பொங்கல் வாழ்த்து

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: December 25, 2022
பார்வையிட்டோர்: 1,150 
 

(1950ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

ஸ்நானஞ் செய்துவிட்டு ஈர வஸ்திரத்தை உடுத்தபடியே தன் அனுஷ்டானங்களை முடித்துப் புதுப்பானையில் நீர்மொண்டு தோள் மீது சுமந்து வந்துகொண்டிருந்தார். வீட்டில் உள்ளவர் வயிரக்கற்களை எடுத்து அடுப்புத் தயார் செய்துகொண்டிருந்தார்கள். அடுத்தடுத்த வீடுக ளில் அதற்கு முந்தியே பொங்கல் ஆரம்பித்திருக்க வேண்டும். ஒரு மெல்லிய புகைப்படலம் மேல் நோக்கி எழுந்துகொண்டிருந்தது. அதனால் அவசரம் அவசரமாக வீட்டை நோக்கி நடந்தார்.

அடுப்பிலே பானையை வைத்தார். கமலாம்பாள் நெருப்புமூட்டி விறகடுக்கினாள். தாய் மற்ற ஏற்பாடுகளைக் கவனித்துக் கொண்டிருந் தாள். சிறுவர்கள் சீனவெடியும் கையுமாக அயலிலே வந்து நின்றார்கள். இடையிடையே இரண்டோர் வெடியைக் கொளுக்கியெறிந்தார்கள்.

தபாற்காரன் தெருவில் நின்று மணியடிக்கும் சத்தம் கேட்டது. சிறு வர்கள் வெளியே ஓடினர். கமலாம்பாளும் அவர்களைத் தொடர்ந்து சென்று வாசலிலிருந்து சிறிது தூரம் உள்ளேயே நின்றாள். மூன்று கடி தங்களோடு சிறுவர்கள் திரும்பினார்கள். அவற்றை வாங்கி பார்த்தாள். ஒன்று தந்தைக்கு மற்ற இரு கடிதங்களும் அவளுக்கு அருமையாக எப்போதா வது அவளுக்கு ஒரு கடிதம் வரும். ஆனால் அவள் தினமும் தனக்குக் கடிதம் வரும். ஆனால் அவள் தினமும் தனக்குக் கடிதம் வரும் என்று எதிர்பார்த்து ஏமாற்றமடைவாள். இன்று ஏதோ ஏமாற்றமடையாது கடிதம் வந்ததிலே அவளுக்கு ஒரு திருப்தி. இரு கடிதம் வந்ததினால் அது ஆனந்தமாகவே மாறிவிட்டது.

ஒரு கடிதத்தை எடுத்துப் பிரித்தாள். உறை ஓட்டப்படாமலே இருந்தது. அதைக் கண்ட தும் அவள் ஆவல் குறைந்தது. ஏதோ அச்செழுத்துப் பிரதியாக இருக்கும். அதில் ஒருவருக்கு என்ன ஆனந்தம் வரமுடியும். என்றாலும் என்ன என்று பார்த்துவிடுவோமே” என்றது மனம், பிரித்துப் பார்த்தாள். சாதாரண வாழ்த்துக்கடிதம். தைப்பொங்கல் வாழ்த்து.

யார் அனுப்பியது? “சுந்தரேசன்” என்று கையொப்பமிடப்பட்டிருந்தது! “எந்தச் சுந்த ரேசன்?” – விலாசத்தையும் பார்த்தாள். “ஆம், அவர்தான்; ஆசிரியர் சுந்தரேசன்” – அவளுக்கு ஆனந்தம் தாங்கமுடியவில்லை . சுந்தரேசனிடமிருந்து வாழ்த்துக் கடிதம் வருவதென்றால் – அதுவும் அந்த விருந்துக் கொண்டாட்ட நிகழ்ச்சி இன்றும் அவள் மனக்கண் முன் அப்படியே இருக்கிறதே!

அவன் கையெழுத்தைத் திருப்பித் திருப்பிப் பார்த்தாள். வைத்தகண் வாங்காது ஒரே பார் வையாகப் பார்த்தாள். அவன் கையெழுத்து வைத்திருக்கும் அழகு! அதை நன்றாக நயந்தாள் – “கே”யை என்ன லாவகமாக எழுதியிருக்கிறார். “எஸ்”ஸை வளைத்திருக்கும் அழகு – ஒவ்வொரு எழுத்தாக ஒவ்வொரு வளைவு நெளிவு எல்லாவற்றையும் பார்த்து நயந்தாள். பார்க்கப் பார்க்கப் புதுநயம்.

“அவரும் அழகு; அவர் எழுத்தும் அழகு. எனக்கு ஏதோ கோணமாணல் எழுத்துத் தானே வருகிறது.” தமையன் அங்கே வந்தான். அவள் அவனைக் காணவில்லை. இயற் கைக் காட்சியைக் கண்டு அதில் தன்னையே மறந்து இரண்டறக் கலந்தனுபவிக்கும் கவிஞன் நிலைமையிலே அவள் இருந்தாள்.

“தபாற்காரன் போய்விட்டானா?” என்று தமையன் கேட்டான். விரைவாகக் காகிதத்தை மடித்தபடி திரும்பி “என்ன?” என்று கேட்டாள்.

“தபாற்காரன் போய்விட்டானா?”

“ஓம்”

“எனக்குக் கடிதம் இல்லையா?” “இல்லை ”

தமையன் போய்விட்டான்.

மற்றக் கடிதத்தின் ஞாபகம் அவளுக்கு வந்தது. உறையைக் கிழித்தாள். கையெழுத் துப் பார்த்தாள். “சாரதா” – அதை அப்படியே மடித்தாள். என்ன எழுதியிருக்கிறது என்றே பார்க்கவில்லை. இரண்டு பக்கம் நிறைய எழுத்தாக இருந்தது. அதை அவள் பாராது இந்தச் சாதாரண வாழ்த்துக் கடிதத்தையே மறுபடியும் எடுத்து வாசிக்கத் தொடங்கினான்.

“பொங்குக பொங்குகவே – பால் பொங்குக மங்களமே ………”

இதுதான் முதல்வரி. உலையிலும் பொங்கல் ; இங்கே அவள் உளத்திலும் பொங்கல் எல்லாம் ஒரே பொங்கல்.

“உடனேயே இதற்குப் பதில் எழுதிவிட வேண்டும். இப்பொழுதே எழுதி வைத்துக் தபாலிற் சேர்த்துவிட வேண்டும்… இதுதான் அவர் முதற்கடிதம். இது வாழ்த்திலே ஆரம் பிக்கிறது. அதற்கு நான் நன்றி தெரிவித்துக் கடிதம் எழுத – அதற்கவர் பதிலெழுத – அப்படியே வளராதா?”

பேனையும் காகிதமும் எடுத்துக்கொண்டு கடிதம் எழுதுவதற்காக மேசைக்குப் போனாள். அப்போது தாய் அவளைக் கூப்பிட்டாள்.

“தங்கச்சி, இங்கே வந்து விட்டுப்போ”

கமலாம்பாளுக்கு ஆத்திரமாக இருந்தது. ஏதோ முணுமுணுத்தபடி பேனையை மேசை மீது வைத்துவிட்டு எழுந்து சென்றாள்.

“வீட்டினுள்ளே பால் இருக்கிறது. எடுத்து வா” என்று தாய் கூறினாள். விரைவாக அதை எடுத்து வந்து கொடுத்துவிட்டுப் போவதற்காகத் திரும்பினாள். அவளுடைய அவசரத்தையும் மனநிலையையும் தாய் அறிவாளா?

“வெற்றிலைக்காம்பையும் நோண்டி விடு” என்றாள்.

“என்னால் முடியாது” என்று ஒருதரம் உடலை அசைத்துவிட்டுத் திரும்பி நடந்தாள். அவ ளுடைய இச்செயல் அவள் தந்தைக்குப் பிடிக்கவில்லை.

“என்ன பழக்கம்! நல்லநாட் பெருநாளிலே இப்படியா நடந்துகொள்கிறது! அம்மா சொல் லுவதை நீ செய்தால் குறைந்து போவாயா?” என்றார்.

திரும்பிவந்து “சகுனம் மாதிரி!” என்று தாயைச் சபித்தபடி வெற்றிலைக் காம்புகளை நறுக்கினாள். ஒரு யந்திரம் போல இருந்தே அந்த வேலையைச் செய்தாள். மனம் கடிதம் எழுத விரைந்து கொண்டிருந்தது.

மறுபடியும் மேசைக்குச் சென்று கடிதம் எழுதத் தயாரானாள். எழுதத் தொடங்கும் போது தடைவந்த காரியம் ஆபத்தாக முடியுமோ என்று அஞ்சினாள். எதற்கும் ஜாக்கிரையாக இருக்க வேண்டும். ஒருசமயம் இக் கடிதத்தை அண்ணா கண்டுவிட்டால்! எழுதிவிட்டு எங்கேயாவது மறைத்து வைத்துப் பின் இரகசியமாகத் தபாலிற் சேர்த்துவிட வேண்டும் என்ற முடிவுக்கு வந்தவளாக எழுதத் தொடங்கினாள்.

முதலில் தன்னுடைய விலாசத்தை எழுதினாள். அதற்குக் கீழே தேதியை 14 …. என எழுதினாள். ஆனால் அப்பாலே மாதம், ஆண்டு இவை எழுத அந்தப் பேனையில் மை யில்லை. இந்தப் பேனையைக் குத்தி முறித்துவிட்டால் என்ன?” என்று அவள் மனம் எண ணியது. இப்பொழுதுதானா இந்தப் பேனையில மை ஒழிந்து போகவேண்டும். பேனையை மேசைமீது வைத்துவிட்டு ஆயாசமடைந்தவள் போல சாய்மான நாற்காலியிற் சாய்ந்தாள். கண்ணை மூடியபடி சிறிதுநேரம் படுத்திருந்தாள். மறுபடியும் சிந்தனை புரண்டது.

“நான் இதற்கு உடனே பதில் எழுதாதுவிட்டால் அவர் ஒருசமயம் நான் இதை விரும்பவில்லை என எண்ணக்கூடும். அப்படியானால் கைக்கெட்டியது வாய்க்கெட்டாது போய் விடும். வலிய வந்த சீதேவியைக் காலால் உதறி எறிவது போல முடிந்துவிடும்.”

எழுந்து மறுபடியும் மேசை மீதுட்கார்ந்தாள். பேனைக்கு மை விட்டுக் கொண்டு எழுதத் தொடங்கினாள். அப்போது தமையன் அங்கே வந்தான். அவனும் மேசைமீது உட்கார்ந்து யாருக்கோ கடிதம் எழுதினான். அவன் முன்னிலையிலிருந்து இக்கடிதத்தை அவளால் எழுதமுடியவில்லை. எல்லாவற்றையும் எடுத்து வைத்துவிட்டு எழுந்து நடந்தாள்.

“ஏன், இப்படி வந்து இந்த அடுப்புக்கெரித்தால் என்ன” என்று தந்தை கேட்டார். உடனே அவள் அங்கே சென்று பொங்கலுக்கு ஒத்தாசை செய்தாள். ஆனால் மனம் விருந்துக் கொண்டாட்டத்திலேயே ஈடுபட்டிருந்தது.

அன்று முதுகில் “மான்” என்றெழுதிய சீட்டைக் குத்தியது யார்? ருக்குமணியா? இல்லை . அவள் மறுகரையிலே குத்தினாள்… சொர்ணமா? இல்லை; அவளுமல்ல. அப்போ யார்? ஆமாம். அவள்தான் திலகம், திலகேஸ்வரிதான் குத்திவிட்டாள். அது எவ்வளவு நல்லதாகப் போய்விட்டது. பாடசாலை தொடங்கட்டும். அவளுக்கு நன்றிகூற வேண்டும்.

“வாழை மடல் அறுத்துவா” என்ற தந்தையின் கட்டளை மறுபடியும் அவளை அங்கே அழைத்து வந்தது. அப்போதுதான் பொங்கல் முடிந்துவிட்டது என்பதை அவள் உணர்ந்தாள். தோட்டத்திற்குப் போய் வாழை மடலை அறுத்து வந்து அதில் விபூதியும் போட்டுத் தந்தையிடம் கொடுத்தாள். தந்தை பொங்கலைப் படைத்து விட்டுக் கற்பூரத்தையும் எரித்தார்.

அவள் மனம் தொடர்ந்து பாடசாலை விருந்து வைபவ நிகழ்ச்சிகளையே நினைவு கூர்ந்து அன்று நடைபெற்ற விருந்துக்கொண்டாட்டத்தில் மாணவிகள் பலரும் பங்குபற்றக் கூடியதாகச் சில விளையாட்டுகளை ஏற்படுத்தியிருந்தார்கள். அதற்காக விருந்தினரை நாலு குழுவாக வகுத்துவிட உத்தேசித்தார்கள். ஒவ்வொருவருடைய முதுகிலும் அட்டைகளைக் குத்தினார்கள். ஒவ்வொர் அட்டையிலும் ஒவ்வோர் பெயர் இருந்தது. மாடு, ஆடு, அணில், மண்ணுணி, கமுகு, கழுதை, பூவரசு, மூக்கறைச்சி, நுள்ளான் இப்படிப் பல பெயர்கள். மிரு கங்களின் பெயர் உள்ளவர் ஒரு குழுவாக உட்காரவேண்டும். இப்படிப் பறவை, ஊர்வன, தாவரம் ஆக நாலு குழு.

எல்லோரும் ஒவ்வோர் குழுவாகச் சேர்ந்தார்கள். சுந்தரேசன் முதுகில் “எருது” என்று எழுதப்பட்ட அட்டை தொங்கியது. அவன் மிருகக் குழுவிலே இருந்தான். கமலாம்பாளும் மிருகக் குழுவிலேயே சேர வேண்டியவள். அவள் எழுந்து அங்கே சென்றபோது – அவளு டைய அதிர்ஷ்டம் என்றுதான் கூறவேண்டும். சுந்தரேசனின் அயலிலேதான் ஒரு இடம் காலியாக இருந்தது. தனக்குக் கிடைத்த அந்த அரிய சந்தர்ப்பத்தைத் தவறவிடாது அதில் உட்கார்ந்தாள்.

ஆண்கள் கல்லூரி ஆசிரியனான சுந்தரேசன் பல மாணவிகளின் கவனத்தைக் கவர்ந் திருந்தான். பலரும் அவன் அழகிலே மனதைப் பறிகொடுத்திருந்தார்கள். அப்படியான ஒரு வாலிபனின் அயலிலே உட்காரச் சந்தர்ப்பம் கிடைத்தற்காக அவளுக்கு அளவு கடந்த ஆனந்தம்.

அங்கே அவன் அயலில் அவள் இருந்தபோது நடந்த ஒவ்வோர் நிகழ்ச்சியும் இப்பொழுது அவள் மனக்கண் முன் வந்துகொண்டேயிருந்தது.

பெண்கள் பங்குபற்றக் கூடிய போட்டிகளில் எல்லாம் அதிகமாகக் கமலாம்பாள் வெற்றி யெடுத்தாள். அதைக்கண்டு சுந்தரேசன் அவளை உற்சாகப்படுத்தினான். இடையிடையே அவள் திறமையைப் புகழ்ந்தான். கமலாம்பாள் அவன் வார்த்தைகளால் உள்ளம் பூரித்தவ ளாகப் புன்முறுவல் பூத்தபடி சிறிது நாணமுங்கொண்டவளாக இருந்தாள். இதைப் பல மாணவிகள் கவனித்துக் கொண்டிருந்தார்கள். சிலர் உள்ளத்திற் பொறாமையும் அரும்பியது.

சுந்தரேசன் போகும் போது அவளுக்கு வந்தனமளித்து விட்டுப் புன்முறுவலோடு விடை பெற்றுச் சென்றான். அவன் போனபின்பு மாணவிகள் செய்த “பகிடி” சகிக்கமுடியாதிருந்தா லும், அதிலே அவள் ஆனந்தத்தையும் அனுபவித்தாள்.

இவையெல்லாம் அவள் மனக்கண்முன் வந்து போயின. ஒவ்வொரு மாணவியும் தன்னை எங்ஙனமெல்லாம் “பகிடி பண்ணினாள் என்பதை நினைக்க இப்பொழுது வெட்கமாயும், அதே சமயத்தில் இன்னதென்று கூற முடியாத ஆனந்தமாயும் இருந்தது.

சிறுவர்கள் சுட்ட வெடி ஒன்று காலிற் பட்டதும் அவள் சிந்தனை கலைந்தது. பாடசாலைக் கொண்டாட்டத்திலிருந்து வீடு வந்து சேர்ந்தாள். கற்பூரம் அணையுந்தறுவாயிலிருந்தது. சாம்பிராணி வர்த்திகளிலிருந்து புகை மேலெழுந்தது. அவள் நாசியிலும் புகுந்தது அந்த வாசனை.

கற்பூரம் அணைந்ததும் தந்தை விபூதியை எடுத்து அணிந்தார். பின்பு மற்றவர்களுக் குக் கொடுத்தார். தாயும் கமலாம்பாளும் எல்லாவற்றையும் வீட்டினுள்ளே எடுத்துச் சென்றார்கள்.

எல்லோருக்கும் கமலாம்பாளை உணவு பரிமாறும்படி கூறிவிட்டுத் தாய் வெளியே ஏதோ அலுவலாகச் சென்றுவிட்டாள். அவள் பரிமாறிய முறை மிக வேடிக்கையாக இருந்தது. சாதம் போடென்ற போது தயிரை ஊற்றினாள். ஒருவர் கறிகேட்க மற்றவருடைய இலையிற் போட் டாள். சிறுவர்கள் தண்ணீர் கேட்ட போது பழத்தை எடுத்துக் கொடுத்தாள்.

“என்ன தபால் வந்த நேரந்தொட்டு ஒருமாதிரி இருக்கிறாயே? ஏன் என்ன விசேடம்” என்று தமையன் கேட்டான்.

“பசியல்லவா, பசிக்களையிலே தடுமாறுகிறாள். கெதியாக எல்லோருக்கும் பரிமாறி விட்டு நீயும் சாப்பிடு” என்றார் தகப்பன்.

“அக்கா நல்லக்கா. அக்கா என்றால் அப்படித்தான் இருக்கவேணும். தண்ணீர் கேட்டால் பழம் தருவா. இன்னொரு தரம் தண்ணீர் தாக்கா… இன்னொருதரம் தண்ணீர்… கெதி யாய்த்தா அக்கா” என்று சிறுவர்கள் தமாஷ் பண்ணினார்கள்.

அவள் நிலைமை பெருஞ் சங்கடமாக இருந்தது. தானே தனிமையில் இருந்து சாப்பிட நேர்ந்தது. அவளுக்கு நல்லதாகப் போய்விட்டது.

சாப்பிட்டுக் கொண்டிருக்கும் போது எதிர்வீட்டுப் பாட்டுப் பெட்டி பாடியது. அந்தப் பக்கவாத்தியத்தின் எஃறிக் குதிக்கும் ஓசையும், அவற்றைத் தொடர்ந்து வெளியேறும் சிருங் காரப் பாடல்களும் அவளைப் பரவசப்படுத்தின. அன்றிலிருந்து கொண்டாட்டத்தில் ஆசிரி யரின் அருகில் இருந்தபோது இது இன்னும் அவளை நன்கு உணர்ச்சியூட்டியது. மாலை நேரம் அந்தப் பூச்செடிகளின் அயலிலே இம்மாதிரி ஓசை எப்படியெல்லாம் அவளைப் பரவசப் படுத்தியிருக்கும். அப்போது ஒருசமயம் சுந்தரேசன் அவளைப் பார்க்க, அவளும் சுந்தரேச னைப் பார்க்க இருவர் கண்களுஞ் சிக்கிக்கொண்டன. இருவர் உதடுகளிலும் புன்முறுவல் அரும்பியது. அதை அவளால் என்றுமே மறக்க முடியாது.

போசனம் முடிந்ததும் மேசையருகே சென்றாள். தமையன் எங்கோ வெளியில் சென்று விட்டான். ஆறுதலாக எழுதலாம் என எண்ணியவனாகப் பேனையை எடுத்து எழுதினாள்.

இப்பொழுது அவரை எங்ஙனம் விளிக்க வேண்டும் என்ற சிந்தனை அவள் எழுது வதற்குத் தடையாக இருந்தது. “கனந்தங்கிய மாஸ்ரர்” என எழுதுவதா? அல்லது “அன்புள்ள மாஸ்ரர்” என்று எழுவதா? எது சரியென்பதை அவளால தீர்மானிக்க முடியவில்லை.

“அவர் முதலிற் கடிதமெழுதினால் எப்படி விளிக்கவேண்டுமென்பதை நான் இலகுவாக அறிந்துவிடலாம். அவர் எப்படி விழிக்கிறாரோ அதற்கு ஏற்ற மாதிரி நானும் விளித்துக் கொள்ள லாம். ஆனால் அவர் தந்திரமாக வாழ்த்துக் கடிதத்தை அனுப்பி இந்தக் கஷ்டத்தை என்மீதே சுமத்திவிட்டார். நல்ல சாதுரியம்!” என்று தன் மனதுட் கூறியபடி வாழ்த்துக் கடிதத்தை எடுத்து அதில் இதற்குச் சாதகமான விழிப்பு ஏதாவது இருக்கிறதா என்று பார்த்தாள். வாழ்த்துக் கடிதத்தில் அதற்கு இடமேது?

அதை மேசை மீது வைத்துவிட்டுக் கடிதத்தை எழுதத் தொடங்கினாள். எப்படி விளிப்பதென்பது இன்னும் பெரும் பிரச்சினையாகவே இருந்தது. “காதற் கடிதங்கள்” என்ற ஒரு ஆங்கிலப் புத்தகம் தமையனுடைய புத்தக அலுமாரியிலே இருந்தது. அதை இரண்டோர் முறை இரகசியமாக எடுத்து வாசித்திருக்கிறாள். ஆனால் இதைப் பற்றி அப்போது அவள் கவனிக்கவில்லை .

திருட்டுப் பூனைமாதிரி அங்குமிங்கும் பார்த்து விட்டு எழுந்து அலுமாரியின் பக்கமாகச் சென்றாள். ஆனால் அவளுடைய கஷ்டகாலம், அந்தப் புத்தகத்தை அன்று அங்கே காண வில்லை . அவன் இரவல் வாங்கிய புத்தகம், வாங்கியவனிடம் திருப்பிக் கொடுத்துவிட்டான்.

திரும்பி வந்தாள். “கனம் தங்கிய மாஸ்ரர் அவர்களுக்கு” என்று ஆரம்பித்தாள். அதுதான் சரி என்று அவள் மனதிற் பட்டது.

“உங்கள் வாழ்த்துக் கடிதம் கிடைத்தது. அதற்காக என் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்…”

மேலே எழுதுவதற்குள் அவளுடைய இளைய சகோதரன் வந்தான். தங்களோடு சதா விளையாடுவதும் செல்லங் கொஞ்சுவதுமாக இருக்கும் தமக்கை இன்று ஏதோ பேயடித்தவள் மாதிரித் திரிவதைக் கண்டு அவன் மனத்திற்குத் திருப்திப்படவில்லை. வழமை போலவென் றால் வெடிசுடும்போது வேடிக்கையாக அதில் பங்குபற்றியிருப்பாள். இன்று அவளோடு அளவளாவி விளையாட முடியாமற் போனது அவனுக்குத் திருப்தியைக் கொடுக்கவில்லை. அதற்காக அவளோடு விளையாட வந்திருக்கிறான்.

“அக்கா, தாயம் உருட்டுவோம் வாறியா” என்று கேட்டான்.

“இப்போ வர முடியாது ; அங்கே போ” என்றாள். “ஏன் என்ன செய்கிறாய்?” “வியாசம் எழுதுகிறேன். இப்போ விளையாட முடியாது.”

“என்ன வியாசமக்கா? விடுதலையிலும் பாடமா? நீ சும்மா!” என்று கூறியபடி அதை வாசிப்பதற்காக அண்மையிலே போனான். அவள் கடிதத்தை மறைத்தாள்.

“ஏனக்கா மறைக்கிறாய். நீ வியாசமெழுதவில்லை. பாத்தியோ நான் சொன்னேன். நீ வேறென்னமோ எழுதுகிறாய்.”

“நான் என்னென்றாலும் எழுதுவேன். அதற்குனக்கென்ன? போ; நீ போய் விளை யாடு.”

“இல்லை காட்டினாற்தான் போவேன்.”

“குழப்படி செய்தால் தெரியுமோ, ஐயாவுக்குச் சொல்லுவேன்.”

தகப்பனுக்குச் சொல்லுவேன் என்று பயப்படுத்தியதும் அவன் போய் விட்டான். அவள் மறுபடியும் எழுதத் தொடங்கினாள்.

அவன் சிறிது நேரம் பொறுத்துச் சத்தஞ் செய்யாதபடி அவளின் பின் புறத்தில் வந்திருந்து எட்டிப்பார்தான். முதல்வரியை வாசித்ததும் கடிதம் என்பது தெரிந்துவிட்டது.

*வியாசமா? கனந்தங்கிய மாஸ்ரருக்கு” என்றிருக்குது… வியாசமா?” என்றான்.

அவள் இதை எதிர்பாரக்கவில்லையாகையால் அவன் அப்படிக் கூறியது ஆத்திரத்தை யுண்டாக்கியது. திரும்பி அடிப்பதற்குக் கையை ஓங்கினாள். ஆனால் அவன் அந்த அடி விழுவதற்கிடையில் அப்பால் நழுவி ஓடிவிட்டான்.

அவள் அங்குமிங்கும் திரும்பிப் பார்த்தாள். அவன் கூறியதை யாரும் கண்டு விட்டார் களோ என்று அஞ்சினாள். ஆனால் ஒருவருமே அந்தப் பக்கத்திலில்லை அவளுடைய நல்ல காலம் அப்பபோதுதான் அடுத்த வீட்டுப்பையன் வந்து கொடி ஏற்றப் போவதற்காக அவனை யழைத்தான். அவனும் துள்ளிக் குதித்துக்கொண்டு வயற்கரைக்குப் பட்டமேற்றப் போய்விட்டான்.

“இனி எந்தக் கரைச்சலுமில்லை. விரைவாக எழுதி முடித்து விட வேண்டும். இன்னுஞ சிறிது நேரஞ் சென்றால் புஷ்பமும், ராணியும் வந்து விடுவார்கள்; “ரீச்சர்” வீட்டுக்குப் பொங்கற கொண்டாட்டத்துக்குப் போக வேண்டும். அதற்கிடையில் எழுதிமுடித்துவிட வேண்டும்” என்று எண்ணிக் கொண்டு உட்கார்ந்தாள்.

அவர் என்மீது காதல்கொண்டு என் விலாசத்தைத் தேடியெடுத்து இப்படி வாழ்த்துக் கடிதம் அனுப்ப, நான் “கனந்தங்கிய மாஸ்ரர்” என்று எழுதுவது சரியல்ல. “அன்புள்ள” என்றே எழுதவேண்டும். அன்பென்ற சொல் சாதாரணமானதுதானே. காதலிருந்தால் காதலுக்காக அதுபேசும். இல்லாவிட்டால் சாதாரண அன்பைப் புலப்படுத்தும். ஆகவே “அன்புள்ள” என்றெழுதுவதுதான் நல்லது” என்று அவள் மனம் சிந்தித்தது.

“அன்புள்ள மாஸ்ரர் அவர்களுக்கு” என்று ஆரம்பித்து “தங்கள் வாழ்த்துக் கடிதம் கிடைத்தது. அன்போடு இந்த நல்லநாளில் அனுப்பிய வாழ்த்திற்காக என் நன்றியைத் தெரி வித்துக்கொள்ளுகிறேன். நான் எங்கள் கல்லூரியில் கடந்த நடந்த விருந்தின்பின் தங்களிட மிருந்து ஒரு கடிதம் வரலாம் என எதிர்பார்த்தேயிருந்தேன். அது வாழ்த்துக் கடித ரூபத்திலே தான் முதலில் வரும் என நான் எதிர்பாரக்கவில்லை . உங்களுக்கு என் விலாசத்தைத் தராது வந்ததற்காக மிக வருந்தினேன். எப்படி என் விலாசத்தைத் தங்களுக்கு அறியத் தரலாம் என் பதை நான் சிந்தித்துக்கொண்டேயிருந்தேன். ஆனால் இப்போது என் விலாசத்தை எப்படி அறிந்துகொண்டீர்களென்பது எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது. தேடித்துரந்து என் விலா சத்தை அறிந்துகொண்டீர்களே, அதுவே நீங்கள் என்னிடம் கொண்டிருக்கும் அன்பைப் புலப் படுத்துகிறது…..

இப்படியே இன்னும் என்னவெல்லாமோ எழுதி உறையிலிட்டு, சுந்தரேசன் விலாசத்தை யுமெழுதிக் கடிதத்தை ஒரு மறைவான இடத்தில் வைத்தாள். வைத்துவிட்டு புஸ்பமும், ராணி யும் வருகிறார்களா என்று வாயிலில் வந்து நின்று பார்த்தாள். அவர்களைக் காணவில்லை. “இன்னும் சிறிதுநேரத்தில் வந்துவிடுவார்கள்” என்று எண்ணிக்கொண்டு உள்ளே போய் உடுப்பணிந்தாள்.

உடுப்பணிந்துகொண்டும் அதிகநேரம் காத்திருக்க நேர்ந்தது. மூன்று மணிக்கு வருவதாகக் கூறியவர்கள் நாலு மணிக்குத்தான் வந்தார்கள். அவர்கள் வாயிலில் வரும்போதே,

“பொங்குக பொங்குகவே – பால் பொங்குக மங்களமே”

என்று கூறிக்கொண்டு வந்தார்கள். அதைக் கேட்டதும் கமலாம்பாள் சிறிது அதிர்ச்சிய டைந்தாள். இந்தப் பாடலை இவர்கள் எங்கே கண்டார்கள்?

“என்ன புதுப்பாட்டாக இருக்கே” என்றாள் கமலாம்பாள்.

“ஏன் உனக்கு வாழ்த்துக் கடிதம் வரவில்லையா”

“என்ன வாழ்த்துக் கடிதம்?” “பொங்கல் வாழ்த்து… “இல்லையே! யார் அனுப்பியது?” “சுந்தரேசன் மாஸ்ரர்” “இல்லை, அப்படி எனக்கொன்றும் வரவில்லை ”

“என்னடி, உனக்கா அனுப்பாது விட்டிருப்பார்? எங்கோ தவறியிருக்கும்… நல்லாய்த் தான் உனக்கவர் அனுப்பாது விடுவார்” என்றாள் புஷ்பம் பகிடியாக.

“ஒரு சமயம் தபாலிலேதான தவறியிருக்கும்” என்று கமலாம்பாள் அவள் கூறியதை ஆமோதித்தாள். வேறென்ன செய்யலாம்! ஆனால் முகம் சோர்ந்து விட்டது. இருந்த ஆனந்தமெல்லாம் இடந்தெரியாமல் பறந்துவிட்டது.

“நேரம் போய்விட்டது. புறப்படு” என்றாள் ராணி.

கமலாம்பாள் உள்ளே சென்று மறைவிடத்தில் வைத்த காகிதத்தை எடுத்துத் தாறுமா றாகக் கிழித்துக் குப்பைக் பெட்டியில் போட்டாள். மனம் செத்து வாடிவிட்டது.

“அது எல்லா மாணவிகளுக்கும் அனுப்பப்பட்ட சாதாரண வாழ்த்துச் செய்திதானா?

“கமலா, கெதியாய்…” என்ற குரல் வந்தது.

“இதோ வந்துவிட்டேன்!” என்ற தனது குரல் நடுங்கிப் பதறுவது போலக் கமலாம்பா ளுக்குத் தோன்றிற்று!

– வரதர் புதுவருஷ மலர் – 1950, ஈழத்துச் சிறுகதைக் களஞ்சியம், முதற் பதிப்பு: நவம்பர் 2019, பண்பாட்டலுவல்கள் திணைக்களம், வடக்கு மாகாணம்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *