தின/வார இதழ்: தினமணி
கதைத்தொகுப்பு: சுட்டிக் கதைகள்
கதைப்பதிவு: May 5, 2013
பார்வையிட்டோர்: 8,567 
 

பள்ளிக்கூடம் விட்டு வந்ததிலிருந்தே செல்வி சோகமாகக் காணப்பட்டாள்.எப்பொழுதும் சுறுசுறுப்பாகவும் விளையாட்டுத்தனத்துடன் காணப்படும் செல்வி இன்று ஏனோ களையிழந்து காணப்பட்டாள். ஏனென்று தெரியவில்லை!

காலையில் பள்ளிக்குச் செல்லும்போது மகிழ்ச்சியுடன்தானே சென்றாள்!

மாலைக்குள் பள்ளியில் என்ன நடந்தது?

நாட்டுப் பற்றுபள்ளியிலும் செல்வி நல்ல மாணவிதான். வகுப்பிலே முதல் மதிப்பெண் வாங்குவாள். எல்லோருடனும் பண்புடனும் மரியாதையுடனும் நடந்து கொள்வாள்.

அனைத்து ஆசிரியர்களுக்கும் அவளை மிகவும் பிடிக்கும். நல்ல மாணவி என்று அனைவரும் பாராட்டுவார்கள்.

அதனால், ஆசிரியர் யாரும் செல்வியைக் கடிந்து கொள்ளவும் வாய்ப்பு இல்லை!

பிறகு ஏன் செல்வி இப்படி இருக்கிறாள்?

அம்மா லட்சுமிக்கு வருத்தமாக இருந்தது!

எப்பொழுதும் ஓடி ஆடக்கூடிய குழந்தை, இப்படி ஒரே இடமாக உட்கார்ந்திருந்தால் எந்தத் தாய்தான் வருத்தப்படாமல் இருப்பாள்?

மெதுவாக செல்வியை நெருங்கினாள் லட்சுமி…

“செல்விம்மா, இன்னிக்கு கிளாஸ் எப்படிப் போச்சு? மிஸ், என்ன பாடம் நடத்தினாங்க?’ என்று மெல்லப் பேச்சுக் கொடுத்தாள்.

எப்போதும் பேச்சுக் கொடுத்தவுடன் சட்டென்று பதில் சொல்லும் செல்வி, இன்று, ‘ம்..ம்.. என்னவோ நடத்தினாங்க…’ என்று முகத்தைத் திருப்பிக்கொண்டு கன்னத்தில் கைவைத்துக் கொண்டு பேசினாள்.

அவள் பதில் சொன்ன விதம் லட்சுமிக்கு என்னவோ போல இருந்தது!

“ஏம்மா… அம்மா மேல ஏதும் கோபமா?’ கனிவாகக் கேட்டாள் லட்சுமி.

“இல்லம்மா…’

‘பிறகு ஏனம்மா? பள்ளி விட்டு வந்ததிலிருந்து இப்படி சோகமாக உட்கார்ந்திருக்கிறாய்? பள்ளியில் யாரும் உன்னைத் திட்டினாங்களா? இல்லை… உன் தோழிங்க யாரும் உன்னுடன் சண்டை போட்டார்களா?’ பொறுமையாகக் கேட்டாள் லட்சுமி.

“போங்கம்மா… அந்த மகிமா சுத்த மோசம்! இன்னிக்கு அவ என்ன சொன்னா… தெரியுமா..?’

மூன்றாம் வகுப்பு படிக்கும் எட்டு வயதுப் பெண் செல்வி பேசுவதைக் கண்கொட்டாமல் பார்த்துக் கொண்டு கேட்டுக் கொண்டிருந்தாள் தாய் லட்சுமி.

“சரிம்மா… மகிமா என்ன சொன்னாள்?’

“அவங்க அப்பா கார் வாங்கிட்டாராம்மா… பெரிய பங்களா வீட்டுக்குப் போகப் போறாங்களாம். சமையல்காரங்க, வேலைக்காரங்க எல்லாம் வச்சுக்கப் போறாங்களாம்… உங்க வீடு சின்னது… உங்ககிட்ட கார் கிடையாது… வேலைக்காரங்களும் கிடையாது… நீங்களெல்லாம் எங்களுக்குக் கீழேதான் என்று சொல்லி வெறுப்பு ஏத்தறாள்ம்மா…’ என்று புலம்பினாள் செல்வி.

“ஓ… இதுதான் பிரச்னையா? சரி… அவ அப்பா எங்கே வேலை பார்க்கிறார்… அவங்க அம்மா என்ன பண்றாங்க…?’

“அவங்க அப்பா வெளிநாட்டுல வேலை பார்க்குறாரும்மா… அவங்க அம்மாவும் இங்கே ஒரு பெரிய வெளிநாட்டுக் கம்பெனியில வேலை பார்க்குறாங்க…’

“சரி… உன்னோட அப்பா எங்க வேலை பார்க்குறாரு? உங்க அம்மா வேலை பார்க்குறாங்களா?’ என்று கேட்ட லட்சுமியைக் கூர்ந்து பார்த்தாள் செல்வி.

“என்னம்மா, புதுசா கேக்குறே? என்னோட அப்பா அரசாங்க வேலை பார்க்குறதும், நீ குடும்பத்தலைவியா இருந்து எங்களையெல்லாம் நல்லா கவனிச்சுக்கிறியே… இது தெரியாமயா நான் இருக்குறேன்…’ என்றாள் செல்வி சற்றே கோபத்துடன்.

“பார்த்தியா..? மகிமாவோட அப்பா இங்க படிச்சு வளர்ந்தாலும் நாட்டுப்பற்றில்லாமல் வெளிநாட்டுல போய் வேலை பார்க்குறார்… நம்ம நாட்டுப் பெரியவர்களிடம்தானே படித்தார். அவரது அறிவையெல்லாம் நமது நாட்டுக்குத்தானே பயன்படுத்த வேண்டும்…

நம்ம அப்பா நாட்டுப் பற்றோட, நம்ம அரசாங்கத்துல வேலை பார்க்குறாரு… நான் எவ்வளவு நாள்கள் உனக்கு நம்ம சுதந்திரப் போராட்டத்தைப் பற்றிக் கதை கதையா சொல்லியிருக்கேன்…

வெளிநாட்டுப் பொருள்களை வாங்கக்கூடாதுன்னு கதர் உடுத்தின காந்தி பிறந்த நாட்டுல வாழற நாம, நம்ம நாட்டுக்காகத்தான் உழைக்கணும்! பாடுபடணும்…

அப்பத்தான் நம்ம நாடு உயரும். நன்றியில்லாம வெளிநாட்டுக்காரன் நிறையச் சம்பளம் தர்றான் என்று வெளிநாட்டுக்குப் போறவங்க கார் வாங்கினா என்ன? பிளேன் வாங்கினா என்ன? செல்வி… மத்தவங்ககிட்ட இருக்கிறதை நாம ஒப்பிட்டுப் பார்க்கக் கூடாது. ஆண்டவன் நமக்குத் தேவையானதைக் கண்டிப்பாகத் தருவான்…

நீயும் கடினமா உழைச்சு நல்லாப் படி… நீயும் ஒருநாள் கலெக்டர் ஆயிடுவே! நமது அரசாங்கமே உனக்கு நல்ல சம்பளம் கொடுக்கும்… நீயும் கார் வாங்குவே… ஏன்? அரசாங்கமே உனக்குக் கார் கொடுக்கும்.. பங்களா கொடுக்கும்… என்ன புரியுதா?’ என்று பொறுமையாகக் கூறினாள்.

செல்வியின் மனது தெளிவு பெற்றது. முகத்தில் பழைய சந்தோஷம் திரும்பியது. மகிழ்ச்சியுடன் பாடங்களைப் படிக்கத் தொடங்கினாள்.

– கவிதா வீராசுவாமி (பெப்ரவரி 2012)

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *