வாக்கேயம்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: April 16, 2012
பார்வையிட்டோர்: 10,559 
 

பொழுது விடிந்தது யாம் செய்த தவத்தால், என்றபடியே கண் திறந்தார் கிட்ணாசாரி. உள்ளங்கைகளை பரபரவென்று தேய்த்து விட்டுப் பார்த்தார். வித்யாரேகை ஆட்காட்டி விரலில் ஏறி ஓடுவதைப் பார்த்தார். ஆயுள்ரேகையின் தீர்க்கமும், வித்யாரேகையின் அழுத்தமும் பார்த்து தனக்குத்தானே பெருமிதமாய் சிரித்துக் கொண்டார். கைரேகை ஜோசியம் அவருக்கு தெரியாது என்றாலும், இது போன்ற சில ரேகைகளை யாரோ சக பண்டிதர்கள் சொன்னதைக் கேட்டு அது தான் தன் ஆயுளையும் வித்தையையும் தீர்மானிக்கிறது என்பதை பழுதில்லாமல் நம்பிக் கொண்டிருக்கிறார்.

எது நடந்தாலும் அது தெய்வசங்கல்பத்திலும், கிரக நிலைகளினாலும், தனது வாய் சாமர்த்தியத்திலும் தான் என்று தீவிரமாக நம்புபவர் அவர். ஜோசியம் பார்க்கிறேன் என்று மஞ்சப்பையில் வாக்கேய பஞ்சாங்கத்தையும், திருக்கணித பஞ்சாங்கத்தையும் தூக்கிக் கொண்டு, பிழைக்கிறவருக்கு அந்த நம்பிக்கை கூட இருப்பதாக நம்பாவிட்டால் எப்படி? பல்லி விழும் பலனையும், மச்ச சாஸ்திரங்களையும் பெயரளவில் தெரிந்து கொண்டு, கொஞ்சம் மௌனத்தினாலும், விரல் கணக்குகளாலும், மோட்டு வளையைப் பார்ப்பதினாலும், தாடையைச் சொறிவதினாலும் அவரை நம்பி வரும் கூட்டங்கள் ஏமாந்துவிடத்தான் செய்கிறது. முன்வினை, பின்வினை, பக்க, துக்க வினைகள், முன் ஜென்ம, பின் ஜென்ம, கர்ம, யோக, சித்த, பித்த, திதி, சுக்ல, கிருஷ்ணபட்சம் என்று பெயரளவில் சரடு விடும் போது வாய் பிளந்து கேட்பவர்களின் வாயினுள் மட்டுமல்லாது, புத்தியிலும் புகுந்து புறப்பட்டுவர கை தேர்ந்தவர் இல்லை, சரியாய் சொன்னால், வாய் தேர்ந்தவர்.

கிட்ணாசாரியின் முழுப்பெயர் அல்லது நாமகரணப்பெயர் கிருஷ்ணமூர்த்தி என்பதாகும். கிருஷ்ணமூர்த்தி, கிஸ்ணா என்றாகி, திருமணமாகி நாலைந்து உருப்படிகளுக்கு தகப்பனாய் ஆனதும், கிட்ணாசாரி என்றாகிவிட்டார். இந்தப்பெயர் எப்போது மாற்றப்பட்டது, யார் மூலம் மாற்றப்பட்டது என்ற விபரங்கள் அறிந்தவராயில்லை அவர். கிட்ணாசாரி ஆன பிறகு அவரின் வாக்கு பலிதம் கண்டு, ஜோசியம் பார்க்க ஜாதக்கட்டுகளை, கட்டங்களை கொடுத்து அவர் வாய் மூகூர்த்தத்திற்காய் காத்திருப்பவர்கள், அனேகம் பேர். அதனால் அவரின் காலட்சேபத்தை கனஜோராய் நடத்தமுடிகிறது. கிட்ணாசாரியின் ஜென்மபூமி தாயில்பட்டி, வளர்ந்தது ஸ்ரீவில்லிபுத்தூர். கல்யாணம் கட்டிக் கொண்டது வத்றாப். பிழைப்பென்று ஒதுங்கியது மதுரை கோவாப்டெக்ஸ். ஒரு எழுபது கிலோமீட்டர் சுற்றளவில் தன் வாழ்க்கை சக்கரத்தை ஓட்டிக் கொண்டிருக்கிறார். அதுவும் எண்ணெய்க்கு குறைவில்லாமல், எந்த சத்தமும் இல்லாமல் ஓடிக்கொண்டிருக்கிறது இதுவரை.

இரண்டு பெண்களுக்கு திருமணம் முடித்து வைத்த பின்னர், பணியில் இருந்து விருப்பஓய்வு பெற்றுக்கொண்டார். இன்னும் பணியில் இருந்தால், இரண்டு வருடங்கள் இருக்கலாம், ஆனால், ஜாதகத்தில் இருந்த அவரின் ஈடுபாடு, வேலையை முழுக்குப் போட வைத்துவிட்டது. தன் பெரிய மகனை கோவாப்டெக்ஸ் நூல் குடோனில், வேலைக்கு சேர்த்து விட்டார். ஆரம்பத்தில் அவனை தற்காலப் பணியில் தான் சேர்க்க முடிந்தது. இரண்டே வருடத்தில், தனது வாக்கு சாதுரியத்தாலும், நீக்கு, போக்கினாலும், பியூசி மட்டுமே முடித்திருந்த அவனை நிரந்தரப்பணியில் சேர்த்துவிட்டார். அப்போதிருந்த கொள்முதல் மேலாளரின் செவ்வாய் தோஷப்பெண்ணுக்கு சரியான ஒரு வரனை பிடித்துக் கொடுத்ததில், தன் அவயத்தில் எல்லாம் குளிர்ந்து, ‘இந்தாப் பிடி!’ என்று அவரும் வரத்தைக் கொடுத்துவிட்டார். இப்போது அவனுக்கு கல்யாணமாகி குடித்தனம் என்றாகி, வம்சவிருட்சத்துக்கு தண்ணீர் வார்த்துக் கொண்டு இருக்கிறான்.

இரண்டாமவன் வக்கீலுக்கு படித்துக் கொண்டு இருக்கிறான். அவனுக்கு கிட்ணாசாரியைப் போலவே ஜோதிடக்கிறுக்கு பிடித்து கட்டம் கட்டமாய் போட்டுத் தள்ளுகிறான். எஞ்சீனியர் படிக்க வேண்டியவன் வக்கீலுக்கு படித்துக் கொண்டு இருக்கிறான் என்று தோன்றும் சில சமயம். அவன், தன் தகப்பனாரின் பாண்டித்யத்தின் மேலுள்ள அபரிமிதமான பக்தியில் ஜோதிடம் பற்றி தான் வாசித்ததைக் கேட்க, அதற்கு பதில் ஏதும் சொல்லத் தெரியாமல், “உன் பதிலை நீ தேடு!” என்று சாமர்த்தியமாய், ரொம்பவும் தத்வாசாரமாய் சொல்லி தப்பித்துக் கொள்வார். அவன் தானாய்த் தேடி தெரிந்து கொண்டதை, அவரிடம் வந்து சொல்லும் போது, வாயில் வெற்றிலையை அதக்கிக் கொண்டே எச்சில் வழிய ஏதோ சொல்லி, எல்லாந்தெரியும் ஏகாம்பரமாய் தன்னைக் காட்டிக் கொள்வார். இருவரும் ஞாயிறு மயக்க மதியத்தில், திண்ணையில் உட்கார்ந்து கொண்டு போவோர் வருவோரின், ராசி, நட்சத்திரங்களை ஆராய்ந்து கொண்டும், சித்திரகுப்தனின் பேரேடு போன்ற ஒன்றை வைத்துக் கொண்டு, கட்டம் போட்டுக் கொண்டிருப்பார்கள். அவர்கள் இருவரும் பேசுவதும், சிரிப்பதும், அவர்கள் ஏதோ ஆடுபுலி ஆட்டம் விளையாடுவது போல இருக்கும். வீட்டில் இருக்கும் மற்றவர்களுக்கு, அவர்களின் ஜோதிடக்கிறுக்கைப் பார்க்கும் போது எரிச்சலாய் வரும்.

‘என்னத்த அந்தானிக்க கணக்கப்போட்டு கீழிக்கீக ரெண்டு பேரும்! நீங்க ஜாதகம் பாத்து வச்ச பெரியவ கல்யாணந்தான் நட்டுக்கிட்டு நிக்கே படுக்க மாட்டாம!’ என்று சொல்லும் ராமதிலகத்துக்கு தன் கணவனின் ஜோசியத்திறமையின் மீது நம்பிக்கை இல்லை. அவர் வெறும் வாய்ச்சவடால் என்ற விஷயம் அவளுக்குத் தெரிந்ததே. அதிலும் பெரியவள் சங்கரகோமதியின் கணவன் இன்னொருத்தியை வைத்திருப்பது தெரிந்ததும், அவரின் மீது கொஞ்ச நஞ்சமாய் ஒட்டிக்கொண்டிருந்த நம்பிக்கையும் சுத்தமாய் உதிர்ந்து போய்விட்டது. இரண்டாமவனும் அவருடன் சேர்ந்து இந்த கோட்டித்தனம் செய்வது மிளகாயை அப்பியது போல இருக்கும் அவளுக்கு. காந்தல் அடங்கும் வரை எதையாவது கத்திவிட்டுப் போய் விடுவாள் எப்போதும்.

ராமதிலகம் சுதாரித்துக் கொண்டது இரண்டாம் மகளின் திருமணத்தின் போது தான் தெரிந்தது. ரொம்பவும் புத்திசாலித்தனமாய் இரண்டாவது பெண்ணின் திருமணப் பொருத்தத்தை, வெண்டர் ஐயரை வைத்து தான் பார்த்தாள். அவள் இப்போது சென்னையில் சுகவாசம் செய்கிறாள். வெண்டர் ஐயருக்கு இருக்கும் தீர்க்கதரிசனம் யாருக்கும் வராது. அவரின் அழுக்கு வேட்டியும், எப்போதுமே மழிக்காத கோரைத்தாடியும் அவருக்கு வருமானத்தடை தான் என்றாலும், அவருக்கு அது பற்றிய அக்கறை இருந்தது இல்லை. கொடுத்ததை வாங்கிக் கொள்வார், தானாக கொடுக்கவில்லை என்றாலும் கேட்கமாட்டார். கிட்ணாசாரி அப்படியில்லை, புதிதாய் வருபவர்கள் தட்டில் வெற்றிலை பாக்கு, பழங்களுடன் தட்சிணையையும், ஜாதகத்தையும் ஒன்றாக வைத்தால் தான் எடுப்பார். வரிசையில் காத்திருக்கும் அப்பாவிகளைத் தாண்டி ராமதிலகம் வெண்டர் ஐயரிடம் போவதை அவரால் ஜீரணிக்கமுடியவில்லை என்றாலும், அவருக்கு கேட்கத் துணிச்சலில்லை. வீசுன கையும் வெறுங்கையுமா இல்லாம, அவர் தேவைக்கு வீட்டில் பிடுங்காததால், ராமதிலகமும், அவரின் ஜோசியப்புரட்டுகளை கண்டு கொள்ளாமல் தான் இருக்கிறாள்.

கிட்ணாசாரி மாதிரி ஒருத்தர் உடுத்தமுடியாது. இருப்பது இரண்டு உருப்படிகளே என்றாலும் அப்பழுக்கில்லாத வெள்ளை ஜிப்பா, பொன்மினுக்கி பொத்தான்கள் வைத்து, அகலக்கரை வேட்டி கட்டி, தோளில் சுருக்கமில்லா, கோவாப்டெக்ஸ் வெள்ளைத்துண்டு, இஸ்திரி செய்தது போல மடித்து அதை போட்டிருக்கும் அழகும், காதில் மின்னும் வெள்ளைக்கல் பதித்த கடுக்கனும் (அவரின் அம்மா இறந்த போது அவளின் சேகரமாய் இருந்தது), நெற்றியில் ஒற்றையாய் இழுத்த திருச்சூர்ணமும் அவரை ‘ஜோதிட சாம்ராட்’ அல்லது ‘ஜோதிட திலகம்’ என்று யாராவது சொன்னால், கேட்கிற யாரையும் சந்தேகமில்லாமல் நம்பவைக்கும். அதிலும் அவர் தேர்ந்தெடுத்து பேசும் வார்த்தைகள், அவரின் குரல் ஜாலம், உடல் மொழி. அவர் பரிகாரமாய் எதைச் சொன்னாலும் கேட்பவர்கள் செய்துவிடுவார்கள். மங்கு சனி பொங்கு சனி ஆகும், ராகுவும் கேதுவும் பகை மறந்து நட்பு கிரகங்கள் ஆகிவிடுவார்கள்

இரண்டு விஷயங்களில் கிட்ணாசாரிக்கு சமரசமே இல்லை. ஒன்று உடை மற்றொன்று உணவு. வகை, வக்கணையாய் சப்புக் கொட்டி சாப்பிடுவதில் அவருக்கு இணை அவர் தான். வித விதமாய் உடுத்துவதிலும், விதவிதமாய் உண்பதிலும் அவருக்கு இருக்கும் ஆர்வம் சொல்லி மாளாது. அவருக்கு ரெண்டு நாக்கு என்று ராமதிலகம் சொல்வதுண்டு, ஒன்று பேச்சு சாதுர்யத்துக்கும், இன்னொன்று விதவிதமாய் தின்பதற்கும்.

ராமதிலகம் முன் போல சமைப்பதில்லை என்று அவருக்கு எப்போதும் தோன்றும். ஒருநாளும் அவள் சமையலில் குறை சொல்லாமல் சாப்பிடமாட்டார். அம்மா சமையலில் வளர்ந்திருக்கும் சுவை மொட்டுகள் மூலம் சொல்வார், அத்தனை சமையல் குறிப்புகளையும். ஜாதகம் பார்க்கிற இடங்களில், யார் சாப்பிடச் சொன்னாலும் சாப்பிட்டு விடுவார். அவரின் அம்மாவின் கையை யாராவது வைத்திருக்கிறார்களா என்று முகர்ந்து முகர்ந்தே நீளமாக மாறிவிட்டது அவருடைய மூக்கும். ஜாதகம் பார்க்கிற இடங்களில் சாப்பிடுவதற்கு அவர் கூச்சப்படுவதே இல்லை, அதற்கு அவர் சொல்லும் காரணம் விசேஷமானது.’ வயிறு நிறைஞ்சா தான், மனசு நிறையும். மனசு நிறைஞ்சா ஜாதகக்காரர்களின் பலனில் பிடிதம் ஏதும் இருக்காது’ என்று சொல்வார். கேட்கிறவர்கள் நம்புகிற மாதிரி சொல்வார், ராமதிலகம் மட்டும் எப்போதும் போல இதற்கு விலக்கு.

கிட்ணாசாரியின் மீது நிறைய பேருக்கு சொல்லமுடியாத பொறாமையும், பொச்சரிப்பும். அவரின் நண்பர்கள், உடன் பணி புரிந்தவர்கள் அவரை சந்திக்கும் போதெல்லாம் அதை ஏதாவது ஒரு வகையில் காட்டி விடுவார்கள்.

‘ஒமக்கு என்ன ஓய்! ரெண்டு பொண்ணுங்களையும் கட்டி கொடுத்திட்டீரு, பெரிய பய வேலைக்கு போக ஆரம்பிச்சிட்டான், இதுல நீரு வேற சல்லிசல்லியா சேக்குறீரு சைடுல, ஒம்ம யோகத்துல யாரும் ஓய் இருக்கா?’ என்று அவருடன் பணி புரிந்து ஒய்வில் இருப்பவர்கள் கொஞ்சம் வயிற்றெரிச்சலுடன் சொல்லும் போது, தன் நிலைமையைப் பற்றி சொல்லவே மாட்டார். மாற்றாய் அது போன்ற வார்த்தைகளைக் கேட்கும் போது அவருக்கே பெருமையாய் இருக்கும்.

‘எல்லாத்துக்கு ஒரு சுழி வேணும் ஓய்!’ என்பார், அது என்ன சுழி என்று யாரும் கேட்டதில்லை, அவரும் அதைப் பற்றிய விளக்கம் கொடுத்ததில்லை. சொல்லப்போனால், அவர் சுழி என்று சொல்வது, நாக்கில் சுழித்த சுழியாய் இருக்க வேண்டும் என்று நினைத்துக் கொள்வார்.

இன்று காலையிலேயே வனஜா வீட்டிற்கு போய்விட வேண்டும் என்று நினைத்துக் கொண்டார். வனஜா, கிட்ணாசாரியின் தூரத்து உறவு. சங்கத்தில் ஒரு மீட்டிங்கிற்கு போனபோது தான் வனஜாவையும் சுப்புடுவையும் சந்தித்தார். அவர்கள் இருவருக்கும் கல்யாணம் ஆகி ஏழு வருஷங்கள் ஆகியும் குழந்தை இல்லை. யாரோ ஒரு புண்ணியவான், கிட்ணாசாரியின் பராக்கிரமங்களையும், ஜோதிட வித்வத்தையும் பற்றி சொல்லி இருக்க, சங்கத்தில் பார்த்த வனஜா, ‘நைனா!’ என்று பக்கத்தில் வந்து கிட்ணாசாரியின் கையைப் பிடித்துக் கொண்டாள். அவளுடைய கணவனையும் அறிமுகப்படுத்தி வைத்தாள்.

மோவாயில் ஆட்காட்டி விரலை வைத்துக் கொண்டு, ஏதோ யோசிப்பது போல பாவனை செய்தவர். சுப்புடுவைப் பார்த்தார், கண்களை சுருக்கி திரும்பவும் யோசித்தார். குருவும், சுக்கிரனும் ஒரே வீட்டில் இருக்கும் ஜாதகத்தை பார்த்தது போல லேசாய் துள்ளி, இரு கைகளை தட்டுவது போல செய்தார்.

“சின்னசாமி கொடுகா நுவ்வு?” என்றார்.

‘அவ்வு நைனா, நா நானனு தெலுசா?’

“தெரியாமப் போகுமா, உங்க அய்யா தானே, நம்ம சமூகத்திலேயே முத எம்.எல்.சி.? அது தெரியாமப்போகுமா?”

சுப்புடுவுக்கு ரொம்பவும் பெருமையாய் இருந்திருக்க வேண்டும், வனஜாவை, ‘பாத்தியா புள்ள?’ என்று கேட்பது போல பார்த்தான்.

அறிமுகப்படலம் சுவாரசியமாகிவிட, மேலும் சுப்புடுவின் சொந்தக்காரர்களை எல்லாம் நினைவு படுத்தி பேசிக் கொண்டு இருந்தார். சுப்புடுவுக்கு முக்கால்வாசிப் பேர்களை தெரியவில்லை, ஆனாலும் மையமாய் சிரித்தபடி தலையாட்டிக் கொண்டிருந்தான்.

வனஜா, அவரின் பேச்சை ஈவு இரக்கமில்லாமல் வெட்டினாள். கொஞ்சம் அசுவாரசியப்பட்டவர், “என்னம்மா?” என்றார் கொஞ்சம் சடவா.

‘லேது நைனா, மீரு மா இண்ட்டிக்கு ராவலா? மன, இத்துரு ஜாதகானி சூசி, புத்ரபாக்கியம் எப்புடுன்னு செப்பவ்லா! வொஸ்தேரா? பெண்ட்லி அவ்வி ஏடு ஏண்டு அவ்விட, இக்கனு ஒக புழு பூச்சி லேது கடுபுல’ என்று துக்கமாய் முகத்தை வைத்துக் கேட்டாள். வனஜாவின் முகத்தை பார்த்ததும், கிட்ணாசாரியின் முகமும் வாடி விட்டது. தன் வாக்கு பலிதத்தால் அப்படியே “ததாஸ்து” என்று சொல்ல, அவர்கள் கையில் குழந்தை வந்துவிடுவது போல நினைத்து சிலிர்த்துக் கொண்டார்.

“மீரு இல்லு எக்கட உடுத?’ என்று கேட்டதும், வனஜா விலாசம் சொல்ல குறித்துக் கொண்டார். சில அடையாளங்களைக் கேட்டு தெரிந்து கொண்டார். “கோடாங்கி ராமசாமி தெலுசா?” என்றார்.

‘வாளு இண்ட்டிகி பக்கல இல்லு தா மனதி!’ என்றாள்.

மற்றொரு நாள் வீட்டை விசாரித்து போய் அதிகாலையில் அவர்கள் வீட்டுக் கதவைத் தட்ட, தூக்க கலக்கத்துடன், பால்காரன் என்று நினைத்துக் கொண்டு ஒரு ஏனத்தை எடுத்தபடி கதவைத் திறந்தான் சுப்புடு .

தூக்கக் கலக்கத்தில், இவர் பக்கமாய் ஏனத்தை நீட்டினான் யாரென்று முகத்தைப் பார்க்காமலே. என்னடா இது பால் ஊத்தக்காணோமே என்று நிமிர்ந்து பார்த்த சுப்புடுவுக்கு, வந்திருப்பவர் யாரென்று தெரியவில்லை. வந்தவர் சிரிக்க, அவனும் சிரித்தான்.

“நான் தான் கிருஷ்ணசாமி!” என்றார்.

பொட்டென அடித்த குரலில் பல்பு எரிய, “மாமா, ரண்ட ரண்ட!” என்றான் சுப்புடு கதவை முழுதும் திறக்காமலே.

என்னடா இது? கதவைத் திறக்காமலே வா வா என்கிறானே? எது வழியாக உள்ளே நுழைவது என்பது போல அவன் காலுக்கும், கதவின் நிலைக்கும் இடையே இருந்த இடைவெளியைப் பார்த்தார்.

அப்போதும் சுப்புடு கண்டுகொண்டதாக தெரியவில்லை. உள்ளே திரும்பி, ‘வனஜா, வனஜா’ என்று குரல் கொடுத்தான். வீட்டிற்குள்ளே மறுபடி நுழைந்தவன், கொஞ்சம் நேரமாகியும் வரவில்லை.

அசந்தர்ப்பத்தில் வந்து விட்டோமோ, ஆனால் மணி ஆறரை ஆகிவிட்டதே! ராமதிலகம், ஐந்து மணிக்கெல்லாம் எழுந்து, குளித்து முடித்து காஃபி தந்துவிடுவாளே, மற்ற வீடுகளில் அது பழக்கமில்லையோ! ராமதிலகத்தைப் போல வனஜாவும் அதிகாலையிலேயே எழுந்து விடுவாள் என்று தனக்குத் தோன்றியது ஏன் என்று நினைத்த போது அவருக்கு எதுவும் விளங்கவில்லை. இவ்வளவு விடிகாலையிலேயே வந்ததைப் பற்றிக் கேட்டால், என்ன சொல்லி சமாளிப்பது என்று யோசிக்கத்தொடங்கினார்.

வாசலில் நின்று கொண்டிருந்தார், கதவு திறந்த பாடாய் இல்லை, திரும்ப போய்விடலாம் என்றால், அதுவும் முடியாது. வீட்டில் இன்னைக்கு ஏதும் பலகாரம் இல்லை, பழைய சாதமும், நார்த்தங்காய் ஊறுகாய் தான். நேற்று இரவு, அழகம்மாள் வீட்டில் சாப்பிட்டு விட்டதால், மிஞ்சிய சாதம் தான் காலை ஆகாரமாய் பழைய சாத உருவில் விழும். அது கூழ் வடாமாய் உருமாறும் வரை, இது போல அன்னலட்சுமிகளின் கதவை தான் தட்ட வேண்டும். இப்போது பால்காரன் வந்து பக்கத்தில் நின்றான், இவரைப் பார்த்து சிரித்தான்.

வந்தவுடன், கதவைத் தட்டினான். கதவு உடனே திறந்தது. வனஜா தான் அரக்க பரக்க முகம் கழுவி, அழுந்த துடைத்ததில், முன் முடிகள் நெற்றிய இழுவியபடி படிந்திருந்தது. வந்தவள், பால்காரனையும் அவரையும் மாறி மாறி ஒரு கணம் பார்த்துவிட்டு, உள்ளே போய் அதே ஏனத்தை எடுத்து வந்தாள். பால்காரனிடம் அதை நீட்டிய படியே, இவரைப் பார்த்து சிரித்தாள்.

“உள்ள வாங்க நைனா?” என்று கொஞ்சமாய் விலகியபடி பால் நிரம்பிய ஏனத்தை கையில் வாங்கிக் கொண்டு, அவரை உள்ளே அழைத்தாள்.

உள்ளே நுழைந்தவர், சுருட்டித் தள்ளிய பாயும் தலையணையும் ஓரமாய் கிடந்ததைப் பார்த்தார். ஒரே அறை அல்லது ஹால் அதை எப்படி வேண்டுமானாலும் சொல்லலாம். டிவி இருப்பதால் அதை ஹால் என்றோ அல்லது படுக்கையும், பீரோவும் இருப்பதால் அறை என்றோ வகைப்படுத்திக் கொள்ளலாம்.

அங்கு பெஞ்சு மாதிரி இருந்த ஒரு பெட்டியில், உட்காரச் சொல்லிவிட்டு, காப்பி கலந்து வருவதாக சொல்லிவிட்டு, அந்த இடத்தை விட்டு இடது பக்கமாய் இருந்த திரையை விலக்கி அடுப்படிக்குள் நுழைந்தாள். சுப்புடுவைத் தேடினார், காணவில்லை, தக்கணூண்டு வீட்டுக்குள் எப்படி காணாமல் போனான் என்று வியப்பாய் பார்த்துக் கொண்டிருந்தார்.

சின்ன வீடு தான், அவருடைய வீட்டை விட சின்னது தான். ஒரு பீரோ, ரெண்டு டிரங்க் பெட்டிகள், கொஞ்சம் மூட்டையாய் பழைய துணிகள். சமையல் கட்டு சுவருக்கும், ஹாலின் சுவரும் சந்திக்குமிட்த்தில், ஒரு சுவரோடு ஒட்டிய அலமாரி. சமையல் கட்டின் எதிர்புறசுவரில், சில சாமிப்படங்கள், சாமிப்பட காலண்டர்கள். அப்புறம் இரண்டு பெரியவர்களின் படங்கள், பொட்டிட்டு அதன் மேல் இரண்டு விடி பல்புகள். ஒரு தையல் மெஷின், அதன் மீது சில தலையணைகளும், இரண்டு ஜமுக்காளங்களும் மடித்து வைக்கப்பட்டிருந்தது. ரொம்பவும் சின்ன வீடு, வாசல் இருக்கும் சுவர் பக்கம் டீவியும் அதன் இணைப்பு சுவரை ஒட்டிய இடத்தில், போட்டிருந்த பெட்டியில் தான் கிட்ணாசாரி உட்கார்ந்திருந்தார். வீட்டில் அத்தனை சாமான்கள் இல்லை. காலையில் டிஃபனோ அல்லது பழையதோ? என்று தோன்றியது அவருக்கு. அப்போது சமையலறையின் திரையை விலக்கிக் கொண்டு, ஒரு லுங்கி, பனியனும், தோளில் ஒரு துண்டுடனும் வந்தான் சுப்புடு . அடுப்படிக்குப் பக்கவாட்டில் அல்லது பின்னால் பாத்ரூம் வகையறா இருக்க வேண்டும் என்று தோன்றியது அவருக்கு. அவனைத் தொடர்ந்து அவன் பின்னாடியே காஃபியின் மணம் வந்தது. காஃபி குடிக்க தயாராகிக் கொண்டார்.

‘இன்னைக்கு நீங்க வரேன்னு சொன்னது ஞாபகம் இல்லை மாமா’ என்றான்.

“சங்கத்துல பாத்து பேசும்போதே நினைச்சேன், முத தடவ ஜாதகம் பாக்குறேன், நல்ல நேரமா இருக்கணும்னு! இன்னைக்கு வெசாலக்கிழமயா, நல்ல நேரம் ஆறரைல இருந்து அதான், சீக்கிரமாவே கிளம்பிட்டேன், எந்த ஜாதகக்காரனுக்கும் முழுப்பலன் கிடைக்க, நல்ல நேரத்துல ஆரம்பிக்கிறது தான் முறை, மாப்பிளை!” என்று சற்று உரிமையுடனும், சிநேகமாவும் அவன் கை பிடித்துப் பேசினார் கிட்ணாசாரி.

‘உங்களப்பாத்ததே, எங்களுக்கு பெரிய சந்தோஷம் மாமா, கஷ்டமெல்லாம் பாதி தீந்துட்ட மாதிரி இருக்கு இப்பவே!’ என்று அவரே எதிர்பாராத அளவு உணர்ச்சிகரமாய்ப் பேசினான்.

காஃபியுடன் வனஜாவும் வந்தாள். முகத்தைக் கழுவி துடைத்திருந்தாள் இப்போது.

“வனஜா! ஜாதகத்தை நீயே எடுத்துக் கொடு, ஆனா அதுக்கு முன்னாடி குளிச்சிடும்மா!” என்றார்.

‘சரி நைனா!’ என்று அவசர அவசரமாக, பீரோவைத் திறந்து துணிகளை எடுத்துக் கொண்டு குளிக்கக் கிளம்பினாள்.

‘நானும் குளிக்கணுமா மாமா?’ என்று கேட்டான் சுப்புடு

“நீ குளிக்கலேன்னா பரவாயில்லை மாப்பிள, மக குளிச்சிட்டா நல்லது, கர்ப்பம் தாங்குறவ அவ தானே? நான் எது சொன்னாலும் அதுல ஒரு காரணகாரியம் இருக்கும் மாப்பிள” என்றார். கிட்ணாசாரி இதைச் சொல்லிவிட்டு, சுப்புடுவைப் பார்த்து, உதடுகளை இறுக்கிக் கொண்டு, புருவத்தை உயர்த்தி, கவனமாய் சிரித்தார். அவன் தொடையிடுக்கில் கைகளை வைத்துக் கொண்டு, ரொம்பவும் பவ்யமாய் தலையாட்டினான். தன் மனைவியாய் அப்போதே கர்ப்பவதியாய் பார்த்த திருப்தி வந்துவிட்டது போலத்தோன்றியது அவருக்கு.

வனஜா குளித்துவிட்டு, நேராய் சாமிப்படங்கள் இருக்கும் இடத்திற்கு போய் கண்ணை மூடி பிரார்த்தித்து விட்டு, அங்கு வைத்திருந்த ஜாதகங்களை எடுத்துக் கொடுத்தாள் கிட்ணாசாரியிடம்.

வாங்கும் போதே, மனமுருக பிரார்த்தித்து விட்டு வாங்கிக் கொண்டார் கிட்ணாசாரி. அவளை சாமிப்படங்களுக்கு முன்னால் வைத்திருந்த திருநீர்த்தட்டை எடுத்து வரச் சொன்னார். அதை கைகளில் வாங்கிக் கொண்டவர், எழுந்து நின்று கிழக்குப் பக்கமாய் அவர்களை நிற்கச் சொல்லி திரு நீற்றை தன் தலையில் சிறிது போட்டுக் கொண்டு, நெற்றியிலும் பூசிக் கொண்டு, அவர்களுக்கும் பூசி விட்டார். இருவரும் அவர் காலில் தடாரென்று விழுந்து ஆசீர்வாதத்தை வாங்கிக் கொண்டனர்.

முதலில் வனஜாவின் ஜென்மஜாதகத்தைப் பார்த்துவிட்டு, ருதுவான தேதியைக் கேட்டார். அதை வைத்து திருக்கணித பஞ்சாங்கத்தில் திதியையும், நட்சத்திரத்தையும் தன் கையில் இருந்த புத்தகத்தில் குறித்துக் கொண்டார். இருவரும் அவர் செய்யும் காரியத்தை பயபக்தியுடன் பார்த்துக் கொண்டிருந்தனர்.

இருவர் ஜாதகத்தையும் ஆராய்ந்து, கணக்குகளைக்கிறுக்கி, தனக்குள்ளே பேசிக் கொண்டு ஒரு வழியாக முடிவுக்கு வந்து, தொண்டையைச் செருமி பேசத் தொடங்கினார்.

“ஜாதகத்தை மேம்போக்கா பார்த்தா, புத்ரபாக்கியம் இல்லாத மாதிரி தெரியலை, ஆனா ருதுவான ஜாதகத்தை பார்க்கும் போது புத்ர சம்பத்துக்கு தடை இருப்பது போல இருக்கு, மாப்பிளையின் ஜாதப்படி பித்ரு தோஷம் இருந்தாலும் இது போல காலதாமதமாகவும் வாய்ப்பு இருக்கு, உங்க அப்பாவின் திவசங்கள் சரியா பண்றீங்களா மாப்பிளை? என்றார்.

சுப்புடு அதற்கு பதில் சொல்லாமல், வனஜாவைப் பார்த்தார்.

‘எங்க நைனா? அவரு மாசத்துல பாதி நாளு லைனுக்குப் போயிடுவாரு! மீதி இருக்கிற நாள்ல அமாவாசையோ, திதியோ அவரு எங்க கணக்கு வைக்கிறாரு! நானும் சொல்லிட்டு தான் இருக்கேன், வேற வேலையப் பாருங்க உள்ளூர்லயே இருக்கது போலன்னு, நம்ம சொல்றத எங்க காதுல வாங்காரு!’ என்றாள்.

“இல்லம்மா அவனோட ஜாதகம் அப்பிடி, அவன ஒரு இடத்துல தங்க விடாது!” என்று அவனுக்கு சப்பைக்கட்டினார். பணம் பெயர்வது அவனிடம் இருந்து தான், என்பதால் அவனை பகைத்துக் கொள்வதில் அவருக்கு இணக்கமில்லை.

‘பித்ரு தோஷம்னா என்ன நைனா?’

“பித்ரு தோஷம்னா, பிறந்த ஜாதகத்தில நிக்குற ராகு கேது செய்யிற வேல! இது ரெண்டும் ஒரு குறிப்பிட்ட எடத்துல இருக்கும் போது இந்த மாதிரி ஜாதகக்காரனை பொறக்க வைக்குது, லக்ணத்துக்கு 1, 5, 7, 9 ம் இடத்தில ராகு கேது இருந்தா ஒரு ஜாதகக்காரன் பித்ரு தோஷம் உள்ள ஆளா ஆயிடுறான்! இதனால் எல்லாமே தாமதமாகும். அது வேலையா இருக்கலாம், இல்லை குழந்தையா இருக்கலாம்”

‘இத எப்படி நைனா சரி செய்றது?’

“தொடர்ந்து பித்ருக்களுக்கு காரியம் செய்யணும், ராகு, கேதுவுக்கு பூஜைகள் செய்யணும்!” மோவாயில் விரலை வைத்துக் கொண்டு யோசித்தவர், “திருநாகேஸ்வரம் போயிட்டு வரமுடியுமா? தலையையும் வாலையும் ஒண்ணா பார்த்து கும்பிட்டுட்டு வாங்க, அப்புறம் மாப்பிள உள்ளூர்லயே வேலை எடுத்துக்கணும், இதெல்லாம் போக எனக்கு தெரிஞ்ச சித்தவைத்தியர் ஒருத்தர் இருக்கார், மதுரை அழகப்பன் நகர்ல, அவரையும் போய் பார்க்கணும்! அவரு இதுலயெல்லாம் கில்லாடி, தெய்வத்தால் ஆகாதெனினும்னு சும்மாவா சொன்னாங்க? அதனால எல்லாத்தியும் முயற்சி பண்ணலாம்” என்று முடித்தார்.

அவர் சொல்லி முடிக்கவும் எங்கேயோ மணியடித்தது போல இருந்தது. “பார்த்தீங்களா கோவில் மணியே அடிச்சுடுச்சு, இனிமே எல்லாம் நல்லபடியா நடக்கும்!” என்றார்.

பக்கத்தில் கோவிலே இல்லாத போது கோவில் மணி அடித்தது எப்படி? என்று அவர்கள் இருவரும் கேட்கவில்லை.

முடித்துவிட்டு கிளம்புவது போல பாவனை செய்தவரை, இருவரும் பலகாரம் சாப்பிட்டுவிட்டு போக வேண்டும் என்ற வற்புறுத்தலால் சம்மதிப்பது போல பாசாங்குடன் சாப்பிட்டு முடித்தார். சுப்புடுவும், அவர் கையில் பணத்தை திணிக்க, வேண்டாமென்று வாயால் மறுத்துக் கொண்டே கையை நீட்டி வாங்கிக் கொண்டார்.

சுப்புடு உள்ளூரில் வேலை எடுத்த காரணமோ, ராகு, கேதுவின் அருளோ, பித்ருக்களின் ஆசியோ அல்லது சித்த வைத்தியனின் சாமர்த்தியமோ, அவர்கள் இருவருக்கும் ஒரு பெண் குழந்தை பிறந்து விட்டது. இருவருக்கும், குலதெய்வம் ஆகிவிட்டார், கிட்ணாசாரி. கடாவெட்டி பொங்கல் வைக்காத குறையாய் கொண்டாடினார்கள். போதாதா கிட்ணாசாரிக்கு?!

— ராகவன் (http://koodalkoothan.blogspot.com/)

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *