கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்  
கதைப்பதிவு: February 25, 2013
பார்வையிட்டோர்: 10,277 
 

அவன் காலை விழித்தெழுந்தபோது அறைமுழுக்க தண்நீர் நிரம்பியிருந்தது, அவனும் பிற நண்பர்களும் படுத்திருந்த பாய்கள் நீரின்மேல் தெப்பம்போல் மிதந்தாடிக்கொண்டிருந்தன. அவன் எழுந்து உட்கார்ந்து கண்ணைக் கசக்கியதும் நிறைந்திருந்த நீரெல்லாம் மன்னிப்புக்கேட்டுக்கொண்டு எங்கோ ஓடி மறைய, அவர்கள் தரைக்கு வந்தார்கள்.

அவன் கண்கள் இன்னும் எரிந்துகொண்டிருந்தது. கண்ணாடியில் பார்த்தால் செக்கச் செவேலென்று சிவந்திருக்கும் என்பது அவனுக்குத் தெரியும். சீக்கிரமே படுத்துவிட்டாலும், ராத்திரி சரியாய்த் தூக்கமில்லை. எத்தனை மணிக்கு தூக்கம் வந்தது என்றே தெரியாதபடிக்கு யோசனைகளின், கற்பனைகளின் அவஸ்தை, கடிகாரம் இரண்டு மணி அடித்ததைக் கேட்டதாக ஞாபகம். அதன்பிறகு தூங்கியும்கூட, வழக்கமான ஆறரைக்கு கண் சிவக்க எழுப்பிவிட்டது உடம்புக் கடியாரம்.

மாறன் மறுபடி தூங்கலாமா என்று யோசித்தான். கண்களை மூடினாலே உள்ளே வந்து நிற்கிற வீடுகள் அவனைத் தூங்கவிடாது என்று நிச்சயமாய்த் தெரிந்திருந்தது. எழுந்து நின்று பெரிதாய் சோம்பல் முறித்துக்கொண்டான். படக் படக்கென்று எலும்புகள் முறிந்து வீழ்வதுபோல் சப்தம், தலைக்குள் ஏதோ ஒரு பந்து தன்னிச்சையாய் உருள்வதுபோல், மண்டைச் சுவர்களில் அது பிடிவாதமாய் மோதி மோதிச் சுழல்வதுபோல் ஒரு பிரம்மை, தலைவலி நரக வேதனை.

பேஸ்ட்டைப் பிதுக்கி பிரஷ்ஷில் அமைத்துக்கொண்டு பின்னால் இருக்கிற வாஷ்பேஸினைப் பார்க்க நடந்தான். இன்னும் கலையாத தூக்கத்தில் கால்கள் பின்னிப்பின்னி நகர்ந்ததில் ரொம்பதூரம் நடப்பதுபோல் ஒரு எண்ணம். அப்படி இல்லாவிடினும் அந்த வீடு பெரியதுதான், வாசலுக்கும் கொல்லைக்கும் ஐம்பது தடவை விறுவிறுவென்று நடந்தால் ரெண்டு கிலோமீட்டர் ஓடிவிட்டு வந்ததுபோல் வியர்வையில் உடல் இளகிச் சொட்டும், ரொம்ப மழை பெய்து வழக்கமான காலை ஜாக்கிங் போகமுடியாத சூழ்நிலைகளில் அவனும், பிற நண்பர்களும் அப்படி நடப்பது வழக்கம்தான்.

இப்போதிருக்கிற வீட்டின் விஸ்தீரணத்தை நினைத்தமாத்திரத்திலேயே அவனுடைய நினைவைப் பிற வீடுகள் ஆக்கிரமித்துக்கொண்டன, அதற்காகவே காத்திருந்தமாதிரி. ராத்திரி தூங்கவிடாமல் படுத்தியதுபோல், இப்போது விழித்திருக்கவிடாமல் செய்யப்போகிறோம் என்று அவனைச் சுற்றிவந்து நடனமாடின அந்த வீடுகள், அவன் மீண்டும் பாயில் படுத்துக்கொண்டு நீரில் மிதந்தபடி தூங்க ஆசைகொண்டான்.

கொஞ்ச நாட்களாகவே அவனை வீடுகளின் பயம் பிடித்துக்கொண்டிருந்தது. சரியாய்ச் சொல்வதானால் இரண்டு மாதம், மூன்று நாட்களாக. அவனது திருமணம் நிச்சயமான தினத்திலிருந்து, விசேஷத்துக்காக ஊரிலிருந்து வண்டிபிடித்து வந்திருந்த பெரிய மாமா, ‘என்னலே, கல்யாணத்துக்கப்புறம் சேர்ந்து வசிக்க வீடெல்லாம் பார்த்தாச்சா ?’ என்று கொச்சையும், சுத்தமும் கலந்த கிராமத்துத் தமிழில் கேட்டதிலிருந்து. ‘இன்னும் இல்லை மாமா, இனிமேதான்’ என்று அவன் வெகுளியாய் பதில் சொல்லி, ‘என்னலே, இதிலயா சோம்பேறித்தனம் காட்டறது ? பட்டணத்தில வீடு கெடக்கிறதெல்லாம் ரொம்ப சிரமமுன்னு சொல்லுதாக, இன்னமும் கோட்டி மாதிரி சுத்திக்கிட்டுத் திரியாம, சீக்கிரமா ஒரு எடத்தைப் பிடிச்சுப்போடற வழியப் பார்ப்பியா !’ என்று அவரிடம் வசவு வாங்கிக்கொண்டதிலிருந்து.

பட்டணத்தில் வீடுகள் கிடைப்பது உண்மையில் சிரமமே இல்லை என்றுதான் அவனுக்குத் தோன்றிக்கொண்டிருந்தது. அவனிருக்கிற பகுதியிலேயே மாதந்தோறும் பத்து வீடுகளாவது புதுச் செங்கல் வாடையோடு கட்டப்படுகிறது. கிட்டத்தட்ட அதே எண்ணிக்கையில் வீடுகள் காலியாகிறதையும் பார்க்கிறான், ஞாயிற்றுக்கிழமை செய்தித்தாளைத் திறந்தால் கல்யாணத்துக்கு ஆள் தேடும் வரி விளம்பரங்களுக்கு இணையாய், குடியிருக்க ஆள் தேடுகிறவர்களும் நிரம்பிக் கிடந்தார்கள்., தெருவுக்கு ஏழெட்டுபேர் பகட்டு ஆங்கிலத்தில், ‘ரியல் எஸ்டேட் ஏஜென்ட்ஸ்’ என்று பந்தாவாய் பலகை மாட்டிக்கொண்டு தரகு வேலை பார்த்துக் கிடந்தார்கள். இப்படியான எல்லாம் சேர்ந்து, பட்டணத்தில் வீடு தேடுவது மிகவும் சுலபமானது என்கிற அழுத்தமான நம்பிக்கையை அவனுக்குள் உண்டாக்கியிருந்தது, அதனால்தான் கல்யாணப்பேச்சு வந்ததும் வீடு வேட்டையைத் துவங்காமல், கொஞ்ச நாளாகட்டும் என்று விட்டுவைத்திருந்தான்.

நிச்சயதார்த்தத்தன்று பெரிய மாமா அப்படி மிரட்டியதும், பயங்காட்டியதும் அவனது நம்பிக்கையைக் கொஞ்சம் அசைத்துப் பார்த்தது. இப்போதிருக்கிற பேட்டையைத் தவிர்த்து, ஆ·பீசுக்குப் பக்கமாய் ஒரு சௌகர்யமான வீடாக தேடி வைத்துவிடலாம் என்று முடிவு செய்துகொண்டான், ஒரு சுபயோக சுபதினத்தில் மஞ்சள் நிறத்தொரு வரி விளம்பரப் பத்திரிகையை வாங்கி வைத்துக்கொண்டு அவன் மனதிலிருந்த பிரதேசங்களில் காலியிருக்கிற வீடுகளைக் கண்டறிந்து வட்டமிடலானான்.

பத்து வட்டங்கள் சேர்ந்தபின்னே ஆ·பீசுக்குக் கிளம்பிப்போய், அங்கிருக்கிற ·போனில் ஒவ்வொருவராய்க் கூப்பிட்டான், எல்லோரும் சொல்லிவைத்ததுமாதிரி, ‘அது எங்க வூடுதான் சார், ஆனா இப்போ வேற ஒரு பார்ட்டி வந்துட்டாங்க, ஸாரி’ என்றார்கள். அதோடு நிறுத்தியிருந்தால் பரவாயில்லையே, ‘என்கிட்ட வேற நாலஞ்சு வூடு இருக்கு சார், பார்க்க வர்றீங்களா ?’ என்று அத்தனை பேரும் ஒரே மாதிரியாய்ப் பல்லிளிக்கவே, அவனது சுமாரான மூளையிலும் ஒரு சந்தேகம் தட்டிவிட்டது. ‘மூன்று பெட்ரூம், கிச்சன், ஹால், பூஜை அறை, கார் பார்க்கிங் வசதி, இருபத்து நாலு மணி நேரம் தண்நீர், வாடகை மிகச் சொற்பம்’ என்றெல்லாம் சுகமான பொய் வார்த்தைகளில் தூண்டில்போட்டு ஆட்களை இழுத்துவிட்டு, அவர்கள் தலையில் சுமாரான பிற வீடுகளைக் கட்டிவிடுகிற புரோக்கர்களின் உத்திதான் இது என்பதை இன்னொரு அலுவலக நண்பன் அவனுக்கு விளக்கிச் சொன்னான், ‘இவனுங்ககிட்டயெல்லாம் போய் ஏமாறாதேப்பா, நான் ஒரு நல்ல ஏஜென்ஸி சொல்றேன், அங்கே போ, ஒரு மாச வாடகை கமிஷன் கேப்பான், என் பேரைச் சொன்னேன்னா முப்பது பர்சன்ட் கொறச்சுப்பான், அவன்கிட்டே உனக்கு என்ன மாதிரி வீடு வேணும்ன்னு சொல்லிட்டேன்னா போதும், அவனே அதுக்கேத்த வீட்டுக்கெல்லாம் உன்னை கூட்டிட்டுப்போய், உனக்குப் பிடிச்ச வீட்டு ஓனர்கிட்டே பேசி, அக்ரீமென்ட் போடறது வரைக்கும் எல்லாம் அவனே பார்த்துப்பான், நீ வெறுமனே வீட்டைப்பார்த்து ஓகே சொன்னாப் போதும், சரியா ?’ என்று அவன் கேட்டபோது மந்திரித்துவிட்ட கோழிமாதிரி மண்டையை ஆட்டினான் மாறன். ஒழுங்காய் வீடு கிடைக்குமா என்கிற பயம் உள்ளே உருள ஆரம்பித்திருந்தது.

அந்த ஏஜென்ஸியின் முகவரியை வாங்கிக்கொண்டு வந்தபிறகும்கூட மூன்று நாளைக்கு அவன் அங்கே போகவில்லை. இந்த வம்பிலெல்லாம் சிக்கிக்கொள்ளாமல் நாமாக வீடு தேடிப்போனால் என்ன என்று ஒரு யோசனை தோன்றி, ஆ·பீஸ் முடிந்தபிறகு தெருத்தெருவாய் பைக்கில் உலா வந்தான். ஒரு வீட்டு வாசலிலும் ‘டு லெட்’ மாதிரியான பலகைகளைக் காணோம், யாரிடம் போய்க் கேட்பது என்றும் தெரியவில்லை. வீதியில் நாயோடு வாக்கிங் போய்க்கொண்டிருந்த ஒரு பெரியவரை நிறுத்திக் கேட்டபோது, ‘எங்கே வீடு காலியா இருக்குன்னு எனக்கு என்ன தெரியும் மேன் ?’ என்று எரிந்துவிழுந்தார். ‘அடுத்த தெருவில ஒரு ஏஜென்ஸி இருக்கு, அங்கே போய்க்கேளு’ என்று அவர் சொல்லிவிட்டு மீண்டும் விறுவிறுவென்று நடக்கலானார், அவரது நாய் பொறுமையாய் அங்கே நின்று மூர்க்கமான தனது பற்களின் முழுமையை அவனுக்குக் காட்டி ஒருமுறை பெரிதாய்க் குரைத்துவிட்டு சங்கிலி இழுப்பில் அவர்பின்னே ஓடிப்போனது.

மூன்று நாட்கள் தேடி அலைந்தும் ஒரு காலியான வீட்டைக்கூட கண்டுபிடிக்க முடியாததில் அவனுக்கு ஞானம் விளைந்தது. நகரங்களைப் பொறுத்தவரையில் காலியாய் வீடு வைத்திருப்பவர்களும், காலியான வீடுகளைத் தேடி அலைகிறவர்களும் பக்கத்திலேயே இருந்தாலும்கூட, அவர்களை இணைப்பதற்கு ஏஜென்ஸி தெய்வங்கள் தேவைப்படுகிறது. எல்லோரும் அவர்களைத்தான் நம்பியிருக்கிறார்கள், யார் வீடு காலியானாலும், எந்த வீடு கட்டிமுடித்து கணபதி ஹோமம் பண்ணினாலும் உடனே அவர்களிடம்தான் விபரம் சொல்கிறார்கள், மறு திசையில் யாருக்கு வீடு தேவைப்பட்டாலும் அவர்களையே நாடி வரம்வேண்டி நிற்கிறார்கள், ஆகவே அவர்களின் அருளன்றி யாருக்கும் வீடுபேறு சாத்தியமில்லை. நான்காம் நாள் காலையில் அவன் அந்த ஏஜென்ஸி வாசலில் கால் மணி நேரம் காத்திருந்து சரணடைந்தான்.

ஏஜென்ஸி தேவன் கறுப்பு வண்ணத்தோடு பொருந்தாத ஆரஞ்சு டி சட்டை அணிந்து தங்கப் பல்லில் சிரித்தான், ‘உங்களுக்கு என்ன மாதிரி வீடு வேணும் சார் ?’ என்றான் வரமருள்கிற பாவனையில். அவன் கையிலிருந்த நோட்டுப் புத்தகத்தைப் பிரித்து மேஜைமேல் வைத்தபோது அதுநிறைய காலி வீடுகளின் விபரங்கள் அவர்களுக்குமட்டுமே புரிகிற பரிபாஷையில் எழுதிக் குவிக்கப்பட்டிருந்தன. மாறன் அந்த நோட்டையே பயபக்தியோடு வெறித்துப்பார்த்தான், பால்பாயின்ட் பேனாவால் அதில் நுணுக்கி நுணுக்கி எழுதப்பட்டிருந்த ஒவ்வொரு எழுத்தும் அவன் உள்ளத்தில் பால் வார்த்தது என்றுதான் சொல்லவேண்டும். உள்ளத்தில் வழிந்த பாலை ஒரு பாத்திரத்தில் பத்திரமாய்ப் பிடித்துவைத்துக்கொண்டால் இப்போதே வீடு பார்த்து பால் காய்ச்சிவிடலாம் என்ற நம்பிக்கை தோன்றியது. கல்யாணத்துக்கு இன்னும் நிறைய நாளிருக்கிறதே என்கிற ஆதங்கம்கூட எழுந்தது.

ஆனால் அவனால் அந்த முதல் கேள்விக்கே உடனடியாய் பதில் சொல்ல முடியவில்லை, என்ன மாதிரி வீடு வேண்டும் எனக்கு ? அல்லது கல்யாணத்துக்கப்புறம் எங்களுக்கு ? ஒரு வாரமாய் வீடு பார்க்கவேண்டும் என்றுதான் நினைத்துக்கொண்டிருக்கிறானே தவிர, எந்தமாதிரி வீடு என்றெல்லாம் நிச்சயமாய் யோசிக்கவில்லை. மறுபடி நாளைக்கு வருவதாக அவனிடம் சொல்லிவிட்டு குழப்பத்தோடு ஆ·பீசுக்குப் போனான் மாறன்.

அன்று முழுக்க ஒரே யோசனை – வீடு என்றால் வீடுதான், அதென்ன ‘எந்த மாதிரி வீடு’ ? அவன் அதுவரை இருந்திருக்கிற வீடுகளை மனதினுள் நிதானமாய் ஒருமுறை ஓட்டிப்பார்த்தான், அவையெல்லாம் எந்த மாதிரியான வீடுகள் ?

ஊரில் அவன் பிறந்து, வளர்ந்த வீடு சிறியதுக்கும், பெரியதுக்கும் இடைப்பட்ட நடுவாந்தரம். அகலம் குறைவானாலும், நீளமான வீடு அது, முடிவில்லாத வராண்டாவில் அறைகளெல்லாம் அங்கங்கே கீறிவிட்டதுபோல் இருக்கும், மேலே எப்போதோ வேய்ந்த ஓடு, கூடத்தில் மட்டும் கரகரவென்று சுழல்கிற மின்விசிறி. அப்பா, அம்மா, அண்ணன், அவன், தங்கைகள் எல்லோரும் கூடத்தில்தான் பாய்விரித்துப் படுத்துக்கொள்வார்கள், உள் அறைகள் யாவும் பொருட்களை நிரப்பிவைக்கிற கஜானாக்களாகவோ, கோடௌன்களாகவோதான் பயன்பட்டன. தங்கைகளுக்கெல்லாம் கல்யாணமாகிப் போய்விட்டபிறகு, அப்பா – அம்மாவோடு, அண்ணன் – அண்ணியும் அதே வீட்டில்தான் இருக்கிறார்கள், உள் அறைகளில் ஒன்றை அண்ணனுக்காக ஒழித்துக்கொடுத்திருக்கிறது. கூடத்தில் இருந்த பெரிய ·பேன் இப்போது அந்த அறைக்குள் போய்விட்டது, அண்ணன் கலியாணத்துக்கு வந்த ஒரு மேஜை விசிறி இப்போது கூடத்தில் தன்னைத்தான் சுற்றிக்கொண்டு அப்பா, அம்மாவையும் சொற்பமாய்ச் சுற்றிவருகிறது.

அதன்பிறகு அவன் இருக்கிற வீடு நகரத்தது. என்னதான் பெரிய ஊரானாலும், புற நகர் பகுதி என்பதால் சல்லிசான வாடகைக்கு நன்றாய் விரிந்து பரந்த வீடு கிடைத்தது அதிர்ஷ்டம்தான். இந்த வீட்டின் ஹால் மிகப் பெரியது, அங்கே இரண்டு ·பேன்கள் உண்டு, உள் அறைகள் இரண்டு, திசைக்கொன்றாய் ஒன்றையொன்று எப்போதும் பார்த்தபடி நிற்கும், அவற்றில்தான் அவனும், நண்பர்களும் படுத்துக்கொள்வது, கூடம் பெரும்பாலும் செய்தித்தாள்களை தரையெங்கும் விரித்து வைத்துப் படிக்கவும், நேற்றைய செய்தித்தாளை ஏன் ஒழுங்காய் எடுத்து வைக்கவில்லை என்று பரஸ்பரம் சண்டை போடவும்தான் பயனாகிறது. ஓரமாய் அடுக்கிவைத்த செருப்பு, ஷ¤க்களிலிருந்து மணலும், நெடியும், அழுக்கும் படிவதாலும், அதைச் சுத்தம் செய்வது யாருடைய கடமை என்கிற உரிமைப் போராட்டம் அவர்களிடையே இன்னும் முடிவுக்கு வராததாலும், ஹாலில் படுத்துத் தூங்குவது யாருக்கும் சாத்தியமில்லாத ஒன்றாகிப் போனது. ஆகவே, அவர்களைப் பொறுத்தவரை அவரவர் அறைக்குள் நுழைவதற்குமுன்னால் செருப்பைக் கழற்றுவதற்காக அமைக்கப்பட்ட இடைக்கால – ஆனால் பெரிய – அறைதான் அந்தக் கூடம் என்றாகிப்போனது.

இந்த இரு வீடுகளை மட்டுமே மனதினுள் வைத்திருந்த அவனால், இவற்றைக்கொண்டு இன்னொரு வீட்டிற்கான தேவைகளை வரையறுக்கமுடியும் என்று தோன்றவில்லை. அது மட்டுமில்லாது, இந்த இரு வீடுகளையும் அவற்றின் வெளித்தோற்றம், நீள – அகலங்களாக இல்லாமல், அவை தந்த ஏராளமான நினைவுகளாக, சுகமான, சோகமான அனுபவங்களாகவே அவன் மனதில் ஏற்றிவைத்திருந்தான். ஊர் மணம் என்று சொல்வார்கள், அது நாசியையா தாக்குகிறது ? மனதையல்லவா ? அதுபோல்தானே வீடு சம்பந்தப்பட்ட நினைவுகளும் !
ஊரிலிருக்கிற வீட்டை நினைக்கும்போதெல்லாம் அம்மாவும், அப்பாவும், தங்கைகளோடு கழித்த அவனது இளம்பிராயமும், விடலைத்தனமாய்ப் பொறுப்பின்றித் திரிந்த பள்ளி – கல்லூரிக் காலமும்கூட கம்பீரமாய் மனதில் வருகிறது, நகரத்திலிருக்கிற இந்த வீட்டை நினைக்கையில் முதல் சம்பளம் வாங்கிய சிலிர்ப்புணர்ச்சியும், ‘இனிமே நீயா சேமிக்கக் கத்துக்கணும்ப்பா’ என்று அப்பா சொல்ல, ஒரு வங்கிக்கணக்கு ஆரம்பித்து, அதில் ஒவ்வொரு ரூபாய் கூடும்போதும் பிரசவம் கண்ட பெண்ணைப்போல அவன் பெருமையுற்றதும், நண்பர்களோடு பகிர்ந்துகொள்கிற செலவுகளுக்கும், தனியே செய்கிற செலவுகளுக்கும் கணக்கு எழுதிவைத்து., அதில் எதைத் தவிர்க்கலாம் என்று ஆராய்ச்சியெல்லாம் செய்து கண்டுபிடித்து, சிக்கனமானதும், இன்னபிற பொறுப்பான நடவடிக்கைகளும் அவனுக்குள் மலர்கின்றன. அந்த வீடு அவன் படித்ததையும், படிக்காததையும், செய்த சிறுபிள்ளை கலாட்டாக்களையும், திருட்டுத்தனங்களையும், சலனங்களையும், மறைக்கத் தோன்றாத சந்தோஷங்களையும், அழுகைகளையும்கூட உடனிருந்து பார்த்துக்கொண்டிருந்தது, இந்த வீடு அவன் சம்பாதிப்பதையும், கட்டுசெட்டாய் அதைச் செலவு செய்வதையும் பெருமையோடு நோக்குகிறது.

நடக்கையில் கூடவே வரும் நிலவுபோல, வீடுகள் வாழ்க்கையின் மௌனமான அடையாளம், வழித்துணை. அவற்றை வெற்று சுவர்களுக்குள், அறைகளுக்குள் அடைக்கப்பார்ப்பது எத்தனை முட்டாள்தனம் !

இப்போது மூன்றாவதாய் ஒரு வீட்டைத் தேடவேண்டியிருக்கிற சூழ்நிலையில், வீடு என்பதை வீடாக மட்டுமே பார்த்துப் பழகின காலம் நீர்த்துப்போய், அதனை சதுர அடியில் கணக்கிட்டுப்பார்ப்பதும், ரெண்டு பெட்ரூமா, மூணா ? அட்டாச்ட் பாத்ரூம் வேணுமா, வேண்டாமா ? என்பதுபோன்ற நசிகேதன்தனமான தொடர் கேள்விகள் கேட்டு, அவை யாவற்றுக்கும் பொருந்தக்கூடிய, எல்லாவிதத்திலும் திருப்தியளிக்கிற ஒரு வீட்டைத் தேர்ந்தெடுப்பது நடக்கக்கூடிய காரியமா என்று தோன்றியது அவனுக்கு. வீடு பற்றிய அவனது இயல்பான எண்ணங்கள் மெல்லக் கரைந்துபோய் அது ஒரு பெரும் சுமையாய், தோளைப் பிடித்தழுத்துகிற கனமாய் அவனை ஆக்கிரமிக்கத் தொடங்கியதை அவன் ஒரு பேரிழப்பாய் உணர்ந்தான்.

அவனோடு தங்கியிருந்த ஒரு சிநேகிதனிடம் அவன் இதுகுறித்துப் புலம்பியபோது ஒரு குழப்பமான யோசனை கிடைத்தது, ‘இதோ பார் மாறன், வீடு செலக்ட் பண்ணும்போது உன்னோட சாய்ஸைவிட, உன் வை·போட விருப்பம்தான் முக்கியமா இருக்கணும் – ஏன்னா நீ பெரும்பாலான நேரம் ஆ·பீஸ்ல இருப்பே, இல்லை, வீட்ல தூங்கிட்டு இருப்பே, ஸோ, உன் வீட்ல நீ தங்கப்போற நேரம்ங்கறது உண்மையில ரொம்ப குறைச்சல், அதனால எதுனா பிரச்சனை இருந்தாக்கூட உன்னால அட்ஜஸ்ட் பண்ணிக்கமுடியும், ஆனா உன் மனைவி அப்படி இல்லை, அவங்கதான் முழுநேரம் வீட்டைப் பார்த்துக்கிட்டிருக்கப் போறாங்க, அவங்களுக்கு அது பிடிக்கலைன்னா அப்புறம் கஷ்டம்தான் !’

இதைக்கேட்டபிறகு அவன் இன்னமும் குழம்பிப்போனான். காரணங்கள் இரண்டு – ஒன்று, திருநெல்வேலிக்குப் பக்கத்தில் எங்கோ ஒரு கிராமத்தில் இருக்கிற அவனது வருங்கால மனைவியிடம் இதுகுறித்து எப்படிப் பேசுவது என்று அவனுக்குப் புரியவில்லை. இரண்டாவது, வீடு பார்க்கிற விஷயத்தில் தன்னுடைய விருப்பங்கள் என்ன என்பதே சரிவர புரியாத நிலையில், அந்தப் பெண் சொல்கிறவற்றையெல்லாம் கச்சிதமாய்ப் புரிந்துகொண்டு, அவற்றிற்கேற்ப வீடு தேடுவது எந்த அளவு தன்னால் சாத்தியம் என்று அவனுக்கு திகைப்பாய் இருந்தது, ஒரு வேளை, அவளிடம் பேசி, இப்படியெல்லாம் வீடு பார் என்று அவள் உரிமையோடு கட்டளையிட்டுவிட்டபிறகு, அதற்கேற்ற வீட்டைக் கண்டுபிடிக்கமுடியாமல்போனால் ? அல்லது அப்படிப்பட்ட வீடுகள் ரொம்ப வாடகை குடிக்கக்கூடியவை என்று அவனது சம்பள நிலைமை கூனிக் குறுகிவிட்டால் ? முதன்முதலாய் வாழ்க்கையில் நுழையும்போதே மனைவியிடம் அப்படியொரு அவமானத்தை வாங்குவது சரியானதுதானா என்று அவனுக்குக் கவலையாய் இருந்தது. ‘என்னவோ புதுசா மஹராஜா அரண்மனை பார்க்கப்போறமாதிரி அன்னிக்குக் கேட்டீங்க ? கடைசியில இந்தக் குடிசைதானா கிடைச்சது ?’ என்றோ, அல்லது, ‘இது அவுட் ஹவுஸாக்கும், நல்லா இருக்கு, மெயின் பங்களா எங்கே இருக்கு-ன்னு சொல்லவே இல்லையே ?’ என்றோ அவள் கேலியாய், அலட்சியமாய்க் கேட்டுவிட்டால் அவனால் அதைத் தாங்கமுடியாது என்பது நிச்சயம். அதற்கு பேசாமல் ஒரு வீட்டைப் பார்த்துவிட்டு, என்னால் இதுதான் முடிந்தது, சீக்கிரத்தில் வேறு பெரிய வீடு பார்த்துக்கொண்டு போய்விடலாம் என்று சரணடைந்துவிடுவது உத்தமம்.

அவன் பொதுவாய் எதிர்மறையாய்ச் சிந்திக்கிறவனில்லை. ஆனால் அவனுக்குப் பார்த்திருந்த பெண் பெரிய ஜமீன் வீட்டின் ஒரே செல்ல மகள் என்று தெரிந்ததிலிருந்து அவனுக்குள் நடுக்கமாகத்தான் இருக்கிறது. டவுன் பஸ்ஸில் பெண் பார்க்கபோன தினத்தன்று அப்பா அவர்களின் வீட்டை – அதை அரண்மனை என்று சொல்வதுதான் தகும் – தூரத்திலிருந்து சுட்டிக்காட்டியபோதே அவன் அரண்டுபோய்விட்டான், ‘என்னப்பா இது ? ரொம்பப் பெரிய எடமா ?’ என்று அவரிடமே பதறின தோரணையில் கேட்டான். அவர் வெற்றிலையைத் துப்பிவிட்டுச் சிரித்தார், ‘அப்படியெல்லாம் ஒண்ணும் சொல்றதுக்கில்லை. ஜமீன் பரம்பரைதான், ஆனா இப்போ கொஞ்சம் நொடிச்சுப் போயிருக்காங்க’ என்றார். அவர் சொல்லிமுடிப்பதற்குள், ‘ஆனா நமக்கு சீர் செனத்தியெல்லாம் ஒரு கொறை இல்லாம செஞ்சுப்புடுவாங்க’ என்றாள் அம்மா. அண்ணியும் சும்மாயிராமல், ‘அந்த பொண்ணை நீங்க பார்க்கணும் தம்பி, அசந்துபோய் இன்னிக்கே கல்யாணம் வெச்சுக்கலாமா-ன்னு கேப்பிய’ என்றாள் வெட்கமாய்ச் சிரித்து.

அண்ணி சொன்ன அளவுக்குப் பெண் அழகில்லைதான். ஆனால், சுமார் என்றும் ஒதுக்கிவிடுவதற்கில்லை. அவள் சிரிக்கும்போது அவனுக்குள் பட்டாம்பூச்சிகள் ஊர்வதுபோல் என்னென்னமோ செய்தது. போய் லெட்டர் போடுகிற சங்கதியெல்லாம் வைத்துக்கொள்ளாமல் அங்கேயே பெண்ணைப் பிடித்திருப்பதாய் சொல்லிவிட்டான். எல்லோருக்கும் ஏகப்பட்ட சந்தோஷம். சிரிப்பும், சள்ளையுமாய் பெரிசுகள் பொங்கிக் களிக்க கல்யாணப் பேச்சுகள் ஒருபக்கம் நடந்துகொண்டிருக்கையில் அவன் மெல்ல விலகிவந்து, பெண்ணின் மூன்று அண்ணன்களையும் வீட்டுக்கு வெளியே சந்தித்து, ‘பொண்ணோட கொஞ்சம் தனியாப் பேசணும்’ என்றான். அவர்கள் மின்சாரம் தாக்கியதுபோல் நெஞ்சைப் பிடித்துக்கொண்டார்கள், ‘அதெல்லாம் எங்க பக்கத்தில பழக்கமில்லையே மாப்பிள்ளை’ என்றான் அவர்களில் மூத்தவன்.

மாறனுக்கு அவர்கள் மூவரின் மூக்கிலும் அடுத்தடுத்து குத்தவேண்டும்போல் இருந்தது, ‘கல்யாணம் நிச்சயமாகறதுக்கு முன்னால என்னை மாப்பிள்ளைன்னு கூப்பிடறதுமட்டும் பழக்கமாடா ? தடியா, தடியா !’, மனதுக்குள் இப்படி நினைத்தபடி வெளியே அசட்டுத்தனமாய் சிரித்துநெளிந்தான், ‘சும்மா ஒரு அஞ்சு நிமிசம்’ என்றான் மறுபடி. அவர்கள் அவன் கேட்டதை லட்சியமே செய்யாமல், ‘மாப்பிள்ளைக்கு எத்தனை வருசமா உத்யோகம் ?’ என்று வேறேதோ கேட்க ஆரம்பித்தார்கள்.

தொடர்ந்து அவர்கள் தங்கள் தங்கையை கஷ்டம் தெரியாமல் வளர்த்திருப்பதாகத் தெரிவித்து, அவன் அவளைக் கண்கலங்காமல் பார்த்துக்கொள்ளவேண்டும் என்கிற உத்திரவாதம் வாங்கிக்கொண்டார்கள். அவனும் எரிச்சலோடு எல்லாவற்றுக்கும் தலையாட்டிவிட்டுக் கிளம்பிவந்தான்.

இங்கே வந்தபிறகு பலமுறை அவளோடு ·போனிலாவது பேசிவிடவேண்டும் என்று ரொம்பவே முயன்றான், ஒவ்வொரு முறையும் அவளது அம்மாவோ, அப்பாவோ, அண்ணன்களோதான் ·போனை எடுத்தார்கள், ‘மாப்பிள்ளையா, எப்படியிருக்கிய ?’ என்று பாசமழையாய்ப் பொழிந்தார்கள், ஆனால் பெண்ணைப்பற்றிமட்டும் மூச், அவனாய் விசாரித்தால்கூட, ‘இப்பதான் மாப்பிள்ளை கோயிலுக்குப் போச்சு !’ என்றோ, ‘புள்ள அசந்து தூங்குது, ராத்திரி நிறைய வேலையில்லா ?’ என்றோதான் பதில் கிடைத்துக்கொண்டிருந்தது. ஒரு கட்டத்தில் அவன் வெறுத்துப்போய் ·போன் பண்ணுவதைக்கூட நிறுத்திவிட்டான். தொலைபேசி வழியே யாரும் கெட்டுப்போவதற்குச் சாத்தியமில்லை என்கிற (விஞ்)ஞானம் அந்த கிராமத்துக்கு எப்போது வருமோ என்று தலையிலடித்துக்கொண்டபடி.

ஆகவே, இப்போது வீட்டு விஷயத்திலும் அவளை நேரடியாய்க் கேட்பதற்கில்லை. அவள் பிறந்து வளர்ந்த ஜமீன் வீட்டை மனதில் வைத்துக்கொண்டு, அந்த அளவுக்குச் செய்யமுடியாவிட்டாலும், ஓரளவு பெரிய வீடாய், அவன் பர்ஸைக் கடிக்காத வீடாய்ப் பார்க்கவேண்டும். அவள் காலம்முழுக்க அவனைக் கையாலாகாதவனாய்ப் பார்த்துக்கொண்டிருக்க வைக்காமல் ஒரு நல்ல வீடாய்க் காட்டு பகவானே !

ஒரு வாரம் பொறுத்து மாறன் அந்த ஏஜென்ஸிக் காரனிடம் மறுபடி போனபோது அவன் அதே ஆரஞ்சு டி சட்டை, தங்கப் பல் சகிதம் தலைக்குப்பின் சுழல்கிற ஒளிவட்டத்துடன் இருந்தான். ‘வாங்க சார், வீடு பார்த்துடலாமா இன்னிக்கு ?’ என்று அவன் வரவேற்றபோது நல்ல வீடு கிடைத்துவிட்டதுபோன்ற நம்பிக்கை அவனுக்குள் மீண்டும் உண்டானது. அதென்னவோ சிலருடைய வார்த்தைகளுக்கும், சிரிப்புக்குமே சக்தி இருக்கிறது.

அவன் தனக்கு மூன்று அறைகள் உடைய வீடுதான் வேண்டும் என்று பிடிவாதமாய்ச் சொன்னான், ‘ரூமெல்லாம் நல்லா காத்தோட்டமா, பெரிசா இருக்கணும் சார், ஹாலும் அதேமாதிரி பெரிசாயிருந்தா நல்லாயிருக்கும், தோட்டம், கொல்லைன்னு எதுனா இருந்தா பரவாயில்லை’, அவன் சொல்லிமுடிப்பதற்குள் தங்கப்பல்லிலிருந்து ஒரு தொகை உதிர்ந்தது, ‘இந்த ரேட்ல பார்க்கலாமா சார் ?’
அந்தத் தொகை அவன் மனதிலிருந்த தொகையைவிட இரண்டு பெரிய நோட்டு கூடுதல், ஆகவே அவன் தயங்கி, சற்றே தணிந்த குரலில், ‘அவ்ளோ என்னால முடியாது சார்’ என்றான், முகம் தொங்கிப்போயிருந்தது.

எப்போதும் நம்பிக்கை வழங்கும் ஏஜென்ஸி தெய்வம் அதற்கும் சிரித்தது, ‘பரவாயில்லே சார், உங்க பட்ஜெட் என்னன்னு சொன்னீங்கன்னா அதுக்கேத்த வீடா கூட்டிட்டுப்போறேன்’.
அவன் சற்று யோசித்து, ‘நீங்க சொன்ன அமவுன்ட்டுக்கு ஒரு ஆயிரம் ரூபாய் குறைச்சலா வீடு எதுனா இருக்கா ?’ என்றான்.
‘ஒரு வீடு என்ன சார் ? இருபது வீடு காட்டறேன், இப்பவே போலாங்களா ?’ என்று எழுந்துகொண்ட தெய்வம் கையில் தங்கக் காப்பும், அழுக்கு ஜீன்ஸ¤ம் அணிந்திருந்தது, காலில் உசத்தியான நைக் ஷ¤. எல்லாம் சிரித்துப்பேசி, வீடு சுற்றிக் காட்டி வாங்கிய காசு என்பதில் அவனுக்குத் தாளமுடியாத ஆச்சரியம்.

அன்று ஆரம்பித்த அவனது தேடுதல் வேட்டை கிட்டத்தட்ட நான்கு வாரங்களைக் கடந்துவிட்டது, ஒவ்வொரு முறையும் அவன் நம்பிக்கையோடு அந்த ஏஜென்ட்டிடம் போகிறான். அவரும் எப்போதும்போல் சிரித்து, ‘இன்னிக்கு ஒரு சூப்பர் வீடு இருக்கு சார், உங்களுக்காகவே கட்டினமாதிரி, பிரமாதமா இருக்கு’ என்கிறார், அவனுடைய பைக்கின் பின்புறத்தில் உட்கார்ந்துகொண்டு உற்சவராய் உலாவந்து, காடு, மேடெல்லாம் கடந்து அவனைக் கூட்டிப்போய் ஒரு வீட்டைக் காட்டுகிறார். வழக்கம்போல் அவனுக்கு அந்த வீடு பிடிப்பதில்லை. ஜமீனில் உலாவந்த பெண் இந்த வீட்டில் கை நனைக்கக்கூட ஒப்பாது.

தினம்தினம் அப்படிப் பார்த்துவரும் வீடுகளின் கொஞ்சம் அவன் திரும்பிவரும்போது அவனோடு ஒட்டிக்கொண்டுவிடுகிறது. ராத்திரி கனவில் வந்து பயமுறுத்துகிறது, ‘என்னையா வேணாம்ன்னு சொன்னே ? உன்னை என்ன பண்றேன் பாரு’, நீளமான இரும்புக் கம்பியொன்றை எடுத்துவந்து அவனைக் குத்திக்கிழிக்கிறது. அல்லது அவன் படுத்துறங்குகிற அறையின் நான்கு சுவர்களையும் ஆக்கிரமித்துக்கொண்டு கொஞ்சம் கொஞ்சமாய் சுவர்களை நெருங்கிவரச்செய்து அவனை நசுக்கிக் கொல்லப்பார்க்கிறது, பலமுறை அப்படிக் கனவுகண்டு அலறி விழித்திருக்கிறான் – அதன்பிறகு தூங்க முடிகிறதில்லை. படுத்துக்கொண்டால் உச்சியில் சுற்றுகிற மின்விசிறி தலையில் விழுந்துவிடுமோ என்று பயமாய் இருக்கிறது.
சுழலும் அந்த விசிறியைச் சுற்றியிருக்கிற கூரையின் பரப்பும், விரிவும் அவனுக்குள் அளவில்லாத ஆற்றாமையை உண்டுபண்ணுகிறது, ‘இந்த வீடு இத்தனை பெரிதாய் இருக்கிறதே, இப்படி ஒரு வீடு நகரத்துக்குள் இல்லவே இல்லையா ? அல்லது என் கண்ணில் படமாட்டேன் என்று விளையாட்டுக் காட்டுகிறதா ?’

அவன் பார்த்த வீடுகளெல்லாம் வெளிப் பார்வைக்கு நன்றாகத்தான் தெரிகிறது, ஆனால் கதவைத் திறந்து உள்ளே சென்றதும் அவன் மனம் அவற்றோடு ஒட்டமுடியாதபடி ஆகிவிடுகிறது. இரண்டு கைகளையும் நன்கு அகல விரித்து மையத்தில் நின்றால் அதன்பிறகு சொற்ப இடமே மீதமிருக்கிற ஹால், அதைக்காட்டிலும் சின்னஞ்சிறிய படுக்கை அறைகள், ஜன்னலில்லாத, காற்றுப்புக வேறு வழியுமில்லாத சமையலறைகள், அங்கங்கே இடம் கிடைத்தபோதெல்லாம் சும்மா பேருக்கு நுழைத்துவைத்த பூஜை அறை, பாத்ரூம் இத்யாதிகள், பெரும்பாலான கழிவறைகளில் முக்கிய சமாச்சாரத்துக்கு நாற்புறமும் அரையே அரை அடி மார்ஜின்விட்டு சுவர் எழுப்பியிருந்தார்கள், அவற்றில் உள்ளே உட்கார்ந்துவிட்டால் வெளியே வருவது பகீரதப் பிரயத்தனமாகத்தான் இருக்கும், பல வீடுகளில் கொல்லைப்புறம் என்பதே இல்லை, அப்படியே இருந்தாலும் ரிப்பன் உலர்த்தக்கூட ஆகாத அகலத்தில் சொரசொரப்பாய்ப் பல்லிளித்துக்கொண்டிருந்தது, இந்த வீடுகளெல்லாம் மனிதர்கள் வாழ்வதற்குத்தான் கட்டுகிறார்களா என்றே சந்தேகப்படும்படி அவ்வீடுகள் அவனுக்குச் சிறியவையாய்த் தோன்றின. உண்மையிலேயே சிறியவைதானா, அல்லது ஜமீன் பங்களா அவன் கண்களை விரித்துவைத்துவிட்டதா என்று மாறனுக்குப் புரியவில்லை.

அவனுக்கேற்ற, அல்லது அவளுக்கேற்ற, அல்லது அவர்களுக்கேற்ற ஒரு நல்ல வீடு கிடைக்கும் என்கிற நம்பிக்கை ஒவ்வொரு உலாவின்போதும் குறைந்துகொண்டே வந்தது. ஏஜென்ஸிக்காரன் ஒரு கட்டத்தில், ‘அவ்ளோதான் சார் வீடு’ என்று சொல்லிவிடுவானோ என்கிற பயம் எப்போதும் அவனைக் கொன்றுகொண்டிருந்தது. அப்படி அவன் கைவிட்டுவிட்டால் எங்கு சென்று அடைக்கலம் புகுவது ? வேறு சுமாரான ஏரியாவில் வீடு பார்த்துக்கொண்டு தினமும் பஸ்ஸில் ஆ·பீசுக்கு வந்துபோவதா ? அந்த வேற்றுப் பிரதேசத்தில்மட்டும் அவர்களுக்கேற்ற வீடு கிடைக்கும் என்பது என்ன நிச்சயம் ? அங்கிருக்கிற ஏஜென்ஸி தெய்வமும் இதுபோன்ற சுமாரான வீட்டு வரங்களையே தொடர்ந்து அருளிக்கொண்டிருந்தால் வேண்டி விறுவிறுத்து என்னதான் புண்ணியம் ? குடியிருக்க வீடு கிடைக்கவில்லை என்பதற்காக திருமணத்தைத் தள்ளிப்போடுவதா ? அல்லது தாலி கட்டியவளை அப்பா, அம்மாவோடு இருக்கச் சொல்லிவிட்டு தனியாக இங்கே வந்து மேலும் வீடு தேடுவதா ? ஊருக்குள் தெரிந்தால் அசிங்கமில்லையோ ?

இப்படியாக, வீட்டுப் பிரச்சனை ஒவ்வொரு நாளும் அவனது நெஞ்சைப் பிடிவாதமாய்ப் பிடித்துப் பிசைந்துகொண்டிருந்தது. கல்யாணமாகப்போகிற சந்தோஷத்தையோ, அதற்கான சின்னச்சின்ன எதிர்பார்ப்புகளையோகூட அனுபவிக்கவிடாமல் அவன் முகத்தில் நிரந்தர கவலையை அது பூசிவிட்டுவிட, அவனைப் பார்க்கிறவர்களெல்லாம் துக்கம் விசாரிக்க ஆரம்பித்தார்கள், ‘அடுத்த மாசம் கல்யாணமாகப்போறவன்மாதிரியாடா இருக்கே நீ ? சாமியார்கணக்கா தாடியும், மீசையும்’ என்று உரிமைமிகு அலுவலகத் தோழி ஒருத்தி அவனோடு சண்டைக்கே வந்துவிட்டாள்.
சவரம் செய்துகொள்வதில் மட்டுமில்லை, சாப்பிடுவது, உறங்குவதுபோன்ற அன்றாட செயல்கள் எவற்றிலும் மாறனுக்கு ஆர்வமில்லாமல் போய்விட்டது, எந்நேரமும் வீடுகளைப்பற்றிய கவலைகள், காற்றில் சதுரங்கள் வரைந்து கணக்குப்போட்டுப்பார்ப்பது, எல்லாவிதத்திலும் தனக்குப் பொருத்தமானதொரு வீடு எங்கே இருக்கிறதோ என்று தத்துவார்த்தமாய்க் கவலைகொள்வது என்று அவனது உலகம் வீடுகளால் மட்டுமே நிரம்பியதானது. நண்பர்களிடம் சரியாய்ப் பேசுவதில்லை, அப்படியே பேசினாலும், ‘எங்கனா நல்ல வீடு காலியா இருந்தா எனக்கு உடனே சொல்லுங்கடா ப்ளீஸ்’ என்னும் ஒன்பது வார்த்தைகளோடு அவனது அகராதி முற்றுப்பெற்றது, அலுவலகத்திலும் அநேகமாய் எல்லோரிடமும் இதே கெஞ்சலைச் செய்திருந்தான். இதற்குமேலும் வீடுகளைப்பற்றி இப்படி யோசித்துக்கொண்டிருந்தால் தனக்கு முழுப்பைத்தியம் பிடித்துவிடும் என்று மாறனுக்கு நிச்சயமாய்த் தோன்றியது.

தனக்குள் இருக்கிற நம்பிக்கைச் சுரப்பையெல்லாம் தினந்தோறும் மாலை ஆறுமுதல் எட்டு மணிக்குள் தவணைமுறையில் கொஞ்சம்கொஞ்சமாய் தீர்த்துக்கொண்டிருந்த மாறனுக்கு, அந்த வாரக்கடைசியில் ஒரு நல்ல சேதி வந்தது. அவனுடன் தங்கியிருந்த கோபாலன் புண்ணியத்தில்.

சனிக்கிழமை மாலை தலையணையைச் சுவற்றில் சாய்த்துவைத்து அதன்மேல் சரிந்தபடி தூங்க யோசித்துக்கொண்டிருந்தவனை கோபாலன் தட்டி எழுப்பினான், ‘உன்னோட கொஞ்சம் பேசணும் மாறன்’ ‘என்னடா விஷயம் ?’ எழுந்து உட்கார்ந்து தலையணையை மடியில் அமர்த்திக்கொண்டான் மாறன். கோபாலன் கொஞ்சம் தயங்கியதாய்த் தெரிந்தது, ‘ஒண்ணுமில்ல, நீ வீடு தேடிட்டிருந்தியே, அந்த மேட்டர் என்னாச்சு ?’ என்றான் சற்றுப்பொறுத்து.

மாறனுக்கு அவனது இளவழுக்கையில் ஓங்கி ஒரு கொட்டு வைக்கவேண்டும்போல் கோபம் வந்தது. அவனது எரிச்சலையும், கோபத்தையும், தாழ்வு மனப்பான்மையையும், இன்னபிறவற்றையும் தூண்டிவிடுவதற்காகவே ஆண்டவன் திட்டமிட்டு கோபாலனை ஏவிவிட்டிருக்கிறான் என்ற ஆங்காரம் தோன்றியது. சிரமப்பட்டு உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்தியபடி, ‘அதுக்கென்ன இப்போ ?’ என்றான் ஆர்வமில்லாத அலட்சிய தோரணையில். கோபாலன் விடாமல், ‘எல்லாம் காரணமாதான் கேட்கறேன், சொல்லு’ என்றான்.

மாறன் சற்றே யோசித்தான், பின்னர் பால்கனிக்கு வெளியே பார்ப்பதுபோல் திரும்பிக்கொண்டு, ‘ஒரு வீடு பார்த்திருக்கேன், அல்மோஸ்ட் முடிஞ்சமாதிரிதான், நாளைக்கு அட்வான்ஸ் கொடுத்துடப்போறேன்’ என்றான். அதைக் கேட்டதும் கோபாலன் முகத்தில் பெரியதொரு நிம்மதிப் புன்னகை மலர்ந்தது, ‘வெரி குட், கங்கிராட்ஸ்’ என்று அவன் கைகளைப்பற்றி வலுவாய்க் குலுக்கினான் அவன். புரியாமல் அவனையே வெறித்துக்கொண்டிருந்த மாறனுக்குள் இதெல்லாம் நிஜமாக இருந்துவிடலாகாதா என்கிற ஏக்கம்மட்டும் மின்னலாய்த் தோன்றி மறைந்தது. சமாளித்து, ‘எதுக்குடா இதெல்லாம் கேட்கிறே ?’ என்றான் திணறிய குரலில்.

அலட்சியமாய்ப் பேசுவது இப்போது கோபாலனின் முறையாய் இருந்தது, ‘அது ஒண்ணுமில்லைடா, ரொம்ப சின்ன விஷயம்’ என்றான் கையில் அமரப்பார்த்த கொசுவைக் காற்றில் விரட்டியபடி. அவன் பதில் சொல்லும் தோரணை மாறனுக்கு எரிச்சலாய் இருந்தது, அவனுடைய திடீர் விசாரிப்புக்கான காரணத்தைத் தெரிந்துகொள்ளாவிட்டால் மண்டை வெடித்துவிடுவேன் என்று திரி பற்றவைத்துக்கொண்டு பயமுறுத்த, அவன் ரொம்பவும் கஷ்டப்பட்டு உடம்பைத் தளர்த்திக்கொண்டு கோபாலனின் தோளில் தோழமையான கைகளைப்போட்டவாறு, ‘அந்த சின்ன விஷயம்தான் என்ன-ன்னு சொல்லேன் !’ என்றான். அசட்டுச் சிரிப்பொன்று அவனையும் மீறி வெளிப்பட்டது.

அவனது வேகத்தையும், துடிதுடிப்பையும் கேலி செய்வதுபோல் கோபாலன் நிதானமாய் நகர்ந்து அறை மூலையில் நன்றாய்ச் சாய்ந்து உட்கார்ந்துகொண்டான், ‘மாறன், உனக்கு இப்போ கல்யாணமாகுதா, நீ வேற வீடு பார்த்துட்டுப் போயிடுவே, நம்ம ராகவேந்தருக்கு ஐ. ஐ. எம்.ல சீட் கெடச்சாச்சு, ஸோ, அவனும் கிளம்பிடுவான், சந்துருவுக்கு யு.கே.ல ஒரு புது ப்ராஜெக்ட் வந்திருக்கிறதாக் கேள்வி, ஸோ, அவன் ரெண்டு வருஷம் அங்கே டேரா போடப்போறான், பாக்கி இருக்கிறது நானும், மணவாளனும், கிருஷ்ணனும்தான். இதில கிருஷ்ணனுக்கு அடுத்த ஏப்ரல்ல கல்யாணம், ஸோ, அவனும் காலி’ இதையெல்லாம் இவன் எதற்குச் சொல்கிறான் என்று புரியாத ஆர்வத்தோடு மாறன் தலையாட்டிக்கொண்டிருந்தான், ‘இதற்கும், நான் வீடு பார்ப்பதற்கும் என்ன சம்பந்தம் என்று சொல்லித் தொலையேன்’ என்பதுபோல் அவன் முகபாவம், அவனுடைய கெட்டநேரம், அது கோபாலனுக்குப் புரியவில்லை, அந்தக்கால எழுத்தாளர்கள்போல் நீட்டி முழக்கி விஸ்தாரமாய் கதை சொல்லிக்கொண்டிருந்தான், ‘ஸோ, நான் என்ன யோசிச்சேன்னா, எங்க ரெண்டு பேருக்கு இவ்ளோ பெரிய வீடு எதுக்கு ? ஆ·பீசுக்குப் பக்கமா வேற சின்ன வீடு பார்த்துட்டா என்னன்னு ஒரு ஐடியா வந்துச்சு, நானும் மணவாளனும் சேர்ந்து ஒரு வாரமாத் தேடினோம், நேத்திக்குதான் ஒரு சூப்பர் வீடு மாட்டியிருக்கு, வாடகையும் குறைச்சல்தான், ஆனா ஓனர் இந்த ஒண்ணாம்தேதியே வீட்டுக்கு ஆள் வந்தாகணும்ன்னு பிடிவாதம் பிடிக்கறான்’

மாறன் சற்றே நிமிர்ந்து உட்கார்ந்தான், இப்போது அவனுக்கு ஏதோ புரிவதுபோலிருந்தது. எப்போதும்போல் அவனது உணர்ச்சிகளை அலட்சியப்படுத்தினபடி கோபாலனின் கதாகாலட்சேபம் தொடர்ந்துகொண்டிருந்தது, ‘ராகவ் நெக்ஸ்ட் வீக் கிளம்பறான், ஸோ, அவன் ப்ராப்ளமே இல்லை, கிருஷ்ணனைக் கேட்டேன்., அவனுக்குக் கல்யாணம் ஆகிற வரைக்கும் அந்த வீட்டிலயே மூணு பேர் அட்ஜஸ்ட் பண்ணிகிட்டு இருந்துக்கலாம்ன்னு சொல்லிட்டான், பாக்கி இருக்கிறது நீதான், இப்போ நீயும் வேற வீடு பார்த்துட்டியா, நோ ப்ராப்ளம், இந்த மாசத்தோட இந்த வீட்டைக் காலி பண்ணிடறதா மேல்மாடி வீட்டுக்காரருக்குச் சொல்லிடலாம்’.

அவன் சொல்லி முடிப்பதற்குள் மாறன் அமர்ந்த நிலையிலேயே தாவிப்போய் கோபாலனின் கையைப் பற்றிக்கொண்டான், ‘வேணாம் கோபால், நான் வேற ஒரு ஐடியா வெச்சிருக்கேன்’ என்றான் அவசரமாய். அந்த கணத்திலேயே வீட்டின் நாற்புறச் சுவர்களிலும் சின்னஞ்சிறு தேவர்கள் இடுப்பளவுக்குத் தோன்றி, பால் வெள்ளை மலர்களை அறைமுழுக்க வீசித்தூவி அவனை வாழ்த்தினார்கள்.

******

அடுத்த மாதம் அவனது திருமணம் முடிந்ததும் மனைவியோடு புதுக்குடித்தனத்துக்கு அதே வீட்டுக்கு வந்தான் மாறன். (வேறு வீட்டுக்குப் போய்விட்ட) நண்பர்கள் புண்ணியத்தில் அந்த வீடு முழுக்க கழுவித் துடைத்து ஒழுங்குபடுத்தப்பட்டிருந்தது. பூட்டோடு பொருந்திய பெரிய கதவைத் திறந்துகொண்டு உள்ளே நுழைந்ததும் மாறனின் மனைவி ஆச்சரியத்தில் திகைத்து நின்றுவிட்டாள், ‘பங்களாகணக்கா இருக்கு வீடு’ என்பதே அவளது உடனடி வெளிப்படாய் இருந்தது, ‘இதென்னங்க இத்தனை பெரிய வீடு ? ரெண்டு பேரும் ஓடிப்பிடிச்சு விளையாடலாம் போலிருக்கு’ என்று அவள் மோகனமாய்ச் சிரிக்க, அப்போது மாறனின் உதடுகளில் நிம்மதியோடு வெளிப்பட்டதை சிரிப்பென்பேன் நான், இளிப்பென்பர் நன்குணர்ந்த பெரியோர் !

நன்றி: ‘நவீன விருட்சம்’ காலாண்டு இதழ்

– என். சொக்கன் [nchokkan@gmail.com] (செப்டெம்பர் 2007)

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *