கரையை மீறும் அலைகள்

0
கதையாசிரியர்:
தின/வார இதழ்: கல்கி
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: September 22, 2022
பார்வையிட்டோர்: 11,611 
 

(1980ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

நான் ஒரு காஸ்மெடிக் ரெப்.

பெயர்? ராமானுஜ வெங்கடேசப் பெருமாள். என்னுடைய நண்பர்கள் அழைப்பது ராம். அப்பா போன வருஷம் வரைக்கும் ‘தண்டச் சோறு’ என்று கூப்பிட்டுக்கொண்டிருந்தார். வேலை கிடைத்து முதல் மாதச் சம்பளக் கவரை அவரிடம் நீட்டிய போது அந்தத் ‘தண்டச் சோறு’ பட்டத்தை வாபஸ் வாங்கிக்கொண்டு, ‘மகனே ராமானுஜா’ என்று உச்சி மோந்தார். என் உயரம் அமிதாப்பச்சன் காதுக்கு வருவேன். ஸ்டெப் கட்டிங் வைத்துக் கொள்ள ஆசைப்பட்டு இப்போதுதான் முடி வளர்க்க ஆரம்பித்திருக்கிறேன். கிருதா கொஞ்சம் கூடுதல் அடர்த்தியுடன் சர்ரென்று இறங்கியிருந்தது. நிறம்? நானே பெருமை அடித்துக் கொள்வதாக நினைத்துக் கொள்ளாதீர்கள். நான் வெற்றிப் பாக்கை மெல்லும்போது நீங்கள் என் எதிரில் இருந்தால், என் தொண்டை வழியே வெற்றிலைச் சாறு இறங்குவதைப் பார்த்துத் திகைத்துப் போவீர்கள்.

வயது 4×7.

கல்யாணம்? பெரிய இடத்தில் பார்த்துக் கொண்டிருக்கிறேன். பெண் எப்படி இருந்தாலும் கவலை யில்ளை. பெண்ணுக்கு அப்பா அதாவது என் மாமனார் ஆகப் போகிறவர் நல்ல ‘பசை’யோடு இருக்க வேண்டும்.

விவரம் தெரியாத வயசில் அம்மா மைனஸ் . ரிடையராகி ஈஸிச் சேரில் சாய்ந்து கொண்டு பெரிய எழுத்து விக்கிரமாதித்தன் கதைப் புத்தகத்திலிருந்து ஹெரால்டு ராபின்னின் பைரேட் வரைக்கும் படித்துக் கொண்டிருக்கும் அப்பா. உருப்படியாய் இருந்த ஒரே அண்ணன் தான் என்னைப் படிக்க வைத்தான். அண்ணன் இப்போதும் நெய்க்காரன் பட்டியில் எங்கள் குடும்பச் சொத்தான மூன்று ஏக்கர் நிலத்தில் எள்ளும் கொள்ளும் விதைத்துக் கொள்ளை கொள்ளையாய்ச் சம்பாதித்துக் கொண்டிருக்கிறான்.

எம்.பி.பி.எஸ். படிக்க ரொம்பவும் ஆசைப்பட்டேன். மெட்ராஸ் யூனிவர்ஸிடி கைகளை அகல விரித்து எனக்கு ‘பெப்பே’ காட்டிவிட்டு, பி.எஸ்.ஸி. கெமிஸ்ட்ரிக்குப் போ என்றது. போனேன். கொடுத்ததைச் சிரத்தையாகப் படித்து முடித்து வஞ்சனையில் லாமல் முதல் வகுப்பில் தேறினேன்.

‘இஃப் பூ ஆர் ஸ்மார்ட் அண்ட் எனர்ஜடிக்’ – பம்பாயில் உள்ள ஒரு காஸ்மெடிக் கம்பெனி ரெப்ரஸென்டேட்டில் போஸ்ட்களுக்காக என்னைப் போன்ற இளைஞர்களுக்காக வலை வீசியது. நான் ஒழுங்காய் ஷேவ் செய்து பவுடர் பூசிக்கொண்ட முகத்தோடு எடுத்துக்கொண்ட பாஸ்போர்ட் சைஸ் போட்டோவோடு அப்ளை செய்தேன்.

அடுத்த வார இறுதியில் இண்டர்வியூவுக்குக் கூப்பிட்டார்கள். கம்பெனி செலவில் முதல் வகுப்பில் ஜெயந்தி ஜனதாவில் சென்றேன்.

கம்பெனி நிர்வாகியான வழுக்கைத் தலைக்காரர் மெதுவான குரலில் கேள்விகள் அடுக்க – அழகான ஆங்கிலத்தில் ஆணித்தரமாகப் பதில் கூறி அவரை அயர வைத்தேன், இரண்டொரு சந்தேகங்கள் அவரிடமே கேட்க முயன்றதைத் தொடர்ந்து அவர் முகத்தில் அரும்பிய வியர்வையோடு ”யூ…மே. கோ…” என்றார்.

திரும்பி வருகிற ஜெயந்தி ஜனதா பிடித்து வீடு வந்து சேரவில்லை – அதற்குள் – டெலிகிராமில் அப்பாயிண்ட் மெண்ட் ஆர்டர் பறந்து வந்தது.

கோயமுத்தூரில் குப்பை கொட்டச் சொல்லி உத்தரவு. ஒழுங்காகக் கொட்டிக் கொண்டிருக்கிறேன்.

***

ஆர்.எஸ்.புரம்.

கென்னடி தியேட்டருக்குப் பக்கத்தில் இருந்த தள்ளு வண்டி மறைவில் நின்று கொண்டு ஹேண்ட் பாக்கை கக்கத்தில் இடுக்கிக்கொண்டு பேல் பூரி சாப்பிட்டுக் கொண்டிருந்தேன்.

‘ஹலோ ராம்’ என்ற கட்டைக் குரல் கேட்டது. பக்கவாட்டில் திரும்பினேன்.

என்னேட சிநேகிதன் கார்த்தி ஸ்கூட்டரோடு நின்றிருந்தான்.

“தின்னுட்டு சீக்கிரம் வாடா ஒரு குட் நியூஸ் சொல்லணும்…”

“ஈஸ் இட்? இதோ வரேன், சேட்! பானி பூரி கான்ஸல் கரோ!” சேட்டுக்குக் காசைக் கொடுத்துவிட்டு, கார்த்தியோடு நடந்தேன்.

“என்னடா குட் நியூஸ்?” என்றேன்.

“எனக்குக் கல்யாணம் நிச்சயமாயிடுச்சுடா…”

“அடி சக்கை! கங்கிராட்ஸ்! பொண்ணு யாருடா?”

“ஊரு திருப்பூர், பொண்ணு எஸ்.எஸ்.எல்.சி. படிச்சிருக்கா. பேரு பாக்கிய லட்சுமி…”

நான் முகத்தைச் சுளித்தேன்.

“பாக்கியலட்சுமியா? எஸ்.எஸ்.எல்.சி.யா?”

“பேர்லேயும் படிப்பிலேயும் என்னடா இருக்கு. பொண்ணு நல்லா இருக்கா… டீஸண்டான ஃபேமிலி. போட்டோவை என்னோட அப்பா அனுப்பியிருக்கார். பார்” அவன் தன் சட்டைப் பையினின்றும் ஒரு பாஸ்போர்ட் சைஸ் போட்டோவை உருவி என்னிடம் நீட்டினான்.

அலட்சியமாகப் பார்த்தேன். அழகாகத் தான் இருந்தாள், கன்னத்தில் ஒரு பரு தெரிந்தது. போட்டோவிலிருந்து பார்வையைத் திருப்பாமல் கேட்டேன். “பொண்ணு பெரிய இடமா?”

கார்த்தி உதட்டைப் பிதுக்கினான். “பொண்ாேட அப்பா ஏதோ ஒரு மில்லிலே ஹெட் கிளார்க்கா இருக்கார்… சுமாரான குடும்பம் தான். மூணு பொண்ணு…இவ மூத்தவ…பொண்ணு அழரு அடக்கம் என்கிறதனாலே அம்மாவுக்கும் அப்பாவுக்கும், ரொம்பவும் பிடிச்சிருக்கு.”

“வாழ்க்கையில் நாம் வசதியா வாழனும்னா நாம் தேர்ந்தெடுக்கிற இடமும் வசதியா இருக்கணும்.. நீ அதில தவறிட்டே…”

“எனக்கு இருக்கிற வசதி போதுண்டா..மாமனாரோட தயவோ சொத்தோ எனக்கு வேண்டியதில்லை…”

“உனக்கும் கல்யாண ஆசை ஜாஸ்தி யாயிடுச்சு, பாக்கிய லட்சுமியோட படம் உன்னை மாத்திடுச்சு. எனி ஹௌ மை அட்வான்ஸ் கான்கிராட்ஸ்!”

அவன் கையைப் பற்றிக் குலுக்கினேன்.

அவன் கேட்டான்: ”உனக்கெப்போ கல்யாணம்?”

“உன்னை மாதிரி தான் அவசரப்படப் போறதில்லை, பசை உள்ள இடமா அதுவும் வஜ்ஜிர பசையா இருக்கணும். அந்த மாதிரி இடத்திலேதான் பெண்ணை எடுக்கப் போறேன். வரதட்சிணையா பத்தாயிரம்… தலை தீபாவளிக்கு வைர மோதிரம். ஆடிப் பண்டிகைக்கு வாட்ச்…ஆபீஸ் போய்வர ஸ்கட்டர். ஐஸ் வாட்டர் குடிக்க ஃபிரிட்ஜ்… பாப் மியூஸிக் கேட்க ரேடியோகிராம்…”

நான் பேசிக்கொண்டே போக…

“அத்தனை வசதிகளோட இந்த ஜன்மத்திலே உனக்கு எவளும் கிடைக்க மாட்டா.”

“பார்க்கலாமா?” – நான் ரோஷமாய்க் கத்த…

“பார்க்கலாம்” – அவனும் கத்தினான்.

***

கார்த்தியோடு சவால் விட்டு மூன்று மாதம்கூட ஆகவில்லை.

அன்றைக்கு என்னோட அண்ணன் நெய் காரன்பட்டியிலிருந்து கடிதம் எழுதியிருந்தான், ஏதாவது பணம் கேட்டுக் கடிதம் எழுதியிருப்பானோ என்ற மன உதைப்போடு கடிதத்தைப் பிரித்தேன், படித்தேன்.

அன்புள்ள தம்பி ராமுவுக்கு!

உனக்கு ஓர் இடத்தில் பெண் பார்த்து வைத்திருக்கிறேன். பெரிய இடம். சேலத்தில் அவர் பத்தாவது பணக்காரராம். நான்கு பெண்கள், நாலாவது பெண்ணுக்குத்தான் உன்னைப் பார்த்திருக்கிறேன், சீர், செனத்தி, நகை, நட்டு, வாகனம் எல்லாம் சிறப்பாய்ச் செய்வார்களாம். நம் தரகர் சொன்னார், பெண் கொஞ்சம் மாநிறம் தான், ஆனால் லட்சணமாய் இருக்கிறாள்.

நீ ஒரு நாள் லீவு எடுத்துக் கொண்டு இங்கு வந்தால் சேலம் போய்ப் பெண்ணைப் பார்த்துவிட்டு வரலாம்.

– சென்ன கேசவ நாராயண பெருமாள்

விட்டலாச்சார்யா படத்தில் வருமே ஒரு மாய ஜமுக்காளம், அதில் உட்கார்ந்து வான வெளியில் பறப்பதைப் போல் ஓர் உணர்வு என்னை வியாபித்துக் கொண்டது.

“அடேய்… கார்த்தி! பார்த்தியாடா… ஐயாவோட ஜாதகத்தை! எல்லாக் கிரகங்களும் உச்சமாய் இருந்தாலொழிய இந்தக் குபேர அதிர்ஷ்டம் வராதுடா! சேலத்திலேயே பத்தாவது பெரிய பணக்காரராம் என் வருங்கால மாமா! நான் ஒட்டிக் கொள்ளப் போகிற பசை சாதாரன பசையில்லேடா பலாப்பழ பிசின்!”

மனசுக்குள் உரக்கச் சொல்லிச் சந்தோஷத்தைக் கொண்டாடினேன், அன்றைக்குச் சாயங்காலமே என் பாட்டியைப் பத்தாவது முறையாகச் சாகடித்து இரண்டு நாள் லீவு வாங்கிக் கொண்டு புழுதி பறக்கப் பறக்க பஸ்வில் புறப்பட்டுப் போய் நெய்க்காரன் பட்டியில் இறங்கி அண்ணனையும் அண்ணியையும் வாயாரப் புகழ்ந்து ஐஸ் வைத்து சேலத்துக்கு உடனே புறப்பட்டுப் போய்ப் பெண்கணைப் பார்க்க ஆயத்தமானேன்.

பெண்ணுக்கு அப்பா – மோதிரங்கள் மின்னும் கைகளைக் கூப்பி எனக்கு ஸ்பெஷலாய்க் கும்பிடு போட, பெண்ணுக்கு அம்மா தன் மூன்று நாடி உடம்பை ஒன்பது கெஜம் தங்கச் சரிகை மேய்ந்த பட்டுப் புடவையால் இன்னும் இறுக்கமாய்ப் போர்த்திக்கொண்டு வெட்கப்பட்டாள்.

எனக்கு மனைவியாகப் போகிற பத்மா என்கிற பதம்லோசனி இரண்டரை நாடி சரீரத்தோடு கழுத்தே இல்லாமல் ஏராளமான மார்போடு வெட்கப்பட்டுக் கொண்டே வந்தாள்.

பெண்ணுக்கு அப்பா ஒரு அசட்டு இனிப்பு இளித்தார். “ஹி…ஹி…பொண்ணுக்குக் கொஞ்சம் பூசின மாதிரி உடம்பு… கொஞ்சம் தாராளமாகச் சாப்பிடுவா… ஹி…ஹி”

பத்மலோசனி என்னை ஆசையோடு பார்வையாலேயே விழுங்க – நாள் நெளிந்தேன் வெட்கப்பட்டுக் கொண்டு! இதைச் சமாளிக்க முடியுமா?

காருக்கும் பங்களாவுக்கும் – நகைகளுக்கும் பாங்கில் தூங்கும் பணத்துக்கும் –

ஆசைப்பட்டுக் கொண்டு – சித்த யோகமும் அமிர்தயோகமும் கை கோத்துக் கொண்டு வந்த ஒரு விடியற்காலையில் குளிரில் கைகள் நடுங்கப் பத்மலோசனியின் ரேஸ் கோர்ஸ் மைதானம் மாதிரி இருந்த கழுத்துப் பரப்பில் மூன்று முடிச்சைப் போட்டேன்.

***

அன்றைக்குச் சாயந்திரம் ரிசப்ஷன்.

காற்றடித்த பிரும்மாண்டமான பலூன் மாதிரி என் அருகே உட்கார்ந்திருந்தாள் பத்மலோசனி. மூன்று கஜத்துக்குப் புத்தம் புதிதாய்த் தாலிக் கொடி அவள் கறுப்புக் கழுத்தில் மின்னியது. யாரோ ஒரு கோலாப்பூர் பயில்வானுக்குப் பக்கத்தில் உட்கார்ந்திருப்பதைப் போல் ஓர் உணர்வு. போட்டிருந்த ரோஜா மாலையில் முப்பது சதவீதத்தைத் தின்றுவிட்டிருந்தாள்.

வாழ்த்த வருகிறவர்கள் எல்லாம் என்னைப் பரிதாபமாகப் பார்த்தார்கள்.

‘பார்த்துட்டுப் போங்கடா பொறாமை புடிச்சபசங்களா…ஒரே மாசம்… என்னோட பத்மலோசனியை எப்படி மாத்திக் காட்டறேன் பாருங்கடா!’

சேலையை மாற்றுவதற்காகப் பத்மலோசனியைச் சில பெண்கள் அழைத்துப் போக –

நான் சிகரெட் பிடிப்பதற்காக –

என் அறைக்குத் திரும்பினேன்.

நாற்காலியில் சரிந்தேன்.

என் அறைக்கு எட்டினாற்போலிருந்த நடைபாதையில் அந்தப் பேச்சுக் குரல் கேட்டது.

“நம்ம வைத்தியலிங்கம் கெட்டிக்காரன்! விலை போகாம கன்னங் கரேலென்று காட்டெருமை மாதிரி இருந்த பெண்ணைக் கட்டிக் கொடுத்திட்டானே!”

“அந்தப் பையனுக்கு அந்தப் பெண்ணைப் புடிச்சதோ என்னவோ? எல்லாம் பணத்துக்கு ஆசைப்பட்டு ‘சரி’ன்னு சொல்லியிருப்பான்…”

“அந்த விஷயத்திலேயும் அந்த மாப்பிள்ளை ஏமாறப் போறான்.”

“எப்படி?”

“இதுக்கு, முன்னாடி இருந்த எல்லா மாப்பிள்ளைகளும் ஏகமாக கறந்துட்டானுக…வைத்தியலிங்கத்தோட இந்தப் பங்களா மேலே ஏகப்பட்ட கடன்! இருந்த ரெண்டு மில்லும் லாக் அவுட். லட்சக் கணக்கில் நஷ்டம். ஆயிரம் ரெண்டாயிரம்னா தாங்குவான். லட்சக் கணக்கில் நஷ்டம்னா எவன் தாங்குவான்? இனி மீறிப் போனா ஆறே மாசம்! பங்களாவும் காரும் ஏலத்துக்கு வந்துடும்…கல்யாணக் கூட்டத்தைப் பார்த்தியா? வந்தவங்கள் விரல் விட்டு எண்ணிடலாம்…ஆள் ‘பாப்பர்’ ஆகப் போறான்னு தெரிஞ்சதும் எந்தப் பணக்காரனுமே பக்கத்தில கூட வரல்லே…!”

என் உச்சந்தலையில் சாவகாசமாக இடி இறங்கிக் கொண்டிருக்க நான் ரோகிணி யானேன்.

– 06-07-1980

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *