தெய்வமில் கோயில்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: December 12, 2018
பார்வையிட்டோர்: 3,533 
 

கமாலா ஒஸ்லோவில் இருக்கும் அந்தக் கோயிலுக்கு போவதற்காய் மிகவும் ஆர்வத்தோடு புறப்பட்டாள். அவள் அதற்காகப் பல மணித்தியாலங்கள் பல ஆடையலங்காரங்களை மாற்றி மாற்றி இறுதியாக ஒரு சிவப்புக் காஞ்சிபுரத்தை தெரிவு செய்து தன்னை அலங்கரித்துக் கொண்டாள். செல்வனைப் புறப்படுமாறு ஏற்கனவே பத்து முறை கேட்டுவிட்டாள். அவன் அசையவே இல்லை. காதற்றவன் போல் இருந்தான். அவள் மீண்டும் சளைக்காது ஒரு முறை அவனைக் கெஞ்சுவது போலக் கேட்டாள்.

‘தயவு செய்து வெளிக்கிடுங்க… திருவிழாவிற்குப் போவம்.’

‘அது திருவிழாவா?’ அவன் திருப்பிக் கேட்டான்.

‘அப்ப என்ன?’

‘சும்மா கேளிக்கை… பொழுது போக்கு… அதுக்கு நான் வரேல்லை. நீ வேணும் எண்டாப் போட்டு வா.’

‘ஏன் உங்களுக்கு உந்த வெறுப்பு?’

‘வெறுப்பு இல்லை… ஆற்றாமை… ஆதங்கம்…’

‘அப்ப நான் போட்டு வாறன். காரை எடுத்துக் கொண்டு போகிறன்.’ என்றாள் கமலா.

‘சரி.’ என்றுவிட்டு அவன் தொலைக்காட்சிப் பெட்டியை இயக்கினான். என்றாலும் அவன் மனது பழைய நினைவுகளில் மூழ்கியது. ஆதங்கம்… அது என்றும் ஓயாது என்று அவனுக்குத் தோன்றியது.

நாங்கள் அல்லது அவர்கள் என்று என்று வைத்துக் கொள்ளலாம். பஞ்சம் பிழைக்க வந்தவர்கள், தமிழின், சைவத்தின் பாதுகாவலர்கள் என்று தங்களை எண்ணிக் கொள்பவர்கள், ஓடிவந்த பின்பு ஓங்கி வீரம் பேசுபவர்கள், தான் முன்னேறுவதற்காகத் தன்னை நம்பியவனுக்குக் குளி பறிக்கத் தயங்காதவர்கள், தியாக புருசர்களாக தம்மைக் காட்டிக் கொள்ள விரும்புபவர்கள், கல் தோன்றி மண் தோன்றாக் காலத்து முன் தோன்றிய மூத்த குடிகள் என்று புல்டா விடுபவர்கள், நவீன காலத்துக் கப்பலோட்டிகள் எனப் பெருமை கொள்பவர்கள் என்று வற்றாது ஓடும் நதிபோல அவர்களைப் பற்றி வாய் ஓயாது வருணித்துக் கொண்டே போகலாம். என்று அவனுக்குத் தோன்றியது.

அவன் மனது அந்த வரலாற்றைத் தனிமையில் ஒரு முறை வெப்பியாரத்தோடு அசை போட்டது.

அரசியல் சாயம் பூசிப் பஞ்சம் பிழைக்க நோர்வேக்கு எண்பதின் பிற்பகுதியில் வந்த தமிழர்கள் பலர் சேர்ந்து ஓஸ்லோவில் ஒரு கோவில்லை தாம் சுமந்து வந்த பழைய கற்களை அஸ்திவாரத்தில் இட்டுக் கட்டுவது என்று முடிவு செய்தார்கள். இல்லை அது முதலே சிறிய கோயிலாக அங்கு இருந்தது என்றும் சிலர் கூறுகிறார்கள். இருக்கலாம். இருந்தாலும் அது ஒரு பெரிய விடையம் இல்லை.

அந்தக் கோயில் கட்டி முடிந்ததும் அவர்களின் முக்கிய அடையாளமாக இருக்கும் ஒன்றை அந்தக் கட்டடத்தில் குடியேற்ற வேண்டும் என்பதே அதன் ஆரம்ப நோக்கம். அந்த நோக்கத்தை அவர்கள் அஸ்திவாரம் இட்ட அன்றே மறந்து போனார்கள் என்பது போகப் போகத்தான் பலருக்கும் விளங்கியது. அதற்கு அவர்கள்… அவர்களின் தெற்குத் தேசத்தின் மாயையில் விழுந்தது முக்கிய காரணம் ஆகிற்று. அந்த மாயை விளங்காது அவர்கள் அதில் நன்கு மூழ்கினார்கள். வாயை நன்கு பிளந்தார்கள்.

அஸ்திவாரம் இட்ட அந்தக் கோயிலுக்கு நோர்வே சிவன் கோயில் என்றும் பெயர் சூட்டினர். சிலர் அதற்கு ஒஸ்லோவில் இருக்கும் இந்தக் கோயிலுக்கு எப்படி நோர்வே சிவன் கோயில் என்று பெயர் வைப்பது என்று ஆட்சேபம் எழுப்பினார்கள். பல இடங்களில் கோயில்கள் உருவாகினாலும் இதுவே நோர்வேயில் பெரும் கோயிலாக இருக்கும் என்பதால் அப்படி அழைப்பதில் எந்தத் தவறும் இல்லை என்று அதற்குச் சார்பானவர்கள் சமாதானம் கூறி அவர்கள் வாயை அடைத்து விட்டார்கள். அதனால் அந்த ஆட்சேபம் அமைதியாக அடங்கிப் போய்விட்டது.

இப்படித் தொடங்கிய அந்தக் கோயிலுக்கு அங்கத்தினரைச் சேர்த்து, அவர்களிடம் இருந்து ஒரு தொகை வசூலித்து, அந்த விபரத்தைக் காட்டி அரசிடம் இருந்தும் விமர்சையாக மேலும் பணம் வசூலித்து, அவர்கள் அந்தக் கோயில் கட்டும் பணியை வெகு விமர்சையாகத் தொடங்கினார்கள். எதற்குக் கோயில் கட்டுகிறோம் என்பது விளங்காது கோயில் கட்டப்படுகிறது என்று சில அக்கறையாளர்கள் எண்ணினார்கள். எண்ணியதைப் பேசும் சுதந்திரம் ஐரோப்பாவிலும் இல்லாத காலம் அது. அதனால் வாயை மூடிக்கொண்டு மனதிற்குள் மட்டும் முறையான வழிகாட்டல் அதற்கு இல்லை என்று பலரும் வருத்தப்பட்டார்கள். கோயில் கட்டினால் அதற்கான அனைத்தும் ஆகம முறைப்படி கடைப்பிடித்து, ஒரு சிவலிங்கத்தை ஸ்தாபித்து, கும்பாவிசேகம் செய்ய வேண்டும். அதைவிட வசந்த மண்டபத்தில் எழுந்தருளுவதற்கு ஐம்பொன்னில் ஒரு ஆடல் நாயகனை உருவாக்க வேண்டும். அவன் அண்டத்தில் ஆடும் அந்த நர்த்தனத்தை இந்தப் பிண்டங்களுக்கு விளங்குமாறு செய்ய வேண்டும். அப்படிச் செய்தாலும் அதன் அற்புதம் விளங்காது பொன் நகையையும், புடவையையும் பார்க்கும் எம்மினத்து ஞானக் கொழுந்துகளின் இவ்வுலக அற்புதச் செயல் தொடரும். அதற்கே கோயிலுக்குச் செல்வது என்று அவர்கள் அதை மரபாக்கி விட்டார்கள். கொண்டு வந்தது, கொண்டு போவது பற்றிய உண்மையை அறிய விரும்பாது மாயையில் இந்த உலக வாழ்க்கை நிரந்தரம் என்று வாழும் சாதாரண மனிதர்கள்.

ஞானம் நிறைந்த மொழியே எங்கள் மொழி. என்றாலும் ஞானசூனியங்கள் நிறைந்த இனமாக எங்கள் இனம் மாறிவிட்டதாக சிலர் மனதினுள் குமுறினார்கள். கோயிலை நிர்மாணித்துத் தெய்வத்தைக் குடிவைக்காது விடப்போகிறார்கள் என்று வெம்பினார்கள். எங்கள் மக்கள் சொந்த அடையாளத்தைச் சிறிது சிறிதாக இழந்து எந்த அடையாளமும் இல்லாது போகிறார்கள் என்று பலர் மனதிற்குள் புழுங்கினார்கள்.

ஞானவழி வந்த எங்கள் மூத்த பரம்பரை இப்போது அவர்களின் பாரம்பரிய மொத்த ஞானத்தையும் தொலைத்து, வெண்திரையில் காட்டப்படும் மாயையே நிஜ உலகு என்று எண்ணி மாய்கிறார்கள். அவர்கள் மாய்ந்தால் பருவாய் இல்லை. அறிவுள்ளவர்கள் என்று கூறிக்கொண்ட இவர்கள் இன்று அதைவிட மோசமாக மாய்வதைப் பார்க்க ஈழத்தமிழரைப் பற்றி எண்ணுபவர்களுக்கு இதயம் நோகும். நொந்து என்ன? மந்தைக் கூட்டமாக மாறியவர்களை இனி மனிதக் கூட்டம் ஆக்குவது எப்படி? யாழ்ப்பாணம்… மேதைகளின் உலகு என்கின்ற போதையில் பேதைமையானவர்களை என்ன செய்ய முடியும்? இன்று அந்தப் பேதைமையின் உச்சமாக ஐரோப்பா வாழ் தமிழர்கள், அமரிக்கா வாழ் தமிழர்கள் என்று வஞ்சகம் இல்லாது அவர்கள் வாழும் இடம் எல்லாம் பரந்த கிடக்கிறது. அது அவர்களை எங்கும் மயக்கி ஆள்கிறது.

இங்கு கோயிலைக் கட்டியவர்களுக்கு எதுவும் விளங்கவில்லை. அவர்களுக்கு அதைக் காட்டி அரசபணம் கறக்கலாம் என்பது மட்டும் மிகவும் தெளிவாக்கத் தெரியும். சைவம், தமிழ் என்றால் அவர்களுக்குத் தென்னிந்தியாவும் கோடம்பாக்கமும் நினைவு வரும். எட்டுத்தொகை நூல்கள், பத்துப்பாட்டு நூல்கள், பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள் என்று கூறினால் என்ன என்று திருப்பிக் கேட்பார்கள். மீண்டும் மீண்டும் கூறப்படுவதால் சில பக்தி இலக்கியம் பற்றி அவர்கள் கேள்விப்பட்டு இருக்கிறார்கள். இருந்தாலும் அதில் எல்லாம் பலருக்கும் துளியளவும் அக்கறை கிடையாது. பழையன கழிந்து புதியன புகுதல் என்பதை எங்கும் நிச்சயம் கடைப்பிடிப்பவர்கள் தமிழர்கள் என்று ஆகிவிட்டது.

ஆகம விதிப்படி ஆடல் அரசனை நிறுவினால் மட்டுமே இது கோயிலாகும் என்பது யாருக்கும் விளங்கவில்லை. அவர்களுக்கு அப்படிச் செய்யும் எந்த நோக்கமோ, விருப்பமோ, அல்லது அறிவோ இருக்கவில்லை. அவர்கள் கோயில் என்றால் அதில் கச்சேரிகள், வீரவிளையாட்டுக்கள் என்று அதைத் தங்காளால் இயலுமான வரைக்கு ஒரு கேளிக்கை அரங்காக்கி மகிழலாம் என்பதை மட்டுமே தெரிந்து வைத்திருந்தனர். சிவன் கோயில் என்று பெயர் வைத்துவிட்டுச் சிவன் இல்லாது கோயில் எதற்கு? அதனால் என்ன பிரயோசனம்? என்று யாரும் அதைப்பற்றிக் கேட்கவில்லை. யாரும் அதைப்பற்றிப் பேசுவதும் இல்லை.

இப்படியாக இது கோயிலா அல்லது கூத்து அரங்கமா என்று பலரும் முணுமுணுக்கும் போதெல்லாம் எதிர் பார்த்தது போல ஏதாவது கூத்து அல்ல வீர சாகசம் அங்கே நடக்கும். பெரும்பான்மை ஒஸ்லோ வாழ் தமிழர்கள் அதில் மகிழ்ந்து போவார்கள். தம்மை மறந்து போவார்கள். மகேசனின் தரிசனத்தைவிட மகிழ்ச்சி அரங்காக இருப்பது அவர்களுக்கும் மகிழ்வாய் இருக்கும். இவ்வுலக சொர்க்கம் இது என்று மகிழ்வார்கள்.

தெய்வங்கள் அற்ற அந்தக் கோயில் கேளிக்கை அரங்க மட்டும் இருக்கிறது என்கின்ற விம்பத்தையும் அந்தக் கோவில் நிருவாகம் முழுமையாக விரும்பவில்லை. அதனால் இடைக்கிடை அவர்கள் சில பக்தர்களையும் அங்கே வரவழைப்பார்கள். கேளிக்கை அரங்கம் என்றால் என்ன கோயில் என்றால் என்ன என்பதைப் பற்றிக் கவலைப்படாமல் அங்கே செல்லும் பக்தர்கள் அதிகம். ஒரு சில பக்தர்கள் மாத்திரம் தெய்வம் அற்ற அந்தக் கோயிலுக்குள் தாங்கள் கால் வைப்பதில்லை என்பதில் எந்த விட்டுக்கொடுப்பையும் காட்ட விரும்பவில்லை. அதில் தானும் ஒருவன் என்பதில் செல்வனுக்கு ஒரு சிறிய மகிழ்ச்சி.

இன்று தென்னிந்தியாவில் இருந்து ஒரு பிரசங்கி அந்தக் கோயிலுக்கு வருகிறார். அதற்குத்தான் கமலா போக வேண்டும் என்று ஒற்றைக் காலில் நின்றாள். அவளும் சராசரித் தமிழ் பெண் என்பதை எப்போதும் நிரூபிப்பாள். என்று அவன் எண்ணினான்.

இது இப்படி இருக்க அங்கே சென்ற கமலாவோ எந்த ஆதங்கமும் இன்றி நிகழ்ச்சிகளைப் பார்த்தாள். தென்னிந்தியாவில் இருந்து வந்தவரின் பிரசங்கத்திற்குப் பின்பு அவரோடு ஒரு உரையாடல் நடந்தது. அப்போது ஒரு தமிழர் திடீரெனத் தாங்களின் தமிழ் பற்றைக் காட்டுவது போல ‘நீங்கள் ஏன் தமிழ் பேசாது தங்கிலீஸ் பேசுகிறீர்கள்?’ என்று கேட்டார். அதற்கு அவர்,
‘நாங்கள் தங்லீசு கேசுகிறோம் என்று தெரிந்துதானே எங்களை இங்கு அழைத்து வருகிறீர்கள்? பின்பு ஏன் அதைப்பற்றிக் கேட்கிறீர்கள்? ஆனால் நான் இங்கு வந்த பின்புதான் தெரிகிறது தெய்வங்கள் அற்ற கோயிலை வைத்திருக்கும் உங்களைவிட தங்லீசு பேசும் எங்கள் செயல் மட்டம் அல்ல என்பது.’ என்றார். சபையில் இருந்து அதற்கு எந்த மறுமொழியும் வரவில்லை.
பின்பு யாரும் அவரிடம் அப்படியான எந்தக் கேள்வியும் கேட்கவில்லை. சிலர் மாத்திரம் ‘தெய்வங்கள் அற்ற கோயில்கள்.’ என்று மனதிற்குள் சொல்லிக் கொண்டார்கள். அந்தக் கணத்தில் கமலாவுக்கும் செல்வனின் மனநிலை பற்றி விளங்கிக் கொள்ள முடிந்தது. தன்னை எண்ண அவளுக்கு வெட்கமாக இருந்தது. அவள் சிந்தித்த வண்ணம் தனது காரை நோக்கிச் சென்றாள்.

– நவம்பர் 2018

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *