சுமந்தவன்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: June 24, 2022
பார்வையிட்டோர்: 4,876 
 

“என்னங்க..?” என்றவாறே கட்டிலில் வந்து கணவனுக்குப் பக்கத்தில் இழைந்து, குழைந்து அமர்ந்தாள் நந்திகா.

“என்ன..?” – கணேஷ் அவளை ஆசையுடன் அணைத்து தன் மடியில் கிடத்தி மனைவி கண்களை உற்று நோக்கினான்.

“நாம நல்லதுக்கு ஒன்னு சொல்றேன். நீங்க கேட்கனும்….”

“சொல்லு..?”

“நாம தனிக்குடித்தனம் போயிடலாம்.”

“……………………………”

“இல்ல… நாம உங்க அண்ணனைத் தனியே அனுப்பிடலாம்.”

“அப்புறம்..?” \

“அவர் காய்கறி சந்தையில மூட்டைத் தூக்கி வேலை செய்யிறது நமக்கு அவமானம்.. என்னடி..! இவரா . உன் கணவரோட அண்ணன்னு..? என் அலுவலகத்தில் கேட்டு எனக்கு குத்தல், குடைச்சல். என்னைக் கேவலமாய்ப் பார்க்குறாங்க. ஏன்…? உங்களோட அலுவலகத்தில் வேலை செய்யிற நண்பர்கள் உங்களைக் கேட்கலையா..?” கேட்டு ஏறிட்டாள்.

“………ம்ம்ம்… கேட்கிறாங்க நந்திகா.”

“எப்படி..?”

“தம்பி அலுவலகத்தில் அதிகாரி. அண்ணன் மூட்டைத் தூக்கி, கூலித் தொழிலாளின்னு நினைக்க சொல்ல வெட்கமாத்தானிருக்கு. ஆனாலும் வேறு வழி இல்லே. கூடப் பொறந்துட்டார். வெளியில போனா சொந்த வீடு கூட இல்லாம கஷ்டப்படுவார்.” கமறினான்.

“நியாயந்தான். அதுக்காக.. நாம கட்டின வீட்டில் அவர் பொண்டாட்டி, புள்ள, குடும்பத்தையும் மொத்தமா வைச்சி நாம கடைசி வரை தாங்க முடியுமா…?”

கம்மென்றிருந்தான்.

“அதான் தம்பிக்கு ஒரு நல்ல வழி காட்டிட்டார். என்னையும் கட்டி வச்சு வருமானத்தைப் பெருக்கி, வீட்டையும் கட்ட வைச்சு உசந்த ஆளாய் ஆக்கிட்டார். கடமை முடிஞ்சி போச்சுன்னு விலகி றது தான் நியாயம். ஒரு நல்ல மனுசனுக்கு அடையாளம். அதை விட்டுட்டு இப்படி நம்மளோட ஒட்டி இருக்கிறது எப்படி..? என்ன நியாயம்..?..”நிறுத்தினாள்.

“…….”

“என்ன யோசனை…?”

“அது சரி. இதை எப்படி அண்ணன்கிட்ட சொல்லி….”

“அதைப் பத்தி நீங்க கவலைப் பட வேணாம். உங்க அண்ணனும் அண்ணியும் இப்பத்தான் கூடத்துல படுத்தாங்க. தூங்கி இருக்க மாட்டாங்க. நம்ம பேச்சு அவுங்க காதுல விழும். அவுங்க கேட்கனும்ன்னுதான் நானும் சத்தமா பேசுறேன். !” என்றாள்.

கணேசுக்கு மனைவியின் புத்திசாலித்தனம் ஆச்சரியமளிக்க அவளை உற்று நோக்கினான்.

அதே சமயம் அவர்கள் அறைக்கு வெளியே படுத்திருந்த செண்பகம் இவர்கள் பேச்சைக் கேட்டு ஆத்திரம், அவமானம்…! விறுக்கென்று எழுந்தாள்.

தவிர்க்க முடியாமல் பின்னாலேயே அவள் கணவன் கிருஷ்ணனும் எழுந்தான்.

அவர்கள் உடல் குப்பென்று வியர்த்தது.

செண்பகம் அவர்கள் அறையை நோக்கி நடந்தாள்

திடுக்கிட்ட கிஷ்ணன்…பதறி…

“செண்பகம்..!” என்று முணுமுணுத்து அவள் கையைப் பிடித்து இழுத்து தடுத்தான்.

“ச்ச்சூ..! சும்மா விடுங்க. இதுக்கு மேல என்னால் பொறுக்க முடியாது !” என்று உதறி நடந்தாள்.

தடுக்க இயலாத கிருஷ்ணன் அவளைக் கலவரமாகப் பார்த்தான்.

“நந்திகா.. !” அறைக் கதவைத் தட்டினாள்.

படுக்கையை விட்டு எழுந்த அவள்….ஒன்றும் அறியாதவள் போல்

“என்னக்கா…?” என்றாள்.

கணேசும் அவள் அருகில் வந்து நின்றான்.

“இதோ நிக்கிற உன் புருசன் எப்படி வளர்ந்து ஆளார்ன்னு உனக்குத் தெரியுமா…?” வெடித்தாள்.

“அண்ணி!” கணேசு கலவரமாக அலறினான்.

“நீ சும்மா இரு தம்பி.” என்று அவனை அடக்கிய செண்பகம்….

“இந்த ஆள் வயித்தை விட்டு கீழே இறங்கினதுமே பெத்த தாய் மண்டையைப் போட்டாச்சு. பொண்டாட்டி போன ஏக்கத்துலேயே இவரைப் பெத்த தகப்பனும் ஒரு மாசத்துல போய் சேர்ந்து… பொறந்த ரெண்டு குழந்தைகளையும் நிர்கதியாக்கிட்டாங்க. பதினஞ்சு வயசு பையனான இவர் அண்ணாதான் பச்சை மண்ணாய் இருந்த உன் புருசனை எடுத்து ஆளாக்கினார்.

எப்படி ஆளாக்கினார்..? படிச்ச படிப்பை விட்டுட்டு இதே மூட்டைத் தூக்கித்தான்.!! கணேசுக்குப் பத்து வயசாகிறப்போ நான் இந்த வீட்டுக்கு சோறு ஆக்கிப் போட வந்தேன். நல்லா படிக்கிற புள்ளையை நல்லா படிக்க வைக்கனும். தான் படிச்சு வேலைக்குப் போக முடியாததைத் தன் தம்பி நிறைவேத்தனும் என்கிற வெறியில அவரும் குழந்தை பெத்துக்க விரும்பல. நானும் அதைப் பத்தி நினைக்கல. அந்த வெறியில இவர் ராப்பகல் பார்க்காம உழைச்சார். தன் கனவை நிறைவேத்தினார். அப்புறம் நாங்க குழந்தை பெத்தோம். உன்னைக் கட்டி வைச்சோம்.

கலியாணம் முடிச்சாச்சு. நம்ம கடமை முடிஞ்சிது. நாம தனிக்குடித்தனம் போகலாம்ன்னு என் கணவர்கிட்ட சொன்னப்போ அவர் என்ன சொன்னார் தெரியுமா..?

“பொறந்த குழந்தையை விட்டுப் பிரியறது மாதிரி வாழ்க்கையில் அடியெடுத்து வைச்சவங்களை விட்டுட்டுப் போகக் கூடாது செண்பகம். நல்லது கெட்டது தெரியாம தடுமாறிப் போவாங்க. அவுங்க ஊணி உரம்பெறட்டும். அப்புறம் அவங்களை விட்டு நாம தனிக்குடித்தனம் போய் நம்ம பொழைப்பைப் பார்ப்போம்” சொன்னார்.

நீங்க ஊணி உரம் பெற்றது இப்போ எங்களுக்குப் புரிஞ்சி போச்சு. இனி ஒரு நிமிசம் இந்த வீட்டில இருக்க எங்களுக்கு வேலை இல்லே. நாங்க இப்பவே கிளம்பறோம். வாங்க போவோம். !” சொல்லி தூங்கிக் கொண்டிருந்த குழந்தையை எடுத்து தோளில் தூக்கிக்கொண்டு…

“வாங்க…..”என்று என்று கூறி தன் கணவன் கையை இறுக்கப் பற்றிக் கொண்டு நடந்தாள்.

“அண்ணா..!”

“அக்கா. .. !! எங்களை மன்னிச்சுடுங்க…”

என்ற இவர்கள் கதறல், கைப்பற்றல், வழி மறித்தலை மீறியும் அவர்கள் வேகமாக நடந்தார்கள்.

எப்படி நிற்பார்கள்..?????!!!….

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *