உன் மழை

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: காதல்
கதைப்பதிவு: August 11, 2014
பார்வையிட்டோர்: 20,298 
 

சிறு சிறு தூறலாய் முகத்தில் அறைந்தத் துளிகளை விலக்கி, இந்த சிறு மழைக்கு பயந்து தங்களை மறைக்கும் இடம் தேடி ஓடும் மக்களைப் பார்த்தப்படியே உன்னிடம் கேட்கிறேன்..

“எங்கு அழைத்து செல்கிறாய் இந்த மழையில்..?”

“எதோ மழையில் நனைவது பிடிக்காதவள் போலவே கேட்கிறாய்..?”

“மழையில் நனைவது பிடிக்கும்…தெறிக்கும் இந்த சாரலை ஏந்திக் கொண்டே உன்னுடன் பயணிப்பது அதை விடப் பிடிக்கும்”

“உன்னுடைய ரசனையும் எனக்குப் பிடிக்கும்”

“அது சரி..என் கேள்விக்கு பதில்..?”

“இன்னும் சிறிது நேரத்தில்”

தெரிந்துக் கொள்ளும் ஆர்வமற்று, மழையில் கரையத்துவங்கினேன்.

பெரு மழையை இழுத்து வந்த சிறு மழை, கூடவே இடியையும் மின்னலையும் துணைப் பெண்ணாய்க் கொண்டு வந்து விட்டுவிட்டு பெருமழைக்குள் தன்னை நுழைத்துக் கொண்டது.ஆள் அரவமற்றுக் கிடந்தது கடற்கரை.அந்தப் பெரு வெளியில் நீயும் நானும் மட்டுமாய்.மழை வந்த மகிழ்ச்சி அலைகள் முகத்தில்.கூடிக் கூடி கூத்தாடின.

“ஏன் கடற்கரைக்கு, அதுவும் இந்த மழையில்..?”

“நீதானே கேட்டாய்?”

“என்ன?”

“‘அள்ளி அணைக்கும் ஒரு மழை நாளில், ஆள் அரவமற்றப் பொழுதில்,முகம் ஏந்தி மழையை நான் வாங்கும் தருணம் என் அருகில் எனக்காக மட்டுமே நீ இருக்க வேண்டும்’ என நீதானே அன்று பிதற்றினாய்”

“ம்ம்..?”

“இல்லை இல்லை, காதல் மொழிந்தாய்”

“அதானே.நான் என்ன குழந்தையா? நான் என்ன கேட்டாலும் செய்வாயா?

“ம்ஹூம்.நீ என் குட்டி தேவதை.தேவதையின் விருப்பங்கள் நிறைவேற்றப்பட வேண்டும்”

“அது சரி, என்ன இது?என்னை நனையவிட்டு, மழை ஆடையில் உன்னை பொதித்து,மழைக்கு ஒளிந்துக் கொண்டிருக்கிறாயே.?

“எனக்குதான் மழைப் பிடிக்காதே..?”

“எனக்குப் பிடித்தால் உனக்குப் பிடிக்க வேண்டாமா..ஒத்த மனம் காதலுக்கு அவசியமில்லையா..?

“அவசியமில்லை கண்மணி.விருப்பங்கள் வேறு வேறாக இருக்கலாம்.அதை மதிக்கும் மனம் இருக்க வேண்டும் இருவருக்கும்.அதற்கு உண்மையான காதலும் நேசமும் அவசியம்.அது என்னிடம் தாராளமாய் இருக்கிறது.ஒத்த மனம் கொண்டவர்கள்தான் காதலிக்க வேண்டுமெனில், இந்த பூமியும் வானமும் இத்தனை யுகங்களாய்ப் பார்த்துக் கொண்டிருக்கும் காதல் என்பதே பொய்யாய்ப் போய் இருக்கும்.இந்த ஆகாயம் நிஜம்,இந்த பூமி நிஜம்.இந்த மழை நிஜம்.இந்தக் காதலும் நிஜம்.வேண்டுமளவு ரசித்து விட்டு வா உன் மழையை.அதுவரை நீ ரசிக்கும் அழகை ரசித்துக் கொண்டிருக்கிறேன் நான்..”

“உன்னுடைய இந்த எண்ணங்கள்தான் மழையைப் போல் என்னை நனைத்துக் கொண்டிருக்கின்றன.அணைத்துக் கொண்டிருக்கின்றன.காதலை சொல்லித் தந்த என் காதலா, உனக்கு என் வந்தனங்கள்.நேசித்தலின் சுகத்தைக் கற்றுத் தந்த உனக்கு என் ஆயிரம் முத்தங்கள், இந்த மழை மூலமாக..”

என் சார்பாய் மழைத் தன் சாரலை முத்தமாய்க் கொடுத்தது உன் முகத்தில்..

– பெப்ரவரி 2012,

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *