வீட்டுப்பாடம்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: January 16, 2021
பார்வையிட்டோர்: 4,300 
 

சென்ற வாரம் மூன்றாம் வகுப்பிற்கான இணைய வகுப்பில், Colourful Butterflies என்ற கவிதை பகுதியை நடத்திக் கொண்டிருந்தேன்.

வண்ணத்துப்பூச்சி பற்றி உங்களுக்கு தெரிஞ்ச விஷயங்கள் என்ன? ஒவ்வொருத்தரா மைக் on பண்ணி சொல்லுங்க பார்க்கலாம் என்று மாணவர்களிடம் கேட்டுக் கொண்டிருந்தேன்.

டீச்சர், அதோட இறக்கைகள்ல பல வண்ணங்கள் வண்ணத்துப்பூச்சின்னு சொல்றோம். டீச்சர், அதை பிடிக்கவே முடியாது வேகமா பறக்கும்…

டீச்சர் இந்த வண்ணத்துப்பூச்சியிலிருந்து தான் பட்டுப்புடவை கிடைக்குது…

இப்படியாக பலவித கருத்துக்கள் மாணவர்களிடமிருந்து வந்த வண்ணம் இருந்ததன.

இதற்கிடையில் டீச்சர், டீச்சர் எனக்கு வண்ணத்துப்பூச்சி பத்தி ஒரு விஷயம் தெரியும், சொல்லட்டுமா டீச்சர்? என்று ஆர்வமாகக் கேட்ட கிஷோரிடம் சொல்லுப்பா என்றேன்.

டீச்சர் வண்ணத்துப்பூச்சியை அதிகமா எந்த பறவைகளும் வேட்டையாடி சாப்பிடாது, அதிக வண்ணங்களோட பளிச்சுன்னு இருக்கிறதுனால நமக்கு ஆபத்துன்னு எந்தப் பறவையும் பக்கத்துல கூட வராதாம். அப்புறம் பட்டாம்பூச்சி உடம்பில நச்சுத்தன்மை இருக்கிறதுனால அதை சாப்பிடற பறவைகளுக்கு ஆபத்துன்னு நெனச்சுட்டு ஒண்ணும் செய்யாதாம். பட்டாம்பூச்சிக்கு வயசான பிறகு அதோட உடம்புல விஷத்தன்மை குறைந்து விடுமாம், அதனால ஒரு சில புத்திசாலிப் பறவைகள் அப்போது பட்டாம்பூச்சியைக் கொத்தி சாப்பிட்டு விடுமாம் டீச்சர் என்றான் கிஷோர் குதூகலத்தோடு.

அருமை கிஷோர், யாருக்கும் தெரியாத சில விஷயங்களை சொல்லி இருக்கே..உனக்கு எப்படி இந்த விஷயம் தெரியும் என்று கேட்டதற்கு, டீச்சர் நீங்க இன்னைக்கு இந்த பாடம் தான் நடத்தப் போறீங்கன்னு நெனச்சேன், எப்படியும் வண்ணத்துப்பூச்சி பத்தி கேள்வி கேப்பீங்கன்னு இணையத்துல இதைப்பத்தி சேகரிச்சேன் என்றான் கிஷோர்.

எட்டு வயதிலேயே கிஷோர் பாடங்கள் பயில்வதிலும், வகுப்பின் இடைவெளியில் கேள்விகள் கேட்கும் பொழுது அவன் காட்டும் ஆர்வமும், வேகமும் அனைத்து பாடங்களிலும் முதன்மையாக திகழ மிக முக்கிய காரணங்களாக இருந்தன. அதற்குப் பிறகு கிஷோர் இணைய வகுப்பிற்கு வரவே இல்லை.

இரண்டு நாட்களுக்குப் பிறகு என்னுடைய அலைபேசிக்கு புதிதாக ஒரு எண்ணிலிருந்து அழைப்பு வந்தது.

ஹலோ டீச்சர்,நான் கிஷோர் பேசறேன், மன்னிச்சுடுங்க டீச்சர் நேத்து அப்பா phone ரீசார்ஜ் பண்ணல அதனால வகுப்புக்கு வர முடியல, வீட்டுப்பாடம் அனுப்ப முடியல டீச்சர்.. இப்போ பக்கத்து வீட்டு அக்கா போனிலிருந்து பேசறேன் என்று பணிவாகப் பேசினான் கிஷோர்.

பரவாயில்லை கிஷோர், எனக்கு உன்னைப்பத்தி தெரியாதா?. நீ நேர்மையான மாணவன்,வகுப்புல, முதல்ல வீட்டுப்பாடம் எழுதி அனுப்பறது நீதான்.. இப்போ ஒண்ணும் பிரச்சினை இல்லை..எழுதி வெச்ச வீட்டுப்பாடம் எல்லாத்தையும் பத்திரமா எடுத்து வை, அப்பா ரீசார்ஜ் பண்ணினதும், ஸ்கேன் பண்ணி அனுப்பி விடு என்று சமாதனப் படுத்தினேன்…

சரிங்க டீச்சர், ஆனா, அது வரைக்கும் நான் வகுப்பை எப்படி கவனிக்கறது என்று கிஷோர் கேட்க, நான் பதிவு பண்ணி அனுப்பி வைக்கிறேன், ரீசார்ஜ் பண்ணின பிறகு பார்த்துக்க என்று ஆறுதல் சொல்லிவிட்டு அழைப்பைத் துண்டித்து இன்றோடு எட்டு நாட்கள் ஆகி விட்டது.

கிஷோரிடமிருந்தும் அவன் பெற்றோரிடமிருந்தும் எந்தத் தகவலும் இல்லை. அவன் எண்ணிற்கு தொடர்பு கொண்ட போது, இந்த எண்ணிற்கான அழைப்புகள் தடை செய்யப்பட்டுள்ளன என்ற பதில் வந்தது.

இந்த சிறிய வயதிலும் கூட, எந்த சூழ்நிலையிலும் தன்னோட கடமையை செய்ய தவற மாட்டான், இது வரைக்கும் அவன்தான் முதலில் வீட்டுப்பாடங்களை அனுப்பி இருக்கிறான். இந்த ஐந்து மாதங்களில், டீச்சர், கொரோனா எப்போ நம்ம நாட்டை விட்டுப் போகும்? ஸ்கூல் எப்போ திறப்பாங்க என்று பல முறை ஆர்வமாகக் கேட்டுக்கொண்டே இருப்பான். இதிலிருந்தே புரிந்து கொள்வீர்கள் படிப்பின் மீது கிஷோருக்கு இருக்கும் ஆர்வத்தினை.

அவன் வீட்டு அருகிலிருந்து வேறு எந்த மாணவர்களும் எங்கள் பள்ளிக்கு வராத காரணத்தால்,கிஷோர் பற்றிய தகவலை சேகரிக்க முடியவில்லை. ஊரடங்கு என்பதால் வெளியே எங்கும் செல்ல இயலாத சூழ்நிலை.. கிஷோர் பற்றிய நினைவுகளுடன்,வருத்தத்தினூடே,எனது பிற மாணவர்களின் வீட்டுப்பாடங்களையும், விடைத்தாள்களையும் மொபைலில் சோதனை செய்து கொண்டிருக்கும் பொழுது, அலைபேசி அலறியது.

அழைப்பில், டீச்சர், உங்ககிட்ட மூணாம் வகுப்பு படிக்கிற கிஷோரோட அம்மா பேசறேன் என்றதும் எனக்கு மகிழ்ச்சியாக இருந்தது.

சொல்லுங்கம்மா என்றேன்.டீச்சர் கிஷோர் அடிக்கடி வகுப்புக்கு வர முடியல, அவங்கப்பா போன்ல காசு போடல, நாளைக்கு கண்டிப்பா வந்திடுவான், வீட்டுப்பாடத்தையும் அனுப்பிடுவான், மன்னிச்சுடுங்க டீச்சர். என்று கெஞ்சும் குரலில் கேட்டுக்கொண்டார்.

எனக்கு கிஷோரைப் பத்தி நல்லா தெரியும்,நான் பார்த்துக்கிறேன், கவலை படாதீங்க, என்று ஆறுதல் கூறி அவர்களைத் தேற்றினேன்.

டீச்சர் கிஷோருக்கு உங்களை ரொம்பப் பிடிக்கும், எல்லோர்கிட்டையும் அன்பாகவும் அதே சமயம் படிப்பு விஷயத்துல கண்டிப்பாகவும் இருப்பீங்கன்னு சொல்லுவான் என்ற கிஷோரின் அம்மாவிடம், எனக்கும் கிஷோரை ரொம்ப பிடிக்கும், நல்ல பக்குவமும் பொறுப்பும் அவன்கிட்ட இருக்கு. படிப்பு விஷயத்துல நான் எந்தவேலை குடுத்தாலும் காலம் தவறாம செய்வான் என்று பெருமையாகக் கூறினேன்.

டீச்சர்,உங்களுக்கே நல்லா தெரியும், அஞ்சு மாசமா பஸ் எதுவும் ஓடறதில்ல,நாலு மாசமா வருமானம் எதுவும் இல்ல, அதனால நானும் அவரும் கட்டிட வேலைக்கு போயிட்டு இருக்கோம். வாரத்துல மூணு நாள் தான் வேலை. எப்படியோ கொஞ்சம் ஸ்கூல் பீஸ் கட்டிட்டோம் டீச்சர். கிஷோர் சரியா வகுப்புக்கு வர முடியலேன்னா கொஞ்சம் பார்த்து அனுசரிச்சுக்குங்க, கையில் பணம் இருக்கும் போது போனுக்கு காசு போட்டு விடறேன் என்று தழுதழுத்தார் கிஷோரின் அம்மா.

அம்மா, தயவுசெஞ்சு கவலைப்படாதீங்க,நான் பார்த்துக்கிறேன் என்று ஆறுதல் படுத்தி அழைப்பைத் துண்டித்து விட்டு, பள்ளி திறக்கும் வரையில் கிஷோருக்காக அவனது தொலைபேசி கட்டணத்தை நானே செலுத்தி வடுவது என்றும், காலையில் முதல் வேலையாக அவனுக்கு recharge செய்து விட்டு, வகுப்பிற்கு வர சொல்ல வேண்டும் என்றும் எனக்குள் தீர்மானித்துக்கொண்டு உறங்கிப்போனேன்..

மறுநாள் காலையில், என் அம்மாவிற்கு திடீரென நெஞ்சுவலி என்று என் தம்பி தொலைபேசியில் தெரிவிக்க, பள்ளி நிர்வாகத்திடம், இன்று ஒருநாள் இணைய வகுப்பிற்கு ஒருநாள் விடுப்பிற்கு அனுமதி பெற்றுக் கொண்டு, E.Pass பெற பத்து முறை விண்ணப்பித்தும், பத்து முறையும் நிராகரிக்கப்பட்டது.

இதற்கிடையில் அம்மாவை மருத்துவமனைக்கு அழைத்து சென்றதாகவும், இப்போது நலமாக உள்ளார், அவசரப்பட்டு என்னை வர வேண்டாம் என தம்பி கூற,அரைமனதாக பயணத்தை ரத்து செய்தேன்.

இந்த சூழ்நிலையில் கிஷோர் விஷயத்தை சுத்தமாக மறந்தே போனேன்.

மறுநாள் காலையில் முன்னர் கிஷோர் அம்மா அழைத்த தொலைபேசி எண்ணிற்கு தொடர்பு கொண்டு விசாரிக்கையில், இது அவங்க நம்பர் இல்லைங்க, நான் அவங்க வேலை செய்யற கட்டிட மேஸ்திரி பேசறேன், நீங்க யாருங்க என அவர் கேட்க, நானோ அய்யா, நான் அவங்க பையனோட ஸ்கூல் டீச்சர் .. அவங்க இந்த எண்ணிலிருந்து நேத்து என்கிட்டே பேசினாங்க.. அவங்க கிட்ட கொஞ்சம் பேசணும், இப்போ முடியுமா என்று கேட்க, அந்த அம்மாவையும் அவங்க வீட்டுக்காரரையும் நேத்து எங்க என்ஜினீயர் வேலையை விட்டு அனுப்பிட்டாங்க.. டிரைவர் வேலை பார்த்தவருக்கு கட்டிட வேலையெல்லாம் அவ்வளவா பழக்கமில்லை.. சரியா வேலை செய்யறதில்லேன்னு என்ஜினீயருக்கு கொஞ்ச நாளா அவர் மேல வருத்தம்.. சூழ்நிலைக்காக வேலைக்கு வந்தவங்க கொஞ்ச நாள் போனா நல்லா வேலை பழகிக்கப் போறாங்கன்னு நானும் சொன்னேன். அவர் கேக்கற மன நிலையில இல்ல..நேத்து என்ஜினீயர் கொஞ்சம் கடுமையா பேச, ரெண்டு பேருக்கும் வாக்குவாதம் முத்திடுச்சு,என்ஜினீயர் அவரை அடிக்க போக, கடைசியில, புருஷன் பொண்டாட்டி ரெண்டு பேரையும் வேலையே விட்டு அனுப்பிட்டாரு..இது வரைக்கும் தர வேண்டிய சம்பளத்தையும் தரல.. ரெண்டு பேரும் ,எங்க குடும்பத்தை எப்படி காப்பாத்துவோம், எங்க பையனை எப்படி படிக்க வைப்போம்ன்னு அழுதுகிட்டே போனாங்க..என்று அவர் சொல்ல சொல்ல,என் கண்களில் தாரை தாரையாக வழிந்த கண்ணீரை துடைத்துக்கொண்டே, தகவல் சொன்னதற்காக அவருக்கு நன்றி சொல்லிவிட்டு அழைப்பைத் துண்டித்தேன்.

இன்றைய வகுப்புகள் முடிந்ததும் கிஷோரின் வீட்டிற்கே சென்று விடுவது என்ற முடிவுடன்,வகுப்பை ஆரம்பிக்க தொலைபேசியை எடுக்கையில், எங்கள் பள்ளியின் வாட்சப் குழுவில் அனுப்பப்பட்டிருந்த செய்தியைப் படித்து அதிர்ச்சியில் உறைந்து நின்றேன்…

“நமது பள்ளியின் மூன்றாவது வகுப்பு ஆ பிரிவில் பயிலும் கிஷோர் என்ற மாணவனின் தாயார் இன்று அதிகாலை மரணமடைந்தார். அவர்களது ஆத்மா சாந்தியடைய ….” அதற்கு மேல் ஒரு எழுத்தைக் கூட வாசிக்க என்னால் முடியவில்லை.

ஊரடங்கின் காரணமாக துக்கம் விசாரிக்க கூட செல்ல முடியவில்லை என மனது ரணமானது. இந்த கொரோனாவால் மக்கள் படும் அளவில்லா துயரங்களிலிருந்து காப்பாற்றி அருளும் இறைவா என கண்ணீர் மல்க வேண்டிக் கொண்டே, அலைபேசியை எடுத்து பார்த்து, விக்கித்து போனேன். விட்டுப்போன வீட்டுப்பாடங்கள் அனைத்தையும் அனுப்பியிருந்தான் கிஷோர்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *