கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்  
கதைப்பதிவு: July 19, 2015
பார்வையிட்டோர்: 13,384 
 

நிலத்தைச் சுற்றிலும் புங்க மரங்களும்,எட்டி மரங்களும்.புளிய மரங்களும் அடர்ந்திருந்தன.லண்டானா புதர்கள் சிவப்பு,ஊதா,மஞ்சள் ,வெண்மை என வண்ணக்கலவையாக பூத்திருந்தன.

ஏரிக்கரையில் அமர்ந்திருக்கிறாள்.ஆனி ஆவணி மாதங்களில் இங்கு வெயில் பார்ப்பதே அரிது.காற்றில் எப்போழுதும் ஈரப்பதம் தான்.ஏரி நீரும் சோம்பலாய் இந்த குளிரை அனுபவிப்பது போல வீசும் காற்றில் அவ்வப்பொழுது சிலிர்த்து,சிறிய அலைகளில் புன்னகைக்கிறது.கரையில் சிவந்த மலர்களும்,இளஞ்சிவப்பு வண்ண ரேடியோப்பூக்களும் அந்த இடத்தை ரம்யமாக்குகின்றன.நீரில் உள்ள பாசிகளும் ,சிறிய சங்குகளும்,சின்னஞ்சிறு மீன் கூட்டமும் கண்ணாடி பிம்பம் போல தெளிவாகத் தெரிகின்றன.அடியிலுள்ள பொடி வண்டல் மண்ணின் மென்மையைக்காணும்பொது உடல் பொங்குகிறது.

அவள் காட்டை நோக்கி நடந்தாள்.

அக்கானகத்தின் இருளடரந்த பசும் ஒளியில் அவள் உயிர் பெற்றாள்.அவளின் ஆன்மா அங்குதான் செயலூக்கம் பெற்றது.பதின்வயது சிறுமியாய் அவள் உணர்ந்த காடு அது.அதுவே அவள் உயிர்,சலனம் எல்லாம்.அவ்வனத்தின் மரங்களும்,புதர்களும் பறவைகளும்,புழுக்களும்,சர்ப்பங்களும் அவளை அறிந்திருந்தன.கானகத்தை ஒட்டிய எல்லையில் அவள் வீடிருந்தது.நீர் தேடியும்,விறகு பொறுக்கவும்,புற்று மண்ணெடுக்கவும்,பூக்கள் கொய்யவும்,தழையெடுக்கவும் என பல வேளைகளில் அவள் தனியாக அக்காட்டில் திரிந்து கொண்டிருப்பாள்.அவள் அப்பன் கோரையன் ஆடுகளோடு போய்விட்டு அந்தி சாயும் வேளைகளில் திரும்புவான்.அந்த ஒரு வேளை மட்டுமே அவர்களுக்கு உணவ.ு

கார்த்திகை மாத மழைநாளொன்றில் தூரல் வெறித்த வேளையில் நத்தைக்கூடு தேடி காட்டில் சென்றுகொண்டிருந்த போது தான் அவர்களைப் பார்த்தாள்.அரசமரத்தடியில் சேற்று ஈரத்தில் நத்தைகளைப் பொறுக்கி மூங்கில் கூடையில் போட்டுக் கொண்டிருந்தாள்.

நான்கு பேரும் மழையில் நனைந்த ஆடைகளுடன் கணத்த பாதணிகளுடன் வந்தனர்.இவளைப் பார்த்ததும் ஏம்மா இங்க ஊர் தூரமா?சாப்புட ஓட்டல் எதாச்சும் இருக்குமா என்றான் ஒல்லியன ஒருவன்.

இங்க இருந்து ஊரு ஒரு மைலு.தேத்தண்ணிக்கட தான் இருக்கும் என்றவள் காட்டில் இவர்கள் என்ன செய்கிறார்கள் என்று எண்ணினாள்.

அவர்கள் வேகமாக சென்றுவிட்டனர்.உயரமாய் சிவப்பாய் புருவத்தில் தழும்புடனிருந்தவன் மட்டும் இவளைத் திரும்பி பார்த்தான்.

மழைத் தூரல் வலுக்கவும் அவளும் தலையிலிருந்த சாக்குப்பையை இழுத்து ஓடிவரத் தொடங்கினாள்.
மஞ்சம்புல் குடிசை வெளிக் குளிருக்கு இதமாய் வெம்மையாய் இருந்தது.அடுப்பிலும் தணலை விட்டிருந்தாள்.அப்பனை இன்னும் காணோம்.பீடி வாங்கப் போயிருக்கும்.மழையால ஆடுங்கள கூட காட்டுக்கு பத்திக்கிட்டு போக முடியல.

மண் அகல் விளக்கை ஏற்றி வெளி மாடத்தில் வைத்தும்,இன்னும் அப்பன் வரவில்லை.மழை அதிகரிக்க ஆரம்பித்தது.நத்தைக்கூடுகளைக் கழுவி மண் நீக்கினாள்.

கதவைத் திறந்து கொண்டு அப்பனுடன் காட்டில் பார்த்த நாலு பேரும் வந்தார்கள்.இவுங்க காட்டுல ஆராச்சி பண்றாங்கோ.சாப்பாடு தேடிக்கினு வந்திருக்காங்கோ.தேத்தண்ணிக்கடய மண்ணு இன்னிக்கு தொறக்கல.நாந்தா கூப்புட்டுட்டு வந்தேன்.எதாச்சும் ஆக்கு மவோ.

அவர்கள் நன்றாக நனைந்திருந்தார்கள்.வீட்டிலிருந்த துணிகளைக் கொடுத்தாள்.தலைகளைத் துவட்டிக்கொண்டிருந்தவர்களுக்கு நடுவில் அகன்ற மண் சட்டியில் நெருப்புத் தணல்களைக் கொண்டு வைத்தாள்.அதை விசிறி அவர்கள் சுற்றிலும் சூடு பெற அமர்ந்திருக்கையில்,கொதிக்கும் நீரில் மல்லியும்,கருப்பட்டியும் தட்டிப் போட்ட சூடான பானத்தை தந்தாள்.
ரெண்டு நாழியில் சாமைச்சோறும்,கானப் பருப்பு ரசமும் கொதிக்க கொதிக்க பரிமாறினாள்.சுட்ட நத்தைகளை ருசித்தவாறே ரொம்ப நன்றிங்க என்றான் உயரமானவன்.அவர்கள் பேச்சிலிருந்து அவன் தான் அவர்களுக்குத் தலைவன் என்று அறிந்திருந்தாள்.

எங்க சோறு உங்களுக்கெல்லாம் புடிக்குதோ என்னமோ எங்களுக்கு இதுதாங்க விருந்து .ரொம்ப தேங்க்ஸ்.உடனிருந்தவன் கூற அவளுக்கு சிரிப்பு வந்தது.

அதன் பிறகு அவர்கள் அடிக்கடி வருமிடமாய் அவள் வீடு மாறியது.அப்பனும் அவர்களுடன் சேர்ந்து இரவுகளில் வெகு நேரம் பேசிக் கொண்டிருக்கும்.அவர்கள் ஒரு பேட்டரி எமர்ஜன்ஸி விளக்கைக் கொண்டு வைத்தனர்.அந்த மெல்லிய ஒளியில் ஆவேசமாக அவன் பேசுவது அவளுக்கு முதலில் அச்சமூட்டுவதாக இருந்தது.அவனை எல்லாரும் மாஸ்டர் என்றழைத்தனர்.இவள் நள்ளிரவுகளில் அவர்களுக்கு தேநீரோ,கோபியோ பாலின்றி தயாரித்து தருவாள்.அவளுக்கு இவற்றைத் தயாரிக்க மாஸ்டரே கற்றுத் தந்தார்.

மரவள்ளிக்கிழங்குகளைச் சுட்டுத் தருவாள்.

இது நம்ம காலங்காலமா வாழற எடம்.இங்கிருக்கற கிரானைட்டை வெட்டி எடுக்க அவனுங்க சதி செய்யறாங்க .அரசாங்க அதிகாரிங்களும் இவனுங்க கையில.இப்படியே மலையை வெட்டினா நம்ம விவசாயம் அழியும்.ஏரியெல்லாம் இல்லாம போயிடும்.ஊரையே வளைக்கப் பாக்குறாங்க.

அவள் நிலவொளியில் முகம் முழுக்க கோபத்துடன் பேசிக் கொண்டிருக்கும் அவனையே பார்த்துக் கொண்டிருந்தாள்.அன்று முழு நிலவு ,வீட்டின் பின்புறமிருந்த பாறைகளில் அவர்கள் அமர்ந்திருந்தனர்.இப்பொழுது அவர்கள் ஒன்பது பேர்.மற்றொருவன் பேசும்போது இவளைப் பார்க்கிறான்.வா என்று கையை அசைக்கிறான்.
அருகில் சென்றதும் நீ ரொம்ப கேர்புல்லா இருக்கனும்.போலீஸ்காரங்க வருவாங்க.எதுவும் தெரியாதுன்னு சொல்லிடு என்றான்.சரியென்று தலையாட்டினாள்.சிரிக்கும்போது இவன் எத்தனை அழகு என்று நினைக்கிறாள்.

காட்டை ஒட்டி ஓடும் சிறிய ஆற்றில் குளித்துவிட்டு தலையை உலர்த்திக் கொண்டு பாறைமீது அவள் அமர்ந்திருந்தபோது காலடி ஓசை கேட்டு திரும்பினாள்.
அவன் தனியாக வந்து கொண்டிருந்தான்.

குளித்து பளபளத்த உடலின் அழகுக் கருமையும்,கூந்தலின் நெளிவும்,எழிலான கண்களும்,கன்னி இதழ்களும் ,அவள் தோள்களும்,விரல்களும் அவனுக்கு அவள் கபடங்களற்ற காட்டோடையாகவேத் தோன்றினாள்.இக்கானகத்தில் பிறந்து இங்கேயே வளர்ந்து சிறகசைத்து இவ்விடத்தை ரம்யமாக்கும் பறவைகளில் அவளும் ஒருத்தி என்றே அவனுக்குத் தோன்றியது.

அவன் பார்வையில் தலை குனிந்தாள்.
தனியா என்ன பண்ற அப்பன் ஆட்டுக்கு போயிடுச்சி

அவள் கைகளில் வைத்திருந்த பொன்மஞ்சள் கொன்றை மலர்க் கொத்தைப் பார்த்து இத என்ன பண்ணப்போற என்றான்.

அவள் நாணிச்சிரித்த கணத்தில் அவன் மனம் அக்காதலை உணர்ந்தது.புதர்களில் மலர்ந்திருந்த ஊதா மலர்களையும்,கல்யாண முருங்கை மரத்தின் செந்தூர வண்ணப் பூக்களையும் பறித்துக் கொண்டும் ,புளியம் பிஞ்சுகளின் புளிப்பைத் தின்று கொண்டும்,திராட்சைப் பழங்கள் போல இளஞ்சிவப்பு வண்ணத்தில் பழுத்திருந்த அழிஞ்சிப் பழங்களின் கொழ கொழப்பை சுவைத்துக் கொண்டும் அவள் வீடு வரை இருவரும் உற்சாகமாய் சென்ற அந்த நாள் முதல் அவள் அவனின் உயிரானாள்.

அவளின் உயிர்ப்பும்,அசைவுகளும்,சுவாசமும் அவனானான்.

அவர்கள் ரகசிய கூட்டங்களிலும்,கூடுகைகளிலும் அவள் மௌனமாய் உணவும் நீரும் தந்து உலாவருவாள்.
கோடை மழை நாளொன்றில் அப்பன் காயலாய்ப் படுத்திருந்தான். நள்ளிரவில் நிலைமை மோசமாகவும் அவள்மனம் கலங்கி யாருமில்லையே என அஞ்சினாள்.ஊருக்குள் சென்று யாரையாவது கூப்பிடலாமென்றால் மழையும் இருட்டும்.

கையில் டார்ச் விளக்குடன் வந்து கதவைத்தட்டிய அவனைப் பார்த்ததும் கதறினாள்.பற்றிய கரங்களிலேயே அவளுக்கு ஆறுதலானான்.போலீஸ் பயம் இருந்த போதும் அவள் தகப்பனின் இறுதிச்சடங்குகளை நின்று செய்தான்.எல்லாரிடையிலும் அதுவே அவர்கள் உறவின் அங்கீகாரமாகியது.

ஆறு மாதங்களாகியது.அவர்களின் கூட்டங்கள் இப்பொழுது காட்டிலேயே நடக்கிறது.அதிகாரிகளின் பிடிகள் இறுகின.அவனைப் பார்க்கவே முடியவில்லை.
ஓர் அந்திப் பொழுதில் பின்புறமாய் வந்து கதவைத்தட்டினான்.காலெங்கும் குருதி.பாறை சரிவுல விழுந்திட்டேன்.

காயங்களைக் கழுவி மஞ்சளும் சில இலைகளையும் அரைத்து வைத்துக் கட்டினாள்.சாப்புட்டீங்களா.
இல்லை என்று தலையசைத்தவன் போகிறேனென்று கிளம்பினான்.

இந்தக் காலோடு போவ முடியாது .சோறாக்குறேன் காலையில போலாம் என்றாள்.இல்ல நீ தனியா இருக்குற….
அவன் கரங்களைப் பற்றி அமரவைத்தாள்.அடுப்பின் செந்தழல் ஒளியில் அவள் சமைப்பதைப் பார்த்தவாறு இருந்தவன் உன்னைப் பாக்கும்போது மட்டும் தான் என் மனசு எல்லாத்தையும் மறந்துடுது என்றான்.அவள் புன்னகைத்தாள்.இரவில் செவ்வொளியில் அவள் சிரித்த அழகு அவனை அழித்தது.வரகரிசிச்சோறும் மல்லித் துவையலும் பறிமாறினாள்.

அவன் படுக்கத் துணி விரித்தவள் முன் புறமிருந்து அகல் விளக்கை எடுத்துவந்து நடுவில் வைத்தாள்.

அகல் விளக்கின் சுடரொளியில் அவள் கண்களும்,குழல் பிசிறுகளும்,கன்னங்களும்.அதரங்களும் ஒளிர்ந்து அவளைப் பேரழகியாக்கின.

அவன் மனம் முழுவதும் நிறைந்தாள்.அவனின் பார்வைகளே அவளை மலரச்செய்தன.அன்று அவர்களின் சங்கமம் அவர்களின் காதலை,பிரேமையை,அழியாப் பேரன்பை இன்னும் உறுதியாக்கின.

மறுநாள் ஆற்றில் மஞ்சள் உரசிக் குளிக்கையில் புன்னகைத்துக் கொள்கிறாள்.அவள் முகம் பூரண அமைதியில் ,முழு தெய்வீகக் களையில் ஒளிர்ந்தது.

அவன் வரும் நாளை அவள் மனம் உணர்ந்து கொள்ளும்.சமைத்து வைத்துக் காத்திருப்பாள்.சில சமயங்களில் ரகு,முருகவேள் இருவரும் உடன் வருவார்கள்.

தனியே வரும் நாட்களில் மணிக்கணக்கில் அவளிடம் பேசிச் சிரிக்க வைப்பான். கம்பு,சாமை,வரகு,குருதவாலி ஏதாவது ஒன்றை குத்தி சோறாக்கியிருப்பாள்.குப்பைக்கீரை,சிறுகீரையை புளியும் மிளகாயும் பூண்டும் சேர்த்து வணக்கி கடைந்து வைத்திருப்பாள்.கானப் பயரைத் துவத்து வறுத்து குழம்பாக்கியிருப்பாள்.அரசாணிக்காயோ,சுரைக்காயோ கிடைத்தால் துவரையும் மொச்சையும் சேர்த்து புளித் தீத்து செய்வாள்.மீனோ கருவாடோ கிடைத்தால் குழம்பு வைத்து கெவுறு,கம்பங்களி கிண்டியிருப்பாள்.ருசித்து உண்பான். உங்கைப்பக்குவம் யாரிக்குமில்லடீ என அவன் கொஞ்சும் போது பூரிப்பாள்.

அவனை மடியில் சாய்த்து அடர்ந்த கேசத்தை தடவிக் கொண்டே நீங்க எம்மாஞ்சிவப்பு என்பாள்.போடீ கருப்பி என்று சிரிப்பான்.

சில முக்கிய செயல்கள் முடிந்து மனம் முழுதும் கொந்தளிப்புடன் வரும் அவனுக்கு அவளே இளைப்பாறுதல்.என் எல்லா டென்ஷனும் ,கோபமும் உன்னால மட்டும் தான் தீர்க்கமுடியுது என்பான்.அவளும் அவன் இனிய துணையானாள்.

இயக்கத்தில் எல்லாரும் அண்ணி என்று அவளைக் கூப்பிட ஆரம்பித்தனர்.

எங்க வெற்றி கெடச்ச பிறகு சென்னைக்கு உன்னக் கூட்டிட்டுப் போயி கல்யாணம் பண்ணிக்கிறேன் என்றான்.அவளுக்கு அதெல்லாம் பொருட்டாகத் தெரியவில்லை.அவன் நேசம் மட்டுமே போதுமாயிருந்தது.உடல் மனம் உதிரம் எல்லாவற்றிலும் அவனைச் சுமந்து பெருமிதமாய்,பேருவகையாய் வலம் வந்தாள்.

சில மாதங்களில் அடுப்புக் கரியில் போட்டிருந்த கோடுகளை பார்த்துக் கொண்டே குழப்பமாய் அமர்ந்திருந்தவள் வைதம் பாக்குற வெள்ளச்சி வீட்டுக்குப் போய் வந்தாள்.அவனிடம் சொல்லக்கூட இல்லை.ஓராண்டுக்குப் பின் ஒருநாள் இவள் சோர்ந்து படுத்திருந்த வேளையில் வந்தவன் அறிந்து கொண்டான்.கண்கள் கலங்க ஏன் எங்கிட்ட சொல்லல என்றபோது உங்களுக்கு எவ்வளவோ முக்கிய வேலையெல்லாம் இருக்குது என்றாள்.

அவன் கரங்களைப் பற்றிக் கொண்டவள் உன்ன மாறி செவப்பா புள்ள பெத்துக்க முடியலன்னு மட்டுந்தான் மாமா கஷ்டமா இருக்கு என்றாள்.

இன்னும் கொஞ்சநாள் அப்புறம் நீ ஆசப் படறதெல்லாம் நடக்கும் என்று அணைத்துக் கொண்டான்.
தலைமறைவு வாழ்வு மூன்றாண்டுகள் தொடரந்தது.

இயக்கப் பணி ஓய்வு வேளைகளில் இருவரும் கானகத்தைச் சுற்றி வந்தனர்.காட்டின் ரகசியங்களை அவனுக்குக் காண்பித்தாள்.காட்டின் அடர்ந்த பகுதியில் நெல்லி மரங்களும்,ஈட்டிமரங்களும்,செம்மரங்களும்,புளிய மரங்களும்,நெட்டிலிங்கமும்,விளா மரங்களும்,காஞ்சிரமும்,ஆலமரங்களும்.மூங்கில்களும் செழுமையாய் வளர்ந்திருந்தன.கிளிக் குஞ்சுகளை,பாறை இடுக்குகளில் நண்டுகளை,அரளிப் பூக்களை உவகையாய் சிறுமி போன்று அவனுக்கு காண்பித்தாள்.

விளாங்காய் ஒன்றினை உடைத்து ஓடு நீக்கித் தந்தாள்.சிறிய ஆலமரமொன்றின் விழுதினைப் பற்றி அவள் காற்றில் மிதப்பது போல் ஆடவும் அவன் சிரிக்கிறான்.நீயும் ஆடறயா என்றாள்.நீ இன்னமும் குழந்தை தான் என்றான்.இருவரும் நீர்மருதத்தின் அடியில் ஓடையில் காலை வைத்தவாறு மணிக்கணக்கில் அமர்ந்திருப்பார்கள்.அவன் தன் போராட்டங்கள் பற்றியும்,எதிர்காலம் பற்றியும் நிறைய பேசுவான்.அவள் அவனையே பார்த்து அவன் ஒவ்வொரு பேச்சையும்,பாவங்களையிம்,அசைவுகளையும் மனதில் வரிந்து கொள்வாள்.என் மனச முழுசா உங்கிட்ட மட்டும் தான் பேசமுடியுது என்பான்.

கங்கா நான் சென்னையில லா காலேஜ்ல படிச்சப்பவும்,லண்டன் கேம்பிரிட்ஜ் யுனிவர்சிடிக்கு விசிட்டிங் மாணவனாப் போனப்பவும் எந்த பொண்ணையாவது கல்யாணம் பண்ணிப்பேன்னு எங்க அம்மா நெனைச்சாங்க.

நான் கல்லூரி முழுசிலும் எப்பவும் வலிமையான ஆளுமையாத் தான் இருந்திருக்கேன்.வாலிபால் ஸ்டேட் பிளேயர்.பொண்ணுங்க தானா வந்து எங்கிட்ட பழகுவாங்க.நிறைய வந்திருக்கு.ஆனா எனக்கு ஆர்வமில்ல.உன்னப் பாத்ததும் தான் மனசு மாற ஆரம்பிச்சது.

உலகத்துலயே நான் என்னை மறந்து மனசு நெறஞ்சி இருக்கறது உன் மடியில தான்.எந்த களங்கமுமில்லாத உன் அன்பு தான் எனக்கு சோர்ந்து போறப்ப எல்லாம் உயிர் கொடுக்குது.

அவன் பேசப்பேச கண்கள் நனையப் பார்ப்பாள்.அவன் கூறும் இடங்களெல்லாம் அவள் அறியாதவை.அவனின் கல்வியும்,திறமைகளும் அவளுக்கு அறிமுகமற்றவை.இந்த காடும்,ஊருமே அவளறிந்த உலகு.ஆனால் அவளின் தூய நேசமே அவனில் காதலை ஒளிரச்செய்தது.

ஒரு முறை மதுரைக்கு சென்று வந்த போது இளமஞ்சளில் பச்சைக் கரையிட்ட சேலை ஒன்றை வாங்கி வந்தான்.அவளுக்கு மூவுலகையுமே தந்தது போல மகிழ்ந்தாள்.

மற்றொரு முறை ஒற்றைக்கல் பதித்த மூக்குத்தி ஒன்றை வாங்கி வந்து அவனே போட்டுவிட்டான்.மூக்குத்தியின் ஒளியில் அவள் முகம் தனிச்சோபையில் சுடர்ந்தது.
அவர்கள் இருவரின் தனி உலகில் அன்பு மட்டுமே இருந்தது.தேவதைகளும்,பூக்களும்,பறவைகளும்,கானகத்தின் உயிர்களும்,சின்னஞ்சிறு செடிகளும்,வேங்கை மலர்களும்,காட்டுவாகை இலைகளும்,பசுங்கொடிகளும்,பசும் இலைப்புழுக்களும்,சிற்றெரும்புகளும்,ஓடி மறையும் மண் வண்ண பாம்புகளும்,புதர்களில் அலையும் காட்டுக் கோழிகளும்,செந்நிற வரகளுடைய மரவட்டைகளும்,தத்தும் மணல்நிற தவிட்டுக் குருவிகளும்,மங்சளும் சிவப்புமான புளியம்பூக்களும் நிறைந்த உலகமது.

கடும் கோடையில் கிரானைட் மலைகளின் ஆவியில் உடல் வெந்து அவன் வருகையில் கம்பங்கூழும்,புளித்த தயிரிட்ட பழங்கஞ்சியும் வைத்திருப்பாள்.அவனே குளிர்ந்து விடுவான்.

அவர்கள் இயக்கச் செயல்பாடுகள் உச்சம் பெறத் தொடங்கின.

ஒருநாள் இரவு வந்தவன் என் உயிருக்கு போலீசும் குவாரிக் காரனுங்களும் குறி வச்சிட்டாங்க.நீ எதுக்கும் தைரியமா இருக்கனும் என்றபோது அவள் உள்ளம் கலங்க என்னயும் உங்கூட கூட்டுட்டுப் போ மாமா என்று அழுதாள்.

கல்யாணம் பண்ணாம அது முடியாது.இன்னும் பத்து நாளில் ஒரு முற்றுகை இருக்கு.மீடியாவுக்கு தகவல் கொடுத்துட்டோம்.அதுக்கப்பறம் நம்ம திருமணம் தான் கவலைப்படாதே எனெறான்.

மறுநாள் விடைபெற்ற போது திரும்பித்திரும்பி பார்த்தவாரே சென்றான்.

அவர்களின் போராட்டம் பற்றி ஊரில் பல வதந்திகள்.

அவள் கோழிகளுக்கு இரைபோட்டு அவைக் கொத்துவதைப் பார்த்தவாறு அமர்ந்திருந்த ஒரு

மாலைவேளையில் முருகன் வந்தான்.

அண்ணி ஒடனே வாங்க .

அவன் கண்கள் கலங்கிச் சிவந்திருந்தன.

என்னாச்சி

அவன் பதிலே கூறவில்லை.உயிர் கலங்க அவன் பின்னே ஓடுகையில் சுடப்பட்டதை முருகன் சொன்னான்.நள்ளிரவில் அவள் வரும்வரை அவன் உயிரிருந்தது.

மாமா அவள் கதறலை உணர்ந்து விழி திறந்தவனால் பேச முடியவில்லை.அவள் மடியிலேயே அவளைப் பார்த்துக் கொண்டே உயிர் பிரிந்தது.

அவள் வனமெங்கும் பிச்சியாக அலைந்தாள்.ஓடைக்கரையிலே,ஆலமரத்தடியிலே,புற்றினருகே விடியலில் உச்சிப் பொழுதில்,அந்தியில் அவளைப் பலர் பார்த்தனர்.
யாரிடமும் அன்றிலிருந்து அவள் பேசவில்லை.

சில நாட்கள் கழித்து இயக்கத்தோழர்கள் வந்தனர்.ரெண்டு ரவுண்ட் சுட்டுடாங்க அண்ணி.எதிர் பாக்கல.
கடைசி மணித்துளிகளில் அவளைப் பற்றி மட்டுமே பேசியிருக்கிறான்.

அவள நான் பாத்தப்ப பதினாறு வயசு சின்னப் பொண்ணு.எனக்காக அவ வாழ்க்கையை,இளமையை,எதிர்காலத்தை எந்த கேளெவியும் கேட்காம எனக்குத் தந்தா.எனக்கு எல்லாமுமா இருந்தா.அவ ஆசப்பட்ட குழந்தையக் கூடத் தராம ஏமாத்திட்டேன்.எத்தனை வலிய எனக்காகத் தாங்கியிருக்கா.லீகலா இருக்கனும்னு தான் அவ பண்ணதுக்கு அமைதியாயிட்டேன்.இப்ப அவளுக்கு எதுவுமே பண்ணாம போறேன் என்று அழுதிருக்கிறான்.

அவள் வயிற்றைப் பிடித்துக் கொண்டு கலங்கினாள்.

இயக்கத்தை அரசு தடை செய்யவும் அவர்கள் கலைந்தனர்.மூன்று மாதங்களில் முருகனைத் திருமணம் செய்து கொள்ள தோழர்கள் கேட்டனர்.

முருகனிடமே அவள் பொறுப்பை அவன் அளித்ததிருந்ததை தோழர்கள் கூறினர்.அவள் மௌனமாய் மறுத்து விட்டாள்.

காடெங்கும் திரிந்தாள்.நரிகளிடமும்,ஓணான்களிடமும்,நெளியும் புழுக்களிடமும,ஆந்தைகளிடமும் பேசிக்கொண்டிருப்பாள்.வானில் பறக்கும் நாரைகளையும்,மடையான்களையும்,புறாக்களையும்,சிட்டுகளையும்,பருந்துகளையும் விசாரிப்பாள்.பூவும் பிஞ்சுமாய் நிற்கும் காட்டுவாகை மரத்தையே பார்த்துக் கொண்டிருப்பாள்.தாயின் வயிற்றைப் பற்றிக் கொண்டிருக்கும் குரங்குக்குட்டிகளைக் கொஞ்சுவாள்.பால்குடிக்கும் பசுவின் கன்றைப் பார்த்தவாறு நிற்பாள்.

ஏரிக்கரை நாவல் மரத்திலிருந்து நீலச்சிதறலாய் பறந்து நீரில் மூழ்கும் மீன்கொத்தியிடம்,கருவேலமரங்களில் கரண்டி தட்டுவது போல் ஓசையெழுப்பும் மரங்கொத்தியிடம்,ஏரி நீரில் மின்னும் வெள்ளி போன்ற சிறுமீன் கூட்டங்களிடம்,ஆழத்தில் சேற்றில் அமிழ்ந்திருக்கும் குரவைகளிடம்,தேங்காய் சிரட்டை போன்று நீந்திவரும் ஆமைக்குஞ்சுகளிடம்,நீர் பரப்பில் வட்டம் உருவாக்கும் நீர் சிலந்திகளிடம்,தலையை மட்டும் காட்டும் தண்ணீர் பாம்புகளிடம்,பச்சைத் தவளைகளிடம்,ஒளிரும் தலைப்பிரட்டைகளிடம் ,கரையில் வளர்ந்த அவுரிச்செடிகளிடம்,நாணல் புற்களிடம்,கழுத்தை நீட்டும் நீர்க்கோழிகளிடம்,ஏரி நீரின் தூய்மையைக் காண்பிப்பதுபோல வேராய்,கிளையாய் படர்ந்து மிதந்து அவ்விடத்தையே கனவு போலாக்கும் வேலம்பாசிகளிடம் அவன் காதலப்பற்றி பேசிக்கொண்டிருப்பாள்.

அவள் வீடெங்கும் கோழிகளும்.குஞ்சுகளும்,பூனைக்குட்டிகளும்.நாய்க்குட்டிகளும்,அணில்களும் நிறைந்திருந்தன.எல்லாவற்றையும் போஷித்தாள்.

இயக்கத்தில் எல்லாரும் திருமணமாகி குடும்பமாயினர்.அவர்கள் வந்து அவன் நினைவுகளைப் பேசும் நாட்களில் தனிமையில் ஓடைக்கரை மணலில் வயிற்றில் அறைந்து கொண்டு கதறுவாள்.உதிரப் பெருக்குகளில் நினைத்து ஏங்கி ஏங்கி உருகுவாள்.இரவுகளில் அகல் விளக்கின் பொன்னொளியையே பார்த்தவாறு அமர்ந்திருப்பாள்.

சில ஆண்டுகளில் அவள் பேச்சு முற்றிலும் தணிந்தது.இயக்கத்தினர் உதவிகளுடன் வாழ்ந்தாலும் யாரிடமும் அவள் பேச எதுவுமில்லை.அக்கானகத்தின் உயிர்களுக்கும்,அவள் வீட்டிலுள்ள ஜீவன்களுக்கும் தாயானாள்.

அவள் பூனைகளும்,நாய்களும் தொடர்ந்து கத்தியதில் ஊரார் வந்து பார்த்த நாளில் மௌனமாய் மறைந்திருந்தாள்.அவன் பெயர் பதிந்திருந்த இடது தோளை மற்ற கரத்தில் தழுவியபடி ஆழ் துயிலில் கலந்திருந்தாள்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *