சில நேரங்களில் சில மனிதர்கள்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: காதல்
கதைப்பதிவு: July 10, 2013
பார்வையிட்டோர்: 14,764 
 

மதம் என்பது ஒரு மார்க்கம், வழிகாட்டி, மனிதனை நெறிப்படுத்த என்று மட்டுமே நினைத்துக் கொண்டிருந்த எனக்கு, என் தோழியுடைய கேள்வியினாலும் திட்டத்தினாலும் நான் திக்கற்று நின்றேன்.

தனக்குச் சாதகமாக இருக்கும் வரை மனிதன் தான் சார்ந்த மதத்தைப் போற்றுகின்றான். அதனைப் பின்பற்றுவதைத் தம்பட்டமும் அடித்துக் கொள்கிறான். ஆனால் தனக்கு ஒத்துவராது என்று வந்துவிட்டால் ‘முடிந்த வரை நான் கடைப்பிடிக்கிறேன் மற்றவற்றை இறைவன் பார்த்துக் கொள்வான்’ என்று இறைவன் மீதே பழிபோட்டு விஷயத்தையே மூடிவிடுகின்றான்.

என்னுடன் வேலை பார்த்த ப்ரியா ஒரு சிரியா நாட்டைச் சேர்ந்த இஸ்லாமியரைத் திருமணம் செய்து கொள்ள மதத்தை மாற்றிக் கொண்டாள். திருமணத்திற்காக மட்டுமே அந்த மதம் மாற்றமென்று கட்டிக்கொண்டவனுக்கும் தெரியும் சமுதாயத்திற்கும் தெரிய வேண்டுமென்ற வகையிலேயே இருந்து கொண்டாள்.

இது ஒரு ரகமென்றால் மற்றொரு ரகம் எனது அலுவலகத்தில் என்னுடன் பணிபுரியும் ப்ரிஸ்லினா.

இவள் பிலிப்பைன்ஸ் நாட்டைச் சேர்ந்தவள் இவள் ஈரான் நாட்டைச் சேர்ந்த ஒரு இஸ்லாமியரைக் காதலித்து திருமணம் செய்ய ஆசைப்பட்டாள். ஆனால் காதலுக்காக மதம் மாற விரும்பவில்லை. வெவ்வேறு நாட்டைச் சேர்ந்த வெவ்வேறு மதத்தைச் சேர்ந்த இருவர் திருமணம் செய்து கொள்வது பல நாடுகளில் தடையென்றாலும் இந்தியாவில் சில நெருக்கடிக்கப்பால் சுலபம்தான். ஆனால் இந்தியாவில் தேவையான கோப்புகளும், ஆவணங்களும் அதன் வரையறைகளும் சட்டதிட்டங்களும் சுலபமாக இல்லாத காரணத்தால் சீஷெல் நாட்டை அணுகித் திருமணம் செய்து கொண்டார்கள்.

மனதிற்குப் பிடித்தவரை கைப்பிடிக்க ஒருநாள் திருமண வைபவத்திற்காகக் கூட தன் மதத்தை விட்டு கொடுக்காதவள் வருங்காலத்தில் தன் சந்ததியினர்கள் அவள் மதத்தின் வழியில் வரப்போவதில்லை என்று அறியாமலா துணிந்திருப்பாள்? அதைப் பற்றியும் பேசி முடிவெடுத்திருப்பார்களாக இருக்கும்.

இப்படி மனம், திருமணம் என்று வந்துவிட்டால் எவ்வளவுதான் மத ஈடுபாடு உடையவராக இருந்தாலும் சரி அதிலிருந்து விலகியே நிற்கிறார்கள்.

காதலைப் புத்தியால் பார்த்து புரிந்து கொள்வதை விட மனதால் உணர்ந்து புரிந்து கொள்வதே சிறந்தது. புத்தி சமுதாயத்தை வைத்துப் பழகும் சூழலை வைத்து அதற்கேற்ப மாறிக் கொள்ளும் ஆனால் மனது அப்படியானதல்ல. அதனால் காதலைப் பொறுத்தவரை மனதால் முடிவெடுப்பதே சிறந்ததாக இருக்கும்.

`காதலுக்கு கண்ணில்லை என்று சொல்வதைவிட புத்தியில்லை என்பதே பொருத்தம்` என்றும் கூட நான் நினைத்துக் கொள்வதுண்டு. ஏனெனில் காதலித்த அந்த ’ஒரு’ நபருக்காக பல ஆண்டுகாலம் கடைபிடித்துவரும் கோட்பாடுகளையும், சம்பிரதாயங்களையும், பழக்கவழக்கங்களையும், மத நம்பிக்கையையும் விட்டுக்கொடுக்க முடிகிறதென்றால் ஒன்று அவர்கள் காதல் இதை எல்லாவற்றிக்கும் மேலானதாக இருக்கும் அல்லது தன் மதம் மீது பெரிய ஈடுபாடில்லாதவராக இருக்க வேண்டும்.

இதெல்லாம் இப்படியிருக்க இன்று என் சிநேகிதி இப்படி கேட்டது மிகுந்த ஆச்சர்யமடைய வைத்தது. இவளுடைய விஷயம் மிகவும் வேறுபாடானது.

இவளும் காதல் வசப்பட்டவள் தான் அதுவும் தன்னுடைய பதினைந்தாம் வயதிலிருந்தேவாம். தன் பின்னாடியே சுற்றிக் கொண்டிருந்தவனை யார் என்னவென்று அறியாமல் மிகத் தீவிரமாக ஒருவரையொருவர் காதலித்து விட்டு, தன் இருபதாம் வயதில்தான் அவனை யாரென்று தெரிந்து கொண்டாளாம்.

நிற்க!! நீங்கள் சந்தேகிப்பது தவறு, நீங்கள் நினைப்பது போல் அவன் மிகக் கெட்டவனுமல்ல, அவளை விட்டு விலக நினைப்பவனுமல்ல, மோசமான பின்னணியிலிருந்து வந்தவனுமல்ல, இவளை ஏமாற்றிவிட்டு ஓடிவிட துடிப்பவனுமல்ல. இத்தனைக்கும் இருவரும் ஒரே மதத்தையும் குலத்தையும் சாதியையும் சேர்ந்தவர்கள்தான், கிறிஸ்தவர்கள் தான். பரம்பரை பாரம்பரியத்திலும் சரி, பணத்திலும் சரி இருவரும் சமமானவர்களே.

`அப்போ என்னப்பா பிரச்சனை` என்று மண்டையை பிய்த்துக் கொள்கிறீர்களா? பொறுமை பொறுமை. இவர்கள் காதல் கதையை முழுவதுமாகக் கேட்டுவிட்டு அதன் பிறகு இவன் யாரென்று புரிந்து கொள்ளுங்கள்.

இவளை இவன் முதலில் பார்த்த இடம் எது தெரியுமா? சொன்னால் சிரிக்கக் கூடாது. எனக்கு முதலில் கேட்கும் போது கொஞ்சம் எள்ளலாகத்தான் இருந்தது. இவன் இவளைப் பார்த்து இந்த ’இழவு’ காதலில் வசப்பட்டது ஒரு இழவு வீட்டில்.

உண்மைதான். அவளுடைய உறவினர் ஒருவர் இறந்துவிட்டிருக்கிறார். ஆனால் குடும்பப் பிரச்சனை காரணமாக இவள் தாய் தந்தை போக மறுத்த வீட்டுக்கு இவள் பாட்டி அதாவது அம்மாவின் அம்மாதான் இவளை அழைத்துக் கொண்டு அந்த இழவு வீட்டுக்கு சென்றிருக்கிறார்கள்.

அங்கு வைத்துதான் இவன் அவளைப் பார்த்திருக்கிறான். அப்போது அவள் ஒன்பதாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தாளாம். அப்போது அவன் கல்லூரி முதலாமாண்டு மாணவன்.

அதன் பிறகு ஒரு வருட பின் தொடர்ச்சியாக வாழ்த்து மடல், குறுஞ்செய்தி, மின்னஞ்சல், பேச்சாடல், காதல் தூதுகளென பல முயற்சிக்குப் பிறகு இவளுடைய பத்தாம் வகுப்பு பரீட்சைக்குப் பிறகு காதல் சம்மதம் தந்திருக்கிறாள்.

அதன் பிறகு வழக்கமான காதலர்களாகி விட்டாலும் இவர்கள் இருவருமே மிகவும் சாமர்த்தியமானவர்களாக இருந்திருக்க கூடும். அதனால் தான் இவர்களின் காதலைப் பற்றி வீட்டிற்கு ஐந்து வருடக் காலமாக தெரியாமலேயே இருந்திருக்கிறது. அதன் பிறகும் தெரியாமல்தான் இருந்திருக்கிறது. ஆனால் இவர்களே சொல்ல வேண்டிய கட்டாயத்தில் தள்ளப்பட்டார்கள். ஆமாம், இவள் பாட்டியின் மறைவில் தான் அந்தச் சம்பவம் நிகழ்ந்திருக்கிறது.

இவள் பாட்டி இறந்ததைச் சொல்பவர்களுக்கெல்லாம் சொல்லியாகிவிட்டது என்று சொல்ல உள்ளுக்குள் ஏதோ சலசலப்பு நிகழ்ந்திருக்கிறது. அதன் பிறகு நெருங்கிய உறவினர்கள் இவளின் வீட்டார்களுடன் பலர் வாக்குவாதங்கள் செய்திருக்கிறார்கள். பஞ்சாயத்து தொடந்திருக்கிறது.

இதன் முடிவாக `வேண்டாதவர்களெல்லாம் பாட்டி சடலத்தைக் கடைசியாகப் பார்க்க வருவார்கள் அவர்களுடன் யாரும் பேச கூடாது` என்றெல்லாம் உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதன் பிறகு வந்த குடும்பத்தின் தலைவி பாட்டி காலை பிடித்துக் கொண்டு `அம்மா என்னிடம் கடைசி வரைக்கும் பேசாமலிருந்திட்டீர்களே அம்மா` என்று பயங்கரமாக அழுது புலம்பியிருக்கிறார்கள். அந்த நொடியில் தான் இவள் தன் வீட்டிற்கு வந்து அழும் அந்த பெண் தன் சித்தி என்று தெரிந்து கொண்டதோடு, தன் தாயின் சொந்தத் தங்கையாக இருந்தாலும் ஜென்ம பகையாளிகள் என்று அறிந்து கொண்டிருக்கிறாள்.

இவள் தாய் தந்தை மட்டுமல்லாது அவள் தந்தை வழி சொந்தங்களுக்கும், தன் தாயின் சகோதர்களுக்கும் கூட இவர்கள் எந்த விதத்திலும் ஒட்டுதல் இல்லை என்பதையும் தன் பாட்டி இறக்கும் தருவாயில் கூட இவர்களைப் பார்க்க விரும்பவில்லை என்பதையும் புரிந்து கொண்டிருக்கிறாள்.

`அப்படியென்ன ஜென்மப் பகையாம்?` என்று யோசிக்கிறீர்களா? இதே கேள்விதான் எனக்கும் வந்தது. அதுவும் ஒரு காதல் கதைதான். தன் சித்தி காலகாலமாக குடும்பப் பகையாக இருக்கும் வீட்டின் பிள்ளையோடு ஓடிப் போய் திருமணம் செய்து கொண்டார்களாம். அதுவும் தன் அக்காளுக்கு திருமணமாகும் முன்பே. இதனால் சித்தியின் அக்கா அதாவது என் தோழியின் அம்மாவின் திருமணத்தடை, தாத்தாவின் மறைவு, சொத்துத் தகராறு, மாமா- அத்தை விவாகரத்து, என்ற பல பிரச்சனை பின்னணியில் `பகை` ஜென்ம பகையாக விசுவ௫பம் எடுத்துள்ளது. ஆமாம், என் சிநேகிதியின் காதல் கதையிலிருந்து எப்போது நாம் அவள் சித்தியின் காதல் பிரச்சனைக்கு மாறினோம்? தொடர்பில்லாமலாயிருக்கும்?

என் சிநேகிதி காதலிப்பது வேறு யாரையுமில்லை அப்படிப்பட்ட சித்தியின் அருமை புதல்வனைத் தான். இவள் சித்தியைத் தெரிந்து கொண்ட போதுதான் தான் தன் சகோதரன் அதாவது சித்தியின் மகனைக் காதலிப்பது அதுவும் பல சந்ததியாகத் தொடர் பகையை வளர்த்துவரும் குடும்பத்தில் ஒருவனை காதலிக்கும் விஷயம் இவள் மண்டையில் உறைத்திருக்கிறது.

உரைத்தால் காதல் ஓய்ந்து விடுமா என்ன? பிரச்சனை எழும்பும் போது பார்த்துக் கொள்ளலாமென்று விட்டுவிட்டார்களாம். இதெல்லாம் கேட்கும் போது எனக்கு கே.பாலசந்தர் படத்தைப் பார்ப்பது போல் உணர்வு.

உங்களுக்குமா? நாம் குழம்புவது போல் அவர்களுக்குக் குழப்பமே இல்லை – மிகத் தெளிவாக இன்னும் காதலித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். இப்போது இவளுக்கு இருபத்தெட்டு வயதாகிவிட்டது இன்னும் இந்த பிரச்சனை ஓய்ந்தபாடில்லை.

காதலர்களும் காதலை விட்டுக் கொடுப்பதாக இல்லை. குடும்பமும் பகையை மறப்பதாக இல்லை. அது மட்டுமின்றி அவர்களின் பெற்றோர்களை பொறுத்தமட்டில் இந்த உறவு மிகப் பெரிய பாவமாம். இந்தத் திருமணம் நடந்தால் தற்கொலை செய்து கொள்வோம் என்றெல்லாம் இருவீட்டாரும் பயமுறுத்தியும் பார்த்துவிட்டார்கள். இந்தக் காதலர்கள் தளராமல் இன்னும் உறுதியாகவே இருக்கிறார்கள். இவர்களே மதம் மார்க்கமெல்லாம் ஆராய்ந்து, பிஷப் பாதிரியார் என்று எல்லோரிடமும் பேசி விவாதித்து கடைசியில் ஒரு முடிவுக்கு வந்துள்ளார்கள்.

அவர்களின் முடிவைத்தான் என்னிடம் கேள்வியாக இறக்கி வைத்து என்னை திக்குமுக்காட வைத்துவிட்டாள். அவளுடைய தோழிகளில் நான் மட்டும்தான் இஸ்லாமிய மதத்தைச் சேர்ந்தவள், அதனால் தான் என்னிடம் இந்தக் கேள்வியையும் சந்தேகத்தையும் எடுத்து வைத்திருக்க வேண்டும். அந்தக் காதல் ஜோடிகளின் முடிவானது தாம் பிறந்த மதத்தை மாற்றிக் கொள்வதென்று.

கிறிஸ்துவ மதம் சித்தி மகனை அண்ணன் என்று சொல்வதால் திருமணத்திற்குத் தடையாக இருக்கும் மதத்தை தூக்கியெறிவதென்பது அவர்களின் தீர்க்கமான முடிவு. முடிவை கேட்கும் போதே `திக்`கென்றது என் மனம்.

அடுத்து அவள் என்னிடம் ஒரு கேள்வி கேட்டாள் “ஆமாம், உங்க இஸ்லாம் மதத்தில் தாயுடன் பிறந்தவர்களின் புதல்வர்களையோ தந்தையுடன் பிறந்தவர்களின் புதல்வர்களையோ திருமணம் செய்து கொள்வது குற்றமாகாதாமே?“.

அவள் கேள்வியிலிருந்து ஒன்று மட்டும் புரிந்தது. அவளுக்குத் தாம் பிறந்த மதத்தையும் தெரியவில்லை, இஸ்லாம் மதத்தையும் விரும்பவில்லை, ஆனால் தனக்குச் சாதகமான ஒன்றை தேடுகிறாளென்று நன்றாகவே விளங்கியது.

நான் மிக நிதானமாக சொன்னேன் ”திருமணத்திற்காக மதத்தை வளைப்பது சரியல்ல” என்று.

“சரி- தவறு என்பதெல்லாம் இரண்டாம் பட்சம் எங்கள் மதத்தில் தடை செய்யப்பட்டது உங்கள் மதத்தில் சாத்தியமென்றால் அது எங்களுக்கு சாதகமென்றால், எங்கள் திருமணத்திற்கு விமோச்சனமென்றால் நாங்கள் ஏன் அந்த மதத்தை தேர்ந்தெடுக்கக் கூடாது? எத்தனையோ காதலர்கள் தம் காதல், திருமணத்தில் முடிய காதலர்களில் ஒருவர் விட்டுக் கொடுத்து மதம் மாறுவார்கள். நாங்கள் ஏன் இருவருமே அதே விஷயத்திற்காக மதம் மாறக் கூடாது?“ என்று சூடாகக் கேட்டாள்.

பதிலளிக்க வார்த்தையில்லை.

அவள் முடிவை என்னால் மாற்ற இயலாது. ஒருவேளை இவள் முடிவுக்கு அஞ்சி அவர்களின் குடும்பத்தினர் பிடிவாதத்தைக் கைவிடலாம் அல்லது அவர்களது கோட்பாடுகளை மாற்றிக்கொள்ளலாம்.

காலம் கனியுமென்று எனக்குள் நினைத்துக் கொண்டு் அவள் கேள்விக்கு புன்முறுவலைப் பதிலாகத் தந்தபடி மனிதர்களின் புது நிறத்தை புரிந்துக் கொண்டவளாக இறைவனிடம் முறையிடக் கிளம்பிவிட்டேன்.

அஸர் தொழுகைக்கு நேரமாகிவிட்டது.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *