கானலில் ஒரு கங்கை வழிபாடு

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: காதல்
கதைப்பதிவு: March 30, 2014
பார்வையிட்டோர்: 24,044 
 

அடி வளவு மாமரத்து நிழலுக்குக் கீழே,தேவன் தீராத சத்திய வேட்கையுடன், ஏதோ கலை வழிபாடு செய்ய வந்து நிற்பது போல் உலகப் பிரக்ஞையற்றவனாய்,தன்னை மறந்து நின்று கொண்டிருந்தான்.இருபது வயது கூட நிரம்பாத அவனுக்கு அந்த வயதில் அப்படியொரு கலைத் தாபம் அவன் வயதொத்த ஏனைய இளைஞர்கள் அம்மாமரத்தை நாடி வருவது மாங்காய் பறித்துச் சாப்பிடத்தான் பழத்துக்குதவாத புளி மாங்காய் தானென்றாலும் ,கல்லால் அடித்து அதை ஒவ்வொன்றாக விழுத்திக் காயப்பட்டு விழுகிற , அம்மாங்காய்களைத் தோழர்களோடு வேடிக்கைக் கதை பேசிச் சுவைத்து உண்பதில் அவர்களுக்கு அலாதி மகிழ்ச்சி.

வீட்டுக்காரன் கண்டால் அவர்களைச் சும்மா விட மாட்டார் கண்டபடி திட்டு விழும் அவர்களின் கரைச்சல் தாங்காமல் சந்தையில் மரக்கறி வியாபாரம் செய்யும் லட்சுமிக்கு மரத்துடனேயே காய்களை விற்றும் விடுவார் தேவன் இதையெல்லாம் கண்டு கொள்வதில்லை. அவனது உலகம் சராசரி, மனித வாழ்வோடு ஒட்டாத சிந்தனை வெறித்த ஒரு தனிமை உலகம் நேரிலே பார்ப்பதற்கு, எந்தப் பாசக் குட்டையினுள்ளும் அகப்பாடாத விசாலமான ஆத்மார்த்த உணர்வுடன் கூடிய லட்சிய வேட்கை கொண்ட அப்பழுக்கற்ற ஒரு மானுட தேவ புருஷன் போல் அவன் தோன்றுவான். சிறு வயதிலேயே பெற்றோரைப் பறி கொடுக்க நேர்ந்த காரணத்தினாலேயே அவனுக்கு அவ்வாறான ஒரு முதிர்ச்சி, தானாகவே கனிந்தது. அவனை ஆதரித்து அன்பு செய்ய எவருமே முன் வரவில்லை நெருங்கிய உறவினரொருவரின் வீட்டில் அடிமை வேலை செய்யும் பணியாளனாகவே இன்னும் அவன் இருக்கிறான். ஓய்வு கிடைக்கும் போதெல்லாம் அவன் தனது இயல்பான தனிமை உலகை நாடி அந்த மரத்தடியே கதியென்று கிடப்பான் சிறு வயதிலேயே தனது வயதொத்த பையன்களை ஏன் சிறுமிகளையும் கூட ஒன்று கூட்டி அவன் நாடகம் போடவும் தவ்றுவதில்லை அவனே சிறந்த நடிகன் அது மட்டுமல்ல கணீரென்ற குரலில் உணர்ச்சி சிதறாமல் அவன் பேசுவதை நாள் முழுக்கக் கேட்டுக் கொண்டே இருக்கலாம். பின்னாளில் ஒரு சிறந்த மேடைப் பேச்சாளனாகப் பிரகாசிக்ககூடிய ஆளுமை அவனிடம் நிறையவே இருந்தது. அவனுக்கு நன்றாக நடிக்க வருவதோடு மற்றவர்களைப் பயிற்றுவிக்கிற சிறந்த இயக்குனர் அவதாரமும் அவனுக்குண்டு.
சுகந்தி என்றொரு சிறுமி அவன் போடும் நாடகங்களில் முக்கிய கதாபாத்திரம் ஏற்று நடித்து வருபவள் அவனுக்கு நெருங்கிய சொந்தமும் கூட மாமன் மகள் என்றாலும் மாற்றான் தோட்டத்து ரோஜா மாதிரி அவள்.

முதலாம் தலைமுறைக் காலமென்றபடியால் அவள் வயதுப் பெண்களுக்கே கட்டுப்பாடு அதிகம் வயது பத்தாக இருக்கும் போதே நல்ல வளர்த்தியும் மொழு மொழுவென்ற தேக வனப்பும் கொண்ட கள்ளம் கபடமற்ற கிராமத்து இயல்புடன் கூடிய ஒரு வசீகரமான இளம் தேவதை போல அவள் இருந்தாள் தேவனுக்கு அவளை மிகவும் பிடிக்கும். தனது உயர்ந்த இலட்சியங்களையே ஆராதனை பண்ணி வழிபடக்கூடிய தனக்குப் பொருத்தமான ஓர் இலட்சியத் துணையாக எதிர்காலத்தில் அவள் இருப்பாளென்று , அவன் மனப்பூர்வமாக நம்பினான்

சுகந்தி பிறர் அறியாமல் அவனுடன் பழக நேர்கிற அந்தத் தருணங்கள் மிகவும் அற்புதமானவை சிறு வயதிலேயே அவன் பற்றிய நினைவு அவளையறியாமலே அவளின் மனதில் வேரூன்றி விட்டது. அடி வளவில் அந்த மாமரத்து நிழலுக்குக் கீழே, அவன் நாடகம் போடுவதற்காக ஒரு கீற்றுக் கொட்டகை போடுவான். இதில் யாரும் அவனைத் தடை செய்வதில்லை அவனின் நாடகம் மாலை வேளைகளில் அமர்க்களமாக நடைபெறும் இத்தனைக்கும் நடை முறை வாழ்க்கையில் எடுபடாமல் போன ஒரு வெற்று மனிதன் மாதிரித்தான் அவன் நிலை ஒரு வேளை சாப்பாட்டுக்காகச் சமையல் வேலை செய்து பிழைப்பவன் அரைக்காற் சட்டைதான் எப்பவும் அணிவான். அதுவும் சமையல் கரி பிடித்து அழுக்கு மண்டிக் காட்சி தரும் சுகந்தி அவனுக்காக மனமிரங்கித் தனது சகோதரர்கள் போடாமல் கழித்து வைத்த பழம் உடுப்புகளை அவனுக்காக வாஞ்சையோடு, எடுத்து வருவாள் எல்லாம் வீட்டிற்குத் தெரியாமல் தான்.

அவளும் ஒரு தனிப் போக்குத் தான் சராசரிப் பெண்களைப் போல சலனம் மிக்க நடைமுறை வாழ்க்கையோடு ஒட்டாத விட்டு விலகி நின்று, பிரகாசிக்கின்ற ஒரு தனித் துருவம் போன்றவள் அவள். தேவன் போலவே கலை ஊற்றான புனிதமான மனம் அவளுக்கு, தேவனது இடறலற்ற கணீரென்ற குரல் மீது அவளுக்கு ஒரு தனி ஈடுபாடு. அவன் பிறரைச் சங்கடப்படுத்தாமல் அமைதியாகச் சலனமின்றிப் பேசும் போது, அவள் கவனம் சிதறாமல் கேட்டுக் கொண்டிருப்பாள். நாடகத்தில் அவன் செய்து காட்டுவதை அப்படியே செய்வாள். அது அவர்கள் இதயங்களிலான ஒரு தனி உலகம்.
அது எவ்வளவு தூரத்திற்கு நிலைக்கும்? இந்த உலகம் வெற்றுக் கண்களால் கண்டு கொள்ளும் வரைக்கும் தான்.சுகந்தி வளர்ந்து கொண்டிருந்தாள், வாழ்க்கையை நோக்கி, பருவம் கனிகின்ற தோற்றப்பாடு அவளையறியாமலே வந்து சேர்ந்தது. அவளால் முன்பு போல , வெளியே வர முடியவில்லை.

எனினும் அந்த நிழல் வெறித்த சஞ்சாரத்தினிடையே, அபூர்வமான ஒரு கீதம் அவளுக்குக்காகக் கேட்டபடியே இருந்தது. அது தேவனின் அழைப்புக்குரல். அது அவளின் காது வரைக்கும் போகும் அவளுள் புகுந்து சிலிர்ப்பூட்டி மயக்கமில்லாத ஓர் ஆதர்ஸ வெளிக்கு அவளை இட்டுச் செல்லும் உலகம் விரும்பினாலென்ன விரும்பாவிட்டாலென்ன. அப்படியான அவர்களின் உயிர் வாழ்தல் , அங்கு இயல்பாகவே நடந்தேறி வந்தது.

ஒரு நாள் அந்த அடி வளவு மாமரத்து நிழலின் கீழே யாருமில்லாத சமயம் தேவன் முன்னால் நிலா எறித்தது.. இந்த மண் வெறித்த பூமியில், அவனுக்காய் அவன் இலட்சியங்களுக்குத் தோள் கொடுப்பதற்காக ஒளிப்பிழம்பு சோதியாக ஒரு மனித முகம். வேறு யார் அவனை அப்படித் தேடி வந்திருக்க முடியும்.

சுகந்திதான் நிலை கொள்ளாத மகிழ்ச்சியுடன், நிலா வெள்ளமாக வந்து நின்றாள். மணற் திட்டின் மீது அவன் வெறிச்சோடிக் குந்தியிருந்தான். அவளைக் கண்டதும் தொண்டை வரளக் கேட்டான்.

“ஏன் சுகந்தி? ஒரு கிழமையாய் என்னைப் பார்க்க வரேலை?”

“முன்பு மாதிரி இல்லையப்பா எனக்கினி வயது வந்திட்டுதாம் கண்டபடி நான் திரியக் கூடாதாம்.“

“எப்படிச் சுகந்தி உன்னைப் பார்க்காமலிருக்கிறது?. எனக்கு நீ வேணும் என்ரை நாடகத்துக்கு மட்டுமல்ல வாழ்க்கைக்கும் நீதான் வேணும். எங்கோ இருட்டில் கிடக்கிற என்னை உள்ளபடி புரிஞ்சு கொண்டவள் நீ ஒருத்திதானே”

“இது நடக்குமே? நாடகம் தான் உங்கடை உயிர் ஒரு பிச்சைக்காரனாய் இருந்தாலும் கலை உங்களை வாழ்விப்பதாய் உங்கடை நம்பிக்கை. என்னை வாழவைக்க இது போதுமென்று நான் நம்புறன். இந்த நம்பிக்கை வீட்டிலேயும் வர வேணுமே அப்பா என்ன சொல்லுறார் தெரியுமே? நீங்கள் ஒரு உதவாக்கைரையாம். உங்களோடு பழகினால் நானும் கெட்டழிஞ்சு போயிடுவேனாம் வேலிப் பொட்டுக்குள்ளாலை , நான் இனி வெளியே போகக் கூடாதம் அப்பிடி மீற்ப் போனால் வேலிப் பொட்டையும் அடைச்சுப் போடுவாராம்.”

“நீயும் அப்பிடியே நினைக்கிறாய் சுகந்தி?”
எப்பிடி……?”

“நான் உதவாக்கரையே? நான் படிக்காதது ஒரு பெரிய குறைதான். ஆறாம் வகுப்போடு என்னைப் படிக்க விடேலை மாமா சமையலுக்காக என்னை நிப்பாட்டிப் போட்டார் , அதனாலென்ன. எனக்குள்ளே கலைத்தீ எரிஞ்சு கொண்டிருக்கு. நான் ஒரு நல்ல நடிகனாக வர வேணும். என்ரை குரல் வளத்தை வைச்சு நான் பிழைச்சுக் கொள்ளுவன். இதன் மூலமே நான் உச்சத்துக்குப் போய் விடலாம்., இல்லையா? இதை நீ நம்புறியே சுகந்தி?”

“இதை நம்பாமலா நான் நான் உங்களிட்டை வந்தது? எனக்கு ஒன்றும் புரியேலை ஒரே குழப்பமாக இருக்கு. நீங்கள் உதவாக்கரையெண்டால், அப்பாவே ஒரு நல்ல மனிதனைக் காட்டட்டும் நான் அவனுக்கு மாலை போடுறன்.”

“அதுதான் நடக்கப் போகுது சுகந்தி. நீ என்னை மறப்பதுதான் நல்லது” என்றான் அவன் மன வைராக்கியத்தோடு.

அதைக் கேட்டு ஒன்றும் பதில் கூற மனம் வராமல் சுகந்தி மெளனமாக அழுது கொண்டே போய் விட்டாள். இது நடந்து முடிந்து ஒரு யுகத் தேய்வில் மெதுவாக வாழ்க்கை கழிந்து போனது. சுகந்திக்காக எல்லாத் தகுதிகளையும் உடைய ஒரு நல்ல மனிதனைப் புடம் போட்டே அப்பா தேர்ந்தெடுக்க வேண்டியிருந்தது இதில் தேவன் அவர் கண்களுக்குள் சிக்கவில்லை கேவலம் அவன் ஒரு உதவாக்கரை தானே வாழ்க்கையின் உன்னதங்களைப் பொருட்படுத்தாமல் ஒரு கழைக்கூத்தாடி போல அவன் நிலைமை அப்படியானால் யார் நல்ல மனிதன்? சகந்திக்காகத் தேடப்பட்டவனா அப்படியொருவன்? சல்லடை போட்டு அப்படியொருவனைக் கண்டு பிடிக்க அப்பா என்ன பாடுபட்டிருப்பார்? வாழ்வியல் சார்பான அவரின் கணிப்பின்படி, சுகந்திக்காக வந்து சேர்ந்த குமார், புறம் போக்கு வாழ்க்கையைச் சீரும் சிறப்புமாகக் கொண்டு நடத்தக் கூடிய சகல தகுதிகளையும் பெற்ற முழுமையான ஒரு பெரிய மனிதனென்றாலும் கூட மனதளவில் சுகந்தியை நெருங்கி வர முடியாதபடி, சிறுமைப்பட்டுப் போயிருக்கிற , அவனது நடதைக் கோளாறுகள் காரணமாகச் சுகந்தி, மனதால் பங்கப்பட்டுப் போகிற , இழப்பு வாழ்க்கையொன்றே தனது தரம் கெட்ட கல்யாண விதியின் சாபமாகி வெகுவாக மன்ம் நொந்து உருக்குலைந்து போயிருந்தாள். தேவனை மட்டும் அவள் மணக்க நேர்ந்திருந்தால் என்ன நடந்திருக்கும்? உணர்வுகளும் மனமும் ஏன் உயிரும் கூட எவ்வித பங்கமுமின்றி உச்சத்தில் கொடி கட்டிப் பறக்கவல்லவா நேர்ந்திருக்கும்.

குமாரின் அதிதீவிர , மன வக்கிரம் காரணமாக , அவளுக்கு ஒன்றுமே மிஞ்சவில்லை. உயிர் ஒழிந்து போன வெறும் சடம் தான் இப்போது அவள். அவள் ஒரு காலத்தில் மேடை விரித்துத் தேவனோடு ஒன்றுகூடிக் குலாவித் திரிந்த, அந்த அடி வளவு மாமரத்து நிழல் கூட எதிலோ சோடை போனதாய், களயிழந்து காட்சி தருகிறது. கண்னைத் திறந்து பார்த்தால் எங்கும் வெறுமை நெருப்புத் தான். இக்கனவினிடையே , நிஜதரிசனமாய் அவள் கண்கள் தேவனையே காணத் துடித்தன. அவன் என்னவானானோ தெரியவில்லை, கானல் முளைத்த நெஞ்சில் மீண்டும் அவன் காட்சிக்கு வருவானா?. அவனை எங்கே என்று தேடுவது? அவன் காலடிச் சுவடுகள் தேடி யாரும் அறியாமல் கிராமத்து பாதை வழியே அவள் போனபோது, ஒரு சமயம் தேவன் எதிர்ப்பட்டான். அவளைக் கண்டதும் சைக்கிளை விட்டு மெதுவாகப் பழைய புன்சிரிப்பு மாறாமல் இறங்கி வந்தான்., அவள் அவனெதிரே ஒன்றும் பேசத் தோன்றாமல் அவனையே மெய் மறந்து பார்த்தபடி உறைந்து போய் நின்றிருந்தாள்.

அவன் வெகுவாக மாறிப் போயிருந்தான். நீண்டு வளர்ந்த தலை முடியுடன் அழுக்கு மண்டிக் காட்சி தந்தான். அவனுக்கு ஏதோ பெருஞ்சோகம் நேர்ந்திருக்க வேண்டுமென்று , அவள் திடீரென்று நினைவு கூர்ந்தாள்.. அவனுக்கு அவளோடு நிறையப் பேச வேண்டும் போல் தோன்றியது.. கலை ஊற்று வற்றாத ஒளி மிக்க கண்களால் , அவளை ஏறிட்டு நோக்கியவாறே, அவன் மிருதுவாகக் கேட்டான்.

“சுகந்தி! எப்படி இருக்கிறாய்?”

“உங்களோடு சேர்ந்திருந்தால் என் மனம் பிழைச்சிருக்கும் இப்ப வெறும் கூடு தான் நான்”

அதற்கு அவன் கேட்டான்.

“நீ என்ன சொல்கிறாய்…………..?“

“நான் மனதால் வாழேலைஎண்டு சொல்லுறன்”

அவன் விஷமமாகச் சிரித்தபடியே கேட்டான். அப்ப ஓர்உதவாக்கரையுடனா உனக்கு வாழ்க்கை?”

“அப்பா அப்பிடி நினக்கேலையே . என்னை வாழ வைக்கப் புறம் போக்கான வாழ்வியல் தகுதிகளே போதுமென்று அவர் நம்பிக்கை மனதிலே அன்பில்லாமல் போனால் இது சரிப்பட்டு வருமே? சரி, என் நிலைமை இப்பிடி நீங்கள் எப்பிடி?”

“எனக்குக் கல்யாணம் ஒரு கனவு மாதிரி முடிஞ்சு போச்சு மூன்று பிள்ளைகளும் மனைவியும் போய்ச் சேர்ந்திட்டினம் எப்பவும் நான் இதை மெய்யென்று நம்பினவனில்லை. எல்லாத்தையும் மறந்திட்டுக் கலைக்காகவே,என் உயிர் ஓடிக் கொண்டிருக்கு”

அவன் அப்படியிருக்கக் கூடியவன் தான். வாழ்வு பற்றிய புறப் பிரக்ஞையாக வருகிற சலனங்களை இயல்பாக மறந்துவிட்டு, எதையுமே இழக்காத பாவனையில் அவனை அந்நிலையில் பார்க்க மிகவும் பெருமையாக இருந்தது சுகந்திக்கு. அவன் காலைத் தொட்டுக் கும்பிட வேண்டும் போல் தோன்றியது. பாவங்கள் சூழ்ந்த தன் இருப்பை மறந்து விட்டு,அதைச் செய்யவும் அவள் தயங்கவில்லை. இழப்பு வாழ்க்கையின் துயரங்கள் ஒழிந்து போகக, கங்கை குளித்து எழுவது போலத் தன்னை அது சாந்திப்படுத்துவதாக,அவள் முழு நம்பிக்கையோடு நினைவு கூர்ந்தாள்.

– மல்லிகை (நவம்பர் 2010)

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *