கரையொதுங்கும் முதலைகள்…

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: March 20, 2014
பார்வையிட்டோர்: 6,129 
 

அன்று ஒரு ஞாயிற்றுக்கிழமை.

திருகோணமலை இறங்குதுறையிலிருந்து மூதூர் செல்லும் கப்பல் புறப்படுவதற்கு இன்னும் சில நிமிடங்களே இருந்தன.

இரண்டு மூன்று வாரங்களாக இடைவிடாது பொழிந்து தீர்த்த வானத்தில் சோகைச் சூரியன் தெரிந்தான். மழைவெள்ளம் தேங்கி மூதூருக்குச் செல்லும் தரைவழிப்பாதை தடைப்பட்டிருந்ததால் வழமையைவிட பயணிகள் கூட்டம் அதிகமாக இருந்தது. ஊருக்குச் சென்று சேர்ந்துவிடவேண்டும் என்ற முனைப்பிலே வெகுநேரமாய் வரிசையில் முண்டியடித்துக் காத்திருந்த பயணிகளின் பதைபதைப்பை ஊர்பார்க்க வந்திருந்த உல்லாசப் பயணிகள் வேடிக்கை பார்த்துக்கொண்டு நின்றிருந்தார்கள்.

சிவப்பு, மஞ்சள், இளநீலம், பச்சை வண்ண நவீன ரக ஆடைகளுடன் பளீரிடும் குளிர்க்கண்ணாடியணிந்த இளம் யுவதிகள்.. தொப்பிகளைப் பின்புறமாகத் திருப்பியணிந்தபடி செல்போனில் துள்ளிசைகேட்கும் சாயம்போன ஜீன்ஸ் டீ சேர்ட் விடலைப் பையன்கள்.. பொலித்தீன் பக்கற்றுக்களில் சிறையிருக்கும் கடலைகளை கழுத்திலே மாலையாய் அணிந்து பயணிகளுக்கிடையிலே சுற்றியலையும் கடலை வியாபாரிகள்.. ஓசையெழுப்பியவாறு அடிக்கடி வருவதும் போவதுமாய் இருக்கும் துறைமுகப் பொலீஸ் ஜீப் வண்டிகள்.. என்று அந்த இடமே பரபரப்பாக இருந்தது.

சற்று நேரத்தில் துறைமுகக் காவல் நிலையத்தின் பயணிகள் வழிக்கதவு திறக்கப்பட்டது. அதுவரை பொலீசாரின் அனுமதிக்காகக் காத்துக்கிடந்ததிலே எரிச்சலடைந்திருந்த மனிதப்பாம்பு கப்பல் இறங்கு தளத்தை நோக்கிச் சட்டென நகர்ந்தது. பயணிகள் யாவரும் ஏறிக்கொண்டதும் தளத்துடன் கட்டப்பட்டிருந்த பிணையல் கயிறுகள் கழற்றிக் கப்பலினுள்ளே வீசப்பட்டன. ‘ஙே…க்’ என்று ஒரு தடவை பிளிறிவிட்டு பின்புறமாய் அசைந்தது அந்த வெண்ணிறப் பிரமாண்டம்.

பயணச்சீட்டைப் பெற்றுக்கொண்ட அடுத்த கணமே ஏணியைப்பிடித்து கப்பலின் மேல்தளத்தின் பின்புற மொட்டைமாடிக்குச் சென்றுவிடுவது எனது வழமை. அது மழையோ வெய்யிலோ குடையைப் பிடித்துக்கொண்டாவது அந்த திறந்த தளத்தில் நின்றபடி பயணம் செய்தால்தான் திருப்தி எனக்கு. கஞ்சத்தனமின்றி வீசும் கடல்காற்றை நுகர்ந்தபடி இயற்கைத்தறைமுகத்தின் எழில் முழுவதையும் கண்களால் பருகியவாறு செல்லும் ரம்மியமான பயணம் அது.

கப்பலின் அடிப்புறமிருக்கும் நீர்ச்சுழலிகள் கோபத்துடன் துரத்திவிடும் உப்புநீர்க்கற்றைகளெல்லாம் கொதிக்கும் பாலாய் உருண்டு திரண்டு விரைந்தோடிச்சென்று சற்றுத்தூரத்திலே நீர்மேற்பரப்பிலே வரையும் கோலங்களை பார்த்துக்கொண்டிருக்கச் சலிப்பதேயில்லை எனக்கு. சிறிதுநேரம் பின்புறமாய் நகர்ந்து கொண்டிருந்த கப்பல் சட்டெனக்குலுங்கி சில வினாடிகள் யோசித்து விட்டு முன்னோக்கி வேகம் பிடித்தபோது,

‘எக்ஸ்க்யூஸ்மீ, நீங்க பைஸல் ஸேர்ட தம்பியா..?’

குரல் வந்த திசையில் இருபத்தைந்து வயது மதிக்கத்தக்க சற்று உயரமான இளைஞன் ஒருவன் நின்றிருந்தான். டீசேட் ஜீன்ஸில் மெல்லிய பிரேமுள்ள கண்ணாடியணிந்து மெல்லிய புன்சிரிப்புடன் மிடுக்காக நின்றிருந்த அவனது தோளிலே ஒரு பயணப்பையும் கைகளிலே சில ப்ளாஸ்டிக் பைல்களுமிருந்தன.

‘இல்ல நான் வந்து அவரோட மருமகன். நீங்க யாரு தம்பீ..?’

அவனை இதற்கு முன்பு எங்கோ பார்த்தது போலிருந்தது. இப்போதெல்லாம் தெரிந்தவர்களைக்கூட சட்டென்று அடையாளம் தெரிவதில்லை.

‘நான் சுரேஸ்.. சுரேஸ்குமார் உங்கட மாமா பைஸர் ஸேருகிட்ட ஸயன்ஸ் படிச்சனான். இப்ப கொழும்புல வேலைசெய்யிறன். நீங்க சரியா அவரு மாதிரியே இருக்கிறீங்க ..அதுதான்’ என்றான் புன்னகை மாறாமல்.

‘ஓ அப்பிடியா? இப்ப என்ன லீவுல ஊருக்கு வாறீங்களா?’

திடீரெனத் தன்னை அறிமுகப்படுத்திக்கொண்ட ஒரு புதியவனுடன் பேச்சை தொடர்வது எப்படி என்ற தடுமாற்றம் தீராமலே கேட்டேன்.

‘இல்ல வேலையாகத்தான் வந்தேன். அப்பிடியே ஊரையும் பார்த்திட்டு போகலாமென்று..’

கப்பல் வேகம் பிடித்து தூரத்தில் கம்பீரமாய் எழுந்து நிற்கும் ப்றீமா கோதுமை ஆலையை நெருங்கிக் கொண்டிருந்தது. சீனக்குடா விமானத்தளத்திலிருந்து உயரே எழுந்தது ஒரு பயிற்சி விமானம். அதன் இரைச்சல் குறைந்தவுடன், ‘நம்ம ஊர் நிலைமைகள் எப்படியிருக்கு இப்ப?’ என்று கேட்டான்.

அந்தக்கேள்விக்கு என்ன பதிலைச் சொல்வதென்று தெரியவில்லை. எந்தக்கோணத்திலே சொல்வதானாலும் முதலிலே அவன் யாரென்று சரியாகத் தெரிந்துகொள்ள வேண்டிய அவசியமிருந்தது எனக்கு.

‘தம்பீ, நீங்க இங்க யார்ட மகன்?’ என்று நான் கேட்டதும் அவன் என் மனதைப் படித்ததுபோல தனக்குள் சிரித்து, ‘ஏன் நான் யாரு எவருண்டு தெரிஞ்ச பிறகுதான் பதிலே சொல்வீங்களா. ஓகே சொல்றேன்’ என்றான். அவனது பதிலில் இருந்த ஏளனம் தீயாய்ச் சுட்டது.

‘இல்ல.. இப்பல்லாம் எதையுமே சொல்றதுக்கு முதல் கொஞ்சம் யோசிக்கத்தான் வேண்டியிருக்கு தம்பி.. அதுதான்’ என்று நான் மழுப்ப ஆரம்பிக்க அவனோ தூரக்கடலைப் பார்த்தவாறு சிறிது நேரம் அமைதியாக இருந்தான். எங்கள் தலைக்கு மேலாக இரு கடல் நாரைகள் கீச்சிட்டபடி பறந்துபோயின.

‘நான் என்ன சொல்ல வாறனென்டா..’ என்று நான் தொடங்கும்போதே அவன் குறுக்கிட்டு, ‘பரவாயில்லண்ணே நீங்க உண்மையத்தானே சொல்றீங்க. உண்மையச் சொல்றதுதான் இப்பல்லாம் ஆபத்தான வேலையே. இங்க உள்ளதை உள்ளபடி சொல்றவன்ட உயிருக்கும் இருப்புக்கும் உத்தரவாதமே இல்லாதபோது வேற என்னதான் செய்வீங்க..? சரி இனிமே நாமெல்லாம் வெறும் ஹலோ மட்டும் சொல்லிக்க வேண்டியதுதான்.. சரிதானே?;’

அவன் பேச்சிலிருந்த நையாண்டி இப்போது எனக்குப் பிடித்திருந்தது.

‘ஏன் இன்டைக்கு மழைவருமா வெய்யிலடிக்குமா இல்ல காத்து வீசுமா என்று கூடக் கேட்கலாம்’ என்றேன் அவனுடைய குறும்புக்கு ஈடு கொடுப்பதாக நினைத்துக்கொண்டு.

ஆனால் அதுதான் நான் செய்த முதல் தவறு.

‘ம்ம். அதுவுமில்லையென்றால் இருக்கவே இருக்கிறது கிரிக்கட், தமிழ் சினிமா! நமீதாவுக்கு எத்தனை மச்சம்.. சூர்யாவுக்கு எத்தனை லட்சம் என்றெல்லாம் பேசலாம் தொல்லையே இல்ல!’ அவனது சிரிப்பு எனக்கும் தொற்றிக்கொண்டது.

எங்களது சிரிப்பொலி கேட்டு மேல்தளத்திலே நின்றிருந்தவர்கள் ஒருதடவை திரும்பிப் பார்த்துவிட்டு மீண்டும் தொடுவானம் பார்த்தார்கள். எனது காலடியிலே உருண்டு வந்த பந்தொன்றைத் துரத்திக்கொண்டு ஓடி வந்தான் ஒரு சிறுவன். இதற்கிடையிலே கீழ்தளத்தலிருந்த சிற்றுண்டிச்சாலைக்குச் சென்று இரண்டு யோகட் கிண்ணங்களோடு திரும்பி வந்தான் சுரேஸ். அவற்றைச் சுவைத்தவாறே மேல்தளத்தில் கும்பலாகக் கூடிநின்று கூச்சலிட்டுக் குதூகலிக்கும் உல்லாசப் பயணிகளின் சந்தோஷத்தை இருவரும் வேடிக்கை பார்த்தோம்.

‘பாருங்க இந்த சனத்தை.. மழைகாலத்தையும் பார்க்காம இப்படி ஊர்பார்க்க வந்திடுதுகளே’ என்றேன் அவன் பேச ஆரம்பித்த விடயத்தை திசைமாற்றும் எண்ணத்துடன். ‘ம்ம். விடுங்கண்ணே அதுகளாவது கிடைச்ச சுதந்திரத்தை சந்தோஷமா அனுபவிக்கட்டும்.. ஒண்டு கவனிச்சீங்களா ஒரு கருத்தை வெளிப்படுத்திறதுக்கு இருக்கிற சுதந்திரத்தைக்கூட நாம சரியாகப் பயன்படுத்திறதேயில்ல தெரியுமா? இப்படி பயன்படுத்தாமலே போனா ஒருநாள் இருக்கிறதும் இல்லாமப் போயிடும் தெரியுமா?’

எனக்குத் திக்கென்றது.

‘தம்பீ நீங்க ஏதாவது பத்திரிகையிலயா வேலை செய்யுறீங்க?’

அவன் சட்டென யோகட் கப்புகளை அருகிலிருந்த பெட்டியின் மீது வைத்து விட்டு தனது இருகைகளையும் மார்புக்குக் குறுக்காக கைகளைக் கட்டிக் கொண்டான். என்னையே வைத்த கண்வாங்காமல் பார்த்தான். ‘இது என்ன முத்திரை குத்தல் அண்ண? பத்திரிகை ஆட்கள் மட்டுந்தான் இப்படியெல்லாம் பேசணுமா என்ன? என்னைப்போல சாதாரண குடிமகன்களெல்லாம் இதப் பத்தியெல்லாம் பேசக்கூடாதா?’

‘இல்ல தம்பீ, நீங்க சொல்றதெல்லாம் சரிதான். ஆனா இதெல்லாம் கருத்துக்களை கருத்துக்களால மட்டுமே எதிர்கொள்ளுகிற நாடுகளுக்குத்தான் சரிவருமில்லையா?’ என்று கூறிமுடிக்க அவன் வியந்துபோய், ‘அட அப்பிடி வாங்க வழிக்கு! இப்பதானே வாயையே சரியாத் திறந்திருக்கிறீங்க. உங்க பைஸர் ஸேர் எவ்வளவு பேசுவார் தெரியுமா?’

அவன் கூறியதைக்கேட்க எனக்குச் சற்றுப்பெருமையாகவும் கூச்சமாகவும் இருந்தது. கப்பல் இப்போது வெளித்துறைமுகத்துக்குள் வந்திருந்தது. கடற்படை படகு ஒன்று நீரைக்கிழித்தபடி கப்பலைத்தாண்டிச் செல்லவே எங்களருகிலே நின்றிருந்த உல்லாசப்பயணிகள் சந்தோசத்தில் அதைநோக்கிக் கூச்சலிட்டுக் கையசைத்தனர்.

‘சரி இப்ப சொல்லுங்க. எப்படி இருக்குது நம்ம ஊர்நிலைமைகள்?’ அவன் விடுவதாக இல்லை.

‘என்னத்தச் சொல்றது. இரண்டு மாதமா மழை விடாமப் பெய்து வயலும் தொழிலும் அழிஞ்சுபோய்க் கிடக்கு. ஏற்கனவே எத்தனையோ அழிவுகளைப் பார்த்த நம்ம சனத்தை இப்ப இந்த மழையும் வெள்ளமும் சேர்ந்து கஷ்டம் குடுக்குது. டீவியை ரேடியோவைத் திறந்தா மழையையும் நிவாரண உதவியையுந்தான் சொல்லிட்டு இருக்கிறான்கள். ஆனா மழை மட்டும்தான் தவறாம வருது. இதுதான் இப்ப ஊர்நிலைமை.

‘அப்படியா..? இதையெல்லாம் யாரும் கவனிக்கிறதில்லையா?’

‘இப்பதான் வெள்ளம் வடிஞ்சு சனங்கள் கரையேறுது. அதுக்குள்ள திரும்பவும் மழைவந்து நாசமாக்கிட்டிருக்கு. திரும்பவும் வெள்ளம் போட்டால் பழையபடி அகதி வாழ்க்கை.. அரச நிவாரணம்.. அதிலே புதுமோசடிகள் என்று போகப்போகுது ஊர்ப்பாடு’

‘இதெல்லாம் இன்னமும் முடியல்லையா..? எத்தனை அழிவுகள் வந்தாலும் ஒவ்வொருமுறையும் உண்மையாப் பாதிக்கப்பட்டவனுக்கு எதுவுமே கிடைக்கிறதில்ல.. இது மாறவே மாறாதா?’

‘எப்படி மாறும்? உண்மையாப் பாதிக்கப்பட்டவனை ஏமாத்தி ஏறிமிதிச்சிப்போட்டு வசதியுள்ளவனெல்லாம் பின்கதவால வந்து எடுத்திட்டுப் போறானே.. எத்தனை முறை பார்த்தாச்சு இதெல்லாம் புதுசா என்ன?’ என்றேன் சலிப்பு மேலிட.

சீராகச் சென்று கொண்டிருந்த கப்பல் இப்போது சற்று ஆடத்தொடங்கிவிட்டிருந்தது. அந்த ஆட்டமே அது ஆபத்தான பாதாளமலைப் பகுதியைக் கடந்து செல்கின்றது என்பதைத் தெரிவித்தது. கப்பலின் ஆட்டம் அதிகரிக்க அதிகரிக்க அதுவரை கூச்சலும் கும்மாளமுமாக இருந்த உல்லாசப்பயணிகள் பயத்திலே அடங்கிப்போயினர். என்னைப்போன்ற தினசரிப் பயணிகளுக்கு அவர்களது மிரட்சியைக் காண வேடிக்கையாக இருந்தது.

‘அண்ண, நானும் கேக்கணும் கேக்கணுமென்டு நினைச்சேன். ஒரு குளம்போல கடல் அமைதியாயிருக்கிற காலத்தில கூட இந்தப் பாதாளமலையடியில மட்டும் ஏன் இப்பிடி ஆட்டுது?’

‘ஆட்டம் இல்லாத கடல் பயணமும் மோசடியில்லாத அரச நிவாரணப்பணிகளும் சுவாரஸ்யமாகவா இருக்கும்? அதனால்தான் போல..’

‘ஆகா! இது நல்லாயிருக்கே. நீங்க கதை கவிதை எழுதிற ஆள்போல.. உங்க மாமா பைஸர் ஸேரும் இதேபோலத்தான் கதைப்பார். கேட்டுட்டே இருக்கலாம்’ என்றான் அவன்.

‘எப்ப தம்பி அவருக்கிட்ட படிச்சனீங்க?’

‘ஓ.. அதுவா? நான் ஓஎல் எடுக்கிற நேரத்தில. பைசர் ஸேர் எங்க அப்பாட கூட்டாளிதானே. அதால அப்பாக்கிட்ட பேசிட்டிருக்கிறதுக்காக எங்கட வீட்டுக்கு அடிக்கடி வருவார். அந்த நேரம்தான் படிப்பிச்சுத் தந்தவர். அவருக்கிட்ட படிச்ச பிறகுதான் எனக்கு விஞ்ஞானம் என்டாலே என்னவென்று விளங்கிச்சு. காசே வாங்க மாட்டாரு. எங்கட வீட்டுப் பிலாச்சுளைகள்தான் அவருக்கு டியூசன் பீஸ் என்று அப்பா நக்கலடிப்பாரு’

‘அப்பிடியா உங்கட வீடு எங்க இருக்கு.. சேர்ச் ரோட்லயா?’

‘இல்லண்ண ஆஸ்பத்திரிக்குப் பின்னால.. மோர்ச்சுவரிக்குப் பின்வளவுதான் எங்கட வீடும் தோட்டமும். நான் ஓஎல் சயன்ஸ்ல ஏ எடுத்ததுக்கு அவருதான் காரணம். ஏஎல் படிக்கிறதுக்கும் கொஞ்சம் ஹெல்ப் பண்ணியிருக்கிறாரு. படிப்பிச்சு முடிஞ்சாப்போதும் அரசியல், உலகப்புதினங்களை பத்தியேதான் பேசிட்டிருப்பாரு. எல்லாத்திலயும் வித்தியாசமான பார்வையுள்ள கெட்டிக்கார ஆள் அவர். எங்கட அப்பாவுக்கு பைசர் ஸேரெண்டா உயிர்தான்!’

சிறிதுநேரம் இருவரும் பேசிக்கொள்ளாமல் தனித்தனியே அவரவர் சிந்தனைகளிலே ஆழ்ந்திருந்தோம்.

கப்பல் பாதாள மலையைத் தாண்டியிருந்தது. கிழக்குப்புறமாக வெகுதூரத்தில் தெரிந்த தொடுவானம் சூரியனின் கதிர்களை வாங்கிப் பளபளத்துக் கொண்டிருக்க சுரேஸ் யாருக்கோ செல்போனில் பேசிக்கொண்டிருந்தான். கடலில் அங்கங்கே சிறுமீன்பிடி வள்ளங்கள் தெரிந்தன.

‘சரி இந்த வெள்ளநிவாரண வேலைகளெல்லாம் எப்பிடி நடக்குது. உதவிகளெல்லாம் பாதிக்கப்பட்ட சனத்துக்குத்தான் போகுதா இல்ல இதுவும் சுனாமில மாதிரித்தானா?’ செல்போனை அணைத்துவிட்டுக் கேட்டான் சுரேஸ்.

நான் பதிலேதும் கூறவில்லை.bt1

வெகுதூரத்தில் பெரிய மீன் ஒன்று துள்ளிக்குதித்துக் காற்றில் உயர்ந்த பின்பு மீண்டும் கடலுக்குள் விழுந்தோடியது.

‘என்ன அண்ண, இன்னமும் என்மேல நம்பிக்கை வரல்லியா உங்களுக்கு?

‘அப்படியில்ல தம்பி, இதுகளைப்பத்திப் பேசுறதுக்கே வெறுப்பாக் கிடக்கு. எவ்வளவு காலம் போனாலும் எத்தனை ஆட்சி மாறினாலும் எவ்வளவு கடுமையான சட்டத்தைப் போட்டாலும் இந்த ஊழல் மேசடிகளெதுவும் குறைஞ்ச பாடில்லையே…?’

‘அப்படியெண்டா இதையெல்லாம் தடுக்கிறதுக்கு இப்ப இருக்கிற நம்மட நீதியமைப்புகள் எதுவுமே சரிவராது என்றீங்களா அண்ண?’

புதுசா என்ன சட்டத்தைக் கொண்டு வந்தாலும் அதில உள்ள ஓட்டைகளையெல்லாம் கண்டுபுடிச்சிடுறாங்களே. அவ்வளவு அனுபவமுள்ள பழம் பெருச்சாளிகள் இவங்க’

‘அப்படியெண்டா நேர்மையானவங்க என்டு இங்க யாருமே இல்லியா?’

‘இருப்பாங்க.. யாராவது ஒன்றிரண்டு பிழைக்கத் தெரியாததுகள் என்று பெயரெடுத்ததுகள் இல்லாமலா இருக்குங்கள்..? ஆனா மொத்த அமைப்புமே ஒருவிதமாய் இயங்கும்போது அந்த ஒன்றிரண்டு பேரால மட்டும் என்னதான் செய்ய ஏலும்?’

‘விளங்குது..விளங்குது! அதாவது நிர்வாணதாரிகள்ற ஊர்ல கோவணங்கட்டியிருக்கிறன்ட நிலைமைதானென்டுதானே சொல்ல வாறீங்க?’ என்று நான் சொல்ல வந்த விடயத்தின் சாரத்தை தனது வார்த்தைகளிலே கூறிமுடித்துவிட்டு என்னையே வைத்த கண்வாங்காமல் பார்த்துக் கொண்டிருந்தான். அவனது முகத்திலே தீவிரமான சிந்தனை இரேகைள் இழையோடின.

‘ஓகே ஒத்துக்கிறேன். ஆனா இப்பிடிப் பொதுமக்கள்ற காசுபணத்தை மோசடி செய்தவங்க அநியாயமாச் சேர்த்து வைத்த சொத்தையெல்லாம் சும்மா வச்சிட்டிருக்கேலாதே அண்ண?’

‘என்ன சொல்ல வாறீங்க.. விளங்கயில்லியே தம்பி?’

‘இல்ல.. ஒரு அரசாங்க உத்தியோகத்தருக்கு வருமானம் எவ்வளவு இருக்குமெண்டு ஊர்ல உள்ளவங்களுக்கு தெரிஞ்சுதானே இருக்கும். அதை மிஞ்சி அவர் ஆடம்பரச் செலவு செய்தாலோ சொத்துகள் வாங்கிப்போட வெளிக்கிட்டாலோ ஊருல உள்ளவங்களுக்கு சந்தேகம் வராமலா போகும்?’

‘அதுசரி நெருப்பிருந்தா புகையும்தானே?’

‘தட்ஸ் ரைட்! அப்பிடிப் புகையிறநேரம் சுத்தியிருக்கிற சமூகமே அவரைக் கேவலமா பேசாதா என்ன?’

‘சரி அப்படிப் பேசினா..?’

‘ஒரு முழுச்சமூகமுமே மோசடிக்காரர்களை வெறுத்து ஒதுக்கி வைச்சா அதைப்பார்த்து இனிமேல் புதிசா களவுமோசடி செய்ய நினைக்கிறவங்க கூட பயப்படுவாங்கதானே?’ என்றான் அப்பாவித்தனமாக.

எனக்குச் சிரிப்புப் பொத்துக்கொண்டு வந்தது என்றாலும் கஷ்டப்பட்டு அடக்கிக் கொண்டேன்.

சுனாமி அனர்த்தத்தின்போது குவிந்து கிடந்த பிணங்களையும் அழிந்து கிடந்த சொத்துக்களையும் பார்த்துக் கலங்கிப்போய் ‘பற்றில்லாமைத் தத்துவம்’ பேசித்திரிந்த உள்ளுர் மனிதர்களையெல்லாம் ஒருமுறை நினைத்துப் பார்த்தேன். அன்று சுடுகாட்டுத் தத்துவங்கள் பேசிய சாமானியர்களிலே பலர் அரச நிவாரண சேவையில் இணைந்து பணியாற்றியதன் பிற்பாடு இப்போது பெரும்புள்ளிகளாகிவிட்ட மாயங்களையும் புனிதயாத்திரை கடமையாகுமளவுக்கு வீங்கிப்பெருத்த ஜாலங்களையும் மனதிற்குள் ஒருமுறை ஓட்டிப்பார்த்துக் கொண்டேன்.

அப்போது வானிலிருந்து மீண்டும் ஒன்றிரண்டு மழைத்துளிகள் விழத்தொடங்கின.

என் மனதிலே விரிந்து மறைந்த அந்தக் காட்சிகளை சுரேஷிடம் விபரித்தபோது அவன் அமைதியாகக் கேட்டுக்கொண்டிருந்தான். அவனது முகபாவத்தை வைத்தே இன்னும் சிறிது நேரத்தில் அவன் கேட்கவிருந்த அடுத்த கேள்வியை யூகித்து வைத்தேன். அதாவது நேர்மையாக உழைத்த பணத்தில் அல்லாமல் ஏழைமக்களின் வயிற்றிலடித்த பணத்தைக் கொண்டு புனிதயாத்திரைகள் பூஜை புனஸ்காரங்கள் செய்தால் அதை நமது கடவுளர்கள் ஏற்றுக்கொள்வார்களா என்பதுதான் அந்த உத்தேச வினா. அதை அவன் கேட்டால் மௌனத்தைத் தவிர என்னிடம் வேறு பதில் இருக்கப்போகின்றது. மனிதர்களைத்தான் தயக்கமின்றி ஏமாற்றுகின்றார்கள் என்றால் தாங்கள் நம்புகின்ற ஆதர்ச சக்திகளையும் ஏமாற்றிப்பிழைக்கலாம் என்ற துணிவு இவர்களுக்கெல்லாம் எப்படி வருகின்றது. ஒருவேளை..

‘என்ன திரும்பவும் ஊமையாயிட்டீங்க போல’ என்று அவன் கேட்டதற்குப் பதிலாக சற்று முன்னர் நான் நினைத்ததைக் கூறினேன்.

‘இவங்களெல்லாம் தங்கட களவு கொள்ளைகளுக்கு அந்த சக்திகளையும் பார்ட்னராக்கிக் கொள்ளுறாங்க தெரியுமா?’

‘என்னது.. கடவுள்களையும் பார்ட்னராக்கிறாங்களா.. இதென்ன புதுக்கதை?’

‘இல்லயில்ல நான் கடவுள்களைக் குறை சொல்லயில்ல. ஆனா கடவுள் பற்றிய நம்பிக்கைகளால கூட இந்தப் பகல் கொள்ளையர்களை அவங்களது பாவச்செயல்கள்ல இந்து காப்பாற்ற முடியல்ல பாத்தீங்களா அண்ண?’

அவன் சொல்வது உண்மைதான். எனக்குத் தெரிந்தளவிலே இப்படியான மனிதர்களிலே எத்தனையோபேர் சிறந்த ஆன்மீக நம்பிக்கையும் வெளிப்படையான பேணுதலும் உள்ளவர்கள்தான். இந்த ஆசாடபூதிகள் தவறான செயல்களிலே தெரிந்து கொண்டே ஈடுபடுகையில் எப்படித்தான் தத்தமது கடவுள்களின் பார்வையிலிருந்து தம்மை மறைத்துக் கொள்கின்றார்களோ.. ஒருவேளை அரசாங்க சொத்துகளைத் திருடுவதெல்லாம் கடவுளர்களின் ஆளுகைக்குள் வருவதில்லையோ என்னவோ?

‘என்னமோ தம்பி, இந்த நேர்மை நியாயமெல்லாம் தொலைஞ்சுபோய் மிச்சம் காலமாயிட்டுது. ஒருவன் தனக்கு மேல இருக்கிறதா நம்புகிற சக்தியை அல்லது மனச்சாட்சியை மதிச்சு நடந்தாலே போதும். இப்பிடியான அசிங்கமான வழியில சம்பாதிக்க நினைக்கவும் மாட்டான் அந்தக் காசில கடவுளுக்குச் சேவை செய்யத் துணியவும் மாட்டான். அவ்வளவுதான் நான் சொல்லுவேன்.’ என்றேன் கோபத்தோடு.

‘அட அப்பிடியெல்லாம் மனசை ஒரேயடியா விட்டுராதீங்கண்ண. கடவுளுக்கும் மனசாட்சிக்கும் பயந்து உண்மைக்குண்மையா வாழுற நேர்மையானவங்களும் நம்ம இடத்தில இருக்கத்தான் செய்யுறாங்க’

‘எங்க தம்பீ, உண்மை நேர்மையெல்லாம் அண்டண்டைக்குக் கஷ்டப்பட்டுச் சம்பாதிக்கிற அடித்தட்டுச் சனங்களுக்கிட்டத்தான் இருக்கும். அதுகூட அந்தச் சனங்கள்ல இருந்து யாராவது ஒருவன் கொஞ்சம் உருப்பட்டு மேல வந்திட்டானென்டா அவனும் மாறிப்போயிடுவான். அவனேதான் விரும்பினாலும்கூட நேர்மையா வாழவே இயலாது. வாழவும் விடமாட்டான்கள்’

‘அதெப்படி அவ்வளவு திட்டமாய்ச் சொல்றீங்க நீங்க?’

‘அதெல்லாம் ஒரு சங்கிலிக் கோர்வை தம்பி. அடிமட்ட ஊழியன் தனக்கு மேல இருக்கிற உத்தியோகத்தனை அனுசரித்தால்தான் வாழலாம். அந்த உத்தியோகத்தன் அவனுக்கு மேல இருக்கிற அதிகாரியைத் திருப்திப்படுத்தணும். அவனோ அதற்கடுத்ததாக மேல இருக்கிறவனை சமாளிச்சு நடக்கணும்… இப்படியே அடியில இருந்து உச்சி வரைக்கும் நெளிவுகள் சுளிவுகள் இருக்கிற நிலமையில எப்பிடித் தம்பி நேர்மையாக ஒருவனால இருக்க முடியும்? இதெல்லாம் ஒரு வகையான எழுதாத சட்டங்கள்டாப்பா’ என்றேன் அவனிடம் சற்றுக் காட்டமாக!

‘அப்படியெண்டா என்ன நடந்தாலும் நேர்மையாகத்தான் இருப்பேன் என்று விடாப்புடியா இருக்கிற ஒரு அரசாங்க ஊழியனாலயோ அதிகாரியாலயோ நீங்க சொல்லுற எழுதாச்சட்டத்துல இருந்து தப்பவே முடியாதா சொல்லுங்கண்ணே?’

‘ஓ முடியுமே! அதாவது இங்க சுத்தியிருக்கிற ஊழல்மோசடி முதலைகளெல்லாம் ஒண்ணு சேர்ந்து அந்த நேர்மையான ஆட்டுக்குட்டியைக் கடிச்சுக் குதறாம பேசாம விட்டு வச்சா… தாராளமா முடியுமே!’

என்று வாக்கியத்தை முடிப்பதற்கிடையிலே எனக்கு அடக்கவே முடியாத வெடிச்சிரிப்பு பொத்துக்கொண்டு வர சுற்றியுள்ள யாரையும் கவனிக்காமல் பெரிதாகச் சிரிக்கத் தொடங்கினேன்.

சிரிப்பென்றால் அப்படியொரு அட்டகாசச் சிரிப்பு அது!

கப்பலின் முன்தளத்தில் நின்று கொண்டிருந்த மாலுமியே கூட கண்ணாடி யன்னலை உயர்த்தி ஒருதடவை வேடிக்கை பார்த்துவிட்டு மீண்டும் கப்பலைச் செலுத்தினாரென்றால் அந்தச் சிரிப்பைப் பார்த்துக் கொள்ளுங்கள். இதைச் சற்றும் எதிர்பாராத சுரேஸ் வெட்கத்திலே அப்படியே கீழே உட்கார்ந்து விட்டான். அதற்குப் பிறகு வெகுநேரமாய் அவன் என்னோடு எதுவுமே பேசவேயில்லை.

‘ஙே….க்!’

கப்பல் தனது வேகத்தைக் குறைத்துக் கொண்டு பிளிறிய போதுதான் பேச்சு சுவாரஸ்யத்தில் நாங்கள் மூதூர் இறங்குதுறையை அண்மித்து விட்டதை கவனிக்கவில்லை என்பதையே உணர்ந்தோம்.

‘சுரேஸ் தம்பி, வாங்க கீழ இறங்கிப் போவோம். ஜெற்றி வந்திட்டுது. இங்க இருந்து எப்படிப் போகப்போறீங்க? சரி வாங்க கரையில என்ட மோட்டபைக் இருக்கு. ஹெல்மெட் ஒன்டு எடுத்தா…’

‘இல்ல நீங்க போங்கண்ண. கொழும்புலருந்து வந்த எங்கட டிப்பார்ட்மெண்ட் வாகனம் இங்க மூதூருலதான் ரெண்டு கிழமையா நிக்குது. ட்ரைவருக்குக் கோல் பண்ணியிருக்கிறேன். இப்ப வந்திடும். தேங்ஸ் அண்ண!’ என்றவாறு அவன் முன்னே நடக்கத் தொடங்கி விட்டான்.

கப்பல் இறங்கு துறைப்பாலத்தில் வந்து நின்றதும் இருவரும் இறங்கி பயணிகள் கூட்டத்திலே கரைந்தோம்.

மரப்பாலத்திலே எனக்குச் சற்று முன்னே குளிர்க் கண்ணாடியணிந்து கம்பீரமாக நடந்து சென்று கொண்டிருந்தான் சுரேஸ். கரையிலே அவன் இறங்கியதும் அவனை நோக்கி ஒருவன் ஓடிவந்து, ‘குட்மோர்ணிங் ஸேர்!’ என்று விட்டு மிகவும் பவ்யமாக அவனுடைய பைல்களையும் பேக்கையும் வாங்கிக்கொண்டு பின்னால் நடந்து வந்தான்.

மூதூர் ஜெற்றியிலிருந்த தேநீர்க்கடையொன்றின் பின்னாலிருந்து எனது பழைய மோட்டார் சைக்கிளைத் தள்ளிக்கொண்டு வீதிக்கு நான் ஏறியபோது ஒரு நவீனரக சொகுசு பஜீரோ ஜீப் நின்றிருந்ததைக் கண்டேன். அதை வியப்பாகப் பார்த்தபடி மோட்டார் சைக்கிளை உதைத்தபோது அதன் முன்னிருக்கையின் இடதுபுறமிருந்த கறுப்புக் கண்ணாடி தாழ்ந்ததும் சுரேஸ் வெளிப்பட்டான்.

‘அண்ணன் போய்ட்டு வாறேன்! பைஸல் ஸேர் இப்பவும் அதே இடத்துலதானே இருக்கிறார்? ஓகே பிறகு சந்திக்கிறேன். பை!’ என்றபடி அவன் விடைபெற்றுச் சீறிக்கிளம்பும்போதுதான் அந்த பஜிரோ வண்டியின் பின்புறக் கண்ணாடிக் கதவிலே, ‘இலஞ்ச ஒழிப்புத் திணைக்களம்’ என மூன்று மொழிகளிலும் எழுதியிருப்பதைப் பார்த்தேன்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *