காணாமல் போனவன்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: March 26, 2020
பார்வையிட்டோர்: 6,339 
 

காணாமல் போனவர் குறித்த அறிவிப்பினை தொலைக்காட்சியில் பார்த்துக் கொண்டிருந்தான் காணாமல் போனவன்.

‘இடது மார்பில் ஒரு ரூபாய் அளவுக்கு மச்சம் இருக்கும்’ என்று அடையாளம் சொல்லியிருக்கிறார்கள். சட்டைப்பைக்குள் கைவிட்டு ஒரு ரூபாய் நாணயம் எடுத்தான். இரு பட்டன்களை கழற்றி மச்சத்தைப் பார்த்தான். அதன் மேல் ஒரு ரூபாய் நாணயம் வைத்தான். ம்ஹூம். மச்சம் இன்னும் பெரியது. பழைய ஒரு ரூபாய் நாணயத்தின் அளவுக்கு இருந்தது.

எதிரில் உட்கார்ந்திருந்தவன் இவனை வினோதமாக பார்த்தான். அவன் தலைக்கு மேலாக கொஞ்சம் தள்ளி டிவி இருந்தது. திரும்பிப் பார்த்திருந்தால் ஒருவேளை இவன்தான் அவன் என்று தெரிந்துக் கொண்டிருப்பான்.

டீக்கடை டேபிள் மீது இருந்த தினத்தந்தியைப் புரட்டினான். ஏழாம் பக்கத்தில் இவனுடைய படத்தோடு ‘காணவில்லை’ விளம்பரம் வந்திருந்தது. அம்மா படுத்த படுக்கையாக கிடக்கிறார். மனைவி பச்சைத் தண்ணீர் கூட அருந்தவில்லை. செல்ல நாய்கள் இரண்டும் உண்ணாவிரதம் இருந்து குலைத்துக்கொண்டே இருக்கின்றன போன்ற அரிய தகவல்களை கொடுத்திருந்தார்கள். காணாமல் போனவன் எந்த சலனமும் இல்லாமல் பேப்பரை மடித்து வைத்தான். குடித்த டீக்கு காசு கொடுத்தான்.

டீக்கடையை விட்டு வெளியே வந்ததும், உடல் எந்த திசை நோக்கி நின்றதோ அந்த திசை நோக்கி நடந்தான். டிவியில் காட்டுகிறார்கள். பேப்பரில் விளம்பரம் கொடுத்திருக்கிறார்கள். ஊரெல்லாம் சுவரொட்டி ஒட்டியிருக்கிறார்கள். ஆனால், இந்த மாநகரில் நான்கு நாட்களாக இவனை கடந்து சென்ற லட்சம் பேரில் ஒருவன் கூட அடையாளம் கண்டுகொள்ளவில்லை.

காசுதான் தண்டம். இனிமேல் யாராவது காணாமல் போனால் விளம்பரம் கொடுத்து காசை வீணாக்கக்கூடாது என நினைத்தான். பிறகு தான் என்ன நினைத்தானோ அதற்காக வேதனை அடைந்தான். இவன்தான் காணாமல் போய்விட்டானே. இனி எதற்கு வருங்காலத்தில் காணாமல் போகப்போகிறவர்களை பற்றி கவலைப்பட வேண்டும்.

போக்குவரத்து சிக்னலில் சிகப்பு விளக்கு எரிந்துக் கொண்டிருந்தது. மனிதன் சுதந்திரமாக நடப்பதைகூட சிக்னல் போட்டு கட்டுப்படுத்துகிறார்கள். சிக்னலில் எந்த பக்கத்துக்கோ பச்சை சுதந்திரம் கிடைத்தது. விரைந்து நகராவிட்டால் உலகம் அழிந்துவிடுமோ என்கிற அவசரத்தில் பைக்குகளும், கார்களும் சீறிப்பாய்ந்தன. அடுத்த பக்கத்தில் எதிர்வாடைக்கு வருவதற்கு சிக்னலுக்காக காத்திருந்தவர்கள் கோட்டை தாண்டி கொஞ்சம் கொஞ்சமாக நத்தை மாதிரி ஊர்ந்துக் கொண்டிருந்தார்கள்.

நடப்பதற்கு அனுமதிக்கப்பட்ட வெளியில் பச்சை சமிக்ஞையை எதிர்ப்பார்த்து இவனுக்கு பின்னால் கூட்டம் சேர ஆரம்பித்தது. அம்மாவின் கைபிடித்து வந்த ஆறுவயது சிறுவன் ஒருவன் சட்டென்று கையை உதறிவிட்டு சுயேச்சையாக இயங்க விரும்பினான். ‘கூட்டத்துலே காணாமப் போயிடுவே’ என்று அம்மா எச்சரித்து, மீண்டும் வலுப்பிடியாக அவனுடைய கையைப் பிடித்தாள். ‘அவன் காணாமதான் போவட்டுமே’ என்று அந்த பெண்மணியை பார்த்து இவன் சொன்னான். முகத்தை கடுகடுவென்று வைத்துக்கொண்டு, ‘பைத்தியம் போலிருக்கு’ என்றாள். சிக்னல் விழ, எல்லோரும் இவனை கடந்துப் போனார்கள்.

மந்தைகளின் மத்தியில் செம்மறியாய் நடப்பதை இவன் வெறுத்தான். அதற்காகதான் காணாமலும் போனான். எனவே வந்த வழியே திரும்பி நடக்க ஆரம்பித்தான். நெற்றியில் வழிந்த வியர்வை கண்ணில் பட்டு எரிய ஆரம்பித்தது. கைதூக்கி தோளில் முகம் புதைத்து துடைத்தான்.

காணாமல் போக வேண்டும் என்று அவனுக்கு வேண்டுதல் எதுவும் இல்லை. திடீரென்று தோன்றியது. காணாமல் போய்விட்டான். ‘கண்ணுக்கு தெரியாம எங்கேயாவது போய் தொலை’ என்று எத்தனையோ முறை எத்தனையோ பேர் திட்டியிருக்கிறார்கள். அப்போதெல்லாம் தொலைந்து போக தோன்றவேயில்லை.

காணாமல் போன அன்று என்ன நடந்தது என்று பட்டியல் இட்டான்.

ஆறு மணிக்கு எழுந்தான்.

காலைக்கடன்களை முடித்தான்.

அவசரமாக பேப்பர் படித்தான்.

குளித்தான்.

காலையுணவு உண்டான்.

மனைவிக்கு முத்தம் கொடுத்தான்.

அம்மாவுக்கு டாட்டா சொன்னான்.

நாய்களை தடவி கொடுத்தான்.

பைக்கை எடுத்தான்.

தெரு முனையில் நின்று சிகரெட் பிடித்தான்.

சிக்னலில் நின்றான்.

ஊர்ந்து ஊர்ந்து சிக்னலுக்கு வந்து மீண்டும் நின்றான்.

அலுவலகத்துக்கு அரை மணி நேரம் தாமதமாக வந்தான்.

மேனேஜரின் குரைப்பை சகித்துக் கொண்டான்.

கடுமையாக வேலை பார்த்தான்.

மதிய உணவு உண்டான்.

ஒரு சிகரெட் பிடித்தான்.

மீண்டும் வேலை பார்த்தான்.

ஆறு மணிக்கு கணினியை அணைத்தான்.

எல்லோருக்கும் ‘பை’ சொன்னான்.

ஒரு சிகரெட் பிடித்தான்.

செல்போனை குப்பைத்தொட்டியில் வீசினான்.

காணாமல் போய்விட்டான்.

ஏன் காணாமல் போனான். ஏன் காணாமல் போகக்கூடாது என்று அவனுக்கு பட்டது. போனான்.

இலக்கில்லாமல் நடந்து கொண்டிருந்தபோது முன்பு டீ குடித்த அதே டீக்கடை திரும்பவும் வந்தது. ஒரு சிகரெட்டு வாங்கிக்கொண்டு நுழைந்தான். டிவி அணைக்கப்பட்டிருந்தது. யாரோ தினத்தந்தி படித்துக் கொண்டிருந்தார்கள். ஏழாம் பக்கம். சலனமே இல்லாமல் அவன் திருப்பிவிட்டு, ‘பேப்பர் வேணுமா?’ என்று இவனிடம் கேட்டு, இவன் சம்மதத்தை எதிர்ப்பார்க்காமல் கையில் திணித்துவிட்டு போனான்.

‘மாஸ்டர், ஸ்ட்ராங்கா சர்க்கரை தூக்கலா ஒரு டீ’ சொல்லிவிட்டு சிகரெட்டை பற்றவைத்தான். புகையை வெளியில் விட்டான். தான் ஏன் சிகரெட் பிடிக்கிறோம் என்று அவனுக்கு காரணமே தெரியவில்லை. கையிலிருந்த சிகரெட்டை காலில் போட்டு நசுக்கினான். டீ குடித்தான். காசு கொடுத்தான். மீண்டும் நடந்தான்.

விபத்தில் மரணமடைந்தவனுக்கு வீரவணக்கம் போஸ்டர் ஒட்டி இருந்தார்கள். விபத்துக்கும் வீரத்துக்கும் என்ன தொடர்பு? ‘கிரிக்கெட் வீரன்’ என்கிற சொல்லில் கூட காணாமல் போனவனுக்கு ஒப்புதல் கிடையாது. கிரிக்கெட் ஆடுவது எப்படி வீரம் ஆகும்? ‘அழகி கைது’ என்று தலைப்பிடப்பட்டு பிரசுரிக்கப்படும் படங்களில் இருக்கும் பெண்கள் அழகிகளாக இருப்பதே இல்லை. காணாமல் போனால் இப்படியெல்லாம் சிந்திப்பதற்கு எவ்வளவு நேரம் கிடைக்கிறது.

ஒரு நாய் குலைத்துக் கொண்டிருந்தது. சுடிதார் அணிந்த கிழவி செல்போனில் யாருடனோ கடலை போட்டுக் கொண்டிருந்தாள். ஒரு கள்ளக்காதலன் திடீரென்று மனம் திருந்தி, ‘சாப்பிட்டியா?’ என்று மனைவிக்கு குறுஞ்செய்தி அனுப்பிக் கொண்டிருந்தான். எழுத்தாளன் ஒருவன், விகடனில் பிரசுரம் ஆகியிருந்த தன் கதைக்கு தானே ஃபேக் ஐடியாக வாசகர் கடிதம் எழுதுகிறான். கல்லூரி மாணவி ஒருத்தி ஃபேஸ்புக்கில் ரன்பீர் கன்பூர் படத்துக்கு லைக் போட்டுக் கொண்டிருக்கிறாள். அவளை சைட் அடிக்கும் பையன், இவளை கட்டிக் கொண்டால் நெட்டுக்கு பில்லு கட்டவே நட்டு கழண்டுவிடும் போலிருக்கு என்று கவலைபட்டுக் கொண்டிருக்கிறான். அக்னி வெயிலில் கருகிப்போன டிரைவர் சட்டையை கழட்டிவிட்டு கையில்லாத பனியனோடு பஸ் ஓட்டுகிறான். கோயம்பேட்டில் பூ வாங்கிவிட்டு திரும்பும் பூக்காரி அவனை ஓரக்கண்ணால் பார்க்கிறாள். அந்த பஸ்ஸில்தான் காணாமல் போனவன் ஏறினான்.

ஏதோ ஒரு நிறுத்தத்தின் பெயரை சொல்லி கண்டக்டர் இறங்கச் சொன்னான். இவனும் இறங்கினான். இலக்கில்லாமல் நடந்தான். காணாமல் போன இவன் வீட்டுக்கே அறியாமல் சென்றான்.

மனைவி இண்டர்நெட்டில் சமையல் குறிப்பு தேடிக் கொண்டிருந்தாள்.

அம்மா, டிவி சீரியல் பார்த்துக் கொண்டிருக்கிறாள்.

நாய்கள் இரண்டும் நாக்கைத் தொங்கப் போட்டுக்கொண்டு தெருவை வெறித்துக் கொண்டிருந்தன.

இவன் வந்ததை யாரும் பொருட்படுத்தவே இல்லை. குரல் கொடுத்து அழைத்தான். எந்த சலனமுமில்லை. எல்லோருக்கும் காது செவிடாகி விட்டதா? குருடாகி விட்டார்களா?

ஓடிப்போய் மனைவியை உலுக்கினான். வெறும் காற்றை பிடித்து உலுக்குவது மாதிரி இருந்தது. இவனது உலுக்கல் அவளிடம் எந்த அசைவையுமே ஏற்படுத்தவில்லை.

அம்மா பார்த்துக் கொண்டிருந்த டிவியை மறைத்து நின்றான். இப்படி ஒருவன் நிற்பதே அவளது கண்களுக்கு தெரியவில்லை. இவனை ஊடுருவிக் கொண்டு அவளால் சீரியல் பார்க்க முடிந்தது.

நாய்களிடம் போனான். இவன் வந்திருப்பதையே அவை உணரவில்லை.

காணாமல் போனவன், தான் காணாமல் போனதற்காக முதல் தடவையாக பதட்டம் அடைந்தான்.

வேகமாக சாலை நோக்கி ஓடினான். ஒலி எழுப்பிக்கொண்டு படுவேகமாக குடிநீர் லாரி வந்தது. தவிர்த்துக்கொள்ள சமயமில்லை. முடிந்தது கதை என்று நினைத்தான். அதுவோ இவனை ஊடுருவிக்கொண்டு நகர்ந்தது. குழம்பினான். கதறினான். தேம்பி தேம்பி அழுதான். காணாமல் போனவனின் இருப்பை எவருமே உணரமுடியவில்லை. இவனுக்கு ‘எக்சிஸ்டென்ஷியலிஸம்’ என்கிற சொல்லே அர்த்தமற்றதாகி விட்டது.

தாரை தப்பட்டையோடு எதிர்ப்பட்டது சாவு ஊர்வலம். உற்றுப் பார்த்தான். வித்தியாசமாக உணர்ந்தான். ஊர்வலத்தில் வந்த அத்தனை பேருமே இவனாக இருந்தார்கள். அந்த ஊர்வலத்தோடு சேர்ந்து நடந்தான். செத்தவன் எவன் என்று தெரியாமலேயே செத்தவனுக்காக வாயில் வயிற்றில் அடித்துக்கொண்டு அழுதான்.

சுடுகாட்டில் பிணத்தை இறக்கிவைத்தார்கள். வெட்டியானாகவும் அவனே இருந்தான். பிணமேடையில் கிடத்தப்பட்ட பிணத்தின் மீது வறட்டிகளையும், கட்டையையும் லாகவமாக வெட்டியான் அடுக்கினான். கொள்ளி போடுபவனும் இவன்தான்.

‘முகம் பார்க்குறவங்கள்லாம் பார்த்துடுங்க. உடன் பால்’ வெட்டியானின் குரல் கேட்டதும் காணாமல் போனவனுக்கு முகம் பார்க்க ஆசை வந்தது.

பிணமும் இவனே.

காணாமல் போனவன் நிஜமாகவே காணாமல் போய்விட்டான்.

– மே 2015

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *