கதையாசிரியர்:
தின/வார இதழ்: சுபமங்களா
கதைத்தொகுப்பு: குடும்பம்  
கதைப்பதிவு: May 16, 2021
பார்வையிட்டோர்: 5,214 
 

எல்லாம் முடிந்து விட்டது. இன்று காலை ஐந்தரை மணிக்கு வாசல் மணியின் ஓயாத ஓலம் என்னை எழுப்பியது. என்னையும் அறியாமல் தூங்கிவிட்டேன் போலும். பால் காரன் அழைப்பு மணியின் மேல் தன் முழு பலத்தை பிரயோகித்து தன் பொறுமையின் எல்லையை கோடி காட்டிக் கொண்டிருந்தான். வாரி சுருட்டிக்கொண்டு எழுத்தேன். அந்த அவசரத்தில் நான் கடந்த சில நாட்களாக காலையில் எழுந்தவுடன் செய்யும் முதல் வேலையை செய்ய மறந்தேன் – ஸித்தார்த்தின் முகத்தை கவனமாக பார்க்கவில்லை.

பாலை வாங்கிக்கொண்டு பேப்பரை எடுத்துக் கொண்டு உள்ளே வந்தேன். பாலை பார்த்தவுடன் காபி ஆசை வந்துவிட்டது. பல் தேய்த்து முகம் கழுவி காபி டிகாக்ஷனை இறக்கிக் கொண்டே பாலை அடுப்பில் வைத்தேன். ஸ்வாமி விளக்கேற்றி கந்த சஷ்டி கவசம் சொன்னேன். டிகாக்ஷன் ‘படுத்தாமல் இறங்கிவிட்டது. இன்று நல்ல நாள்தான் போலிருக்கிறது’ என்று வேடிக்கையாக எண்ணிக் கொண்டேன். தினசரி காலண்டரில் தாளை கிழித்தேன். தேதி பதினான்கு’ஓ! நாளைக்கு சுதந்திர தினம். ஆபீஸுக்கு லீவாயிற்றே! நான் முழுவதும் ஸித்தார்த்துடன் கழிக் கலாம்’ என்று எண்ணிக் கொண்டேன். எனக்கு மட்டும் காபி கலந்தேன். (இப்பொழுதெல்லாம் ஸித்தார்த் நேரம் கழித்துதான் எழுந்திருக்கிறான்.) காபியை எடுத்துக் கொண்டு படுக்கை அறைக்கு போனேன். ஜன்னல் வழியே வந்த கதிரவனின் ஒளி ‘நைட் பல்ப் பின் நீல ஒளியை விழுங்கிவிட்டிருந்தது. காபியை மேஜை மேல் வைத்து விட்டு விளக்கை அணைத்தேன். ஸித்தார்த்த்தின் திறந்திருந்த கால்களை போர்த்திவிட்டு அவன் முகத்தைப் பார்த்தேன். நெஞ்சுத்துடிப்பு ஒரு விநாடி நின்றது. பயம் அடி வயிற்றை கவ்வ ஆள்காட்டி விரலை அவனுடைய மூக்குக்கு நேரே பிடித்தேன். மனம் இருக்காது. இருக்காது எனக் கூவ, தரையில் அமர்த்து காதை அவன் மார்பின் மேல் வைத்து கேட்டேன். எல்லாம் முடிந்துவிட்டிருந்தது. கடந்த ஆறு மாதங்களாக அவன் என்னை எதற்காக தயார் செய்திருந்தானோ அது… நடந்து விட்டிருந்தது. எப்பொழுது? தெரியவில்லை. நள்ளிரவில் ஒரு முறை அவன் கண்களை திறக்க முயற்சிப்பதையும், காய்ந்துபோன உதடுகளை நாக்கால் நனைக்க முயல்வதையும் கவனித்துவிட்டு ஸ்பூனால் வாயில் தண்ணீர் விடுகையில் சுவர் கடிகாரம் இரண்டு மணி அடித்தது. இப்பொழுது மணி ஆறு. இரண்டுக்கும் நடுவே ஏதோ ஒரு பொழுதில்… எப்பொழுதாயிருந்தால் என்ன? ஆறு மாதங்களாக சுமந்த சுமை இறங்கிவிட்டது. எல்லாம் முடிந்து விட்டது.

“இல்லெம்மா, இல்லெ. எதுவும் முடிஞ்சுடாது. ஒரு உயிரை விட ஜீவனம் ரொம்ப பெரிசு. மறந்துடாதே.”

“இல்லெடா, இல்லெ. நா மறக்க மாட்டேன். எங்கண்ணே, நா மறக்க மாட்டேன்.”

இப்பொழுது என்ன செய்ய வேண்டும்? கால்கள் ஓய தரையில் உட்கார்த்து விட்டேன். முதலில் என்ன செய்ய வேண்டும்? ஆங்.. அவன் தான் நூறு முறை சொல்லியிருக்கிறானே! டெலிஃபோன் டைரக்டரியின் முதல் பக்கத்திலேயே நம்பர்களை எழுதி வைத்திருந்தானே!

“ஹலோ ! ‘ஐ பேங்க்’கா? என்னோட பிள்ளை ஸித்தார்த் ஸுப்ரமணியம் செத்துப் போயிட்டான். அவனோட கண்ணெ எடுத்துக்க வரேளா?.. ஆங்? இப்பத்தான். அரைமணிக்கு முன்னே தெரியும். ‘எக்ஸாட் டைம்’மா? தெரியாது. ராத்திரி ரெண்டு மணிக்கு மேலே தான். ஃபார்ம் எல்லாம் கையெழுத்துப் போட்டு கொடுத்திருக்கான். ஆங்! இல்லெ வேற யாருமில்ல.

நானா? அவனோட அம்மா – ரஸா? எழுதிக்கோங்கோ …”

“ஹலோ! ஆங். என்னோட பையன் ஸித்தார்த் ஸுப்ரமணியம் செக்குப் போயிட்டான். அவனோட பாடியெ எடுத்துக்க வரேளா? எல்லா பர்மிஷனும் ஏற்கனவே வாங்கியாச்சு… ஆமாம். ஸித்தார்த் ஸுப்ரமணியம். என்னோட ஸன்தான்… தாங்ஸ். இருங்கோ. அட்ரஸ் நோட் பண்ணிக்கலையே…”

அவ்வளவுதானா? எதுவும் மறந்து விடவில்லையே? யாருக்குத் தெரிவிப்பது? மாமாவுக்கு ஃபோன் இல்லை. அவர் எப்படியும் இன்னிக்கு பள்ளிக்கூடம் போகும்போது வந்து விட்டுப் போவதாக சொல்லியிருக்கிறார். ஸித்தார்த்த்தின் உயிர் தோழன் விவேக் எப்பொழுதும் போல் இன்னும் சற்று நேரத்தில் வருவான். அவன் மூலம் அவனுடைய மற்ற நண்பர்களுக்கு சொல்லி அனுப்பலாம். உறவினர்களுக்கு மாமா சொல்லிவிடுவார். என்னால் முடியாது. இப்பொழுது நான் என்ன செய்ய வேண்டும்? வயிறு ஏன் இப்படி லேசாக இருக்கிறது? வயிற்றுக்கும் நெஞ்சுக்கும் நடுவில் ஓர் இடத்தில் நடுக்கம். மனதில் எந்த உணர்ச்சியும் இல்லையே? ஏன் அப்படி? எனக்கு பயமாக இருக்கிறதே! காது அடைத்துக் கொண்டாற் போல் இருக்கிறது. ஆனாலும் ஏதோ ஒரு ஓசை கேட்டுக் கொண்டே இருக்கிறது. பயமாக இருக்கிறது. என்ன செய்ய வேண்டும்? ஸித்தார்த்தின் அருகில் உட்காரலாமா? செய்ய வேண்டிய எதையோ செய்யத் தவறிவிட்டாற்போல் இருக்கிறதே! வாசற்கதவை திறக்க வேண்டுமோ? அவர் போனபோது என்ன செய்தார்கள்? நினைக்கவில்லை. வாசற் பக்கம் போகிறேன். கதவு திறந்து இருக்கிறதே? பாலை வாங்கிய பிறகு மூட மறந்துவிட்டேன் போலிருக்கிறது. உள்ளே திரும்ப யத்தனிக்கையில் வாசலில் நிழலாடுகிறது. யார் அது? மாமா நிற்கிறார். அவர் பின்னே வேலைக்காரி மரியம் கேட்டை மூடிக்கொண்டிருக்கிறாள். மாமா என்னை உற்றுப் பார்க்கிறார். உதடுகள் துடிக்க நான் தலையை அசைக்கிறேன். அவர் திகைக்கறார். மரியம் அரை அழுகையுடன் “என்னங்கம்மா…?” என்கிறாள். நான் வெடிக்கிறேன்.

எல்லாம் முடிந்துவிட்டது. அவன் விருப்பம்போல் எல்லாம் நடந்து விட்டது – மாமாவின் மௌன ஆதரவால், ஸித்தார்த்தின் நண்பர்களின் பொறுப்புமிக்க செய்கைகளால் தம்முடைய முக்கியத்துவத்தை நிலைநாட்டிக் கொள்வதற்காக மட்டுமே ‘நல்லதற்கும்’ ‘கெட்டதற்கும்’ வருகை தரும் மனிதர்களின் பொறுப்பற்ற பேச்சுக்கள், அர்த்தமற்ற அறிவுரைகள், கோபக் குறுக்கீடுகள் – எல்லாவற்றையும் ஒதுக்கி விட்டு அவன் இஷ்டம் போல் நடத்திவிட்டோம்.

“கண்ணெ ரெண்டெயும் தோண்டி எடுத்துடுவாளாம், பாக்க பயங்கரமா ரெண்டு குழிதான் இருக்கு மாமி அதெ மறைக்க ரெண்டு கண்ணாடி முழியெ வச்சுடுவாளாம்!”

“இப்பிடி பண்ணா அடுத்த ஜன்மத்தில் குருடா பெறாப்பாளாமே? நெஜமாவா?”

“என்ன கண்ராவியோ? யாருக்குத் தெரியும்?”

“ஒடலெ தகனம் பண்ணாட்டா ஆவி அலெயுமேடி! புருஷ பசங்களே இப்பிடித்தான் எதெயானும் ஔறும். நீ பொம்மனாட்டி. அதுவும் பெத்தவ, இப்பிடி பிடிவாதம் பிடிக்கலாமா?”

“அங்கெ அவா என்னல்லாம் பண்ணுவான்னு தெரிஞ்சிருந்தா நீ இப்பிடி பண்ணியிருக்க மாட்டே. டு யு நோ? கையையும் காலையும் அறுத்து ஸ்டூடண்ஸ்ஸுக்கு காமிப்பா. அப்புறமா பாடியெ அப்பிடியே குழில போட்டு மூடிடுவா. மந்திரம் மாயம் ஒண்ணும் கெடயாது…. போன் பண்ணறதுக்கு முன்னாடி என்னெ, இல்லெ யாராவது ஒரு ஆம்பளெயெ ஒரு வார்த்தெ கேட்டிருக்க கூடாது? எழுதி வச்சிருக்கானா? எங்கே காமி பாப்போம்? இதெ பார்த்தா அவன் கையெழுத்து மாதிரி இல்லயே…”

“சரிம்மா! அவன் சின்ன பையன், அல்பாயுசல போறமேங்கற துக்கத்தில் புத்தி கலங்கி போயி என்னவோ எழுதியிருக்கான். அதெப்போயி நீ ஸீரியஸா எடுத்துண்டு..! நீ பாட்டுக்கு அழகா சம்பிரதாயப்படி எல்லா காரியமும் பண்ணிட வேண்டியது தானே?”

“அதானே! போனவனுக்கு என்ன தெரியவா போறது?”

“சும்மாவா சொல்லியிருப்பா, பெரியவா?”

“இங்கெ பண்றவா அத்தெனை பேரும் பைத்தியக்காராளா?”

“ஆத்மா சாந்தியடையாது. அந்த பாவம் ஒனக்குத்தான்”.

“எல்லாரும் பயமுறுத்துவா, அம்மா, நீ கவலெப்படாதே. ஆத்மாவுக்கு அழிவே இல்லேங்கறது நெஜம்னா காரியம் பண்ணலங்கற துனால அதுக்கு என்ன ஆயிடும்? கீதெ சொல்றது – ஒடம்பு துணியெ கழட்டி போடற மாதிரிதான் ஆத்மா ஒடலெ ஒதறிடுதுன்னு. அது உண்மையானா ஒடலெ எரிச்சா என்ன. எரிக்காட்டா என்ன?”

“தெரிலடா, ஒன்னோட வாதம் சரியா, இல்லெ, இவா எல்லாரும் சொல்றது சரியான்னு எனக்குத் தெரிலடா. எனக்கு தெரிஞ்சதெல்லாம் ஒண்ணுதான் – நீ சொன்னபடிதான் எல்லாம் செய்யணும். செஞ்சுட்டேன்.”

ஒனக்குத் தெரியுமா? ‘அன்னிக்கு’ மறுதா அடுத்த ரூமில யாரோ ஒருத்தர் சொல்லிண்டிருந்தார் – “சுபத் தன்னி சமெயலுக்கு நா சாமாவெ ஏற்பாடு பண்ணித் தரேன். அவர் பாதுவா பண்ணினா வாயில கரெயும்!”

இவாளெல்லாம் என்னடா பண்றது? நீ என் காரியம் வேண்டான்னேன்னு எனக்கு இப்ப புரியறதுடா!

எல்லாம் முடிந்து பதி மூன்றாவது நாள்! அனாதை குழந்தைகளுக்கு பரிமாறும் போது நான் அழவில்லை. அத்தனை குழந்தைகளும் என்னை ‘அம்மா’வென்றழைத்தன. எனக்கு அதிசயமாக இருந்தது. அந்த அம்மாள் சொன்னாள். ஆசிரமத்திற்கு வரும் எல்லா பெண்களையும் அவர்கள் அப்படித்தான் கூப்பிடுவார்களாம். என்னால் அவர்கள் எல்லோரையும் ‘ஸித்தார்த்’தாக நினைக்க முடியவில்லையே!

சித்தப்பா கேட்டார். “பி.எஃப்.. கிராஜுவிடி எத்தென வரும்?” எனக்குத் தெரியாதுன்னு சொன்னேன். அவர் நம்பவில்லை. மாமி சொன்னாள், “காரியமே பண்ணலெ. செலவு மிச்சம், இல்லே?” மிகவும் கஷ்டமாக இருந்தது. அனாதாசிரமம் விஷயம் சொல்ல நினைத்தேன்.

“கொஞ்சம் நல்லது பண்ணா அதெ ஒடனே எல்லார்கிட்டயும் சொல்லிடணுமா? மனசுல வச்சிண்டு பாரும்மா, வித்தியாசம் தெரியும். மல்லிப்பூ வாசனெயெ உள்ளே பூட்டினா மாதிரி மனசு நெறெஞ்சு இருக்கும். அந்த திருப்தி போயிடும், சொல்லாதெம்மா.”

“சொல்லலெடா. ஆனா மாமி சொன்னதைக் கேட்டு, எனக்கு நெய் வெடிச்சுடும் போல இருந்தது.”

“ஸ்ரீராமஜெயத்’தால் நோட்டுப் புத்தகங்கள் நிறைகின்றன, எழும் எழுதி கை மரத்துவிடுகிறது. ஆனால் மனம்…? சில சமயங்களில் போதை மருந்தை உட்கொண்டாற்போல் அதிலும் ஓர் மரப்பு. பிறகு பழைய படி துடிப்பு, சில சமயங்களில் மூச்சு முட்டுகிறது. முழுகும் போது ஸ்ரீராம ஜெயம் ஒரு துரும்பு, ஒரு தெம்பு. சீக்கிரம் ஆபீஸுக்கு போக வேண்டும். ‘துக்கம் விசாரிப்பு’ என்ற பெயரில் நடக்கும் சித்ரவதை எனக்குத் தாங்கவில்லை.

“எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் ஆபீஸூக்கு போயிடும்மா”, அதன் விவேகம் அப்பொழுதே தெரிந்தது. மிகச் சிலரைத் தவிர்த்து யாருக்கும் ஏன் தப்பித்தவரைக் கூட ஆறுதலாக, ஆதரவாக பேசத் தெரியவில்லை? துக்கம் விசாரிப்பது சிலருக்கு ஒரு கடமை. ‘கெட்டதுக்கு’ ‘சரி’யான நாள் நேரம் பார்த்து. தனக்கு ஒழியும் போது, குளிக்கும்முன் வந்து, பிடித்த டி.வி. நிகழ்ச்சியை ‘மிஸ்’ பண்ணாமல் இருக்க கடிகாரத்தை கவனித்துக்கொண்டே நாற்காலியின் நுனியில் உட்கார்ந்து, செய்து முடிக்கப் பட வேண்டிய கடமை. இவர்கள் தேவலை போலிருக்கிறது – துக்கத்தை பகிர்ந்து கொள்வதற்கு பதிலாக அதை கிளறி அழவைக்கும் வரை திருப்தியுறாத ஸாடிஸ்டுகளுடன் ஒப்பிடும்போது. சிலருக்கு வீடேறி வந்து சிறிது நேரத்தையும் சக்தியையும் செலவிட மனம் வருவதில்லை. அதே சமயம் இவர்களுக்கு தாங்களும் ‘துக்கம் விசாரித்தோம்’ என்ற திருப்தியும் வேண்டியிருக்கிறது. அதன் விளைவு — வங்கி வாசலில், காய்கறி கடையில், ஏன், வேறொருவர் வீட்டில் கூட, எதேச்சையாக சந்திக்கும்போது “கேள்விப்பட்டேன்…என்ன இப்பிடி திடீர்னு? என்ன தான் ஆச்சு?” என்ற இவர்களுடைய திடீர் தாக்குதலால் நான் நிலைகுலைந்து போதல். இவர்கள் மற்றவரைப் பற்றி சிறிதும் சிந்தித்து பழகாதவர்கள். இத்தனைக்கும் நடுவே மௌனப் பரிவு காட்டி ஆதரவளித்து, சாதாரண தடப்புகளை பற்றி பேசி, செய்ய வேண்டியதை விவாதித்து என்னை சகஜ நிலைக்குக் கொண்டு வர முயற்சித்த ஒரு சிலரை என்னால் மறக்க முடியுமா?

மரியம் தங்கள் ‘சர்ச்’ பாதிரியாரை கூட்டி வருவதாகக் கூறிய போது அவளை புண்படுத்த வேண்டாமென்ற ஒரே காரணத்தால் சமமதித்தேன். சிறிது நேரம் மௌனமாக பிரார்த்தித்துவிட்டு என்னை சிலுவைக் குறியிட்டு ஆசீர்வதித்தார். அவர் கனிவு என்னை கதற வைத்தது. அவருடைய மௌனம் எனக்கு ஆறுதலளித்தது. போகும் போது கூறினார். “மதகுரு என்கிற பேரால இல்லெ. ஒரு வாழ்க்கெயெ பார்த்தவன்கிற மொறைல சொல்றேன், மகளே. இப்ப நீ நம்ப மாட்டே. ஆனா ‘திஸ் டூ வெல் பாஸ்’. இதுவும் (இந்த துக்கமும்) கடந்து போய்விடும். தைரியத்தை விட்டு விடாதே. கர்த்தர் உன்னை ரக்ஷிப்பார்.” எனக்கு நம்பிக்கையில்லை.

எல்லாம் முடிந்து ஒரு மாதமாகி விட்டது. ஆபீஸர் கனிவுடன் சொன்னார். “இன்னும் லீவு வேணும்னா எடுத்துக்குங்க. நான் ‘ஸாங்ஷன்’ பண்றேன். வேண்டாமென தலையசைத்தேன். புது செக்கனுக்கு மாற்ற சொல்லி கேட்டுக் கொண்ட உடனே செய்துவிட்டார். பழைய செக்ஷன் வழியே நான் செல்லும் போது திடீரென்று சிரிப்பையும் அரட்டையையும் இழந்து நின்ற ஹால் என்னை சங்கடத்தில் ஆழ்த்தியது. சிரமப்பட்டு கண்ணீரை அடக்கி சாதாரணமானேன். தெரிந்தவர் ஒரு குற்ற உணர்வுடன் புன்னகையை உதிர்த்துவிட்டு வேலையில் மும்முரமானார்கள். அதிகம் பழக்கமில்லாததால் வீட்டிற்கு வராத சிலர் என்னை பார்த்தும் பாராமல் போனார்கள். திங்கட் கிழமை ‘துக்கம்’ விசாரிக்கக்கூடாதே!

புதிய செக்ஷனில் வேலை கற்றுக் கொள்வதில் மனம் லயிக்கும். இது என் ‘முன் அனுபவம்’ கற்றுத் தந்த பாடம். ‘அவரை’ இழந்த போது உபயோகித்த யுக்தி. அப்பொழுது ஒரு எதிர்காலம் இருந்தது. இப்பொழுது…? அழுகை உள்ளிருந்து எழும்ப மனத்துள் ஓர் யுத்தம். யாரோ எதிரில் நிற்பதை உணர்ந்து நிமிர்ந்து பார்த்தேன். புதிய செக்ஷன் ஸபர்வைஸர் கடுகடுத்த முகத்தோடு ‘முடிச்சாச்சா’ என கேட்டு நின்றார். சுய பச்சாதாபமும் கோபமும் பொங்க வேலையை முடித்துக் கொடுத்தேன். இரக்கமற்ற மனுஷன்!

என்னை அதிகம் தெரியாதவரென்றாலும் இவருக்கு விஷயம் தெரியாமலா இருக்கும்? மனத்துள் பொறுமினேன். ‘லஞ்ச்’ முடித்துக் கொண்டு செக்ஷனில் நுழையும் போது ஒரு சக ஊழியர் சூபர்வைஸரிடம் என்னை பற்றிக் கூறிக் கொண்டிருந்தார். “ரொம்ப பாவம் ஸார். ஏற்கனவே விதவெ. இப்பு வயசு பிள்ளெ போயிட்டான். அதான் அவங்க ஆடிப்போயிட்டாங்க.” சூபர்வைஸர் பதிலளித்தார். ‘கஷ்டம்தான். இல்லெங்கலெ. ஆனா மனசு சரியில்லேன்னா வீட்ல இருக்கணும். இங்க வந்தாச்சுனா வேலெயெ கவனிக்கணும். லேடீஸ்னா இது ஒரு அவஸ்தெ. சொந்த பிரச்சனைகள் ஆபீஸ் வேலெயயெ பாதிக்க விட்டுர்ராங்க.” எனக்கு சுட்டது. மனுஷனுக்கு நெஞ்சில் ஈரமேயில்லைதான். ஆனால் நானும் பொறுப்பில்லாமல் நடந்து கொண்டிருக்கிறேன். இனி மனதை கட்டுக்குள் வைக்கவேண்டும்.

என்னை பொறுத்தவரை எல்லாமே முடிந்துதான் விட்டதா? எனக்கென்று இனி எதிர்காலம் இல்லையா? எல்லோரும் அப்படித்தான் நினைக்கிறார்கள். ‘அன்று’ சொன்னாள் எதிர்வீட்டு எழுபது வயது பாட்டி – “ஆத்துக்காரரும் போய் சேந்துட்டார். தலெக்கு மேலே வளந்த பிள்ளே, ஒரே கொழந்தெ. அவனும் போயிட்டான். இனிமெ என்ன இருக்கு ஒனக்கு? ‘அவனோட நாமத்தெ சொல்லிண்டு கடெசி காலத்தெ கழிச்சுடு.’ எனக்கு ‘நாமத்தை சொல்லவே பிடிக்கவில்லை. கதறிக்கதறி வேண்டினேனே. ‘அவன்’ செவி சாய்த்தானா?

என்னுடைய சக ஊழியன் ரமேஷ், இருபத்தைந்து வயது இளைஞன். தாய் தந்தையரை எதிர்த்து பஞ்சாபி பெண்ணை மணந்து கொண்டவன். பெற்றோர் மனம் புண்பட நடந்து கொண்டான் என்பதால் எனக்கு அவனை அவ்வளவாக பிடிக்காது. இப்பொழுது என்னிடம் கழிவிரக்கத்துடன் நடந்து கொள்கிறான். ‘அப்பா! ரொம்ப பயங்கரம்! இட் ஈஸ் வெரி டிஃபிகல்ட், மேடம், எப்பிடித்தான் நீங்க எதிர்காலத்தெ ஃபேஸ் பண்ணப் போறீங்களோ!” என்று அவன் கூறும் போது எனக்கு வயிற்றில் பயம் உறைகிறது. ‘ட்ரேன்ஸிடென்டல் மெடிடேஷன் ட்ரை பண்ணிப் பாருங்க’ என்று அட்ரஸ் கொடுத்தான். போக வேண்டும்.

இன்று எனக்கு சந்தோஷமாக இருக்கிறது. என்னையும் கம்ப்யூட்டர் பயிற்சிக்கு தேர்ந்தெடுத்திருக்கிறார்களாம். சூபர்வைஸர் கூப்பிட்டுச் சொன்னார். அவர்தான் ‘ரெகமெண்ட்’ செய்திருக்க வேண்டும். மற்றவர்களுடைய அனுதாபத்தை விட இவருடைய கண்டிப்பு எனக்கு தாங்குவதற்கு எளிதாக இருக்கிறது. வீட்டிற்குப் போய் ஸித்தார்த்தின் போட்டோவைப் பார்த்தவுடன் குதூகலம் மறைந்துவிட்டது. அவன் இருந்திருந்தால் எத்தனை பெருமை கொண்டிருப்பான்? மனம் குற்றவாளிக் கூண்டிலேறுகிறது. ஆறு மாதங்கள்தான் ஆகியிருக்கின்றன. என்னால் எப்படி சந்தோஷம் அடைய முடிந்தது? என் தாய்மையில் குறையா? மனம் கூம்புகிறது.

‘ட்ரேன்ஸிடென்டல் மெடிடேஷன் சென்டர்’ எனும் பெரிய போர்டை தாங்கும் ஒரு பழைய பங்களா. வெள்ளை நிற கர்சீஃபுடன், ஒரு ஆப்பிளுடன், நூறு ரூபாய்க்கு ஒரு ‘செக்’குடன் உள்ளே நுழைந்தேன். ‘பாப்’ முடியில், ‘ஹேர் களிப்’ பின் உதவியுடன் மல்லிகைப் பூச் சரத்தை பொருத்தி, லூசான வெள்ளை நிற ரவிக்கையும், இருக்கவேண்டிய இடத்தில் இல்லாத வெள்ளை நிற புடவையுமாய் நாற்காலியில் அமர்ந்து, அந்த அமெரிக்கப் பெண் காதோடு சொன்ன மந்திரம் சரியானதுதானா அல்லது அமெரிக்க உச்சரிப்பில் சீரழிந்து போன வார்த்தையா? சக்தி வாய்ந்த மந்திரத்தை உருமாறி உச்சரித்தால் கெடுதி நேருமோ?

கம்ப்யூட்டர் பயிற்சிக்கு போவ தால் கடந்த இரண்டு மாதங்களாய் தியானம் செய்ய நேரம் கிடைக்கவில்லை. இன்று உட்கார்ந்தால் மந்திரம் நினைவுக்கு வரவில்லை.

“….. ஊர்ல ஒரு மடம் இருக்காம். தோட்டமும் தோப்புமா பாக்க திவ்பமா இருக்காம். மடத்து ஸ்வாமிகள் மொகத்தில் அபார தேஜஸ்ஸாம். ஒங்களெ மாதிரி யாருமே இல்லாதவா தீகை வாங்கிண்டு அங்கே சேந்துடலாமாம். மனசுக்கு நிம்மதி. ஆனா ஒண்ணு. நம்ப மாதிரி இருக கறவா மொட்டெ அடிச்சுக்கணும்மா.”

“ஸ்ரீராமஜெயம் எழுதி பாருங்களேன். அடுத்தத் தெருவில ஒரு எடத்தில ஒரு லஷம் தடவை ஸ்ரீராமஜெயம் எழுதி குடுத்தா ஒரு லஷ்மி காசு தராளாம்”.

துக்கத்தின் உச்ச கட்டத்தில் நிரம்பிய நோட்டுப் புத்தகங்களை அந்த மாமிக்கு கொடுத்துவிட்டேன். மாமியின் முகத்தில் ஆனந்தம். அதோடு சற்று பொறாமையும். ‘பரவாயில்லெயே! நெறெய எழுதியிருக்கேள்! ஆனா எங்க மாமா மாட்டுப் பொண்ணு இதே போல பத்து மடங்கு எழுதியிருக்கா!”

தினசரி பத்திரிகையில் பசுவத் கீதை வகுப்பைப் பற்றி வந்த விளம்பரத்தை பார்த்துவிட்டு போனேன். இது சற்று தேவலைதான். ஆனால் அறிதலுக்கும் உணர்தலுக்கும் இடையே இருக்கும் இடைவெளியை எப்படி குறைப்பது? கீதையை விட கம்ப்யூட்டர் அதிகம் உதவுகிறது. என்னால் ஏன் எதையுமே முழு நம்பிக்கையுடன் செய்ய முடியவில்லை? நம்பிக்கையுடன் தொடங்கினால் கூட, சந்தேகம் தோன்றிவிட்டால் தொடர முடிவதில்லை. ஸித்தார்த்தின் எண்ண ஓட்டங்கள் என்னை பாதித்திருக்கின்றனவா? எதையும் மேலோட்டமாக செய்ய முடிய வில்லை. நான் கடவுளை நம்புகிறேனா இல்லையா? அவன் போன பிறகு என்னால் விளக்கேற்ற முடிவ தில்லை. ஸ்தோத்திரங்கள் சொல்ல முடிவதில்லை. கடவுளை நினைத்தால் மனம் பொங்குகிறது. இனி கேட்க என்ன இருக்கிறது? பக்தி – வியாபாரம் இல்லைதான். ஆனால் அதனால் எனக்கு என்ன லாபம் என்றுதான் நினைக்கத் தோன்றுகிறது. கீதை வகுப்பினால் ஒரு லாபம். எனக்கு சிறு வயதில் ஸம்ஸ்கிருதத்தில் இருந்த ஈடுபாடு மறுபடியும் துளிர்க்க, ஸம்ஸ்கிருதம் கற்கத் தொடங்கியுள்ளேன். இப்பொழு தெல்லாம் ஞாயிற்றுக் கிழமையின் காலை நேரங்கள் காளிதாஸரின் இலக்கியங்களில் அழிகின்றன. இரண்டு மணி நேரம் இவ்வளவு லேசாகக் கூட கழிய முடியுமா? இரவு படுக்குமுன் ஸம்ஸ்கிருத வகுப்புக்கான வீட்டுப் பாடங்களை செய்கிறேன், அதனாலோ என்னவோ என் இரவுகள் முன்போல் அத்தனை பயங்கர மானவையாக இல்லை. சோபாவில் உடலை சுருக்கிப் படுக்காமல் கட்டிலில் படுக்க முடிகிறது. தலை யணை தினமும் நனைவதில்லை.

ஒரு வருடம் ஓடிவிட்டது. தேதியை கிழிக்கையில் கண்ணீர் ஊற்றுப் பெருகுகிறது. ஆபீஸுக்கு லீவு போட்டுள்ளேன்.

கடவுளே! என்னால் தாங்க முடியவில்லையே! ஒரு மாதத்திற்கு முன்பிருந்தே வயிறு துடிக்கத் தொடங்கிவிட்டிருந்தது. காலையில் ஆசிரமத்திற்குப் போனேன். குழந்தைகளின் அருகாமை சற்று நிம்மதி அளித்தது. அந்த அம்மானிடம் கேட்டேன். ‘எம் மனசு துக்கத்தில் மூழ்கி இருக்கு. நெறையெ பேர் என்னெ சமூக சேவெ செய்ய ‘அட்வைஸ்’ பண்ணரா. ஆனா எனக்கு அத்தனை பொறுமெ இல்லேன்னு தோண்றது. முயற்சி பண்ணி பாக்கட்டுமா? நா செய்யும்படியா இங்கே ஏதானும் வேலெ இருக்கா?” அவள் சொன்னாள், “துக்கத்திலேந்து மீள முக்கியமா தேவையானது தன்னம்பிக்கெதாங்க. உங்களுக்கு கஷ்டமா இருக்கும் போதெல்லாம் இங்க வந்துட்டு போங்க. இங்கெ வந்து உதவெனாத்தான் சேவென்ன இல்லெ. மத்தவங்களுக்காக கொஞ்ச நேரத்தெ, பணத்தெ, எண்ணங்களெ ஒதுக்கினா அதுவும். சமூக சேவெ தான். உங்களுக்கு எது செய்யறதில நிம்மதி கெடக்குதோ அதெ செய்யுங்க. தைரியமா இருங்க. நிச்சயமா உங்க துக்கத்தெ நீங்க ஜெயிப்பீங்க.”

ஸித்தார்த்தின் பள்ளிக்கூடத்தின் தலைமை ஆசிரியரிடம் பேசினேன். வருடாவருடம் நன்றாக படிக்கும் ஒரு ஏழைப் பெண் குழந்தைக்கு ப்ளஸ் டூவுக்குத் தேவையான செலவை ஏற்றுக் கொள்வதற்கான ஏற்பாட்டை செய்து முடித்தேன், ஸித்தார்த்திற்கு இது பிடித்து இருந்திருக்கும். அவனுக்கு பெண் குழந்தை மிகவும் பிடிக்கும். சமைக்கப் பிடிக்கவில்லை. படுக்கையில் படுத்துக் கொண்டு மேலே மாட்டியிருந்த ஸித்தார்த்தின் போட்டோவைப் பார்த்து கண்ணீர் உகுத்தேன். பசி எடுக்கவே குக்கர் வைக்க எழுகையில் வாசல் மணி அடித்தது. விவேக், அவனை கண்டவுடன் அடங்கியிருந்த மனம் மறுபடியும் ஆர்ப்பரித்தது. அழுது தீர்க்கும் வரை தலை குனிந்து மௌனமாக இருந்தான். பிறகு மெதுவாக தன்னுடைய – ஸித்தார்த்தனுடைய நண்பர்களை பற்றின விவரம் சொன்னான். பின் கேட்டான், “நான் சாப்பிடாமல் வந்து விட்டேன் ஆன்டி. சாப்பாடு இருக்கா?”. ‘இனிமேதான் சமையல். வா உள்ளே’ என்று சமையலறைக்கு அழைத்தேன், ஸித்தார்த்தை போலவே காய்கறி நறுக்கி, அரிசி பொறும் சாமான்களை எடுத்துக் கொடுக்க உதவினான். என்னை சாப்பிடவைக்க தான் என்னுடன் சாப்பிட்டானோ என்று அப்புறம் நினைத்துக் கொண்டேன். சமைக்கும்போது, சாப்பிடும் போது, சாப்பிட்ட பிறகு உலர்ந்த கையுடன். ஸித்தார்த்தை பற்றி நிறைய பேசினான் – அவனுடைய உயர்வான கருத்துக்களைப் பற்றி பெருமையாக, அவனும் தானும் பள்ளி நாட்களில் செய்த வால்தனங்களைப் பற்றி வேடிக்கையாக. அவனுடைய குறைகளையும் விமர்சித்தான். நானும் கலந்து கொண்டேன். மூன்று மணி நேரம் பேசினோம் – ஒரு சொட்டு கண்ணீர் விடாமல். இறந்து போனவனுக்கு அஞ்சலியாக இல்லை. எங்களுள் தங்கிவிட்ட ஒருவனைப் பற்றி சகலமாக பேசினோம். விவேக் கிளம்பி விட்டான். நான் அதிசயிக்கிறேன். இருபத்திநாலு வயதில் இவனால் எப்படி என்னுடைய துக்கத்தை இவ்வளவு மிருதுவாக அணைத்துக் கொள்ள முடிகிறது? அவன் கொடுத்து விட்டு போன ‘காஸட்’டை போட்டு விட்டு விளக்கை அணைக்கிறேன். ‘லால்குடி’யின் இசையால் அறை நிரம்ப, தலையணை நனைய, தூங்கிப் போகிறேன்.

காலையில் பால் வாங்கும் போது கவனித்தேன். எதிர் வீட்டின் வாசலில் லாரியில் சாமான்கள் வந்து இறங்கின. ஒரு பெரியவர் ஆட்டோவில் வந்தார். புதிதாக குடி வந்திருக்கிறார் போலிருக்கிறது. வேறு யாரையும் காணோம். இறங்கும் போது எதேச்சையாக என்னை பார்த்தவர், தோழமையுடன் புன்னகைத்தார். நல்லவராக இருப்பார் போலிருக்கிறது. பிற்பகல் வீட்டிற்கு வந்து தன்னை அறிமுகம் செய்து கொண்டு வேலைக்கு ஆள் கிடைப்பார்களா என்று கேட்டார். நான் மரியத்தை அனுப்பினேன். அவள் தனக்கு நேரமில்லை என்று ராமாயியை பேசி வைத்துவிட்டு வந்தாள். இரண்டு நாட்களுக்குள் பெரியவரை பற்றின எல்லா விவரங்களையும் ராமாயி என்னிடம் கொண்டு சேர்த்து விட்டாள். டில்லியில் ‘பெரிய அரசாங்க உத்தியோகத்தில் இருந்து ஒய்வு பெற்றவர். மனைவியை இழந்து பதினைந்து வருடங்களாகி விட்டன. ஒரே ஒரு மகன் இருந்தானாம். ஐந்து வருடங்களுக்கு முன் ஒரு விமான விபத்தில் அவனும் அவரைடைய புதுமனைவியும் மரண மடைந்து விட்டனராம். கேட்க மிகவும் பரிதாபமாக இருந்தது. ஆனால் ராமாயிக்கு அவர்மேல் அனுதாபமே இல்லை.

“அட என்னாம்மா அவரு! புள்ளெய பறி கொடுத்தவரு மாரியா இருக்கறாரு? நல்லா வகெவகெயா சமெச்சு துண்றாறும்மா! தெனெக்கி கொஞ்சம் பாதாம் பருப்பெ ஊற வச்சு தோலெ உரிச்சு கொடுக்க சொல்றாறும்மா. தின்னா தெம்பு வருமாம்! ஆம்புளெயா கணக்கா ஒக்காராமெ பின்னாடியே வந்து அந்த மூலெயெ தொடெ இந்த ஸ்பூனெ மறுபடியும் கழுவு’ன்னு ரோதென செய்யறாறும்மா. ஞாயித்துக் கெழெமெ படம் பாக்கலாமுன்னா, ‘முடியாது. எனக்கு வீடியோவுல இங்கிலீஷ் படம் பாக்கனும்’ அப்பிடின்னுட்டாரு. எதுக்கும்மா அவருக்கு அதெல்லாம், போற காலத்தில?” என்று விமர்சித்தாள்.

ராமாயி வம்புக்காரி. வாயாடியும் கூட, ஆகவே அவளை அடக்கி அனுப்பி விட்டேன். ஆனால் பிற்பாடு மரியம் சொன்னாள்: ராமாயி சொன்ன விவரங்கள் என்னமோ உண்மைதானாம். இருக்கட்டுமே எனக்கென்ன? ஆனால் ஆச்சரியமாக இருக்கிறது. அந்த பெரியவரால் எப்படி இத்தனை பெரிய துயரத்திற்கப் புறமும் தன்னை பற்றியே எண்ணிக் கொண்டிருக்க முடிகிறது. மிகவும் சுயநலக்காரராக இருப்பாரோ? மரியத்தின் விளக்கம் – “அவரு ஆம்புளெம்மா! அப்பன் மனசு அவ்வளவுதான்! பெத்த தாயால அப்பிடி இருக்க முடியுமா? சின்னய்யா போயி ரெண்டு வருஷமாச்சுங்களெ, நீங்க என்னிக்காவது ஒரு நா ஒழுங்கா மெச்சு சாப்பிட்டிருப்பீங்களா? ஒங்க வீட்ல வந்து நா டி.வி. படம் பாக்கறச்செ ஒரு தபாவான்னா நீங்க வந்து உக்காந்து பாத்திரிக்கீங்களா? அதாம்மா அம்மா மனசு!’ எனக்குள் ஒரு நெருடல். அவள் நினைத்துக் கொண்டிருக்கும் அளவுக்கு என் சோகம் ஆழமானதா? எனக்கு அவள் மேல் சற்று கோபம் ஏற்பட்டது. என்னுடைய தாய்மைக்கு அவள் வழங்கிய சான்றிதழ் எனக்கு ஒரு சுமையாகத் தோன்றியது. இவள் மட்டும் அல்ல. எதிர்வீட்டு பாட்டி முதல் இந்த காலத்து இளைஞன் ரமேஷ் வரை எல்லோருமே. நான் நிரந்தரமான, தீவிரமான துக்கத்தில் அமிழ்ந்திருக்க வேண்டு மென்று என் எதிர்பார்க்கிறார்கள்? தயங்கித்தயங்கி வெட்டு வெட்சி, துயரத்திலிருந்து கரையேறத் தொடங்கும் சமயம் இத்தகைய எதிர்பார்ப்புகள் என்னை மீண்டும் கீழே தள்ளுகின்றனவே! மனிதரின் ஆழ்மனத்தில் ஒளிந்திருக்கும் – பிறர் துன்பத்தில் இன்பம் காணும் – மனப் பான்மையின் எதிரொலிதான் இவ்வெதிர்பார்ப்போ?

எதிர் வீட்டு பெரியவர் மயங்கி விழுந்துவிட்டாராம். நான் ஞாயிற்றுக் கிழமை மதியம் டி.வி.யில் காண் பிக்கப்பட்ட மிருணாள் சென்னின் வங்காளப் படத்தைப் பார்த்துக் கொண்டிருக்கையில் ராமாயி ஓடி வந்து சொன்னாள். உடனே போனேன். வாசலிலேயே விழுந்து கிடந்தார். ராமாயி வேலைக்கு வந்த போது வாசற்கதவைத் திறந்து விட்டு விழுந்துவிட்டாராம். மரியத்தின் கணவன், அடுத்த வீட்டு பையன், நான், ராமாயி எல்லோருமா சேர்ந்து அவரைக் கட்டிலில் கிடத்தினோம். (நல்ல திடகாத்திரமான சரீரம்) அதற்குள் கொஞ்சம் நினைவு வந்து விட்டது. நான் அடுத்த தெரு டாக்டருக்கு அவர் வீட்டிலிருந்தே போன் செய்தேன். டாக்டர் வந்து பார்த்து விட்டு வெறும் வைரஸ் ஜூரம் தானென்றும் கவலைப்பட ஒன்று மில்லை என்றும் கூறிவிட்டார். இரண்டு நாட்களாகவே ஜூரம் இருத்திருக்கிறது. ஜுரம் குறைவதற்காக வெறும் வயிற்றில் தானாகவே சில மாத்திரைகளை முழுங்கி இருக்கிறார் பெரியவர். அதுதான் பலவீனம். ராமாயியின் மகன் வேலுவை அவருடன் தங்கச் சொன்னேன். மரியத்தின் மூலம் கஞ்சி, காபி, ரஸம் சாதம் எல்லாம் அனுப்பினேன். ராமாயிக்குக் கூட அவரிடம் அனுதாபம் தோன்றிவிட்டது. தானும் அவருக்கு வேண்டியதை செய்தாள். இன்று சொல்லியனுப்பி விட்டார். இனி தானே சமைத்துக் கொள் வதாக. இன்று எனக்கு ஐஸ்க்ரீம் சாப்பிட வேண்டும் போலிருக்கிறது. ஹோட்டலுக்கு தனியாக எப்படிப் போய் சாப்பிடுவது? வீட்டிற்கு வாங்கி வந்தால் மரியம் என்னைப் பற்றி என்ன எண்ணுவாள்? என்னு டைய ஆசையே தவறா? இயற் கையில் நியதிக்கு புறம்பானதா?

இன்று உமா வந்தாள். தன் கணவனுடன். ஸித்தார்த் போன சமயம் அவள் அமெரிக்காவில் இருந்தாள். போனில் பேசினான், “ஆன்டி எனக்கு என்ன சொல்றதுன்னே தெரியல. ஸித்தார்த்தோட அம்மாவுக்கு ஒண்ணும் சொல்லத் தேவையில்லேன்னு நெனெக்கெறேன். மே காட் பி வித் யு” நீண்ட கடிதம் எழுதினாள் – மிக அறுதலாக அவளை நேரில் பார்த்தவுடன் மனம் மறுபடியும் முரண்டு பிடித்தது. “அம்மா, நெனெச்சுபாரு ஒனக்கு ஒரு பெண்ணு இருந்து, அவ ஒருத்தன் மேலே ஆசெப்பட்டு, அவனுக்கு சாவு நிச்சயமாச்சுன்னா, நீ அவளுக்கு என்ன சொல்லுவே?” உமாவை மேல் படிப்புக்காக அமெரிக்கா போகச் சொல்லி வற்புறுத்தி ஒப்புக்கொள்ள வைத்தேன். ஸித்தார்த் இறக்கும்போது அவள் இங்கில்லாமல் இருப்பதுதான் நல்லது என்று நாங்கள் மூவரும் எண்ணினோம்.

கணவன் ராஜனை அறிமுகம் செய்து வைத்தாள். சகஜமாக பேசினான். உமாவை அறிந்த எனக்கு அவன் எல்லாவற்றையும் அறிந்திருப்பான் எனத் தெரியும். காபி கலக்க சமையலறைக்கு போன போது உடன் வந்த உமா கூறினான். “நா ரொம்ப முயற்சி பண்ணி ‘நார்மலா’ ஆயிட்டேன். நீங்க….” “ஆயிடுவேன்னு தெனெக்கெறேம்மா” என்றேன். அவளுக்கென வாங்கி வைத்திருந்த வெள்ளி குங்குமச் சிமிழை கொடுத்தனுப்பினேன். அவள் வந்து போனது மனதிலிருந்து ஒரு பனி மூட்டம் விலகியது போல இருக்கிறது. பெட்ரூமில் மாட்டியிருந்த ஸித்தார்த்தின் போட்டோவை தூசு துடைத்து பீரோவில் வைக்கிறேன். சிறிது தூரம் ‘வாக்’ போகக் கிளம்புகிறேன்.

பெரியவர் வந்தார், நன்றி கூற. ஒரு பெரிய பாக்கெட்டில் பாதாம் பருப்பு கொடுத்தார். டில்லியிலிருந்து கொண்டு வந்ததாம். சற்று நேரம் உட்கார்ந்து பேசிக்கொண்டிருந்தார். ராமாயியின் குடும்பத்தைப் பற்றி விசாரித்தார். அவளுடைய குடிகார கணவனின் பொறுப்பில்லாத்தனத்தைப் பற்றியும், வேலுவைப் படிக்க வைக்க அவள் படும் பாட்டைப் பற்றியும் கூறினேன். வேலுவின் பள்ளிக்கூடம் எங்கே இருக்கிறதென விசாரித்தார். என் முகத்தில் தேங்கி நின்ற கேள்விக்கு பதிலளித்தார். “நல்ல பையனாயிருக்கான். புத்திசாலி. அவன் படிப்புக்கு ஓதவலாம்னு பார்க்கறேன். அதுக்கு முந்தி அவனோட வாத்தியார்களோடு பேசி அவன் ஓழெச்சு படிப்பானான்னு கேட்டுக்கணும் இல்லெயா? தவிர எனக்கும் எவ்வளவு பணம் செலவாகும்னு தெரியணும்.”

“ஒரு வருஷத்துக்கு நானூறு ரூபா. அவாளே புத்தகம் தோட்டு எல்லாம் கொடுத்துடறாளாம். ராமாயி சொல்லியிருக்கா” என்றேன்.

“ஒரு வருஷத்துக்கு கொடுத்து என்னம்மா பிரயோசனம்? ஏத்துண்டா அவன் ஒரு வேலெக்குத் தயாராகிற வரைக்கும் ஏத்துக்கணும்” என்றார் வெகு சாதாரணமாக. நான் வியப்பில் ஆழ்த்தேன். இவரா சுயநலக்காரர்?

கிளம்பும்போது கேட்டார் “ஏம்மா, ஒரு போன் பண்ணிக்கட்டுமா? என் போன் வேலெ செய்யலெ”

“நான் போன் வச்சுக்கல” என்றேன்.

“ஏம்மா? அது ரொம்ப முக்கியமாச்சே!” என்றார்.

“ஒண்டிக்காரி, இனிமே ஒனக்கு எதுக்கு போன்? அனாவசிய செலவு. ராங் நம்பருக்கு பதில் சொல்லியே அலுத்துடும். எப்ப ரொம்ப வேணுமோ அப்போ வேலெ செய்யாது. கம்ப்ளெயென்ட்டு. ரிப்பேருன்னு ஒன்னால அல்லாட முடியாது.”

“எனக்கு எதுக்கு? நான் ஒண்டிக் காரி….”

“அதுனாலதாம்மா அவசியம் வேணும். நாம தனியா இருக்கற வாம்மா. நம்மளே நாமேதான் கவனிச்சிக்கணும். நீ ஒடனே அப்ளை பண்ணு. எனக்கு டெலிஃபோன்ஸ்ல தெரிஞ்சவா இருக்கா.”

“வேண்டாம். என்னோடதே இருக்கு. இப்ப எங்க சித்தப்பா பேருக்கு ட்ரேன்ஸ்ஃபர் ஆயிருக்கு. அவ்வளவுதான்.”

“மறுபடியும் ட்ரான்ஸ்பர் பண்ணிண்டுடும்மா!”

கடைத் தெருவில் தீபாவளி நெரிசல். புதுப்புடவைக்கு ‘மாட்ச்’சாக ரவிக்கைத் துண்டு வாங்கிக் கொண்டு ஆட்டோவைத் தேடினேன். பக்கத்துக் கோவிலில் ப்ரவசனம். ஒலிபெருக்கி மூலம் வார்த்தைகள் நான்கு திசையிலும் பரவின.

“அதர்மம் ஒங்கிடுத்து. நாம எல்லோரும் நம்மளெ பத்தியே நெனெசிண்டு இருக்கோம். மத்தவாள பத்தி கவலெபடறதே இல்லே. அந்த காலத்தில் இப்படி இல்லை. “ஸர்வு ஜனா ஸுகினோ பவந்து” – எல்லாரும் சந்தோஷமா இருக்கனும்னு தெனெச்சா… ஆட்டோவில் ஏறினேன். அதன் ஒலிபெருக்கியையும் வென்றுவிட்டது. இரவு தூங்குமுன் மறுபடியும் ப்ரவசனம் நினைவுக்கு வந்தது. வெகு நேரம் சிந்தித்தேன் சுயநலம் தவறுதான். ஆனால் துயரத்தை விட்டு வெளியேறாமல் இருப்பது மட்டும் தவறில்லையா? தற்கொலை குற்றமென்றால் நம் மனத்தை துன்பத்தில் ஆழ்த்தி வதைப்பது மட்டும் குற்றமில்லையா? “ஸர்வஜனா ஸ கினோ பவந்து!” உண்மைதான். எல்லோரும் சந்தோஷமாக இருக்க வேண்டும். நானும்தான். எதிர்வீட்டு பெரியவரும்தான்.

இன்று சீக்கிரம் எழுந்துவிட்டேன், ஞாயிற்றுக்கிழமைகளில் வழக்கமாக செய்யும் ஒட்டடை அடிக்கும் வேலையை இன்று செய்யவில்லை.

சீக்கிரமாக எண்ணை தேய்த்துக் குளித்துவிட்டு பாலும் வாழைப் பழமும் சாப்பிட்டுவிட்டு ஸம்ஸ்கிருத வகுப்புக்கு போய்விட்டேன். அங்கிருந்தே ‘ட்ரைவின்’னிற்கு போனேன். எனக்கு ப்ரமோஷன் கிடைத்ததற்காக பார்ட்டி கேட்டு என்னுடைய சக மனழியர்கள் சிலர் தொந்தரவு செய்ததால் இன்றைக்கு அங்கு அவர்களுக்கு ‘லஞ்ச்’ கொடுப்பதாக சொல்லியிருந்தேன். அதன் பிறகு ஏற்கனவே தீர்மானித்திருந்த படி என்னுடைய சிநேகிதி விமலாவுடன் சினிமாவுக்குப் போனேன். அவளுடைய கணவனுக்கு சினிமா என்றாலே அலர்ஜி! பழைய படம் – ‘மிஸ்ஸியம்மா’. அந்த காலத்தில் நான் என் கணவருடன் பார்த்து ரசித்த படம். இன்றும் ரசித்தேன். கதாநாயகியின் துணிச்சலான சுபாவம் மனத்தை ஈர்த்தது. ஹோட்டலில் டிபன் சாப்பிட்டபோது விமலா அலுத்துக்கொண்டாள். “இப்பல்லாம் ஏன் தமிழ் சினிமாவில் கதாநாயகியெ முதுகெலும்பு இல்லாதவனா காட்றாங்க? கதாநாயகன் அவளெ தொரத்தி தொரத்தி காதலிக்கிறான். அவ மொதல்லெ அவனெ பாத்து நடுங்கி ஓடறா, வெறுக்கறா. கடெசில விழுந்து விழுந்து காதலிக்கறா சே”. வாஸ்தவம்தான்.

ஒரு நாளை ஆனந்தமாக கழித்து விட்டு திரும்பிய போது முதலில் தனிமை கசந்தது. சுதாரித்துக் கொண்டு மறுநாளைக்கு ஆபிஸ்க்கு எடுத்து போக வேண்டியதை எடுத்து பையில் வைத்தேன். பீன்ஸை நறுக்கி ‘ப்ரிஜ்’ஜில் வைத்தேன். மாற்றலாகி போய்விட்ட சிநேகிதி கண்ணம்மா விற்கு ஒரு கடிதம் எழுதினேன். பசி இல்லாததால் பாலை மட்டும் குடித்துவிட்டு படுத்துக் கொண்டேன். போன் அடித்தது. விவேக் பேசினான். “ஹலோ ஆன்டி. மத்தியானம் வந்தேன். நீங்க இல்லெ அப்புறம் ரெண்டுதரம் போன் பண்ணேன். நீங்க இல்லேயேன்னு கவலெயா இருந்தது. ஒங்க ஓடம்புக்கு ஒண்ணும் இல்லெயே?”

“நோ. நோ…. இன்னிக்கு மத்தியானம் என்னோட அபின் பிரெண்ட்ஸுக்கு நா ‘ட்ரைவின் லஞ்ச் கொடுத்தேன். ஒங்கிட்ட சொல்ல மறந்துட்டேனே! எனக்கு போன வாரம் ப்ரமோஷன் ஆச்சு… தேங்க்யூ . ‘லஞ்ச்’க்கு அப்புறம் என்னோட ப்ரெண்டோட சினிமாவுக்கு போயிட்டு ஏழரை மணிக்குத்தான் வந்தேன். நீ எப்பிடி இருக்கோ? சும்மாத்தானே வந்தே? இல்லே ஏதானும் முக்கியமான சமாசாரமா?” அந்த பக்கம் அவன் சற்று தயங்கினானா? – “சும்மாத்தான் ஆன்டி. இன்னொரு நா வரேன். நீங்க ரெஸ்ட் எடுத்துக்கோங்கோ, வச்சுட்டமா? குட் நைட்.”

அவன் தயங்கினானா, இல்லையா! ஏதானும் முக்கியமான விஷயமா! யாரையானும் நேசிக்கிறானோ? என்னிடம் சொல்ல வந்தானோ பார்க்கலாம். தாகம் எடுக்கவே தண்ணீர் குடிக்க சமையலறை விளக்கை போடுகிறேன். தினசரி காலண்டர் இன்னும் சனிக்கிழமையில் நிற்கிறது. ஒரு தாளை கிழிக்கிறேன். தேதி பதினான்கு. முகத்திலறைகிறது. மனம் அலைபாய்கிறது. நிதானித்துக் கொள்கிறேன். சிறிது சிந்திக்கிறேன். பாதிரியார் சொன்ன வார்த்தைகளை நினைத்துக் கொள்கிறேன். எத்தனை சத்தியமான வார்த்தைகள் மனம் தெளிவடைகிறது. தண்ணீர் குடித்துவிட்டு முகம் கழுவிக் கொண்டு வந்து ரவிசங்கரின் ‘காஸட்’டை போடுகிறேன். விளக்கை அணைத்து விட்டு படுக்கிறேன். நினைவுக்கு வருகிறது. நாளை சுதந்திர தினத்திற்காக விடுமுறை ஆயிற்றே! ஒட்டடை அடித்து விடலாம். ஸித்தார் இசையின் தாலாட்டில் மெல்ல மெல்ல தூக்கத்தை அரவணைக்கிறேன்.

– ஜூலை 1993

Print Friendly, PDF & Email

1 thought on “அதுவும் கடந்து…

  1. மிகச் சிறந்த சிறுகதை. கணவனையும் தன் ஒரே மகனை யும் இழந்த அலுவலகத்தில் வேலை பார்க்கும் ஒரு பெண்ணின் மன ஓட்டங்களை மிக அழுத்தமாகவும் ஆழமாகவும் சொல்லியிருக்கும் முறை மிகச் சிறப்பு. ஒவ்வொரு அனுபவத்தையும் படிக்கும்போது மனசு கனக்கிறது.

    To-morrow to fresh woods, and pastures new. என்கிற John Milton அவர்களின் Lycidas ன் முடிவுபோல் பளிச் என முடித்திருத்தல் சிறப்பினும் சிறப்பு.
    வாழ்க எழுத்தாளர் வத்ஸலா
    வளர்க அவர்கள் இலக்கியத் தொண்டு.
    ஜூனியர் தேஜ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *