இசக்கியின் அம்மா

1
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: May 19, 2019
பார்வையிட்டோர்: 6,030 
 

(இதற்கு முந்தைய ‘பணக்கார இசக்கி’ கதையை படித்தபின், இதைப் படித்தால் புரிதல் எளிது)

இசக்கி சேர்த்துவைத்த பணம் நான்கு தலைமுறைகளுக்குப் போதும்.

அதனால்தான் இசக்கி எல்லா வியாபாரத்தையும் ஒருநாள் நிறுத்தி விட்டான். சும்மா ‘லொங்கு லொங்கு’ன்னு ஓடி ஓடி துட்டு சம்பாரிச்சு என்ன செய்ய? பிள்ளைக் குட்டியும் கிடையாது. பிறகு என்னத்துக்கு நாய் மாதிரி ‘லொக்கொட்டம்’? இசக்கி இழுத்து மூடிட்டான் கடையை.

உடனே ஊரெல்லாம், ‘இசக்கி அண்ணாச்சி மனசு வெறுத்துப்போய் சாமியாராகப் போறாகளாம், அதேன் கடையை மூடிட்டாரம்’ன்னு ஒரே பேச்சு. அதைக்கேட்ட இசக்கிக்கு என்னடா இது சும்மா இருப்போம்னு நெனச்சு கடையை மூடினா அதுக்கு இப்படி எதையாவது பேசி உசிரை வாங்கரானுங்க.. என்று குமைந்தான்.

திடீரென வீட்டைப் பூட்டிக்கொண்டு அம்மாவோடும், மனைவியோடும் ஆல் இண்டியா டூர் கிளம்பிவிட்டான். ஊர் பார்க்கக் கிளம்பினதெல்லாம் சரிதான். ஆனால் கிளம்பின வேளைதான் சரியில்லாமல் போய்விட்டது. மகனுக்குப் பிள்ளை இல்லையேன்னு கவலைப்பட்டுப் போய் கிடந்த பூரணியோட உடம்புக்கு அத்தனை பெரிய ஆல் இண்டியா டூரைத் தாங்க முடியவில்லை. ஒவ்வொரு ஊர்லயும் தங்கியபோது தண்ணீர் ஒத்துக்கொள்ளவில்லை. கல்கத்தாவுக்குப் போய்ச்சேர்ந்த அடுத்தநாளே காய்ச்சல் வந்துவிட்டது. உடம்பெல்லாம் ஒரே அசதி. பேசாம படுத்திட்டா. அப்புறம்தான் தெரிந்தது அவளுக்கு மஞ்சள் காமாலைன்னு. இசக்கிக்கும் கோமதிக்கும் என்ன செய்யறதுன்னே தெரியலை. உட்கார்ந்து யோசித்துப் பார்த்து, உடனே ஊர் திரும்பிவிட வேண்டியதுதான் என்ற தீர்மானத்திற்கு வந்தார்கள்.

ஆனால் மெட்ராஸ் வந்து சேரும்போதே பூரணியின் உடம்புக்கு ரொம்பவும் முடியாமல் போய்விட்டது. அவசர அவசரமாக ஒரு டாக்டரிடம் காட்டினார்கள். “நெலமை ரொம்ப சீரியஸா இருக்கு, ஜி.எச். கொண்டு போயிடுங்க” என்று அந்த ப்ரைவேட் டாக்டர் கையை விரித்துவிட்டார்.

இசக்கி அம்மாவை டாக்ஸியில் தூக்கிப் போட்டுக்கொண்டு ஓடினான். ரெண்டு நாள் தீவிர சிகிச்சை செய்தும் பூரணி உயிர் பிழைக்கவில்லை. கவர்ன்மென்ட் ஆஸ்பத்ரியே அதிரும்படி இசக்கி தரையில் உருண்டு புரண்டு கதறினான். அவனுக்கு ஆறுதல் சொல்ல கோமதியைத் தவிர யாருமே இல்லை.

அந்தச் சமயத்தில் ஊர் தெரியாத மெட்ராஸில் இசக்கி பட்டபாடு இருக்கே அதை அப்படியே சொல்றதுக்கு வார்த்தையே கிடையாது. இப்படி ஒரு கர்ம காரியம் பண்ணுவோம்னு, ஊரை விட்டுக் கிளம்பும்போது இசக்கி நினைத்துக்கூடப் பார்த்ததில்லை. பாளைக்கு அம்மாவின் உடலை எடுத்துச்செல்ல ஒரு டாக்டர் சர்டிபிகேட்டையும் அவர்களிடமே வாங்கிக்கொண்டான்.

ஆவுடையப்பனுக்குத் துண்டால் வாயைப் பொத்தியபடியே ட்ரங்காலில் விவரத்தைச் சொல்லி எல்லா ஏற்பாடுகளையும் செய்யச் சொன்னான். இலஞ்சிக்கும் தகவல் சொன்னான். உயிரோடு சிரிச்ச முகமா மகனோடும், மருமகளோடும் நாலு ஊரு பார்க்கக் கிளம்பின அம்மாவை, உயிர் இல்லாத பிரேதமா ஊருக்கு ஆம்புலன்ஸில் எடுத்துக்கொண்டு போகும்படி ஆனது தாங்கவே முடியாத விஷயம்.

பாளையங்கோட்டை போய்ச் சேருகிற வழி பூராவும் அம்மாவின் செத்த உடம்பைப் பார்த்துப் பார்த்து இறுகிப்போய் உட்கார்ந்திருந்த இசக்கி, ஆம்புலன்ஸ் ஊரை நெருங்கியதுமே, ஊர் எல்லைக்கே வந்து நின்றிருந்த ஆவுடையப்பனையும், மற்ற சொந்தக்காரர்களையும், ஊர்க்காரர்களையும் பார்த்ததுமே, “என்னைப் பெத்த அம்மா என்னைவிட்டுப் போயிட்டாகளே..” என்று கதறி அழுதான்.

பெரிய பணக்காரன் ஒருத்தனின் வீட்டில் சாவு வந்தால் சனம் எப்படி ஊரே திரண்டு வரும் என்பது அன்னிக்கு சுடுகாட்டில்தான் தெரிந்தது. பல இளைஞர்கள் பெரிய பெரிய மரங்களில் ஏறி உட்கார்ந்தபடி இசக்கி தன் அம்மாவுக்கு கொள்ளி வைக்கப் போகிறதைப் பார்ப்பதற்காகவே காத்துக் கிடந்தார்கள். அம்மாவுக்கு ‘வாக்கரிசி’ போட்டபோது இசக்கிக்கு உடம்பெல்லாம் நடுங்கி கண்களில் நீர் பொங்கியது. கொள்ளி வைத்துவிட்டு திரும்பிப் பார்க்காமல் கிணற்றுமேட்டை நோக்கி நடையைக் கட்டினான்.

எல்லாம் ஒரு வழியா ஆச்சி. செந்தூர்க்காரங்க, கருங்குளம்காரங்க ஒவ்வொருத்தரா கிளம்பியும் போயாச்சி. இசக்கியின் மாமியார் வீட்டுக்காரர்கள் மட்டுதான் இருந்தார்கள்… சம்பந்தார் ஆச்சே. இசக்கிக்கும் அவர்களையெல்லாம் இலஞ்சிக்கு அனுப்ப மனசே இல்லை. அவர்களும் போய்விட்டால் வீடே ‘விரீர்’னு போயிடும். நினைவு தெரிஞ்ச நாளில் இருந்தே அம்மாவுடன் இருந்திருக்கும் வீடு. எந்த இடத்தைப் பார்த்தாலும் அம்மாவின் நினைப்பைத் தருகிற வீடு. அம்மா மச்சு கட்டியவீடு. நினைக்க நினைக்கத் தாங்கவே முடியவில்லை இசக்கிக்கு. எப்படித்தான் அம்மாவை மறக்கப் போகிறோமோவென்று மனசுக்குள் கிடந்து உருகினான்.

“நீங்க ஒண்ணு பண்ணுங்க மாப்ளை.”

“சொல்லுங்க மச்சான்.”

“பேசாம கொஞ்ச நாளைக்கி நீங்களும் கோமதியும் இலஞ்சில வந்து இருங்க. மனசுக்கு ஆறுதலா இருக்கும். ரெண்டு மூணு மாசம் எங்களோட இருந்திட்டு வந்தீங்கன்னா தெம்பாவும் இருக்கும். என்ன செய்யறது போறவங்க போயிட்டாங்க… நாமதேன் விழுந்து கிழுந்து எந்திரிச்சு வரணும், அவங்க நெனைப்பில் இருந்து.”

இசக்கிக்கு யோசனையாய் இருந்தது. ‘இசக்கி அண்ணாச்சி பாவம் போக்கிடம் இல்லாம மாமியார் ஊர்ல போய் உடகார்ந்திருகார்ன்னு’ ஊர்பயல்கள் பேசினாலும் பேசுவார்களே என்று நினைத்துப் பார்த்தான். ஆனால் கொஞ்சநாள் இலஞ்சி போய் இருந்துவிட்டு வந்தால் நன்றாக இருக்கும் என்றும் தோன்றியது. எத்தனை வயசானாலும் மாமியார் வீட்டில் போய் இருப்பதில் ஒரு சுகம் இருக்கத்தான் செய்யும்.! அதுவும் இல்லாமல் இலஞ்சியில் வீடு நிறைய மனிதர்கள்… எப்போதும் கலகலவென்று இருக்கும். நன்றாக யோசித்துப் பார்த்துவிட்டு இசக்கி, ‘எந்தப் பயல் என்ன பேசினால் என்ன’வென்று இலஞ்சி கிளம்பிவிட்டான்.

ஒருவாரம் சென்றபின் தெரிந்தது. இலஞ்சி கிளம்பி வந்தது எவ்வளவு புத்திசாலித்தனமான விசயம்னு. அந்தப் பசுமையான சுத்துப்புறமே நிம்மதியாக இருந்தது. காசு குடுத்தாலும் கிடைக்காது இலஞ்சிக் காத்துன்னு சொல்வார்கள். அது ரொம்ப ரொம்ப உண்மை. அதுவும் ஆடி மாசக் காத்து அடிச்சிப் பாக்கணும். ஆளையேகூட தூக்கிக்கிட்டு போயிடும். வேட்டியை நல்லா இறுக்கிக் கட்டிட்டுத்தான் ஆம்பளைகள் வீட்டு வாசல்படியை விட்டு தெருவுல காலை வைக்கணும். இல்லாட்டி ஆபத்து..! இசக்கி நிம்மதியா இலஞ்சில இருந்தான்.

தினமும் மத்யானம் மூணுமணிக்கு மேல சைக்கிளை எடுத்துக்கிட்டு குற்றாலத்துக்குக் கிளம்பிடுவான். அவசரமே இல்லாமே சைக்கிளை மிதிப்பான். போத்தி ஓட்டலின் பக்கத்தில் சைக்கிளை நிறுத்திப் பூட்டிவிட்டு கோயிலுக்குப் போவான். பெரிய அருவியைப் பார்த்தபடி நின்று கொண்டிருப்பான். சில சமயங்களில் சைக்கிளில் ஐந்தருவி போய்விடுவான். ஐந்தருவி போனால் குளிப்பான். பின் அப்படியே இலஞ்சி முருகன் கோயிலுக்குப் போவான். அங்கு இருக்கும் அமைதியில் மனசு நிறைந்து போகும். வாழ்நாள் பூராவும் அங்கேயே இருந்து விடலாமாவென்று இருக்கும். நீண்டு கிடக்கும் மேற்கு மலைத்தொடரைப் பார்க்கும்போது இசக்கிக்கு மலையாளத்து ஞாபகம் வரும். ரப்பர்த் தோட்டங்களை நினைத்து உடம்பு சிலிர்க்கும். இலஞ்சியில் இருந்து அப்படியே திருமலைக்கோயில் போய்விட்டு நன்றாக இருட்டிய பின்பு வீடு போய்ச் சேருவான். நன்றாகச் சாப்பிட்டுவிட்டு கட்டிலை இழுத்து காரையில் படுத்தால் அடிக்கிற காத்துக்கு ரொம்ப சுகமா வரும் உறக்கம்.

நாலு மாசம் ஓடிப் போய்விட்டதென்று காலண்டரைப் பாத்துதான் தெரிஞ்சது இசக்கிக்கு. அப்பப்ப அம்மாவோட ஞாபகம் வந்து போச்சே தவிர, மன வலியெல்லாம் ஆறிப் போய்விட்டது. பாளை கிளம்பிப் போக முடிவெடுத்தான். அதை கோமதி மூலமாக மாமனாருக்குத் தெரிவித்தான்.

மாமானார் இசக்கியிடம், “போய் பத்திரமா இருங்க மாப்ள. அந்த வீட்டுக்குப் போனா அம்மா ஞாபகம் வரத்தான் செய்யும். அதுவும் நீங்க வியாபாரம் ஒண்ணும் செய்யாம சும்மாவேற இருக்கீங்க. அதனாலேயே மனசு திருப்பித் திருப்பி எதையாவது நெனச்சுப் பார்க்கத்தேன் செய்யும். அதுக்குத்தேன் நான் சொல்லுதேன், சும்மா இருக்காதீங்கன்னு. நான்கு தலைமுறைக்கு துட்டு இருக்குன்னு ஒண்ணும் செய்யாமே இருக்கக்கூடாது மனுசன். அதனாலே ஏதாவது ஒரு சின்ன வியாபாரத்தைப் பொழுது போவதற்காகவாவது செய்திட்டு இருங்க.”

இசக்கிக்கும் மாமனார் சொன்னது சரியென்றுதான் தோன்றியது. அதே தீர்மானத்துடன் கோமதியை கூட்டிக்கொண்டு பாளையங்கோட்டைக்குக் கிளம்பினான்.

நான்கு மாதமாய் பூட்டிக்கிடந்த வீட்டைத் திறந்து உள்ளே போனபோது கொஞ்சம் உடம்பு சிலிர்த்தது. கடைசியாய் அம்மாவை நாற்காலியில் உட்கார வைத்திருந்த இடம் இதுதானே? மத்யான வேளைகளில் சிறிது ஓய்வாக அம்மா படுத்திருந்த இடம் இதுதானே? அம்மா உட்கார்ந்து சாப்பிடும் இடம் இதுதானே? என்று வீட்டின் ஒவ்வொரு இடத்திலும் அம்மா பத்தின ஒவ்வொரு ஞாபகமும் இசக்கிக்கு வந்து போகத்தான் செய்தது. பெரிய கனத்த பெருமூச்சுடன் அம்மா இல்லாத அவ்வளவு பெரிய வீட்டில் கோமதியுடன் தன்னுடைய வாழ்க்கையை ஆரம்பித்தான் இசக்கி.

Print Friendly, PDF & Email

1 thought on “இசக்கியின் அம்மா

  1. அருமையான தொடர் சிறுகதை,உங்கள் எழுத்து நடை அருமை.தொடர்க அடுத்த அத்தியாயம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *