உறு மீன் வரும்வரை…

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: காதல்
கதைப்பதிவு: October 6, 2012
பார்வையிட்டோர்: 11,551 
 

விடியற்காலை நான்கு மணியிருக்கும் !

இரண்டு நிமிடங்கள் மட்டுமே நின்று இளைப்பாறிய சதர்ன் சூப்பர் பாஸ்ட் எக்ஸ்பிரஸ் நெடுங்காடு ரயில் நிலையத்தை விட்டு தெற்கு நோக்கி தன் பயணத்தை துவக்கியது.

அந்த அதிகாலை நேரத்தில் அது எழுப்பிய பார்…..ம் என்ற பிசிரடிக்கும் பேரொலி அந்த மலைப்பிராந்தியம் முழுதும் எதிரொலித்து பெருவாரியான உயிரினங்களின் உறக்கத்தை தொலைத்தது.

கண்ணுக்கெட்டிய தூரம் வரை நீண்டு கிடந்த பெட்டிகளில் ஒரு குளிரூட்டப்பட்ட பெட்டியில் இருந்து குறைந்தபட்ச சுமைகளுடன் குதித்து இறங்கினான் கௌதம்.. வண்டியிலிருந்து அவனைத்தவிற வேறு எவரும் இறங்கியதாக தெரியவில்லை.

வண்டியின் கடைசி பெட்டி நடைமேடையின் எல்லையைத்தாண்டுவதற்கு முன்பே கட்டுப்பாட்டு அறையின் கதவை இழுத்து சாத்திய ஸ்டேஷன்மாஸ்டர் சுப்ரமணி அய்யர் தன் குடியிருப்பை நோக்கி நடையை கட்டினார்..இனி அவர் பொழுது சாய்ந்த பின்பே வரவேண்டியிருக்கும்.அப்போதுதான் தெற்கிலிருந்து வடக்கே போகும் எக்ஸ்பிரஸ் நெடுங்காட்டை கடக்கநேரிடும்.இதற்கிடையில் வண்டிகள் வேறு எதுவும் வருவதற்கான வாய்பபில்லை.

இப்போது அந்த நீண்ட நடைமேடை ஆள் நடமாட்டமின்றி வெரிச்சோடிக்கிடக்கிறது

அவனை அறியாமலேயே அந்த சின்னஞ்சிறிய ரயில் நிலையத்தை ஒருமுறை சுற்றும் முற்றும் வியப்போடு பார்த்தான்.அந்த ரயில் நிலையத்தை சுற்றிலும் விரிந்து கிடந்த இயல்பான பிரதேசங்கள் அவனுக்கு ரம்மியமாக காட்சி தந்தது. அடர்ந்த பசுமையான மரங்களும் வெகுதூரத்துக்கு அப்பால் உயர்ந்த தடுப்புச்சுவரைப் போல தொடர்ச்சியாக காணப்பட்ட மலைப்பகுதிகளும் கௌதமுக்கு பிரமிப்பை ஏற்படுத்தின.தெற்கு வடக்காக படர்ந்து கிடந்த அந்த மலைகளுக்கு நடுவே இரண்டு உயரமான சிகரங்களும் அதன்அடியிலிருந்து நழுவிவரும் ஒரு தார்ச்சாலையும் அந்த பிரதேசத்தின் அடையாளங்களாக தெரிந்தன.

வாழ்வில் இன்னும் பார்த்து ரசிக்க வேண்டிய பல்வேறு பகுதிகள் உலகெங்கிலுமல்ல தன்னைச்சுற்றியே சூழ்ந்திருப்பதை அவன் இப்போது உணர்ந்தான்.. நடைமேடையின் வாயிலை ஒட்டி காணப்பட்ட ஒரு இருக்கையில் தன்னந்தனியாக ஒரு குட்டி நாயுடன் பெண்ணொருத்தியை கௌதமன் பார்த்தான். திறந்து கிடந்த வாயிலை கௌதமன் அடைந்தபோது அந்த பெண் அவசரமாக எழுந்து குறுக்குப்பாதையில் மறைந்தாள். அந்த குறைந்தபட்ச நொடியிலேயே கௌதமனின் கண்கள் அந்த பெண்ணின் கோட்டு உருவத்தை பதிவு செய்திருந்தது.

சராசரி உயரம் கொண்ட அந்த பெண் சுமாரான நிறம்தான். வஞ்சனையற்ற வாளிப்பான உடலமைப்பு.சுருள் சுருளான அளவான கூந்தல் துருதுருவென்று ஆழ்ந்து ஊடுருவும் பார்வை எவராலும் அத்தனை எளிதில் ஒதுக்கக்கூடியதல்ல..

கரும் பச்சை வண்ண சுடிதாரும் வெள்ளை வண்ண காலுரையும் அவள் அணிந்திருந்தாள் மெல்லிய வெண்மையான துப்பட்டா ஒன்று அவள் தோள்களைத்தழுவி காற்றில் மிதந்திருந்தது.

அவசரமாக விலகி போனதால் அந்த எழில் உருவம் கௌதமனின் நினைவில் முழுமை பெறவில்லை. திரும்பத்திரும்ப நினைவுகளில் தேடி அந்த எழில் உருவத்தை பொருத்திப்பார்த்தான்.பயனற்றுப்போகவே அந்த இரயில் நிலையத்தை விட்டு வெளியேறினான்.

‘ குட்மார்னிங் .சார் ! . சார் சென்னையிலிருந்து வர்ரீங்களா.. இனிட் சிஸ்டம்தானே…’

கரகரப்பான குரலைக்கேட்டு நிமிர்ந்து பார்த்தான் கௌதமன்.

‘ ம்…’

‘ நான் டிரைவர் மாதவன் நாயர்…பவர் அவுசிலிருந்து எஸ்டிஓ ஒங்கள பிக்கப் பண்ணிகிட்டு வரச்சொன்னார். ’

தான் தேடிவந்த நபரை கண்டுகொண்ட மகிழ்வில் பேசினார் அந்த நடுத்தரவயதுக்காரர்.

ரயில்நிலையத்தின் வெளியே ஒரு மர நிழலில் டாட்டா சுமோ ஒன்று அவனுக்காக காத்திருந்தது.கௌதமன் ஏறி அமர்ந்ததும் விருட்டென்று பாய்ந்தது.

சென்னையில் இனிட் சிஸ்டம் என்ற நவீன மின்னணுவியல் சாதனங்கள் பொருத்தும் நிருவனம் ஒன்றில் கடந்த பத்தாண்டுகளாக சீனியர் எஞ்சினியராக கைநிறைய ஊதியம் வாங்குபவன்தான் கௌதம்.

மலைகள் சூழ்ந்த நெடுங்காட்டில் புதிதாக இயங்கத்தொடங்கிய தனியார் மின்நிலையத்தில் தானே இயங்கும் தகவல் தொடர்பு சாதனங்களை நிர்மாணிக்கும் ஒரு ஒப்பந்தம் இனிட் நிருவனத்துக்கு கிடைத்திருந்தது.சென்ற ஐந்தாறு மாதங்களில் பெரும்பாலான பணிகளை இனிட் சிஸ்டம் முடித்திருந்தது. அந்த சாதனங்களை இயக்கத்துக்கு கொண்டுவரவே இறுதியாக கௌதமன் வந்திருந்தான்.

கௌதமனுக்கு கிட்டத்தட்ட முப்பது வயதுக்கு மேலிருக்கும் இன்றைய சமூகம் ஒரு திருமணத்துக்கு எதிர்பார்க்கப்படுகிற அத்தனை தகுதிகளும் அவனிடம் இருந்திருந்தும் இதுவரை அவனுக்கு ஏனோ திருமணம் கைகூடவில்லை. அவனுடைய அம்மா அவனுக்காக நடக்காத கோயிலில்லை பார்க்காத சோதிடன் இல்லை. செய்யாத பரிகாரமில்லை. இருந்தும் பலன் நெருங்கியதாகத் தெரியவில்லை.

மாதவனின் சுமோ ஆளற்ற ரயில்வே கேட்டைக் கடந்து இரண்டு கிலோமீட்டரில் தனியாக காணப்பட்ட கட்டிடம் ஒன்றின் வாயிலில் நின்றது.

‘ இது பவர்அவுசுக்கு சொந்தமான ரெஸ்ட் அவுஸ். நீங்க இதில தங்கிகலாம், ஒங்க ஸ்டாப் எல்லாம் இங்கதான் தங்கியிருந்தாங்க. புட் எல்லாம் பவர் அவுஸ் காண்டீன்ல கெடைக்கும். மற்றபடி சாயா பிஸ்கட் தேவைப்பட்டா அதோ தெரியுதே அந்த பொட்டிக்கடைல வாங்கிகலாம்.’

பேசிக்கொண்டே கட்டிடத்தின் கதவுகளை திறந்து கௌதமின் சுமைகளை ஒரு அறையில் வைத்தார் மாதவன். இரண்டு படுக்கைகள் கொண்ட அந்த அறை சுத்தமாகத்தான் இருந்தது.

‘ லீஷரா குளிச்சிட்டு போன் பண்ணுங்க,,, சார நான் பிக்கப் பண்ணிகிறேன். ‘

அறைசாவியையும் கட்டிடத்தின் சாவியையும் கௌதமனிடம் கொடுத்துவிட்டு கிளம்பினார் மாதவன்

—————————

முதல் இரண்டு நாளில் கௌதமனுக்கு வேலை சரியாக இருந்தது. முதல் நாள் அந்த சின்னஞ்சிறிய மின் நிலையத்தை சுற்றிப் பார்பதற்கும் இரண்டாம் நாள் இனிட் ஸிஸ்டத்தின் ஸ்கேடா சாதனங்கள் பொறுத்தப்பட்டிருக்கும் இடங்களை தேடித்தேடி காணவும் வேண்டியிருந்தது. இனி அந்த சாதனங்களை தானே இயங்கச்செய்வதற்கான வேலைகளை நாளைதான் ஆரம்பிக்கவேண்டும். இப்போது அவனுக்கு ஒரு கப் தேனீர் குடிக்கவேண்டும்போல் தோன்றவே மாதவன் நாயர் அறிமுகப்படுத்திய தேனீர்க்கடையை நோக்கி நடந்தான். தாழ்ந்த கூரை என்பதால் தலையை தாழ்த்தி கடைக்குள் நுழைந்தான் கௌதமன்…

‘ வாங்க தம்பி ..உக்காருங்க..’

கௌதமனைப் பார்த்ததும் கையிலிருந்த புத்தகத்தை மூடி கட்டிலின் ஓரத்தில் வைத்துவிட்டு அன்பும் மரியாதையும் கலந்து வரவேற்றார் கிருஷ்ணன். கடையில் வாடிக்கையாளர் எவரும் இல்லை

‘ நேத்தியே நாயர் ஒங்கள பத்தி சொன்னாரு. ‘

கௌதமனும் பதிலுக்கு புன்னகையை வெளிப்படுத்தி உள்ளே இருந்த மர இருக்கையொன்றில் அமர்ந்தான்

‘ டீக் காபி எப்ப வேணாலும் குடிச்சிகலாம். மத்தபடி டிபன் ஏதாவது தேவைப்பட்டா முன்னாடியே சொல்லிடணும் ‘.

கடையின் வழக்கத்தை கௌதமனுக்கு விளக்கினார் கிருஷ்ணன்

‘ பவர் அவுஸுல ரெண்டு மாசம் வேல இருக்கும். பெரும்பாலும் டிபன் லஞ்ச் எல்லாம் அவுங்களே அரேஞ் பண்ணிடுவாங்க. அன் டயத்தில .டீ காப்பிக்குத்தான் வர வேண்டியிருக்கும். ‘

‘ நீங்க மட்டும் வந்துருக்கீங்களே.ஒங்களுக்கு ஒத்தாசைக்கு வேற யாரும் ஸ்டாப் வரலீங்களா..’

‘ மேஜர் எரக்ஷ்ன் வொர்க்ஸ் எல்லாம் ரெண்டு மாசத்துக்கு முன்னாடியே முடிச்சிட்டோம்.இனி கமிஷனிங்தான்.ஸ்டாப் அவ்ளவா தேவைப்படாது. .இன்னும் ரெண்டு நாள்ள ரெண்டு பேர் வரணும்..’

பதிலளித்துக்கொண்டே சுற்றும் முற்றும் பார்வையை செலுத்தினான் கௌதமன். மின்நிலையத்திலிருந்து வரும் சாலையின் ஒரு புறத்தில் தனியாக நிற்கும் இரண்டு அறைகள் கொண்ட ஒட்டுக்கட்டிடம் அது. வாயிற் பகுதியில் சிமெண்ட கூரைகளைக் கொண்டு தாழ்வாக இறக்கப்பட்ட பகுதிதான் தேனீர்கடையாக இருந்தது. அகன்று உயர்ந்து வளர்ந்திருந்த ஒரு பெரிய வாதாமரம் அந்த கடை இளைப்பாறுதற்கேற்ற இடமாக அடையாளம் காட்டிற்று.

‘ என்ன பாக்குறீங்க…இந்த எடத்துக்கு வந்து எட்டு வருஷம் ஆவுது. ஊரு இங்கேருந்து மூணு கிலோமீட்டர்ல இருக்குது.பக்கத்ல போட்ற சந்தைக்கும் பவர் அவுசுக்கு போறவுங்கதான் நம்ம கஸ்டமர். நானும் எம்மகளுந்தான் இங்க.. சரி சூடா சாய் ஒண்ணு குடிங்க.

யம்மா அபி ! தம்பிக்கு சாய் ஒண்ணு கலந்து குடு ‘ உள்ளே பார்த்து மகளிடம் பேசினார் கிருஷ்ணன் கௌதமின் கண்கள் அவர் குறிப்பிட்ட அந்த அபியைக்காண கடையெங்கும் ஊடுருவியது. உள்ளிருந்து வெளியே வந்த அபி துணிவலையில் புதுத்தூளை கொட்டி பாய்லரில் இருந்து கொதிக்கும் நீரை கலந்து சாயாவுக்கு டிகாஷன் இறக்கினாள்.ஆம் ! அவளேதான். முதல் நாள் ரயில் நிலையத்திலிருந்து அவன் கண்களுக்கு நழுவிய சித்திரம்தான். கௌதமின் கண்கள் வியப்பால் விரிந்தது. கண்களை ஈர்க்கும் மலர்கள் எல்லாம் இங்கிங்குதான் மலரவேண்டுமென்பது சாத்யமா என்ன. அவளுக்கு இருபத்தியய்ந்து வயது இருக்கக்கூடும். அன்று பார்த்த அதே எளிமையான ஆடைகள்..அந்த பெண் கிருஷ்ணனின் மகளா..

‘ இவ என் ஒரே பொண்ணு..அபிராமி.. ப்ளஸ் டூ வரைலே படிச்சிருக்கா..’ மகளை அறிமுகப்படுத்தினார் கிருஷ்ணன். ‘அப்பா…நாளைக்கு சந்தைக்கு போகவேண்டியிருக்கும். சாமான்ல்லாம் எழுதி வெச்சிருக்கேன். ‘

சூடாக கலந்த தேனீரை கௌதமனுக்கும் கிருஷ்ணனுக்கும் கொடுத்துக்கொண்டே கடைக்குத் தேவையான பொருள்களின் கையிறுப்பு குறைந்துபோனதை தந்தைக்கு நினைவூட்டினாள் அபி.அதற்குப்பிறகு கிருஷ்ணன் பல்வேறு தகவல்களை கௌதமனுடன் பேசிக்கொண்டிருந்தார் ஆனால் அவை எவையும் கௌதமனின் நினைவுகளில் நிற்கவில்லை. அவன் நினைவுகளில் அபி மட்டுமே சுற்றிச்சுற்றி வந்தாள்.அன்றிரவு அவனுக்கு வழக்கமான உறக்கம் அறவே காணமற் போயிற்று.

.

கைபேசி மணி ஒலித்தது.

சென்னையிலிருந்து எம்டி தான் பேசினார்

‘ ஹலோ ! பாஸ்கரன் பேசுரன். கௌதம் ! ராமகுண்டத்ல நாளைக்குத்தான் ஒர்க் கம்ளீட் ஆகுது.. நீங்க கேட்ட ஆசிலோ ஸ்கோப்பும் ப்ரீக்குவன்சி கவுண்டரும் னைட் வந்துரும்.ஒங்களுக்கு மண்டே மார்னிங் கெடைக்கிற மாதிரி அனுப்ச்டுறேன்..சிவாவதான் அனுப்பணும்.அவனுக்கு ட்யூஸ்ட்டே ஏதோ பங்ஷனாம். இன்ஸ்ட்ருமெண்ட வாங்கிட்டு அவன ரிலீவ் பண்ணிடுங்க..’ வழக்கம்போலவே படபடவென்று முடிவுகளை சொன்னார் எம்டி பாஸ்கரன்.

‘ சரி சார்.. ‘கைபேசியை துண்டித்தான் கௌதம். ஏரத்தாழ முப்பது பேருக்குமேல் பணியில் இருக்கும் அந்த கம்பெனியில் எப்போதுமே ஆட்களுக்கு பஞ்சம்தான்.குழு குழுவாக பிரிந்து பல்வேறு மாநிலங்களுக்கு சென்றிருப்பார்கள். ஒருவர் முகத்தை ஒருவர் பார்க்க வாய்ப்பு ஏற்பட்டதேயில்லை.

நெடுங்காடு வந்து ஒருமாதம் ஓடிப்போயிற்று. வேலைகளை துரிதப்படுத்த வேண்டும். இங்க இருக்கிற எம்மார்டி ஸ்டாப்ஸ் ஒத்துழைப்பதாய் தெரியவில்லை. ஆழ்ந்த சிந்தனையுடன் கிருஷ்ணன் கடைக்குள் நுழைந்தான் கௌதமன்.

‘ வாங்க தம்பி..’கௌதமனைப் பார்த்ததும் வழக்கம்போல அன்புடன் வரவேற்றார் கிருஷ்ணன்.

கடையில் ஓரிரண்டு கிராமத்தைச் சார்ந்தவர்கள் தேனீர் குடித்துக்கொண்டிருந்தனர். இந்த ஒரு மாதத்தில் கௌதமனின் நடத்தையும் பண்பும் பெரியவர் கிருஷ்ணனின் மனதை பெரிதும் ஈர்த்திருந்தது. கௌதமனைப் போன்ற ஒரு பண்பாளனை உரிமை கொள்ள வாய்த்திருக்க வேண்டுமென்று கிருஷ்ணன் நினைத்தார். பதிலுக்கு புன்னகையை வெளிப்படுத்திய கௌதம் அவருக்கருகில் அமர்ந்து கொண்டான்.

‘ என்ன தம்பி..இன்னிக்கு ரொம்ப சீக்ரமாவே வந்திட்டீங்க….வேல ஒண்ணும் இல்லிங்களா…’ பேச்சைத் துவக்கினார் கிருஷ்ணன்.

‘ பவர் அவுஸ் மெயின்டன்ன்ஸ் ஸ்டாபுக்கெல்லாம் இன்னிக்கு ஆப் டேதான் ஒர்க். லஞ்சுக்கப்ரம் வரமாட்டாங்க.சில எடங்கள்ள அவுங்க இல்லாம நாங்க ஒர்க் பண்ண முடியாது…அதான் கெளம்பிட்டேன். அதுவும் இல்லாம சென்னைலேருந்து கொஞ்சம் மெட்டீரியல்ஸ் வருது. அத ரிசீவ் பண்ணனும்.’ பதிலளித்துக்கொண்டே கட்டிலில் காணப்பட்ட புத்தகத்தை எடுத்து உத்தேசமாக ஒரு பக்கத்தை பிரித்தான் கௌதமன்.

இலக்கியத்தில் ஒரு தேடல். ‘ ஓடுமீன் ஓட உறு மீன் வருமளவும்…..’

சின்ன வயசில் படித்த ஞாபகம். இந்த வயதிலும் இதுபோன்ற புத்தகங்களில் கிருஷ்ணனுக்குள்ள ஈடுபாட்டை எண்ணி வியந்தான். அதேசமயம் அவன் கண்கள் அபியைத்தேடி கடையெங்கும் அலைந்த்து.. கௌதமனின் இந்த ஒருமாத நெடுங்காட்டு வாசத்தில் இப்போதெல்லாம் அபியின் தரிசனம் தினம்தினம் அவனுக்கு வேண்டியிருந்தது. கிருஷணனுக்கும் கௌதமோடு உரையாடுவது பிடித்தமாயிருந்தது. அபியின் வசீகரமான தோற்றமும் சாதுர்யமான நடத்தையும் அவள் மேல் தீராத காதலை அவனுக்கு ஏற்படுத்தியது.அதே சமயம். அவனைப்பற்றிஅவள் என்ன அபிப்ராயம் கொண்டிருக்கிறாள் என்பதை அவனால் உணரமுடியவில்லை. இரண்டொரு நாட்களாக கௌதமன் ஆழ்ந்த யோசனைக்குப்பிறகு ஒரு முடிவுக்கு வந்தான்.இதை கிருஷ்ணனிடம் வெளிப்படுத்த நேரமும் காலமும் அவனுக்குத்தேவைப்பட்டது. தன்னுடைய விருப்பங்களுக்கும் அம்மாவின் மனக்கவலைகளுக்கும் ஒரு முடிவு கட்டவேண்டும்.

‘ அப்பா நானும் ஜானியும் ஸ்டேஷன்வரை போயிட்டு வர்ரம்.’ கௌதமனுக்கும் கிருஷ்ணனுக்கும் சூடாக கலந்த தேனீரை கொடுத்துவிட்டு கடையின் பின்புறமாக வெளியேறினாள். ஜானியும் அவளைத்தொடர்ந்து குதித்து குதித்து ஓடிற்று..‘ பத்ரம்மா.. சீக்ரமா வந்துடு. ‘

வழக்கம்போல மகளுக்கு எச்சரிக்கை செய்தார் கிருஷ்ணன் ‘‘சிலநாளா இவளுக்கு இப்பிடி ஒரு பழக்கம். ஸ்டேஷன்ல வர்ர ட்ரெயின வேடிக்கை பாக்றது..தாயில்லா பொண்ணு தம்பி..’‘

‘என்ன சொல்ரீங்க ..அபி தாயில்லா பொண்ணா.

’‘ ஆமா தம்பி ! அவள் பெத்வள பாத்ததே இல்ல. பத்து வருஷத்துக்கு முன்னால பக்கத்ல இருக்கிற டீ எஸ்டேட்ல ஸ்கூல் டீச்சரா இருந்தேன். எஸ்ட்டேட்ல ஸ்கூலு..ஆஸ்பெட்டல் எல்லாமே இருந்துது. ஆனா பேருக்குதான். எந்த பிரயோசனமும் கெடையாது. பக்கத்து நகரத்துக்கு அவசரத்துக்கு போக ஒரு வண்டி வசதி கிடையாது. பொறக்கும்போதே பெத்தவள பறிகொடுத்துட்டுத்தான் அபி பொறந்தா.அன்னிக்கு கூட வேல செஞ்ச ஒரு டீச்சரு பச்ச கொழந்தைய காப்பாத்தி கொடுத்தாங்க..அதுக்கப்ரம் எவ்ளவோ நடந்துட்டு தம்பி. பாத்துககிட்டு இருந்த வேல போச்சு. தப்பு தண்டா எதுவும் பண்ணிடல்ல. ‘

கிருஷ்ணனிடமிருந்து பெருமூச்சு வெளிப்பட்டது.

‘ அங்க இருக்ற தொழிலாளிங்களுக்கு எழுத படிக்க சொல்லி கொடுக்கணுமிண்ணு நெனச்சேன். ராப்பள்ளி துவங்கி நடத்த ஆரம்பிச்சேன். அவங்களுக்கு ஏற்பட்ற கல்வியறிவு நிர்வாகத்துக்கு பாதகமா இருக்கும்ண்ணு நெனச்சி ஏதேதோ காரணங்களை கண்டுபுடிச்சி என்ன நிர்வாகம் டெர்மினேட் பண்ணிடுச்சி.அன்னிக்கு பச்சகொளந்தைய வளக்க நான் படாத பாடு பட்டேன். இன்னிக்கு அந்த கொளந்ததான் எனக்கு கஞ்சி ஊத்துது.இந்த நெடுங்காட்டுக்கு பொழப்ப தேடி வந்து எட்டு வருஷம் ஆவுது. எனக்கோ வயசு அம்பத்தஞ்சாயிடுச்சு. ப்ரஷர் சுகர்ண்ணு அத்தனை சீக்கும் இந்த ஒடம்புல இருக்கு. கையும் காலும் நல்லா இருக்கும் போதே இவள ஒருத்தன்கிட்ட புடுச்சி கொடுத்துட்டா நான் மிச்சகாலத்த எப்டியாவது ஓட்டிடுவேன்.’ கிருஷ்ணனின் கண்களில் அவரை அறியாமல் நீர் கசிந்தது.தோளில் கிடந்த துண்டை எடுத்து கண்களை துடைத்துக்கொண்டார்.

‘ என் வொய்போட தம்பி ஒருத்தன் இந்த பவர் அவுஸுல இருக்கான்,அவன கட்ட இவளுக்கு இஷ்டமில்ல ‘

கௌதமனுக்கும் தன் மனதில் இருக்கும் ஆசைகளை வெளிப்படுத்த வேண்டு மென்று தோன்றியது.

‘ அபியை எனக்குகொடுப்பீங்களா…சார். ‘

நெஞ்சத்தில் எழுந்த சொற்களை என்ன காரணத்தாலோ அவன் நாவால் உச்சரிக்க முடியவில்லை.

‘ கவலப்படாதீங்க சார் .. எல்லாம் நல்லபடியா நடக்கும்..’

கௌதமனால் சிறமப்பட்டு இப்படித்தான் சொல்ல முடிந்தது.

அதே சமயம் கௌதமனின் கைபேசி கதறியது..‘ ஹலோ.. சிவாவா. வந்துட்டியா… வெயிட் பண்ணு இதோ வர்ரேன்.’ என்றவாறே எழுந்தான் கௌதமன்..

‘ சாரி சார். அப்ரம் வர்ரன்..எங்க ஸ்டாப் ஒருத்தர் சென்னையிலேயிருந்து வந்து வெயிட் பண்றார்..’

கௌதமன் அவசரம் அவசரமாக எழுந்து விடுதிக்கு விரைந்தான்.சிவா விடுதியின் வாயிலில் லக்கேஜுடன் காத்திருந்தான்.

‘ ஹாய்…எப்படா வந்த..

‘‘ ஜஸ்ட்..’

விடுதியின் கதவைத் திறந்து பரஸ்பரம் பேசிக்கொண்டே அறைக்குள் இருவரும் நுழைந்தனர்.

‘ எம்டி ஒடனே அனுப்பச்சொன்னாரே..அப்படி என்னா ஒரு அவசரம் ஒனக்கு..’

‘ நேற்று காலேலதான் கொத்தகொடத்தில இருந்து வந்தேன். பதினஞ்சு நாள் எரக்ஷன் ஒர்க். வீட்ல ரொம்ப நாளா பாத்துகிட்டிருந்த ஒரு எடம் முடிவுக்கு வந்திருக்கு…நாளனக்கு எனக்கு நிச்சியதார்த்தம்டா.போறவழில குடுத்துட்டு அப்டியே ஊருக்கு போடான்னார். ‘

‘ அப்பிடி போடு. கங்ராஜிலேஷன்டா. அப்ப இப்டியே நேட்டிவ் போறியா.’ மகிழ்ச்சியை வெளிப்படுத்தினான் கௌதம்.

‘ நாளை காலேல இதே எக்ஸ்பிரஸ்….’சிவா குளிப்பதற்கு குளியலறைக்குள் நுழைந்தான். தனக்கு அந்த நாள் எப்போது வருமோ.. என்ற விரக்த்தியுடன் கட்டிலில் சாய்ந்தான் கௌதமன்.

‘ ஆசிலோ ஸ்கோப்பும் கவுண்டரும் கொண்டாந்துருக்கேன். ரெண்டும் நேத்துதான் சைட்லேந்து வந்துது.வயரிங் லெக்ஸ் கொஞ்சம் கொண்டாந்திருக்கேன்.’ குளித்துவிட்டு உடை மாற்றிக்கொண்டே பேசினான் சிவா.

‘ ஓகே. எம்டி நேட்டிவ்க்கே டிக்கட் வாங்கி கொடுத்திட்டாராமே. அப்டி என்னாட செஞ்சே. ‘‘ பதினஞ்சு நாள்ள ஆந்ராவுல இருபத்தி மூணு ஸ்டேஷன் கம்ளீட்டட். ‘

‘ வெரிகுட் ‘

“ ஆனா இங்க …எரக்ஷனுக்கே மூணு மாசமாச்சி. இஷ்டத்துக்கு செலவு செஞ்சும் எம்மார்ட்டி ஸ்டாப்ஸ் கழுத்தறுத்துட்டானுவ..ரொம்ப கஷ்டப்பட்டன் ‘

சலிப்போடு பேசினான் சிவா.

’அப்டிதாண்டா கழுத்தறுக்கிறானுவ. சொந்த வேலதான் பாக்கிறானுவ…..’

.கௌதமனும் குளியலறைக்குள் நுழைந்தான்.

சிவா இனிட் சிஸ்டத்தில் சேர்ந்து மூன்று வருடங்கள் இருக்கும். சுறுசுறுப்பாக இருப்பான்.பெரும்பாலும் இனிட் சிஸ்டத்தின் சாதனங்களை முன்னதாக சைட்டில் பொறுத்துவது அவன் வேலையாகத்தான் இருக்கும்.நெடுங்காட்டில் கூட அவன்தான் பொறுத்தியிருந்தான். ‘ கௌதம் ! பக்கத்து டவுன் வரை போயிட்டு னைட் வந்துட்ரன். ‘கௌதமிடம் சொல்லிக்கொண்டு பதிலுக்கு காத்திராமல் வெளியேறினான் சிவா. அடுத்த அறை மணியில் கௌதம் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தான்.

அடுத்த நாள் வழக்கத்தைப்போல சதர்ன் சூப்பர் பாஸ்ட் எஸ்க்பிரஸ் கௌதமின் உறக்கத்தை கலைத்தது. கைகளை உயர்த்தி சோம்பலை உதறினான்.

பல் தேய்த்து முகம் கழுவி வெண்மையன துண்டில் அழுந்த முகம் துடைத்தான்.

திடீலென்று வெளியே ஏதோ பரபரப்பு நிலவுவதை உணர்ந்தான். விடுதிக்கு வெளியே வந்து சுற்றும் முற்றும் பார்த்தான். ஒன்றும் புலப்படவில்லை.அதே சமயம் பல்வேறு கூக்குரல்கள் தொடர்ந்து எழுந்தது.

குழப்பம் மேலிடவே மொட்டை மாடியில் ஏறி நெடுந்தொலைவு பார்வையை செலுத்தினான்.

எப்போதும் வெரிச்சோடிக்கிடக்கும் அந்த மின் நிலையச்சாலையில் இரண்டொருவர் இங்கும் அங்கும் ஓடுவது தெரிந்தது.வெகு தூரத்தில் காணப்பட்ட ஆளற்ற அந்த லெவல் க்ராசிங்கில் சதர்ன் சூப்பர்பாஸ்ட் எக்ஸ்பிரஸ் வழக்கத்துக்கு மாறாக நின்று பெருமூச்சு விட்டுக்கொண்டிருந்தது. ஏதோ தப்பு செய்திருக்க வேண்டும்.

ஆண்களும் பெண்களும் அதை சூழ்ந்து நின்றதை காணமுடிந்து. எஞ்சினோடு இணைக்கப்பட்டிருந்த பெட்டிகளிலிருந்து ஆங்காங்கே ஒரு சிலர் கீழே இறங்கி நிற்பதையும் காண முடிந்தது.

அதோ..அதோ ஓடுவது கிருஷ்ணன் சாரப்போல இருக்கே.

அதிர்ச்சியுற்ற கௌதமன் அவசரமாக கீழே இறங்கினான்.லுங்கியோடு இருந்த கௌதமன் அறைக்குள் நுழைந்து மேல் சட்டையை அணிந்துகொண்டு ரயில்வே க்ராசிங்கை நோக்கி விரைந்தான்.வழியிலே குறுக்கிட்டவர்கள் கண்ட காட்சிக்கு கண் மூக்கு வாய் என்று விதம் விதமாக சித்திரம் தீட்டிச் சென்றார்கள் ஒன்றுமட்டும் அவனுக்கு புரிந்த்து.கிருஷ்ணன் சாரின் மகள் அபியின் பெயர் எல்லாராலும் உச்சரிக்கப்பட்டது..அந்த ஆளற்ற ரயில்வே கேட்டை கௌதமன் அடைந்தபோது மிகுந்த அதிற்சிக்குள்ளானான். அவன் கண்ட கோரகாட்சி உடல் நடுங்கச்செய்தது. கருங்கல் ஜல்லிகள் அணைத்தபடி நீண்டு கிடந்த ரயில் பாதையின் தாழ்வான பகுதியில் ஒரு ஜோடி உயிரற்ற உடல்கள் சிதைந்தபடி கிடந்தன.

ஒரு ஆணை கட்டிஅணைத்தபடி ஒரு பெண்..!.

அது அபியேதான்..! அந்த ஆண்… முகம் கோரமாக சிதைந்திருந்தது.

ஆடைகளை கூர்ந்து கவனித்தபோது… ஆ..அது சிவாவா.. அவனேதான்.!

நேற்றுமாலை விடுதியிலிருந்து போன சிவா இரவு முழுதும் வராமல் போனது கௌதமனுக்கு இப்போது நினைவுக்கு வந்தது.

சில நாட்களாக தான் எழுப்பிய கோட்டை வெற்று மணலால் கட்டப்பட்டதையும் அவையனைத்தும் ஒரு நொடியில் இப்போது சரிந்து போனதையும் கௌதமன் உணர்ந்தான்.

‘ வணடி வர்ர நேரத்ல அந்த பையன்கிட்ட இந்தபொண்ணு வாக்குவாதம் பண்ணிகிட்டிருந்தது. ‘ யாரோ யாரிடமோ சொல்லிக்கொண்டிருந்தது கௌதமன் காதுகளில் விழுந்தது.

‘ தெனந்தெனம் இவ ரயிலடிக்கு போனது இப்பதான் தம்பி புரியுது ’ சூழ்ந்திருந்த கூட்டத்தில் எங்கோ நின்றிருந்த கிருஷ்ணன் சார் கௌதமன் கைகளைப்பற்றிக்கொண்டு கோவென கதறி அழுதார்.

கௌதமனுக்கு புதிராக இருந்த பல முடிச்சுகள் இப்போது தளரத்துவங்கின.

துருதுவென்ற அந்த முகத்தில் இயல்பான சந்தோஷத்தை தொலைத்திருந்தது..

நாள் தவராமல் ரயில் நிலையத்தில் காத்திருந்தது..

காதலித்து ஓட முயன்றவனை கட்டியணைத்து மரணத்துக்கு கொண்டு சென்றது..

தமிழ் சினிமா சொல்லிக்கொடுத்த அத்தனை பாடத்தையும் நிஜமாக்கிய அபி…

அவசரப்பட்டுவிட்டாயே அபி..

கௌதமனுக்கு நெஞ்சை அடைத்தது..

இப்போது புரிகிறது..

உறு மீன் வரும்வரை காத்திருந்திருக்கிறாள் அபி என்ற அந்த அபிராமி..

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *