பேய் அடி

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: November 16, 2015
பார்வையிட்டோர்: 9,272 
 

டிவியில் கதையல்ல நிஜம் நிகழ்ச்சி போய்க்கொண்டிருந்தது. வைத்த கண், திறந்த வாய், நீண்ட காது , சாந்தி பார்த்துக்கொண்டிருந்தாள். இரவு ஆகிவிட்டபடியால் இது போன்ற பேய் சமாச்சாரங்கள் தூக்கத்துக்கு உதவாது என்று கணேசன் ஒதுங்கிவிட்டான்.

“ அப்பா பேய் இருக்காப்பா?”

தூங்குவது போல பாதிக்கண்களைத் திறந்து நிகழ்ச்சிபார்த்துவிட்டு, அர்ஜெண்டாக பாத்ரூம் போவது போல அம்மாவுக்குப் போக்குகாட்டிவிட்டு கம்ப்யூட்டரில் மூழ்கி இருந்த கணேசனிடம் வந்தான்.

”டேய் நாளைக்கு ஸ்கூல் இருக்கு போய்ப்படு, போ”

”அப்பா பேய் இருக்கா?”

பேய் வீடு மற்றும் சுந்தா மிகவும் சட்டென்று நினைவுக்கு வந்தனர்.

”கடவுள் இருந்தால் பேய் இருக்குமில்ல?”

”கடவுள் பார்க்கலையே, ஆனால் பேய் மட்டும் வருமா?”

“ம்…..”

”போப்பா உனக்கு ஒண்ணுமே தெரியல” ,

நிகழ்ச்சியைப்பார்க்க ஓடினான்.

சுந்தா..மற்றும் பேய் வீடு……….

“இந்த வருஷம் க்லாஸ்ல புது அட்மிஷன் யாராரு?”

ராமசுப்பு சார் கீச்சென்று பெண் குரலில் கேட்டார்.

”நான் கணேசன் சார்”

”நான் சுந்தா சார்”

”போங்க ரெண்டு பேரும் ஏ செக்ஷன்.”

அன்றிலிருந்து இருவரும் நண்பர்கள் ஆனார்கள். ஒரே பெஞ்ச், ஒரே பயம் பின் ஒரே வெட்கம்.எல்லாம் ஒரே…ஒரே…..

அன்று கணக்கு க்ளாஸ்

”போர்ட்ல பத்து கணக்கு எழுதியிருக்கேன். யார் முடுச்சிருக்கீங்கன்னு பாக்கப்போறேன்..எங்க நோட் எடுத்துக்குங்க.”
சார் ஒவ்வொரு பெஞ்சா சுத்தி வந்தார்.

”என்னடா நீங்க ரெண்டு பேரும் புது அட்மிஷன் இல்ல? என்னடா பண்றீங்க.. கை விரலை நீட்டி மடக்கிகிட்டு…கணக்கு தெரியாதா?”
”இல்ல சார் கையால கூட்டறோம் கழிக்கறோம்.”

ஒரே குரலில் சொன்னார்கள்.

”தொடப்பத்தால கூட்டுங்க போங்க,,விடியலிலே கழிப்பாங்க என்னடா பசங்க நீங்க..”

மிகக் கேவலமாக சார் அடித்த ஜோக்கிற்கு எல்லோரும் விழுந்து விழுந்து சிரித்தார்கள்.

அன்று கணேசனும் சுந்தாவும் இன்னும் நெருக்க மானார்கள்.

“ டேய் கணேஷா..உனக்குப்பழி வாங்கத்தோணலியா?”

தயிர் சாதத்தில் மாவடு வைத்து விழுங்கப்போனவன் ஞே என்று முழித்தான்.

”போன வருஷம் இந்த மாத்ஸ் வாத்யார் நம்ம ரெண்டு பேரையும் என்னமா கேலி செஞ்சாரு?”

ஒரு வருடத்திய கதை கணேசனுக்கு மறந்துவிட்டிருந்தது.

”உங்கப்பா டாக்டர்தானே..அந்த ஊசி போடும் ட்யூப் ஒண்ணு எடுத்து வா, சார் மேல இங்க் அடிச்சுடலாம்.”

தலையில் ரெண்டு கொம்பு முளைத்து வில்லத்தனமாகத்தெரிந்தான் சுந்தா.

”வேண்டாண்டா அப்பாவுக்கு தெரிஞ்சா கொன்னே போட்டுடுவார்.”

”தெரியாதுடா மாமரத்துப்பின்னாலேயிருந்து நாம அடிக்கலாம். அப்படியே மாட்டிகிட்டா நாந்தேன்னு சொல்லுறேன்.”

சுந்தா கணேசனின் ஆத்ம நண்பன் ஆனான்.

”டேய் கணேஷ்! இந்த வருஷம் நாம மிடில் ஸ்கூல். இனிமேலும் கொழந்தைங்க இல்லன்னு காட்டணும். இந்த ஏப்ரல் ஒண்ணாம்தேதிக்கு நீ உங்கப்பா டிஸ்பென்சரிலேர்ந்து அந்த ஜங்ஷன் வயலெட் ஒரு பாட்டில் எடுத்துகிட்டு வந்துடு. நான் உருளைக்கிழங்கு பாதியா வெட்டி AF எழுதி எல்லோர் மேலயும் அடிக்கலாம்.”

அன்றிலிருந்து சுந்தா தலைவன் ஆனான்.

”கணேஷ் நீ பேய் பாத்திருக்கியா?”

மீசை துளிர் விட ஆரம்பித்து ஹைஸ்கூலில் அடி எடுத்த விட்டதாலும் தெருக்கோடி மல்லிகா லேசாக சிரிக்க ஆரம்பித்ததாலும் கணேஷுக்கு ஹிரோயிசம் வர ஆரம்பித்திருந்தது.

”போடா சுந்தா சும்மா உடான்ஸ்..பேய் கிடையவே கிடையாது. வேணா இந்த மல்லிகாவோட அக்காவை பேய்ன்னு நெனச்சுக்கலாம்.”
மல்லிகா தனியாக கோவிலுக்குப்போக விடாமல் கூடவே ஒட்டிக்கொண்டு முழிக்கும் அந்த அக்காமேல் உள்ள கோபம் கொஞ்சம் குறைந்தார்போல் இருந்தது.தவிர இப்பொதெல்லாம் மல்லிகாவை கொண்டு வராமல் எதுவும் பேச முடிவதில்லை.

”இல்லை என்னைப்பேய் அடிச்சுது.”

சுந்தாவின் முகத்தைப்பார்த்தான். அடி வயிற்றில் அமிலம் சுரக்க ஆரம்பித்தது. சுந்தா சொன்னால் சரியாக இருக்குமே.

”அப்போ..உண்டா..?”

”ம்…. அடிச்சுதுடா.”

”எங்கேடா”

”முதுகில”

”அதில்ல எங்க பார்த்தே”

”அதான் அந்த பேய் வீட்டுல.”

அவர்கள் ஸ்கூல் பக்கத்தில் மூன்று தெருக்கள் விட்டு ஒரு வீடு இல்லை ஒரு பங்களா உண்டு ஒரு பெண் தற்கொலை செய்து கொண்ட்தாகவும் பேயாக நடமாடுவதாகவும் அரசல் புரசல்.யாராலும் பாதுகாக்கப்படாமலும் மரங்கள் செடி கொடிகள் படர்ந்து கரப்பான் பூச்சிகள் என்று சிதிலமடைந்த அந்த வீடு பேய் பங்களா என்று சர்வ சாதாரனமாக பெயர் சூட்டப்பட்டிருந்தது.

தோட்டக்காரன் ரத்தம் கக்கி செத்தான்………

பக்கத்து வீட்டு மாடியிலிருந்து பார்த்தால் அம்மாவாசையன்று இரவில் அங்கே நடமாட்டம் இருந்ததாக..இரவில் ரோந்து போன நேபாளி காவல்காரன் சொன்னான்…………

நடு இரவில் அந்த வீட்டில் இருந்து வீல் என்று அலறல் சத்தம் வந்தது………..

இப்படிப்பல கதைகள் அலைந்து கொண்டிருந்தன.

கணேசனுக்கு பேய் மேல் நம்பிக்கை இல்லை. ஆனாலும் அந்தத்தெருவில் செல்ல மாட்டான்

”சுந்தா பேய் நிஜமாவே அடிச்சுதா?”

”ஆமாம் நேத்து ராத்திரி..பக்கத்து தியேட்டர்ல நைட் ஷோ பாத்துட்டு திரும்பி வரேன். உனக்குத்தான் தெரியுமே அந்தப்பேய் வீடு தாண்டிப்போனா வீடு ரொம்ப கிட்டத்துல எனக்குத்தான் பேய் பயமில்லையே அது கிடக்கு பேய் சீக்கிரம் வீடு போய்ச்சேரணும்னு அந்தத் தெருவிலேயெ வந்தேன் அப்போ..”

”அந்த வீட்டுக்குள்ள ஏன் போனே?”

”பயித்தியமாட எனக்கு? அங்கே போக. தூக்கக் கலக்கம் அந்த வீட்டு வாசல்ல யாரோ நின்னு என்ன கூப்டாங்க அப்படியே மயங்கினாப்போல அங்கே போயிட்டேன். அதான் அந்தப்பச்சை விக்கெட் கேட் இருக்குமில்ல அது இப்படியும் அப்படியும் அசைஞ்சுண்டு இருந்துது .க்ரீச் க்ரீச்ன்னு சத்தம். விர் விர்ருன்னு காத்து அப்படியே என்னைப் பிடிச்சு யாரோ உள்ளே தள்ளினாங்க. தள்ளாடி விழாமல் நின்னேன். அப்போ உள்ளேருந்து கலகலன்னு பொண்ணு சிரிப்பு..வா வான்னு சத்தம் போட்டு கூப்பிட்ட மாதிரி. கண்ணைத்திறக்க முடியாமல் கிரக்கம். அந்தத்தேக்கு மரக்கதவுக்கிட்ட போய் கையை வெச்சேன். அப்போ பிடரியில படேர்னு ஒரு பேய் அடி. அம்மான்னு அலறிண்டு வீடு வந்து சேர்ந்ததுதான் தெரியும். நல்ல வேளை ஒரு வாரம் முன்னால உங்கப்பா கொடுத்த வலி மருந்து இருந்தது. போட்டுண்டு ஒரே தூக்கம்,”

”அப்போ பேய் இருக்கா.”

”ஆம்மண்டா வரியா நாம திரும்பவும் போய்ப்பார்க்கலாம்.”

”அய்யோ ஏண்டா இந்த விபரீத புத்தி.”

”கணேசா நம்ம தெருக்கோடி லைப்ரரில இதப்பத்தி நிரைய படிச்சிருக்கேன். கையுல நெருப்பிருந்தா பேய் பயந்துடுமாம். நீ என்ன பண்ற உங்க அப்பா சிகரெட் பெட்டி ஒண்ணு எடுத்துண்டு வந்துரு அதைக்கொளுத்திகிட்டு நாம போய் பாக்கலாம்.”

கணேசனுக்கு இப்போது பேய் பயம் போய் அப்பா பயம் தலை தூக்கியது.

”எங்கப்பாவுக்கு தெரிஞ்சா நா செத்தேன்.”

”சரிடா பெட்டிலேர்ந்து ஒரே ஒரு சிகரெட் எடுத்துண்டு வா.”

”வேண்டாண்டா பேய் அடிச்சுடும்.”

”டேய் பயந்தாங்குள்ளியா? என்னைப் பேய் அடிக்குமா வரேண்டி வரேன் உன் பல்லைப்பேத்துடறேன்.”

”சுந்தா பேய்க்கும் பல்லெல்லாம் அப்ப இருக்குமா?”

”ரத்த காட்டேரிக்கு உண்டாம். மோகினிப்பேய்க்கு கிடையாதாம் .வெறும் தல முடிதானாம் கொள்ளி வாய்ப்பிசாசுக்கு வாயிலிருந்து நெருப்பு கக்குமாம்.”

”உனக்கு எப்படி தெரியும்.”

”புக்ஸ் கணேஷ் புக்ஸ்”

சுந்தாவின் ஒரு வார உசுப்பேத்தலில் கணேசன் ஒற்றை சிகரெட்டுடன் ஒரு நாள் சென்றான்

”இரு நான் வாய்ல பத்த வெச்சுண்டு வரேன்.”

”சுந்தா புகையில் இருமல் வரும் நாக்கு புண்ணாய்டும், பழக்கம் இல்லாம ஸ்மோக் பண்ணாக்கூடாதுடா.”

”நா பாத்துக்கறேண்டா.”

மெதுவாக பச்சை விக்கெட் கேட் தாண்டி தேக்கு மரக்கதவிடம் சென்றோம். மரவட்டை..அட்டை பூச்சி..சில் வண்டுகள்…கதவில் படர்ந்த பாசி..சுந்தாவின் வாயில் சிகரெட் சிகப்பு ஒற்றை வெளிச்சம்

”பாத்தியா நெருப்புக்கு பயந்துடுத்து! ஏண்டி என்னையா அடிக்கறே இரு நாளைக்கு மறுபடி வரோம்..வாயில் சிகரெட் இருக்கும் வரை……” ஏதோ கத்திவிட்டு திரும்ப வந்துவிட்டான்.

வாராவாரம் இது தொடர்ந்த்து. நெருப்புக்கு பயந்து பேய் வெளியே வரவே இல்லை

கொஞ்ச நாளில் சுந்தாவின் அப்பாவுக்கு வேலை மாற்றலாகிவிடவே பேயை கண்ணேசனுக்குக்காட்டாமலே சுந்தா கிளம்பிப்போனான்.

இந்த சுந்தாவைப்பார்த்து எவ்வளவு நாளாச்சு..Facebook இல் தேடினான்

”டேய் கணேசா வாட் அ சர்ப்ரைஸ்! ”

”எவ்வளவு வருடங்கள் இப்படி ஒரு சந்திப்பு..எவ்வளவு குழந்தைகள்..எங்கே வேலை..அப்பா இன்னும் ப்ராக்டீஸ் பண்ணறாரா?”

”எல்லாம் சொல்றேன் சுந்தா அந்த பேயை அப்புறம் பாத்தியோ?”

”பேயா என்னடா உளர்ரே?”

”டேய் அந்த பேய் வீடுடா உன்ன முதுகில அடிச்சுதே?”

”அய்ய்ய்யோ! அத இன்னுமா நெனவுல வெச்சிருக்கே?பேயாவது என்னை அடிக்கிறதாவது. கணேசா! நான் உங்கப்பகிட்ட கன்சல்டேஷனுக்கு வந்தபோது மேஜையில சிகரெட் பாத்தேன், எனக்கு அப்ப ஸ்மோக் பண்ன ரொம்ப ஆசை..என் கிட்ட காசு ஏது? நீதான் எதக்கேட்டலும் கொண்டு வருவியே? அதான் அந்தப்பேய் கதை..உனக்கு பேய்..எனக்கு சிகரெட்..”

என்ன என்னமோ சொல்லிக்கொண்டே போனான் சுந்தா

கணேசனுக்கு அன்று கிடைத்தது பின் புரிந்தது…….. பேய் அடி!

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *