சந்தோஷங்கள் சந்தோஷங்கள்

0
கதையாசிரியர்:
தின/வார இதழ்: சுபமங்களா
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: May 16, 2021
பார்வையிட்டோர்: 3,840 
 

சுவரில் தொங்கிய காலண்ட ரைப் பார்த்தான் சின்னக் கண்ணன். ஆகா என்று கைகொட்டிக் களித்தான்.

ஈசிச்சேரில் ஓய்வாகச் சாய்த்திருந்த அப்பா கேட்டார், “இப்ப என்ன சந்தோவும்?” என்று.

“நாளைக்குத் தேதி இருபது” என்றான் கண்ணன்.

“சரி. அதுக்கென்ன?”

“நாளைக்கு ஒரு விசேஷம். ஞாபகம் இல்லை?”

“என்ன விசேஷம்?”

Vallikannan - Santhosangal - April 1991 -pic“பம்பர் பரிசுச் சீட்டு குலுக்கல் முதல் பரிசு ரெண்டு லட்சம்”.

“ஆமா, மறந்தே போனேன்” என்று நிமிர்ந்து உட்கார்ந்தார் தந்தை.

“நாளைக்கு நமக்கு பரிசு கிடைக்கும், ஆமாதானே?” என்று ஆவலோடு கேட்டான் கண்ணன். அவனுக்கு வயது பத்து இருக்கும்.

“ஆமாம். பெரிய பரிசு கிடைக்கும்” என்று அப்பா நம்பிக்கை யோடு சொன்னார்.

“பணம் வந்ததும் நாம எல்லோரும் திருப்பதிக்குப் போவோம். இல்லையா?”

“ஆமா, ரொம்ப காலமாகவே இது பாக்கி கிடக்கு. இந்தத் தடவை கண்டிப்பா போயிட வேண்டியது தான்”

“அப்புறம் நமக்கு சொந்தமா ஒரு வீடு வாங்கிருவோம்”

“ஆமா…”

“பெரிய வீடு. வசதியா, நிறைய ரூம்களோடு, மாடியும் இருக்கும். என்ன அப்பா?”

“ஆமா, பங்களா மாதிரி வீடு. சுற்றி வர விசாலமான இடம். முன்னே அருமையா…”

“பூச்செடிகள் நிறைய இருக்கும். ரோஜா செடிகள் நிற்கும். இல்லையா அப்பா?”

“ஊம்…. ரோஜா செடிகள் இல்லாமலா? முதல்லேயே இல்லாவிட்டாலும், நாம வாங்கி நட்டு வைப்போம்.”

“சிவப்பு ரோஜா…ரெட் ரோஸ்…அதுதான் எனக்குப் பிடிக்கும். பிங்க் கலர் ரோஸ் செடிகளும் இருக்கட்டும். ஆனா, சிவப்பு ரோஜா தான் நிறைய வேணும். மஞ்சள் ரோஜாவும் நட்டு வைக்கலாம்”.

“செய்து போடுவோம்”

“சுற்றிவர மரங்கள், என்னென்ன மரங்கள் அப்பா?”

“மா, பலா, தென்னை, கமுகு, கொய்யா, எலுமிச்சை…இப்படி எல்லா மரங்களும்தான்”

“ஜோரா இருக்கும். ஜில்லுனு, குளுகுளுன்னு, அந்தந்த சீசனுக்குத் தக்கபடி பழங்கள் கிடைச்சுக்கிட்டே இருக்கும். அதிகாலையில் குயில் ‘கூ… கூ’ன்னு கூவும். குருவிகள் பறவைகள் எல்லாம் வெளிச்சம் வந்த உடனே காச் கீச்னு கத்தும். அந்த சத்தத்தை கேட்டு நான் எழுந்திருப்பேன்…டி.வி. வாங்கணும். கலர் டி.வி.தானே?”

“பின்னே…?”

“அலமாரி, நாற்காலி, ஃபிரிஜ். டைனிங் டேபிள்…எல்லாம் வாங்கணும் அப்பா. நம்ம வீட்டிலே எதுவும் இல்லையே!”

“பணம் கிடைச்சதும் வாங்கிப் போடுவோம்”

“வீட்டிலே உள்ளே நெடுக குழாய் பதிச்சு, ஒவ்வொரு ரூமிலும் வாஷ் பேசின் வச்சு, எங்கே திருகினாலும் தண்ணீர் கிடைக்கும்படி வசதி பண்ணணும்.”

“ஓ…”

“எனக்கு ஒரு சைக்கிள் வாங்கணும்”

“கட்டாயம் வாங்கிரலாம்.”

“ஜம்னு சைக்கிள்லே போவேன். ராஜாப் பயல், என் கிளாசிலே படிக்கானே அவன் – சைக்கிள்லே வாரான். நான் பின்னாலே ஏறிக்கிடுறேன்னு சொன்னா, கூடாது – ஏத்த மாட்டேன்கிறான். எனக்கு சொந்த சைக்கிள் கிடைச்சதும் எவனையும் கேரியரிலே ஏற விட மாட்டேன். ஆமா” என்று உறுதியாகச் சொன்னான் கண்ணன்.

பிறகு ஆசையோடு கேட்டான்: “எனக்கு வாட்ச் வாங்கித் தருவீங்களா அப்பா?”

“எங்க கிளாசிலே மூணு பேரு வாட்ச் கட்டிக்கிட்டு வறாங்க. எனக்குத்தான் வாட்ச் இல்லே.”

“நீயும் கட்டலாம். பணம் கிடைச்சதும் வாங்கிப் போடுவோம்.”

“அருமையான வால் கிளாக் வாங்கணும். எவ்வளவு அழகு அழகான கடியார மெல்லாம் வந்திருக்கு! அப்புறம், பெரிய கண்ணாடி – முசும் பார்க்குற கண்ணாடி வாங்கி மாட்டணும். ஒவ்வொரு ரூமுக்கும் ஸீலிங் ஃபேன் கட்டாயம் தேவை. கோடை காலத்திலே காற்றே இல்லாமல் ரொம்பவும் சிரமமாக இருக்கு”.

“செய்துவிட வேண்டியதுதான். ஒவ்வொருத்தருக்கும் நல்ல ட்ரஸ்கள் வாங்கணும்.”

“கட்டில் கூட வாங்கணும் அப்பா. நாகரிகமா, அழகா, இரும்புக் கட்டில் இருக்குதே – பிளாஸ்டிக் நாடா பின்னினது – அது வாங்கணும். ஆளுக்கு ஒண்ணு. கீழே படுத்துத் தூங்குறதை விட கட்டில்லே படுப்பதுதான் சுகமா இருக்கும்.”

ஆமாமா என்று தலையாட்டி னார் அப்பா .

“லீவு வந்ததும், ஊட்டி கொடைக் கானல் குற்றாலம் எல்லாம் போய் வரதும். என் பிரண்ட்ஸ் எங்கெங்கேயோ போய் வராங்க. நாம தான் எங்கேயும் போறதில்லை” என்று குறைபட்டுக் கொண்டான் கண்ணன்.

‘பணம் நிறைய இருந்தால் நாமும் போய் வரலாம்.”

“அதுதான் நாளைய குலுக்கலில் கிடைக்கப் போகுதே!” என்று உற்சாகமாகச் சொன்னான் சிறுவன்.

அனைத்தையும் மௌனமாகக் கேட்டபடி அடுப்படி வேலைகளில் ஈடுபட்டிருந்த அம்மா சிரித்துக் கொண்டாள். பையனின் சந்தோஷத்தில் மண்ணை அள்ளிப் போடும்படியாக ஏதாவது சொல்வானேன் என்ற நினைப்பு அவளுக்கு.

மறுநாள் பத்திரிகை வந்ததும். முதல் காரியமாக சின்னக் கண்ணன் அதிர்ஷ்டப் பரிசு முடிவுகளைத் தான் பார்த்தான். தங்கள் சீட்டையும் பத்திரிகையையும் உன்னிப்பாக நோக்கினான்.

“என்னை கண்ணா, நம்பர் இருக்கா?” என்று அப்பா கேட்டார்.

“இல்லே அப்பா. பத்து ரூபாய் பரிசு கூடக் கிடைக்கலே. கடைசி எண் எட்டு இருந்தால் நமக்கு பத்து ரூபா கிடைச்சிருக்கும் நம்ம சீட்டிலே கடைசி எண் ஆறு என்று இருக்கு.”

“போகுது போ. ஒவ்வொரு தடவையும் இது மாதிரிதான் ஆகுது. அதிர்ஷ்டம் கிட்டத்திலே வர்ற மாதிரி இருக்கு. ஆனா எட்டிப் போயிருது” என்றார் அப்பா.

கண்ணன் தன் வேலைகளை கவனிக்கப் போனான். உரிய நேரத்தில் ஸ்கூலுக்குப் புறப்பட்டான்.

“கண்ணா!” என அழைத்தார் அப்பா .

“முப்பதாம் தேதி குலுக்கல் ஒரு லாட்டரி இருக்குது அல்லவா?”

“என்னப்பா?”

“நீ வரும் போது அதிலே ஒரு சீட்டு வாங்கிட்டு வா. இந்தா ரூபா.”

அவன் ரூபாயை வாங்கிக் கொண்டான், சாமி படத்தின் முன்னே நின்று கண்களை மூடி, கை கூப்பி வணங்கினான். மனசுக்குள் வேண்டிக் கொண்டிருக்கலாம்.

“போயிட்டு வாரேன் அப்பா…அம்மா, போயிட்டு வாரேன்” – கூவியபடி வெளியேறினான் கண்ணன்.

“ஆமா. நமக்குத்தான் பரிசு விழுவதே இல்லையே. எதுக்கு திரும்பத் திரும்ப லாட்டரி சீட்டு வாங்குறீங்க?” என்று அம்மா கேட்டாள்.

“என்னைக்காவது ஒரு நாள் விழாமலா போகப் போகுது? நிச்சயமா விழும். பெரிய பரிசு. அது வந்ததும் நாம வசதியா ஒரு வீடு வாங்காமலா இருக்கப் போறோம்?” என்றார் அவர். நம்பிக்கையோடு.

அவள் சிரித்தாள். “நீங்களும் கண்ணன் மாதிரி சின்னப்பிள்ளை தான். ஒவ்வொரு தடவையும் சீட்டு வாங்குறதும். குலுக்கலுக்கு முந்தின நாள், அதை வாங்குவோம் இதை வாங்குவோம். அங்கே போவோம். இங்கே போவோம்னு ஆசையா பேசி மகிழ்வதும் உங்க ரெண்டு பேருக்கும் வேலையாப் போச்சு. இப்படி எத்தனை காலமா நடக்குது! உங்களுக்கு இன்னும் அலுத்துப் போகலையா?” என்று கேட்டாள்.

“வறண்ட வாழ்க்கையில பசுமையான கணங்கள் அவை. சந்தோஷத்தை வளர்க்கும் இனிய நினைப்புகள். அப்படி ஆசையோடு நினைப்புகளை வளர்ப்பதிலே ஒரு தனி சந்தோஷம் உண்டாகுது. அதை நீ ஏன் கெடுக்க விரும்புகிறே?” என்றார் அப்பா .

– ஏப்ரல் 1991

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *