்து ஏதும் சரிவராமற் போய், அதாவது சரியான நேரத்தில் சரியான பேய்களைக்கட்டி வைக்காமல விட்டால் விடுதலையான பேய்கள்; தாக்கி, இரத்த வாந்தியெடுத்து சுடலையில் இறந்து கிடந்த மந்திரவாதிகள் பலர்.
அதேமாதிரி, சில மந்திரவாதிகள், எதிரிக்குச்சூனியம் செய்ய ஏதோ ஒரு பேயை ஏவியனுப்பி, அந்தப்பேய்க்கு அனுப்பப்பட்ட இடத்தில் தன் வலிமையைக்காட்ட முடியாவிட்டால் திரும்பி வந்து தன்னை ஏவி விட்;ட மந்திரவாதியை முடித்துவிடுமாம்;. (அதாவது தன்வினை தன்னைச்சுடும் ஓட்டப்பம் வீட்டைச்சுடும);.

இப்போதெல்லாம,; ஏவிவிட்ட பேய்களை விட அரசியற் பிரச்சினைகளால,; சிங்கள இராணுவத்தாலழிந்த-கொடூரமாகக் கொலை செய்யப்பட்ட,அப்பாவி மக்களின் பேய்களும், இயக்கங்கள் ஒருத்தரொடு இன்னொருத்தர் மோதிப் பலியான எத்தனையோ இளைஞர்களின் பேய்களும் தெருக்களிலும், சந்திகளிலும், ஊரின் எந்த மூலை முடக்குகளிலும், மரங்களிலும,குடிகொண்டலைவதைக்கண்டதாகப் பலர் சொன்னார்கள்.

எந்தக் கலாச்சாரத்திலும் இறப்புக்கள மிகவும் முக்கிய விடயமான சடங்காகக் கருதப்படுகிறது. ஆனால் தமிழராய் பிறந்த குற்றத்தால் ஆயிரக்கணக்கான தமிழர் சிங்கள இராணுத்தினரால் கொலை செய்யப்பட்ட போது இறந்தவர்களைக் கொண்டு போய்ச் சுடலையில் புதைக்கவும் முடியாத நிலைகளால்,இந்த ஊரார் இறந்த சொந்தக்காரர்களைத் தங்கள் வீட்டுத் தோட்டங்களிற் புதைத்தார்கள்.

தங்களின் கண்மணிகளாக வளர்த்த பிள்ளைகள், தங்களின் வயது போன காலத்தில் வைத்துப் பார்க்க வேண்டிய தங்கள் குழந்தைகளைத் தங்கள் கைகளாலேயே புதைக்க வேண்டிய கொடுமை தாங்காமற் தவித்த பெற்றோர் எத்தனையோ பேர்.
அநியாயமாகக் கொலைசெய்யப்பட்டு அகால மரணமடைந்தவர்களின்; ஆவிகள்; ஊரில் தெருக்களிலும் வீட்டுத்தோட்டங்ளிலும் பேய்களாகத் திரிவதால் பல வீடுகளில் அடிக்கடி பேய்க்கழிப்புச் சடங்குகள் நடக்கும்.

காலைக்கடனை வயற்கரைகளிற் செய்யக்கூடப் போகப் பயந்தார்கள். அதற்குக் காரணம்,ஒருநாள் சிங்கள இராணுவத்தின்
கொடுமைக்கு நாற்பது தமிழ் இளைஞர்கள் இந்த ஆற்றுக்கும் பக்கத்திலுள்ள கடற்கரைக்குமிடையில் வைத்துச் சுடப்பட்டார்கள்.
பலபேரின் உயிர் போக முதலே, அவர்களின்இரத்தம் வழியும் உடல்கள்மேல் மோட்டடார் டையர்களைப்போட்டு எரித்தார்கள்.
அதன் பின் நடு இரவில் ஆற்றங்கரையில் பேய்கள் அழுது கொண்டு திரிவதாக ஊரார் பயந்தார்கள்.

சிங்கள இராணுவத்தினரின் கொடுமைகளைத்தாங்க முடியாமல், பிள்ளையார் கோயிலடிச் சின்னாச்சியின் மகன் ரவி என்ற இளைஞன் வீட்டை விட்டு ஓடிப்போய் ஒரு அரசியல் இயக்கத்தில் சேர்ந்த நாளிலிருந்து அந்தச் சின்னக் கிராமம் அடிக்கடி சிங்கள இராணுவத்தின் படுபயங்கரமான அநியாயங்களுக்கு ஆளாகியது.

ரவி மிகவும் கெட்டிக்கார மாணவன். ஒரு காலத்தில், பெரிய டாக்டராக வந்து ஊருக்குத் தொண்டு செய்வான் என்று நம்பிக் கொண்டிருந்த போது தமிழரின் விடுதலைக்காகத் தன் உயிரைத் தியாகம் செய்து போராட அவன் இயக்கத்தில் சேர்ந்து விட்டான்.
ரவியைத் தேடி வந்த இராணுவத்தினர், ரவியின் தகப்பன், சித்தப்பன், கண் தெரியாத வயது போன தாத்தா மூவரையும் ராணுவ ஜீPப்பில் கட்டி றோட்டிலிpழுத்துக் கொண்டு போனபோது அவர்களி;ன் தோல்கள் உரிந்து இரத்தம் வழிந்து றோட்டில் கோடுபோட்டுக்கொண்டு போனதைப்பார்த்த பலர் மயங்கி விழுந்தனர்.

ஊரைத் தாண்டி இழுத்துக்கொண்டு போய,; அவர்களின் தலையை வெட்டி மொட்டையார்கல் என்று பெயர் பெற்ற மலையில், மூன்று தலைகளையும் அடுப்புக் கற்கள் மாதிரிப், பார்வைக்கு வைத்தார்கள்.

பின்னர், ஒவ்வொரு நாளும் ஊருக்குள் வந்து, ரவியின் தாயையும,; சின்னம்மாவையும,; பாட்டிக்கிழவியையும் இழுத்துக்கொண்டுபோய் வெயிலில் உலர்ந்து, மழையில் நனைந்து, காட்டு மிருகங்களாற் குதறப்பட்ட அந்த பயங்கரமான மூன்று தலைகளையும் காட்டிச் சிரிப்பார்கள்;.

அவர்களின் தலையற்ற மூன்று முண்டங்களும் கை கால்கள் வெட்டப்பட்டு ஊரிலுள்ள பிள்ளையார் கோயிலுக்கப் பக்கத்திலுள்ள வாகை மரத்தில் தொங்க விடப்பட்டிருந்தன.

இந்தக் கொடுமைகளைப் பார்த்த அதிர்ச்சியில் விடுதலை வீரன் ரவியின் பாட்டி மாரடைப்பில் இறந்து விட்டாள்.
ரவியின் தாய்க்குப் பைத்தியம் பிடித்து விட்டது. சின்னம்மா தீராத நோயாளியாகிவிட்டாள்.

அதைத்தொடர்ந்து சிங்கள இராணுவம் நடத்திய சுற்றி வளைப்பில் தப்பி ஓட முனைந்த இரு இளைஞர்களை, ஊரார் முன்னிலையில் வைத்து அவர்கன் கதறக் கதற அடித்ததில் அவர்களின் இரத்தம் சிதறிப்பாய்ந்து பக்கத்துக்கடையை நனைத்தது.

இராணுவத்தினர் ஊரிலுள்ள மிகவும் வயது போன கிழவனிடம் கத்தியைக்கொடுத்து அந்த இளைஞர்களின் தலையை வெட்டச்சொல்ல அந்தக்கிழவன் மறுக்கவே கிழவனைத்;தூக்கிப் பக்கத்தச்சுவரிலடிக்க கிழவன் மண்டை சிதறிச்செத்துப்போனான்.
சிங்கள இராணுவத்தினர் அந்த இளைஞர்களின் தலைகளை வெட்டி அந்த இரத்தம் வழியும் தலைகளைத் தங்கள் கைகளில் எடுத்துக் கொண்டு ஊரின் நடுத்தெருவில் எமதூதர்களாக நடந்து சென்றார்கள். உதிரம் வழியும் தலைகளைக் கொய்து கைகளிற் கொண்டு போன அவர்களின் செய்கை, கடைக்குப்போய் மீன்; வாங்கிக் கொண்டு வீட்டுக்கு ஆறுதலாகப்போவது போலிருந்தது.
இராணுவத்தினரின் கொடுமை ஓய்ந்து கொண்டுபோன காலத்தில், ஊரில் தோன்றி வளர்ந்த பல விடுதலையியக்கத்தைச் சேர்ந்த இளைஞர்கள,; தங்களுக்குள் உண்டான அபிப்பிராய வித்தியாசங்கள் அல்லது அதிகார வெறியால் ஒருத்தரை ஒருத்தர் பழி வாங்கப் பல உயிர்ப்பலிகளை எடுத்தார்கள்.

இவர்களின் சம்ஹார வதைப்படலங்களை எதிர்ப்போர் நிலை அதோகெதிதான்.

‘துரோகிகள்’ என்றபெயரில் பலர் கொலை செய்யப்பட்டுக் கம்பங்களில் பகிரங்கமாகத் தொங்க விடப்பட்டார்கள்.

தலை,கை, கால்கள் வெட்டப்பட்டு முண்டங்களாகப் பாலத்தின் கீழே கிடந்த சவங்கள் எத்தனையோ.

இந்தியப்படையினர் “தமிழரின் பாதுகாப்புக்கு” வந்த பின் நடந்த பயங்கரங்கள் சொல்லுக் கடங்தாதவை. உலகின் நான்காவது படை பலமுள்ள இந்தியா, தர்மத்தின் தாயகம் என்று மதிக்கப் பட்ட ஒரு நாடு இப்படி அநியாயங்களைச் செய்வதைச் சாதாரண மக்களால் நம்ப முடியவில்லை. இந்தியர் இலங்கைக்கு வந்து நடத்திய கற்பழிப்புக்கள், கொலைகள் யாராலும் அளவிடமுடியாதவை.
இப்படிப் பல தரப்பட்ட அநியாயமான கொலைகளால் உயிரிழந்தவர்கள் பேய்களாகத் திரிவதால் ஊரார் மந்திரவாதிகளை நாடுவதும் பேய் கலைக்கச் சடங்குகள் செய்வதும் நாளாந்த விடயங்களாக வளர்ந்து போயின.

பூசாரி வேலுப்போடிக்குப் பெயரும் புகழும் ஏறிக்கொண்டே போயின. பூசாரியின் அபரிமிதமான மந்திரத்தில் அமைதியற்றலைந்து திரிந்த பல ஆவிகள் அடங்கிப்போயின.

குடும்பங்களைப் பயமுறுத்திய பஞ்சமிப்பேய்கள் பலமிழந்தன.

இயக்க ரீதியில் துப்பாக்கிகளுடன் ஒருத்தரையொருத்தர் பழி வாங்கிய அதே கால கட்டத்தில் பல பழைய எதிரிகள் தங்கள் எதிரிகளை இயக்கத்தினர் உதவியுடனும் மந்திரவாதிகளின் உதவியுடனும் தொலைத்துக்கட்டிக்கொண்டிருந்தார்கள்.
ஊரில் ‘அரசியற் பேய்கள’; இறந்தோரின்; ‘ஆவியான பேய்கள்’ என்று பல பேய்கள் திரிந்தன.
ஊரில் திரிவதாகச் சொல்லப்பட்ட பேய்களில், மிகவும் பயங்கரமானதும் பெயர் பெற்றதுமான பேய் ‘நறுவிலி மரப்பேய்’ ஆகும்.
ஒரு நாள் ஒரு அயலு+ர்ப் பையன் அடிக்கடி அந்த ஊரின் தெருக்களில் சைக்கிளில் போய் வந்து கொண்டிருந்ததைச் சிலர் சந்தேகத்துடன் கவனித்தனர். நறுவிலி மரத்தடியில் தேனீர்க்கடை வைத்திருக்கும் கோபாலன் என்ற காமுகன், அந்தப் பையனைப் பற்றிய விடயங்களைச் சேகரித்தான்.

ஆனந்தன் என்ற அந்தப் பையன்,தனது காதலியான அழகம்மா என்ற அகதிப் பெண்ணைத்தேடியலைவதாக அறிந்தான்.
ஒரு சில நாட்களுக்கு முன், தன் கடையைத்தாண்டிப் போன அழகம்மாவின் அழகு, காமவெறி பிடித்த கோபாலனின்pன், நித்திரையைக் குழப்பியதை அவன் யாரிடமும் சொல்லவில்லை.

அழகம்மாவின், ஆடம்பரமற்ற, கிராமத்தியக் கவர்ச்சி யாரையும் கவரும். அரசியற் பிரச்சினையால் தன் குடும்பத்தில் எத்தனையோ பேரையிழந்த அவளின் நிலை ஆபத்தாயிருந்தது.

அழகின் அருகில் ஆபத்திருக்கும் என்பதை உணர்ந்த அழகம்மாவின் சொந்தக்காரர் எப்படியும் அவளுக்கு ஒரு பாதுகாப்பைத்தேட முயற்சிப்பதையும் கேடு கெட்ட காவாலியான கோபால் அறிவான்.

அழகம்மாவைத் தான் அடைய வேண்டும் என்ற வெறியில் ஆனந்தனை ஒழித்துக் கட்ட நினைத்த கோபாலன்,தன் சினேகிதனும் மந்திரவாதியுமான வேலுப்போடியிடம், ஆனந்தன், ஊர்தெருக்களில் திரிந்து, ஊர்ப் பெண்களை வட்டம் போடுவதாகச் சொல்ல, அதைக்கேட்ட வேலுப்போடி ஆவேசம் கொண்டார்.

அதற்குக்காரணம் அதே கால கட்டத்தில் பூசாரியின் மகள் மல்லிகா ஒரு அயல+ர்ப் பையனுடன் காதல் வயப்பட்டிருந்தாள். அந்த விடயம் இன்னும் ஊராருக்குத்தெரியாது.

அந்தப்பையனுக்குச் சூனியம் செய்து கொலை செய்யப் பூசாரி முனைந்து கொண்டிருந்தார்.

தன் மகளை மயக்கிய இளைஞனிலுள்ள ஆத்திரம் காதலியைத்தேடி வந்த அந்த அப்பாவிப் பையன் ஆனந்தனில் திரும்பியது.
காம வியாதி பிடித்த கோபாலனுத்து ஊரில் நடக்கும் எல்லாக் காதல் விடயங்களும் தெரியும், ஆனாலும், பூசாரியின் மகள் பற்றிய விடயத்தை வேலுப்போடியிடம்; சொல்லாமல், ஊர்ப் பெண்களின், கற்பு, கௌரவம் பற்றி ஒரு பெரி பிரசங்கம் வைத்து எரியும் நெருப்பில் எண்ணெய் ஊற்றினான்.

வேலுப்போடி, கோபாலனுக்குத் தன் மகளின் காதலன் கிருஷ்;ணனில் உள்ள ஆத்திரத்தைக் காட்டிக் கொள்ளாமல் அயல+ரான் ஆனந்தன் போன்றோர் எங்கள் கிராமத்தைத் தங்கள் காம வேட்டைக்குப் பாவிப்தைத் தடுக்க வேண்டும் என்று சபதம் செய்தார்.;.
கடைக்காரக் கோபாலன் தனக்கு விரும்பிய பெண்கள் பலரைப் பூசாரியின் வசிய மருந்தின் உதவியுடன் அனுபவித்தவன்.
இந்தப்பையன் தேடிக் கொண்டிருப்பதாகச் சொல்லும் அழகம்மா பற்றிய சிந்தனை வந்ததும் அவளை எப்படியும் தன்வசப்படுத்தி அனுபவிக்க வேண்டும் என்று காம வெறி பிடித்த கோபாலன், பூசாரியின் செய்வினை வரைக்கும் காத்திராமல் ஆனந்தனை ஒழித்துக் கட்ட இன்னுமொரு சதித் திட்டம் போட்டுத் தன்னுடன்; சினேகிதமாயிருக்கும்,அடுத்த ஊரிலுள்ள ஒரு இயக்கத்தினருக்கு விசயத்தைச்சொல்லியனுப்பினான்.

காமம் தலைக்கேறினால் தர்மம் அழிந்து விடும் என்பதற்குக் கோபாலன் போன்றவர்கள் சாட்சி.

தன் மந்திரத்தின் மகிமையைப் பெரிது படுத்தாமல் இயக்கங்களின் உதவியைக் கோபாலன் நாடியதை வேலுப்போடி விரும்பாவிட்டாலும், இயக்கத்தினருடன் பிரச்சினைப்பட்டு; அவமானப்படத் தயாராயில்லை.

அத்துடன், தனது மகள் மல்லிகாவின் காதலன் கிருஷ்ணனைத் தன் செய்வினை சூனியத்தால் கொல்ல முடியாவிட்டால், இயக்கத்தின் உதவியையும் எடுக்கப் பூசாரி மனத்திற்குள் திட்டம் போட்டுக் கோபாலனுடன் சேர்ந்து அழகம்மாவைத் தேடி ஊரிற் திரியும் ஆனந்தனை ஒரு அரசியற் துரோகி என்று காட்டிக்கொடுத்தனர்.

இயக்கத்தினர் சிலர் அவனைப்பிடித்துக்கொண்ட போய் விசாரித்தனர். அவன் யாருடைய ஒற்றன் என்று கேட்டு அவனையடிக்கத்தொடங்கினர். கலங்கியவன் கண்களுக்குக் கண்டதெல்லாம் பேய் என்பதுபோல் இந்த இயக்கத்தினரும், தங்களுக்குப் பிடிக்காத எந்;தத் தமிழனையும் எதிரி என்று கொலை செய்வது காலம் காலமாய்த் தொடர்கிறது.
சிங்கள அரசாங்கம் தமிழர்களை இனரீதியாக ஒட்டு மொத்தமாக அழித்துக் கொண்டிருந்த போது தமிழ் இயக்கங்கள் தங்களுக்குப் பிடிக்காதவர்களைத் தேர்ந்தெடுத்து சித்திரவதை செய்து அழித்துக்கொண்டிருந்தார்கள்.

‘ நான்; ஒரு அகதி. கல்முனைப் பட்டணத்தை ஒட்டியிருந்த ஒரு கிராமத்தைச் சேர்ந்தவன். சிங்கள இராணுவத்தினரால் அடித்துத்த துரத்தப்பட்ட தமிழ் குடும்பங்களில் ஒன்றைச்சேர்ந்தவன்’ என்று அவர்களிடம் அகப்பட்டுக் கொண்ட ஆனந்தன் சொன்னதை அவர்கள் நம்பவில்லை.

இவனின் கதை அவர்களுக்குத்ததெரியாது.

தெரிந்து கொள்ள அக்கறைப்படவுமில்லை.

இவன்,அகதி முகாமில் இருக்கும் போது இவனின் கண்களையும் கருத்தையும் அந்த முகாமில் அகதியாய் வந்திருந்த ஒரு இளம் தமிழ்ப் பெண் கவர்ந்து விட்டாள். அவள் எந்த ஊரைச் சேர்ந்தவள் யாரின் மகள் என்ற எந்த விபரமும் தெரியாது.

முகாமில் பசி பட்டினி போன்ற கொடுமைகளுக்கப்பால் அவள் விழிகள் அல்லோல கல்லோலமான அந்தத்துயர் நிலையிலும் அவனுக்கு ஆறுதல் கொடுத்தன.

மழை கொட்டிய ஒரு காலை நேரத்தில் அவன் விழித்த போது அவள் சோகத்துடன் முகம் கவிழ்ந்திருந்த இடம் காலியாயிருந்தது.
சீதையைத்தேடிய இராமனாய் அவன் சில நாட்கள் மனமுடைந்து அலைந்து திரிந்த போது அவள் பெயர் அழகம்மா என்றும் தாய் தகப்பனையிழந்த அழகம்மா தன் சொந்தக்காரர்களுடன் இந்த ஊர்ப்பக்கம் போனதாகக் கேள்விப்பட்டதும் அவளைத்தேடி தான் வந்ததாகச் சொன்னான். ஓரு தடவையல்ல பல தடவை அந்த ஊர்த்தெருக்களில் வலம் வந்தான். அவளைக்காணவில்லை.
அலைந்தான் அலுத்தான். கடைசியாய்த் துN;ராகி அல்லது ஒற்றன் என்ற பெயரில் அகப்பட்டுக்கொண்டான். நறுவிலி மரத்தடியில் ஒரு மாலை நேரத்தில் இயக்கத்தினரின் விசாரணை ஆரம்பமானது.

அந்தக்காலத்தில் வந்தான்,; வரத்தான்,; அயலு+ரான் என்போர் தங்கள் ஊர்ப் பெண்களைப் பார்ப்;பதைச் சகிக்காதவர்கள் அந்த ஊரார். விசாரணையைப் பார்வையாளர்களாகப் பார்த்துக் கொண்டு ஊர் மக்கள் நின்றார்கள்.

இயக்கத்தினருக்கு இவன் சொன்ன எந்த விளக்கமும் சரியாகப்படவில்லை. இயக்கத்தினரின் சித்திரவதை ஆரம்பமானது. எந்தத் தமிழ்த் தாய் தவம் செய்து பிறந்த பிள்ளையோ அந்த ஆனந்தன். தகாத நேரத்தில தகாத இடத்தில் வந்த குற்றத்திற்காக இவர்கள் கையில் குரங்கின் கையிற்ப் பூமாலையானான்.

அடித்தார்கள் உதைத்தார்கள். உதிரம் கொட்டக் கொட்ட ஆனந்தன் என்ற அப்பாவித் தமிழன் அதிகார வெறிபிடித்த இன்னொரு தமிழ்க் குழுவால் இயேசு நாதர் பட்ட கொடுமையை அழகம்மா என்ற பெண்ணிலுள்ள அன்புக்காகஅனுபவித்தான்.

இவனிமிருந்து ‘உண்மையை’ எடுக்க அவர்கள் செய்த கொடுமையைச் சகித்துக் கொள்ளாத சூரியன் மேகத்திற்கள் தன்னை வேதனையுடன் மறைத்துக்கொணடான். அந்த இளைஞனுக்காக, அவன் உடம்பிலிருந்து வழியும் உதிரத்தைக் கழுவ வருண பகவான் தன் கண்ணீரை மழையாகக்கொட்டினான். வாயு பகவான் மெல்லிய தன் தென்றலை, வெட்டுப்பட்டுக்கொண்டிருக்கும் அவன் உறுப்புகளில்; தவழ விட்டான்.

ஒரு சில மணித்தியாலங்களுக்கு முன் கம்பீரமான உடலுடன் தன் காதலியைத்தேடி வந்த அந்தத் தமிழனின் அங்கங்கள் அதிகார வெறி பிடித்தோரால் அணு அணுவாக வெட்டப்பட்டன.
இரவு ஓடி வந்து தன் இருள் திரையை விரித்து இந்தக்கொடுமையை மற்றவர் பார்வையிலிருந்து மறைத்தது. அவனது இறுதி மூச்சின் உயிர்த்துடிப்பை மிகவும் வயது போன அந்த நறுவிலி மரம் மௌனமாய்ச் சகித்தது.

நறுவிலி மர இலைகளிலருந்து கொட்டும் சிறு மழைத்துளிகளின் சப்தத்துடன் குற்றுயிராயக்கிடந்த அவன் முனகல் இணைந்து கொண்டது.

அடுத்த நாள் விடிந்தபோது அனாதையாய் அஹோரமாய்ச்சித்திர வதைப்பட்டுக்கிடந்த அந்தத் தலையற்ற பிணத்தை கடைக்கார கோபாலன் பார்த்து அலறி விட்டான்.; அந்த இளைஞனின் அஹோர மரணத்திற்குத் தான் ஒரு காரணம் என்று அவனின் மனச்சாட்சி சொன்னாலும்; அழகம்மாவை அடைய வேண்டும் என்ற தணியாத காம வெறியால்; மனச்சாட்சியையே அழித்து விட்டான்.
மகனின் நிலை கேள்வவிப் பட்டு ஓடி வந்த ஆனந்தனின் தாய்,அலறிய அலறல்,போட்ட சாபம் ஊர்ப் பெண்களை நடுங்கப் பண்ணியது. கண்ணகி, மதுரை நகர் நடுவில் நின்று நியாயம் கேட்டுக் கதறியது போல், மகனின் வெட்டிக்கிடந்த தலையைக் கையில் வைத்துக்கொண்டு தன் மகனை அழித்த தமிழ் இயக்கங்ஙளிடம் நியாயம் கேட்டாள்.

தமிழர் விடுதலை என்ற பெயரில் அப்பாவி மக்களைக் கொலை செய்யும் ஆயுத தாரிகளை அவள் சபித்தாள். தன் மகனின் அழிவுக்குக் காரணமானவர்களை ஆண்டவன் சும்மா விடமாட்டான் என்று சபித்தாள்.அந்த இயக்கத்தைச் சேர்ந்தவர்கள்,கூண்டோடு,குடும்பத்தோடு நரக லோகம் போவார்கள் என்று மண்ணையள்ளி வானத்தைப்பார்த்தெறிந்து சாபப் போட்டாள்.

பதவி வெறி, காம வெறி பிடித்தோரை இந்தச் சாபங்கள் ஒன்றும் பயப் படுத்தப்; போவதில்லை என்பதைக் கோபாலன் நிலை நிறுத்தினான்.ஒரு சில தினங்களில், அழகம்மாவின் சொந்தக்காரரைச் சந்தித்தான். அழகம்மாவிற்குத் தான் எந்த உதவி செய்யத் தயாராக இருப்பதாகவும் அதற்கு எவ்வளவு பணம் செலவழிக்கவும் தான் தயாராயிருப்பதாகவும் கோபாலன் வாயில் எச்சில் வழியச்சொன்னதை மௌனமாகக் கேட்டுக் கொண்டிருந்தாள் அழகம்மா.

கோபாலன் குழந்தைகளற்ற மலடன். வயது கிட்டத்தட்ட நாற்பத்தைந்துக்கு மேல் , ஆனாலும் இளம் வயது மாதிரித் தெரிவான். அவனின் மனைவி ஒரு நோய்ஞ்சான். எப்போதும் இருமிக்கொணடும் துப்பிக் கொண்டும் படுத்திருப்பாள். கணவன் கோபாலன் செய்யும் அயோக்கியத் தனங்கள் தெரிந்தாலும் ஒன்றும் செய்ய முடியாதவள்.

ஒரு பின்னேரம், பட்டணம் போய், அடுத்த ஊர் ஆதம் காக்காவின் பட்டு மாளிகையில் ஒரு காஞ்சிபுரம் சேலையும் சட்டையும் வாங்கிக்கொண்டு அழகம்மாவைப்பார்க்க வந்தான்.

அன்று, ஆனந்தன் இறந்து எட்டாம் நாள்.

தன் அன்பன் இறந்த துக்கத்தில் உண்ணாமல், உறங்காமல் ஒடிந்துபோய், மெலிந்து சோகத்துடன், நடைப்பிணம் போலிருந்தாள் அழகம்மா.

அவளின், தரை பார்த்துக் கிடந்த விழிகள்,பொலிவிழந்த முகம், பொட்டற்ற நெற்றி, கசங்கிய சேலை ஒன்றும் அந்தக்காமுகனின் நெஞ்சில் இரக்கத்தை உண்டாக்கவில்லை.

அவளின் சொந்தக்காரனுக்குக் கோபால் சாராயம் கொணடு வந்திருந்தான். முழுப்போத்தல் சாராயமும் முடிய,அந்த வீட்டின் சோக
நிலையும் மாறத்தொடங்கியது.

அழகம்மாவின் சொந்தக்காரன் கோபாலனின் புகழ் பாடத் தொடங்கி விட்டான்.

‘ஆண்டாண்டு தோறும் அழுது புரண்டாலும் மாண்டார் வருவாரோ’ என்று தத்துவம் பேசத்தொடங்கிய தனது சொந்தக்காரனைப் பார்;ததும் தனது எதிர்காலம் எப்படியிருக்கப் போகிறது அழகம்மாவுக்குப் புரிந்தது.

அடுத்த நாள்,சிவப்புச் சேலை கட்டிய, விழி பிதுங்கிய அழகம்மாவின் உடல் கோபாலனின் கடைக்கு முன்னாலுள்ள நறுவி மரத்தில் பிணமாகத் தொங்கியது.

அதன் பின் அந்த இடம் ஆனந்தன், அழகம்மாவின் பேய்களிருக்கும் இடமெனப் பெயர் பெற்றது. இரவில் மட்டுமல்லாது பகலிலும் பலர் ஒரு அழகிய பெண்ணையும் ஆணையும் அந்த நறுவிலி மரத்தடியில் கண்டதாகச்சொன்னார்கள்.
சில இரவுகளில், நடுச்சாமத்தில்,சிவப்புச்சேலை கட்டிய இளம்பெண் ஒருத்தி;, தலையற்ற ஒரு முண்டத்துடன் விம்மியழுது கொண்டு நின்றதைக் கண்ட சிலருக்குப் பயத்தில் நெருப்புக்காய்ச்சல்,வாந்தி வயிற்றுப்போக்கு என்று எத்தனையோ நோய்கள் வந்து விட்டன.

சிலர் அழகம்மாவைத் தனியே அம்மணமாய்க் கண்டதாகச் சொன்னார்கள்.

அழகம்மா மோகினிப்பேயாய்த்; திரிந்து ஊர் வாலிபர்களைப் பழி வாங்கப்போகிறாள் என்று நடுங்கினார்கள்.

கோபாலன் அந்த நறுவிலி மரத்தை வெட்டி விட்டான்.பேய்களைத் துரத்தி விட்டதாக அவன் நம்பினான்.

ஆனால் ஒரு சில தினங்களில் நறுவிலி மரம் இருந்த இடத்தில் ஒரு பாம்புப் புற்று தோன்றியது.

ஊர் எல்லைகளில் அல்லது பெரிய மரத்தடிகளில் எறும்புகள் புற்றுக்களையுண்டாக்குவது அந்த ஊரில் சர்வ சாதாரணம். ஆனால் இந்தப் புற்று ஒரு சில தினங்களிலேயே மள மளவென்றுயர்ந்து இரு பெரிய வாய்களைக் கொண்ட புற்றாகி விட்டது.
பெரிய புற்று வளர்ந்தால் பாம்பு குடியேறிவடும் என்று பயந்த கோபாலன், புற்றை வெட்ட முயன்ற போது சட்டென்று இரு நாக பாம்புகள் படமெடுத்துக் கொண்டு சீறின.

கடையருகில் பாம்புப் புற்றும் பாம்புகளும் இருப்பதைக் கேள்விப்பட்ட பலர், ஆனந்தனும் அழகம்மாவும் தங்களை அழித்தவர்களைப் பழி வாங்க பாம்புகளாக வந்திருப்பதாகப் பேசிக் கொண்டார்கள். நாக தம்பிரானின் கோபம் தீர்க்க பாம்புகளுக்குப் பூசை வைத்துப் பால் அபிN~கம் செய்தார்கள்.

கோபாலனின்; கடையில் வியாபாரம் மந்தமடைந்தது.

வேலுப்போடியின் உதவியுடன் பேயோட்டும் சடங்குகள் பல செய்தும் சரியான பலன் கிடைக்கவில்லை.

நறுவிலி மரம் இருந்த இடத்தில், நடு இரவின் நிசப்தத்தில்,மரண முனகல் கேட்டது. “என் உடம்பைத்தா,கை கால்களைத்தா” என்று கதறியழும் ஒரு வெறும் தலை முண்டத்தைக் கண்ட சிலர் அதன் பின் நீண்ட நாட்கள் வீட்டை விட்டு வெளியே வரவில்லை.
பௌர்ணமி இரவில் பாம்புப்புற்றில் சிவப்புச் சேலை கிடந்தது.

இரவில் யாரும் அந்தப்பக்கம் போகப் பயப்பட்டார்கள்.

பேயோட்டும் சடங்குகள் தெடர்ந்தன.

பேய்கள் ஊரை விட்டுப் போகவில்லை,கஞ்சா nறூட்டிக்குகு; காசு செலவானதுதான் மிச்சம்.

தனது மந்திரம் பலிக்காமல் போவதைப் பூசாரி எதிர் பார்க்கவில்லை.

”பேய்களுக்கு யார் பயம்“ என்ற பூசாரியின் கர்வம் உடையத்தொடங்கியது.

பேய்களுடன் மாரடிக்க முடியாமல் கோபாலன் கடையை மூடிவிட்டான்.

ஊரார்,பூசாரியின் மந்திரத்தின் வலிமையில் சந்தேகம் கொள்ளத்தொடங்கினர்.

இதே கால கட்டத்தில் பூசாரி மகள் மல்லிகா தன் காதலன் கிருஷ்ணனுடன் தகப்பனுக்குத் ;தெரியாமல் ஓடி விட்டாள். மகளின் காதலுக்கு சந்திரவதனா உதவி செய்தாள். ஆனந்தனும் அழகம்மா மாதிரி இந்தக் காதல் சோடியும் அழிந்து போவதை அவள் விரும்பவில்லை.

ஒரு காலத்தில் தனக்குச் செய்த கொடுமைக்குப் பழி வாங்கவே சந்திரவதனா தனது மகள் மல்லிகாவின் காதலுக்கு உதவி செய்திருப்பாள் என்பதை வேலுப்போடி அறியாமலில்லை.

சந்திரவதனா ஒரு ஏழைக்குடும்பத்தைச் சேர்ந்தவள். சொத்து ஒன்றும் கிடையாவிட்டாலும் கடவுள் சந்திரவதனாவுக்கு தெய்வலோகத் தேவதைக்கு நிகரான அழகைக் கொடுத்திருந்தான்.

இளைஞனாக இருந்த வேலுப்போடி அவள் அழகில் மயங்கி ‘வதனமோ சந்திர பிம்பமோ’ என்று பாடியலைந்தான்.
சந்திரவதனாவிலுள்ள மோகம் பூசாரியைப் பித்தம் பிடித்தலையப் பண்ணியது.

தனது விருப்பத்சை; சொல்லியனுப்பிய கிழவியிடம் சந்திரவதனா பாலிப்போடியைக் கல்யாணம் செய்வதை விட தான் வாழ்க்கை முழுதும் கன்னியாக இருக்கத்தயார் என்று சொல்லியனுப்பி விடடாள்.

ஆத்திரமடைந்த வேலுப்போடி என்ன மந்திரம் மாயை செய்தானோ. சந்திரவதனா வேலுப்போடியைத் திருமணம் செய்ய மாட்டேன் என்று நிராகரித்த சில மாதங்களில் சந்திரவதனாவின் தகப்பன் வயலுக்குப் போன வழியில் நல்ல பாம்பு கடித்து இறந்து விட்டார். சந்தரவதனாவின் ஒரே ஒரு தம்பியை ஒரு இயக்கத்தினர் கொலை செய்து விட்டனர்.

மூன்று பெண்களை வைத்துக் கொண்டு நான் தனியாக எப்படி வாழ்வேன் என்ன செய்யப்போகிறேன் என்று சந்திரவதனாவின் தாய் அழத் தொடங்கி விட்டடாள்.

சந்திரவதனாவின் குடும்பத்தில் நடக்கும் மாற்றங்களுக்கு வேலுப்போடியின் மந்திரங்கள்தான் என்ற ஊரார் பேசிக்கொண்டார்கள்.
கோபாலனின் தலைமையில் சிலர் சந்தரவதனாவைச் சந்தித்தார்கள். வேலுப் போடியின் மேன்மை தங்கிய தகமைகள் பற்றிப் பெருமையாகப்பேசினார்கள.

அவனைப் பகைத்துக்கொண்டால் அந்தக்கிராமத்தில் வாழ்வது அவ்வளவு சுலபமல்ல என்பதை மறை முகமாகச் சொன்னார்கள்.
புத்திசாலியான சந்திரவதனாவுக்குத் தன் எதிர்காலம் வேலுப்போடியின்; தயவிற் தங்கியிருக்கிறது என்ற உண்மை தெரியாமலில்லை. தனது குடும்பத்தின் வறுமை நிலை அவளை வாட்டியது. தங்கைகளின் எதிர்காலம் தனது முடிவிற்தானுள்ளது என்பது அவள் உணர்ந்தாள்.

சந்திரவதனா மிகவும் துன்பத்துடன் வேலுப்போடியின் தாலியைத் தாங்கிக்கொண்டாள்.

சந்திரவதனாவைத் திருமணம் செய்து அடுத்த நிமிடமே,அவள் தனக்குச் செய்த அவமானத்தை எடுத்துச் சொல்லி அடிக்கத்தொடங்கி விட்டான் வேலுப்போடி.

நல்ல பாம்பாய்த் தன் கழுத்திற் கிடக்கும் பூசாரியின் தாலியை விஷமாய் வெறுத்தாள்.

இரவின் தனிமையில்; பூசாரியின் காமவெறிக்கு அவள் பலியானாள்.

அவள் தன் வேதனையைத் தன் இரு பெண் குழந்தைகளின் மழலைகளில் மறந்தாள்.

மல்லிகாவும் பூரணியும் அழகான இரு குழந்தைகள். பத்திசாலி;ப் பெண்கள்.தாய் படும் துயரைத் தெரிந்து கொண்டவர்கள்.
தான் பட்ட துன்பம் தன் குழந்தைகள் படக்கூடாது என்பதற்காக தனது இரண்டு பெண் குழந்தைகளையும் படிப்பித்தாள்.
அரசியல் பிரச்சினைகளால் இளம் பெண்களும் ஆண்களும் கைது செய்யப்படும்போது தன் குழந்தைகளை இராணுவத்தினரின் கண்களிற்படாமல் காப்பாற்றினாள்.
பணப்பைத்தியம் பிடித்து வேலுப்போடி அதர்மமான விதத்தில் மந்திரம் மாயைகள் செய்வதை அவள் வெறுத்தாள். தனது எதிரிகளை மந்திரம் செய்வினை செய்து அழிப்பது பாவம் என்றாள்.

தாய் தகப்பன் செய்யும் பாவங்கள் குழந்தைகளைப் பாதிக்கும் என்று சொல்லி அவனிடம் அடி வாங்குவாள்.

தேவையில்லாமல் செய்வினை சூனியம் செய்ய வேண்டாம் என்று கெஞ்சுவாள். பெண்பாவம் பொல்லாதது, அழகம்மாவுக்குச் செய்த கொடுமைக்குக் கடவுள் தண்டளை தருவார் என்றழுதாள்.

ஆனந்தனின் தாயின் சாபத்தை நினைவு படுத்திப் பார்த்தாள்.

தாய்மையின் சாபத்தின் வலிமை பூசாரிக்குத் தெரியாது.

தர்மமில்லாத எந்தச்செயலும் எப்படியோ ஒருநாள் எங்களைத் திருப்பித் தாக்கும் என்று அவள் சொல்வதை வேலுப்போடி காதில் வாங்கிக் கொள்வதே கிடையாது.

மல்லிகாவின் காதலன் கிருஷ்ணன் ஊருக்குப் புதிதாய் வந்த இளம் ஆசிரியர். ஒரு முற்போக்குக் கவிஞர். சாதி மதம் என்பன மக்களைப் பிரித்தாள பிற்போக்குவாதிகளால் உண்டாக்கப் பட்ட சித்தாந்தங்கள் என்று தனது கவிதைகளில் எழுதினான்.
மந்திர மாயம் பேய் பிசாசுகள பில்லி சூனியமெல்லாம் வெறும் பித்தலாட்டங்கள் என்று சொன்னான். அவன் இப்படிச் சொல்ல அவனிலுள்ள ஆத்திரத்தில் சந்திரவதனாவுக்கு வேலுப்போடி அடி உதை கொடுப்பது ஊராருக்கத் தெரியாமலில்லை.

புசாரியின் மகள் மல்லிகா,தன் காதலன் கிருஷ்ணனுடன் பூசாரியின் வீட்டை விட்டு ஓடிவிட்டாள்.

சந்தரவதனாவின் நீண்ட தலை மயிரைப்பிடித்தழுந்துக் கொண்டு, அவளைத் தெருக்களிள் வைத்து அடித்துத் துன்புறுத்தி மல்லிகாவிடம் துரத்தி விட்டான் வேலுப்போடி.

மனைவியற்ற பூசாரியின்அந்த வீட்டுக்குள் அன்றிரவு தலை விரி கோலத்துடன் ஓரு அவலெட்ஷ~ணமான ஒரு பெண் நுழைந்ததைச் சிலர் பார்த்ததாகச் சொன்னார்கள்.

அது ஒரு பேயின் அவதாரமெனவும் அது பூசாரியைப் பழி வாங்கப் போகிறது எனறும் வழக்கம் போல் அவ்வ+ரார் பேசிக்கொண்டார்கள். பூசாரியின் செய்கையில் ஆத்திரம் வந்தாலும் வேலுப்போடியிலுள்ள பயத்தில் அவனுக்கு எதிராக எதுவும் செய்ய முடியாமற் தவித்தார்கள்.

பெண்களைச் சமமாக நடத்த வேண்டும் என்று பிரச்சாரம் செய்யும் ஒரு இயக்கம் சந்திரவதனாவுக்குச் வேலுப்போடி செய்யும் கொடுமையைக் கேள்விப்பட்டு வேலுப்போடியைக் அழைத்துக்;கொண்டுபோய் நன்றாக அடிபோட்டு வேலுப்போடியின் ஒரு பக்க மீசையையும் தலை மயிரையும் வழித்து விட்டு அனுப்பினார்கள்.

அவமானம் தாங்காத வேலுப்போடி தனது மகள் மல்லிகாவின்; கணவனை; செய்வினை செய்து கொலை செய்வதாகவும், மல்லிகாவுக்க உதவி செய்த சந்திரவதனாவுக்குப் பைத்தியம் வரப்பண்ணச் செய்யப்போகதாகவும் சொன்னபோது ஊராரில் பலர் அவனை வெறுத்தார்கள்;;.
இன்னுமொரு காதல் தோல்வியடைவதையோ, கொலை, தற்கொலையையோ மிகவும் எதிர்த்;தார்கள்.
போதாக்குறைக்கு மல்லிகாவின் கணவன் கிருஷ்ணன் திடிரென்று நோய்வாய்ப்பட்டபோது மந்திர தந்திரம் மாயை செய்வினை என்ற குடும்பத்தில் பிறந்து வளர்ந்த மல்லிகா தன் தகப்பன் தன் கணவனைக் கொலை செய்யச் சூனியம் செய்துவிட்டதாக நம்பி விட்டாள்.
‘படித்த பெண்ணான நீயே இப்படி யோசிக்கலாமா’

கிருஷ்ணன் தலையிடியுடன் சங்சடப்பட்டுக் கொண்டு கேட்டான்.

தாலி கட்டிய மனைவியென்றும் பார்க்காமல் தனது தகப்பன் தனது தாய் சந்திரவதனாவுக்குச் செய்த கொடுமைகளைத் தெரிந்தவள் மல்லிகா.

‘உங்களுக்கு அப்பாவைப்பற்றித்தெரியாது. தனக்குப் பிடிக்காதவர்கள் யாராயிருந்தாலும் அழித்து விடுவார்’.

ஆனந்தன்-அழகம்மா பற்றி அவள் எடுத்துச் சொன்ன போது மல்லிகாவின் மூட நம்பிக்கை பற்றிச்சிரித்தான்.

” கடவுள்களும் பேய்களும் மனிதர்களால் உண்டாக்கப்பட்டவர்கள்” என்று கிருஷ்ணன் சொன்னான்.

அவன் உடல் நிலை கவலைக்கிடமானபோது, வேறு வழியில்லாமல்,தனது கணவனைக் காப்பாற்றத் தங்கள் குலதெய்வமான கடல்நாச்சியம்மனுக்கு மடை வைத்துச் சடங்கு செய்ய முடிவு செய்தாள் மல்லிகா.

பிரச்சினை என்னவென்றால் கடல்நாச்சியம்மன் சடங்கை வேலுப்போடி தவிர யாரும் செய்ய முடியாது.இதுவரை செய்ததும் கிடையாது. மந்திரம் தெரிந்தவர்களும் வேலுப்போடிக்குப் பயந்து சடங்கு செய்ய வர மாட்டார்கள்.

அத்துடன் அம்மனின் சிலை தாங்கிய மடைப்பெட்டி வேலுப்போடி கைவசமுள்ளது.

மல்லிகா தன் கணவனைக் காப்பாற்றக் கூடிய ஒரே ஒரு மனிதனை நாடினாள். அது அவளது சின்னப்பன் காசிப்போடி. வேலுப்போடியின் தம்பி.

ஆங்கிலப்படிப்பு படித்தவன் அத்துடன் தமயன் மாதிரி நிறைய மந்திரம் படித்தவன். ஆனால் செய்வினை சூனியத்தில் ஈடுபடாமல் கச்சேரியில் கிளார்க்காக வேலை செய்கிறான். ஆனாலும் அடிக்கடி தன்னிடம் வந்தழும் மல்லிகாவின் கண்ணீர் அவனைச் சிந்திக்கப் பண்ணியது;.

காதலியைத்தேடி வந்த ஆனந்தன் என்றஅந்நியனுக்கு நடந்த கொடுமையும் நறுவிலி மரப் பேய்களின் கதையும் அவனுக்கும் தெரியும்.

உண்மையான அன்புக்காக இணைந்த இந்தத்தம்பதிகள்; இவர்கள்.

கிருஷ்ணனுக்கு ஏதும் நடந்தால் மல்லிகா உயிர் வாழமாட்டாள் என்று அவளின் சித்தப்பனான காசிப்போடிக்குத் தெரியும்.
தன் தமயனின் செய்வினையால் இவர்களும் இறந்து போவதை அவன் அனுமதிக்கத் தயாராயில்லை.

பூசை செய்ய அவன் ஒப்புக்கொண்டான்.

‘ ஆனால் மடைப்பெட்டி இல்லாமல் பூசை செய்ய முடியாதே வெறும் மந்திரம் செய்து என்ன பிரயோசனம் அம்மன் சிலை மடைப்பெட்டியிலுள்ளதே?’; ஏக்கத்தை முகத்தில் சுமந்தபடி மல்லிகா தாயிடம் சென்றாள்.

வேலுப்போடியிடம் எவ்வளவு கோபம் இருந்தாலும் வேலுப்போடிக்கு எதிராக மடைப்பெட்டியைத் தொடச் சந்திரவதனா தயாராயில்லை.

‘அழகம்மாவையும் ஆனந்தனையும் கொலை செய்த அப்பாவுக்கும் கோபாலனுக்கும,; மடைப்பெட்டியைத்தந்து என் கணவரின் உயிரைக்காப்பாற்றாத உங்களுக்கும் என்ன வித்தியாசம்’

மல்லிகாவின் கேள்வி, சந்திரவதனாவை அம்பாய்த் துளைத்தது.

வெறும் தலையிடி என்று தொடங்கி அன்று கிட்டத்தட்ட நடைப்பிணமாயிருக்கும் தனது மருமகன் கிருஷ்ணனைப் பார்த்தாள். அவனின் உயிருக்காக மன்றாடும் தன் அருமை மகளைப் பார்த்தாள்.

இவன் நோயை மந்திரத்தால் குணப்படுத்த முடியுமோ என்று சந்திரவதானவுக்குத் தெரியாது.

கிருஷ்ணனுக்கு மூளையில் கட்டி என்றும் தங்களால் முடிந்த சிகிச்சையெல்லாவற்றையும் தாங்கள் செய்து விட்டதாகப் பட்டணத்து டொக்டர்கள்; சொன்னதாகவும் மல்லிகா சொன்னாள்.

கடல்நாச்சியம்மனுக்குப் பூசை செய்வது மல்லிகாவின் கடைசி முயற்சி.

தமயனுக்கெதிராகப் பூசை செய்யப் போகும் காசிப்போடியில் மரியாதை பிறந்தது. தனது மைத்துனரைப்பார்த்தாள். காசிப்போடியுடன் பூசை செய்ய உடுக்குகளுடன், மந்திர ஏடுகளுடன் வந்து நிற்கும் உதவிப் பூசாரிகளின் தைரியத்தை மெச்சினாள்.
அவர்களின் துணிவு அவளை வியக்கப்பண்ணியது.

வேலுப்போடியின் செய்வினை,சூனியத்திற்கு அவர்கள் இனியும் பயப்படப் போவதில்லை என்று அப்பட்டமாகத்தெரிந்தது.
ஆனந்தன்- அழகம்மாவின் பேய்களால் பேதலித்துப் போய் இப்போது இன்னுமொரு உயிர் பலியாக வேண்டாம் என்று கெஞ்சும் ஊர் மக்களைப்பார்த்தாள்.

தெய்வமாடுவதற்கா-மஞ்சளிற் குளித்து, திரு நீறணிந்து,வேப்ப மரக்கொத்துக்களைதத்தாங்கி பய பக்தியுடன நிற்கும் ஆண்கள், பெண்களைப்பார்த்தாள். வெள்ளைத துணி போட்டு மூடி,ஒன்பது மடைப்பெட்டி தாங்கி வந்த பக்தைகளைப் பார்த்தாள்.
மத்தள ஒலிகள், மந்திர உச்சாடாணங்கள, அம்மன் துதி பாடும் இளைஞர்கள், ஒன்பது மடைப் பொங்கலுக்கும் அரிசி போடக் காத்திருக்கும் பக்தர்கள் எல்லோரையும் பார்த்தாள்

அத்தனை மக்களின் நம்பிக்கையும் சந்திரவதனாவிற் தங்கியிருக்கிறது என்பதை நினைக்க அவளுக்கு உடல் சிலி;;ர்த்தது.

‘மச்சாள்;;;;;;;—’

காசிப்போடி தயங்கினான்.

அவன் என்ன சொல்லப்போகிறான் என்று சந்திரவதனாவுக்குத் தெரியும்.

‘கட்டிய புருஷன் என்பதற்காக அதர்மங்களை எதிர்க்காமலிருப்பது நியாயமா’?

காசிப்போடி நிதானமாகக் கேட்டான். ஊரார் அத்தனைபேரும் தங்கள் முகங்களில் அந்தக் கேள்வியைத் தாங்கி நின்றார்கள்.
அந்த ஊரிற் பிறந்த மக்களில் பெருப்பாலோனோர் தனது தயவுக்குக் காத்திருப்பது அவளது பயத்தைப் போக்கியது.

வேலுப்போடி வீட்டை விட்டுத் துரத்தியபின் அந்த வீட்டுக்குள் அவள் காலடி எடுத்து வைத்தது கிடையாது.

தனது இரு மகள்களுடனும், ஊர் மக்களுடனும் வீட்டையடைந்தபோது, பூசாரி வேலுப்போடி நல்ல நித்திரை. இரவு கோபால் வீடடில் வைரவருக்கு மடை வைத்துக் கஞ்சா றொட்டி சாப்பிட்ட களைப்பில் குறட்டை விட்டு நல்ல நித்திரை.

அம்மன் சிலை வைத்திருக்கும் பெட்டகத்தின் திறப்பு, வேலுப்போடியின், வேட்டி நுனியில் முடிச்சுப்போடப்பட்டிருந்தது.
கஞ்சா வெறி போட்டால் வேலுப்போடிக்கு உலகம் தெரியாது.

வைகாசி மாதச்சூட்டின்; கொடுமையில் வியர்வை ஆறாகப்பெருகிப் பூசாரி போட்டிருந்த சேர்ட்டை நனைத்திருந்தது. அவனையணுகித் திறப்பெடுத்ததும், முதிரை மரத்தாலான,மிகப் பழமையான அந்தப் புனிதமான பெட்டகத்தைத திறந்து மடைப்பெட்டி எடுத்ததும் ஏதோ கனவில் நடப்பது போலிருந்தது.

மத்தளம் கொட்டியது. பூசாரிகளின் உடுகுகள் ஒலித்தன, உச்சாடணங்கள் காற்றில் பரவின. பெண்களின் குரவையொலி கடலலையுடன் கலந்தது. தாமரைப்பூ,தாழம்பூ,வெற்றிலை பாக்கு,பழவகைகள், பொங்கல், பலகாரங்கள், றொட்டி வகைகள் மடையை நிரப்பின.

சடங்கில் கலந்து கொண்டு தெய்வமாட வந்திருக்கும் ‘தெய்வங்களுக்கு’ உரு வரத்தொடங்கி விட்டது.
பூசாரிகள் மந்திர உச்சாடணம் சொன்ன படி, உரு வந்த தெய்வங்களிடம், கிருஷ்ணனுக்குச் சூனியம் செய்தவர்கள் யார்,அவர்கள் எந்தத் திசையிலிருக்கிறார்கள்; என்று அடையாளம் சொல்லச் சொல்லி சாட்டையால்; அடித்துக் கொண்டிருந்தார்கள்.
அந்த நேரம் பார்த்து ஆவேசக் குரலையெழுப்பிய படி வந்து கொண்டிருந்தார் வேலுப்போடி.
வார்த்தைகள் வெடித்தன.

தனக்கு எதிராகப் பூசை செய்ய வந்திருக்கும் தனது தம்பியைக் கண்டதும் மிருகமெனக் கத்தினார் பூசாரியார்.
மடைப் பெட்டியுடன் நிற்கும் மனைவியைத் தாக்க முனைந்த பூசாரியை ஊர்ப் பெண்கள் தடுத்தனர்.
சோர்ந்து போயிருக்கும் கணவன் கிருஷ்;ணனைத் தாங்கிக் கொண்டிருக்கும் மகள் மல்லிகாவைக் கண்டதும் அவரின் ஆத்திரம் எல்லை கடந்தது.

கடல் மண்ணை அள்ளியெடுத்துச் சாபம் போட்டுத் திட்டத் தொடங்கியவரை, வேப்ப மரத்தால் அடித்த தெய்வத்தைக்’ கண்டதும் பூசாரிக்கு மூச்சே நிற்பது போலிருந்தது.

பூசாரியை அடித்த தெய்வம் இதுவரை அவரால் தெயவமாடாமற்; தனது மந்திரத்தாற் ’கட்டி’ வைத்திருந்த அவரின் இளைய மகள் பூரணியாகும்.

அவளின் ஆக்ரோஷமான முகம் அழகம்மாவின் முகமாய்த் தெரிந்தது.

மஞ்சள் நனைத்த அவளின் சிவப்புச் சேலை அழகம்மா இறந்து தொங்கிய சேலையை ஞாபகப்படுத்தியது.

அவளைத் தொடர்ந்து பல ‘தெய்வங்கள’ பூசாரியைத் தாக்கின.

‘உரு’வந்த இளம் ஆண் தெய்வம் ஒன்று பூசாரியைப் புரட்டிப் புரட்டி அடித்தது.

ஆனந்தனின் ஆவியா அது?

தெய்வங்களின் ஆட்டத்தைக் கட்டுப்படுத்தும் பூசாரிகள் ‘ஏன் வேலுப்போடியை அடிக்கறீர்கள்’ உரு வந்த தெய்வங்களைக் கேட்டபோது,அவர் பல தெய்வங்களைக் கோபப் படுத்தி விட்டார் என்று பதில் வந்தது.

தனது மந்திரத்தைத் தரமற்ற-தர்மமற்ற வீணான முறையில் பாவித்து பூசாரிப் பரம்பரைக்கே இழுக்கு உண்டாக்கி விட்டதாக இன்னுமொரு தெய்வம் அடித்தது.

இதுவரை இவர் கட்டி வைத்த தெய்வங்கள் பல காரணங்களைச் சொல்லி வேப்ப இலையால் வெளுத்து வாங்கின.
ஊர் முன்னால், கடல் மணலில்; அதிகாரமற்ற தலைவனாய் விழுந்து கிடந்தாh பூசாரி.;.

இதுவரை செய்த கொடுமைகளெல்லாம் ‘உரு வந்த தெய்வங்கள் என்ற பெயரில் நியாயம் கேட்டு வேப்பிலையால் அடித்தன.
மனைவி, மக்கள், தம்பி, உற்றார், உறவினர் அத்தனை பேராலும் வெறுக்கப்பட்ட தனி மனிதனாய் வெயிலில் புரண்டார் பூசாரி.
இதுவரை மடைப்பெட்டியை வைத்துக்கொண்டு மக்களைத் தன் மந்திரத்தால் அடக்கி வைத்திருந்த பூசாரி இன்று ஊர் மக்கள் முன் தன் மிக மிக வலிமையான ஆயதமான மடைப்பெட்டியையும் இழந்து, மந்திரத்திற்கும் வலிமையற்று வெறும் மணல் புழுவாய் நெளிந்தார்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *