கிழக்கு வாசல்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: January 22, 2021
பார்வையிட்டோர்: 2,861 
 

ஒரு நல்ல காரியம் நடக்க வேண்டுமென்றால் கோயிலுக்குப் போய் சாமி கும்பிட்டால் போதும் என்பது பலரது நம்பிக்கை.

ஆனால் தஞ்சை பெரிய கோயிலுக்கு மட்டும் பிரபலங்கள் போனால் எசகு பிசகாக ஏதாவது நடந்துவிடும் என்று இன்னொரு நம்பிக்கை…. காரணம், கடந்த ஐம்பது வருடங்களாக தஞ்சை பெரிய கோயிலின் கிழக்கு வாசல் தொடர்பாக நிலவும் மர்மம்.

கோயிலின் கிழக்கு வாசல் வழியாக நுழைந்ததால்தான் இந்திராகாந்தி கொலை செய்யப்பட்டாரா? எம்ஜிஆரின் உடல்நலம் பாதிக்கப் பட்டதா?

தளிக்குளத்தூர் கோயிலை இடித்துதான் ராஜராஜ சோழன் தஞ்சை பெரிய கோயிலைக் கட்டினாரா? இந்த இடிப்புக்கு எதிராக சிவாச்சாரியார்கள் கோபுரத்தின் மீதேறி தற்கொலை செய்துகொண்ட இடம்தான் இன்றைய கிழக்கு வாசலா?

ராஜராஜ சோழனை அவரது புதல்வன் ராஜேந்திர சோழனே கொலை செய்தானா?

1984 அக்டோபர் முதல் வாரம் அப்போதைய பிரதமர் இந்திராவும், முதல்வர் எம்ஜிஆரும் கிழக்கு கோபுர வாயில் வழியாகத்தான் கோயிலினுள் நுழைந்து மேடையில் ஏறினார்கள்.

ராஜராஜன் சிலைக்கு இந்திராவால் அணிவிக்கப்பட இருந்த வைர கிரீடம் தயாராக மேடையில் வைக்கப் பட்டிருந்தது. கோயில் வளாகத்தினுள் கூட்டமே இல்லை.

இதனால் அப்செட்டான இந்திரா காரணம் கேட்க, “பாதுகாப்பு நடவடிக்கைகளுக்காக மக்களை உள்ளே விடவில்லை” என்றார் எம்ஜிஆர்.

உண்மையில் தஞ்சை கோயிலுக்குள் இருவரும் நுழைய வேண்டாம் என்று பல எச்சரிக்கைகள் விடப்பட்டிருந்ததால், பிரச்னைகள் வேண்டாம் என்று எம்ஜிஆர் மக்களை ஆலயத்தினுள் விடவில்லை.

தஞ்சாவூர் இடைத்தேர்தலில் ஆதரவு அளித்துவிட்டு, பிறகு அதை விலக்கிக்கொண்ட எம்ஜிஆரின் மீதிருந்த கோபம் இந்திராவுக்குத் தீரவில்லை. “நான் வைரகிரீடம் வைக்க, நீங்கள் மட்டும் பார்க்க, நமது இரண்டு பேருக்காகவா விழா? மக்களை உடனே உள்ளே அனுமதியுங்கள்…” என்று இந்திரா சிடுசிடுக்க, உத்திரவுகள் பிறப்பிக்கப்பட்டது. மக்கள் உள்ளே வந்தார்கள்.

இந்திரா கடுமையாகப் பேசியதால் அப்போதே எம்ஜிஆருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது. வைரகிரீடம் வைக்கபட்டு விழா முடிந்ததுமே மயக்க நிலையை அடைந்தார். சென்னை அப்பலோ மருத்துவ மனையிலும் சேர்க்கப்பட்டார்.

அக்டோபர் 16, 1984 அப்பலோவில் இருந்த எம்ஜிஆரைப் பார்ப்பதற்காக டில்லியில் இருந்து பறந்து வந்தார் இந்திரா. பத்திரியாளர்களிடம் பின்னர் பேசிய இந்திரா, எம்ஜிஆர் தன்னைப்பார்த்து சிரித்ததாகக் கூறினார். அதுவே இந்திராவின் கடைசி சென்னை விஜயம்.

அக்டோபர் 31 ல், தனது சப்தர்ஜங் தெரு வீட்டிலேயே இந்திரா சுட்டுக் கொல்லப்பட்டார். தஞ்சையில் ஒரே பரபரப்பு.

“கிழக்கு வாசல்’ வழியாக நுழைய வேண்டாம் என்று தலைப்பாடமாக அடித்துக் கொண்டோமே, அதிகாரிகள் எவரும் கேட்கவில்லையே” இப்போது பாருங்கள் இந்திராகாந்தி ஒரு மாதத்திற்குள் இறந்துவிட்டார்… எம்ஜிஆர் உடல் நலமின்றி கிடக்கிறார்… என்ற பேச்சு பலமாக அடிபட்டது.

எம்ஜிஆரும் அமேரிக்கா சென்று பெரும் போராட்டத்திற்குப் பிறகு மீண்டு வந்தார். ஆனால் மூன்று வருடங்கள் மட்டுமே இருந்தார்.

ஜூன் 7, 1997, திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு பிரகதீஸ்வரர் ஆலயத்தில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. சிவாச்சாரியார்கள் யாகசாலையில் யாகம் துவங்கிய நேரம், திடீர் என்று கும்பாபிஷேகத்திற்காக போடப்பட்டிருந்த பந்தல் தீப்பற்றி எரிய, நாற்பத்தியெட்டு பேர் இறந்து போனார்கள்; இருநூறுக்கும் மேற்பட்டவர்கள் தீக்காயம் அடைந்தார்கள். இந்த விபத்திற்கும் கிழக்கு கோபுரம்தான் பழியை ஏற்றுக்கொண்டது.

ஏன் தஞ்சை பெரிய கோயிலின் கிழக்குக் கோபுரம் அபசகுனமாகக் கருதப்படுகிறது? இந்தக் கேள்விக்கான விடையாக மற்றொரு வினாவைத் தொடுக்கிறார்கள் சிலர்.

தஞ்சைப் பெரியகோயில் இருந்த இடத்தில் முன்பு என்ன இருந்தது? கிபி 985 ம் ஆண்டு அருண்மொழி ராஜராஜனாக பதவி ஏற்றுக்கொண்டார். அவருடைய ஆட்சியின் கடைசிக் காலத்தில்தான் தஞ்சை பெரிய கோயிலை எழுப்பினார். அந்தக் கோயிலைக் கட்டிய மூன்றாண்டுகளில் அவர் இறந்துபோனார்.

ஆக, கிபி 1010 ல்தான் கோயில் எழுப்பப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது. அப்படியென்றால், அதுவரை அந்த இடத்தில் என்ன இருந்தது? தளிக்குளத்தான் சிவன்கோவில் அங்கு இருந்தது என்கிறார்கள் சிலர்.

தஞ்சையிலிருந்து முத்தரையர்களை விரட்டிவிட்டு, விஜயாலயச் சோழனும் அவரது மகன் ஆதித்தனும் தஞ்சையை பெருநகரமாக மாற்றினார்கள். பெரிய அரண்மனையை எழுப்பினார்கள்.

தளிக்குளத்தான் சந்நிதியில் திருப்பணிகளைச் செய்தார்கள். பெரிய ஆலயம் எழுப்பினார்கள். பராந்தகச் சோழரின் இரண்டாவது மகன் கண்டராதித்தர் இந்த தளிக்குளத்தாரின் மீது காதல் பூண்டு பக்தியில் பாட்டு இயற்றியிருக்கிறார்.

ஒன்பதாம் திருமுறைகளில் இந்தப் பாடல்கள் உள்ளன. அப்பர் பெருமானும் தளிக்குளத்தாரின் மீது பாடல்கள் பாடியிருக்கிறார். தனது திருவீழிமிழலை திருத்தாண்டகத்தில் ஒவ்வொரு சிவாலயமாகப் போய்ப் பாடிவரும் வேளையில், பல பாடல்கள் மூலமாக தஞ்சையில் தளிக்குளத்தார் ஆலயம் இருந்ததை உறுதி செய்கிறார்.

தஞ்சை தளிக்குளத்தார் கோயிலை ஆதித்தன் மிகப்பெரிதாகக் கட்டிய பிறகு, தஞ்சை பிரபலமடைந்தது. சோழர்களின் அடையாளமாக மாறியது.

புதிதாக எழுப்பப்பட்ட தளிக்குளத்தானின் நுழைவு வாயில் எங்கே இருந்தது? தஞ்சைப் பெரிய கோயிலின் சர்ச்சைக்குரிய ‘கிழக்கு வாசல்’ இருந்த இடத்தில்தான் தளிக்குளத்தானின் நுழைவு கோபுரம் இருந்தது!

ஆழ்வார்களால் பாடப்பெற்ற விண்ணகரங்கள் எல்லாம் இன்றும் இருக்க, நாயன்மார்களால் பாடப்பெற்ற எல்லா சிவாலயங்களும் இப்பொழுதும் இருக்க… தளிக்குளத்தார் கோயில் மட்டும் ஏன் இன்று இல்லை? அந்த தளிக்குளத்தார் சந்நிதியை மட்டும் நீக்கிவிட்டு, புதிய ஆலயம் ஒன்றை ராஜராஜ சோழன் எழுப்ப என்ன அவசியம் நேர்ந்தது?

தஞ்சைப் பெரியகோயில் கிழக்கு கோபுரத்தைக் கடந்து மன்னர்கள் உள்ளே நுழைந்து வந்தால், அவர்கள் பதவியையோ, உயிரையோ இழப்பார்கள்.

இந்திராவின் மரணம், எம்ஜிஆரின் மரணம் ஆகியவை சமீபத்திய மரணம் என்பது பலரது வாதம்.

உண்மையிலேயே கிழக்கு வாசல் ராசியில்லாததா? அதில் ஏதாவது உண்மை இருக்கிறதா?

சரித்திர ஆய்வாளர் அமரர் தி.வை.சதாசிவ பண்டாரத்தார்த்தான் உறுதியுடன் “தளிக்குளம் சிவன் ஆலயத்தை நீக்கிவிட்டுத்தான் பெரியகோயில் கட்டப்பட்டது” என்று தெரிவித்திருக்கிறார். அத்துடன் மறைமுகமாகவும் சில தகவல்களைக் கூறியிருக்கிறார்.

அதாவது “ஒரு சோழ குடும்பத்து இளவரசன் தளிக்குளத்தான் ஆலயத்தை இடிப்பதற்கு எதிராகப் போராட்டம் நடத்தினான் என்றும், அவனது ஆதரவில் சிவாச்சாரியார்கள் கோயில் நீக்கத்துக்கு எதிராகப் போராடியதாகவும், சொல்லியிருக்கிறார். இந்த இளவரசன், கண்டராதித்த சோழரின் பேரன் உத்தம சோழரின் மகன் என்றும்; ராஜராஜ சோழன் காலத்தில் இந்த இளவரசன் ஆலய நிர்வாகியாக இருந்தான் என்றும்; தளிக்குளத்தார் கோயில் இடிப்புக்கு எதிராக மக்களை அணி திரட்டி இவன் போராடினான் என்றும்; அதனாலேயே ராஜராஜ சோழன் இந்த இளவரசன் மீது ஊழல் குற்றச்சாட்டை சுமத்தி, அவனுக்கு மரண தண்டனை விதித்தான்…” என்றும் சொன்னார்.

அதாவது தனது தாத்தா நெஞ்சுருகிப் பாடிய தளிக்குளத்தான் கோயிலை தனது சித்தப்பா மகன் இடிப்பதை இந்த இளவரசன் விரும்பவில்லை. தளிக்குளத்தான் மீது பக்தி கொண்ட சிவாச்சாரியார்கள் சிலர் அக்கோயிலின் கோபுரத்தின் மீது ஏறிக் குதித்து தற்கொலை செய்துகொண்டு தங்கள் எதிர்ப்பைத் தெரிவித்தார்கள்.

அப்படி அவர்கள் தற்கொலை செய்துகொண்ட இடமே இன்று தஞ்சை பெரிய கோயிலின் கிழக்கு வாசல் என்பது பலரது கருத்து. இதற்கு வரலாற்றையும் துணைக்கு அழைத்துக்கொள்கிறார்கள்.

தஞ்சை பெரிய கோயில் 1000 வது ஆண்டில், சோழ மன்னன் ராஜராஜனால் கட்டப்பட்டது. ஆனால் 1900 வரையிலும் அது சோழர்களால்தான் அதுவும் ராஜராஜனால் கட்டப்பட்டது என்பது தமிழர்கள் யாருக்கும் தெரியாது. இதை ஓர் ஆங்கிலேயர்தான் கண்டுபிடித்துச் சொன்னார். இன்று உலகளவிலான பாரம்பரிய மிக்க இடங்களில் இந்தக் கோயிலும் இடம் பெற்றிருப்பது தமிழர்களுக்குக் கிடைத்த பெருமை. அத்துடன் தமிழர்களின் கட்டிடக்கலைக்கு கிடைத்த அங்கீகாரம்.

ஆனால் இக்கோயில் மற்றும் கிழக்கு வாசல் தொடர்பான மர்மத்தையும் வரலாற்று துணைக்கு அழைத்துக் கொண்டதுதான் இந்த மர்மம் இன்றுவரையில் நீண்டுகொண்டே வருவதற்கு மூல காரணம்.

தளிக்குளத்தார் கோயிலை இடித்துவிட்டுத்தான் தஞ்சை பெரியகோயில் கட்டப்பட்டது என்றால், சிறிய சிவன் கோயிலை இடித்துவிட்டு பெரிய சிவன் கோயிலைக் கட்டுவதில் சிவபக்தர்களுக்கு மகிழ்ச்சிதானே ஏற்படும்? அனால் அப்படியில்லையே ஏன்? என்று அறிஞர்களிடம் கேட்டோம்.

“கோயிலுக்கு இருக்கும் ஒரேவழி கிழக்கு வாசல்தான். இந்த வாசல் வழியாகத்தான் பல்லாயிரக்கணக்கான மக்கள் கோயிலுக்குள் சென்று வழிபாடு செய்து நிம்மதியைத் தேடுகிறார்கள்.

அப்படி ஒரு கோபுரத்தில் நிகழ்ந்த தற்கொலைகள் பலரைக் காவு வாங்குகிறது என்றால் அது இந்தப் பல்லாயிரக்கணக்கான பக்தர்களையும்தானே பழி கேட்கும்? பிரபலங்களை மட்டும் ஏன் காவு கேட்கிறது? ஆகவே இவையெல்லாம் கற்பனைக் கதைகள்…” என்கிற வரலாற்று ஆய்வாளரான குடவாயில் பாலசுப்ரமணியத்திடம், “தளிக்குளத்து கோயிலை இடித்து பெரியகோயிலைக் கட்டியது, அதன் சாபம் தொடர்வதாகச் சொல்வது எல்லாம் கட்டுக்கதையா?” என்றோம்.

“பெரியகோயில் சுமார் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்டது. ஆனால் தளிக்குளத்தான் கோயில் பெரியகோயில் கட்டப்பட்ட பிறகும்கூட மேலும் ஐநூறு ஆண்டுகள் இருந்ததாகச் சான்றுகள் உண்டு.

அப்படியிருக்க, தளிக்குளத்துக் கோயிலை இடித்துவிட்டு பெரியகொயிலைக் கட்டியது என்று சொல்வது எல்லாம் கற்பனையே. அதுவும் இந்தத் தளிக்குளத்தான் கோயில் தஞ்சையில் இருக்கும் சீனிவாசபுரத்துக்கு மேற்காக இருக்கும் பண்டிதர் தோட்டத்துக்கு அருகில் உள்ள மேலவெளி என்னும் இடத்தில் அமைந்திருந்ததற்கான ஆதாரத்தை நான் எழுதிய ‘ராஜராஜேச்சரம்’ என்னும் புத்தகத்தில் குறிப்பிட்டிருக்கிறேன்.”

கிழக்குவாசல் கதைகள் மாதிரி இன்னும் ஏராளமான கதைகள் பெரியகோயில் தொடர்பாக நிலவுவதாகக் குறிப்பிட்டார்.

கோயில் கோபுரத்தின் நிழல் தரையில் விழாது என்றுகூட ஒரு நம்பிக்கை இருந்தது. ஆனால் நிழல் விழுந்த புகைப்படங்கள் எடுக்கப்பட்டு உலகுக்கு காண்பிக்கப் பட்டிருக்கிறது. அதேமாதிரி ராஜராஜனை அவன் மகன் ராஜேந்திரன் கோபுரத்தின் உச்சியில் இருந்து தள்ளிக் கொன்றான் என்ற கதையும் உள்ளது.

இதுமாதிரி நிறைய கதைகளை அடுக்கிக்கொண்டே போகலாம்…” என்று குடவாயில் பாலசுப்பிரமணியம் முடிக்க, புலவர் பொ.வேல்சாமி மேலும் இந்த மூட நம்பிக்கைகளைச் சாடினார்.

“தஞ்சைக் கோயிலை ராஜராஜன் கட்டினான் என்று 1907 ல் ஓர் ஆங்கிலேயன் எழுதி வைத்தான். அதற்குமுன் இதை ஒரு சோழன்தான் கட்டினான் என்று மட்டுமே நம்பி வந்தார்கள்.

ஒரு கோயிலைக் கட்டியவனைப் பற்றிய பதிவுகளும் வரலாறும் இல்லாத தமிழர்கள், அந்தக் கோயில் இடிக்கப்பட்ட ஒரு கோயிலிலிருந்து உருவாகியது, அதனால் பல சிவபக்தர்கள் மாண்டுபோனார்கள் என்று எந்த வரலாற்று ஆதாரத்திலிருந்து பெற்றார்கள் என்பதைக் கூறவேண்டும். பொதுவாகவே ஆளாளுக்கு வாய்க்கு வந்ததை வைத்து கதை அளந்து விடுகிறார்கள்…” என்கிற வேல்சாமி, இந்த மூடநம்பிக்கைகளின் ஊற்றுகளுக்குக் காரணம் என்ன என்பதையும் விவரித்தார்.

“நான் 1954 முதல் 2000 வரை தஞ்சையில்தான் என் காலத்தைக் கழித்தேன். அப்போதெல்லாம் இந்த மாதிரியான மர்மமான கதைகளை மக்கள் பேசிக் கொண்டதேயில்லை. ஒருவேளை செவிவழிச் செய்தியாக இந்த மாதிரியான நம்பிக்கைகள் பரவியிருக்கலாம்… திருச்சி ஸ்ரீரங்கம்; திருப்பதி கோயில்களில்தான் கோபுரத்தில் நின்றுகொண்டு தற்கொலை செய்துகொண்ட நிகழ்ச்சிகள் நடந்ததுண்டு.

இதையும் பெரியகோயிலையும் தொடர்பு படுத்தி இது மாதிரியான கற்பனைக் கதைகளை அளந்து விட்டிருக்கலாம்… ஆதாரம் இல்லாத விஷயங்களுக்கு கண்ணும் காதும் பொருத்தி கதைகள் பேசுவதுதான் இந்த விஷயத்திலும் நடந்திருக்கிறது…” என்று காட்டமாகச் சொல்கிறார்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *