தின/வார இதழ்: தினமணி
கதைத்தொகுப்பு: சுட்டிக் கதைகள்
கதைப்பதிவு: October 18, 2013
பார்வையிட்டோர்: 13,711 
 

அந்த ஆரம்பப் பள்ளிக்கூட வளாகத்தில் வடக்குப் பக்கம் வேலியில்லாமல் இருந்தது. எப்போதோ போட்ட வேலி சிதைந்திருக்க வேண்டும். அதனால் ஆடுமாடுகள் சுவாதீனமாக உள்ளே வந்து போவதை வழக்கமாய்க் கொண்டிருந்தன. அதுவும் ஒரு கருப்பு ஆடும் வெள்ளை ஆடும் அதையே தொழிலாகக் கொண்டு தினமும் உள்ளே வந்து போய்க் கொண்டிருந்தன.

உயிர்கள்
வளாகத்தின் ஒரு மூலையில் சத்துணவுக்கூடம் இருந்தது. குழந்தைகளுக்கு சத்துணவு சமைக்கும் ஆயாக்கள் கொட்டுகிற காய்கறிக்கழிவுகளும் குழந்தைகள் சரியாகச் சாப்பிடாமல் கொட்டுகிற சத்துணவும்தான் அவற்றுக்கு உணவு. அவற்றைத் தின்று நன்றாக உடம்பை வளர்த்திருந்தன.

“”இந்தப் பிள்ளைகள் சரியாகச் சாப்பிடாததால் நமக்கு நல்ல உணவு கிடைக்கிறது” என்றது வெள்ளை ஆடு.

“”கண்டிப்பாக… போடுகிற காய்கறிகளையும் கீரைகளையும் அப்படியே கொட்டி விடுகின்றன குழந்தைகள்… அதனால் நாம்தான் சத்துணவு சாப்பிட்டு நன்றாக இருக்கின்றோம்” என்றது கருப்பு ஆடு.

இதனால் இரண்டு ஆடுகளும் பிள்ளைகள் மேல் ரொம்பவும் பிரியமாக இருந்தன. பிள்ளைகள் சாப்பிட்டுவிட்டு ஆடுகளை விரட்டி விளையாடுவார்கள். ஆடுகளும் சந்தோஷமாக பிள்ளைகளுடன் விளையாடி மகிழும்.

ஒருநாள் ஆடுகள் முன்னதாகவே வந்துவிட்டன.

சத்துணவு சமைக்கும் ஆயா மாரியம்மா முளைக்

கீரையையும் பீன்ûஸயும் அரியத் துவங்கினாள். அவளுக்கு உதவியாக வருகிற நீலாவை இன்னும் காணோம். வெள்ளை ஆடு எட்டிப் பார்த்தது.

“”ச்சூ.. ச்சூ..” என்று விரட்டி விட்டாள். இதைப் பார்த்து கருப்பு ஆடு சிரித்தது.

“”உனக்கு என்ன அவசரம்? தினமும் காய்கறிக்கழிவை நமக்குத்தானே தருகிறார்கள்… அவசரப்பட்டால் எப்படி…”

“”அதற்கில்லை…. இன்றைக்கு கீரை சாம்பார் போலிருக்கிறது. முளைக்கீரை இளசாகப் பார்க்க நன்றாகவே இருக்கிறது…. ஹி…ஹி… கொஞ்சம் பச்சைக் கீரையையாவது போடமாட்டார்களா என்றுதான்…” என்றது வெள்ளை ஆடு.

“”போதும்… போதும்… இருக்கிற புல்லை மேய்கிற வழியைப் பார்… சின்னக் குழந்தைகள் நன்றாகச் சாப்பிட்டு வளரட்டும்” கருப்பு ஆடு சொன்னது.

“”சரி… நான் அந்தக் குழாய் ஓரம் மேய்ந்துவிட்டு தண்ணீர் குடித்துவிட்டு வருகிறேன். நீ வேண்டுமானால் இங்கேயே இரு…”

வெள்ளை ஆடு போனதும் கருப்பு ஆடு படுத்துக் கொண்டது. லேசாக அசை போட்டுக் கொண்டே மாரியம்மா சமைப்பதை வேடிக்கை பார்த்தது.

மாரியம்மா ஏதோ புலம்பிக்கொண்டே வேலை செய்தாள். அடுப்பில் குழம்பை கொதிக்க விட்டுவிட்டு தண்ணீர்க்குடத்தைத் தூக்கிக் கொண்டு குழாயடிக்குச் சென்றாள்.

கருப்பு ஆடு அடுப்பு எரிவதையும் குழம்பு கொதிப்பதையும் பார்த்துக் கொண்டேயிருந்தது.

திடீரென மேற்கூரையிலிருந்து ஒரு பல்லி குழம்பில் தவறி விழுந்ததைப் பார்த்துவிட்டது. ஆட்டுக்குத் திகீரென்றது. என்ன செய்வதென்றே புரியவில்லை.

மாரியம்மா திரும்பி வந்ததும் கனைத்தது. கால்களால் தரையைப் பிராண்டியது.

“”அடச்சே… சும்மா கிட” என்று ஆட்டை விரட்டிய மாரியம்மா, குழம்பை இறக்கி வைத்தாள்.

கருப்பு ஆடு வேகமாக வெள்ளை ஆட்டிடம் ஓடியது.

“”அய்யோ.. பெரிய ஆபத்து…”அலறியது.

“”என்ன விஷயம்?” வெள்ளை ஆடு கேட்டது.

“”அந்தக் குழம்பில் பல்லி விழுந்துவிட்டது….” பதறியது கருப்பு ஆடு.

“”அச்சச்சோ… வா… ஓடிவிடலாம்…” என்றது வெள்ளை ஆடு. கருப்பு கோபத்துடன் சீறியது.

“”ச்சீ… நீ என்ன மனிதர்களைப் போலப் பேசுகிறாய்? உணவில் விஷம் என்று அவர்களுக்கு எப்படிப் புரிய வைப்பது? சின்னக் குழந்தைகள் ஆசையாகச் சாப்பிட்டால் என்ன ஆவது? அய்ய்யோ… இப்ப என்ன செய்வது?”

“”ஒன்றும் செய்ய முடியாது. அவர்களெல்லாம் மனிதர்கள். நாமோ மிருகங்கள்… போய் குழம்பை மொண்டு காட்டவா முடியும்? பேசாமல் நாம் போய்விடலாம்…”

ஆனால் கருப்பு ஆடு அங்குமிங்கும் நடந்தது. தரையில் முட்டிக் கொண்டு அழுதது… மாரியம்மா குச்சி எடுத்து ஆடுகளை விரட்டியடித்தாள்.

வெள்ளை ஆடு தலைதெறிக்க ஓடிப் போனது.

கருப்பு ஆடு மட்டும் அங்கேயே காத்திருந்தது. மதிய உணவுக்கான மணி அடித்தது…

மாரியம்மா குழம்பையும் சோறையும் ஆற வைத்திருந்தாள்.

சின்னச் சின்னக் குழந்தைகள் பூக்களைப் போல ஓடி வந்தன.

குழந்தைகள் தட்டுகளை ஏந்தி வரிசையாக வந்து நிற்க, மாரியம்மா சோறைப் போட்டு குழம்பை ஊற்ற கரண்டியை எடுத்தாள்.

அவ்வளவுதான்….

கருப்பு ஆடு விசுக்கென்று பாய்ந்து பாத்திரத்தைக் கவிழ்த்தது. கவிழ்த்ததோடு மட்டுமன்றி குழம்பையும் குடித்தது.

“”அச்சச்சோ… என்ன அநியாயம் இது?” மாரியம்மா குச்சியை எடுத்து ஆட்டை அடிஅடியென்று அடிக்க ஆரம்பித்தாள்.

“”குழந்தைங்க வயத்துல அடிச்சுட்டியே…” என்று கூப்பாடு போட்டபடியே ஆட்டை அடித்தாள்.

கருப்பு ஆடு அங்கேயே படுத்துவிட்டது.

மற்ற ஆசிரியர்கள் எல்லோரும் ஓடி வந்தார்கள்.

“”என்ன ஆச்சு?… இதுக்குத்தான் ஆடுகளை உள்ளே விடக்கூடாது…. பாருங்கள் இப்ப என்ன நடந்திருக்குதுன்னு…” என்று கோபப்பட்டார்கள்.

“”இந்த ஆட்டை அடித்து விரட்டுங்கள்” என்று ஒரு ஆசிரியர் ஆரம்பித்தார்.

இதற்கிடையில் படுத்துக்கிடந்த கருப்பு ஆடு வாயில் நுரை தள்ளியிருந்ததை ஆசிரியர் ஒருவர் கவனித்துவிட்டார்.

“”ஆ… ஆடு சாப்பிட்ட குழம்பில் விஷமா?” என்றார்.

“”மாரியம்மா… குழம்பைப் பாரு…”

“”அய்யோ… அதென்ன குழம்புக்குள்… பல்லியா… அடக் கடவுளே….”

சற்று நேரத்தில் அந்த இடமே களேபரமானது.

“”குழம்பில் பல்லி விழுந்ததை உணர்த்தவே இந்த ஆடு குழம்பையும் கொட்டிவிட்டு, தானும் சாப்பிட்டிருக்கிறது…” என்று ஒருவர் கூற மற்றவர்களுக்கு உண்மை உரைக்க ஆரம்பித்தது..

“”இத்தனை உயிர்களைக் காப்பாற்றிய இந்த ஆட்டைக் காப்பாற்ற வேண்டும்” என்று ஒருவர் கூற, அதற்கு மருந்து கொடுக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டன.

“”தன் உயிரைக் கொடுத்து குழந்தைகளைக் காப்பாற்ற நினைத்திருக்கிறது… இந்த ஆடு உண்மையிலேய நல்ல ஆடுதான்…”

மருந்துகள் சாப்பிட்டதில் கருப்பு ஆடு தன்னிலைக்குத் திரும்பியது. அப்போது வெள்ளை ஆடு மெல்ல அதனருகே வந்தது.

“”நடந்ததையெல்லாம் பார்த்துக் கொண்டுதான் இருந்தேன். என்னை மன்னித்து விடு… உன் உயர்ந்த உள்ளத்தைப் புரிந்து கொள்ளவில்லை…”

“”சரி… சரி… அதை விடு… யாராயிருந்தாலும் உயிர்கள் முக்கியமில்லையா? அதுவும் சின்னக் குழந்தைகள்… நாளை பெரியவர்களாகி எல்லா உயிரையும் தன்னுயிர் போல நினைப்பார்கள்…”

கருப்பு ஆடு சொன்னதை வெள்ளை ஆடு ஆமோதித்தது.

– சூ. ஜூலியட் மரியலில்லி (ஆகஸ்ட் 2013)

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *