கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: June 2, 2020
பார்வையிட்டோர்: 3,653 
 

மனிதர்கள் மிருகங்களாக மாறிக் கொண்டிருந்தார்கள்….

இப்படிச் சொல்வது கூடத் தவறுதான்; மனிதர்களுக்குள்ளே நித்தியமாய் நிரந்தரமாய் வைகும் மிருக சுபாவம் – குலம், குணம், கல்வி, தர்ம நியாய உணர்வுகள், சமூகக் கட்டுப்பாடு, நாகரிகம், சட்ட பயம் முதலிய வேலிகளினால் ஒடுக்கம் பெற்று, உள்ளத்தி னுள்ளேயே பதுங்கிக் கிடக்கும் இயல்பு-இப்பொழுது கட்டறுத்துக் கொண்டு துள்ளி எழுந்தது : குதித்துக் கும்மாளியிடத் தொடங்கியது; தன்னிச்சையாக வெறியாட்டம் ஆடிக் கொண்டிருந்தது. இதுவே கண்ணுக்குப் புலனாகும் உண்மையாக ஊர் பூராவும் பரவி நின்றது.

முந்திய தினம் வரை- ஏன்! உணர்ச்சிகள் குமுறிக் கொதித்துச் சூறையாகச் சுழன்று பின்வெறித் தீயாக வெடிப்பதற்கு ஒரு கணத்துக்கு முந்திகூட- “நன்றாக இருந்தவர்கள் திடீரென்று தங்களை மறந்தார்கள். உறவையும், ஊரையும் மறந்தார்கள். இறந்த காலத்தையும் எதிர்காலத்தையும் மறந்தார்கள். நிகழ் காலத்திலே எவ்வளவு தீமை புரிய முடியுமோ – எத்தனை எத்தனை கொடுமைகள் இயற்ற முடியுமோ- என்ன என்ன அட்டூழியங்கள் செய்ய முடியுமோ, அத்தனையையும் – அனைத்தையும் உடனடியாகச் செய்தே தீர்ப்பது என்று துணிந்தவர்களாய், வெறியர்களாய், பித்தராய், பேயராய் சுழன்று கொண்டிருந்தார்கள் அந்த ஊர் மக்களில் ஒரு பகுதியினர்.

அந்த ஊர்- அதன் பெயர் நமக்குத் தேவை இல்லை. வெறி நிலைக்கு முறுகிவிட்ட அகச் சக்திகளும், அவற்றுக்கு . மேலும் முறுக்கேற்றி செயலுக்கு உந்தித் தள்ளும் புறச் சக்திகளும் தூண்டுகின்ற ஒரு சந்தர்ப்பத்தில் – அறிவிலே இருட்டும், பார்வையில் குருட்டுத்தனமும், உணர்ச்சியில் வெறித்தனமும் பெற்றுவிடக் கூடிய மனிதர்கள் வசிக்கிற எந்த ஊரிலும் இத்தகைய விளைவுகள் தான் ஏற்படும்.

கொள்ளை கொலை-தீ!
கற்பழிப்பு – கதறல் – கயமைத்தனம்.
எதிர்த்தல்-தாக்குப் பிடித்தல்-தப்பி ஓடுதல்.
பயந்து பம்முதல்-பழி தீர்த்தல் – சரண் அடைதல்….

இப்படி எவ்வளவோ செயல்கள்… உணர்ச்சி நிறைந்த மனித உருவங்களின் உயிர் இயக்கங்கள்!–

எல்லாம் அவ்வூரிலும் நிகழ்ந்து கொண்டிருந்தன.

இரவு நேரம். எங்கும் ஆட்சி செலுத்தி வந்த இருள் அரக்கனின் அதீதமான சிரிப்பு போல பெரும் நெருப்பு அவ்வூரில் திடீர் திடீரென்று பொங்கி எழுந்தது. வான மண்டலத்தில் அகற்ற முடியாதவாறு பதிந்து கிடந்த இருட்டை சுவைத்து விழுங்க முயல்வன போல் தீ நாக்குகள் எவ்வி எவ்விக் குதித்துக் கொண்டிருந்தன. கனல் பொறிகள் பூலோகத்திலிருந்து கிளம்பிய நட்சத்திரங்கள் என்று சொல்லும்படி பரவிச் சிதறின; மினுக்கின; காற்றோடு கலந்து போயின.

காற்றிலே குழம்பிக் கலக்க முயன்ற அவலக் குரல்களை, அரற்றல் ஒலிகளை, அழுகை ஒலங்களைப் பிரித்துப் பாகுபடுத்துவது என்பது சாத்தியமே அல்ல. அச்சத்தால் ஆட்டிப் படைக்கப்பட்ட மனிதர்களின் ஓலம் – ஆண்களின் வெறிக்கூச்சல்…. பெண்களின் ஒப்பாரி, கீச்சொலி, ஏச்சொலி… குழந்தைகளின் அடங்காத – அடக்க முடியாத – அழுகை… ஒளி மயமாக மாற முயன்று கொண்டிருந்த அந்த ஊர் நானாவித ஒலிகளின் அஞ்சல் நிலையமாகவும் விளங்கியது.

மனிதரின் ஆக்கல் திறமைக்கு எடுத்துக் காட்டுகளாகத் தலை நிமிர்ந்து நின்ற வீடுகளும் பிறவும் அதே மனிதரின் அழிக்கும் சக்தியை விளம்பரப்படுத்துகின்ற சாதனங்களாக மாறிக் கொண்டிருந்த சூழ்நிலையிலே –

ஒதுங்கி நின்ற ஒற்றை வீடு ஒன்று.

அதனுள் பயந்து ஒடுங்கிக் கிடந்த மனித உருவங்கள் இரண்டு. ஒன்று ஆண்; ஒன்று பெண்.

அவன் கணவன். அவள் மனைவி. வாழ்க்கைத் துணைவர்கள்!

கொடிய சோதனையாக எதிர்ப்படுகிற வாழ்க்கையில், தனித்தனியே பயந்து செத்துக் கொண்டிருக்கிற இரண்டு பேர் ஒருவருக்கு ஒருவர் துணையாக முடியுமா என்ன?

எப்படியாயினும், அவள் தனக்குத் துணையாகத் தன் கணவனையே நம்பியிருந்தாள். அவள்?

வெளி உலகத்துப் பயங்கர ஓசைகளைக் காற்றெனும் தூதுவன் கொண்டுவந்து சுவரில் மோதி அடிக்கிறபோது –

அலறல்களும் அபாயக் கூச்சல்களும் வெறி ஒலிகளும் விம்மி எழுந்து பரவிப் பாய்கையில், அவற்றில் ஒரு பகுதியை சன்னல் வடிகட்டி உள்ளே செலுத்தும் போது –

அதே தெருவில் காலடி ஓசைகள் திடும்திடுமென ஒலிக்கும் போது –

வழியோடு போகிற வீணர்களில் எவராவது விளையாட்டாகக் கைத்தடியைச் சுழற்றிச் சுவர் மீது அடிப்பதனாலோ, கல்லை எடுத்து ஓட்டின் மேலே வீசுவதனாலோ ஒலி எழுகிறபோது –

இவ்வாறு; இயல்புக்கு விரோதமான ஓசைகள் அலைமோதும் போதெல்லாம்,

அவன் உள்ளத்தில் பெரும் பயம் தாக்கியது. உடல் நடுங்கியது. அவன் கண்கள் வீட்டினுள் முட்டி மோதி, மோட்டை எட்டிப் பிடித்து, சுழன்று தவித்து, முடிவில் அவள் மீது படிந்தது.

அவள் ஒரு மூலையில் “குறுகுறு வென்று” குந்தியிருந்தாள். முழங்கால்களைக் கட்டிக்கொண்டு, சேலையை இழுத்துப் போர்த்திக் கொண்டு, ஆடாமல் அசையாமல் உட்கார்ந்திருந்தாள். பயம் எனும் பண்பின் பரிணாமமாகக் காட்சி அளித்த அவளுடைய கண்கள் திகிலுற்ற சிறு பிராணியின் கண்களைப் போலவே மிதந்து புரண்டு கொண்டிருந்தன. வெளியே ”திம் திம்” என்று சத்தம் எழுகிற போது அவள் தேகம் பதறியது. அச்சமயத்தில் அவள், உதறலெடுத்து ஒடுங்கி நிற்கும் முயல் குட்டி மாதிரியே காணப்படுவாள். தனது கணவனோடு ஒண்டி இருந்தால் கொஞ்சம் தெம்பாக இருக்கும் என அவள் எண்ணியது உண்டு. ஆரம்பத்தில் அவள் அப்படிச் செய்தபோது, பயத்தினால் நடுங்கிக் கொண்டிருந்த அவன் சீறி விழுந்தான். தான் பயப்படாமல் இருப்பதாகக் காட்டிக் கொள்வதற்குப் பாடுபட்டான் அவன்.

“சீ, என்ன இது சும்மா சும்மா இடிச்சுக்கிட்டு! அப்புடி என்ன பயம் இப்ப? சுத்த வெருவுணி ஆக இருக்கியே, போயி அந்த மூலையிலே கிட” என்று அவன் சிடுசிடுத்தான்.

அவனுக்கும் பயம்தான் என்பதை அவள் அறியாமல் இல்லை. அவனுடைய பார்வையே அதைக் காட்டிவிட்டதே! அதனால்தான் அவன் அவள் பக்கம் பார்வை எறிவதற்குக் கூசினான். ஆயினும், அவளைப் பாராமல் இருக்கவும் இயலவில்லை . ஒரே அறையில் கிடந்து ஒரே விதமான உணர்வுகளை அனுபவிக்க நேர்ந்தவர்கள் ஒருவரை ஒருவர் ஏறெடுத்தும் பாராமல் இருந்து விடுவது என்பது எவ்வளவு நேரத்துக்கு சாத்தியமாகும்?

நேரம் பறக்கவுமில்லை, பாய்ந்து செல்லவுமில்லை – அவர்களைப் பொறுத்தவரை. ஆகவே, அவர்கள் அனுபவித்துக் கொண்டிருந்த வேதனைகளுக்கு ஒரு கால அளவு இல்லை என்றே தோன்றியது. அதனால் அவர்களுடைய தேகத்தின் நரம்புகள் எல்லாம் – அவற்றிலே விளையாடும் உணர்ச்சிகள் எல்லாம் – முறுக்கேற்றப்பட்டு. எந்தச் சமயத்திலும் சீர்கெட்டு நிலைகுலைந்து விடக் கூடிய தன்மையில் தான் இருந்தன. சிறு சலசலப்பு கூட, தெருவோரத்து நாயின் வெறும் குரைப்புகூட, எங்கோ யாரோ எவரையோ கூவி அழைக்கும் கூச்சல் கூட அவர்களுடைய உடல்களைக் குலுக்கி எடுத்தது. எதிர்பாராத வேளையிலே காற்று, குடிபோதையில் தள்ளாடுகிறவன் போல், ஆடி அசைந்து கதவின்மீது மோதுகிற போது – கதவு, லேசாகக் குலுங்கிக் சிற்றொலி. எழுப்புகிற போது – அவள் பதறிப் போய் கதவைப் பார்ப்பாள். அப்புறம் அவனைப் பார்ப்பாள். அவளைப் பார்க்கும் அவனோ மண்ணையும் முகட்டை பார்க்க முயலுவான்.

இவ்வாறு பத்தயத்தினுள் அகப்பட்டுக் கொண்டு தவிக்கும் எலி கள் மாதிரிக் கிடந்த அவர்களுடைய வீடு அடக்கமான பாதுகாப்பு – நல்லதொரு அரண்- சுகமான தங்குமிடம் எனும் தகுதியை இழந்து பயங்கரமான சிறை மாதிரி- எந்த நேரத்திலும் தாக்குதலுக்கு உள்ளாகக்கூடிய இடிந்த கோட்டை மாதிரித்தான் இருந்தது. அதனுள் நெருப்பின் மீது அமர்ந்து விட்டவர்கள் போல் துயர் அனுபவித்துக் கொண்டிருந்த – என்ன நேரும் என்று தெரியாத போதிலும் எதையோ எதிர்பார்த்துக் காத்திருப்பவர்கள் போல் சிரமப்பட்டுக் கொண்டிருந்த – அவ்விருவரின் இதயத்தின் மீது விழுந்த பலத்த அடிப்போல், வயிற்றில் விழுந்த நெருப்புத் துண்டுப் போல், கதவின் மேல் விழுந்தது கனத்த உதை. “ஏய், உள்ளே யாரு?” என்ற உறுமல் தொடர்ந்தது.

அவள் சுவரோடு சுவராகிவிட ஆசைப்பட்டவள் மாதிரி மூலைக்குள் முடங்கினாள். அவன் மிரள மிரள விழித்தான்.

தொடர் இடி எனச் சட சடத்தது கதவின் மேல் விழுந்த தாக்குதல், “மரியாதையாகக் கதவைத் திறக்கிறீங்களா இல்லியா? நாங்களாத் திறந்து கொண்டு உள்ளே வந்தால், அப்புறம் அவ்வளவுதான்! உள்ளே இருக்கிறது யாராயிருந்தாலும் சரி – எத்தினி பேராயிருந்தாலும் சரி – குளோஸ்தான். ஒரே போடு! மண்டையைக் குழைச்சு மாவிளக்கு ஏத்திப் போடுவோம். ஆமா” என்ற பயமுறுத்தல் அழுத்தமாய், கனமாய், வெறிவேகத்தோடு வந்தது.

விளக்கு மங்கலாக எரிந்து கொண்டுதான் இருந்தது. ஆயினும் பேய்த்தனமான கும்மிருட்டு, தாங்க முடியாத – தள்ளி விலக்கிடவும் முடியாத – பாரம் மிகுந்த போர்வை மாதிரித் தங்கள் மீது கவிந்து. தங்களையே அமுக்கி திக்குமுக்காடச் செய்வதாக உணர்ந்தார்கள் அவ்விருவரும்.

கதவு பலமான தாக்குதலை ரொம்ப நேரமாகத் தாங்கி நிற்க முடியாமல் நிலைகுலைந்து இற்று வீழ்ந்தது. திடீரென்று ஏற்பட்ட வழியினூடாகக் காற்று வேகமாகப் பாய்ந்ததும், அவளுடைய தேகம் சிலிர்த்து நடுங்கியது. அது காற்றினால் மட்டுமே ஏற்பட்டதன்று.

இடிந்து சிதறிய வாசலின் நடுவே நிமிர்ந்து நின்றது மனித உருப் பெற்றிருந்த மிருகம். பிரகாசம் இல்லாத ஒளியில் அது நெடிதுயர்ந்து காணப்பட்டது. பின்னால் வெளி உலகில் எங்கும் நிறைந்து கவிந்து கிடந்த காரிருள் அதன் மூர்க்கத்தன்மையை அதிகப்படுத்திக் காட்டியது, இருட்டில் வேறு யாராவது நின்றார்களா – எத்தனை பேர் வந்திருக்கிறார்கள் – இது எதுவும் உள்ளே அஞ்சிக் கிடந்த இரண்டு பேருக்கும் தெரியாது. அதைத் தெரிந்துகொள்ள அவர்கள் ஆசைப்படவுமில்லை.

முன்னால் ஆஜராகி நின்ற ஒருவனே அவர்களைச் சாகடிக்கும் சக்தி பெற்றவனாக இருந்தான். அவனுடைய சக்தியைவிட அதிக வலு உள்ளதாக இருந்தது அவர்களுக்குள்ளிருந்து அவர்களை ஓயாது அரித்துக் கொண்டிருக்கும் பயம் எனும் உணர்வு.

அவன் அவர்களையே பார்த்து நின்று பல்லைக் காட்டினான்.

பற்களைக் காட்டிக்கொண்டு, பயமில்லாமல், எதற்கும் துணிந்துவிட்ட தோற்றத்தோடு முன்னேறுகிற வெறிநாய் மாதிரித்தான் அவனும் நடந்து கொண்டான். அவன் முகத்தைப் பார்ப்பதற்கே பயமாக இருந்தது. அவன் என்ன செய்வானோ என்ற திகைப்பும், அவன் என்ன வேண்டுமானாலும் செய்வான் எனும் நினைப்பும் அவளை உலுக்கின. அவள் தன் கணவன் பக்கம் நகர முயன்றாள். அவனோடு சேர்ந்து இருந்தால் சிறிது தைரியம் ஏற்படாதா என்ற ஆசைதான் காரணம்.

அவர்களை மாறி மாறிப் பார்த்துக்கொண்டே மெதுவாக முன்னால் அடி எடுத்து வைத்த வெறியன் கத்தினான்: “ஏய் நகராதே! யாரும் நகரக் கூடாது. கையைத் காலை அசைத்தீர்களோ, அவ்வளவுதான்!”

அவனது வெறும் அதட்டலே அவளைத் தரையோடு தரையாக ஓட்டிக்கொள்ளச் செய்யும் வன்மை பெற்றிருந்தது. அவள் உடல் நடுங்கியது. உள்ளம் பதைபதைத்தது.
அவளையே வைத்த கண் வாங்காது கவனித்தான் அவ்வெறியன். அவன் உள்ளத்தில் தீய எண்ணம் கிளர்ந்தெழுந்தது என்பதை அவனுடைய கண்களில் பளிச்சிட்ட புதிய ஒளி காட்டிக் கொடுத்தது. தனது பருமனான உதடுகளை அவன் நாவினால் தடவிக் , கொண்டான். அவளை நெருங்க நகர்ந்தான்.

அவள் பயங்கரமாய் கிரீச்சிட்டு அலறினாள். அந்தக் கூச்சல் அவ் வெறியனைக் கூட உலுக்கி நிறுத்தியது ஒரு கணம். அவளுடைய கணவன் பயந்து வெலவெலத்துப்போனான். அவள் அவனைப் பார்த்தாள் – பயத்தோடு, பரிதாபகரமாக, வேதனையோடு. அவன் உதவி புரிய மாட்டானா என்ற ஏக்கத்தோடு – உதவி புரிய வேண்டும் என்ற கெஞ்சுதலோடு – வந்த பார்வை கணவன் என்கிற அந்தஸ்து பெற்றிருந்த அவன் உள்ளத்திலே உரிய கிளர்ச்சியை உண்டு பண்ணவில்லை. தன்னல உணர்வுதான் தலையெடுத்துநின்றது அவனிடம்.

அவன் தலையைத் தூக்கி நெடுகிலும் கவனித்தான். வெளியே நின்று எவரோ எட்டிப் பார்ப்பதுபோல் தோன்றியது அவனுக்கு அறையினுள் நின்ற முரடன் செயல் திறம் இழந்து கிடந்த பெண்ணையே காமக்கனல் ஜொலிக்கும் வெறிக் கண்களால் நோக்கியபடி நின்றான். தன்னிடமிருந்து அவள் தப்பிவிடமுடியாது என்ற நம்பிக்கையோடும். தனக்குக் கிட்டப்போகிற சுவைமிகுந்த விருந்தைப் பற்றிய ஆசை நினைப்பு எழுப்பிய மகிழ்ச்சியோடும் அவன் அவளது உடலை உடலின் ஒவ்வொரு அங்கத்தையும் – பார்வையால் ருசித்துக் கொண்டிருந்தான்.

அவள் தனது தைரியத்தை எல்லாம் பிடித்து இழுத்து ஒன்று திரட்டிக்கொண்டு எழுந்து தன் கணவன் அருகே வந்துவிட ஆசைப்பட்டாள்; முயற்சித்தாள்.
அவள் கணவன் அசைந்தான்.

தனது காரியத்துக்குச் சாதகமாக இருக்கட்டும் என்று தானோ – அல்லது, அவன் திடீரென்று தன்னைத் தாக்கினாலும் தாக்கிவிடக்கூடும் என்ற பயத்தினால் தானோ – அல்லது, எதற்கும் முன்னெச்சரிக்கையோடு பாதுகாப்பாக இருப்பது நல்லது என்ற நினைப்பினால் தானோ என்னவோ, அவ்வெறியன் முதலில் கணவனைக் கவனித்து ஒரு முடிவு கட்டிவிடவேண்டியது அவசியம் என்று தீர்மானித்தான். ”ஏய், என்னடா நீ?” என்று கத்திக் கொண்டு அவனை நோக்கி அடி எடுத்து வைத்தான். கோரமான இரும்பு முட்கள் போல் வளைந்திருந்த விரல்களை நீட்டி அவனுடைய கழுத்தை இறுகப்பற்றி நெரித்துக் கொல்லத் துணிந்தவன் போல் அம் முரடன் முன்னேறினான். “என்ன முறைக்கிறே?” என்று உறுமினான்.

இயல்பாகவே பயந்து செத்துக் கொண்டிருந்த கணவன் இப்போது விதிர் விதிர்த்தான். முரட்டு நாயைக் கண்டதும் அஞ்சி ஒடுங்கித் தனது வாலைச் சுருட்டிப் பின்கால்களுக்கு நடுவே எவ்வளவு திணித்துக் கொள்ள முடியுமோ அவ்வளவுக்குத் திணித்துக் கொண்டு, கண்களில் பணிவு காட்டி, தலையைத் தாழ்த்தியபடி ஒதுங்கி ஒதுங்கிப் போகும் அப்பாவி நாயின் பரிதாபத் தோற்றத்தை நினைவு படுத்துவதாக இருந்தது அவனுடைய அவ்வேளையத் தோற்றம்.

தற்காப்பு உணர்வும், தப்பிப் பிழைக்கவேண்டும் எனும் ஆசையும் அவன் உடலில் புதியதோர் சக்தியைப் புகுத்தின போலும்! இல்லையெனில் அவன் அவ்விதம் நடந்து கொள்வது எவ்வாறு சாத்தியமாகியிருக்கக்கூடும்?… அவன் குபீரென எழுந்து அம்பு போல் வேகமாகப் பாய்ந்தான். திறந்து கிடந்த வாசலின் வழியே ஓடி இருளினுள் மறைந்து விட்டான்.

தன்னைத் தாக்குவதற்காகத் தான் அப்படி அவன் வில்விசை திரித் துள்ளி எழுகிறானோ என்று ஒருகணம் மலைத்து நின்று விட்ட முரடன் அவனுடைய செயலைக் கண்டதும் கடகட வென்று சிரித்தான். உற்சாகத்தோடு ரசித்து வெறித்தனமாகச் சிரித்தான்.

கணவனின் போக்கு மனைவியின் உயிரைப் போக்கடிக்கக் கூடிய அதிர்ச்சியாகத் தோன்றியது. அவள் உள்ளம் செத்துவிட்டது. அலறி அடித்து அழ வேண்டும் போலிருந்தது அவளுக்கு.

தன்னைத் தடுப்பவர் எவருமில்லை என்ற துணிவோடு, உற்சாகத்தோடு, தீமை புரியத் திட்டமிட்ட வெறியன் அவள் மீது கைவைத்தான்.

தீக் கங்கு மேலே பட்டதுபோல் துடித்து அலறினாள் அவள். தன்னைவிட்டுவிடும்படி கதறினாள்.

அவனோ அவள் கூச்சலையும் துயரத் துடிப்புகளையும் வேடிக்கையாகக் கண்டு நகைத்து அவளையே பார்த்தபடி இருந்தான் ஒருகணம். பொங்கி எழுந்த வெறியோடு, உணர்ச்சிக் கொதிப்போடு, மிருகத்தன்மையோடு அவன் அவளைப்பற்றி இழுத்தான்; தழுவ முயன்றான்.

அப்பொழுது அவன். எதிர்பாராத – எதிர்பார்த்திருக்க முடியாத சம்பவம் ஒன்று நிகழ்ந்தது. அவன் மண்டையில் படாரென்று ஒரு அறை விழுந்தது. அவன் முதுகிலும் பட்டது தொடர்ந்து.

அவன் வேதனையோடு திரும்பிப் பார்த்தான். அவனுடைய பிடி சோர்ந்து தளரவும், அவள் விலகி விழுந்தாள். பதறிக் கொண்டு எழுந்து உட்கார்ந்தாள். அவள் பார்வை கையில் தடி ஏந்தி வெறியனைத் தாக்கி நின்ற மனிதனைக் கவனித்தன.

முன்பு அவனைத் தெருவிலும், தோட்டத்திலும் அங்குமிங்கும் அநேக தடவைகள் சந்தித்திருப்பதாக அவளுக்குப் பட்டது. அதற்குமேல் எண்ணிக் கொண்டிருக்க அவகாசமில்லை அவளுக்கு. அங்கிருந்து தப்பி ஓடவேண்டும் என்று அவளுடைய உள்ளுணர்வு தூண்டியது. ஓடமுடியுமா; ஓடினால் எங்கே போவது; இருட்டில் பயம் இல்லாமல் போகமுடியுமா என்று சந்தேகக் குமிழிகள் முகிழ்த்தன அவள் உள்ளத்தில்.

வந்தவனை எதிர்க்கவேண்டும் என்று எண்ணி, அந்த எண்ணத்தை அவன் செயல்படுத்துவதற்கு முன்னதாகவே, தடியின் வேகமான வீழ்ச்சிக்கு எதிரே குறுக்கிட்டது. முரடனின் முகம். அந்த அறையைச் சமாளிக்க முடியாமல் அவன் நிலை குலைந்து விழுந்தான்.

அவன் செத்தானா, அல்லது மயங்கி விழுந்தானா என்பதைப் பற்றிக் கவலை கொள்ளாதவனாய், புதியவன் அவளைப் பார்த்தான். அவன் பார்வையிலே வெறி இல்லை; பெண்மையைச் சுவைக்க வேண்டும் என்ற பசி இல்லை.

அது அவளுக்குப் புரிந்தது. ஆயினும் இவன் என்ன செய்வானோ என்ற உதைப்பு அவள் உள்ளத்தில் இல்லாமல் இல்லை.

“ஊம், சீக்கிரம் இங்கிருந்து தப்பி ஓடுவதே நல்லது. இங்கேயே இருந்தால் என்னென்ன ஆபத்து வருமோ! யாருக்குத் தெரியும்? என்றான் அவன். அக்குரலில் உறுமலோ, கர்ஜனையோ, அதிகார அதட்டலோ இல்லை.

அவளுக்குக் கால்கள் எழவில்லை . அவள் தேகம் பூராவும் படபடவென்ற நடுக்கம் பரவியிருந்தது. நிற்கமுடியாமல் அவள் கீழே விழுந்து விடுவாளோ என்று தோன்றியது. தானாகவே தனியாகச் செயல் புரியும் சாமர்த்தியம் எதுவுமே பெற்றிராத சிறியதொரு பிராணியைப் போல் – ஆற்றல் இல்லாத குழந்தையைப் போல் – தான் அவளும் விழித்துக் கொண்டிருந்தாள்.

சற்றே தயங்கிய அவன் பிறகு துணிந்து கை நீட்டி அவள் கையைப் பிடித்து அவளை இழுத்துக் கொண்டு வெளியேறினான். அவன் நடையிலே வேகம் இருந்தது. அவன் பிடியிலே உறுதி இருந்தது. அவன் கண்களிலே வஜ்ர ஒளி கனல் தெறித்துக் கொண்டிருந்தது.

அவளுக்கு பயமாக இருந்தது. அவளுடைய பயம் சிறிது சிறிதாக அகன்று கொண்டிருப்பது போலவும் தோன்றியது. அவள் அவன் இழுத்த இழுப்பின்படி இயங்கினாள்.
வெளி உலகத்து இருள் அவர்களையும் விழுங்கியது.

***

செல்லம்மா கண் விழித்தபோது,

ஏதோ பயங்கரமான துர்க்கனவின் பேய்ப் பிடியிலிருந்து விடுபட்டு எழுந்தது போன்ற உணர்வு அடைந்தாள். ஆயினும் முந்திய இரவில் நிகழ்ந்தவை எல்லாம் வெறும் கனவுகள் அல்ல என்ற நிச்சயம் அவளுக்கு இருக்கத்தான் செய்தது. அதை உறுதிப்படுத்தியது அவள் கிடந்த புதிய இடம்.

தங்கள் வீட்டில் தானும் தன் கணவனும் அஞ்சி நடுங்கிக் கிடந்ததும். தடியன் புகுந்ததும், தன்னைக் காப்பாற்ற வேண்டிய கணவன் அவள் விதிப்பயன் அவளுக்கு!” என்று எண்ணியவன் போல் ஆபத்து நிலையில் விட்டுவிட்டு ஓடிப்போனதும் அவள் மறந்து விடக்கூடிய அனுபவங்களாக இல்லை. அவை, தீயினால் சுட்ட வடுக்கள் மாதிரி, அவள் நினைவில் ஆழமாகவும் அழுத்தமாகவும் பதிந்து துயருறுத்திக் கொண்டிருந்தன.

அந்நியன் ஒருவன் தைரியமாக வீட்டினுள் புகுந்து அவளுக்குப் பாதுகாப்பு அளிக்கவராது இருந்திருப்பின் அவளுடைய கதி என்ன ஆகியிருக்கும்? அதை நினைக்கவும் அவளுடைய உடல் நடுங்கியது. இதயம் திக்திக் கென்று அடித்துக்கொண்டது.

“நல்ல வேளை! தெய்வம் தான் அந்த நேரத்திலே அவரை அங்கே கொண்டு வந்து விட்டிருக்கணும்” என்று அவள் எண்ணினாள். “அவரு நல்லவரு தான்” என்று நன்றியுடன் நினைத்துக் கொண்டாள்.

வீட்டினுள்ளிருந்து அவளை இழுத்து வந்து இருட்டில் எங்கெங்கோ அவன் அலையவைத்தபோது செல்லம்மா அவனைப் பற்றி மோசமாகத் தான் எண்ணினாள். முதலாவது முரடனைப் போலவே இவனும் கெட்ட எண்ணத்தோடு செயல் புரிகிறவனாகத் தான் இருப்பான் – எவ்வேளையிலும் இவன் தன்னை பலாத்காரம் செய்யக்கூடும் – என்று அவள் நினைத்தாள். அவன் அவசரப்படுத்திக் கொண்டிருந்தான். அவளால் அவனுக்குச் சமமாய் வேகமாக நடக்க இயலவில்லை . பயமும் பலவீனமும் அவளைத் தள்ளாடச் செய்தன. இருட்டு வேறு. சரியான தடமும் இல்லை . அடிக்கடி வழியில் கிடந்த ஏதேதோ அவள் பாதங்களை “சுகம் விசாரித்து” தொல்லை கொடுத்தன. கல்லும் முள்ளும் தங்கள் சக்தியைக் காட்டிக் கொள்ளத் தவறவில்லை . ஒரு இடத்தில் கல் ஒன்று காலில் கடுமையாகத் தாக்கி விடவே, அவள் அம்மா!” என்று ஓலமிட்டுக் கொண்டு உட்கார்ந்தாள். ரத்தம் வருவதாகத் தோன்றியது. சகிக்கமுடியாத வலி. அவனோ “உம்…உம். சீக்கிரம்!…. சத்தம் போடாதே…. எழுந்து மெதுமெதுவாக நடந்து பாரு” என்று சொல்லிக் கொண்டிருந்தான். அவளுக்கு எரிச்சல் ஏற்பட்டது. “நான் எக்கேடும் கெடுகிறேன். என்னை சும்மாவிட்டு விட்டுப் போனால் போதும்” என்று முனங்கினாள். அவன் ”இவ்வளவு சிரமப்பட்டுவிட்டு மறுபடியும் உன்னை ஆபத்திலே சிக்கவிடுவது நியாயமாகாது” என்று சொன்னான்… அவள் வலியினாலும் அசதியாலும் சோர்வுற்று அங்கேயே படுத்து விட்டாள். அவன் காத்து நின்று பார்த்தான். காலதாமதம் வீண் ஆபத்துக்களுக்கே வழி வகுக்கும் என்று கருதியதால், அவன் அவளை அணுகிக் குனிந்தான். அவனும் முரடன் மாதிரியே நடந்துகொள்வான் என்று எண்ணியிருந்த அவள் அவனுடைய செய்கையைத் தவறாகக் கருதி அச்சத்தால் அலறினாள். மூர்ச்சையானாள். அதுவும் நல்லதே என்று நினைத்து அவன் அவளை மெதுவாகத் தூக்கி எடுத்துச் சுமந்து சென்றான். பத்திரமான இடம் ஒன்றில் அவளைத் தூங்க விட்டுவிட்டு அவன் போய்விட்டான்…..

பாதி வழியிலேயே அவள் விழித்துக்கொண்டாள். அவன் தனக்குத் தீங்கு நினைக்கவில்லை. நல்லது செய்யவே எண்ணியிருக் கிறான் என்பது அவளுக்குப் புரிந்தது. எனினும் அவள் மயங்கிக் கிடப்பது போலவே நடித்தாள் பாதுகாப்பான இடத்தில் அவளைச் சேர்த்துவிட்டு, அவன் வெளியே சென்று கதவைச் சாத்திய பிறகுதான் அவள் எழுந்து உட்கார்ந்தாள். இனி என்ன நேருமோ என்ற பீதி அவளுக்கு இருந்தது. மனக்கலக்கமும் உணர்ச்சிக் குழப்பமும் அவளை அசத்தின. தூக்கம் வராது – தன்னால் தூங்க முடியாது – என்று எண்ணிக் கொண்டிருந்த அவளுக்கு அமைதி அளிப்பதற்காக, தூக்கமும் எப்படியோ வந்து அருள் புரிந்தது.

துயில் கலைந்த செல்லம்மா தரையில் கிடந்தபடியே சுவர்களையும் கூரையையும் கவனித்துக் கொண்டிருந்தாள். ஒரு துவாரத்தின் வழியாக உள்ளே பிரவேசித்த சூரிய ஒளிக்கற்றையில் மிதந்த தூசிப்படலத்தை அவள் சிரத்தையோடு கவனித்தாள். நேரம் என்ன இருக்கும் என்று அவளுக்குத் தெரியாது. ”என்ன ஆகியிருந்தால்தான் என்ன? நான் என்ன செய்யப்போகிறேன்! என்ற நினைப்பு நெஞ்சில் வலி ஏற்படுத்தியது. அவளுடைய கணவன் ஒரு கோழையாக இல்லாதிருந்தால்! அல்லது அவனும் அவளுடனேயே இருந்து அவளுக்காகப் போராடி அம் முயற்சியிலேயே உயிர் விட்டிருந்தால், அவளும் உடன் சாக நேரிட்டிருந்தால்..ஆ. எவ்வளவு நன்றாக இருந்திருக்கும்! – தானாகவே பொங்கி எழுந்து வெளிப்பட்டது ஒரு பெருமூச்சு.

அப்பொழுது கதவு திறந்த ஓசை எழுவே, அவள் வாரிச் சுருட்டிக்கொண்டு எழுந்து உட்கார்ந்தாள். அவன் அவளைக் காப்பாற்றியவன்- தான். வந்தான். அவள் எழுந்து நின்றாள்.

அவன் அவளுக்கு முன்னால் இரண்டு “பொட்டலங்களை வைத்தான். “உனக்கு சாப்பிடுவதற்கு” என்றான். பிறகு சொன்னான். ”உனக்கு இங்கே எவ்விதமான தொந்தரவும் ஏற்படாது. நீ பயமோ கவலையோ இல்லாமல் வாழலாம். இதை உன் வீடாகவே எண்ணிக்கொள்ளலாம். உனக்கு வேண்டிய சாமான்கள், பாத்திரங்கள் எல்லாம் இப்ப வந்துசேரும்…”

அவள் எதுவும் பேசவில்லை . அவளுக்குத் தனிமை அவசியத் தேவை என்று உணர்ந்த அவன் அங்கிருந்து போய்விட்டான்….

செல்லம்மாவின் புதுவாழ்க்கை சாரமற்றதாகத்தான் இருந்தது. அவள் தனக்கு உதவியவனைப் பற்றி அறிய வேண்டியவற்றை எல்லாம் அறிந்து கொண்டாள். அவன் பெயர் காத்தலிங்கம் என்று தெரிந்தவுடன், அவன் குணத்துக்கும் போக்கிற்கும் பொருத்தமான பெயர் அவனுக்கு அமைந்திருந்ததை எண்ணி அவள் அதிசயித்தாள்.
– காத்தலிங்கம் நல்லவன். பலசாலி. அக்கிரமங்களையும் அநியாயங்களையும் கண்டிப்பதற்குப் பின்வாங்காதவன். அவனாக வம்புச் சண்டைக்குப் போகமாட்டான். உண்மையிலேயே உதவி தேவைப்படுகிற யாருக்காவது பரிந்து சண்டை போடத் துணிந்தால், கடைசிவரை எதிர்த்து நின்று போராடத் தயங்கமாட்டான். அவன் வியாபார விஷயமாக, அவள் இருந்த ஊருக்கு அடிக்கடி வருவது உண்டு. அவள் கணவன் முத்துமாலையை அவனுக்குத் தெரியும்.

முத்துமாலை மனைவியைத் தனியாக விட்டுவிட்டு ஓடிப்போன இரவில், காத்தலிங்கம் தற்செயலாக அவ்வீட்டருகே வந்தவன், உள்ளே பயங்கரமான அலறல் எழுவதைக் கேட்டு எட்டிப்பார்த்தான். நிலைமையை எளிதில் புரிந்து கொண்டான். அபலைப் பெண்ணைத் துன்பப்படுத்தத் துணிந்த அயோக்கியனுக்கு சரியான பாடம் கற்பிக்க முன்வந்தான்.

“மனித உணர்வுள்ள எவனும் செய்யக்கூடிய காரியம்தான் இது” என்று அவன் கூறினான். அவள் அவனை ”தெய்வம் போல அப்படி இப்படி” என்று துதித்து நன்றி கூற முயன்ற போதுதான் அவன் இதைச் சொன்னான்.

அவளது கணவனின் போக்கைப் பற்றி அவள் மூலம் அறிந்ததும், “முத்துமாலை அப்படிச் செய்திருக்கக்கூடாது” என்று மட்டுமே அவன் சொன்னான். அவனை அவள் முன்னிலையில் பழிக்கவோ பரிகசிக்கவோ அவன் விரும்பவில்லை. “அவனைத் தேடிப் பிடித்து உன்னிடமே கொண்டு வந்து சேர்க்கிறேன் என்றும்
அவன் அறிவித்தான்.

செல்லம்மா வசதியாக வாழ்வதற்குத் தேவையான அனைத்தும் குறைவில்லாமல் கிடைத்துக் ரெகண்டிருந்தன. எனினும் அவள் மனம் நிறைவுறவில்லை . அவள் சதா தன் கணவனைப் பற்றித்தான் எண்ணிக் கொண்டிருந்தாள். அவனது குணத்தையும் போக்கையும் எண்ண எண்ண அவன்மீது அவளுக்கு ஏற்பட்டிருந்த வெறுப்பு வளர்ந்தே வந்தது.

அவன் தன்னைத் தேடித் திரிவான்; எப்படியும் திரும்பி வந்துவிடுவான் என்று அவள் ஆசைப்பட்டாள். “இன்று வருவான்….இன்று வந்தேவிடுவான்” என்று கனவு வளர்த்து வந்தாள். ஆனால், ஓடிச் சென்ற ஒவ்வொரு தினமும் அவள் ஆசையோடு வளர்த்த கனவுப் பயிரைத் தீய்த்துச் சென்றது.

முன்பு அவள் குடியிருந்த ஊரில் வெடித்த வெறிக்கூத்து ஒருவாறு அடங்கியது. அங்கு சுட்ட மண்ணும் குட்டிச் சுவரும், நாசவேலையை நினைவுபடுத்தும் சின்னங்களும் மலிந்து கிடந்தன. அவற்றின் நடுவே அமைதி கொலுவிருக்கத் தொடங்கியது. புத்துயிர்ப்பு சிலிர்த்தது. புது மலர்ச்சி இனிமை பரப்பியது. மீண்டும்
அவ்வூரின் வாழ்க்கை பழைய தடத்திலே நகரலாயிற்று.

காத்தலிங்கம் அடிக்கடி சகல நிகழ்ச்சிகளையும் அவளிடம் அறிவித்து வந்தான். முத்துமாலை வந்துவிடலாம் என்றுதான் அவனும் எண்ணியிருந்தான். நாட்கள் நகர நகர அவனுடைய நம்பிக்கையும் தேய்ந்து கொண்டிருந்தது. “முத்து மாலை இப்படிப்பட்டவன் என்று நான் நினைத்ததே இல்லை” என்று மட்டுமே
அவன் அவளிடம் சொன்னான்.

அவனுக்கு அநாவசியமான சுமையாக இருக்கக்கூடாது என்று எண்ணிய செல்லம்மா பலவித அலுவல்கள் செய்து பணம் தேடுவதில் மும்முரமாக ஈடுபட்டாள். என்றுமே உழைப்புக்கு அஞ்சியதில்லை அவள். இருப்பினும், அவனுடைய உதவியும் அவளுக்குத் தேவையாகத்தானிருந்தது.

மாதங்கள் ஓடின. செல்லம்மாவின் உள்ளத்திலே கணவனைப் பற்றிய வெறுப்பும் விரோதமும் முற்றிவிட்டன. அவளுக்குக் காத்தலி ங்கத்தின் மீது பற்றுதலும் பாசமும் ஏற்பட்டிருந்தன.

“கட்டின பெண்டாட்டியைக் காப்பாற்ற முடியாதவன் புருஷனா? அவனை நான் ஏன் புருஷன் என்று மதிக்கவேண்டும்? நான் இருக்கிறேனா, செத்தேனா என்று கவலைப்படாமல் எங்கோ போய்விட்டவனைப் பற்றி நான் ஏன் பக்தியொடும் உரிமையோடும் எண்ணிக் கொண்டிருக்கவேண்டும்?” என்று அவள் நினைத்தாள்.

”இனி அவன் என் புருஷனுமல்ல. நான் அவன் மனைவியுமல்ல. அவன் என் மீது உரிமை கொண்டாட, அவன் கட்டியதாலி இருக்கிறதாக்கும், உரிமை கொண்டாடுகிறவன் தன் கடமையை ஒழுங்காக நிறைவேற்ற வேண்டியது அவசியமா இல்லையா? மனைவி கணவனின் உடைமை என்றால், தனக்கு உரியவளை எந்த நெருக்கடியிலும் எப்பாடு பட்டாவது காப்பாற்ற வேண்டிய கடமை அவனுக்கு உண்டுதானே? கடமை தவறியவன் பிறகு உரிமை கொண்டாட முன்வந்தால் அதில் ஏதாவது நியாயம் இருக்க முடியுமா என்ன ?”…

எண்ணி எண்ணித் தனக்கென ஒரு தடம் அமைத்துக் கொண்டு மேலும் முன்னேறிச் சென்ற அவளுடைய சிந்தனை அப்படித்தான் வாதித்தது. அவள் ஒரு முடிவுக்கு வந்தாள். அவளைக் காப்பாற்றத் திராணியோ தெம்போ பெற்றிராத கோழை முத்துமாலை கட்டியிருந்த “உரிமைச் சரடை” – தாலியை அறுத்து, தலையைச் சுற்றி விட்டெறிந்தாள் செல்லம்மா.

ஆயினும் அவள் உள்ளத்தில் மகிழ்ச்சி பொங்கிவிட வில்லை. நாட்கள் சாரமற்ற முறையிலே ஓடிக்கொண்டுதான் இருந்தன.

செல்லம்மா காத்தலிங்கத்தைப் பற்றி நன்றியுடன் எண்ணி வந்தாள் முதலில் நாளாக ஆக அவனைப் பற்றி நினைப்பதிலும் அவனைப் பார்ப்பதிலும் அவளுக்கு ஒரு ஆனந்தம் ஏற்படலாயிற்று. அவன் உதவியைப் பெறுவதிலும் அவனோடு பேசிக் கொண்டிருப்பதனாலும் அவளுக்குத் தனியானதொரு மகிழ்ச்சி பிறந்தது. அவன் மீது தனக்கு ஆசை வளர்ந்து வருகிறது என்பதை அவளாலேயே மறுக்கவோ மறைக்கவோ முடியாத கட்டமும் வந்து சேர்ந்தது.

அவள் பெண். அவள் வாழத்தான் விரும்பினாள். வாழ்வில் பாதுகாப்பு அளிக்கக்கூடிய ஒரு துணை அவளுக்குத் தேவை. அன்பு காட்டவும் அவளிடம் அன்பு செலுத்தவும் ஒரு ஆண் தேவை.

காத்தலிங்கம் அவள் மன நிலையைப் புரிந்து கொண்டான். அவளடைய உளப் பண்பையும் உணர்ச்சிகளையும் உணர்ந்து போற்றக் கூடியவன் அவன்.
ஆகவே அவர்கள் இருவரும் வாழ்க்கையில் நல்ல துணைவர்கள் ஆனார்கள்.

***

ஒரு வருஷத்துக்குப் பிறகு ஒருநாள்….

அந்த வீட்டின் வாசலில் வந்து நின்றான் ஒருவன். மெலிந்து சோர்ந்து, அழுக்கடைந்த வேஷ்டியும் சிக்குப்பிடித்த தலையும் குழிவிழுந்த கன்னங்களும் கட்டை கட்டையாக இருந்த தாடியும் உடைய உருவம்.

திண்ணையில் நின்ற செல்லம்மா அவனைப் பார்த்ததுமே இனம் கண்டு கொண்டாள். எனினும் அதை அவள் காட்டிக் கொள்ள விரும்பவில்லை.

”இங்கே இப்ப ஒண்ணுமில்லே, போ போ” என்று எவனோ பிச்சைக்காரனுக்கு உத்திரவிடுவது போல் உணர்ச்சியற்ற குரலில் கூறினாள் அவள்.

அவன் திடுக்கிட்டான். திகைப்படைந்தான். “செல்லம், என்னைத் தெரியவில்லையா உனக்கு?” என்றான். அவன் குரலில் நடுக்கம் இருந்தது. அவனுக்கு ஏற்பட்ட உணர்ச்சிக் குழப்பத்தினால் எழுந்ததாக இருக்கலாம் அது,

“உன்னைத் தெரிந்திருப்பதும் ஒன்றுதான். தெரியாமல் இருப்பதும் ஒன்றுதான். என்னைப் பொறுத்தவரை…” என்று பேசியவள் சட்டென்று பேச்சை நிறுத்திக்ரெகண்டாள். “நீ செத்துவிட்டாய்!” என்றுதான் அவள் சொல்ல விரும்பினாள். அதை அவனிடம் சொல்ல வேண்டியதில்லை என்ற நினைப்பு பேச்சுக்குத் தடை விதித்தது. “செல்லம், நீ திமிர் பிடிச்சுப் பேசுவது சரியல்ல. என்ன இருந்தாலும் நான் உன்னைத் தொட்டுத் தாலி கட்டி, உன்னோடு கூட வாழ்ந்தவன்..” – அவன் ஆங்காரமாய் கூச்சலிடத் தொடங்கினான்.

”சீ நிறுத்து! நீயும் ஒரு மனுசன்னு மூஞ்சியைக் காட்ட வந்துட்டியே. உன் பெண்டாட்டி செல்லம் செத்து ஒரு வருஷம் ஆச்சு! அவள் எக்கேடும் கெடட்டுமின்னு விட்டுவிட்டு பயந்து ஓடிப்போன வீரசிங்கம் ஒரு வருஷம் கழிச்சப்புறம் தேடி வந்து உரிமை கொண்டாடத் துணிஞ்சிட்டுது ! தூ, வெட்கமில்லே?” என்று ஆத்திரத்தோடு கத்திய செல்லம்மாள் காறித்துப்பினாள் விடுவிடென்று உள்ளே போனாள்.

சட்டி பானைகள் உருளும் ஓசை கடமுட வென்று ஒலித்தது. ஏதோ ஒரு பானையிலிருந்து ஒன்றை எடுத்துக் கொண்டு வெளியே வந்தாள் அவள். “இந்தா, இதைச் சொல்லித்தானே நீ உரிமை கொண்டாடவந்தே. இதை நீயே எடுத்துக் கொண்டு போ. இனிமே உனக்கும் எனக்கும் ஒட்டும் இல்லை உறவும் இல்லை” என்று கூறி
அதை அவன் மூஞ்சியில் விட்டெறிந்தாள்.

அழுக்குப் படிந்த மஞ்சள் கயிறு அது. அவன் “சுபயோக சுபவேளையிலே” அவளுக்குக் கட்டிய தாலிக் கயிறு தான்!

முத்துமாலைக்குப் பேசவாயில்லை. போராட உணர்ச்சி எழவுமில்லை. தலைகுனிந்தவாறே அங்கிருந்து நகர்ந்தான். அதன் பிறகு அவன் அந்தப் பக்கம் தலை காட்டவில்லை.

அதற்காகச் செல்லம்மா வருத்தப் படவுமில்லை.

– வல்லிக்கண்ணனின் சிறப்புச் சிறுகதைகள் – முதற் பதிப்பு ஆகஸ்ட், 2002 – பாவை பப்ளிகேஷன்ஸ் வெளியீடு

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *