கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: August 9, 2013
பார்வையிட்டோர்: 7,865 
 

இந்த அதிகாலைக் குளிரில் தண்ணீர் காலைத் தொட்டதும் தேகம் ஒருமுறை சிலிர்த்தது. வாய்க்காலில் ஓடிவந்த தண்ணீரை அனுஜன் கால்களால் அலசித் தள்ளிவிட்டான். மரவள்ளிப் பாத்தி தண்ணீரை உறுஞ்சி நனைந்தது.

பாத்தியில் தண்ணீர் நிறைந்ததும் மண்வெட்டியால் மறித்துக் கட்டினான். தண்ணீர் உயிருள்ள ஒரு ஜீவனைப்போல மறு பாத்திக்குள் ஊர்ந்து ஓடியது. மண்ணைக் கோலி ஏற்கனவே மூடிய பகுதியிற் போட்டுப் பலப்படுத்தினான். தண்ணீர் உடைப்பெடுத்து ஓடாமல் ஒவ்வொரு பாத்திகளாக மறித்துக் கட்டும் லாவகமெல்லாம் அனுஜனுக்குக் கை வந்த கலை. அவனுக்கு அது ஒரு வேலையாகவே தெரிவதில்லை. மண்ணுடனும் தண்ணீருடனும் மரம் செடிகளுடனும் வேலை செய்தால், அவை மனதைப் பிடித்து அப்படியே தங்களுக்குள் வைத்துக்கொள்ளும் மந்திரவித்தையைக் கொண்டிருக்கின்றன. அப்பா கிணற்றிலிருந்து தண்ணீரை இழுத்து இறைத்துக்கொண்டிருந்தார்.

மரவள்ளிச்செடிகள் அவனது உயரத்தைத் தொடுமளவுக்கு வளர்ந்திருந்தன. இந்தச் சிறு வயதிலேயே தோட்ட வேலைகளையெல்லாம் நேர்த்தியாகச் செய்வதற்கு அப்பாதான் காரணம். அப்பாவுடன் சேர்ந்து வேலை செய்தே எல்லாம் கைப் பழக்கமாக வந்துவிட்டது. தோட்டம் கொற்றுதல், மட்டமடித்து சிறு குழிகளில் கன்றுகளை நடுதல், சாறுதல்.. பாத்தி கட்டுதல் தண்ணீர் பாய்ச்சுதல் என எல்லா வேலைகளிலும் அவன் அப்பாவுக்கு இன்னொரு கையாகவே இருந்தான்.

அப்பா அதிகாலை நாலு மணிக்கே படுக்கையிலிருந்து அனுஜனை எழுப்பிவிடுவார்.

“எழும்பி.. முகத்தைக் கழுவியிட்டுப் படி தம்பி..!”

அந்த வேளையில் விழித்தெழுவதென்றால் சற்று அலுப்பாகத்தான் இருக்கும். ஆனால் அவர் விடமாட்டார். சத்தம் போட்டு எழுப்பிவிடுவார். சில வேளைகளில் படித்துக்கொண்டிருக்கும்போது கண்கள் தூங்கி வழியும். தோட்டப்பக்கம் போன அப்பா திரும்பத் திரும்ப வந்து நோட்டம் விடுவார்.

“என்ன தம்பி தூங்கி விழுகிறியோ.. பாடம் படிக்கிறியோ..?”

தண்ணீர் பாய்ச்சும் நாட்களில் ஐந்து மணிக்கு அனுஜனும் தோட்டத்திற்குப் போய்விடுவான். வேலையை முடித்துக்கொண்டு குளித்து ரெடியாகிப் போகும்போது பெரும்பாலும் பாடசாலை தொடங்கிவிடும்..

இன்னும் சூரியன் தோன்றி வரவில்லை. இன்றைக்கும் ஸ்கூலுக்குப் போகச் சுணங்கிவிடுமோ என அனுஜனுக்கு மனதில் தயக்கம் தட்டிக்கொண்டேயிருந்தது. எவ்வளவு லயிப்புடன் தோட்ட வேலையைச் செய்தாலும் அந்தத் தயக்கம் மெல்லிய படபடப்பாக ஒரு பக்கம் அடித்துக்கொண்டிருக்கும். சுணக்கமாகப் போகும்போது ஸ்கூல் தொடங்கிவிட்டால் பிறிஃபெக்ட் அண்ணன்மார் வாசலில் மறித்து நிறுத்திவிடுவார்கள். பிறேயர் முடிந்து அதிபர் வந்து விசாரித்தபிறகுதான் உள்ளே போகமுடியும். சில வேளைகளில் கையை நீட்டச்சொல்லி பளார் என அடியும் விழும். வேறு சில ஆசிரியர்கள் வந்தால் வெயிலில் நிற்கவிடுவது போன்ற தண்டனைகளும் கிடைக்கும். முதலாவது பாடத்திற்கு வகுப்பிற்கே போகமுடியாமற் போகும்.

இன்றைக்கு முதற் பீரியட் விஞ்ஞானம். அனுஜனுக்குப் பிடித்த பாடம். சாந்தி ரீச்சர்தான் விஞ்ஞானம் கற்பிக்கும் ஆசிரியை. அனுஜனின் ஒன்பதாம் ஆண்டு வகுப்பாசிரியையும் அவர்தான். பிடிப்பு பாடத்திலா அல்லது சாந்தி ரீச்சர்மீதா என்று தெரியவில்லை. இரண்டும்தான்! பாடம் நடத்தும்போது அப்பன்.. ராசா.. மகனே என்றுதான் மாணவருடன் பேசுவார். அவரது வகுப்பென்றால் ஒரே கும்மாளமும் சத்தமுமாகத்தான் இருக்கும். சில ஆசிரியர்கள் அதுபற்றி முறையிட்டால், ‘பிள்ளைகளென்றால் அப்பிடித்தான் இருப்பினம்..’ எனச் சமாளித்துவிடுவார்.

“வாங்கோ.. மற்ற வகுப்புகளைக் குழப்பாமல் மரத்தடியில போயிருந்து படிக்கலாம்..” என எல்லோரையும் வெளியே கூட்டிச் செல்வார். அதற்கு ஏனைய வகுப்புகளைக் குழப்பக்கூடாது என்பது மட்டும் காரணமல்ல. சாந்தி ரீச்சருக்கு மரங்களின்மேலுள்ள பிடிப்புத்தான் இன்னொரு காரணம் என்பது அனுஜனுக்குத் தெரியும். மரங்களின் பசுமைத் தோற்றமும் நிழலும் பிள்ளைகளுக்கு மனஇறுக்கம் குறைந்து படிப்பில் கவனம் செலுத்துவதற்குக்கூட உதவுகிறது என்று ரீச்சர் கூறுவார். மரங்களின் பயனைப் பற்றிக் கதை கதையாகச் சொல்லியிருக்கிறார்.

மரங்கள் கரியமிலவாயுவை உறிஞ்சி ஒட்சிசனை வெளியிடுவதால் காற்று தூய்மையாகிறது.. பூமியில் வாழும் உயிரினங்களுக்குத் தேவையான ஒட்சிசனில் பெருமளவை மரங்கள்தான் தருகிறதாம். மரங்கள் சுவாசிக்கிறபடியாற்தான் நாங்களெல்லாம் சுவாசிக்கக்கூடியதாயிருக்கு என்று கூறுவார். அவ்வளவு ஏன்.. பூமி வெப்பமடைவதைக் கட்டுப்படுத்த மரங்கள் பெரிய உதவி செய்கின்றனவாம். அவர் கூறுவதை வகுப்பில் எல்லாரும் வியப்புடன்; கேட்டுக்கொண்டிருந்தது அனுஜனின் மனதில் மீண்டும் ஒரு காட்சிபோல நினைவுக்கு வந்தது..

‘பூமியைச் சுற்றி ஒரு போர்வைபோலிருக்கிற வாயுமண்டலத்தில நிலைகொண்டுள்ள கரியமிலவாயு, மீத்தேன், நைட்ரஸ் ஒக்ஸ்பைட் போன்ற வாயுக்கள் சூரியஒளியிலிருந்து வெப்பத்தை உள்வாங்குவதால வாயுமண்டலம் வெப்பமடையிது.. இதில கரியமிலவாயுவின் பங்குதான் கூடுதலாயிருக்கு.. கரியமிலவாயுவின் ஆயுட்காலம் வாயுமண்டலத்தில அம்பது முதல் ரெண்டாயிரம் ஆண்டுவரை இருக்கும்.. இதனால இதன் அடர்த்தி அதிகரிக்க அதிகரிக்க வெப்பம் உயர்ந்துகொண்டே போகும்.. வாகனங்களுக்கு பெற்றோலியத்தை எரிபொருளாகப் பாவிக்கிறதாலயும்.. தொழிற்சாலைகளின் பின்விழைவாகவும் பெருமளவு கரியமிலவாயு வெளியேறி வாயுமண்டலத்தைச் சென்றடையிது. இப்படிச் சில முக்கிய காரணங்களைக் கூறினாலும் இன்னும் பல காரணங்கள் இருக்கு..

..இதால பூமிக்கு நிறையப் பாதிப்புகள் ஏற்படும். பனிமலைகள் உருகுவதால கடல்நீர் மட்டம் உயரும்.. பூமியின்ர பல பகுதிகள் கடலுக்குள்ள மூழ்கிப்போகும்.. கடுமையான வரட்சி ஏற்படும்.. குடிநீர் பற்றாக்குறை தோன்றும்.. விவசாயம் பாதிக்கப்பட்டும்.. பல நோய்கள் பரவும்.. எரிமலை புயல் போன்ற மோசமான இயற்கை அழிவுகள் தோன்றும்..

..ஆனால் இந்தமாதிரி மோசமான நிலைமையிலயிருந்து இன்னும் எங்களையெல்லாம் காப்பாற்றிக்கொண்டிருக்கிறது மரங்கள்தான்! மரங்களை அழிக்கக்கூடாது.. எங்களாலை இயன்றளவு மரங்களை நடவேணும்.. உங்களுக்குத் தெரியுமா.. ஒரு மரம் தனது வாழ்நாளிலை ஒரு தொன் அளவான கரியமிலவாயுவை உள்ளெடுக்கிறது..!’

மரங்களைப்பற்றிய இவ்வளவு பயன்களையும் அறிந்துகொள்வதற்கு முன்பிருந்தே அனுஜனுக்கு மரங்களென்றால் உயிர். அவனது வளர்த்தியெல்லாம் வீட்டுவளவில் உள்ள மரங்களோடு சேர்ந்துதான்! புளியம்பழம் உலுப்பிக் கொட்டுவதென்றால் அவனுக்கு வலு புழுகமாயிருக்கும். ஒவ்வொரு கொப்புக்களாக ஏறிநின்று தொங்கித் தொங்கி ஆட்டுவது நல்ல விளையாட்டுப்போலிருக்கும். பொலு பொலு எனக் கொட்டுண்ணும் பழங்களை அம்மா கீழே நின்று ‘கவனம் ராசா.. கவனம்..’ எனச் சொல்லிக்கொண்டே பொறுக்குவாள். பலாப்பழம் பழுத்தால் மரத்தின் பக்கம் போகும்போதே அதன் வாசனையில் அழைக்கும். ஒரு கயிற்றையும் கையோடு கொண்டு ஏறவேண்டும். கயிற்றைக் கிழையின் மேலாக மாட்டி பழத்தின் காம்பிற் கட்டிவிட்டு மறுதலைப்பைக் கீழே நிற்கும் தம்பியிடம் கொடுத்துவிட்டால் பிடித்துக்கொண்டிருப்பான். காம்பை வெட்டிவிட்டதும் தம்பி பிடியை மெல்ல மெல்லத் தளர்த்த பலாப்பழம் கீழே இறங்கும்.

ஒவ்வொரு சீசனிலும் மரங்கள் காய்த்து மாம்பழம் கொய்யாப்பழம் நாவற்பழம் எனக் கனிந்து அவனுக்காக உல்லாசங்களைக் கொண்டுவரும். மரங்களில், எந்தக் கொப்புகளில் குரங்குக்குட்டிபோலப் பாயலாம்.. எந்தக் கெவரில் உடும்புபோல ஊர்ந்து ஏறவேண்டும் என்பதெல்லாம் அனுஜனுக்கு அத்துப்படி! சாந்தி ரீச்சர் வீட்டிற்கு வந்து பார்த்தால் இந்தத் தோட்டத்தையும் மரங்களையும் பார்த்துச் சந்தோஷப்படுவார். அவரிடம் கேட்டால் வீட்டுக்கு வருவாரோ என்னவோ? ரீச்சர் சொன்னபிறகு சிறு மரக்கன்றுகளைக்கூட வீட்டு வளவில் நட்டு வளர்க்கிறான் அனுஜன். அப்பா அவனுக்காக நல்ல மரக்கன்றுகளை ஃபாமிலிருந்து வேண்டிவந்து கொடுத்திருந்தார்.

ரீச்சர் பாடசாலையிற்கூட மரங்களைப் பக்குவமாகப் பாதுகாத்து வளர்ப்பதற்கு மாணவர்களை ஊக்கப்படுத்துவார். ஏற்கனவே வளர்ந்திருக்கும் பெரிய மரங்களில் அந்த மரங்களே கூறுவதுபோல அவற்றின் பயன்பாட்டைப் பெரிய எழுத்துக்களில் எழுதித் தொங்கவிட்டிருப்பார். இன்னும் பல மரக்கன்றுகளை நட்டு, அவற்றைச் சுற்றி பாதுகாப்புக்கூடு கட்டப்பட்டு வளர்க்கப்படுகிறது. பாதுகாப்புக்கூடு ஆடு மாடுகளுக்காகவல்ல! சிலபேர் அவற்றின் அருமை தெரியாமல் கிழைகளை ஒடித்து முறித்துவிடக்கூடும் என்ற பயம்.

மாணவர்களின் பாவனையின்போது தண்ணீர்பைப்களிலிருந்து விரயமாகும் நீரை நிலத்தடியில் பொருத்தப்பட்ட குழாய்கள்மூலம் மரப் பாத்திகளுக்குப் போய்ச்சேரும் ஒழுங்குமுறை செய்யப்பட்டிருக்கிறது. இதனால் எவ்விடத்திலேனும் தண்ணீர் தேங்கிநின்று சேறு சகதியாவதில்லை. சதுப்புநிலங்கள், தண்ணீர் தேங்கும் ஈரமான இடங்களிலிருந்து மீத்தேன் வாயு உற்பத்தியாகிறது என ரீச்சர் கூறியிருக்கிறார்.

இந்த வேலைகளுக்கெல்லாம் அதிபர் நல்ல ஆதரவு கொடுப்பார். ஆனால் வேறு சில சேர்மாருக்கும் ரீச்சர்மாருக்கும் சாந்தி ரீச்சரைப் பிடிக்காது. அவருடைய எடுப்புகளுக்கெல்லாம் அதிபர் சப்போர்ட் பண்ணுகிறார்.. ரீச்சர் அதிபரிடம் நல்ல பெயர் எடுக்கிறார்.. என்பதுதான் காரணம். பாடநேரங்களில் மாணவர்களையெல்லாம் இந்த வேலைகளில் ஈடுபடுத்தி அவர்களது படிப்பை சாந்தி ரீச்சர் நாசமாக்குகிறார் என்று பெற்றோர்களிடம் முறையிட்டுக் குழப்பியிருக்கிறார்கள். ஆனால் அதிபர் அதையெல்லாம் சமாளித்துவிடுவதில் வல்லவர். சாதாரண ஆட்களைப்போல ரீச்சர்மாருக்குள்ளேயே எரிச்சல் பொறாமையைக் காணும்போது அனுஜனுக்கு ஆச்சரியமாயிருக்கும்.

..பாடசாலையைப்பற்றிய நினைவுகளுடன் ஒரு வரிசை பாத்திகளுக்கு வதவதவென்று தண்ணீர் பாய்ச்சிக்கொண்டு வந்ததே தெரியவில்லை. வாய்க்காலில் தண்ணீர் ஓடிவரும் வேகம் குறைந்ததுகூட கவனத்திற் படவில்லை. சற்று நேரத்தில் தண்ணீர் முற்றாகவே அற்றுப்போய்க்கொண்டிருந்தது. அப்பா களைத்துப்போனாரோ? அனுஜன் அப்பாவுக்குக் கேட்கக்கூடியதாக உரத்துக் கத்தினான்.

“அப்போவ்… தண்ணி வரல்ல..”

அப்பா பதிலுக்கு சத்தமிட்டுக் கூறினார்.. “பார் தம்பி.. பார்.. எங்கையாவது உடைச்சிருக்கும்..”

தோளில் மண்வெட்டியைத் தூக்கி வைத்துக்கொண்டு வாய்க்கால் நீட்டுக்குப் பார்த்துக்கொண்டே ஓடினான். வளர்ந்திருக்கும் மரவள்ளிச்செடிகளுக்கு வெளியே வந்தபோது, பெருவாய்க்காலில் சில காகங்கள் தண்ணீரில் முங்கி முங்;கிச் சிறகுகளை அடித்துக் குளித்துக்கொண்டிருப்பது தெரிந்தது. காகங்கள்; குளிப்பதால் வாய்க்காலில் தண்ணீர் தடைப்பட்டுத் தழும்பிவழிந்து உடைப்பெடுத்து வெறும் தரையில் ஓடிக் குளமாகிக்கொண்டிருந்தது. அனுஜன் ஒரு பாய்ச்சலில் ஓடிப்போய் மண்ணை வெட்டி அணைத்து உடைப்பை மூடினான்.

காகங்கள் மரக்கிழைகளில் பறந்துபோயிருந்து சிறகுகளை உதறி ஈரம் கலைத்தன. அப்பா கையைத் தட்டிச் சத்தமிட்டுக் காகங்களைக் கலைக்க முயற்சித்தார். அவை பறந்து பறந்து வேறு கிழைகளிலமர்ந்து நோட்டம் பார்த்தன. அனுஜனுக்குச் சிரிப்பாயிருந்தது. அவை அப்பாவை ஏய்க்கின்றன. அப்பா போனபிறகு தண்ணீரில் இறங்கும் கள்ளநோக்கத்துடன்தான் காகங்கள் பார்த்துக்கொண்டிருந்தன.

அப்பா கிணற்றடிக்குப் போய் மீண்டும் ஒரு மெசினைப்போல இயங்கத் தொடங்கினார். தண்ணீர் சலசலத்து ஓடிவந்தது.

‘இன்றைக்கு ஸ்கூலுக்கு நேரத்துக்குப் போனமாதிரித்தான்..’ என மனதுக்குள் அலுத்துக்கொண்டான் அனுஜன். தண்ணீர் பாய்ச்சும்போது இப்படி ஏதாவது தடங்கல் ஏற்பட்டால் சுணக்கமாகிவிடும்.

“மெசினொன்று வாங்கியிட்டால் நீயும் இதுக்குள்ள வந்து கஷ்டப்படத் தேவையில்ல.. பள்ளிக்கூடத்துக்கும் நேரகாலத்தோட போயிடலாம்..” என அப்பா சில சமயங்களிற் கூறுவார். அப்பா அப்படிச் சொல்லிக்கொண்டிருந்தாலும் அதற்கு அவருக்கு பணவசதி சரிப்பட்டுவரவில்லை. பாடசாலைக்குச் சுணக்கமாகப் போவதுபற்றிய மனவருத்தம் அப்பாவுக்கும் உள்ளதுதான். ஆனால் அவருக்கு உதவிக்கு வேறு ஆளும் இல்லை. எனினும் மனம் தாங்காது அப்பா அப்படிக் கூறுவது அவர்மேல் இன்னும் பட்சத்தை அதிகரிக்கும்.

‘பரவாயில்லை.. அப்பா.. நீங்க கவலைப்படாதைங்க..!’ என்று சொல்லவேண்டும்போலிருக்கும்.

‘அப்பா பாவம்.. அம்மா..!’ என சில வேளைகளில் அம்மாவிடம் கூறிக் கவலைப்படுவான் அனுஜன். அவனது தலையைத் தடவிக்கொடுத்தவாறு அம்மா ஏக்கப் பெருமூச்சுடன் பட்டு நொந்துபோன கதைகளைக் கூறுவார்.. ‘கார் வைச்சிருந்து ஹயர் ஓடி நல்லாய் உழைச்ச மனுசன்.. யுத்தமும் அடிபாடும் நடந்த காலத்தில எல்லாச் சாமான்களையும் இந்தப் பக்கம் வரத்தில்லாமல் நிப்பாட்டியிருந்தாங்கள்.. பெற்றோலுக்கும் தட்டுப்பாடாய்ப்போச்சு.. பிறகென்ன? உழைப்பும் படுத்திட்டிது.. காரையும் கருவாட்டு விலைக்கு விக்கவேண்டிய நிலமை…! எல்லாம் முடிஞ்சுபோச்சு.. இப்ப இந்தமாதிரிக் கிடந்து கஷ்டப்படுறபர்..’ அம்மாவின் கண்ணீர் அப்பாவுக்காகவா அல்லது குடும்பத்தின் கஷ்டநிலைமையை நினைத்தா என்றும் புரியாமலிருக்கும்.

கிணற்றிலிருந்து தண்ணீர் இழுத்து இழுத்து அவருக்குக் கைமூட்டு வலிக்குமோ என்னவோ.. ‘மெசினொன்று வாங்கினால் நல்லது’ என்று அம்மா வற்புறுத்தினால்; அப்பா ஏதாவது சமாதானம் சொல்லிச் சமாளித்துவிடுவார்.

“இதென்ன.. அஞ்சாறு கன்றுகளுக்கு.. அள்ளி இறைக்கிறது பெரிய வேலையே..?”

..தம்பியவர்கள் தோட்டத்திற்கு வெளியே வந்துநின்று குரல் கொடுத்ததும்தான் அனுஜன் சிந்தனை கலைந்தான்.

“ஸ்கூலுக்கு நேரம் போயிட்டிது அண்ணா.. நாங்கள் போறம்… நீங்க பிறகு வாங்க..!”

நேரம் ஏற்கனவே சுணங்கிக்கொண்டிருப்பதை அனுஜனுக்குச் சொல்லும்படி அம்மாதான் அவர்களை அனுப்பியிருப்பாள். அனுஜனின் பதிலுக்குக் காத்திராமல் அவர்கள் திரும்பி ஓடுவது தெரிந்தது. வழக்கமாக தம்பியவர்கள் இருவருடனும் சேர்ந்துதான் அனுஜன் ஸ்கூலுக்குப் போவதுண்டு. தண்ணீர் இறைப்பில் சுணக்கம் ஏற்பட்டால் தனித்துப் போகவேண்டியிருக்கும். அனுஜனுக்கு மனம் படபடத்தாலும், ‘இந்தா முடியப்போகுது..’ எனத் தன்னைத் தானே தேற்றிக்கொண்டு கடைசி நிரைப் பாத்திகளுக்குத் தண்ணீரைத் திருப்பினான்.

வேலை முடிந்து வெளியே வந்தபோது சூரியவெளிச்சம் முகத்திலடித்தது. நெற்றியில் வழியும் வியர்வையைத் துடைத்தவாறு கிணற்றடிக்கு ஓடினான். அப்பா தண்ணீர் அள்ளி அவனுக்குக் குளிக்க வார்த்துவிட்டுக் கூறினார்.. ‘ஓடிப்போய் வெளிக்கிடு.. நான் சைக்கிளில கொண்டுபோய் விடுறன்..’

அவர் அப்படித்தான் கூறுவார்.. அவரைப் பார்த்துக்கொண்டு நின்றால் இன்னும் சுணங்கிவிடும். கிணற்றடியிலிருந்து அவர் வருவதைக் கண்டதும் மாடு ‘அம்பா..’ எனக் கத்தும். ‘கொஞ்சம் பொறு தம்பி வந்திடுறன்..’ என்று சொல்லிக்கொண்டே மாட்டுக்குத் தவிடு தீவனம் ஊட்டும் அலுவலைத் தொடங்கிவிடுவார். வருவார்.. வருவார் எனப் பார்த்துக்கொண்டே நிற்கவேண்டியிருக்கும். அதற்குமுதல் வெளிக்கிட்டால் ஓடியே போய்ச் சேர்ந்துவிடலாம்.

உடுப்பை அணிந்து வெளிக்கிடும்போதே அம்மா இரண்டு வாய் ஊட்டிவிட்டாள். சாப்பிட்டது பாதி சாப்பிடாதது பாதியாக ஆயத்தமாகி, முதுகில் புத்தகப் பையையும் கொழுவிக்கொண்டு வெளியேறினான் அனுஜன். இரண்டு கிலோ மீட்டர் தூரம்வரை போகவேண்டும். ரோட்டில் பள்ளிக்கூடப் பிள்ளைகள் யாரையும் காணவில்லை. நேரத்தோடு போகும்போது சைக்கிள்களிலும் நடந்தும் கூட்டம் கூட்டமாகப் போகும் மாணவர்களைக் காணலாம். இப்போது எல்லோரும் போய்ச் சேர்ந்திருப்பார்கள். பாடசாலைகளும் தொடங்கியிருக்கும். அனுஜன் ஓட்டமும் நடையுமாகப் போனான். மூச்சு வாங்கியது. தும்மலும் வந்து வந்து அரியண்டம் கொடுத்தது. விடியப்புறமே குளிரிலும் நீரிலும் வேலை செய்யிறபடியாற்தான் இருமலும் தும்மலும் விட்டுப் போகுதில்லை என்று அம்மா அப்பாவுடன் குறைப்படுவாள். அப்பா ஆயுர்வேத வைத்தியரிடம் கூட்டிப்போய்க் காட்டி, பீனீச வருத்தத்திற்கென தலைக்கு வைக்கும் எண்ணெயும் வாங்கித் தந்திருந்தார். ஆனால் இந்தத் தும்மல் எதற்கும் கேட்பதாயில்லை.

வாசலுக்கு வந்தபோது ஸ்கூல் ஏற்கனவே தொடங்கியிருந்தது. அதிபர் பேசிக்கொண்டிருப்பது ஸ்பீக்கரில் கேட்டது. பிறேயர் முடிந்து மாணவர்கள் எல்லோரும் விளையாட்டு மைதானத்திற்கு வந்து ஒழுங்குமுறைப்படி நிற்க, அதிபர் உரையாற்றத் தொடங்குவார். அது முடிந்து திரும்ப அவர்கள் வகுப்புகளுக்குப் போனதும் பாடங்கள் தொடங்கும்.

பெரிய கேற்றடியில் பிரிஃபெக்ட் அண்ணாமார் லேட்டாக வந்தவர்களை மறித்து வைத்திருந்தார்கள். ‘கடவுளே.. அடிதான் விழப்போகுது..’ என நெஞ்சிடியுடன் அனுஜன் உள்ளே போனான். சுதர்சன் அண்ணா அவனைக் கண்டதும்.. ‘என்னடா இன்டைக்கும் லேட்டா..?’ என்று கேட்டார். அனுஜன் பதில் பேசாமல் ஒரு சிரிப்பை வெளிப்படுத்திச் சமாளித்தான். சுதர்சன் அண்ணாவுக்கு அனுஜனது வீட்டு நிலைமைகள் ஓரளவுக்குத் தெரியும். ஏற்கனவே ஒருமுறை அதுபற்றி விசாரித்து அறிந்திருக்கிறார்.

“சரி..சரி.. ஓடு..! பின் பக்கத்தால வகுப்புக்கு ஓடிப்போய்ச் சேர்..!”

ஒரு கிழையிலிருந்து சட்டென எழுந்து பறக்கும் குருவியைப்போல அனுஜன் வீச்சாக ஓடினான். சுற்றவர உள்ள பாடசாலைக் கட்டடங்களின் நடுவில் கிரவ்ண்ட் உள்ளது. அதிபர் உரையாற்றிக்கொண்டிருப்பதால் ஆசிரியர்கள் எல்லோரும் அங்குதான் நிற்பார்கள். கட்டடங்களுக்குப் பின்பக்கமாக யாருடைய கண்களிலும் படாமல் வகுப்புக்கு ஓடிவிடலாம்.

முதுகில் புத்தகப்பைச் சுமையுடன் ஓடிய வேகத்தில் கல்லொன்று தடுக்கியதும் முகம் குப்புற விழுந்துவிடுவான்போலிருந்தது. ஓட்ட வேகத்திலேயே ஒருவாறு பலன்ஸ் எடுத்து விழுந்துவிடாது ஓடினான். மூச்சிழுத்ததும் தும்மலும் கூடவே வந்து சொதப்பிவிட்டது.

“டேய்..டேய்.. டேய்… இஞ்ச வா..!”

அந்தச் சத்தத்தில் அனுஜன் திடுக்குற்று நின்றான். கள்ளரைப் பிடிக்கும் பாவனையில் மறைவாக நின்ற அருணகிரி சேர் கையிலிருந்த பிரம்பை அசைத்து அழைத்தார்… “இஞ்ச வா..!”

ஓட்டம் திடுமென நின்றதில் மேலிட்ட நெஞ்சுப் படபடப்புடன் அனுஜன் அண்மையிற் சென்றான்.

“உன்னை ஆர் உள்ள விட்டது..?”

அவன் பதிலேதும் பேசாமலே நின்றான்.

“நீ.. சாந்தி மிஸ்ஸின்ர கிளாஸ்தானே..?”

“ம்..ம்.!”

“உங்களுக்கெல்லாம் ஒரு சூடு சுரணை இல்லையாடா..?”

அனுஜனுக்குத் தெரியாதா.. என்ன! தான் அவ்வப்போது லேட்டாக வருவதைக் குத்திக் காட்டுவதுபோல சாந்தி ரீச்சருக்கும் ஒரு போடு போடுகிறார் அருணகிரி சேர்.

“இப்பிடி ஒரு பக்கமாய் நில்.. அசெம்பிளி முடியட்டும்..!”

அசெம்பிளி முடிந்து பிள்ளைகளெல்லாம் வகுப்புகளுக்குப் போக, பிரிஃபெக்ட் அண்ணன்மார் மறித்து வைத்திருந்தவர்களுடன் உள்ளே வந்தார்கள். சுதர்சன் அண்ணாவுக்கு அருணகிரி சேரிடமிருந்து ஒரு டோஸ் கிடைத்தது. தனக்காக அவர் ஏச்சு வாங்குகிறாரே என அனுஜனுக்கு மனவருத்தமாயிருந்தது. அருணகிரி சேர், லேட்டாக வந்தவர்களையெல்லாம் கிரவ்ண்ட்டின் நடுவில் போய் வெயிலில் நிற்கச் சொன்னார். ‘அந்த இடத்தை விட்டு அசையக்கூடாது..’ என்று கட்டளையும் இட்டார்.

சாந்தி ரீச்சர் பாடத்தைத் தொடங்கியிருப்பார்.. ஓட்டமும் நடையுமாக வந்தும் பலனில்லாமற் போய்விட்டது என்ற கவலை அனுஜனுக்கு. வகுப்புக்களிலிருந்தெல்லாம் மாணவர்கள் பார்த்துக்கொண்டிருப்பார்களே எனக் கூச்சமாயுமிருந்தது. ஏ.எல் படிக்கும் கேசிகன் அண்ணாவும் வெயிலில் நின்றுகொண்டிருந்தார். அனுஜன் அவரிடம் கேட்டான்..

“அண்ணா நீங்கள் ஏன் லேட்..?”

அவரது முகம் மூஞ்சூறின் முகம்போல மாறி வந்தது.

“உமக்கு இப்ப சொல்லவேணுமோ..? இவர் பெரிய ஆள்.. கேட்க வந்திட்டார்..!”

அனுஜன் அப்படிக் கேட்டது, வளர்ந்த அண்ணாவும் எங்களுடன் வந்து வெயிலில் நிற்கிறாரே அவருக்கும் கூச்சமாயிருக்குமோ என்ற உணர்விற்தான். ஆனால் இரக்கப்படுவதற்குக்கூட பெரிய ஆளாயிருக்கவேண்டும்போலும்!

காலைவெயிலானாலும் சுட்டெரிக்கும் சூடு. காலையில் மாய்ந்து மாய்ந்து வேலை செய்ததும், ஓடி ஓடி வந்ததும் இப்போது புத்தகப்பைச் சுமையுடன் நின்ற நிலையில் நிற்கும்போது இடுப்பை வலித்தது. தாகமெடுத்தது. தண்ணீர் குடிப்பதானாலும் அருணகிரி சேர் வந்து அருள் புரியவேண்டும். அவர் எப்போது வருவார்.. எப்போது வகுப்புகளுக்குப் போகச்சொல்வார்..?

அருணகிரி சேர் வந்து கேசிகன் அண்ணாவை அழைத்தார்.

“வீட்டுக்கு ஓடிப்போய்.. ஜெயந்தன் வெளிக்கிட்டு நிற்பான் கூட்டிக்கொண்டு வா..!” எனக் கூறிவிட்டுத் திரும்பிப் போனார்.

ஜெயந்தன் அவரது மகன். அருணகிரி சேர் ஸ்கூட்டரில் வரும்போது வழக்கமாக அவனும் சேர்ந்து வருவான். சில நாட்களில் மகன் சுணங்கிவிட்டால் யாராவது அண்ணன்மாரை அனுப்பிக் கூட்டிவரச் சொல்லுவார். அவர்கள் சைக்கிளில் போய் கூட்டிவருவார்கள்.

ஆசிரியர்களின் மகனாக இருந்தால் எவ்வளவு நல்லது என அனுஜனுக்குத் தோன்றியது.. ‘கடவுளே, அடுத்த பிறவியில நான் ஒரு ஆசிரியரின் மகனாகப் பிறக்கவேணும்..!’

ஐயையோ.. அப்படியென்றால் அப்பா? ‘இல்ல இல்ல.. கடவுளே, அடுத்த பிறவியில எங்கட அப்பா ஒரு ஆசிரியராகவேணும்..’ அனுஜன் தன் வேண்டுதலை மாற்றிக்கொண்டான்.

வெயில் இன்னும் சுட்டெரித்தது. அனுஜனுக்கு உடல் மட்டுமின்றி மனதும் கொதித்து வெப்பமடைந்துகொண்டிருந்தது.

– நங்கூரம் சூழலியல் சஞ்சிகையில் பிரசுரமானது ஜனவரி 2013

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *