கரிசல் காட்டு காதல் கதைகள்! – 11

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: காதல்
கதைப்பதிவு: January 6, 2013
பார்வையிட்டோர்: 11,565 
 

தன் பொண்டாட்டி கவிதாகூடப் பேசி ஏழெட்டு நாளைக்கு மேல ஆச்சி என்பதை நினைத்தபோது, சரவணனுக்கு நெஞ்சு கனத்தது. பகலில்கூட அவ்வளவாக தெரியவில்லை; இரவில்தான் தனிமைப் பட்டுப் போன வெறுமையிலும், வெக்கைத் யிலும் அவன் தவியாய்த் தவித்தான்.

சண்டை வந்ததற்குக் காரணம் சின்ன விஷயம்தான்.. எல்லாம் தீபாவளிக்கு சேலை எடுத்த பிரச்னை. ‘இதுக்கே இப்படி மொகத்தத் தூக்கி வச்சிக்கிட்டு இருக்கிறவ கூட நம்ம போயி பேசிட்டமின்னா அம்புட்டுத்தேன்… நம்ம தலயில ஏறி உக்காந்திருவா!’ என்ற வீராப்பில் அவன் இருக்க, அதுக்கு மேலே கவிதா இருந்தாள்.

வாசலில் உட்கார்ந்து அடுத்தவர்களோடு பேசிக்கொண்டு இருக்கிறவள், இவன் வந்துவிட்டால் முகத்தைத் திருப்பியவாறு வீட்டுக்குள் போய்விடுவாள். இவன் வீட்டுக்குள் வருமுன்பே வட்டிலில் சோறும், வெஞ்சனமும் ஆறிக் கிடக்கும். முட்டைப் பொரியல் என்றால் அதுக்கும் கொஞ்சம் மேலாக எறும்புகள் வரிசை யிட்டவாறு ருசி பார்க்க, சரவணனுக்கு கோபம் முட்டிக் கொண்டு வரும். ஆனால், என்ன செய்வது என்றுதான் தெரியவில்லை. கல்யாணமான நாளையிலிருந்து மனசோடு மனசாகப் பின்னிக் கிடந்தவர்கள்… நாள் முழுக்க ஒட்டலும், உரசலுமாய் சந்தோஷத்தைக் கொண்டாடியவர்களுக்குள் இப்படி ஒரு சடவு வந்ததை நினைத்து, நினைத்து மருகினான். இந்த ஒரு தடவை எப்படியாவது பேசிவிட்டால், இனி செம்மத்துக்கும் கவிதாகூட சண்டையே போடக் கூடாது என்று நினைத்தவன், வெறுமைப் பூத்து அலைந்தான்.

ஒரு வெள்ளிக்கிழமை. காட்டிலிருந்து வெள்ள னத்திலேயே வீட்டுக்கு வந்தவன், கவிதாவைப் பார்த்துத் திடுக்கிட்டான். வழக்கமாக இவனைக் கண்டதும் அவள் விருட்டென்று வீட்டுக்குள் போய்விடுவதால் இவன், அவளைச் சரியாகப் பார்த்ததில்லை. ஆனால், இன்று இவன் வந்ததை கவனிக்காமல் எதையோ பொடைத்துக் கொண்டிருந்த அவளின் முகம் பார்த்தவனுக்கு வயிறு எரிந்தது. தினமும் வேலை முடித்து வந்தவுடனே கடைத்தெருவுக்குப் போய் சூடான வடை வாங்குவதோடு, பண்டாரத்திடம் மொட்டான பிச்சிப்பூவும் வாங்கி வருவான். இவன் வரவுக்காகவே மஞ்சளின் வாசனையோடு வாசலில் காத்திருப்பாள் கவிதா. இவன் மொட்டவிழும் பூவை அவள் தலையில் வைக்க, அவள் செல்ல சிணுக்கத்தோடு அவனை உரச… வானத்தில் இருக்கும் நிலவு இவர்கள் நெஞ்சில் பூத்துக் கிடக்கும்.

இன்று கலைந்த தலையும், வெறித்த மூஞ்சியுமாக இருந்த வளைப் பார்த்த பிறகு, அவனால் சும்மா இருக்க முடியவில்லை! விறுவிறுவென்று கடைப்பக்கம் போனவன் வழக்கம்போல் பூவும், சூடான பஜ்ஜியும் வாங்கி வந்தான். ‘கவிதாவின் கையில் கொடுக்கலாமா?’ என்று நினைத்து, இரண்டு எட்டு எடுத்து வைத்தவன் மனதில் வீம்பு தலைகாட்ட எதிர்வீட்டு முத்து முடியை கூப்பிட்டான். அவளிடம் பூவையும், பஜ்ஜியையும் கொடுத்து கவிதாவிடம் கொடுக்கச் சொல்லிவிட்டு வெளியே போய்விட்டான்.

கொஞ்சநேரம் கழித்து வீட்டை நோக்கி வந்தவன் நெஞ்சில் ஆசை முட்டியது. ‘இந்நேரம் கவிதா கொண்டையில் பூ மணத்துக்கிட்டு இருக்கும். நம்ம மேல இருந்த கோவம்கூடப் போயிருக்கும். இம்புட்டு நாப் பிரிவக்கூட தாங்காம ஒருவேள ஓடியாந்து அணச்சாலும், அணச்சிக்கிடுவா’ என்று ஏத்தாப்போடு வந்தவனுக்கு ‘சுரீ…ர்’ என்று கோபம்தான் வந்தது. கவிதாவின் தலை எப்போதும் போல் கலைந்து கிடந்தது. ஆனால், முத்துமுடி பூ வாசனையும், எண்ணெய் வாசனையுமாய் இவனைப் பார்த்தவள், ஒரு கோணல் சிரிப்போடு ஒரு கொணட்டு, கொணட்டி விட்டு நடந்தாள்.

கோபத்தில் முகம் சிவக்க தனக்குள்ளேயே முணுமுணுத்தான். ‘ஓகோ.. நானு வாங்கி கொடுத்த பூவக் கூட வச்சிக்க உனக்கு மனசில்லையாக்கும். அம்புட்டுக்கு உனக்கு கெம்பிதம் இருந்தா, நானு ஆம்பள சிங்கம். எனக்கு எம்புட்டு கெம்பிதம் இருக்கும்!’ என்று நினைத்தவன், வானவெளியைப் பார்த்தவாறு வாசலிலேயே படுத்துக்கொண்டான். வட்டிலில் வைத்த சோறு ஆறிக் கிடந்தது.

மறுநாள் சரவணனுக்கு கோபம் கொஞ்சம் ஆறியிருந்தது. ‘ஒருவேளை முத்துமுடிக்கு இவளே பூவை வைத்துவிட்டாலும் விட்டிருக்கலாம். அவளும் வயசுப்புள்ளதானே’ என்று நினைத்தவன், மறுநாளும் பூவும், வடையும் வாங்கிக் கொண்டு வந்து முத்துமுடியிடம் கொடுத்துவிட்டு, தெரு முனை வரை போய்விட்டு வந்தவனுக்கு குபீரென்றது. பூ வாசத்தோடு வடையைத் தின்று கொண்டே இவனை கடந்து போனாள் முத்துமுடி. போகும்போதே பொறை ஏறியதுபோல், செருமல் ஒன்றை செல்லமாய் செருமிக் கொண்டுபோக, சரவணனுக்கு அவளை இழுத்து நாலு அறை அறைய வேண்டும் போல் இருந்தது.

அன்று இரவு அவனுக்கு வீட்டுக்குப் போகவே மனசில்லை. இப்படியே கால் போன போக்கில் எங்கேயாவது போய்விடுவோமா என்றுகூட நினைத்தவன், சலிப்போடு வீட்டை நோக்கி நடந்தான். வீட்டுக்குள் நுழையப் போனவன் கவிதா விம்மி, விம்மி அழுவதைக் கேட்டு சற்று ஒதுங்கலாக நின்றான்.

பக்கத்து வீட்டுப் பாட்டிதான் கவிதாவுக்கு ஆறுதல் சொல்லிக் கொண்டிருந்தாள். ‘‘எதுக்கு கவிதா இப்பிடி அழுவுதே? மூணுநாளா பச்சத் தண்ணி பல்லுல ஊத்தாம வெறும் வவுறா கெடக்கிறவ, இப்பிடி அழுதா வெளங்குமா? சரவணனும் அப்புராணி; நல்ல பயதேன். ரெண்டு பேரும் பொண்ணும், கண்ணுமாத்தேன் இருந்தீக. ஏதோ கால கிரகம்… இதுக்குப் போயி அழுவாகளா?’’ என்று தேற்றிய பாட்டியிடம், ‘‘இல்ல பாட்டி. எம்புருசன் எப்பவும் இப்படி இருக்கவே மாட்டாரு. அவரு பேசாட்டாலும் போறாரு. நாளு தவறுனாலும் பூவும், வடயும் வாங்கித் தர தவற மாட்டாரு. அப்படி இருக்கிறவருக்கு இப்ப என்னப் பத்தின நினப்பே இல்ல. நாங்க ஒத்தும், பத்துமா இருக்கிறத பாத்து, பாத்து அந்த முத்துமுடி வவுறு எரிவா. ஆனா, இப்ப அவளுக்கு எப்படியோ எங்க சடவு தெரிஞ்சிருச்சி. முன்னால ஒரு முழப் பூவுக்கு வக்கத்து கெடந்தவ, இப்ப பூவும் பொட்டுமா சொவடிச்சிக்கிட்டு எனக்கு முன்னால வந்து பவுசா பேசிட்டுப் போறா. எனக்கு அவர விட்டா ஆரு பாட்டி இருக்கா? எப்பவும் ஒத்தையில இந்த வீட்டுல வெக்கரிச்சிப் போயி உக்காந்து கெடக்கத நினச்சா, எனக்கு கிறுக்குப் புடிச்சிரும். விடியந்தண்டியும் இருந்துட்டு விடிஞ்சப் பெறவு எந்தாயோட புள்ளயா சேந்துருவோமின்னு நெனக்கேன் பாட்டி’’ என்று மீண்டும் அவள் விம்ம, தீப்பந்தம் முகத்தில் பட்டதுபோல் துடித்துப் போனான் சரவணன்.

அப்போ நம்ம வாங்கிக் கொடுத்த பூவ, பண்டத்தயெல்லாம் முத்துமுடி கவிதாவிடம் கொடுக்கவே இல்லை என்பதை நினைத்தபோது, அவனுக்கு கவிதாவை நினைத்து அழுகையே வந்துவிட்டது. திரும்பவும் கடைக்கு ஓடிப்போய் மலர்ந்த பூவை வாங்கிக்கொண்டு வீட்டுக்கு வந்தான். ‘சாச்சிக்காரன் கால்ல விழுவதவிட சண்டக்காரன் கால்ல விழு’னு தெரியாமயா சொன்னாக என்று நினைத்தவன், வீட்டின் மூலை யில் முடங்கிக் கிடந்த கவிதாவை அள்ளி அணைத்துக் கொண்டான்.

கவிதா, ‘‘மச்சான்…’’ என்று கண்ணீரோடு விம்ம, ‘‘நீ ஒண்ணும் சொல்ல வேண்டாம். நமக்கு எடயில அடுத்தவள நுழைய விட்டது தப்புனு தெரிஞ்சி போச்சி. இனி ஒரு காத்துக்கூட நம்ம ஊடால வரக்கூடாது’’ என்று புருசன் சொன்னதைக் கேட்டதும், கவிதாவின் மனம் குதியாளம் போட்டது. புருசனின் மனதை மாற்ற உதவியாக இருந்த முத்துமுடியிடம் நாளையே இந்த விஷயத்தை சொல்ல வேண்டுமென்று நினைத்துக் கொண்டாள்.

– ஜூன் 2006

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *