கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: நகைச்சுவை  
கதைப்பதிவு: March 24, 2014
பார்வையிட்டோர்: 14,232 
 

என் மருமான் சின்ன ராஜாமணியைப்பற்றி என் ஆபீஸ் துரையவர்கள் கேள்விப்பட்டு அவனைத்தாம் பார்க்க வேண்டுமென்று சொல்லியிருந்தார். இந்தச் செய்தியை நான் குழந்தையிடம் தெரிவித்தேன்.

அவனும் வெள்ளைக்காரர் எவரையும் பார்த்ததில்லை யாகையால் மிகவும் ஆவலுடன் தன்னுடைய நிஜாரையும், சொக்காயையும் மாட்டிக்கொண்டு தயாராய் நின்றான். குழந்தையுடன் துரையின் பங்களாவுக்குக் கிளம்பினேன். போகும் வழி முழுவதும் ராஜாமணி, ”துரை எப்படி மாமா இருக்கும்? அது பேசுமோ? அதுக்கு காலெல்லாம் இருக்குமோ? அது சாப்பிடுமோ? என்னத்தை மாமா சாப்பிடும்?” என்று பல கேள்விகளும் கேட்டு ஒருவாறு மனத்துக்குள், துரை என்றால் இன்னதென்று ஒரு தீர்மானம் செய்து வைத்திருந்தான்.

எங்களைக் கண்டதும் துரையவர்களும் புன்சிரிப்புடன் வந்து நின்றார். ராஜாமணி அவரைப் பார்த்துவிட்டு, ”இதுதானா துரே! துரேன்னியே, மாமா! கோங்கு மாதிரின்னா இருக்கு” என்றான். நல்ல வேளையாய்த் துரையவர்களுக்குத் தமிழ் தெரியாது.

”வாட் டஸ் தி பாய் ஸே? (பையன் என்ன சொல்கிறான்?)” என்றார்.

”உங்களைப் பார்ப்பதில் மிகவும் சந்தோஷம் என்கிறான்” என்றேன்.

”கோங்கு துரை பேசறதுடோய்” என்றான் ராஜாமணி. துரையவர்கள் என்னை நோக்கினார்.

”தனக்கு இங்கிலீஷ் புரியவில்லை என்கிறான்” என்றேன். துரை குழந்தையை வாரித் தூக்கினார். குழந்தைகளிடம் அவருக்கு மிகவும் அபிமானம். குழந்தைக்கு ஒரு முத்தமும் அளித்தார். துரையவர்கள் காலைப் போஜனத்துக்குப் பிறகு ஸிகரெட் பிடிக்கும் வழக்கமாதலால் அந்த ‘வாஸனை’ சற்று வீசியிருக்கும்போல் இருக்கிறது. உடனே குழந்தை, ”அம்பி மாமா! கோங்கு துரை வாயெல்லாம் நாத்தமா நார்றதே” என்று கத்தினான்.

”வாட்?” என்று துரையவர்கள் ஆங்கிலத்தில் வினவினார்.

”நீங்கள் மிகவும் நல்லவர் என்கிறான்” என்றேன். புகழ்ச்சியால் திருப்தி யடையாதவர் யார்? நான் சொன்னதைக் கேட்டதும் அவர் அடங்காத சந்தோஷத்துடன். ”ஹா! ஹா! ஹா!” என்று வாய்விட்டுச் சிரித்து, ராஜா மணியின் முதுகை மெதுவாய்த் தட்டிக்கொண்டு நயமான குரலில், ”வெரி நைஸ் பாய்” (மிகவும் நேர்த்தியான பையன்) என்றார்.

மிஸ்டர் ராஜாமணி மிஸ்டர் ராஜாமணி2மிஸ்டர் ராஜாமணி3

சின்ன ராஜாமணிக்கு ‘வெரி நைஸ்’ என்றால் என்ன தெரியுமா? ஏதோ தன்னை வைதுவிட்டதாக மாத்திரம் எண்ணிக்கொண்டான். வெகு கோபத்துடன் என்னிடம் வந்து நின்று, என் கோட்டைப் பற்றிக்கொண்டு துரையைப் பார்த்து, ”நீதான் வெரி! நோக்குத்தான் நைஸ், கோங்குப் பயலே” என்றான்.

எனக்கு இவனை ஏன் அழைத்து வந்தோமென்று ஆகிவிட்டது. துரைக்கோ இவன் சொல்வது ஒன்றும் புரியவில்லை. நான் ஏதாவது சொல்லுவேனோவென்று மீண்டும் மீண்டும் என்னை நோக்கினார். எனக்கும் என்ன சொல்வதென்று தோன்றவில்லை. பின்பு ஒருவாறு திடப்படுத்திக் கொண்டு துரையைப் பார்த்து, ”நானும் சீக்கிரம் இங்கிலீஷ் கற்றுக்கொண்டு உங்களுடன் பேசுகிறேன் என்கிறான்” என்றேன்.

ராஜாமணியிடம் துரைக்கு உண்மையிலேயே மிகவும் அபிமானம் ஏற்பட்டிருக்கிறதென்பது அவர் முகத்தில் நன்றாய்த் தெரிந்தது. எல்லாக் குழந்தைகளையும் வசியப்படுத்தும் சக்தி தம்மிடம் இருக்கிறதென்றும். குழந்தைகள் ஸ்வபாவமாகவே தம்மிடம் வருவதல்லாமல், ஒருவித மரியாதையும் காட்டுமென்றும் தற்பெருமையாய் ஐந்து நிமிஷம் பேசினார். நானும் முகம் மாறாது ஆமோதித்து வந்தேன்.

அப்பொழுது மூலையில் உட்கார்ந்து வாசித்துக்கொண்டிருந்த துரையவர்களின் ‘டைபிஸ்ட்’ தன் வயிற்றைப் பிசைந்துகொண்டு, முகத்தைச் சுளித்துக்கொண்டு மிகவும் வேதனையிலிருப்பவன்போல் துள்ளிக்கொண்டிருந்தான். துரையவர்கள் மிகவும் இரக்க சுபாவமுள்ளவர். டைபிஸ்டைப் பார்த்து, ”வாட் ஸ் தி மாட்டர் வித் யூ? (உனக்கு என்ன?)” என்று கேட்டார்.

”ஸிவியர் ஸ்டமக் ஏக், ஸார் (ரொம்ப வயிற்றுவலி)” என்று குழறினான் டைபிஸ்ட்.

”டேக் லீவ் அண்ட் ஸம் மெடிஸன் (போ, அப்பேன்! லீவு எடுத்துக்கொண்டு போய் மருந்து சாப்பிடு!)” என்று தயாளமாய்ச் சொன்னார்.

அவனும் உடனே வெளிச்சென்று மிகவும் வேதனையுடன் வாயிற்படியைக் கடந்து சென்றான். அவன்

வெளியேறினதும் யாரோ ஒருவர் அடக்க முடியாமல் விழுந்து விழுந்து சிரிக்கும் சப்தத்தைக் கேட்டேன். துரையவர்களும் ஏதோ ஞாபகமாய்த் தம் டைபிஸ்டுக்கு அடிக்கடி உடம்பு அஸெளகரியப்படுகிறதென்றும், ‘கேர்லெஸ் பெல்லோ’, ‘ஹெல்த்தைக் கவனிப்பதில்லை’யென்றும் ஆங்கிலத்தில் சொல்லிக் கொண்டிருந்தார்.

சிறிது நேரத்துக்கொல்லாம் அவரிடம் சொல்லிக் கொண்டு ராஜாமணியையும் அழைத்துக்கொண்டு வீடு வந்து சேர்ந்தேன். அன்று மாலை மேற்படி டைபிஸ்டை வாயிலில் கண்டேன்.

”என்னையா, காலம் கெட்டுக் கிடக்கிறது! எங்கே பார்த்தாலும் ரிட்ரெஞ்ச்மென்டாக இருக்கிறது. உமது மருமானா? அந்த வாண்டுப் பயலை விட்டு வேடிக்கைப் பார்க்கிறீரே! நான் சிரிப்பை அடக்கப்பட்ட பாடு கடவுளுக்குத்தான் தெரியும். நல்ல வேளையாகத் தப்பினேன்” என்றார்.

ராஜாமணிக்குப் படிப்பில் மிகவும் அவா உண்டு. தமிழில் ‘டிக்டேஷன்’ போடச் சொல்லி ஸ்லேட்டில் எழுதிக் காண்பிப்பது வழக்கம். ஒரு நாள் ஒரு ‘டிக்டேஷன்’ கொடுத்து எழுதச் சொன்னேன்.

”ஓர் ஊரில் ஒரு மாடு இருந்தது –” என்று ஆரம்பித்தேன். இதை எழுதிவிட்டானாவென்று பார்த்தேன். ‘ஓர் ஊரில்’ ‘ஒரு’ என்றுதான் எழுதியிருந்தான்.

”உம்” என்றேன்.

”என்ன மாமா, மாடா?”

”ஆம், மாடுதான், எழுது. ஓர் ஊரில் ஓர் மாடு– என்னடா எழுதமாட்டே னென்கிறாய்.”

”மாடா, மாமா?” என்று கேட்டான் மறுபடியும்.

”எவ்வளவு தரம் சொல்லுவது? மாடுதான்!” என்று அழுத்தமாய்ச் சொன்னேன். அவன் இன்னும் எழுதாதிருப்பதைப் பார்த்து, ”நீ எழுதப் போகிறாயா?” என்றேன்.

”பால் கறக்குமோல்லியோ, மாமா?”

நான் பதில் சொல்லாமல் காதில் விழாததுபோல் பாவனை செய்தேன்.

”நிறையக் காப்பி அகப்படுமோன்னோ, மாமா?” என்றான்.

நான் சற்றுத் திரும்பி உட்கார்ந்துகொண்டேன். பிறகு மிகவும் கவலையாய், ”கன்னூட்டியும் இந்துதோன்னோ மாமா?” என்று கேட்டான்.

”அதெல்லாம் உனக்கென்ன? சொன்னதை எழுதுடா” என்று பேச்சுக்கு இடங் கொடுக்காமல் சொன்னேன்.

”நம்மாத்திலே ஒரு மாடு வாங்கணும்” என்று கெஞ்சினான்.

”வாங்குகிறபோது வாங்கலாம். சொன்னதை எழுது என்று அதட்டினேன்.

ஆனால் அவன் என் வார்த்தைகளை வக்ஷ¢யஞ் செய்ததாய்த் தெரியவில்லை. ”ஒரு கன்னூட்டியும் வாங்கறயா, மாமா?” என்றான்.

குழந்தையை நான் அடிப்பது வழக்கமில்லாதபடியால் என்ன செய்வதென்று தெரியாமல் மெளனமாய் உட்கார்ந்திருந்தேன்.

”அம்பி மாமா, ஆக்கீலாத்திலே மாடு, கோக்குட்டு, வாங்கிருக்காளே.”

”ஆக்கீல் ஆருடா?” என்று கேட்டேன். அதற்குள் அவன் தாயார், ”வக்கீல் ஸ¤ப்ரமணிய அய்யராத்திலே 75 ரூபாயில் ஒரு மாடும், குஞ்சலமாட்டமா கன்னுக்குட்டியும் ஓட்டிக்கொண்டு வந்திருக்கிறார்கள்” என்றாள்.

அவ்வளவுதான்; ”நான் போய்ப் பார்த்தூட்டு வர்றேன், மாமா!” என்று சொல்லிக் கொண்டே சிலேட்டைப் பொத்தென்று கீழே போட்டுவிட்டு ஓட்டமெடுத்தான்.

***

ஒரு நாள் மாலை நான் ஆபீஸிலிருந்து சுமார் இரண்டரை மணிக்குத் திரும்பி வீட்டுக்குள் சென்றேன். வீட்டில் நுழைந்ததும் எனது அறைக் கதவு சாத்தப்பட்டிருந்தபடியாலும், இருவர் உள்ளே பேசும் சப்தம் கேட்டதாலும் சற்று அப்படியே நின்றுகொண்டிருந்தேன். பின்வரும் சம்பாஷணை காதில் விழுந்தது.

”நான் இன்னிக்கி சினிமா போப்போறேனே!”

”அதெல்லாம் இன்றைக்கு நிச்சயமாய்ப் பலிக்காது.”

”அம்பி மாமாகூடப் போப்போறேன்னா, அப்புறம்?”

”பலிக்காது என்றால், அப்புறம்?”

”நான் போவேன்!”

”நீ போகக்கூடாது!”

”உன்னை யார் கேட்டா?”

”நீ யார் சொல்வது?”

”நான்தான் சொல்றேன்; சின்ன ஆசாமணி சொல்றேன். அம்பி மாமா ஆபீஸிலேருந்து வந்துண்டே இருக்காளே, என்னை அழைச்சுண்டு போவாளே!”

”வந்துட்டேனே!” என்று சிரித்துக் கொண்டே உள்ளே நுழைந்தேன். என் அருமை மருமான் சின்ன ராஜாமணியும் என் அக்காளும் பேசிக்கொண்டிருந்தனர். குழந்தையும் முகத்தைத் துடைத்துக்கொண்டு கிராப்பை வாரிக்கொண்டு, நிஜாரைப் போட்டுக்கொண்டு தயாராய் நின்றான். என்னைக் கண்டதும் ஓட்ட ஓட்டமாய் ஓடி வந்து என்னைக் கட்டிக்கொண்டு, ”மாமா, இன்னிக்குச் சினிமாவுக்கு போகணும், மாமா” என்றான்.

”இன்னிக்கு சினிமா வாண்டாம்; பீச்சுக்குப் போவோம்” என்றேன்.

”பீச்சுன்னா என்ன?”

”அப்படீன்னால் என்ன?”

”சமுத்திரத்துக்குக்கிட்டே இருக்கும் கரை.”

”அங்கே என்ன பண்றது?”

”உட்கார்ந்து கொண்டிருக்கிறது.”

”எதற்காக?”

”சும்மாத்தான்.”

”சும்மா அங்கே போய் உட்கார வேண்டாம்.”

”பின் என்ன செய்யவேண்டுமென்கிறாய்?”

”நீ சினிமாவுக்கு வர்றயா, வல்லையா?”

”வரவில்லை என்றால் என்ன பண்ணுவாய்?”

”அப்போ, நீ வரமாட்டியா?”

”அப்போ வரவேண்டுமா?”

”மாமா, மாமா, வரமாட்டியா நீ?” என்று கெஞ்சினான்.

நான் தோல்வியடைந்தேனென்று சொல்லவேண்டியதில்லை. சினிமாவுக்குப் போயிருந்தோம். வெகு கவனமாய்ப் படத்தைப் பார்த்துக்கொண்டே வந்தான். ஒவ்வொரு தரமும் அவனுக்குப் படத்தில் வருபவர்கள் யாரென்று சொல்லவேண்டும். ”ஏன் அப்படிப் போனார்கள்? ஏன் அப்படி நின்றார்கள்?” என்று சொல்ல வேண்டியதுடன் சினிமா எப்படித் தயாரிக்கப்படுகிறது என்பதையும் சொல்ல வேண்டும். அவனுக்குப் புரிந்தவரையில் கேட்டுத் திருப்தியடைவான். எங்கள் முன்னிலையில் ஆங்கிலோ / இந்தியக் கனவான் ஒருவர் ஒரு பெரிய தொப்பியை அணிந்து அமர்ந்திருந்தார். அவருடைய ராஜாமணிக்குப் படத்தை மறைத்ததுபோலும்! குழந்தை என்னிடம் அதைப் பற்றிப் பல தடவை சொல்லியதிலிருந்து நான் அவரை, ‘ஸார்! தயவு செய்து கொஞ்சம் தொப்பியை எடுத்தால் நல்லது” என்று மிகவும் பணிவுடன் கேட்டுக் கொண்டேன். ஆனால் அப்பெரியார் என்னை நான்கு முறை விழித்துப் பார்த்துவிட்டுப் பேசாமல் இருந்துவிட்டார். குழந்தைக்குப் பொறுக்க முடியவில்லை.

”டேய்!”’ என்றான்.

அவர் உக்கிரமாய்த் திரும்பினார். எனக்குச் சற்று பயந்தான்.

”எடடா டொப்பியை, மறைக்கிறது!” என்றான்.

இதைக் கேட்டுப் பக்கத்திலிருந்த ஐந்தாறு பேர்வழிகள் எங்கள் பக்கம் திரும்பிக் கவனித்தனர். ராஜாமணி லக்ஷ¢யமில்லாமல் இருந்தான். அவனுக்குப் பயம் இன்னதென்று தெரியாது. இனிமேல்தான் கற்றுக் கொடுக்க வேண்டும்.

”எடடா, என்கிறேன், முழிக்கிறாயா?” என்று நாற்காலியில் ஏறி நின்று கை விரலை ஆட்டிக் கொண்டு கேட்டான்.

நான் ராஜாமணியை அடக்கினேன். எல்லோரும் விழுந்து விழுந்து சிரித்தனர். அப்பெரியாரும் வாய் பேசாது தம் கிரீடத்தைக் கழற்றினார். கடைசியில் வீட்டுக்குப் போகும்பொழுது, ”சினிமா எப்படி?” என்றேன். வழக்கம் போல், ”நன்னாவேயில்லை” என்று பதில் வந்தது.

ராஜாமணியைச் சாதாரணமென்று நினைத்துவிட வேண்டாம். அவன் மதராஸ¤க்குச் சொற்ப காலம் வந்து விட்டுப் போவதற்குள் ரொம்ப இங்கிலீஷ் கற்றுக் கொண்டு விட்டான்! அதுவும் மேனாட்டார் முறையிலேயே பேசுவான். ‘மெட்ராஸ்’ என்று சொல்வது பிழையாம். ‘மெராஸ்’ என்று சொல்ல வேண்டுமென்பான். அவனைக் கொஞ்சம் இங்கிலீஷ் பேசச் சொல்லுகிறேன், கேட்கிறீர்களா?

”அப்பா சொன்னா, ‘தி ஸினிமா இஸ் நைஸ்’ இன்னு. அம்பி மாமா சொன்னா ‘இடீஸ் வெர்ரி நைஸ்’ இன்னு. நான் சொன்னேன் ‘இடீஸ் வெர்ரி நைஸ்’ இன்னு” என்பான். இல்லாவிட்டால் ‘அப்பா சொன்னா ‘அயம் ஸாரி’ இன்னு. அம்பி மாமா சொன்னா, ‘அயாம் வெர்ரி, வெர்ரி ஸாரி’ இன்னு என்று சொல்லிவிட்டு விழுந்து விழுந்து சிரிப்பான்.

ராஜாமணிக்கு நெய், சர்க்கரை தின்பதில் வெகு பிரியம். ஆனால் ஒருவருக்கும் தெரியாமல் எடுக்கமாட்டான். அவை வைத்திருக்கும் இடத்தில் தாராளமாகப் போய் நின்றுகொண்டு, ‘மெராஸ் காலிங்! தி நெக்ஸ்ட் ஐடம் இஸ்! ஆசாமணி நெய்யைத் திருடறது!” என்பான். (நாலைந்து தினங்கள் பீச்சில் ரேடியோ கேட்க அழைத்துக்கொண்டு போனதில் குழந்தை இதைக் கற்றுக் கொண்டான்.) உள்ளே போய்ப் பார்த்தால் நெய்யில் ஐந்து விரல்களும் ஆழமாய்ப் பதிந்திருக்கும்.

ராஜாமணி சாப்பிடும்போது வெகு விநோதமாய்ப் பேசுவான். இலையில் உட்கார்ந்தவுடன், என்னைக் கூப்பிட்டு,

”பரமானம், பச்சடி, பஸ்ட் வில் கம்.

பொடலங்காய்க்கூட்டு நெக்ஸ்ட் வில் கம்” என்பான்.

”பருப்பு ரஸம், மோர்க் குழம்பு,

பதிர்ப்பேணி, லட்டு, பால்ப் போளி!

மாமா! ஆல் வெர்ரி நைஸ். வெர்ரி குட்! வெர்ரி ஹாட்” என்பான்.

ராஜாமணிக்குத் தெரியாத விஷயமே கிடையாது. போதாக்குறைக்கு ரு சாரிகளிலும் பத்து வீடுகளுக்குச் சென்று பல செய்திகள் கொண்டு வந்து விடுவான். அவைகளைக் கேட்காவிட்டால் விடமாட்டான்.

”அவாத்து மாமா சொல்றா, டாக்டர் ஜான்ன்னு ஒத்தனாம்.”

”உம்.”

”அவனுக்கு வெல்லக் கொழக்கட்டை புடிக்குமாம்.”

”சரி.”

”அத்தைத் தின்னா அவனுக்கு வயத்தை வலிக்குமாம்.”

”உம்.”

”பாத்தானாம்…”

”உம்.”

”கொழுக்கட்டை நிறையத் தின்னூட்டு, டுபாக்கி பாலே – டபார்னு – சுட்டூண்டானாம், மாமா!” என்று சிரிப்பான்.

”காந்தீனு ஒத்தராம்.”

”அப்புறம்.”

”உம்.”

”கோவிலுக்குள்ளே போகணும், விடறியா, மாட்டியா?” இன்னாராம்.”

”உம்.”

”ஆகட்டும்னு சொல்லியிருக்காளாம்” என்று ஏதாவது பேசிக்கொண்டே இருப்பான்.

ராஜாமணி எங்களிடம் வந்து வெகு நாட்களாகி விட்டன. அவன் தகப்பனாருடன் ஊருக்குக் கிளம்பினான். அவனைவிட்டுப் பிரியும்பொழுது மனம் மிகவும் கஷ்டப்பட்டது. எப்போதும் ஓயாமல் பேசிக்கொண்டும் குதூகலமாகவும் இருந்த குழந்தையை விட்டுப் பிரிய மிகவும் ஆயாசப்பட்டேன். அவர்களுடன் கூடவே ரெயில்வே ஸ்டேஷனுக்கும் போயிருந்தேன். ரெயில் வந்து கிளம்பும் நேரமாகிவிட்டது. குழந்தை என்னைக் கூப்பிட்டான். அரைத் தலை நிமிர்ந்து நோக்கினேன். அவன் குறும்பைக் காட்டினான்.

”அம்பி மாமா, சமத்தா இருக்கயா?” என்ன கேட்டான். நான் பேச முடியாமல் மெளனமாய் நின்றேன்.

”மண்ணிலே போகாதே? வெய்யில்லே அலையாதே! அம்மாவைப் படுத்தாதே!” என்றான். சிரிப்பும் துக்கமும் ஒருங்கே என் மனத்தைத் தாக்கின. உடனே ரெயில் ஊதிற்று. மெதுவாய் நகர்ந்தது. ‘குழந்தை எங்கே போய் விடுகிறான்? தகப்பனார் வீட்டுக்குத்தானே?’ என்று பலவாறு மனத்தைத் திடம் செய்துகொண்டும் முடியவில்லை. குழந்தை கைக்குட்டையை வீசினான். முகத்தில் புன்சிரிப்பும், போக்கிரித்தனமும் ஒருங்கே ஜ்வலித்தன. ”அம்பி மாமா! மெராஸ் காலிங்… தி நெக்ஸ்ட் ஐடம் ஈஸ் – ஆசாமணி மடுரைக்குப் போறது!” என்றான். என் கண்ணீரை அடக்க முடியவில்லை. தலை குனிந்து திரும்பி நடந்தேன்.

***

சென்ற வியாழனும் வெள்ளியும் எனக்குத் தூக்கமே கிடையாது. குழந்தை ராஜாமணியைப் பார்த்து ஆறு மாதங்களாகிவிட்டபடியால் உடனே ஓடிப்போய்ப் பார்த்துவிட்டு வந்தாலொழிய மனம் சமாதானம் அடையாது போல் தோன்றிற்று. சனியும் ஞாயிறும் விடுமுறை நாட்களாகையால் வெள்ளிக்கிழமை இரவே சென்னையில் ரெயில் ஏறினேன். மறுநாள் விடியற்காலையில் ஒரு சூட்கேஸ¤டன் மதுரை ஜங்ஷனில் இறங்கி நேராக வீட்டை அடைந்தேன். அங்கே நான் முதன் முதலில் பார்த்தவன் ராஜாமணிதான். வாசற்படியில் நின்றுகொண்டு சாவதானமாய்த் தன் அரிசிப் பற்களைத் தேய்த்துக்கொண்டிருந்தான். முன்பு பார்த்தபொழுது எப்படி இருந்தானோ அதே போலதான் இப்பொழுதும் இருக்கிறான். ஒரு வேளை சற்று உயர்ந்து இருக்கலாமோ என்னவோ! முன்பு இருந்த சுறுசுறுப்பும், கள்ளப் பார்வையும், பொல்லாத்தனமும் சற்றுகூடக் குறையவில்லை. வாசற்படியில் காலை வைத்தேன்.

”நீ யாரு?” என்றான் ராஜாமணி, எனக்குத் தூக்கி வாரிப் போட்டது. ஆனால் நான்கு வயதுக் குழந்தைதானே என்று மனத்தைச் சமாதானம் செய்துகொண்டு, ‘என்னைத் தெரியவில்லையா?’ என்றேன். யோசனை செய்தான். ”நோக்குக் கும்பகோணமா?” என்றான். ”ஆம்” என்றேன். திடீரென்று அவனுக்கு ஞாபகம் வந்துவிட்டது. ”நீ அம்பி மாமாவா, வந்திக்கியா?” என்றான். நான், ”ஆமாம்” என்று பதில் சொல்ல வாயெடுப்பதற்குள் ஒரே பாய்ச்சலாய் என்னைக் கட்டிக்கொண்டு, ”நேக்கு என்ன வாங்கிண்டு வந்திருக்கே, மாமா? பொட்டியைத் திற!” என்று ஆரம்பித்துவிட்டான்.

சிறிது நேரத்திற்குள் கூடம், தாழ்வாரம் எல்லாம் ரப்பர் யானை, குதிரை, ஒட்டகம் முதலியவைகளால் நிரம்பின. ராஜாமணி அவைகளை ஒவ்வொன்றாய் ஒட்டிப் பார்த்துவிட்டு வெளியிற் சென்றான். சில நிமிஷங்களுக்கெல்லாம் ஐந்தாறு சின்னப் பையன்களுடன் உள்ளே நுழைந்தான். அவர்களுக்கு ஒவ்வொன்றையும் பெருமையாய்க் காட்டி, ”பாத்தியாடா, எங்க அம்பி மாமா மெட்ராஸ்லேருந்து வந்திக்கா, என்னெல்லாம் வாங்கிண்டு வந்திருக்கா, பாருடா” என்றான். பிறகுதான் என்னுடன் பேச வந்தான்.

குழந்தையை நோக்கினேன். அவன் முதன்முதலாக இரண்டு வயதில் எங்கள் ஊருக்கு வந்திருந்தபோது விளையாடிய விளையாட்டுக்கள் என் மனக்கண் முன் ஓடிவந்தன. அப்பொழுது அவன் காலை ஏழு மணிவரையில் தூங்குவான். என் தாயார் அவனை எழுப்புவதற்காக, ”ஆசாமணி, எழுந்திருக்கிறாயா?’ என்று கேட்கும்பொழுது அவன் கண்களை இறக மூடிக்கொண்டு, ”தூங்கறேன், அம்மா” என்று ராகம் இழுப்பான். சற்று நேரத்துக்கெல்லாம் உள்ளே தோசை வார்க்கும் சப்தம் கேட்டதும் வாரிச் சுருட்டிக்கொண்டு எழுந்திருப்பான். குண்டு குண்டென்று உள்ளே ஓடி என் தாயார் பின்னால் நின்று பின் கையைக் கட்டிக்கொண்டு நயமான கெஞ்சின குரலில், ”பாத்தீ, தோசை வாக்கறியா? நேக்குத் தரயோ?” என்று கேட்பான்.

ஒரு சமயம் நாங்கள் ஸ்வாமிமலைக்குச் சென்று சுப்பிரமணிய ஸ்வாமிக்கு அபிஷேகம் – அர்ச்சனைகள் செய்தோம். குழந்தையை ஸ்வாமி சந்நிதியில் தூக்க வேண்டாம் என்று சற்றுக் கீழே விட்டதும், சரசரவென்று சமீபத்திலிருந்த நெய் விளக்கிற்குப் பிரதக்ஷ¢ணம் செய்து நமஸ்காரம் செய்துவிட்டான். பிறகு குருக்கள் அர்ச்சனை செய்து கர்ப்பூரம் காட்டும் பொழுது அவர் அவனைச் சற்றுக் கவனியாமல் அலட்சியமாய்ப் போய்விட்டதற்குத் தம் தம் என்று குதித்து எம் பெருமான் சந்நிதி கிடுகிடாய்க்கும்படி இரைச்சல் போட்டு, மேற்படி குருக்களைத் திரும்பி வரச் செய்து, பிரசாதங்களை வாங்கிக் கொண்டான். அப்போது நான் குழந்தைக்கத் தீர்க்காயுளும், சிறந்த கல்வியறிவும் கொடுத்தருளும்படி முருகனை மனமார வேண்டிக்கொண்டது ஞாபகத்துக்கு வந்தது.

அன்று சாயந்தரம் குழந்தையை வெளியில் அழைத்துக் கொண்டு போனேன். அவனுக்கு அந்த ஊரில் தெரியாத இடம் கிடையாது. எனக்கு எல்லாவற்றையும் காட்டிக் கொண்டே வந்தான். ஒரு பெரிய காப்பி ஹோட்டலின் வாசலில் வந்து நின்றோம்.

”மாமா, நீ கொஞ்சம் காப்பி சாப்பிடேன்.”

”வேண்டாம், ராஜா! இப்போதானே சாப்பிட்டோம்.”

”மாமா, கொஞ்சம்போறம் சாப்பிடு, மாமா” என்று கையைப் பற்றி இழுத்தான்.

”என்னடா உபசாரம் பண்ணுகிறாய்?” என்றேன்.

”இல்லை! நீ சாப்பிட்டா நானுங் கொஞ்சம் சாப்பிடலாமேன்னுதான்” என்று உண்மையைச் சொல்லிவிட்டான்.

இவனை அழைத்துக்கொண்டு போவதென்றால் எனக்குச் சற்றே பயந்தான். முன் ஒரு சமயம் இவனுடைய சித்தப்பா இவனை ஹோட்டலுக்குக் கூட்டிக்கொண்டு போனார். அவர் மிகவும் மதிப்பாய்க் குழந்தையைப் பார்த்து, ”எலே! போய் வேணுங்கறத்தைச் சாப்பிடுடா!” என்றார். குழந்தை பேசாமல் இருந்தான். ”போடா எலே, எதேது பிடிக்கிறதோ போய்த் தின்னுட்டு வாடா!” என்று வெகு அலட்சியமாய் பேசினார். ராஜாமணிக்குப் பொறுக்கவே முடியவில்லை. பேசினார். ராஜாமணிக்குப் பொறுக்கவே முடியவில்லை. உள்ளே சென்று ஒவ்வொரு தினுசிலும் ஒவ்வொன்று கேட்டு வாங்கிக் கடித்துக் கடித்துக் கீழே வைத்தான். பில் ரூ. 1-14-6 ஆயிற்று. பிறகு வெளியில் வந்து, ”இந்த ஹோட்டல் பிரயோசனமே இல்லை!” என்று பிரமித்துபூபோய் உட்கார்ந்திருக்கும் தன் சித்தப்பாவிடம் சொன்னானாம்.

நாங்கள் போய்த் தலைக்கு ஒரு கப் காப்பிதான் சாப்பிட்டோம். நான் சில்லறை கொடுத்துக் கொண்டிருக்கும்போது ராஜாமணி சமீபத்தில் போட்டிருந்த ஒரு ஸ்டூலின்மேல் ஏறி நின்றுகொண்டு ஹோட்டல்காரரைப் பார்த்து, ”என்ன காப்பி கொடுக்கிறேன்! ரொம்ப நன்னாவே இல்லையே? நேத்திக்குச் சின்னராயர் ஓட்டல்லே சாப்பிட்டேன். என்னமா ஜில் ஜில்லுனு இருந்தது, தெரியுமா?” என்றான். ஹோட்டல்காரர் சிரித்தார். நானும் மதுரை முழுவதும் விசாரித்தாகிவிட்டது. ”சின்னராயர்” என்று எவரும் ஹோட்டல் வைத்திருப்பதாகத் தெரியவில்லை. நேயர்களில் எவராவது கண்டுபிடிக்க நேர்ந்தால் தயவு செய்து எங்கள் ராஜாமணி கணக்கில் ஒரு கப் காப்பி சாப்பிடும்படி கேட்டுக் கொள்ளுகிறேன்.

எனக்கும் ராஜாமணிக்கும் சண்டை வந்து நீங்கள் பார்த்ததில்லையே? பத்து நிமிஷத்திற்குள் ‘டூ’ விட்டுக் கொண்டு மறுபடியும் ‘சேத்தி’யாகிவிடுவோம். குழந்தை அவன் தாயாரிடம் போய், ”அம்மா, அம்பி மாமாவுக்கு ரொம்பப் பச்சிக்கிறதாம். தோசை வேணும்னு சொல்றா” என்றான். அது என் காதில் விழுந்து விட்டது. ”என்னடா, உன்னை நான் சொல்லச் சொன்னேனாடா?” என்று கேட்டுக் கொண்டே உள்ளே சென்றேன். அதனால் அவனுக்கு ரொம்பக் கெளரவக் குறைச்சல் ஆகிவிட்டாம். உடனே என்னுடன் ‘டூ’ விட்டுக்கொண்டு ஒரு பத்தடி தூரத்தில் அரைமுகமாகத் திருப்பிக்கொண்டு விசிக்க ஆரம்பித்தான். அடிஉதடு வாய்க்குள் வெகு விசையாய்ச் சென்று திரும்பி வந்துகொண்டிருந்தது.

”அடே ராஜாமணி! துருத்தி ஊதாதே, வேண்டாம்” என்றேன். சற்று நேரம் மெளனம். மெதுவாகப் பின்நடை நடந்து என்னை நெருங்கிக் கொண்டிருந்தான். நான் கவனிக்ககாததுபோல் பாசாங்கு செய்தேன். அவன் முதுகு என் மேல் பட்டது. என்னுடன் ‘டூ’ விட்டதாகக் காண்பித்துக் கொள்ளக் கூடாதாம். ”அம்பி மாமா! சித்தே முந்தி ‘வேண்டாம்’னு சொன்னியே, அதுக்கு ‘வாண்டாம்’னுதானே அர்த்தம்?” என்றான்.

ஞாயிற்றுக்கிழமை மாலை 6 மணி. ஊருக்குக் கிளம்பினேன். ராஜாமணிக்குத் தெரியாமல் என் டிரங்கு, படுக்கை முதலிய சாமான்கள் அடுத்த வீட்டுக்குக் கொண்டு போய் வைக்கப்பட்டன. எல்லோரிடமும் சொல்லிக்கொண்டு கிளம்பினேன். குழந்தைக்கு நான் ஊருக்குப் போவதாகத் தெரியாது.

”அம்பி மாமா, சின்ன அத்தை யாத்துக்குப் போறியா?” என்றான். பதில் ஒன்றும் சொல்லாமல நகர்ந்தேன்.

நேற்று அவன் தகப்பனாரிடமிருந்து ஒரு கடிதம் கிடைத்தது. அது பின்வருமாறு :

”சிவி. அம்பிக்கு அநேக ஆசீர்வாதம். நீ செளக்கியமாய்ப் போய்ச் சேர்ந்திருப்பாயென்று நம்புகிறேன், … குழந்தை ராஜாமணி ‘அம்பி மாமா சின்னத்தையாத்திலிருந்து வந்துண்டே இருக்காளே. வந்த அப்புறம் நானும் கூடப் போய் மெராஸ்லே பி.ஏ. வாசிக்கப் போறேனே’ என்று சொல்லிக்கொண்டே இருக்கிறான். …. வேறு விசேஷமில்லை.

உன் பிரியமுடன்

வி.கே.

***

சென்ற வாரம் விடியற்காலையில் வாசல் ஜன்னலை திறந்து வைத்துக்கொண்டு அரைத் தூக்கமாய்ப் படுத்துக் கொண்டிருந்தேன். ஓர் சிறு கை வாசல்கதவை மெதுவாய்த் தட்டிற்று; ஓர் இனிமையான குரல். ”அம்பி மாமா! அம்பி மாமா!” என்று கூப்பிட்டது. ஒரே பாய்ச்சலில் படுக்கையைவிட்டுக் குதித்து ஓடிப்போய்க் கதவைத் திறந்தேன். மறுகணம் என் அருமை மருமான் ராஜாமணி என்னைக் கட்டிக்கொண்டான். ”எப்படா ராஜா வந்தே?” என்றேன். ”நான்தான் வந்தேன் மாமா, அம்மாவை அழைச்சிண்டு; ‘திர்வன்றம் எச்சுப்பச்சு’லேதான் வந்தேன்” என்றான். நான் என் தமக்கை பக்கம் திரும்பி, ”ஏனம்மா, ஒரு கடுதாசி போடக்கூடாதா? நான் ஸ்டேஷனுக்கு வரமாட்டேனா?” என்றதற்கும் அவனே பதில் சொல்லிவிட்டான்” போடணும்தான். ஆனாக்கே ஒழியவேல்லே, மாமா” என்றுதான் ஏதோ பெரிய மனிதன்போலும், குடும்பக் காரியங்கள் எல்லாவற்றையும் கவனித்துக்கொள்கிறவன் போலும் பதில் சொன்னான்.

ராஜாமணி எப்போதும்போல் என்னிடம் ஆசையாகத்தான் இருந்தான். ஆனால் முன் போல் நாள் முழுவதும் என்னுடனேயே கழிப்பதில்லை. நான் ஆபீசுக்குப் போயிருக்கும் நேரமெல்லாம் அவன் அம்மாமியுடன் பேசிக்கொண்டிருப்பான். அவனைப் பள்ளிக்கூடத்தில் சேர்த்தாகிவிட்டதாவென்று கேட்டேன்.

”ஓ! ஆச்சே, மாமா! நான் ஒண்ணாங்கிளாஸ்னு வாசிக்கிறேன்!” என்றான்.

”ஏண்டா, உனக்குப் பள்ளிக்கூடம் பிடிக்கிறதா?” என்று கேட்விட்டேன்.

”அம்பிமாமா, எங்க வாத்தியார் சார் வந்து தொரெஸாமி அய்யர்; அவருக்குக் கிளி மாதிரி மூக்கு இருக்கு. அதனாலே அவரைக் ‘கிளி மூக்கு’ இன்னே நாங்கள்ளாம் கூப்பிடறோம். நாங்கள்ளாம் கணக்குப் போட்டுண்டு கஷ்டப்பட்டா அவருக்கு ரொம்ப ஸந்தோஷம், மாமா.”

”ஏண்டா அப்படிச் சொல்கிறாய்?”

”இல்லே, மாமா. வந்து திங்கட்கிழமை காலமே போன ஒடனே கணக்குப் போடறா, ‘ஒரு ஆனை மூணு ரூபான்னாக்கே, நாலு யானை என்ன வெலை’ இன்னு. எங்க வாத்தியார் என்ன, ஆனை வாங்கப் போறாரா? அதுக்காக எங்களை எதுக்கு மாமா குட்டணும்?”

”சரி, அப்புறம் என்ன வாசிப்பாய்?”

”தமிழ்ப்பாடம் ஒண்ணு வச்சிருக்கா. அதிலே ஒண்ணுமே கிடையாது. அதிலே அணில் குஞ்சையும், துரை பொம்பையையும் போட்டிருக்கான். எனக்குச் சிரிச்சுச் சிரிச்சு வயிறு வலிச்சுப் போச்சு.”

”அப்புறம்?”

”அப்புறம் கணக்குச் சொல்லித் தரா. ஒரு நாளைக்கு அப்பா கணக்குப் போட்டுக் குடுத்தா. ‘யாருடா போட்டா இதை? ரைட்டாயிருக்கேடா’ன்னார், ‘கிளி மூக்கு’. ‘நான்தான் ஸார் போட்டேன் நேத்திக்கு’ இன்னேன். ‘பொய் சொல்றேடா. வா போர்டுக்கு’ன்னார். ‘இல்லே ஸார். அப்போ போட்டேன், ஞாபகமிருந்தது. அதுக்குமேலே காபி குடிச்சுட்டு வந்தேன். சித்தே மறந்து போயிருக்கு. அப்புறம் ஆகட்டும்’ன்னேன். அப்படியும் விடாமே அந்தக் ‘கிளி மூக்கு’ என்னெ ரெண்டடி அடிச்சுடுத்து. எனக்காக ஒண்ணு, அப்பாவுக்காக ஒண்ணுன்னு நினைச்சுண்டு பேசாமே இருந்துட்டேன், மாமா.”

”குழந்தைக்குப் பேசவே தெரியாது!” என்று சொல்லிக்கொண்டே என் தமக்கை அவ்விடம் வந்தாள். அத்துடன் அந்தச் சம்பாஷணை நின்றது.

எங்கள் ராஜாமணி தலை வாரிக்கொள்வது, டிரஸ் செய்துகொள்வது எல்லாம் அம்மாமியிடந்தான். அம்மாயி வந்து ஒரு வருஷத்துக்குள்ளாகத்தான் ஆகிறது.

நான் வீட்டில் இல்லாத வேளைகளிலெல்லாம் அவன் அம்மாமியுடன் வம்பளந்து கொண்டிருப்பான். விசாரித்ததில் அந்தப் போக்கிரி அவளை ரொம்பப் பயமுறுத்திக்கொண்டிருந்ததாகத் தெரிய வந்தது.

”ஏ அம்மாமி! எங்க அம்பி மாமாக்குக் கோவம் வந்தா என்ன பண்ணுவா, தெரியுமா?” என்றானாம் ஒரு நாள.

”தெரியாது” என்றி பதில் வந்ததாம்.

”நீ மாமாவுக்குப் பால், காபி எல்லாம் கொடுக்கறே, ரொம்ப சரி. ஆனாக்கே, மாமா இருக்கிற பக்கம் தவிர எங்கே பார்த்தாலும் பார்க்கறியே, எதுக்கு? அதனாலே மாமாக்கு ஒம் பேரிலே ரொம்பக் கோவம். அதுக்கோசரம் நீ இன்னிக்கு மத்தியானம் நல்ல டிபனாப் பண்ணி, திதிக்கத் திதிக்கக் கொடுக்கணும், தெரியுமா?” என்றானாம்.

நான் தினம் ஆபீஸ¤க்குக் கிளம்பும்போதெல்லாம் குழந்தை, ”மாமா! ‘பல்லூன்’ வாங்கிண்டு வர்றயா, மாமா?” என்று கெஞ்சுவதே வழக்கமாக இருந்தது. இரண்டு நாளைக்குமுன் சாயந்தரம் வீட்டுக்குத் திரும்பும்போது ஒரு ‘பல்லூன்’ வாங்கிக் கொண்டு போனேன். அவன் கையில் அதைக் கொடுத்தது முதற்கொண்டு அதே காரியமாய் அதை ஊதிக்கொண்டே இருந்தான். நான் சாப்பிட உட்கார்ந்த போதும் என் பின்னால் நின்றுகொண்டு ஊதிக்கொண்டிருந்தான்.

திடீரென்று ‘படா’ரென்ற பிரம்மாண்டமான சப்தம் கேட்டது. என் பின்னால் நின்ற ராஜாமணியின் முகத்தைப் பார்க்கவேணுமே. சற்றத் தூரத்தில் ‘பல்லூன்’ வெடித்துக் கீழே கிடந்தது.

”ஆச்சோல்லியோ காரியம்? ஒரு வழியா தூங்கப் போ” என்றாள் அவன் தாயார். ராஜாமணி யார் பேரில் குற்றஞ் சாட்டலாமென்று இரண்டு நிமிஷம் யோசனை செய்தான். கடைசியில் என்னிடம் வந்து, ”இல்லே மாமா, போனாப் போறது. எம் பேரிலே பெசகே இல்லே, மாமா. அந்த ராஜி அம்மாமி இருக்கோல்லியோ, அது சொல்லித்து, ‘இன்னம் ஊதுடா, ஊதுடா’ ன்னு. நான் ஊதிப்பிட்டேன். அவ்வளவுதான்!” என்றான்.

நான் சிரித்தேன். எங்கே நான் கோபித்துக் கொள்ளப் போகிறேனோவென்று பயந்து கொண்டிருந்த ராஜாமணி நான் சிரிப்பதைப் பார்த்துவிட்டுச் சற்றுத் தைரியமாய் என் கழுத்தைக் கட்டிக்கொண்டு, ”மாமா, மாமா! நாளைக்கு நல்ல ‘பல்லூ’னா இன்னொண்ணு வாங்கிண்டு வர்றயா, மாமா?” என்றான்.

நேற்று இரவு ராஜாமணி என்னுடன் படுத்துக்கொண்டிருந்தான். ”சாயந்தரம் எங்கே போயிருந்தாய்!” என்று கேட்டேன்.

”மாமா. இன்னிக்குச் சாயந்தரம் நான் அப்பாவோடே பீச்சுக்குப் போனேன். அம்மாகூட வந்தா. அசட்டு அம்மாமி முன்னாலே வரமாட்டேன்னா. நான் சொன்னேன், ‘நீ வர்றயா, இல்லாட்டா நான் ஒன்னை மடுரையிலே போய்ப் பரியாசம் பண்ணட்டுமா’ன்னு. அப்புறம் பயந்துண்டு வந்துட்டா.

”என்னோடே அடுத்தாத்துப் பயல் கிட்டு வந்திருந்தான். நாங்கள்ளாம் மணலிலே விளையாடினோம். அந்தப் பயல் சொன்னான், ‘எலே ஆசாமணி! என்னை வந்து ஒரு பெரிய திமிங்கிலம் கடிச்சுடுத்துரா’ன்னு. ‘திமிங்கிலம்னா என்னடா’ இன்னேன். அவன் வந்து ஒரு சின்ன கட்டையைக் காமிச்சு, ‘அதுக்குள்ளேதாண்டா அது இப்போ ஒளிஞ்சிண்டுடுத்து’ இன்னான். நான் ஒரு கழியாலே குத்திக் குத்திப் பார்த்தேன். ஒண்ணையும் காணல்லே. ‘சரிதாண்டா, நண்டாயிருக்குமடா’ன்னேன். ‘இல்லவே இல்லேடா, பெரிய திமிங்கிலம்டா. கொட்டப்பாக்கத்தனை பெரிசா இருந்து தடா’ன்னான் , மாமா!”

”அப்புறம்!”

”ராஜி அம்மாமி வந்து நின்னுண்டே இருந்தா. ஒரு பெரிய அலை வந்தது. அப்படியே நனைச்சுட்டுப் போயிடுத்து. நான் வந்து, ‘நோக்கு நன்னா வேணும். எங்க அம்பி மாமாக்கு நேத்தி ராத்திரி உருளைக்கிழங்குக் கறி சரியாப் போடலியோன்னோ நீ?” இன்னேன். எல்லாத்துக்கும் அவள் சிரிக்கிறா, மாமா!”

”போனாப் போறாள். அப்புறம்?”

”அப்புறம் கறுப்பா ஒண்ணா ஓரத்திலே மொதந்தது. கிச்சா சொன்னான், ‘எலே! காட்டெருமைடா’ன்னு. நான் சொன்னேன், ‘ஆமாண்டா, கல்லெடுத்து அடிடா!’ இன்னு. அப்புறம் பார்த்தாக்கே அது கறுப்பா யாரோ ஒரு மாமா குளிச்சிண்டிருக்கா. நான் மண்ணைத் தூக்கிப் போட்ட உடனே எழுந்திருந்து வந்து, ‘என்னடா பசங்களா?’ இன்னார் நான் ஓட்டமா ஓடிப் போய் அப்பா பக்கத்தில் நின்னுண்டேன். அந்த மாமாவும் சிரிச்சுண்டே அங்கே வந்தார். அவரைப் பார்த்து அப்பா, ‘நம்ம ராஜாமணி யானைன்னு நினைச்சுண்டிருப்பான்’ இன்னார். அதுகூட அந்த மாமாவுக்குப் பிடிக்கல்லே.”

”சரி.”

எனக்கு இப்போது கொஞ்சம் தூக்கம் வந்தது. ஒரு புறமாய்த் திரும்பிப் படுத்துக் கொண்டேன். ராஜாமணி மேலும் பேசிக்கொண்டே போனான்.

”மெராஸ் ரொம்ப நன்னாருக்கு. எங்க ‘கிளி மூக்கு’ மட்டும் பார்த்தார்னாக்கே ஆச்சரியப்படுவார். ஆனாக்கே மாமா – மாமா! – மாமா! – மாமா! – தூங்கறியா?”

”ஆமாண்டா” என்றேன்.

”ஆனாக்கே மாமா, அவங்ர இங்கே வந்தா, ‘பீபிள்ஸ் பார்க்’ இருக்கே. அதிலே புடிச்சுப் போட்டுண்டு வா, மாமா! மாமா! மாமா!”

நான் பதிலே சொல்லவில்லை.

ராஜாமணியின் சிறிய கை என் தலை, நெற்றி, கண், மூக்கு, மோவாய்க்கட்டையை எல்லாம் மெதுவாய்த் தடவிற்று. பிறகு கண்களை மூடிக்கொண்டு தன் சிறிய வாயைத் திறந்து அழகாய் ஒரு கொட்டாவி விட்டான் அவன்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *