காதலும் கோலமும்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: காதல்
கதைப்பதிவு: September 27, 2012
பார்வையிட்டோர்: 9,356 
 

காதலர்களின் சொர்க்கமான மெரீனா கடற்கரையில் முத்தமிட்டுக் கொண்டிருக்கும் காதலர்களுக்கும், காதலரைப் போல் காட்சியமைத்துக் கொண்ட கயவர்களுக்கும் இடையில் செம்மேகமும், சிவப்புக் கம்பளக் கடலும் ஒன்றோடொன்று முத்தமிட்டுக் கொண்டிருந்ததை ரசித்த படியே இரு தோள்கள் மட்டும் சற்று உரசிய படி இருவர் அமர்ந்திருந்தனர். இவர்கள் காதலர்களே அல்ல என்று நினைப்பது போல் ஒருவர் மீது ஒருவர் சாயாமல் இருப்பது ஆச்சரியமானாலும், காதலர்கள் இல்லையென்றும் கூறமுடியாத படி நெருக்கமாகவே அமர்ந்திருந்தனர்.

“மலர்விழி, நாம் காதலிக்க ஆரம்பித்து நேற்றுடன் மூன்று வருடம் முடிந்தது. முத்தமென்ற சத்தமே இருக்கக்கூடாதென நீ இட்ட கட்டளைக்கு இன்னும் என்னிடம் மரியாதை இருக்கிறது. என் வீட்டில் ஓரளவுக்குச் சம்மதம்தான், ஆனால் உன் வீட்டில் என்ன நிலை?” என்ற கேள்வி கேட்டுக் கொண்டிருந்தான் வசந்தன்.

இது ஒன்றும் புதிய கேள்வி அல்ல எனினும், புதிதாக இதற்கு பதில் சொல்வதற்கு ஒரு விசயம் இருக்கிறது மலர்விழியிடம் என்பதை அவள் கண்கள் அவனைப் பார்க்கும் போது தெரிந்தது.

“மூன்று வருடம் போனதே தெரியல, இப்பந்தான் நாம முதன்முதலா சுதந்திர தினம் அன்னைக்கு சந்திச்சுகிட்ட மாதிரி இருக்கு, அதுக்குள்ள இது நாலாவது சுதந்திர தினமா?” என்றாள்.

நாலு சுதந்திர தினத்தை நாடு பாத்திருந்தாலும், அவனது காதல் சுதந்திர தினத்தை இன்னும் பார்க்காதவனாய் இருப்பது வசந்தன் முகத்திலேயே தெரிந்தது. வழக்கமான இந்த ஜோடிக்கு வழக்கமாக சுண்டல் விற்கும் அந்தப் பையன் வந்துவிட்டான்.

“என்னடா ராஜா, எப்படி இருக்க? வழக்கம் போல இரண்டு சுண்டல் பொட்டலம் கொடு” என்று பையில் வைத்திருந்த கிழிந்து ஒட்டு போட்ட பழைய ஐந்து ரூபாய் நோட்டை நீட்டினான் வசந்தன்.

“எனக்கின்னா சார்? சோக்காகீரேன். அதான் சுண்டல் வாங்குறதுக்குன்னே பல பேர் இங்க இருக்காங்களே, ஆனால் எனக்குத் தெரிஞ்சு மூனு வருசமா ஒரே மாதிரி இருக்கவங்க நீங்கதான் சார். அதுக்காகத்தான் ஒருத்தனும் வாங்கமாட்டேன்னு சொல்ற கிழிஞ்ச அஞ்சு ரூபாயயையும் உன்னான்ட வாங்கிக்குறேன்” என்று வழக்கமான குசும்போடு பேசினான் ராஜா.

வசந்தன் சுண்டல் பொட்டலத்தைப் பிரித்து சாப்பிட ஆரம்பித்துவிட்டான். ஆனால் மலர்விழியின் கைகள் கட்டப்பட்டதைப் போல அமைதியாகவே இருந்தது. இது வரைக்கும் மூடி மறைத்த அவளது கண்ணீரைக் கண்கள் காப்பாற்ற வழியின்றி உதிர்த்துவிட்டது. காதலியின் கண்ணீரைப் பார்த்துவிட்டு துடிக்காத காதலனும் இருப்பானா? எப்பொழுதும் தான் புலம்பும் போது தேற்றுகின்ற இவள் இன்று அழுகிறாளே என்று “என்ன ஆச்சு, வீட்டுல சொல்லிட்டியா” என்றான்.

அப்பொழுது அவள் வீட்டில் காதல் விவரத்தைச் சொன்னதாகவும், அதற்கு அவளது பெற்றோர்கள் முடியவே முடியாது என்றதையும் சொல்லி அழுதாள். அவளைத் தேற்றுவதற்காக வசந்தன் அவள் கண்ணீரைத் துடைத்தான். முதன்முறையாக அவள் அவன் மடியில் சாய்ந்து கொண்டாள். “இன்னைக்கும் வீட்டுக்குப் போயி கேட்பேன், இல்லைன்னு சொன்னா நாம இரண்டு பேரும் பதிவுத் திருமணம் செய்து கொள்ளலாம்” என்று சொல்லிவிட்டு வீட்டுக்குப் புறப்பட்டாள்.

இரவு எட்டு மணிக்கு வீட்டிற்கு சென்று சேரும் வேளையில் பிரபல வெள்ளித்திரை நாயகி நடிக்கும் கோலம் என்ற நாடகத்தைப் பார்த்துக் கொண்டிருந்த மலர்விழியின் தாய் மீனா அவளது கணவரிடம் கூறுகிறாள். “பாவங்க இந்தப் பொண்ணு எத்தனை வருசமா அந்தப் பையனைக் காதலிக்குது. ஆனா இந்தப் பொண்ணோட வீட்டுல சம்மதிக்கவே மாட்டேங்குறாங்களே” என்று கூறி துளிக் கண்ணீர் வடித்துக் கொண்டிருந்தாள்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *