காஸ் (Gas) மணியம்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: October 6, 2016
பார்வையிட்டோர்: 5,891 
 

உடுவில் கிராமத்தில் ஆறடி உயரம் உள்ள ஒருவரைத் தேடினால் அது காஸ் மணியமாகத்தான் இருக்கும். உடுவில், கிறிஸ்தவர்கள் அனேகர் வாழும் கிராமம். அழகான தோற்றமுள்ளவன் மணியம். பெண்கள் விரும்பும் திடகாத்திரமான சிவந்த உடல், கழுத்தில் ஐந்து பவுனில் தங்கச்சங்கிலி, ஒரு கையில் தங்க கைச்சங்கிலி, சீக்கா கைக்கடிகாரம், விரல்களில் இரண்டு மோதிரங்கள். பெண்ணாசை, பொன்னாசை, பூமி ஆசை கொண்டவன் மணியம். தகப்பன் விட்டுச் சென்ற நிலம் போதாதென்று இன்னும் சொத்துச் சேர்ப்பதில் இருந்த ஆசை அவனை விடவில்லை. வொயில் சேர்ட் அணிந்து அதனூடாகத் தங்கச் சங்கிலி தெரிய வலம் வரும் தோரணையால் தான் உடுவிலில் ஒரு மைனர் என்பதை காட்டிக்கொள்வான். கிராமமே அவனுக்குப் பயம். சுருட்டு பெக்டரி வைத்திருந்த லிங்கம் சகோதரர்கள் இருவரையும் திட்டமிட்டுக் கொலை செய்து சட்டத்தின் பிடியிலிருந்து தப்பித்துக் கொண்டான் மணியம். காரணம் லிங்கம் சகோதரர்கள் தங்களின் ஒரே சகோதரி சாந்தாவை மணியத்துக்கு திருமணம் செய்து வைக்க மறுப்புத் தெரிவித்ததே. மணியத்தின் குணம் அறிந்ததினால் அவனைத் தன் மைத்துனனாக்க அவர்கள் விரும்பவில்லை.

திட்டமிட்ட இரு படுகொலைகளையும் தன் நண்பன் பஞ்சிக்காவத்தை புஞ்சி பெரெராவின் உதவியோடு செய்தான். கிராமத்தில் ஒருவரும் சாட்சி; சொல்ல முன்வரவில்லை.

படிப்பில் மணியத்துக்கு அவ்வளவு அக்கரை இருக்கவில்லை. பள்ளிக்கூடத்தில் இருந்து அரைப்படிப்போடு வீட்டை விட்டு ஓடிப்போனவன் மணியம்;. எட்டாம் வகுப்பையும் முடிக்கவில்லை. பெற்றோருக்கு பயந்து, கள்ளத் திறப்பு போட்டு, அலுமாரியில் இருந்து, இரு நூறு ரூபாய் பணத்தைத் திருடிக்கொண்டு இரவோடு இரவாய் வீட்டை விட்டு ஓடிப்போனான். அவனுக்குத் தெரிந்த கொழும்புக்கு மரக்கறி ஏற்றிச் செல்லும் லொறி ஒன்று தப்பிப் போக உதவியது. லொறி டிரைவர் முருகையன,; தனக்குத் தெரிந்த வெங்காயம், உருளைக்கிழங்கு, மிளகாய் விற்கும் ஒரு புறக்கோட்டைத் தமிழ் வியாபாரியிடம் நாட்டாண்மையாக வேலையில் மணியத்தைச் சேர்த்தான்.

வேலை கடுமையானது என்பது நாள் போகப்போக மணியத்துக்குத் தெரிந்;தது. ஒருநாளைக்கு சுமார் இருநூறு மூட்டைகளை வண்டியில் ஏற்றி இறக்க வேண்டும். நாளுக்கு நூறு ரூபாயும், இரவுச்சாப்பாடும், தங்க இடமும் முதலாளி கொடுத்தார். அவனுக்கு அது போதவில்லை. தெரிந்த ஒரு சிங்கள நண்பனின் உதவியோடு தெமட்டகொடை இரத்திநாயக்கா மோட்டார் உரிதி பாகங்கள் விற்கும் கடையில் வேலைக்குச் சேர்ந்தான். கடைக்கு அவன் தான் காவல். சாமான்களை விநியோகம் செய்வதும் அவனே. அதோடு அரசியலில் ஈடுபட்ட இரத்திநாயக்காவுக்குப் பாதுகாப்பும் கொடுத்தான். ஆசை அதிகரித்து. ஒரு நாள் கடையில் களவெடுத்த பணத்தோடு திரும்பவும் ஊருக்கு மணியம் திரும்பினான். கொழும்பு வாழ்க்கையின் போது, அவனுக்கு மருதானை சண்டியன் பஞ்சிக்காவத்தை புஞ்சி பெரேராவின் சினேகிதம் கிட்டியது. அதுவே லிங்கம் சகோதரர்களின் கொலையைச் செய்யத் தூண்டியது.

சுண்ணாகம் சந்தையில் வியாபாரம் செய்வோர் அனேகர் மணியத்துக்கு கப்பம் கொடுத்தாகவேண்டும். வயது வந்த மீன் விற்கும் செல்லாச்சியும், தேவியும் அதற்கு விதிவிலக்கல்ல. கப்பம் வாங்கிக் கணக்குக் காட்டுவது மணியத்தின் நண்பன் மார்க்கண்டின் பொறுப்பு. அவனும் மணியத்தோடு ஒன்றாகப் படித்து, பாதியில் படிப்பிற்கு முழுக்குப் போட்டவன். குணம் குணத்தை நாடும் என்பது உண்மை.

சுண்ணாகம் சந்தைக்கு அருகே உள்ள புது சாப்பாட்டுக்கடை ஆனந்தபகவான். சுவையான சாப்பாடு. பலர் பாராட்டும்படியாக இருந்தது. சனத்துக்கு குறைவில்லை. ஆனந்தபகவானின் உழுந்து வடை, சூசியம், கடலைக்கு தனி மதிப்பு. கல்லாப்பெட்டியில் முதலாளியும், மகனும் சில சமையங்களில் முதலாளியின் மைத்துனனும் மாறி மாறி இருப்பார்கள்.

அன்று கடைக்கு வந்து கப்பம் கேட்டான் மார்க்கண்டு. கேட்ட பணம் இரு நூறு ரூபாய்.

பணம் கொடுக்க காசியர் மறுத்துவிட்டான்.

“எங்கே முதலாளி. ஆளைக்கூப்பிடு” அதட்டிக் கேட்டான் மார்க்கண்டு.

பிரச்சனையை பெரிதாக்க மார்க்கண்டு தயங்க மாட்டான் என்று காசியருக்குத் தெரியும்.

“தம்பி நீர் கடைக்கு புதிதோ?. ஏன் பிரச்சனையை வளர்க்கிறீர். பேசாமல் காசைத் தாரும். நான் காஸ் மணியத்தின் கையாள் தெரியுமே?”

“முதலாளியின் அனுமதியில்லாமல் காசு தரமுடியாது. அவர் குசினியில வேலையாக இருக்கிறார்” பதில் சொன்னான் காசியர். கல்லா பெட்டி நிறைய பணம் சேர்ந்திருப்பதை கவனித்தான் மார்க்கண்டு.

“கப்பப் பணத்தை தாரும். அல்லது பிரச்சனை வளரும்” மார்க்கண்டு விடவில்லை. அவன் பார்வை கல்லாப்பெட்டியிலிருந்தது.

“பணம் தரமுடியாது. செய்வதை செய்யும். பல வருஷங்கள் நான் கடையிலிருந்தவன். போலீசைக் கூப்பிடுவன். சார்ஜன்ட் செல்லையா என் கிட்டத்து உறவினர்.” பயமுறுத்தினான் காசியர். கலவரப் படுவதைக் கேட்டு முதலாளி கல்லாப்பெட்டிக்கு வந்தார்.

“முதலாளி!…. பிரச்சனைப் படுத்தாமல் கப்பப்பணத்தை கொடுக்கச் சொல்லுங்கோ… மணியண்ணைக்கு நான் பதில் சொல்லியாக வேண்டும்.” மார்க்கண்டு விடவில்லை.

“போய் மணியத்துக்கு சொல்லு… கப்பம் தரமுடியாதுதென்று” கடை முதலாளி செல்வம் அதட்டிச் சொன்னான். பல இடங்களில் கடை வைத்து அனுபவப்பட்டவன் செல்வம்.

“நடக்கப்போவதை இருந்து பாரும்.” மார்க்கண்டு எச்சரித்து விட்டு போய் விட்டான்.

*******

சம்பவம் நடந்த ஒரு மணித்தியாளத்தில், மணியத்தின் நான்கு பேர் கொண்ட குழு கடைக்குள் புகுந்து எல்லாவற்றையும் தரைமட்டமாக்கினார்கள். காசியருக்கு தலையில் பலத்த காயம். இரத்தம் கொட்ட ஆஸ்பத்திரிக்கு கூட்டிச் சென்றனர். கல்லாப்பெட்டியில் இருந்த முழுப்பணமும் மறைந்தது. பொலீஸ் வந்தும் ஒன்றும் செய்ய முடியவில்லை. வந்திருந்தோர் வாய் திறக்காமல் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தனர். அவ்வளவுக்கு மணியத்துக்கு பயம்.

கடைச்சம்பவம் நடந்த போது செல்வத்தின் பதினான்கு வயது மகன் சுந்தரம் கவனித்துக் கொண்டிருந்தான். “அப்பா உவருக்கு பொலீசில் சொல்லி நல்ல பாடம் புகட்டுங்கோ. அப்பத்தான் விளங்கும் “என்று தகப்பனைத் தூண்டிவிட்டான். மார்க்கண்டு, செல்வத்தின்; மகன் சொன்னதை அப்படியே போய் மணியத்துக்கு முறையிட்டான்.

சம்பவம் நடந்து ஒரு கிழமையாயிற்று. ஓரு நாள் மாலை பள்ளிக்கூடத்தில் கிரிக்கட் விளையாடி விட்டு, ஆறு மணியளவில் வீட்டுக்குப் புத்தகங்களும் கையுமாகச் சுந்தரம் திரும்பிக் கொண்டிருந்தான்.. வீட்டுக்கு விரைவாகப் போகக் குறுக்கு வழியில் அவன் போவது வழக்கம். பயமில்லாதவன். போவான். செடிகளும் , புளிய மரங்களும் நிறைந்த தனிமையான பகுதி அது. புளிய மரங்களைப் பற்றி பல கதைகளுண்டு. மணியத்தால் கற்பழிக்கப்பட்ட ஆசிரியை ஒருத்தி அந்த புளியமரங்களில் ஒன்றில் தான் தூக்குப் போட்டு தற்கொலை செய்ததாகவும், அவளின் ஆவி அங்கு உலாவுவதாகவும் ஊர்ச் சனம் வதந்தியை கிழப்பினார்கள். புளியமரத்தை நெருங்கி சுந்தரம் வரும் போது மரத்துக்கு கீழை சுந்தரம் வருவதை கவனித்துக் கொண்டிருந்தான் மணியம். சுந்தரம் தைரியமாக விடு விடென்று நடையைத் தொடர்ந்;தான்.

“டேய் வடுவாப்பயலே!.. ஏங்கேடா போறாய்? அண்டைக்கு கடையிலை என்னடா சொன்னனி? ஓங்கி சுந்தரத்தின் முகத்தில் மணியம் அறைந்தான். கையில் வைத்திருந்த பொல்லினால் ஓங்கி அடித்தான். சுந்தரம் நிலை தடுமாறிப் போனான் கையில் வைத்திருந்த புத்தகங்கள் நிலத்தில் சிதறின. மணியம் சுந்தரத்தைப் பார்த்து கெக்கட்டம் விட்டு சிரித்தான். “பொலீசில் போய் சொல்லப் போகிறியோ? போய் சொல்லு” மணியம் சுந்தரத்தை பயமுறுத்தினான்.

சுந்தரத்துக்கு கோபம் கோபமாய் வந்தது. சுற்றும் முற்றும் பார்த்தான். அவன் உதவிக்கு ஒரு கூர்மையான பெரும் கருங்கல் இருந்தது. அதோடு சில கற்கள் வேறு. உடனே அப்பெரிய கல்லை எடுத்த மணியத்தை நோக்கி குறி வைத்து எறிந்தான். கிரிக்கட்டில் குறியாக பந்து வீசுவதில் சுந்தரம் கெட்டிக்காரன். அவன் வைத்த குறி மணியத்தின் நெற்றி பொட்டை நேரடியாக தாக்கியது. அவன்; கையில் இருந்த பொல்லு கீழே விழுந்தது. அதிர்ச்சியில் மணியம் கீழே சாய்ந்தான். சுந்தரம் நேரத்தை வீணாக்காமல் பொல்லை எடுத்து மணியத்தை தாக்கினான். கீழே கிடந்த மணியத்திடம் “இருந்து ஐயோ அம்மா என்னை அடியாதே” ஓலம் கேட்டது. சுந்தரம் தொடர்ந்து அடித்தான் மணியம் மூர்ச்சித்து போகும்மட்டும். நடந்ததை கவனிக்க அங்கு ஒருவரும் இருக்கவில்லை. விரைவாகப் புத்தகங்களை சேகரித்துக் கொண்டு, மணியத்தை அடித்த பொல்லை பற்றைக்குள் வீசிவிட்டுத், திரும்பி பார்க்காமல் வீட்டை நோக்கி ஓடினான் சுந்தரம். அந்த மாலை நேரம் அப் பகுதியில் சனத்தின் போக்கு வரத்து மிகக் குறைவு.

******

களைத்துப் போய் வீடு திரும்பிய சுந்தரத்தைப் பார்த்த செல்வத்துக்கு ஏதோ நடக்கக் கூடாத ஒரு விஷயம் நடந்தது போல் தெரிந்தது. மகனை அறைக்குள் அழைத்து நடந்ததைக் கேட்டான். சுந்தரம் முதலில் நடந்ததைச் சொல்லத் தயங்கினான் பின் தகப்பனின் வற்புறுத்தலில் நடந்ததைச் சொன்னான். செல்வம் ஒன்றுமே பேசவில்லை. “சரி!.. நீ போய் முகத்தைக் கழுவிப் போட்டு, சாமியைக் கும்பிட்டிட்டுப் போட்டு போய் படி. இதைப்பற்றி ஒருவரோடும் எதுவும் பேசாதே என்ன?

அடுத்தநாள் மணியம் புளியமரத்துக்குக் கீழ் அடிபட்டு இறந்து கிடந்ததையிட்டு பலவித வதந்திகள். “மணியத்துக்கு காஸ் போய் விட்டது” என்றார் நக்கல் நடராஜா கிழவன். “புளியமரத்து மோகினி, மணியம் செய்த கொலைக்கு பழிவாங்கி விட்டாள். இனி ஒருவரும் புளியமரத்தடிக்குப் போகமாட்டினம்.” என்றார் இன்னொருவர். மார்க்கண்டு ஒரே அழுகை. “இனி யார் ஊருக்குத் தலைவன்? “ என கவலை பட்டான்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *