மிதிலாநகர் பேரழகி

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: January 12, 2020
பார்வையிட்டோர்: 5,934 
 

சமணம் என்னும் சொல் ‘சிரமண’ என்னும் வடசொல்லின் திரிபாகும். அதனால் சிரமணர் தமிழில் சமணர் என அழைக்கப்பட்டனர். சிரமணர் என்பதற்கு இன்ப துன்பம் ஆகிய இரண்டையும் சமமாக ஏற்பவர் என்று பொருள் கொள்ளலாம். நட்பு பகை அற்றவர் என்றும் கூறலாம்.

தன்னை இகழ்வோரைக் கோபித்தலும் புகழ்வரைப் போற்றுதலும் இல்லாதவர். அன்பும் அருளும் நிறைந்தவர். இறப்பையும், பிறப்பையும் பொருட்படுத்தாமல் உலகில் நல்லவற்றைச் செய்யவேண்டும் என்பதற்காகத் தங்களின் எல்லாச் சுகங்களையும் துறந்தவர்.

அது மட்டுமின்றி ஐம்புலன்களையும் தன்வயப் படுத்தியவர். யான், எனது என்னும் செருக்கினை அழித்தவர். எக்காரணத்தாலும் எவ்வுயிர்க்கும் தீங்கு நினையாதவர். ஒழுக்கத்தை உயிரினும் மேலாகக் காப்பவர் என்று விரிவான பொருளைத் தருவதாகக் கொள்ளலாம்.

சமண சமயக் கொள்கைகளை அவ்வப்போது உலகத்தில் பரவச் செய்வதின் பொருட்டு தீர்த்தங்காரர்கள் தோன்றுகின்றனர் என்பது சமண சமயக் கொள்கை. தீர்த்தங்காரர் என்பதற்குத் தம் ஆன்மாவைப் பிறவிக் கடலிலிருந்து கரையேற்றிக் கொண்டவர் என்பது பொருள்.

இதுவரை இருபத்திநான்கு தீர்த்தங்காரார்கள் தோன்றியுள்ளார்கள் என்பதும் இனியும் இருபத்திநான்கு தீர்த்தங்காரரர்கள் தோன்றுவர் என்பதும் இச்சமயக் கொள்கையாகும். தொன்மையும் நீண்ட வரலாறும் கொண்ட சமண சமயம் இருபத்திநான்காம் தீர்த்தங்காரராகிய வர்த்தமான மஹாவீரரால் தோற்றுவிக்கப்படது. அவர் மூலம் சமணமதம் பிரபலமாகியது. அவர் புத்தருக்கு மூத்தவர். இருவரும் சம காலத்தவர்கள்.

இரண்டாயிரத்து ஐந்நூறு ஆண்டுகளுக்கு முன்னர் தற்போதைய பீஹாரிலும் உத்திரப்பிரதேசத்திலும் யாத்திரை செய்து கொள்கைகளைப் பரப்பினர்.

மஹாவீரருக்கும் முந்தையவர் மல்லிநாதர். அவர் பத்தொன்பதாவது தீர்த்தங்காரர். அவர் ஆண் என்று திகம்பரப் பிரிவு சமணர்கள் நம்புகின்றனர். ஆனால் அவர் பெண்துறவி என்று ஸ்வேதாம்பரப் பிரிவு சமணர்கள் எழுதி வைத்துள்ளனர். திகம்பரப் பிரிவினருக்கு திசையே ஆடை. அதாவது நிர்வாணமாக இருப்பர். பெண்கள் முக்தி அடைய முடியாது. ஆண்களாகப் பிறந்த பின்னரே உயர் நிலையை அடைய முடியும் என்பர். ஸ்வேதாம்பரப் பிரிவினருக்கு வெள்ளை ஆடை உண்டு. அவர்கள் ஆண் பெண் இருவரும் முக்தி அடைய முடியும் என்பர்.

மல்லிநாதர் பற்றிய சுவையான கதை இது:

செல்வி மல்லிகா பேரழகி. அவள் மிதிலா ராஜ்யத்தின் மன்னரான கும்பாவின் மகள். அழகில் மட்டுமின்றி அறிவுச் சுடர் வீசுபவள். அவளது புகழ் திக்கெட்டும் பரவியது. அந்தப் பேரழகியைத் திருமணம் செய்துகொள்ள பல நாட்டு மன்னர்களும் போட்டி போட்டனர். அறிவுச் சுடரோடு ஞானச் சுடரும் அவளிடம் வீசியது. ஆனால் அவள் மணம் செய்து கொள்ளாமல் சமணமதத் துறவியாக விரும்பினாள்.

மிதிலா என்பது தற்கால பீஹார். நேபாள எல்லையை ஒட்டிய பெரும் நிலப்பரப்பு. சீதையை பெற்றெடுத்த ஜனகர், மிகப்பெரிய தத்துவ அறிஞர்கள் மாநாட்டைக் கூட்டியபோது, உலகின் முதல் பெண் அறிவாளி செல்வி கார்க்கி வாஸக்னவி அந்த மாநாட்டில் பேசி, யாக்ஞ வாலக்யரை மடக்கிய மாநாடு.

பேரழகி மல்லிகாவை கரம் பிடிக்க, மணந்துகொள்ள அங்க, வங்க, குரு, குனால, காசி, கோசல, பாஞ்சால மன்னர்கள் முன்வந்தனர். ஆனால் அவளோ மறுத்தாள். மன்னர் கும்பாவை மடக்கி அவளை இராட்சத மணம் புரிய எல்லோரும் சேர்ந்து மிதிலா ராஜ்யத்தைத் தாக்கினர். போரில் கும்பா தோற்கும் நிலை வந்துவிட்டது.

தந்தை தோற்பதை அறிந்த பேரறிவாளி மல்லிகா ஒரு தந்திரம் செய்தாள். தந்தையிடம் “போரிடும் மன்னர்கள் அனைவரையும் நான் சந்திக்கத் தயார். சில நாட்களுக்குப் பின் அவர்கள் அனைவரையும் ஸ்வயம்வரத்திற்கு மிதிலைக்கு அழையுங்கள்” என்றாள். செய்தியைக் கேட்ட பன்னாட்டு மன்னர்களும் அகம் மகிழ்ந்தனர். உளம் குளிர்ந்தனர். ஸ்வயம்வரத்தில் தன் கழுத்தில்தான் மாலை விழும் என்று கனவுகண்டு சொர்க்கலோகத்தில் மிதந்தனர்.

அந்த நாளும் வந்தது. மிதிலா நகரம் சீதையின் காலம்போல வாழைமரம், தோரணங்களுடன் விளங்கியது. மன்னர்கள் வந்தனர். அவர்களுக்கு அமோக வரவேற்பு ஆரவாரத்துடன் அளிக்கப்பட்டது. அரண்மனைக்குள் அருமையான விருந்து. அந்த சுபநேரமும் வந்தது. எல்லோரும் இளவரசி பேரழகியின் தங்கச் சிலை இருக்கும் அறைக்குள் நுழைந்தனர். அசந்தே போய்விட்டனர்.

கண்முன்னே தங்கச்சிலை. கட்டித் தழுவ மாட்டோமா என்று மன்னர்கள் துடித்தனர். அதற்குள் ஒரு அறிவிப்பு. இளவரசி வருகிறாள் ‘பராக் பராக் பராக்’ என்று. உலக மஹா அழகி உள்ளே நுழைந்தாள். அடக்கடவுளே ஒரு தங்கச்சிலை போன்ற ஒருவளைப் பார்த்து வியந்தோமே! இவள் அவளைவிட நூறு மடங்கு ஜொலிக்கிறாளே என்று வியந்தனர்!!

அவர்கள் முதலில் பார்த்தது பொற்சிலை போன்ற அழகி அல்ல, உண்மையிலேயே சிலைதான். லண்டனில் இருக்கும் மேடம் துஸாட்ஸ் மெழுகு பொம்மைக் காட்சி மியூஸியத்தில் வேடிக்கை பார்க்க வந்தவரா அல்லது மெழுகுச் சிலையா என்று ஒருவரைப் பார்த்து ஒருவர் வியக்கிறோமே அதுபோல தத்ரூபமான தங்கச்சிலை அது!

இந்த உண்மை அவர்களுக்கு எப்போது தெரிந்தது தெரியுமா? அந்தத் தங்கச் சிலையின் தலையில் இருந்த தாமரை மலரை அகற்றினாள் மல்லிகா. அதன் கீழிருந்த மூடியை எடுத்தாள். அப்போதுதான் தெரிந்தது அது ஒரு பெண் அல்ல, அது சிலை என்று.

மூடியை எடுத்த அடுத்த நிமிடத்தில் உலக மஹா நாற்றம் வீசியது, நாற்றம் குடலைப் புரட்டியது. எல்லா மன்னர்களும் அரண்மனை அறையிலிருந்து வெளியே ஓடுவதற்கு எத்தனித்தனர். ஓடுவதற்கு தயாராக இருந்த மன்னர்களைத் தடுத்து நிறுத்தினாள் பேரழகி மல்லிகா. பிறகு அவள் பேசத் தொடங்கினாள்…

“மன்னர் மன்னர்களே! இதோ இப்போது வந்த நாற்றம் சில நாட்களுக்கு முன்னர் அழகிய காய்கறி, பழங்களாக இருந்த பண்டங்களில் இருந்து வந்ததாகும். அவைகள் அப்போது சுவையோடு இருந்தன. அவைகளை நான் வெட்டி, இந்த சிலையின் உட்பகுதிக்குள் போட்டு வைத்தேன். அவைகள் அழுகிப்போய் எடுத்த நாற்றத்தையே நீங்கள் முகர்ந்தீர்கள்.

என்னுடைய இந்தப் பேரழகு மிக்க தங்கச் சிலை போன்ற உடலும் சில பல ஆண்டுகளுக்குப் பின் இப்படி வாடி வதங்கி அழுகிப்போகும். உண்மையான இன்பம் தியானத்திலும் தவத்திலும்தான் உள்ளது. அதில்தான் என்றும் அழியாத பேரின்பம் கிட்டும். நானும் அதையே நாடி சமணத் துறவியாகப் போகிறேன்…” என்று சொற்பொழிவினை முடித்தாள்.

வந்திருந்த மன்னர்கள் அனைவருக்கும் ஆலமரத்தடி தட்சிணாமூர்த்தி போல முகம் தேஜோமயமாகியது. புளியமரத்தடி நம்மாழ்வார், அரச மரத்தடி புத்தபகவான் போல ஞான உதயம் ஏற்பட்டது. அனைவரும் அவளை பெருமதிப்புடன் வணங்கினர். அவரவர் நாட்டிற்கு சிட்டாகப் பறந்து சென்றனர். காடேகி துறவு பூண்டு நல்வழியில் நடைபோட்டனர்.

இதனால்தான் பட்டினத்தார், “சீறும் வினையது பெண்ணுருவாகித் திரண்டுருண்டு; கூறும் முலையும் இறைச்சியுமாகிக் கொடுமையினால் பீறும் மலமும் உதிரமும் சாயும் பெருங்குழிவிட்டேறும்; கரைகண்டிலேன் இறைவா கச்சி ஏகம்பனே” என்று பாடினார்.

அருணகிரிநாதரோ திருப்புகழில் பாடலுக்குப் பாடல் இவ்விழயத்தைச் சுட்டிக் காட்டுகிறார்: “கோதி முடித்துக் கனத்த கொண்டையர் சூது விதத்துக் கிதத்து மங்கையர்கூடிய அற்பககத்தை நெஞ்சினில் நினையாதே” என்று ஒரு பாடலில் பகர்கிறார்.

இத்தகைய அறிவுரை மல்லிகாவின் வாயிலிருந்து வந்தது சமண மதத்தின் சிறப்பாகும். நாமும் மல்லிநாதர் அடி பணிவோம்.

உதவி: லண்டன் திரு சுவாமிநாதன்

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *