கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்  
கதைப்பதிவு: May 15, 2014
பார்வையிட்டோர்: 12,905 
 

கனவுகள் இனிமையாக இருந்தன. மேகப் பொதிகளுனூடாய், பசும் புற்களின் மேலாய், வியர்வையின் வாடையற்ற வாசனைத் தரைகளின் வணணப்பூச்சுகளினிடையாய், சொர்க்கத்தின் கூரையைத் தொடுவதும் குதிப்பதுமாய் கனவுகள் மிதந்தன!

மாலைக் குளிரின் சிலிர்ப்பும், நிலத்தின் அடியிலிருந்து வீசும் வெயிலின் கடுப்பும் ஆறாமல் உடலை இரண்டு படுத்திப் கொண்டிருந்த போதும் கனவுகள் விரிந்து கொண்டேயிருந்தன!

நியாமியின் பகல் வெயிலும் இரவுக் குளிரும் ஒன்றிற்கொன்று ஒட்டாமல் மனிதர்களைத் தூக்கியடித்துக் கொண்டிருந்தது.

சற்று முன்னர்தான் மரங்களிலிருந்து தாவிக் குதித்து இறங்கி வந்தவர்கள் போல ஒவ்வொருவரின் தோற்றமும்! அந்தக் கிழட்டு விடுதியின் மொட்டை மாடியில் நின்று பார்ப்பது மிகவும் சுவாரஸ்யமாய் இருக்கும்.

அதற்காகவே காத்திருப்பது போல இரவு உணவருந்தும் நேரம் பார்த்து அவள் மொட்டை மாடிக்குப் போய் விடுவாள். சூரியன் மிகவும் ஆரவாரப்படாமல், சின்ன வட்டத்துக்குள் அடங்கி ஒளி முழுவதையும் பூமியில் பாய்ச்சிக்களைத்த தோரணையில் பவ்வியமாய் ஒதுங்கிப் போய் நிற்பான்! விழிகளை விரித்து விரித்துப் பார்த்தாலும் மணிகள் சுருங்காது!

வீதியில் கூக்குரல்கள் கேட்கும். இவள் முழங்கைகளை மாடியின் அரைச் சுவரில் ஊன்றியபடி நெடுநேரம் அப்படியே நிற்பாள்.

முன்னால் ஒரு பள்ளிவாசல்! எட்டு மணித் தொழுகை ஒலிபெருக்கியூடாய் அந்த நகரம் முழுவதையும் ஆக்கிரமிக்கும்.

அந்த நேரம் தொழுகைக்குச் செல்லாத பெண்கள் தான், அந்த வீதியில் அதிகமாய் திரிவார்கள்.

குழந்தைகளை முதுகில் சேர்த்துக் கட்டிவிட்டு எண்ணுக் கணக்கற்ற சுமைகளை தலையில் தாங்கிக் கொண்டு உடலை அதற்கேற்ப சமப்படுத்தி நடப்பதினால்தானோ, இந்தப் பெண்களின் பிருஷ்டம் இப்படி மலையென மிதந்து நிற்கின்றது!

ஒட்டகத்தின் சுட்ட இறைச்சியைத் தடிகளில் குத்தி இப்பவும் ஒருவன் விற்றுக் கொண்டு திரிகின்றான்.

கீழே சமையல் பகுதியில் தடல்புடலாய் சாப்பாட்டுப் பாத்திரங்கள் இடிபடும் ஓசை கேட்டுக்கொண்டிருந்தது.

‘இந்த சிறிலங்கன்ஸ் வந்ததிலிருந்து ஒரே மிளகாய்த்தூள் கமறலும் பருப்புக் கறி வாசனையும் தான்” என்று விடுதிக்காரக் கிழவன் கூறியது எத்தனை உண்மை. இரவு பாணும் பருப்புக்கறியுமாய் தான் இருக்கும்..! இன்றைக்கு கமலாக்காவினதும் அனுசியாவினதும் சமையல் முறை!

சாப்பிடக் குந்தும் இருபத்திமூன்று பேரும் அவர்களின் கறியைப் புகழ வேண்டும் என்ற ஆவலில் நன்றாகவே உள்ளி மிளகு குற்றிப் போடுகின்றார்கள் போலும்! வாசனை மூக்கைத் துளைத்தது.

சூரியன் முற்றிலும் காணாமல் போய் விட்டான். வளர்பிறை முகிலுக்குள் மறைந்து நின்றது. வீதிக்கம்பங்களிலிருந்து வரும் மஞ்சள் ஒளி, மொட்டை மாடியில் சில கட்டிடங்களின் நிழல்களை திட்டுத் திட்டாய் விழுத்தியிருந்தது. ‘றஞ்சினி….” என்ற கிசுகிசுப்பான குரல்! திடுக்குற்றாள். காற்று கூந்தலை அளைந்து கொண்டிருந்த போதும் உடல் முழுவதும் வியர்ப்பதான உணர்வு!

‘என்ன இது?! காற்றோடுதான் அவர் குரல் வந்ததோ? அல்லது இதயத்தைப் பிரித்துக் கொண்டு வந்து சீண்டுகின்றதோ?”

கை கோர்த்த மூன்று மாதங்களில் அவனை விட்டு வெகுதூரம் போய்விட்டதிலிருந்து அடிக்கடி கேட்கும் காற்றுச் சீண்டல் இது! கணவர் பின்னால் நிற்கும் மாயத் தோற்றம்.

கைகளை விசுக்கி விசுக்கி நீண்ட பாதங்களை ஊன்றிப் பதித்து நிமிர்ந்து நடந்து வரும் மெல்லிய அதிர்வு. உதடுகளிடை மலரும் புன்னகை. கண்களுக்குள் ஓடி விளையாடும் குறும்பு. காற்றெல்லாம் ஒரே வாசனை வீசும்! அது அவரின் வாசனை! அவருக்கே உரிய வாசனை!

அவரின் ஷேட்டில், றவுசரில், சாரத்தில், துவாயில், தலையணையில், பிறிவ்கேசில், சப்பாத்தில், சீப்பில், கைக்குட்டையில், கடிதங்களில்…. எங்கெல்லாம் அவரின் உடமைகள் இருக்கின்றதோ அங்கெல்லாம்….! என்னைத் தொட்டபின் என்னிலும் சில கணங்கள்….! இப்போ என் நாசியில் நிரந்தரமாய்…!

எனக்குப் பைத்தியம், புருஷ பைத்தியம், என் ஆளுமையையே அபகரித்துக் கொண்டு போகின்ற அதிர்ச்சி! நொந்து நொந்து உருகிக் கொண்டே போகிற நோயாளி மாதிரி… வாழ்க்கையை கனவுகளாகவே களித்துக் கொண்டிருக்கிற பைத்தியம்…

அவளுக்குச் சிரிப்பு வந்தது. சுயபிதற்றலை எண்ணிச் சிரிப்பு வந்தது. ‘றஞ்சனி அடி றஞ்சனி….” உண்மையாகவே மொட்டை மாடித்தரை அதிர்கின்றது.

‘பருப்புக்கறி முடியப் போகுது…பாண் ஒரு துண்டுதான் கிடக்குது. ஓடிப்போய் சாப்பிடு” கமலாக்கா கத்திக் கொண்டு வந்தா. அவவிற்கு பின்னால் சாப்பிட்டு முடித்த பரிவாரங்கள்.

‘றஞ்சனி அக்காவுக்கு… இனி லண்டனிலை இருந்து ஒரு phone call வந்தால் தான் ரொனிக் குடிச்ச மாதிரி இருக்கும். அதுக்குப் பிறகு தான் அவவுக்குப் பசி வரும்…”

‘சும்மா இரடி அனு; உனக்கிந்த சோகம் ஒண்டும் இப்ப விளங்காது. சுவிஸ்க்குப் போன பிறகு கொண்ணன் பார்த்து வைச்சிருக்கிற பெடியனுக்கு தலையைக் குடுத்த பிறகுதான் உந்தக் கன்றாவிகள் விளங்கும்..” சிரிப்பலைகளில் மொட்டை மாடி அதிர்ந்து கொண்டிருந்தது.

அவர்கள் உலரப் போட்ட உடைகளை அள்ளியெடுத்துக் கொண்டு படியிறங்கினார்கள்.

‘வாடி சுவருக்கு மிண்டு குடுத்தது காணும்…. மனுசன் அங்கையிருந்து லட்சம் லட்சமாய் கட்டிப் போட்டுக் காத்துக் கொண்டு கிடக்கிறார்; நீ உதிலை வந்து நிண்டு நிண்டு, சாப்பிடாமல் குடிக்காமல் காய்ஞ்ச சுள்ளியாகவே போய்ச் சேரப் போகிறாய்…?”

‘போங்கோ வாறன்…” அவள் சற்றே தாமதித்தாள். இப்ப… உடனே கீழே போனால், பெடியங்கள் எல்லோரும் என்ரை முகத்தைத்தான் விண்ணாணமாய் பார்த்துக் கொண்டு நிப்பாங்கள். ஏதும் சொட்டைப் பகிடியும் விடுவான்கள்…”

பத்து நிமிடங்கள் கழித்து படியிறங்கினாள். சமையலறை இரண்டு பட்டுக் கிடந்தது. அடிச்சட்டியில் கொஞ்சம் பருப்புக்கறி! கமலாக்கா சொன்ன பாண் துண்டை தேடிப்பார்த்தும் அங்கு காணவில்லை! இவள் யோசித்துக் கொண்டு நின்றாள். மங்கை, கண்ணாடியை கழற்றி விட்டு வந்து நின்றா. முகம் வேறு மாதிரி இருந்தது.

‘கழுதைகள்…., மூக்குப் புடைக்கச் சாப்பிட்டிட்டுக் கழுவாமலே போட்டுதுகள்” நாறல் அர்ச்சினைகளோடு பாத்திரங்களை ஒழுங்கு படுத்திக் கழுவத் தொடங்கினா.

இவள்… தரையைக் கூட்டி அள்ளிக் கொண்டிருந்தாள்.

‘றஞ்சினி…., கனநேரமாய் உம்மை இந்தப் பக்கம் காணேல்லை, சாப்பிட்டனீர் தானே?” என்று சந்தேகமாய் கேட்டா.

‘இல்லை… ஒரு பாண்துண்டு இருக்கெண்டு கமலாக்கா சொன்னா: ஆனால் காணேல்லை…” அவள் கூறியவாறே தேநீர் ஊற்றத் தயாரானாள்.

‘கடவுளே!… எந்தக் காய்ஞ்ச மூதேசி அதையும் விழுங்கிச்சோ?…”- மங்கை தனக்கேயுரிய தனித்துவப் பதங்களை ஊசிகளாய் வீசியெறிந்து கொண்டிருந்தா. அவவுக்கு ஜேர்மனியில் மாப்பிள்ளை, தாலிக்கு ஓடர் கொடுத்திட்டுக் காத்துக் கொண்டிருக்கிறார். சொந்தச் செலவில் அவரே கூப்பிடுகிறார்.

நியாமியில் நின்ற இந்தப் பதினெட்டு நாட்களும் போனில் கதைத்துக் கொண்டேயிருந்தா. இருபத்தெட்டு வயசியிலும் நாற்பது வயதுக் காரியின் பேச்சும் மிடுக்கும் அனுபவ அறிவும்! எல்லோரது கைகளையும் விரித்து விரித்து சாத்திரம் கூடப் பார்க்கிறா!

‘றஞ்சினியின் கணவர் சொக்கத் தங்கம், இவள் லண்டனிலை கால் வைச்சதும் ஓகோ என்று உயரப் போகிறாள்…” என்றும் சொன்னா. இவளுக்கு அப்பவும் சிரிப்பு வந்தது. ‘லண்டனிலை கால் வைச்சதும் உடனை என்ன நடக்கப் போகுது எண்டது எனக்கெல்லோ தெரியும்….’

‘நான் வரப்போகிறனென்டு இரண்டறை வீடொன்று ஒழுங்குபடுத்திப் போட்டாராம்…’
‘நானமர்ந்து கவிதையெழுத ஒரு மேசையும் ஆனந்தமாய் சயனிக்க ஒரு Royal கட்டிலும், நீராட ஒரு மலர்த் தொட்டியும்… பிறகு, பின்னுக்கு ஒரு புல்லுப் பூங்காவும் பசியெடுக்கும் போதெல்லாம் ருசிருசியாய் சாப்பிட வகைவகையாய் உணவு வகைகளும், அப்புறம்… அழகழகான குளிருடைகளும்… என்று ஏகப்பட்ட ஏற்பாடுகளாம்….!’

‘வந்திடு றஞ்சினி… கெதியா வந்திடு…” என்கிற போது, மூச்சுக்காற்று, தொலைபேசியை நொருக்கிவிடும் போல் தவிக்கிறது!

‘இராப்பகலாய் Over time செய்கிறாராம்! றஞ்சினி வந்த பிறகு ரெண்டு மாசம் வேலைக்குப் போகாமலிருக்க…’

அவள் தேநீரை உறுஞ்சிக் குடித்துக் கொண்டிருந்தாள். மங்கை எல்லாம் கழுவி வைத்து விட்டு படுக்கைக்கு இடம் பிடிக்க ஓடிவிட்டா. பத்துச் சதுர அடி அறையில், பன்னிரண்டு பெண்களுக்கிடையில் மூச்சு முட்டித் திணறாமல் படுக்க வேண்டுமென்றால் இந்த அவசர நித்திரை அவசியம் தான்!

ஆண்கள் Down stair Floor ல் உள்ள பெரிய அறையில் பாணும் பருப்புக் கறியும் கொடுத்த உசாரில் பெரிய சத்தமாக கதைத்துக் கொண்டிருந்தார்கள்.

நாளைக்கு யார் அனுப்பப்படுப் போகினம்…? நினைவுகளுடே கேள்விப் பொறியும் மின்னி மின்னிக் குறுக்கிட்டது!

அடுத்து வந்த மாலையிலும், வெப்பமும் குளிரும் கலந்து பிசைந்து கொண்டு தானிருந்தது. ஆனால் சூரியனின் அமைதியும் போதை நிலையும் அழகாயிருந்தது! இரவு வானில் நட்சத்திரங்கள் கொள்ளையாய் கண்சிமிட்டு மென்றே தோன்றியது. முகில்கள் வெண் பஞ்சாய் அள்ளுண்டு தவழ்ந்தன! இடையிடையே நீலவெளித்துளிகள் வேவு பார்த்துக் கொண்டு மறுபுறம் நகர்வதாய் பாவம் காட்டின!

அழகான நைல் நதியின் ஒரு துண்டு நியாமியின் பெருந்தெருவைக் கிழித்துக் கொண்டு கீழாக ஓடியது! பாலத்தின் கம்பிகளைப் பற்றியபடி எல்லோரும்! ‘இதுவா… உலகப் புகழ் பெற்ற நைல்?…” வெப்பம் தாளாமல் பொங்கி ஆவியாகி, இப்போ நன்றாக வற்றி… திட்டுத் திட்டாய் குளம் கட்டிக் கொண்டு நிற்கிறது!

சூரிய ஒளியின் செம்மை கலந்து காற்றின் அசைவில் அங்கங்கு பளீரிடுகிறது! கிழக்குத் தொலைவில் மட்டும் அகன்ற மஞ்சள் நீர்ப் பரப்பு பளபளப் போடு அசைந்து கொண்டிருந்தது!

ஆனாலும் சிறுவர்கள் பாலத்தை அண்டியிருந்த சேற்றையும் நீர்த்திட்டு களையும் பொருட்படுத்தாமல் கோவணத் துண்டுகளுடன் தாவிக் குதித்துக் கொண்டு திரிந்தார்கள்.

குமாரின் குரல் பின்னால் கேட்டது.

‘பெனினை விட இது பரவாயில்லை…”

‘ஐய்…யோ தண்ணீரே இல்லாத அந்த பெனின் காட்டில்… இன்னும் இரண்டு நாள் நிக்கிறதைவிட, இலங்கை ஆமிக்கு கிட்டப்போய் நிண்டு துணிஞ்சு கண்ணடிக்கலாம்…”

எல்லோரும் மங்கையைத் திரும்பிப் பார்த்தார்கள்.

‘குஸ்குஸ் ஒரே குஷியாக இருக்கிறார். இரவைக்குக் குஸ்குஸ் தான்…போலை…” அனுசியா மெதுவாய் கூறினாள். சிரிப்பிலைகளில் பாலக் கம்பிகள் அதிர்ந்தன.

‘குமாருக்கு ‘குஸ்குஸ்’ பட்டம் வைச்சதைப் பற்றித் தெரிய வேணும், அவ்வளவுதான்! பிறகு பாணுமில்லை பருப்புக்கறியுமில்லை…”

‘அவர் ஜேர்மனியில ஒரு வருஷம் இருந்த பிறகு திருப்பி அனுப்பிப் போட்டாங்களாம்! அந்த ஒரு வருஷமும்… அங்கையொரு ரெஸ்ரோறண்டில வேலை பார்த்தவர்; எண்டதுக்காக, பாணும் பருப்பும் வாங்கக் கடைக்கு அனுப்பினால் ‘குஸ்குஸ்’ ம் ரின் மீனும் வாங்கி வந்து சமைச்சுத் தள்ளுகிறார். நல்ல சத்துணவாம் ருசியாம் சாப்பிடட்டாம்…”

பழக்கமில்லாத உணவு என்றாலும் பலருக்கு பிடிக்கவில்லையென்றாலும் யாரும் முகம் சுளிக்க வில்லை.

ஜெகதீஸனின் கணிப்புப்படி குமார் அனுபவசாலி என்பதால் எல்லோருக்கும் அவர் தான் பொறுப்பு. பாணும் பருப்பும் வாங்கி வருவதற்கும் அவர்தான் பொறுப்பு. எல்லோரும் நல்ல ருசி என்றே சாப்பிட்டார்கள்!

திடுமென்று கருமுகில்கள், பஞ்சுப் பொதிகளை உருட்டித் தள்ளிவிட்டு நுழைகின்றன! சூரியன் எங்கோ தொலைந்துவிட்டான்! பாலக் கம்பிகளில் ‘ணங்ணங்’ என்ற ஓசையுடன் வேகமாகச் சில மழைத்துளிகள்!

கூதல் காற்றில் உரோமக் கணுக்கள் சிலிர்த்துக் கொண்டன! எல்லோரும் கைகளால் தலையைப் பொத்தியபடி!

இவள் மட்டும் இருளும் வெளியைத் துளைத்துக் கொண்டு, காற்றில் கண்களை அலைய விட்டபடி!

‘நைல் நதிக் கரையிலும் நானுந்தன் நினைவுடன்!
காற்றிலும் சேற்றிலும் நானுந்தன் கனவுடன்!
மழையிலும் குளிரிலும் நானுந்தன் அணைவுடன்!
கடும் வையிலிலும் கூட நானுந்தன் நிழலுடன்!’

நைல் நதிக்கரையிலும் கனவுகள் விரிந்தன! காற்றில் அலைந்தன! முகில்களைத் தொட்டழைந்து சூரியனைத் தேடி… விடை தெரியா வினாக்களைத் தொடுத்து விட்டு மீண்டும் மீண்டும் அவள் உணர்வுளைச் சுற்றின!

‘சரி… நாங்கள் நடப்பம், மழை பெருக்கப் போகுது போலை கிடக்குது…” கமலாக்கா சொல்ல எல்லோரும் விடுதி நோக்கி நடக்க ஆரம்பித்தார்கள். அவர்களையறியாமலே சின்னச் சின்னச் சிநேக குழுக்களாய் நகர்ந்து கொண்டிருந்தார்கள்.

விடுதி வாசலில் அந்தச் சிறுமி! மூன்று நாட்களுக்கு முன் வந்த அதே சிறுமி! இவளுக்குத் தூக்கி வாரிப்போட்டது. சட்டென்று உணர்வுகளெல்லாம் ஒடுங்கிப் போய் நெஞ்சில் பாரமேறுகிற ஒரு தவிப்பு!

வழித்துத் துடைத்து வடித்தெடுத்த கருஞ்சிலை போல் சிறுமி நின்றான். தலையில் பாத்தி பாத்தியாய் வகிடு பிரித்து ஏராளம் பின்னல்கள்! பருத்திச் சட்டையும் சின்னப்பாவாடையும்; அணிந்திருந்தாள். தென்னம்பூவிதழ்களை உடைத்துக் கொண்டு கிளம்பும் சின்னக் குரும்பைகளின் மலர்ச்சி!

இவளைப் பார்த்து இலேசாகச் சிரித்தாள். மூன்று நாட்களின் முன் இவளோடு மூன்று வரிகள் பேசிய ஞாபகத்தின் சிரிப்பு அது.

சிரிப்பினூடே அந்தத்தினம் தான் இவளுக்கு ஞாபகம் வந்தது. அன்றைக்கு யாரோ ஒரு பெரிய புள்ளி அங்கு வந்திருந்தான். சரிகை உடைகளால் போர்த்து மூடிக் கொண்டு கைவிரல்கள் மின்ன, வெள்ளை நிற ‘பென்ஸ்’ இல் வந்திறங்கினான்.
அநேகமாகப் பூட்டியபடியே கிடக்கும் சில விஷேட அறைகளுள் ஒன்று, வந்தவனுக்காக அன்று திறக்கப்பட்டு ஆரவாரமான வரவேற்பு!

அவன் வந்ததிலிருந்து விடுதி முழுவதும் வாசனைத் தைலங்களின் நாற்றம்! சிலசமயம் தலை வலித்தது; சில சமயம் இதமாயும் இருந்தது.

கீழே சமையல் பகுதியில் தடல்புடலான சமையல்கள், சமையற்காரர்கள் அன்று சந்தோஷமான பம்பரங்களாய் நின்றார்கள். பசியைக் கிளறும் முட்டைப் பொரியல் வாசனையெல்லாம் வந்து வந்து வயிற்றை வதைத்தது! மாலை நேரம் இந்தச் சிறுமி வந்தாள்.

கையில் ஒரு புத்தகமும் இரண்டு கொப்பிகளும்! அங்குமிங்கும் அணில் பார்வை பார்த்து விட்டு அறைக்குள் மெதுவாய் நுழைந்தாள். அதற்கப்புறம் இரண்டு மணிநேரத்தின் பின்தான் வெளியில் வந்தாள். வரும்போது கையில் சொக்லேற் இருந்தது. வாசலைக் குறுக்கறுத்து இவள்தான் வந்து கொண்டிருந்தாள். சிரித்தாள். அவளும் சிரித்தாள்.
றஞ்சனியின்; கையிலிருந்த உலர்ந்த உடைகளுள் ஒன்று நழுவிக் கீழே விழுந்தது. சிறுமி குனிந்து பொறுக்கிக் கொடுத்தாள்.

‘நீ ஸ்கூலுக்குப் போறனீயா?” என்று றஞ்சினி நன்றிச் சிரிப்போடு கேட்டாள். அவளுக்கு ஆங்கிலம் அவ்வளவாகப் புரியவில்லை. ஆனாலும் தனக்குப் பன்னிரண்டு வயதென்றும் பாடசாலைக்குப் போகிறவளென்றும் ஏதோ விதமாய் தெரிவித்தாள். பிறகும் சிரித்தாள், அப்புறம் போய்விட்டாள்.

அன்றைக்கு அவள் போய் நீண்ட நேரமாகி விட்டபின்பும் றஞ்சினிக்கு நெஞ்செல்லாம் ஏனோ பாரமாக அழுத்திக் கொண்டிருந்தது. எல்லையற்ற எண்ணங்கள், படுக்கையிலும் உடலைப் புரட்டிப் புரட்டி விரட்டின! ‘பன்ரெண்டு வயசில் எனக்கொரு தங்கச்சி இருக்கிறாள்; அவளுக்கு இப்பவும் வடிவாக கொலரை இழுத்துச் சரிப்படுத்தி சட்டை அணியத் தெரியாது. வறுத்த புளியங்கொட்டை சப்பிக்கொண்டு ஊஞ்சள் ஆடுவாள்…. றஞ்சனிக்கு அழவேணும் போலெல்லாம் இருந்தது. அன்றிரவு முழுவதும் இனம் புரியாத அவஸ்தையோடு ஊமையாக அழுது கொண்டிருந்தாள்!

விடிந்த பின்பு லண்டனிலிருந்து உயடட வந்தது. சொல்லும் போது இவளுக்குக் குரல் பதறியது. கண்களுக்குள் ஈரம் கசிந்தது!

‘றஞ்சு! உதொண்டும் வெளிநாடுகளில் பெரிய விசயமில்லை! உதுக்கேன் நீர் கவலைப்படுகிறீர்? அதை மறவும். நாளைக்கு அனுப்புகிற ஆக்களிலை நீர் வாறதைப் பற்றி ஜெகதீசனைக் கேளும்…” என்றார் அவர்.

இவள் நைலின் அழகை அவருக்கும் சொல்லியிருக்க வேணும் என்று நினைத்துக் கொண்டு படியேறினாள்.

இரவு ஜெகதீசன் வந்தார். உடை முழுவதும் சுதந்தத்தை அள்ளிச் சுமந்து கொண்டு வந்து நின்றார். ‘ரை’யும் ‘ஸூ’வும் கண்களைப் பறித்தன! ஏதோ ஒரு முக்கியமான தகவலாக இருக்க வேண்டும். எல்லோரும் ஒருவரை யொருவர் பார்த்தபடி நின்றார்கள்.

‘நான் மேலதிகமாய் கேட்ட நாற்பதினாயிரம் றஞ்சனிக்கும் அனுசியாவுக்கும் மட்டும் தான் வந்து சேர்ந்திருக்கு. நாளைக்கு ரெண்டு பேரும் வெளிக்கிடுறீங்கள். எல்லாத்தையும் ‘ரெடி’ பண்ணுங்கோ”

அப்புறம் வாசநந ளவயச க்குப் போய்விட்டார். அவர் சாய்ந்து நின்ற தூணிலிருந்து தொடர்ந்து சுதந்தம் பரவிக் கொண்டிருந்தது.

மங்கை கத்தத் தொடங்கி விட்டா.

‘அஞ்சு லட்சம் கொடுத்து கணக்கெல்லாம் முடிச்ச பிறகு தானே, வெளிக்கிட்டனாங்கள்; இப்ப அரை வழியிலை வைச்சு ‘கொண்டு வா’ எண்டு அறுக்கிறான் பாவி! அவனுக்கென்ன் கொள்ளுப்பிட்டியிலை கோடிக்கணக்காகச் செலவழிச்சு கோட்டை மாதிரி ஒண்டு கட்டிக் கொண்டிருக்கிறான். குளியலறைக்கு வைரக்கல் பதிக்கப் போறானாக்கும்; எங்களை வைச்சு வறுகிறான்…”

‘சத்தம் போடாதையுங்கோ மங்கையக்கர எங்களுக்குள்ளேயே ஆரும் போய் அங்கை அண்டிவிட்டு விடுவினம். பிறகு நாங்கள் அரைவழியிலை அம்போதான்!’ என்று குட்டிச் சகுந்தலா குசுகுசுத்தாள்! குட்டிச் சகுந்தலா, ஊரில் காதலனை விட்டு வருகிறாள்;. ஜேர்மனியில் தமையனுடன் போய் சேர்ந்த பிறகு, காதலனைக் கூப்பிடுவாளாம். கெதியில் போய் சேர்ந்து, கெதியா உழைத்து, கெதியா அவனைக் கூப்பிட வேணும் எண்ட தவிப்பு அவளுக்கு!

இரவு, படுக்கைக்குப் போகும் நேரம் பார்த்து குஸ்குஸ் வந்து குரல் கொடுத்தார்.
‘றஞ்சினியையும் அனுஷியாவையும் கூட்டிக் கொண்டு வரச்சொல்லி, ஜெகதீசன் இப்ப போன் பண்ணினவர்; பயண விபரம் கதைக்க வேணுமாம்….”

அனுஷியா துள்ளிக் கொண்டு எழுந்தாள். றஞ்சினி இரவுடையை அவசரமாய் மாற்றிக் கொண்டு புறப்படத் தயாரானாள்.

அரை மைல் தூரம் தெரு விளக்கினொளியில் நடந்து, நைல் நதிக்கரையிலிருக்கும் பளிங்கு விடுதிப் பக்கமாய் திரும்பி, பேரீச்சை மரங்களின் நிழல்களை மிதித்துக் கொண்டு சிவப்பு ரோஜாக்களின் மெல்லிய வாசனையை நுகர்ந்தவாறே படியேறிய போது கால்கள் கூசின! தரையில் முகம் பார்க்கலாம் போல் பிரமிப்பு! ஜெகதீசனின் அறைவாசலை நெருங்கியபோதே கதவு திறக்கப்பட்டது!

‘வாங்கோ” என்றார்.

‘எப்படி இவருக்குத் தெரிந்தது; ஏதும் கமரா இருக்கோ?’ உள்ளே இருபது இஞ்சி TV யில் கிரிக்கற் மட்ச்| போய்க் கொண்டிருந்தது. அறை முழுவதும் ஜெகதீசனின் வழமையான சுகந்தம். பெரிய Double Bed, பளபளக்கும் Head Board, பட்டு விரிப்புக்கள், சிவப்புக் கம்பளம், மெத்தென்ற மெத்தை போலும், பஞ்சுத் தலையணைகள்!

ஜெகதீசனின் கையில் World map போலும். இரவு உடையுடன் மெத்தைக்குள் புதைந்தபடி சாய்ந்தமர்ந்திருந்தார். அருகில் ஒரு சின்னப் பிங்கானில் சீஸ்பிஸ்கற்.
றஞ்சனியின் கண்களைப் பார்த்தவர் ‘சாப்பிடுமன்” என்றார்.

குமார் வெளியில் போய் இருந்து கொண்டார்.

‘சரி… இப்பிடி இருங்கோ…” என்றார். ‘கட்டிலிலையோ…?’ அனுஷியா இவளைப் பார்த்து விழித்தாள்.

‘என்ன முழுசிறீங்கள்?… இருங்கோவன்…” இருந்து விட்டார்கள். அஃப்பா… என்ன இதம்; இது தான் Royal Bed ஓ…?

ஜந்து இலட்சத்து நாற்பதினாயிரம் கொடுத்து ….. மல்லிகைப் பூ மணக்க, வேப்பங்காற்று வீச, நீட்டி நிமிர்ந்து படுத்த வீட்டு விறாந்தாவையும் விட்டு விட்டு நடுவழியில் வந்து நின்று பத்துச் சதுர அடி அறைக்குள் பன்னிரண்டுபேர் வியர்வை மணக்க, நெருக்கிப் படுக்கும் விடுதி அறையின் வெற்றுத்தரை ஒரு கணம் நினைவில் வந்தது?

“Now You are Friends….Tourist… ஆக லண்டனுக்குப் போறீங்கள் Hair style, உடுப்புகள் எல்லாம் அந்தமாதிரி எடுப்பாயிருக்க வேணும்… இதெல்லாம் லண்டன் வரைக்கும்தான்… லண்டனிலை கால் வைச்ச உடனே எல்லாம் இழந்த அகதி! அகதி மட்டும்தான்….”

ஜெகதீசன் சொல்லிக் கொண்டே போனார். அவரின் கண்கள் அடிக்கடி கதையை மேவி அவர்களுக்குள் ஊடுருவி மீண்டுகொண்டிருந்தன. அப்பப்போ நமுட்டுச் சிரிப்பொன்று சிரித்துக் கொண்டிருந்தார். அந்தச் சிரிப்பு எப்பவும் அவளுக்குப்; பிடிக்காமல் இருந்தது.

‘பிழை விட்டால்… பிடிபட்டால் நான் பொறுப்பில்லை; பிறகு என்ரை பெயர் ஜெகதீசனும் இல்லை…”

அனுஷியா இவளைத் திரும்பிப் பார்த்தாள். கண்கள் கலங்கத் தயாராவது போலிருந்தது. றஞ்சனிக்குப் பயணப் பதற்றம், இப்போ தான் மிகச் சரியாக ஆரம்பமானது! காற்றில் கணவரின் குரலைத் தேடினாள்!

விழிகளிற்குள் ஜெகதீசனின் நமுட்டுச் சிரிப்புத்தான் மீளவும் அகப்பட்டது! ‘அவ்வளவுதான்… பாஸ் போட் வெளிக்கிடேக்கை தருவன்…” அவர் படுக்கையால் இறங்கினார். இவர்கள் எழுந்தார்கள்.

‘Wish you all the Best..”

ஜெகதீசன் நெருங்கி வந்து அவளின் கைகளை பற்றினார். நமுட்டுச் சிரிப்பு மிக அருகாய் வந்து இவள் கண்களுக்குள் நுழைந்தது! முதுகில் ஒரு கை இ;லசாய் படர்வதாய் உணருமுன், சட்டென்ற இழுப்பில், ஜெகதீசனின் சுகந்தம், மார்பெங்கும் நாற்றமாய் படிந்தது! மேலெழுந்த மூச்சுத் திணறலுடன் தேகத்தின் பாகமெங்கும் தீப்பொறிகள் சிதறின…! திகைத்தாள்; பிடுங்கி உதறிவிட்டு நதர்ந்தாள். றஞ்சினிக்குக் கண்களிற்குள் நீர் முட்டியது! ‘சரி… கவனமாய் போய் எல்லாத்தையும் ரெடி பண்ணுங்கோ…”
மீண்டும் அதே நமுட்டுச் சிரிப்பு! அனுஷியாவுக்கு என்ன நடந்தது? பேயடித்தது போல் சிரித்துக் கொண்டு வெளியில் வந்தாள்..!

விடிந்தால் பயணம்! எல்லாம் தயார்.

எல்லோரினதும் தூக்கக் குறட்டைகளைத் தவிர இரவின் நிசப்தம் அழகாய் அபூர்வமாய் தோன்றியது!

அவளுக்கு நித்திரை வரவில்லை; மொட்டை மாடிக்கு ஓடினாள்!

நட்சத்திரங்கள் இவளுக்காகவே காத்திருப்பவை போல் கண் சிமிட்டிச் சிரித்தன! உச்சிக்கு வந்திருந்த பத்தாம் பிறை, நாடியில் கைவைத்து, பரிகசிப்பதும் சீண்டுவதுமாய் நகரும் முகிலோடு நளினம் செய்கிறது! கூதல் காற்று மெலிதாய் உடலைத் தழுவியது! கண்கள் காரணம் புரியாமல் பனித்தன! புண்ணாகிச் சுட்டதெல்லாம் தண்ணென்று ஆறுவதுபோல்! அகமும் புறமும் மெல்ல மெல்லக் குளிர்மையின் ஸ்பரிசம்!

‘றஞ்சினி… றஞ்சு…” காற்றோடு அவரின் குரல்…! நாசியைச் சீண்டும் வாசனை! அது அவரின் வாசனை…! அவருக்கேயுரிய வாசனை….!

(இச் சிறுகதை லண்டனிலிருந்து வெளியாகிக் கொண்டிருந்த IBC Radio – அனைத்துலக ஒலிபரப்புக் கூட்டுத்தாபன வெளியீடான “புலம்” சஞ்சிகையின் 2000 ம் ஆண்டு இதழில் வெளியானது)

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *